சனி, 31 அக்டோபர், 2009

பொதுக்கூட்டம் ஒத்திவைப்பு:
கருணாநிதி மீது ஜெயலலிதா குற்றச்சாட்டு



சென்னை, அக். 30: மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷைக் கண்டித்து நடத்துவதாக அறிவித்தப் பொதுக்கூட்டத்தை தனது குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காகவே முதல்வர் கருணாநிதி ஒத்திவைத்துள்ளார் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: முல்லைப் பெரியாறு பிரச்னையில் திமுக அரசின் நிலை நாளுக்குநாள் பலவீனமடைந்து வருவதைப் பார்க்கும்போது தமிழக மக்களின் உரிமைகள் மற்றும் தேவைகள் குறித்து முதல்வர் கருணாநிதிக்கு அக்கறை இல்லை என்பது தெரிகிறது. முல்லைப் பெரியாறு பிரச்னையில் திமுகவின் நிலையை வெளிப்படுத்தும் வகையில் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை இணை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷைக் கண்டித்து மதுரையில் பொதுக் கூட்டம் நடத்தப்போவதாகவும், அதில் தானே கலந்து கொள்ளப்போவதாகவும் அக்டோபர் 21-ல் கருணாநிதி அறிவித்தார். இந்த அறிவிப்பு வெளியான மறுநாள் மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆ.ராசாவின் துறை அலுவலகங்களில் சி.பி.ஐ. சோதனை நடத்தியது. நாட்டுக்கு ரூ.1 லட்சம் கோடி இழப்பை ஏற்படுத்திய இரண்டாவது தலைமுறை அலைவரிசை ஒதுக்கீடு தொடர்பான ஆவணங்களைக் கைப்பற்றும் நோக்கில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. சி.பி.ஐ. தனது பணியை முறையாக செய்தால் ராசா அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்படுவதோடு, கருணாநிதி குடும்பத்தினர் பற்றிய தகவல்களும் வெளியே வந்துவிடும். எனவே, மத்திய அமைச்சருக்கு எதிரான பொதுக்கூட்டத்தை ஒத்திவைத்துள்ளார். 5 மாவட்ட மக்களின் குடிநீர் தேவையைவிட, வாழ்வாதாரங்களை விட குடும்பத்தினரின் வருமானமே கருணாநிதிக்கு முக்கியம். அதனால் ""மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷையோ, மத்திய அரசையோ கண்டிக்கும் கூட்டமல்ல'' என்று முதலில் தெரிவித்தார். ""ஜெய்ராம் ரமேஷை எதிர்த்து திமுக பொதுக்கூட்டம் நடத்தும்போது ஸ்பெக்ட்ரம் ஊழலை எதிர்த்து காங்கிரஸ் ஏன் கண்டனப் பொதுக்கூட்டம் நடத்தக் கூடாது?'' என்று மூத்த காங்கிரஸ் தலைவர் ஒருவர் கேள்வி எழுப்பினார். கேரள அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கேரள முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தன், "நீண்ட நாள்களுக்கு முன்பே அணை கட்டுவதற்கான ஆய்வுக்கு தமிழக முதல்வர் கருணாநிதி ஒப்புதல் அளித்துவிட்டார். இப்போது தேவையற்ற குழப்பங்களை ஏன் உருவாக்கிக் கொண்டிருக்கிறார் என்று தெரியவில்லை' என்று கூறியுள்ளார். இதன் மூலம் கருணாநிதியின் சுயரூபம் வெளிப்பட்டுள்ளது. கடைசியில் தனது குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக ""முல்லைப் பெரியாறு பிரச்னை உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் கண்டனக் கூட்டம் ஒத்திவைக்கப்படுகிறது'' என்று அறிவித்துள்ளார். இதனை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பது அவருக்கு தெரியும். எனவேதான் மக்களின் அனுதாபத்தைப் பெற மருத்துவமனைக்குச் சென்று ஒரு நாடகத்தை நடத்தியுள்ளார். கற்பனையில் உதிக்கக் கூடிய எல்லா நாடகங்களும் நடத்தப்படுகின்றன. உண்மையை மறைக்க என்ன செய்ய முடியுமோ அத்தனையும் செய்யப்படுகிறது. இதனால் தமிழக மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள். துன்புறுத்தப்படுகிறார்கள். வஞ்சிக்கப்படுகிறார்கள். இப்படிப்பட்ட முதல்வர் தேவைதானா என்பதை தமிழக மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.
கருத்துக்கள்

நியாயமான கேள்விகளே! ஆனால், மக்கள் கேட்பது யார் என்றுதானே பார்க்கிறார்கள்? கேட்கப்படுபவரையும் கேட்பவரையும் ஒப்பிட்டுப் பார்த்துக் குறைந்த தீமையை ஏற்றுக் கொள்கின்றனரே! இரு தீமைகளையும் அகற்ற வேண்டும் என்னும் எண்ணம் இருந்தாலும் சரியான எதிர்க்கட்சி இல்லாமையால் தறிகெட்டவர்கள் பின்னால் தமிழ்நாடு சென்று தடுமாறுகிறதே! கொள்கைக் குழப்பங்களிலும் தடுமாற்றங்களிலும் கொள்ளைக் கொலை கூட்டணியிலும் ஆளும்கட்சி சிக்கித் தவிப்பது நன்கு புரிந்தாலும் இரண்டில் ஒன்று என்னும் முடிவிற்கு வருகிறார்களே தவிர இரண்டும் வேண்டா என்னும் முடிவிற்கு வர மறுக்கிறார்களே! உண்மையான பாதையில் நடைபோட விரும்புபவர்களின் கண்களையும் தேர்தல் சூதினால் கட்டிப் போட்டு விடுகின்றார்களே! ஆட்சிக்கு வரத் துடிக்கும் அதிமுகவே நீயாவது திருந்தக் கூடாதா? நீயும் அதே பாதையில் திமுக இடத்தைப் பிடிக்கத்தானே போட்டி போடுகின்றாய்! தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்றப் போகும் தலைவர் யார் என்று தெரியவில்லையே!

ஏக்கத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
10/31/2009 2:27:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக