இந்தியாவில் ஒளிபரப்பாகும் தனியார் தொலைக்காட்சி மற்றும் தூர்தர்ஷன் அலைவரிசைகளை கேபிள் டி.வி. நிறுவனங்கள் மூலம் பெறுவதற்கு மூன்று வகையான கட்டணங்களைத் தீர்மானித்திருப்பதாக இந்திய தொலைத்தகவல் ஒழுங்காற்று ஆணையம் (பதஅஐ)அண்மையில் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.இதில் வியப்பும் வருத்தமும் தருவது என்னவென்றால், முதல்வகை கட்டணமான மாதம் ரூ. 100-க்கு தூர்தர்ஷன் உள்பட 30 இலவச ஒளிபரப்புகள் வழங்கப்படும் என்று கூறியிருப்பதுதான். இலவசமாக ஒளிபரப்ப முன்வரும் தனியார் தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கும் ஏன் ரூ. 100 செலுத்த வேண்டும் என்றால், அதற்கு அவர்கள் சொல்லக்கூடிய காரணம், இது கேபிள் டி.வி. நிறுவனங்கள் மற்றும் ஆபரேட்டர்களுக்கான வாடகை என்பதுதான்.முதன்முதலில் தூர்தர்ஷன் ஒளிபரப்பான காலகட்டத்தில், ஒருமுறைச் செலவாக ஆன்டெனா மட்டும் வாங்கினால் போதும், ஒளிபரப்பை இலவசமாகப் பார்க்க முடிந்தது. இந்த 20 ஆண்டுகளில் செயற்கைக் கோள்களும் தொழில்நுட்பமும் முன்னேற்றம் கண்டுவிட்டது. இனியும்கூட, இலவச அலைவரிசைகளையும் மாத வாடகை செலுத்தித்தான் பார்க்க வேண்டும் என்ற நிலையை அரசே உருவாக்குவது சரியாக இருக்குமா? இலவச அலைவரிசைகள் அனைத்தையும் சிறு "செட்-டாப்' கருவி மூலம் எந்தவொரு குடும்பமும் இந்தியாவின் எந்தவொரு மூலையிலும் இலவசமாகக் காண முடியும். இதற்கான கருவிகளை மிகக் குறைந்த விலையில் அளிக்க சிறுதொழில்கூடங்கள் தயார். இது நடைமுறைக்கு வரவேண்டும் என்றால், இலவசமாக ஒளிபரப்ப முன்வரும் அனைத்துத் தனியார் அலைவரிசைகளையும் அரசாங்கமே இந்த நிறுவனங்களிடம் குறிப்பிட்ட கட்டணத்தைப் பெற்றுக்கொண்டு ஒளிபரப்பினால்தான் முடியும். இதனால் அரசுக்கு ஆண்டுக்கு சில ஆயிரம் கோடி ரூபாய் வருவாயும் கிடைக்கும்.ஒரு குடும்பம் தன் வீட்டுக்கு இலவச ஒளிபரப்புகள் மட்டுமே போதும் என்று விரும்பினால், இதற்கான ஒருமுறைச் செலவை மட்டுமே செய்துவிட்டு, முதன்முதலில் தூர்தர்ஷன் ஒளிபரப்பான காலகட்டத்தில் எப்படி மாத வாடகை பற்றிய கவலையில்லாமல் பார்த்தார்களோ அதேபோன்று பார்க்கச் செய்வதற்கான அனைத்துத் தொழில்நுட்பமும், அரசு அதிகாரமும் இருக்கும்போது, ஏன் இலவச அலைவரிசைகளுக்கும் உள்ளூர் கேபிள் டி.வி. ஆபரேட்டரைச் சார்ந்திருக்கும்படியான ஒரு சூழலை தொலைத்தகவல் ஒழுங்காற்று ஆணையமே உண்டாக்குகிறது? தற்போதுள்ள சூழலில் டிடிஎச் தொழில்நுட்பம் நடைமுறையில் இருந்தாலும், இலவச அலைவரிசை (தூர்தர்ஷன் உள்பட) மட்டுமன்றி, கட்டண அலைவரிசைகளையும் கேபிள் டி.வி. நிறுவனங்கள் அல்லது அவர்களைச் சார்ந்து செயல்படும் உள்ளூர் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் மூலமாகத்தான் பெறமுடியும் என்கிற நிலைமை இருக்கிறது. இதனால் தூர்தர்ஷனைக்கூட ஆபரேட்டர்கள் தயவில்தான் பார்க்க வேண்டிய கட்டாயம் நேர்ந்துள்ளது.உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் கேபிள் டி.வி. நிறுவனங்களிடமிருந்து ஒளிபரப்பை வாங்கி, கம்பிகள் மூலம் வீடுகளுக்கு அளித்து வருகிறார்கள். இவர்களது சங்கம் போராட்டம் நடத்தினால், தாங்கள் சார்ந்துள்ள கேபிள் டி.வி. நிறுவனத்தின் ஒளிபரப்புகளை மட்டுமன்றி, இலவச ஒளிபரப்புகளைக்கூட பார்க்க முடியாதபடி இருட்டடிப்புச் செய்துவிடுகிறார்கள். இவர்கள் தொழில்நுட்பக் கருவிகள் நிறுவியுள்ள இடத்தில் மின்தடை என்றால், அந்தப் பகுதியில் உள்ள எந்த வீட்டுக்கும் ஒளிபரப்பு இருக்காது. இதையெல்லாம் தட்டிக் கேட்க வேண்டிய அரசு வேடிக்கை பார்த்தால்கூடப் பரவாயில்லை, அவர்களுக்குத் துணைநிற்கிறதே, இதுதான் அவலத்திலும் அவலம். தமிழ்நாட்டில் 2 கோடி குடும்ப அட்டைகள் உள்ளன. இதில் 10 சதவீதம் போலி அட்டைகள் என்று அரசு சொல்கிறது. ஆக, தமிழ்நாட்டில் உள்ள குடும்பங்களின் எண்ணிக்கை 1.80 கோடி என்று வைத்துக்கொள்ளலாம். ஒவ்வொரு குடும்பமும் மாதம் ரூ. 200 வீதம் (டிடிஎச் என்றாலும், உள்ளூர் கேபிள் ஆபரேட்டர் என்றாலும்) கட்டணம் செலுத்த நேரிடும் என்றால், ரூ.360 கோடி கேபிள் நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்களுக்குப் போகிறது. இதில் தொழில்நுட்பத்தைத் தவிர உடல்உழைப்போ, அதிக எண்ணிக்கையில் தொழிலாளர்களோ கிடையாது. ஆனால் லாபமோ பல நூறு மடங்கு! இதற்காக அந்தந்த உள்ளாட்சிகளுக்கு கேபிள் ஆபரேட்டர்கள் செலுத்தும் வரியைக் கணக்கிட்டால் மிகமிகச் சொற்பம்.மேலும், இலவச அலைவரிசை, கட்டண அலைவரிசை ஆகியவற்றில் யார் விளம்பரம் மூலம் பணம் சம்பாதிக்க முடியும் என்ற நிபந்தனைகள் வெளிநாடுகளில் இருக்கிறது. இந்தியாவில் அத்தகைய வேறுபாட்டை உருவாக்கவே இல்லையே! கட்டணம் செலுத்திப் பார்க்க வேண்டிய அலைவரிசைகளைப் பார்க்க விரும்புவோர் தாராளமாக அதற்கான கட்டணத்தைச் செலுத்தி, தனியார் கேபிள் டி.வி. நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் மூலம் ஒளிபரப்பைப் பெறட்டும். அதைப் பற்றி யாரும் குறை சொல்லப் போவதில்லை. ஆனால், மாத வாடகை செலுத்த மனமின்றி, வழியின்றி, இலவச அலைவரிசைகளை மட்டுமே விரும்பும் குடிமக்களின் நியாயமான உரிமையைக் கூட ஏன் அரசு நிலைநாட்டக்கூடாது. சட்டம் இயற்றிப் பறிக்கப் பார்க்கிறதே, ஏன்?தமிழ்நாட்டில் நல்லதொரு முன்னுதாரணமாக அரசு கேபிள் என உருவாயிற்று. ஆனால், அது செயல்படும் முன்பாகச் செயலிழந்தது என்பதோடு, அதைச் செயல்படுத்துவதில் தீவிரம் காட்டிய அதிகாரி உமாசங்கர் மீது அரசும் தீவிரமாகச் செயல்பட்டுள்ளது என்பதுதான் நடைமுறை உண்மை.சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு வால்வு ரேடியோ (வானொலி பெட்டி) வாங்கியவர்கள் உள்ளூர் தபால் அலுவலகத்தில் அதற்காக ஆண்டுதோறும்- ஒலிபரப்பைக் கேட்டு அனுபவிப்பதற்காக-உரிமக் கட்டணம் செலுத்தியாக வேண்டும் என்றிருந்தது. அதற்காக தனி பாஸ் புத்தகம் கொடுக்கப்படும். தொழில்நுட்பம் முன்னேற்றம் கண்டு, டிரான்ஸ்சிஸ்டர் நடைமுறைக்கு வந்தபோது, வால்வு ரேடியோக்களும் காணாமல் போயின, கட்டணமும் மறைந்தது. இப்போது வானொலியை யார் வேண்டுமானாலும் கேட்கலாம், இலவசம்தான். தற்போது பண்பலை ஒலிபரப்பில் பல தனியார் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. அவையும் இலவசம்தான்.ஒளிபரப்புத் துறையில் தூர்தர்ஷன் நுழைந்தபோது, வெறும் ஆன்டெனா செலவு மட்டும்தான். ஒளிபரப்புக்குப் பணம் கிடையாது. இப்போது தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட நிலையில், கட்டணச் சேனல்களில் விளம்பரங்கள் இருக்கக் கூடாது. விளம்பரங்கள் உள்ள சேனல்கள் இலவசமாக, முற்றிலும் இலவசமாக மக்களுக்குத் தரப்பட வேண்டும். இதில் இடைத்தரகர்களுக்கு இடமிருக்கக் கூடாது. இலவச அலைவரிசைகள் அனைத்தையும் யார் தயவும் இல்லாமல் இலவசமாகப் பார்க்க வகை செய்வதுதான் அரசின் கடமையாக இருக்க முடியும்.
கருத்துக்கள்
சரியான கோரிக்கை. ஆனால், அரசே உடந்தையாக உள்ளதால் இது செவிடன் காதில் ஊதிய சங்காகத்தான் இருக்க முடியும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
7/26/2010 2:57:00 AM
7/26/2010 2:57:00 AM
NOW CABLE OPERATORS ARE NOT THE EARLIER ORDINARY GUYS, THEY ARE NOW MAFIAS. TO WHOM YOU ARE GIVING ADVICE? THIS CENTRAL AND STATE GOVERNMENTS ARE WORKING FOR THE UPLIT OF AMBANI,TATA AND OTHERS. THEN HOW YOU GET FREE TELECAST IN POORS' HOUSE
By RUSKEEN
7/26/2010 2:00:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *7/26/2010 2:00:00 AM