சிட்னி, ஜூலை 26: பிளாஸ்டிக் பொருள்களை மறுசுழற்சி செய்து உபயோகிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, முழுவதும் பிளாஸ்டிக் பாட்டில்களால் தயாரிக்கப்பட்ட கப்பல் தனது பயணத்தை நிறைவு செய்து சிட்னி வந்தடைந்தது. "பிளாஸ்டிகி' என்ற பெயருடைய இந்தக் கப்பல் 12,500 பிளாஸ்டிக் பாட்டில்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. 18 மீட்டர் நீளம் கொண்டது. நாளுக்கு நாள் பிளாஸ்டிக் பொருள்களின் உபயோகம் அதிகரித்து வருகிறது. இதனால் பிளாஸ்டிக் கழிவுகளும் அதிகரித்து வருகின்றன. நிலம், நீர், காற்று என அனைத்து வாழ்வாதாரங்களையும் பாதிக்கக்கூடிய இந்த பிளாஸ்டிக்கை மறுசுழற்சி முறையில் மீண்டும் உபயோகமான பொருள்களாக மாற்றுவதன் மூலமே பிளாஸ்டிக் பொருள்கள் அதிகரிப்பைத் தடுக்க முடியும். மக்களிடையே இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், கடந்த மார்ச் 20-ம் தேதி அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் இருந்து தனது பயணத்தைத் தொடங்கியது பிளாஸ்டிகி.கப்பலில் 6 மாலுமிகள் பயணித்தனர். 130 நாள்கள் பயணத்தின் முடிவில் 14,800 கி.மீ. தூரத்தைக் கடந்து இந்தக் கப்பல் திங்கள்கிழமை சிட்னி துறைமுகத்துக்கு வந்து சேர்ந்தது. இங்குள்ள கடற்படை அருங்காட்சியகத்தில் அடுத்த ஒரு மாத காலத்துக்கு பிளாஸ்டிகி காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும்.உலகம் முழுவதும் ஆண்டுதோறும் 60 ஆயிரம் டன் பிளாஸ்டிக் பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன. பயன்பாட்டுக்குப் பிறகு தூக்கி எறியப்படும் இந்தப் பிளாஸ்டிக்குகள் மக்குவதற்கு பல நூற்றாண்டுகள் ஆகும். நிலப்பகுதி முழுவதும் பிளாஸ்டிக்கால் மூடப்படுவதால், நிலத்தடி நீர் மட்டம் குறைவு, வெள்ளப் பெருக்கு, விளைநிலங்கள் பாதிக்கப்படுதல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.இதே போன்று, நீர் நிலைகளும் பாதிக்கப்படுகின்றன. ஒவ்வொரு சதுர கி.மீ. கடல் பரப்பிலும் 13,000-க்கும் அதிகமான பிளாஸ்டிக் மாசுகள் கலந்திருப்பதாக ஐ.நா. அமைப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துக்கள்