வியாழன், 29 அக்டோபர், 2009

ஈழத்தமிழரின் போராட்ட வரலாறு-148: பிரேமதாசாவின் நயவஞ்சகம்!



அமைதிப்படை சென்னைத் துறைமுக வளாகத்தில் வந்திறங்கியபோது, வரவேற்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சம்பிரதாயமான இந்த வரவேற்பைத் தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி புறக்கணித்தார். இதற்காக அவர் சொன்ன கருத்துகள் சர்ச்சைக்குள்ளானது. பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் இதுகுறித்து விமர்சிக்கப்பட்டது.
இந்த சர்ச்சை, வடக்கு-கிழக்கு மாகாண கவுன்சில் முதலமைச்சர் வரதராஜ பெருமாள் திருகோணமலையில் இருந்து வெளியேறிய விஷயத்தால் அமுங்கிப்போனது. வரதராஜ பெருமாள் என்ன ஆனார் என்ற செய்தி பரபரப்புக்கிடையே அமைதிப்படையுடன் அவரும், அவருடன் அங்கம் வகித்தவர்களும் புறப்பட்டு சென்னை வந்ததாகச் செய்திகள் வெளியாயிற்று.
அவரைத் தமிழகத்தில் வைப்பது சரியானதாக இருக்காது என்று கருதி, ஒரிசா மாநிலத்தில் சில நாள்களும், பின்னர் பெயர் தெரிவிக்கப்படாத வடமாநிலம் ஒன்றிலும் குடியமர்த்தினார்கள். அவர் எங்கிருக்கிறார் என்பது மைய அரசுக்கு மட்டுமே தெரிந்த ரகசியமாயிற்று.

அமைதிப்படை வெளியேறிய அனைத்து இடங்களையும் விடுதலைப் புலிகள் கைப்பற்றி அந்த இடங்களில் தங்களின் பாசறைகளை அமைத்தனர். கிட்டத்தட்ட சிவில் நிர்வாகம் உள்பட அனைத்தையும் புலிகளே மேற்கொண்டனர். வானொலி, தொலைக்காட்சி நிலையங்களை உடனடியாகப் புலிகள் தொடங்கினர். போராளிகளுக்கு பாலசிங்கமும், காசி ஆனந்தனும் அரசியல் வகுப்புகள் நடத்தினர். இந்த நிர்வாக அமைப்புக்கு, சட்டரீதியான அங்கீகாரம் பெற, பாலசிங்கம் உள்ளிட்ட குழுவினர் ஹமீது மற்றும் பிரேமதாசாவிடம் பேசினர்.
வரதராஜ பெருமாள் அரசின் முடிவு தானே முடிவுற்ற நிலையைச் சுட்டிக்காட்டி, ஒரு திருத்தச் சட்டம் கொண்டுவருவதன் மூலம் மாகாணக் கவுன்சிலைக் கலைத்துவிட்டு, புதிதாகத் தேர்தலை நடத்த உத்தரவிடுமாறு பிரேமதாசாவிடம் பாலசிங்கம் வலியுறுத்தினார்.
ஆனால், பிரேமதாசா, அதைச் செய்வதற்கு உடன்படவில்லை. இந்த ஒரு விஷயமே இனி வரப்போகிற காலங்களிலும் அவர் எப்படி நடந்துகொள்வார் என்பதற்குச் சான்றாயிற்று. மாகாணக் கவுன்சில் கலைக்கப்பட்டு, புதிய தேர்தலும் வந்தால், அந்தத் தேர்தலில் புலிகள் பெருவாரியான வெற்றியை ஈட்டிவிடுவார்கள் என்பதால், அவர் தயக்கம் காட்டினார்.
அது மட்டுமன்றி, புலிகள் சட்டத்துக்குட்பட்ட ஆட்சியை அமைத்துவிட்டால் அதன் பின்னர் ஏற்படும் இதர விளைவுகளுக்கும் அஞ்சினார். அடுத்தகட்ட முயற்சியாக சுயாட்சிக்கு சமமான அதிகாரங்களைப் பெறுவதில் முடிந்துவிடுமோ என்பதும் அவரது கவலையாக இருந்தது.
புலிகளைப் பொறுத்தவரை, சிங்களவர்களுடன் அரசியல் சட்டத்துக்குட்பட்டு அவர்களுடன் சேர்ந்து வாழமுடியுமா என்பதை முயன்று பார்க்கும் வாய்ப்பாகக் கருதினார்கள். இந்த முயற்சி வெற்றி பெறாது போனால், சுயநிர்ணய உரிமை அடிப்படையில் சுதந்திரத் தமிழீழம் அமைப்பது என்றும் அவர்களால் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
பிரேமதாசாவோ ஒரே தேசம், ஒரே மக்கள் என்ற கோட்பாட்டில் இந்த முயற்சிகளை முடிந்தவரை தள்ளிப்போட முயன்றார். தொடர்ந்து அமைச்சர் ஹமீது வந்து, ஆயுதம் களைவது தொடர்பாக பேசத் தொடங்கினார். இதுவரை ஆயுதம் களைவது குறித்த எந்தப் பேச்சும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்படாத நிலையில், புதிதாக ஆயுதம் துறப்பது குறித்துப் பேசியதன் மூலம், பிரேமதாசாவின் திட்டம் வெளிப்பட்டது. பாலசிங்கம் குழுவினர் இது குறித்து கடும் விவாதத்தில் ஈடுபட்டனர். ஹமீது இந்தக் கருத்து தன்னுடையதல்ல என்றும் அதிபரின் கருத்தையே தான் இங்கு தெரிவித்ததாகவும் கூறினார்.
அமைச்சர் ஹமீது மேலும் விளக்குகையில், தேர்தலின்போது வன்முறை தலைதூக்கக்கூடாது என்று பிரேமதாசா விரும்புகிறார். இந்தத் தேர்தலில் ஈபிஆர்எல்எஃப் உள்ளிட்ட பிற கட்சிகளும் இடம்பெறுவதும் அவரது விருப்பமாக உள்ளது. இந்த நிலையில் புலிகள் ஆயுதங்களுடன் நடமாடுவது அச்ச உணர்வை மட்டுமல்ல; ஒரு மேலாண்மைப் போக்கை நிலைநாட்டுவதாக அது அமைந்துவிடும் என்றும் அவர் கருதுவதாகத் தெரிவித்தார்.
பாலசிங்கம் குழுவினர் இந்தக் கருத்தைக் கேட்டதும், இதுதான் உண்மையென்றால் அதிபர் தங்களை நேரில் சந்தித்தபோது இது குறித்து தெரிவிக்காமல் இப்போது தெரிவிப்பது ஏன் என்று வாதிட்டதுடன், அமைதிப்படை இலங்கையைவிட்டு வெளியேறிய பின்னர் புலிகளுக்கு எதிரான அமைப்புகளுடன் பிரேமதாசா ரகசியப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவருவதும் தங்களுக்குத் தெரியும் என்றும் குறிப்பிட்டனர்.
விடுதலைப் புலிகளின் வாதம் என்னவென்றால், தாங்கள் ஆயுதம் வைத்திருப்பது தமிழீழப் பகுதியின் பாதுகாப்புக்கு என்றும், சட்டம் ஒழுங்குக்கு அவர்களே பொறுப்பாக இருப்பார்கள் என்றும், அதனைக் கையாளும் தகுதி புலிகளுக்கே உண்டு என்றும், பயிற்சி அளிக்கப்பட்ட பாதுகாப்புப்படை, புலிகள் வசம் இருப்பது அவசியம் என்றும் தெரிவித்தனர்.
தற்போது தொங்கிக்கொண்டிருக்கும் வடக்கு-கிழக்கு மாகாண கவுன்சிலைக் கலைத்துவிட்டுப் புதிய தேர்தல் நடத்தும் அறிவிப்பு வெளியிட்ட பின்னர், 6-வது சட்டத் திருத்தத்தை வாபஸ் பெறும் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகு ஆயுதக் களைவு குறித்துப் பேசலாம் என்றும் தற்போது பேசுவது பொருந்தாது என்றும் புலிகள் குறிப்பிட்டனர்.
இறுதியாக புலிகள், மாகாண கவுன்சில் என்பது புலிகளின் இலக்கு அல்ல என்றும், ஒரு திட்ட வரையறையில் புலிகள், சிங்களவருடன் சேர்ந்து நிர்வாகத்தில் ஈடுபட முடியுமா என்று பார்ப்பதுதான் தற்போதைய நிலை என்றும், இதுவே நிரந்தரத் தீர்வு ஆகிவிடும் என்று புலிகள் கருதவில்லை என்றும் அமைச்சர் ஹமீதிடம் உறுதியாகச் சொல்லி, புரியவைத்தார்கள்.
மேலும் அவர்கள் கூறுகையில், ஜனநாயக வழிமுறைக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல என்பதை நிலைநாட்டவும், மற்ற கட்சிகளுடன் தேர்தலில் பங்குபெறவும், சுதந்திரமான, நியாயமானத் தேர்தலை நடத்தவும் அரசுடன் ஒத்துழைப்போம் என்றும் உறுதி கூறினர் (ஆதாரம்: சுதந்திர வேட்கை.அடேல் பாலசிங்கம்).
""மாகாணசபை நிர்வாகக் கட்டுமானத்தின் ஓர் அம்சமாக, மாகாணக் காவல்துறையை அமைத்து, புலிப் போராளிகளை அதிகாரிகள் ஆக்கலாமே'' என்றார் ஹமீது.
""அப்படியென்றால் வடக்கு-கிழக்குப் பகுதிகளில் காவல் பணிக்கு 10 ஆயிரம் பேர் தேவைப்படுவர். அதற்கான ஆயுதங்களுக்கும் அரசு செலவு செய்ய வேண்டியிருக்கும்'' என்றார் பாலசிங்கம்.
விடுதலைப் புலிகளிடமிருந்து ஆயுதம் பறிப்பது என்ற விவாதம்-விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம் வழங்கும் கட்டத்துக்கு வந்தது. அமைச்சர் ஹமீது பேச்சுவார்த்தை வெற்றி பெறாததால் தளர்ந்து போயிருந்தார் (ஆதாரம்: மேற்கூறிய நூல்).

பிரேமதாசா திறந்த மனதுடன் இருந்து, 6-வது சட்டத் திருத்தத்தை வாபஸ் பெற்று, புலிகளுக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிப்பாரா அல்லது புலிகளுடன் ராணுவ ரீதியாக மோதுவாரா என்பது குறித்துப் புலிகளுக்கு அதிகம் யோசிக்கத் தேவையில்லை. அவர் ராணுவ நடவடிக்கை எடுக்கக்கூடும் என்று உறுதியாக நம்பியதன் அடிப்படையில், பாலசிங்கம் குழுவினரை யாழ்ப்பாணம் திரும்பும்படி பிரபாகரன் பணித்தார்.
இந்தப் பேச்சுவார்த்தை முறிவுக்குப் புலிகளைக் காரணமாக்கும் வகையில், 1987-லிருந்து வடக்கு-கிழக்கில் முகாம்களில் முடங்கிக் கிடந்த சிங்கள ராணுவத்தினரை கட்டுப்பாடற்ற வகையில் நடந்துகொள்ளும்படி பணிக்கப்பட்டது. இதன் மூலம் புலிகள் வெகுண்டெழுந்து போரிட முயல்வர் என்பது எளிதான கணக்கு ஆயிற்று. விடுதலைப் புலிகளுக்கும் அரசுக்குமாக செய்யப்பட்டிருந்த போர்நிறுத்த ஒப்பந்தத்தை, அப்பட்டமாக மீறும் வகையில் செயல்கள் அடுத்தடுத்து நடைபெற்றன.
மட்டக்களப்பில் விடுதலைப் புலிகளின் மூத்த போராளி ஒருவரை, ஆயுதத்தைப் பறித்துவிட்டு, சாலையில், மக்கள் முன்னிலையில் முட்டிபோட்டு நகரும்படி சிங்கள ராணுவம் உத்தரவிட்ட நிலையில், அவர் அவமானம் தாங்காமல் "சயனைட்' குப்பியைக் கடித்து உயிர் துறந்தார்.
இன்னும் கொழும்பிலிருந்து கிளம்பாத நிலையில், பாலசிங்கம் குழுவினர், பிரேமதாசாவின் கவனத்திற்கு இந்தச் சம்பவத்தைக் கொண்டுவந்தனர். பலன் இல்லை. அமைச்சர் ஹமீதுவிடம் தொடர்பு கொண்டார் பாலசிங்கம். அவர் தெரிவித்த செய்திகள் பாலசிங்கத்துக்கு அதிர்ச்சியூட்டின.
கிழக்குப் பகுதியில் அமைதிப்படைகள் வெளியேறிய முகாம்களில் சிங்களப்படை குடியேற வேண்டும் என்றும், இதன்பின்னர் வடக்கிலும் அதை நிறைவேற்ற ராணுவத் தலைமைக்கு உத்தரவிட்ட நிலையில், இனி கோரிக்கைகள் எதுவும் பலிக்காது என்றும் விளக்கினார்.
கிழக்கில் ராணுவம் பலப்படுத்தப்பட்டது. காவல் நிலையங்களிலும் புதிய ஆள்கள் குவிக்கப்பட்டனர். எந்த நேரத்திலும் இருவருக்கும் மோதல் ஏற்படலாம் என்ற நிலை எழுந்தது.
பிரேமதாசா தங்களை நயவஞ்சகமாக ஏமாற்ற முயற்சிக்கிறார் என்கிற பலமான சந்தேகம் விடுதலைப் புலிகளுக்கு ஏற்பட்டதில் ஆச்சரியம் எதுவும் இல்லை.
அமைதிப்படையின் உதவியுடன் விடுதலைப் புலிகளைப் பலவீனப்படுத்திய நிலையில், அவர்கள் வெளியேறிய முகாம்களில் சிங்களப் படைகளைக் குடியேற்றி, தனது மேலாண்மையை நிலைநிறுத்திவிடலாம் என்று பிரேமதாசா திட்டமிட்டிருந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை!

நாளை: பத்மநாபா மீது தாக்குதல்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக