வெள்ளி, 30 அக்டோபர், 2009

ஈழத்தமிழரின் போராட்ட வரலாறு-150:
புலிகள் - முஸ்லிம்கள் உறவு!



கிட்டு
"இலங்கையில் வாழும் முஸ்லிம்கள் அனைவருமே தமிழ் பேசும் முஸ்லிம்கள் ஆவார்கள். மதத்தால் வேறுபட்டவர்களே தவிர மொழியாலும் இனத்தாலும் முழுக்க, முழுக்க தமிழர்களே ஆவார்கள். உருது, அரபி, பாரசீகம் மற்றும் மலாய் பேசும் முஸ்லிம்கள் தமிழீழத்துக்கு வெளியே, கொழும்பு நகரை ஒட்டி, குறைந்த எண்ணிக்கையில் வாழ்ந்து வருவதை ஆரம்ப அத்தியாயங்களில் குறிப்பிட்டுள்ளோம். தமிழ் பேசும் மக்களின் வரலாற்றுப் பூர்வமான தாயகம் என்று அழைக்கப்படுகிற பகுதியில்தான் அவர்கள் வாழ்கிறார்கள். எனவே உருவாகப்போகும் தமிழீழ நாட்டின் பிரிக்க முடியாத அங்கமாகத்தான் அவர்கள் திகழ்கிறார்கள்' இவ்வாறு புலிகள் - முஸ்லிம்கள் உறவு குறித்து "தென் செய்தி' வெளியீடு எண் 8 கூறுகிறது. இந்நிலையில், "இலங்கை, வடக்கு - கிழக்கு மாநிலத்தில் வாழும் முஸ்லிம்கள் குறித்து உண்மைகளைத் திரித்துக் கூறும் தவறான பிரசாரம் மேற்கொள்ளப்பட்டதையொட்டி 1988-ஆம் ஆண்டு, சென்னையில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கியத் தலைவர் கிட்டுவுடன் முஸ்லிம் தூதுக் குழு ஒன்று பேச்சு நடத்தியது. ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா அரசில் மூத்த அமைச்சராக இருந்த பதுஃதீன் முகமது தலைமையில் வந்த தூதுக் குழுவினர் கிட்டுவுடன் பேசி, உருவாகப் போகும் தமிழீழத்தில் தங்களுக்குள்ள உரிமைகள் குறித்துப் பேசி உடன்பாடு கண்டதாக' -அந்த வெளியீட்டில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து விடுதலைப் புலிகள் 1988-ஆம் ஆண்டு ஏப்ரல் 4-ஆம் தேதியன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். அவ்வறிக்கையின் முக்கிய அம்சங்கள் வருமாறு: தமிழ் தேசிய இனத்தில் தனித்துவமான கலை, கலாசாரம், பண்பாடுகளைக் கொண்ட இனக் குழுவினரான இலங்கைவாழ் முஸ்லிம்கள், அச்சம், ஐயப்பாடுகளின்றி தமது கலை, கலாசாரம், பண்பாடு, மதம் போன்றவற்றைப் போற்றி வளர்க்கவும் பாதுகாக்கவும் தமிழ் தேசிய இனத்தின் ஏனையவர்களுக்குள்ள அனைத்து உரிமைகளுக்கும் சுதந்திரத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளாகிய நாம் உத்தரவாதம் வழங்குகின்றோம். பின்தங்கிய நிலையில் இருக்கும் முஸ்லிம்களின் கல்வி, பொருளாதார, அரசியல் உரிமைகளை மேம்படையச் செய்ய எமது இயக்கம் எல்லா வகையிலும் முழு ஒத்துழைப்பு வழங்கும். தமிழ் தேசிய இனத்தில் சமத்துவமான நிலைமையை அவர்கள் அடையும்வரை அவர்களுக்கு அவர்கள் பின்தங்கிய துறைகளில் சிறப்புச் சலுகைகள், உதவிகள் ஆட்சி நிர்வாகத்தின்கீழ் கிடைக்க எமது இயக்கம் ஆவனவற்றைச் செய்யும். இனத்தின் தனித்துவம் காப்பாற்றப்பட நிரந்தர வாழ்விடம் எவ்வளவு அவசியம் என்பதை நன்கறிந்தவர்கள் முஸ்லிம்கள். பாரம்பரியமாக இருந்து வந்த நிலத்தை, சியோனிஸ்டுகளான யூதர்களிடம் இழந்துவிட்டு இன்று பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் பல்வேறு நாடுகளில் அகதிகள் முகாம்களிலிருந்து தமது போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கும் பாலஸ்தீன மக்களது நிலைமைகளைப் போலன்றி, தம் நிலத்தைக் காப்பாற்ற தனித்துவமான தமது கலை, கலாசாரம், பண்பாடு, மதம் என்பவற்றைக் காப்பாற்ற எம்முடன் சேர்ந்து போராட முன்வந்திருக்கிறார்கள். அதன் ஒருபடிதான் முஸ்லிம் பிரதிநிதிகள் விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தை நடத்தி வெளியிட்டிருக்கும் கூட்டறிக்கை. இலங்கை வாழ் முஸ்லிம்கள் தமிழ் மொழியைப் பேசுபவர்களாக இருப்பினும் அவர்கள் வேறுபட்ட தனித்துவத்தைக் கொண்ட தமிழ் தேசியத்தினுள் உள்ளடங்கிய ஓர் இனக்குழு என்பதனையும் வடக்கு-கிழக்கு மாகாணம் ஏனைய தமிழ் மொழி பேசும் மக்களின் பாராம்பரியத் தாயகமாக உள்ளது போலவே முஸ்லிம்களது பாரம்பரியத் தாயகமாக உள்ளது என்பதனையும் ஏற்றுக் கொள்கிறோம். வடக்கு-கிழக்கு ஒன்றிணைத்த தாயகத்தில் வாழும் தமிழர்களும் முஸ்லிம்களும் ஐக்கியத்துடனும் சமாதானத்துடனும் வாழ, தமிழீழ விடுதலைப் புலிகள் தமது முழு ஒத்துழைப்பையும் வழங்குவர் என்பதையும் முஸ்லிம்கள் பாதுகாப்புடன் வாழ்வதற்கு எதிர்பார்க்கப்படும் முழு உத்தரவாதமும் சட்ட ரீதியாக வழங்கப்பட வேண்டும் என்பதையும் ஏற்றுக் கொள்கிறோம். தாயகத்தில், முஸ்லிம் மக்களின் நலன்கள் பாதுகாக்கப்படும் எனவும் தாயகத்தில், உரிமைகளை வென்றெடுப்பதற்காக முஸ்லிம் மக்கள் ஏனைய தமிழ் பேசும் மக்களுடன் பெருமளவில் இணைவதன் மூலமாகத்தான் தமது மண்ணையும் கலாசாரத்தையும் காப்பாற்ற முடியுமென்பதையும் முஸ்லிம் மக்களின் நலனுக்காகத் தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்ச்சியாகப் பாடுபாட்டு வருவார்கள் என்பதும் உறுதியாக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது. மாகாண சபைக்கான 13-வது அரசியல் சட்டத் திருத்தம் முஸ்லிம் மக்களினதும் ஏனைய தமிழ் பேசும் மக்களினதும் அடிப்படை அரசியல் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யவில்லை. முஸ்லிம் மக்களது உரிமைகளைப் பாதுகாக்கவும் ஆட்சியதிகாரங்களை நியாயமான முறையில் பகிர்ந்து கொள்ளவும் கூடிய ஏற்பாடுகளைச் செய்யும்போது அத்தகைய நடவடிக்கைகள் தமிழ் பேசும் மக்களின் தாயகத்தின் ஒருமைப்பாட்டிற்குப் பாரதூரமான குந்தகமெதுவும் ஏற்படுத்தக்கூடாது. மேற்கூறியதன் அடிப்படையில் வடக்கு-கிழக்கு மாகாண சபையில் ஏனைய தமிழ் பேசும் மக்களுக்குள்ள இன உரிமைகளையும் சலுகைகளையும் வாய்ப்பினையும் சுதந்திரத்தினையும் அனுபவிப்பதற்கு வடக்கு-கிழக்கு மாகாணத்தைத் தமது தாயகமாகக்கொண்ட முஸ்லிம்கள் உரித்துடையவர்கள். கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் 33 சதவிகிதம் தொகையினர். வடக்கு-கிழக்கு ஒன்றிணைந்த மாகாணத்தில் முஸ்லிம்கள் 18 சதவிகிதத் தொகையினர். முஸ்லிம்கள் அதிகபட்ச பாதுகாப்பைப் பெற்று ஆட்சி அதிகாரங்களை, பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பினையும் பெறக்கூடிய வகையில் ஒன்றிணைந்த தாயகத்திலுள்ள 30 சதவிகிதத்திற்குக் குறைவில்லாத வகையில், மாகாண சபையில் பிரதிநிதித்துவம் பெறுவதற்கும் அமைச்சரவையில் இடம் பெறுவதற்கும் உரித்துடையவர்கள் என்பதை ஏற்றுக் கொள்வதுடன் இவ் விகிதப்படியான உரித்துகளைப் பெறுவதற்குத் தேவையான அரசியல் சட்ட ஏற்பாடுகளைச் செய்வதற்கு இருதரப்பினரும் முழு முயற்சிகளையும் மேற்கொள்வர். வருங்கால அரச காணிப் பங்கீடு முஸ்லிம்களுக்குக் கிழக்கு மாகாணத்தில் 35 சதவிகிதம் குறைவில்லா வகையிலும் மன்னார் மாவட்டத்தில் 30 சதவிகிதத்துக்குக் குறைவில்லாத வகையிலும் வட மாகாணத்தில் ஏனைய பகுதிகளில் 5 சதவிகிதத்துக்குக் குறைவில்லாத வகையிலும் இருக்க வேண்டும். வடக்கு-கிழக்கு தாயகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் வாழும் முஸ்லிம்களின் விகிதாசாரத்தின்படி பொதுத்துறை வேலைவாய்ப்பிற்கான உரிமையை முஸ்லிம்கள் கொண்டிருப்பர். கல்வித்துறையில் எல்லா இடங்களிலும் சம வாய்ப்புகள் பேணப்படும் வரை பல்கலைக்கழக அனுமதியின்போது கல்வித் துறையில் பின்தங்கியுள்ள பிரதேசங்களில் விசேஷ கவனிப்புச் செலுத்தப்படும். பல்கலைக்கழக மட்டம் வரையிலான பிரத்தியேகக் கல்வி வசதிகள் முஸ்லிம்களுக்காக ஏற்படுத்தப்படும். முஸ்லிம் மக்களுக்காக இஸ்லாமியப் பல்கலைக்கழகம் நிறுவப்படும். முஸ்லிம் மக்களது தனித்துவத்தின் உரிமைகள், அக்கறைகள் என்பவற்றைப் பாதிக்கக்கூடிய எந்தவித சட்டவாக்கியங்களும் அவற்றிற்கு முஸ்லிம் பிரதிநிதிகளில் பெரும்பான்மையினர் சார்பாக வாக்களித்தாலன்றி வடக்கு-கிழக்கு மாகாண சபையினால் நிறைவேற்றப்படலாகாது. வடக்கு-கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சராக ஒரு முஸ்லிம் முறையாக நியமிக்கப்பட்டிருந்தாலன்றி, அம் மாகாண சபையின் துணை முதலமைச்சராக ஒரு முஸ்லிம் நியமிக்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் சட்ட ஏற்பாடுகள் செய்யப்படுதல் வேண்டும். வடக்கு-கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் அவர்கள் அரசியல், நிர்வாக, அபிவிருத்தி அலகுகள் பல்வேறு மாவட்டங்களில் உருவாக்கப்படுதல் வேண்டும். இதுபற்றி விடுதலைப் புலிகள் தமது கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். இவற்றுள் உள்ளடக்கப்பட வேண்டிய பாரம்பரிய எல்லைகள், மூலவளங்கள் என்பன பற்றி மேலும் இருபகுதியினரும் ஆய்வு நடத்தி இறுதி முடிவு மேற்கொள்ளப்படும். இவ்வாறு பல நிலைகள் விவாதித்து முடிவு காணப்பட்டன. தமிழர்களும் முஸ்லிம்களும் இணைந்து வாழ வேண்டிய அவசியத்தை வலியுறுத்திய இந்த உடன்பாட்டில் விடுதலைப் புலிகள் சார்பில் கிட்டுவும், முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணி சார்பில் எம்.ஐ.எம். மொகைதீனும் கையெழுத்திட்டனர்.நாளை: பிரித்தாளும் சூழ்ச்சி!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக