வியாழன், 29 ஜூலை, 2010

தமிழ் இணையப் பல்கலை. பெயர் மீண்டும் மாற்றம்


சென்னை, ஜூலை 28: தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் பெயர் தமிழ் இணையக் கல்விக் கழகம் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.மூன்றே மாதங்களில் இரண்டாவது முறையாக பெயர் மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.1999-ல் தமிழ் இணைய மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் பங்கேற்ற முதல்வர் கருணாநிதி இணைய வழியில் தமிழ் மொழியை வளர்க்கும் வகையில் தமிழ் இணையப் பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்படும் என்று அறிவித்தார்.அந்த அறிவிப்புக்கு இணங்க, தமிழ் இணையப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது. 1975-ம் ஆண்டு தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டத்தின் 27-வது பிரிவின் கீழ் இணையப் பல்கலைக்கழகம் பதிவு செய்யப்பட்டது.இதன் மூலம், மழலைக் கல்வி, சான்றிதழ் படிப்பு, பட்டயம், மேற் பட்டயம், பட்டம், முதுகலை என்ற நிலைகளில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இணையப் பல்கலைக்கழகம் சங்கங்களின் பதிவுச் சட்டத்தின் கீழ் தோற்றுவிக்கப்பட்டதால் அதற்கு சான்றிதழ்களை வழங்கும் அதிகாரம் இல்லை.பட்டயம் மற்றும் பட்டப் படிப்புகளுக்கு சான்றிதழ்கள் வழங்கும் பொறுப்பு தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.பல்கலைக்கழகமாக்க நடவடிக்கை: இதனிடையே, தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தை உண்மையிலேயே பல்கலைக்கழகமாக்க முயற்சிகள் நடைபெற்றன. இதற்கு, பல்கலைக்கழக மானியக் குழுவின் அனுமதி கோரப்பட்டது. சங்கங்களின் கீழ் பதிவு என்பதால் அதற்கு அனுமதி கிடைக்கவில்லை.இதனிடையே, இணையப் பல்கலைக்கழகத்தின் பெயர், பன்னாட்டுத் தமிழ்ப் பயிற்சி இணையம் என மாற்றப்பட்டது.மீண்டும் மாற்றம்: இந்த நிலையில், தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் பெயர் மீண்டும் மாற்றப்பட்டுள்ளது. தமிழ் இணையக் கல்விக் கழகம் என மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்றி அமைத்தது குறித்து சில கருத்துகள் தெரிவிக்கப்பட்டன. ஆங்கிலத்திலும், தமிழிலும் மாற்றி அமைக்கப்பட்ட இரு பெயர்களையும் மீண்டும் சற்றே மாற்றி அமைக்க வேண்டும் என கருதப்பட்டது.அதன்படி, தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் இயக்குநர் குழுமம் விரிவாக விவாதம் நடத்தியது. இதன்பின், தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் பெயர் தமிழ் இணையக் கல்விக் கழகம் என மாற்றம் செய்யப்படுகிறது என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மூன்று மாதங்களில்: தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் பெயர் கடந்த ஏப்ரல் மாதம் மாற்றப்பட்டது. ஆனால், பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் பெயர் மாற்றப்படவில்லை. இப்போது மீண்டும் பெயர் மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துக்கள்

பல்கலைக்கழக நிலையில் தமிழ் இணையப் பல்கலைக்கழகம் என்றே முந்தைய பெயருக்கு மாற்றிச் சிறப்பாக நடைபெற வகை செய்ய வேண்டும். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
7/29/2010 2:55:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக