செவ்வாய், 27 அக்டோபர், 2009

தமிழை சமயம்தான் காப்பாற்றியாக வேண்டும்: திருவாவடுதுறை ஆதீனம்



சென்னை, அக்.26: சமயமும், கலாசாரமும் காப்பாற்றப்பட்டால் மட்டுமே தமிழ் காப்பாற்றப்படும் என்றார் திருவாவடுதுறை ஆதீனத்தின் 23-வது சீர்வளர்சீர் குருமகா சந்நிதானம் சிவப்பிரகாச தேசிக பரமாச்சாரிய சுவாமிகள். திருவாவடுதுறை ஆதீன சைவ சித்தாந்த நேர்முகப் பயிற்சி மைய (திருவிடைமருதூர்) சென்னை கிளை சார்பில், "பண்டார சாத்திரங்கள் பதினான்கு -உரையுடன்' என்ற நூல் வெளியீட்டு விழா சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள ஜெயகோபால் கரோடியா இந்து வித்யாலய மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருவாவடுதுறை ஆதீனத்தின் 23-வது சீர்வளர் சீர் குரு மகா சந்நிதானம் நூலை வெளியிட, அதை "தினமணி' ஆசிரியர் கே.வைத்தியநாதன் பெற்றுக் கொண்டார். விழாவில் அருளாசி வழங்கி குருமகா சந்நிதானம் பேசியதாவது: அறிவு, அனுபவத்தோடு பொருந்திய கொள்கைகளையுடையது சைவ சித்தாந்தம். தொல்காப்பியம், திருக்குறள் போன்றவற்றின் உட்கருத்துகள் சைவ சித்தாந்தம்தான். சைவ சித்தாந்தத்தில், குறிப்பாக சிவ வழிபாட்டில் சாதி வேறுபாடு இல்லை. ஊதியத்தில் சிறு பங்கு: பக்தர்கள் தங்கள் ஊர்களில் உள்ள பாரம்பரியம் மிக்க கோயில்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். எந்த ஊரில் வாழ்ந்தாலும் ஆண்டுக்கு ஒரு முறையாவது சொந்த ஊர்க் கோயிலுக்குப் போவதை வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். பக்தர்கள் தங்கள் வருவாயின் ஒரு சிறு பகுதியை அந்தக் கோயில்களின் பராமரிப்புக்கு கொடுத்து உதவ வேண்டும். பல ஊர்களில் விளக்கேற்றவும், ஒரு வேளை பூஜை செய்யவும் கூட வசதியில்லாமலும், பூஜை செய்ய சிவாச்சாரியார்கள் இல்லாமலும் பாரம்பரியமிக்க கோயில்கள் உள்ளன. இந்தக் கோயில்கள் நமது பண்பாட்டுச் சின்னங்கள்; இறைவன் குடியிருக்கும் இடங்கள்; இவை முறையாகப் பராமரிக்கப்பட்டுக் காப்பாற்றப்பட வேண்டும். சிவாச்சாரியார்கள் வருமானம் குறைவாக உள்ளதே என்று கோயில்களை விட்டுச் செல்லக் கூடாது. முழு இறை நம்பிக்கையோடு செயலாற்றுங்கள். இறைவன் நிச்சயம் உதவுவான். சிவாச்சாரியார்கள் இல்லாவிட்டால் ஸ்மார்த்த பிராமணர்கள். அவர்களும் இல்லாவிட்டால் ஓதுவா மூர்த்திகள். அவரும் இல்லாவிட்டால் யாராவது ஒருவர் கோயிலில் விளக்கேற்றி பூஜை செய்ய வேண்டும். அப்படி பூஜை செய்யாவிட்டால் கோயில்கள் பாழாகும். அது ஒட்டுமொத்த சமுதாயத்துக்கே கேடு விளைவிக்கும். புதிய கோயில்கள் கட்டுவதைவிட, இருக்கும் ஆலயங்களில் ஒரு கால பூஜையாவது நடைபெற உதவுங்கள். அதே போல், கோயில்களுக்குப் போனால் அர்ச்சகர்களுக்கு தட்சிணை கொடுப்பது போல, ஓதுவா மூர்த்திகளுக்கும் தட்சிணை கொடுத்து ஆதரிக்க முற்பட வேண்டும். வீடுகளில் முக்கிய விழாக்களின் போது திருமுறைகளை ஓதச் செய்யுங்கள். திருமுறைகளை தினமும் நம்பிக்கையுடனும், பக்தியுடனும் படியுங்கள். பணம், பதவிப் பற்றுகளைப் குறைத்தால் துன்பம் குறையும். அதிகாலை எழுதல், தியானம் செய்தல் போன்றவற்றை கடைப்பிடியுங்கள். வாழ்வில் சித்தாந்தங்களைக் கடைபிடித்து, தங்களால் என்ன முடியுமோ அந்த அளவுக்கு தொண்டு செய்து சிறப்பாக வாழுங்கள் என்றார் குரு மகா சந்நிதானம். விஸ்வ ஹிந்து பரிஷத் தமிழ்நாடு மாநில துணைத் தலைவர் ஆர்.பி.வி.எஸ். மணியன் பேசியதாவது: தமிழறிஞர்கள் மீனாட்சிசுந்தரம் பிள்ளை, உ.வே.சா. போன்றோருக்கு ஆதரவு தந்த திருவாவடுதுறை ஆதீனப் பணிகளைப் பாராட்டியே ஆக வேண்டும். தமிழனுக்குப் பெருமையே சைவம்தான். ஆனால், நூற்றில் 90 பேருக்கு சைவ சித்தாந்தம் பற்றித் தெரியவில்லை. இதைப் பயன்படுத்தி சிலர் மொழியின் பெயரால் குட்டையைக் குழப்பவும், பிளவுபடுத்தவும் பார்க்கின்றனர் என்றார். விஸ்வ ஹிந்து பரிஷத்தின் சர்வதேச பணிகள் தலைவர் வேதாந்தம், சைவ சித்தாந்தப் பயிற்சி மையத்தின் இயக்குநர் கே.வைத்தியநாதன், அமைப்பாளர் ஆர்.கணேசன், உறுப்பினர்கள் ஏ.எம்.சாமிநாதன் ஐ.ஏ.எஸ். (ஓய்வு), எம்.கே.பிரபாகர மூர்த்தி, ஜெய்கோபால் பள்ளியின் முதல்வர் கிரிஜா சேஷாத்ரி உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்று பேசினர். சைவ சித்தாந்த அன்பர்கள் சுமார் ஆயிரம் பேருக்கும் அதிகமானோர் விழாவுக்கு வந்திருந்தனர்.
கருத்துக்கள்

சைவமும் வைணமும் வளர்த்த தமிழ் இன்று பின்னடைவைச் சந்திப்பதன் காரணம் அவற்றின் தலைவர்கள் ஆரியத்தின் பின்னால் சென்று பல்லிளிப்பதுதான். ஆதீனத்தின் கட்டுப்பாடுகளில் உள்ள கோயில்களில் தமிழ் வழிபாடு என்பதே கிடையாது. பிறவற்றிலாவது தமிழிலும் வழிபாடு செய்யப்படும் என்ற பலகை ஒப்புக்காவது காணப்படும். ஆனால் அத்தகைய தமிழ் வழிபாட்டு முறையே தடை செய்யப்பட்டுள்ளதால் ஆதீனக் கோயில்களில் சமற்கிருத வழிபாடுகள் மட்டுமே உண்டு. கோயில் நூலகங்களில் உள்ள ஓலைச் சுவடிகள் பயன்பாட்டிற்குத் தரப்படாமல் பயளன்பாட்டிற்குத் தரப்படாமல் அழிந்துவருகின்றன. இன்னும் சில உண்மைகளை வெளிப்படுத்தினால் ஆதீனங்களின் தமிழ்ப் பகை உணர்வை நன்கு புரிந்து கொள்ளலாம். எனினும் இவையாவும் அவர்கள் அறிந்ததே! எனவே, நடிக்காமல் தமிழ்ப்பற்றாளர்களாகவும் இறைப்பற்றாளர்களாகவும் ஆதீனங்கள் விளங்க வேண்டும். ஆதிஇனத்தைச் சேர்ந்தவர்கள் ஆதி ஈனர்களாக விளங்கக் கூடாது.

வருத்தத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
10/27/2009 5:58:00 AM

Dear editor, Yes. The article is cent percent correct. But in Tamilnadu alone only Atheist(People against The God especially The Hindus) parties are ruling and people are voting them . So, the Relion and its benefits may be rare to the humanity. Really The God is great. He will save us and the world, Universe.

By S.G.Jayaraman.
10/27/2009 5:41:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக