வியாழன், 29 அக்டோபர், 2009

ஈழத்தமிழரின் போராட்ட வரலாறு- 149: பத்மநாபா மீது தாக்குதல்!



அமைச்சர் ஹமீது
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ஜக்கிரியா காலனியில், ஜெர்மனியில் இருந்து ஈபிஆர்எல்எஃப் இயக்க வேலைகளில் ஈடுபட வந்த வில்சனுக்காக எடுக்கப்பட்ட வீட்டில் பத்மநாபா குழுவினர், தங்கினர். இந்த வீடு அவரின் வசிப்பிடமாகவும், இயக்கத்தின் சென்னை அலுவலகமாகவும், கலந்துரையாடும் இடமாகவும் பேணப்பட்டு வந்தது. இந்த வீட்டில் ஈபிஆர்எல்எஃப் இயக்கத்தினர் பலர் சந்திக்க இருக்கிறார்கள், என்கிற தகவலை விடுதலைப் புலி அமைப்பின் உளவுப் பிரிவைச் சேர்ந்த சாந்தன் அளித்ததைத் தொடர்ந்து அங்கு புலிகள் ஆயுதங்களுடன் குவிந்தனர். கதவைத் தட்டியதும், திறக்கப்பட்ட வேகத்தில் உள்ளே நுழைந்தவர்கள் அங்கே குழுமியிருந்த பத்மநாபா உள்ளிட்ட 13 பேரையும் சுட்டுக் கொன்றுவிட்டு தப்பினர். (6.6.1980) அந்த நேரத்தில் பத்மநாபாவின் மனைவி ஆனந்தி, தனது தந்தையின் வீட்டுக்குச் சென்றிருந்ததால் தப்பித்தார். (ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்-சி. புஷ்பராஜா பக். 531). இந்தத் துக்ககரமான சம்பவம் மறுநாள் தமிழ்நாட்டுப் பத்திரிகைகளில் வெளிவந்து அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியது. இந்தக் கொலைக்கு ஈபிஆர்எல்எஃப் இயக்கத்தினரின் இந்திய உளவுத்துறை அதிகாரிகளின் நெருங்கிய தொடர்பே காரணமாகச் சொல்லப்பட்டது. இன்னொரு காரணமாக, ஈபிஆர்எல்எஃப் எம்.பி.யான யோகசங்கரி-பிரேமதாசா இடையே நடைபெற்ற ரகசிய சந்திப்பும்கூடக் காரணமாகக் கருதப்பட்டது. இந்தச் சந்திப்பு மூலம், சிங்கள ராணுவத்துடன் சேர்ந்து புலிகளை ஒழிக்க பேரம் பேசியதாகவும் இதற்கு பத்மநாபா உடன்பட்டதாகவும் தகவல்கள் வெளியாயின. தொடர்ந்து, இலங்கை வடக்கில் அரியாலையில் அமைந்திருந்த ஈபிஆர்எல்எஃப் முகாம், தாக்கி அழிக்கப்பட்டு, யாழ்குடாப் பகுதி முழுவதும் புலிகளின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது. உண்ணாவிரதம் இருந்து உயிர்துறந்த, அன்னையர் முன்னணியைச் சேர்ந்த பூபதி அம்மாளின் நினைவுநாள் ஏப்ரல் 19-ஆம் தேதி நல்லூர் கந்தசாமி கோவிலடியில் கடைபிடிக்கப்பட்டது. இந்த கூட்டத்திற்கு யாழ் மற்றும் கிழக்கில் இருந்தும் பெருந்திரளாக மக்கள் வந்து கலந்துகொண்டனர். அடுத்து வந்த மே தினக் கொண்டாட்டத்திலும் மக்கள் பெருமளவில் கலந்துகொண்டு பேரணியை சிறக்கச் செய்தனர். இந்த மே தினக் கூட்டத்தில் பாலசிங்கம், யோகி உள்ளிட்டோர் பேசினர். இந்தக் கூட்டத்தில், அடேல் பாலசிங்கம், பெண்கள் நிலை குறித்துப் பேசினார்.அடுத்த கட்ட ஈழப் போர் என்பது, மட்டக்களப்பில் முஸ்லிம் மாது ஒருவர் ஜூன் 10-இல், சிறுமைப்படுத்தப்பட்ட சம்பவத்தையொட்டி எழுந்தது. இந்த சம்பவம் மட்டக்களப்பு காவல் நிலையத்தில் நடைபெற்றதால், இதனைத் தட்டிக் கேட்கும் விதத்தில் விடுதலைப் புலிகள் பிரச்னையை முன்னெடுத்தனர். பிரச்னை, பேச்சுவார்த்தையில் ஆரம்பித்து, துப்பாக்கிச் சூட்டில் முடிந்தது. இந்த மோதலில் காவல் நிலையம் புலிகள் வசமாயிற்று. தொடர்ந்து அனைத்து காவல் நிலையங்களும் கைப்பற்றப்பட்டன. சில காவல் நிலையங்களில் எதிர்ப்பு இருந்த நிலையில் தாக்குதலும் நடந்தன. இம் மோதல்-படிப்படியாக புலிகள்-சிங்களப் படைகள் மோதலாக உருவெடுத்தது. நிலைமை மோசமடைவதற்கு முன்பாக, போர் நிறுத்ததைத் தொடரும் விதமாக அமைச்சர் ஹமீது, பிரபாகரனைச் சந்திக்க, பலாலி விமானநிலையத்தில் வந்திறங்கினார். அவரை விமான நிலையத்துக்கு வெளியே ஓரிடத்தில் சந்திக்க ஏற்பாடாகியிருந்தது. விமான நிலையத்தில் இருந்து சந்திப்பு நடக்கும் இடத்துக்கு வாகனத்தில் ஹமீது சென்று கொண்டிருந்தபோது அவரது காரின் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்தியது சிங்களப்படை. பிரேமதாசா அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் அனைவரும், போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து, விடுதலைப் புலிகள் மீது தாக்குதல் தொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். அதன் விளைவுதான் துப்பாக்கிச்சூடு. துப்பாக்கிச் சூட்டையும் மீறி ஹமீது-பிரபாகரன் சந்திப்பு நடந்தது. பிரேமதாசா மற்றும் அமைச்சர்களும், சிங்கள ராணுவமும் விடுதலைப் புலிகளை ஒழிக்க இதுவே சரியான தருணம் என்று கருதினர். புலிகள்-பிரேமதாசா இடையே போர்நிறுத்தம் அமலில் இருந்த காலத்தில், ராணுவத்தினர் புத்துணர்வு பெற்றிருந்ததாகவும், அதேசமயம் புலிகளோ அமைதிப் படையுடன் தொடர்ந்து போரிட்டு களைப்புற்றிருந்ததாகவும் கணிக்கப்பட்டிருந்தது. இலங்கையின் தெற்குப் பகுதியில் ஜே.வி.பி.யினரை அடக்கியதைப் போன்று புலிகளையும் ஒடுக்கிவிடலாம் என்ற நினைப்பில், மீண்டும் போர் என்பது தவிர்க்க முடியாததாகியது. பேச்சுவார்த்தைக் காலங்களில் நட்பாக இருந்து வந்த பாதுகாப்பு அமைச்சர் ரஞ்சன் விஜயரத்னே நாடாளுமன்றத்தில் பேசும்போது, "புலிகள் மீது முழுமையாகப் பாயப் போகிறோம். அவர்களை அழிப்போம்' என்று வீரம் பேசினார். போர் என்றால் போர்; சமாதானம் என்றால் சமாதானம் என்று 1987-இல் வீம்பு காட்டிய ஜெயவர்த்தனாவைப் போன்றே, பிரேமதாசாவும், அடக்குமுறைகளைக் கையாள ஆரம்பித்தார். யாழ்ப்பாணப் பகுதியில், மின்சாரத்தை நிறுத்தியதன் மூலம் நகரத்தை இருளில் மூழ்கடித்து கூட்டுத் தண்டனையை வழங்கினார். தொடர்புகளை மேற்கொள்வதைத் தடுக்கும் வகையில் தகவல், தொலைத் தொடர்பையும் துண்டித்தார். யாழ்ப்பாணம் மீது மீண்டும் பொருளாதாரத்தடை விதிக்கப்பட்டது. இதனால் உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் வருகை தடைபட்டதால், பொருட்களின் தட்டுப்பாடு வானை எட்டியது. எரிபொருட்கள் வருகை நின்றதால், தொழில்களும் முடங்கின. வியாபாரமும் நசித்தது. விவசாயம் இல்லை, வாழ்க்கை என்பது மக்களுக்கு பெரும் சுமையாகியது. இதேவேளை, விமானம் மூலம் குண்டுத் தாக்குதலும், யாழ் கோட்டை வழியாக பீரங்கித் தாக்குதலும் அதிகரித்தன. கடற்படையும் கரையோரப் பகுதிகளில் குண்டுவீசித் தாக்குதலைத் தொடங்கியது. மக்கள் மீண்டும் பதுங்கு குழியை நாடினர். புதிய பதுங்கு குழிகளையும் வெட்டுவதற்குத் தலைப்பட்டனர்.