திங்கள், 26 அக்டோபர், 2009

ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - 146:
ஈழ மக்களாட்சி குடியரசு!



விடுதலைப் புலிகளின் மக்கள் முன்னணி கட்சி தொடங்கப்பட்டதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் அதன் விரிவாக்கம் தொடங்கிற்று. இதனை மக்களிடையே கொண்டு செல்ல ஒரு மாநாடு அந்த அமைப்புக்குத் தேவைப்பட்டது. இந்த மாநாட்டை மட்டக்களப்பு மாவட்டத்தில் நடத்துவதென்றும், அதற்கான இடமாக "வாகரை' என்கிற கடற்கரையோரம் அமைந்த சிற்றூர் தெரிவு செய்யப்பட்டது. இவ்வாறாக மக்கள் முன்னணியின் முதல் மாநாடு வாகரையில் பிப்ரவரி 24-இல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. இதில் கலந்துகொள்ள வடக்கு-கிழக்கில் உள்ள பல்வேறு ஊர்களில் இருந்தும் பிரதிநிதிகள் வாகரையில் வந்து குழுமினர். கொழும்பு ஹில்டன் ஓட்டலில் தங்கியிருந்த பேச்சுவார்த்தைக் குழுவினரான பாலசிங்கம் உள்ளிட்டவர்கள் ஹெலிகாப்டர் மூலம் மட்டக்களப்பு வந்து சேர்ந்து, அங்கிருந்து வாகனங்களில் வாகரை வந்து சேர்ந்தனர். அம்பாறை, மட்டக்களப்பிலிருந்து அமைதிப் படை வெளியேறியதைப் போன்றே முல்லைத் தீவு, வவுனியா, மன்னார், கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் இருந்தும் அமைதிப் படை வெளியேறியிருந்தது. யாழ் மற்றும் திருகோணமலையில் மட்டும்தான அமைதிப் படை வெளியேற வேண்டியிருந்தது. இவ்வாறாக அமைதிப் படை வெளியேற்றம், தமிழ் தேசிய ராணுவத்தைக் கட்டுப்படுத்தியது உள்ளிட்ட நிகழ்வுகளால் மக்கள் முன்னணி உறுப்பினர்களிடையே மகிழ்ச்சிப் பெருக்கு நிலவியது. மாநாட்டு நிகழ்வுகள் ஒருவாரம் வரை தொடர்ந்தது. மாநாட்டில், தேசிய, சமூகம் குறித்த பல தீர்மானங்கள் ரகசியமாக விவாதிக்கப்பட்டன. வெளியே தெரிய வந்த தீர்மானங்களில், (அ) சாதியக் கொடுமைகளை வேரறுத்து, சமூகநீதி காக்க உழைப்பது மற்றும் அதில் முழு ஈடுபாட்டுடன் போராடுவது (ஆ) பெண் விடுதலை- மக்கள் முன்னணியின் வேலைத் திட்டத்தில் ஒன்றாக்கப்படுவது (இ) பெண்களின் திருமணத்தில் சீதனமுறையால் ஏற்படும் அவலங்களையும் அதனால் ஏற்படும் சுரண்டல் மற்றும் துன்புறுத்தப்படுதலையும் ஒழிக்கப் பாடுபடுவது (ஈ) வடக்கு-கிழக்குப் பகுதிகளில் மக்கள் முன்னணியை நிறுவி மக்களை அதில் ஈடுபடுத்தச் செய்து, அவர்களை அதன் நிர்வாகத்தில் பங்கெடுக்கச் செய்வது போன்றவை முக்கியமானவையாகும். பெண்கள் குறித்த தீர்மானங்களை மகளிர் நிர்வாகிகளே கொண்டுவந்தனர். முக்கியத் தலைவர்கள் கூடியிருந்த நேரத்தில் எந்தவிதமான அசம்பாவித சம்பவங்களும் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற எச்சரிக்கை உணர்வு, மாநாட்டு ஏற்பாட்டாளர்களுக்கு இருந்தது. அதன் காரணமாக விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் கண்ணுக்குப் புலப்படாத வகையில் செய்யப்பட்டிருந்தன. வடக்கு-கிழக்கு இடைக்கால அரசு குறித்தும், தற்போதுள்ள மாகாண அரசு நிர்வாகத்தில் புலிகள் பங்கெடுப்பது குறித்தும் யோசனைகளைத் தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதியிடம் அளித்து இலங்கை திரும்பினார் வரதராஜ பெருமாள். இந்திய அமைதிப் படை, தனது இறுதிக்கட்ட பயண ஏற்பாடுகளை திருகோணமலையில் நடத்திக் கொண்டிருந்தது. பிப்ரவரி 25-ஆம் நாளில் கட்சியின் செயலாளர் பத்மநாபா, தமிழ்நாடு முதலமைச்சர் மு.கருணாநிதியிடம் ஒரு மனு அளித்திருந்தார். ஆனால், ஒரே வாரத்துக்குள் எதிர்பாராதவிதமாக, அதாவது மார்ச் முதல் தேதி அதிரடியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். தற்போதுள்ள மாகாண கவுன்சிலில் இடம்பெற்றுள்ள அங்கத்தினர்களைக் கொண்ட குழு, "அரசியல் நிர்ணய சபை'யாக மாறுகிறது என்றும், "சுதந்திரத் தமிழ் அரசு'க்கான அரசியல் சட்டத்தை உருவாக்கும் பொறுப்பை மாகாண கவுன்சிலில் இடம்பெற்றவர்கள் உருவாக்குவார்கள் என்றும் அறிவித்தார். அவ்வறிப்பில், இந்த அரசியல் சட்டத்தின்படி அமையும் அரசுக்கு "ஈழ மக்களாட்சிக் குடியரசு' என அழைக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பு வெளியான உடன் இலங்கை அரசு அதிர்ச்சியடைந்தது. இது கிட்டத்தட்ட "சுதந்திரப் பிரகடனம்' என்றே அரசு கருதியது. இந்த தன்னிச்சையான அறிவிப்பு பிரேமதாசாவை கடுமையாகப் பாதித்தது. கடும்கோபத்தில் இருந்த அவர், பதிலுக்கு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மெüனமாக இருந்தார். இந்திய அமைதிப் படையின் வெளியேற்றம் என்பது தீவிரமாக நடந்துகொண்டிருந்த நேரம். இறுதிக்கட்ட நடவடிக்கையாக, திருகோணமலைத் துருப்புகள் வெளியேற வேண்டியதுதான் பாக்கி. இந்த நேரத்தில் எந்த ராணுவ நடவடிக்கையையும் மேற்கொள்ள பிரேமதாசா விரும்பவில்லை என்பதாக இலங்கைப் பத்திரிகைகளில் செய்தி வெளியாயிற்று. இந்திய அமைதிப் படையினர் முழுவதுமாக இலங்கையைவிட்டு வெளியேற அவர் காத்திருப்பதாக, கொழும்பு ஊடகங்கள் கருத்து தெரிவித்தன. உடனடியாக நடவடிக்கை எடுக்க அவரது அமைச்சர்கள் வலியுறுத்திக் கொண்டிருக்க, சிங்கள ராணுவத் தலைமையும் தாக்குதலுக்குத் தயாரானது. இவையெல்லாவற்றுக்கும் பிரேமதாசாவின் மெüனமே முட்டுக்கட்டையானது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக