சென்னை, ஜூலை 29: ஜாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொண்டு தமிழகத்துக்கான இடஒதுக்கீட்டு அளவை நிர்ணயம் செய்த பிறகே தனி ஒதுக்கீடு பிரச்னைகளுக்குத் தீர்வு காண முடியும் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரியிருந்தார். இதற்குப் பதிலளித்து முதல்வர் கருணாநிதி வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: பிற்படுத்தப்பட்டோருக்கு 30 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. இதில், மிகப் பிற்படுத்தப்பட்டோருக்கு தனியே 20 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கியதும், பிற்படுத்தப்பட்ட சிறுபான்மை இஸ்லாமியர்க்கு 3.5 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்கியதும், அருந்ததியர்களுக்கு 3 சதவீத தனி உள்ஒதுக்கீடு வழங்கியதும், பழங்குடியினருக்கு ஒரு சதவீதம் தனி ஒதுக்கீடு வழங்கியதும் திமுக ஆட்சியில் தான்.ராமதாஸின் கோரிக்கை: அருந்ததியர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் தனி இடஒதுக்கீடு வழங்கி வருவதை முன்னுதாரணமாகக் காட்டி, வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று ராமதாஸ் கூறியிருக்கிறார். அருந்ததியர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் உள் ஒதுக்கீட்டையும், சிறுபான்மை இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் தனி இடஒதுக்கீட்டையும் வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீட்டுடன் ஒப்பிடுவது பொருத்தமாக இருக்காது.ரூ.400 கோடி தேவை: தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கென நிறைவேற்றப்பட்ட சட்டம் செல்லாது என்று இந்திய உச்ச நீதிமன்றத்திலே 1994-ம் ஆண்டு வழக்கு தொடுக்கப்பட்டு, ஏறத்தாழ 16 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தீர்ப்பொன்றை வழங்கி இருக்கிறது. ஒரு மாநிலம் 50 சதவீத இடஒதுக்கீட்டு அளவை விஞ்ச வேண்டுமென்றால் அதனை நியாயப்படுத்துவதற்குத் தேவையான புள்ளிவிவரங்களின் அடிப்படையில் முடிவு மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தனது இடைக்காலத் தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.அந்தத் தீர்ப்பின் அடிப்படையில் நாம் தேவையான புள்ளிவிவரங்களை பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு அளித்து அந்த ஆணையம் நாம் அளித்திடும் புள்ளிவிவரங்களை ஆராய்ந்து இடஒதுக்கீட்டு அளவை முடிவு செய்யும் வாய்ப்பை உருவாக்க வேண்டும். இந்தப் புள்ளிவிவரங்களைச் சேகரிப்பதற்கு நமக்கு ஜாதிவாரியான மக்கள் தொகை விவரங்கள் வேண்டும். அதற்கு ஜாதிவாரிக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட வேண்டும். தமிழகத்தில் மட்டும் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட வேண்டுமென்றால் அதற்கு ரூ.400 கோடி நிதி தேவைப்படுகிறது. அந்த நிதியை மத்திய அரசிடம் இருந்து கேட்டுப் பெறலாம் என்று தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் ஆலோசனை வழங்கி இருக்கிறது. உச்ச நீதிமன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பின்படி, தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டால் தான், வன்னியர்களுக்கு எவ்வளவு இடஒதுக்கீடு அளிக்கலாம்; ஒவ்வொரு தனிப்பட்ட ஜாதியினருக்கும் எவ்வளவு இடஒதுக்கீடு அளிக்கலாம் என்பதையெல்லாம் முடிவு செய்திட இயலும். அப்படியில்லை என்றால், நாம் எடுக்கும் முடிவு சட்டத்துக்குப் புறம்பானதாக ஆகிவிடக் கூடும். எனவே, வன்னியர்களுக்குத் தனி இடஒதுக்கீடு என்ற பிரச்னையில் நாம் உடனடியாக அவசர முடிவு எதையும் மேற்கொள்வதற்கு உச்ச நீதிமன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பு இடம் தரவில்லை என்பதை அனைவரும் ஒப்புக் கொள்வார்கள். ஜாதிவாரிக் கணக்கெடுப்பு மேற்கொண்டு நமது மாநிலத்துக்கான இடஒதுக்கீட்டு அளவை நிர்ணயம் செய்து அதற்குப் பிறகு தனி இடஒதுக்கீடு பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பது தான் சட்டப்படியான அணுகுமுறையாக அமைந்திடும். அதில், அவசரம் காட்டினால் பிரச்னை திசை திரும்பி விடக்கூடும். இதனால், இருப்பதையும் இழந்துவிடக் கூடாது என்பதாலும் தொடர்புடைய அனைவரும் இந்த இடஒதுக்கீட்டுப் பிரச்னையில் இணக்கமான ஒத்துழைப்பினை வழங்கிட வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கருத்துக்கள்
முதல்வர் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள். எனவே, சாதிவாரிக் கணக்கெடுப்பிற்கு மத்திய அரசை வலியுறுத்தி வெற்றி காண வேண்டும்.அதன்பின் ஆளாளுக்குத் தங்கள் சாதிதான் மூன்றில் ஒரு பங்கு அல்லது நான்கில் ஒரு பங்கு இருப்பதாகக் கதை விடுவது நின்று விடும். இராமதாசும் சாதித்தலைவர் என்ற நிலையில் இருந்து மாறி வர வேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
7/30/2010 2:39:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்7/30/2010 2:39:00 AM