யாழ்ப்பாணம் புலிகள்வசம் வந்தபோதிலும் யாழ் கோட்டை சிங்கள அரசின் மேலாண்மையை வலியுறுத்தும் வகையில், சிங்கள ராணுவம் வசமே இருந்தது. இந்தக் கோட்டையைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வருவது என்று பிரபாகரன் திட்டமிட்டார். இந்தக் கோட்டையிலிருந்து ராக்கெட் மற்றும், பீரங்கித் தாக்குதல் அவ்வப்போது நடைபெற்றுக் கொண்டிருந்ததால், அதனை முறியடிக்கும் வகையில், புலிகள் மரபு வழித் தாக்குதலின்படி அரண்கள் அமைத்து, 1990 ஜூன் 18-இல் தாக்குதலைத் தொடங்கினர். இந்த கோட்டையிலிருந்த வீரர்களுக்கு உணவும், தளவாடங்களும் ஹெலிகாப்டரில் வந்து இறங்குவதைத் தடுக்க, வான் தாக்குதலும் குறிவைக்கப்பட்டது. கோட்டைக்குள் ராக்கெட் வீச்சு நடத்தப்பட்டது. இத் தாக்குதலில் கோட்டையைக் காப்பாற்ற சிங்களப் படை பெரிதும் முயன்றது. புலிகளின் நிலைகளின் மீது வெகுவாக குண்டுமழை பொழிந்தது. இதுபோதாதென்று யாழ் நகரில் பல்வேறு இடங்களிலும் குண்டுவீச்சும் நடத்தப்பட்டது. யாழ் நகரிலிருந்து மீண்டும் மக்கள் அகதிகளாக வெளியேறத் தொடங்கினர். மருத்துவமனை மீதும் தாக்குதல் நடத்தியதால் நோயாளிகள், ஊழியர் அனைவரும் பாதுகாப்பு தேடி ஓடினர். 107 நாள்கள் இந்தப்போர் நடந்த பின்னர், செப்டம்பர் 26-ஆம் நாளில், கோட்டை புலிகள் வசமாயிற்று. இதுகுறித்து யாழ்ப்பாணத்தில் அமைதிப்படையின் அதிரடிப் படைத் தளபதியாக பணி புரிந்த அர்ஜுன் காத்தோஜ், ""1990-ஆம் ஆண்டில் இந்திய அமைதிப்படையின் தளபதியான கல்கத், பெரிய சாதனை புரிந்துவிட்டதாகவும், விடுதலைப் புலிகளின் முதுகெலும்பை முறித்து விட்டதாகவும் அவர்களை வவுனியா காட்டிற்குத் துரத்தி விட்டதாகவும் தெரிவித்திருக்கிறார். ஆனால், அமைதிப்படை வெளியேறிய பின்பு, ஸ்ரீலங்கா ராணுவம் யாழ்ப்பாணக் கோட்டையை இழந்தது; மாங்குளம் முகாமை இழந்தது. இரண்டு வருட காலத்தில் அமைதிப்படை இழந்த இழப்பை விட அதிகமான இழப்பினை ஆறேழு மாதங்களில் ஸ்ரீலங்கா ராணுவம் அடைந்தது. புலிகளின் முதுகெலும்பை முறித்திருந்தால்- இப்படியெல்லாம் புலிகளால் வெற்றி பெற்றிருக்க முடியுமா?'' என்று எகனாமிக் அண்ட் பொலிடிக்கல் வீக்லி என்னும் ஏட்டில் எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார் (தமிழீழம் சிவக்கிறது-பழ.நெடுமாறன்). இந்தக் கருத்து யாழ்ப்பாணத்தில் பணியாற்றிய அமைதிப் படையின் தளபதிகளில் ஒருவர் சொன்ன கூற்றானதால், புலிகளின் வலிமை மீண்டும் நிரூபணமாயிற்று. இதுவே, பிரேமதாசாவுக்கு மாபெரும் அவமானகரமான சம்பவம் ஆயிற்று. பாதுகாப்புத்துறை அமைச்சர் ரஞ்சன் விஜயரத்னே யாழ்ப்பாண மக்களைத் துன்புறுத்தும் வேலையில் இறங்கி, குண்டு மழை பொழிய வைத்தார். இந்தத் தடைகள் மற்றும் தாக்குதல் குறித்து உலகம் முழுவதும் கண்டனங்கள் எழுந்தன. அச்சமயம் பிரேமதாசாவின் நண்பர்களாக இருந்த ஈபிஆர்எல்எஃப் இயக்கத்தினரும் கண்டனம் தெரிவித்தனர். ஈரோஸ் அமைப்பு தங்களின் நாடாளுமன்றப் பணிக்கு முற்றுப்புள்ளி வைத்தது. அவ்வமைப்பின் 13 உறுப்பினர்களும் பதவி விலகினர். இலங்கையில் உள்ள போராளி அமைப்புகளும் மக்களும் தமிழ்நாட்டில் உள்ளவர்களும் குரல் கொடுக்க முடிந்ததேயொழிய, இந்தியா தலையிட வேண்டும் என்று குரலெழுப்ப முடியவில்லை. காரணம், இவர்கள் இந்திய அமைதிப்படை இலங்கையை விட்டு வெளியேற வேண்டும் என்று குரல் கொடுத்திருந்ததுதான். இந்தக் காரணமே பிரேமதாசாவுக்கும் அவரது சிங்கள ராணுவத்துக்கும் சாதகமான அம்சமாக இருந்தது.நாளை: புலிகள் - முஸ்லிம்கள் உறவு!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக