சென்னை, ஜூலை 27: தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் உதவியோடு தமிழகத்திலுள்ள அரசு அலுவலகங்கள் அனைத்தும் விரைவில் கணினிமயமாக்கப்படும் என தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பூங்கோதை தெரிவித்தார்.தகவல் தொழில்நுட்பத்தின் மூலம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் மின் ஆளுமை குறித்த "சிஇடிஐடி' இரண்டு நாள் (ஜூலை 27, 28) மாநாடும் கண்காட்சியும் சென்னை வர்த்தக மையத்தில் நடைபெறுகிறது.தமிழக மின் ஆளுமைத்துறை, எல்காட் நிறுவனங்களுடன் இந்தியத் தொழில் வர்த்தக கூட்டமைப்பு (ஃபிக்கி) இணைந்து நடத்தும் இந்த இரண்டாவது மாநாட்டை தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பூங்கோதை செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்துப் பேசியதாவது:தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி உலகத்தை ஒரே கூரையின் கீழ் கொண்டுவந்துள்ளது. புறாக்கள் மூலம் தூது, ஓலை, முரசு, கடிதம், தொலைபேசி, மொபைல் ஃபோன், இண்டர்நெட், மெயில் என தகவல் தொடர்புத்துறை அபரிமிதமான வளர்ச்சியை எட்டியுள்ளது.இந்தியாவைப் பொருத்தவரை அனைத்து மாவட்டங்களுக்கும் தகவல் தொழில்நுட்ப வசதிகளை அளித்து வருவதில் தமிழகம்தான் முன்னோடியாகத் திகழ்கிறது. பின்தங்கிய கிராமங்களிலும் கணினி மூலம் மின் ஆளுமை வசதியைக் கொண்டு வருவதில் தமிழக அரசு முனைப்போடு செயல்பட்டு வருகிறது. கல்வி, மின் வாரியம், ரயில்வே, போக்குவரத்து, வருவாய், பொழுதுபோக்கு, விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகள் முதன்முதலாக தமிழகத்தில்தான் கணினிமயமாக்கப்பட்டன. கலைஞர் காப்பீட்டு திட்டத்திற்காக மிகக் குறுகிய காலத்தில் ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட அடையாள அட்டைகளைத் தயார் செய்தது தகவல் தொழில்நுட்பத்தின் வெற்றியாகக் கருதப்படுகிறது.தமிழகத்தில் "இ-டிஸ்ட்ரிக்ட்' (கணினிமய மாவட்டம்) திட்டத்தின் மூலம் கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி, பெரம்பலூர், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வருவாய்த்துறை, ஆதி திராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, சமூக நலத்துறை ஆகியவை கணினிமயமாக்கப்படுகின்றன. இந்தத் திட்டத்தினை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் ஆகஸ்ட் 2-ம் தேதி கோவையில் தொடங்கி வைக்கிறார். இதன் மூலம் அரசின் திட்டங்களும் சலுகைகளும் மக்களை விரைவில் சென்றடையும்.படித்த, மேல் தட்டு மக்களைத் தாண்டி சமூகத்தின் எல்லா தரப்பினரையும் சென்றடைந்து, அவர்களது வாழ்க்கையை மேம்படுத்துவதில்தான் தகவல் தொழில்நுட்பத்தின் உண்மையான வளர்ச்சியைக் காண முடியும் என்றார்.இதைக் கருத்தில் கொண்டு தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் தனியார் தொழில்நுட்ப நிறுவனங்களின் உதவியோடு விரைவில் கணினிமயமாக்கப்படும் என்றார்.மாநாட்டில் தமிழக தகவல் தொழில்நுட்பத் துறையின் சார்பில் www.itintn.com என்ற இணைய தளத்தையும் ECZITE என்ற மாதாந்திர இ-பேப்பரையும் அமைச்சர் பூங்கோதை அறிமுகப்படுத்தினார்.தமிழக தகவல் தொழில்நுட்பத்துறையின் முதன்மைச் செயலர் டேவிதார், எல்காட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குநர் சந்தோஷ்பாபு, காக்னிஸன்ட் டெக்னாலஜி நிறுவனத்தின் மேலாண்மைத் தலைவர் லட்சுமி நாராயணன், ஃபிக்கி அமைப்பின் தலைவர் ரஃபீக் அஹமது, அதன் ஆலோசகர் முராரி உள்ளிட்ட பலர் இந்த மாநாட்டில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.
கருத்துக்கள்
பாராட்டப்பட வேண்டிய திட்டம். ஆனால், கணிணியில் தமிழை முழுமையாகப்
பயன்படுத்தலாம் என்னும் உணர்வின்றிக் கணிணி இருக்குமிடமெல்லாம் ஆங்கிலமே ஆட்சி செய்கின்றது. உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் கூடத் தமிழில் விவரத்தைத் தந்து ஆங்கிலத்தில் நிறைவு செய்ய வேண்டும் என்னும் கொடுமையை அரங்கேற்றியிருந்தார்கள்.
எனவே,தமிழ் சிறிதளவும் புறக்கணிக்கப்படாமல் கணிணியை அறிமுகப்படுத்த வேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
பயன்படுத்தலாம் என்னும் உணர்வின்றிக் கணிணி இருக்குமிடமெல்லாம் ஆங்கிலமே ஆட்சி செய்கின்றது. உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் கூடத் தமிழில் விவரத்தைத் தந்து ஆங்கிலத்தில் நிறைவு செய்ய வேண்டும் என்னும் கொடுமையை அரங்கேற்றியிருந்தார்கள்.
எனவே,தமிழ் சிறிதளவும் புறக்கணிக்கப்படாமல் கணிணியை அறிமுகப்படுத்த வேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
7/28/2010 5:53:00 AM
7/28/2010 5:53:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்