வேதாரண்யம்: இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துக் கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை செய்ய கடந்த காலத்தில் தமிழக அரசு வகை செய்தது. இதைச் செயல்படுத்தும் வகையில், பல கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்ற விளம்பரத் தட்டிகள் எழுதி வைக்கப்பட்டுள்ளன. ஆனால், பல கோயில்களில் இந்த நடைமுறை இன்று வரை சாத்தியமில்லாத நிலையே நீடிக்கிறது. தமிழ் ஆட்சி மொழியாகவும், நீதிமன்ற வழக்கு மொழியாகவும், பொறியியல், மருத்துவம், அறிவியல் போன்றவற்றின் பயிற்று மொழியாகவும் மாற வேண்டும் எனப் போராட்டங்கள் நடைபெறும் அதேநேரத்தில், அதற்கான நடவடிக்கைகளும் சாத்தியமாகி வருவதை மறுப்பதற்கில்லை. ஆனால், இறைவனை வழிபட மட்டும் இன்று வரை பொருள் புரியாத மொழி சார்ந்தே இருக்க வேண்டிய நிலை உள்ளது.நாகை மாவட்டம், வேதாரண்யேசுவரர் கோயில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்ட சிறப்புப் பெற்றது. இந்தக் கோயிலில் இறைவனை வழிபட்டு வந்த ரிக், யஜுர், சாம, அதர்வண ஆகிய வேதங்கள் நான்கும் கோயிலின் பிரதானக் கதவுகளை மூடிச் சென்றுவிட்டதாகவும், பின்னர் இங்கு வந்த சமயக்குரவர்கள் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் இருவரும் தேவாரத் தமிழ்ப் பதிகம்பாடி கதவுகளைத் திறக்கவும், அடைக்கவும் செய்ததாக செவிவழித் தகவல்களாகச் சொல்லப்படுகிறது.இது இறைவனை வழிபட வடமொழிகளுக்கு நிகரானது தமிழ் என்பதை விளக்குவதாக அமைந்துள்ளது. இதை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் மாசி மகப் பெருவிழாவின் போது, தமிழ்ப் பதிகம் பாடி கதவு திறக்கும் திருவிழாவும் நடந்து வருகிறது. இது தமிழுக்கு எடுக்கப்படும் விழாவாகவே பலரும் கருதுகின்றனர்.அதேநேரத்தில், இங்கு தமிழில் அர்ச்சனை செய்து இறைவனை வழிபட வகை செய்யப்படவில்லை. ஆதனூரைச் சேர்ந்த முருகையன் தனது மகனின் பிறந்த நாளான வெள்ளிக்கிழமை தமிழில் அர்ச்சனை செய்ய கோயிலுக்குச் சென்றுள்ளார். தமிழில் அர்ச்சனை செய்வது இல்லை என மறுத்த அர்ச்சகர், பூஜைக்குரிய பொருள்களைத் திருப்பிக் கொடுத்துள்ளார். இதுகுறித்து கோயில் தக்காரும், இந்து சமய அறநிலையத் துறை நாகை உதவி ஆணையருமான தென்னரசு கூறியது: அர்ச்சகர்களுக்கு தமிழில் அர்ச்சனை செய்ய புத்தகங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அரசின் உத்தரவும் உள்ளது. தகவல் பலகை வைக்கப்பட்டுள்ளது. மறுப்பு குறித்து முறையான புகார் அளித்தால், நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர். நாங்கள் 5 ஆண்டுகள் கற்றுக் கொண்டதைத்தான் செய்கிறோம். தமிழில் அர்ச்சனை செய்யப் பயிற்சியோ, வழிகாட்டுதலோ இல்லை என்கின்றனர் அர்ச்சகர்கள்.
கருத்துக்கள்
சமயம் வழித் தமிழ் வளர்த்ததாகப் பெருமை பேசிக் கொள்ளும் மடத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் தமிழி்ல் வழிபாடு கிடையாது. காரணம் கேட்டால் அரசின் கட்டுப்பாட்டில் தங்கள் மடம் வராது என்கிறார்கள். உண்மையில் இம்மடத்தினர்தான் முன் முறையாகத் தமிழ் வழிபாட்டை மட்டுமே நடைமுறைப் படுத்தியிருக்க வேண்டும். அறநிலையத் துறைக் கட்டுப்பாட்டிலுள்ள கோயில்களில் தமிழ் வழிபாடு என்று கேட்டால் சமற்கிருதத்தில் ஓதி விட்டுத்தான் தமிழ் வழிபாட்டைத் தொடங்குவர். மூலவர் தவிரப் பிற இறையிடங்களில் தமிழில் வழிபாடு செய்யுமாறு கேட்டால் மூலவர்க்கு மட்டுமே தமிழில் வழிபாடு என்று மறுக்கின்றனர். தமிழ் வழிபாட்டிற்கு எதிரான பூசாரிகள் விலக்கப்படுவார்கள் என்பதை நடைமுறைக்குக் கொண்டு வந்து தமிழில் மட்டுமே வழிபாடு நடைபெறும் சமசுகிருத வழிபாடு வேண்டுமென்றால் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் வேண்டுகோள் அடிப்படையில் நடத்தப்படும் என்ற நடைமுறையைக் கொண்டு வர வேண்டும். இச் செய்தியை வெளியிட்ட அம்பிகாபதிக்கும் தினமணிக்கும் பாராட்டுகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
7/26/2010 3:19:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *7/26/2010 3:19:00 AM