வெள்ளி, 30 அக்டோபர், 2009

தமிழீழம் தவிர்ந்த எந்தவொரு தீர்வையும் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளத் தயாரில்லை

28 October, 2009 by admin

தமிழீழம் தவிர்ந்த எந்தவொரு தீர்வையும் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளத் தயாரில்லை. என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகமொன்றுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே ஜெயானந்தமூர்த்தி இதனைத் தெரிவித்துள்ளார்.
தமிழீழத்திற்குக் குறைவான அல்லது தமிழ் மக்களை தாங்களே ஆளக்கூடிய தன்னாட்சித் தீர்வுக்குக் குறைவான தீர்வு எந்தவகையிலும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை பூர்த்தி செய்யப்போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சமஸ்டித் தீர்வு பற்றி தமிழ் தேசியக் கூட்டமைப்பு தற்போது ஆராய்ந்து வருவது தொடர்பாக அவரிடம் கேட்டபோதே மேற்கண்டவாறு கூறியுள்ள ஜெயானந்தமூர்த்தி மேலும் தெரிவித்துள்ளதாவது:-

“தமிழ் தேசியக் கூட்டமைப்பில் நாங்கள் 22 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றோம். ஆனால் எங்களில் சமஸ்டித் தீர்வுக்கு எத்தனை பேர் உடன்படுவார்கள் என்பது கேள்விக் குறியான விடயம்.

இலங்கையில் சமஸ்டி முறையிலான தீர்வுத் திட்டத்தின் பிரகாரம் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்ற முடியாத காரணத்தினால் அல்லது அது தோல்வி கண்டதன் விளைவாகவே வட்டுக்கோட்டைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடித்தளமே தனித் தமிழமே ஆகும். இத்தனித் தமிழீழத்திற்கே மக்கள் அப்போது ஆணை வழங்கியிருந்தனர். இன்றும் அதில் உறுதியாக உள்ளனர்.

இதைவிடுத்து நாம் மக்களின் ஆணையை புறக்கணித்துவிட்டு குறைவான எந்தவொரு தீர்வுக்கோ அல்லது சமஸ்டி முறையிலான ஒற்றையாட்சி தீர்வுக்கோ இறங்கிச் செல்ல முடியாது.

தமிழீழக் கொள்கைக்காகவே எத்தனையோ போராளிகளும் பொதுமக்களும் தமது இன்னுயிரைத் தியாகம் செய்துள்ளனர்.

எனவே அவர்களின் தியாகத்தை எவரும் மறந்துவிட முடியாது. அவர்களின் அடிச்சுவட்டில் நின்று நாம் செயல்பட வேண்டும். அப்போதுதான் அவர்களின் கனவு நனவாகும்.” என்று தெரிவித்துள்ள ஜெயானந்தமூர்த்தி,

“நான் தவிர்க்க முடியாத காரணத்தினால் தற்போது ஐரோப்பிய நாடொன்றில் தங்கியுள்ள போதிலும் எமது கொள்கையில் இருந்து நான் மாறப்போவதுமில்லை. தமிழ் மக்களுக்கான அரசியல் வேலைத்திட்டங்களில் இருந்து விலகப்போவதுமில்லை.

தற்போதும் எனக்கு வாக்களித்த மக்களுடன் தொடர்பில் இருந்து கொண்டே இருக்கின்றேன். எமது தமிழீழத்திற்காக தாயகத்திற்காக தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டே வருகின்றேன்.

சந்தர்ப்பவாதத்திற்கு ஏற்ற வகையில் நாம் எமது கொள்கையை மாற்ற முடியாது. அதில் உறுதியுடன் இருக்க வேண்டும். இதுவே எனது சிந்தனை. தமிழ் தேசியக் கூட்டமைப்பை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்தவன் என்ற வகையில் அதன் நோக்கத்திலும் அது எதற்காக உருவாக்கப்பட்டது என்ற கொள்கையில் இருந்தும் விலகிச் செல்ல முடியாது.

இன்று கூட்டமைப்பு பற்றி முடிவுகள் எடுக்க முனைபவர்கள் இதுபற்றி விளங்கிக் கொள்ள வேண்டும்” என்றும் தெரிவித்துள்ளார்.


Send To Friend |இச் செய்தியை வாசித்தோர்: 1734

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக