.தினமலர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
.தினமலர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 10 செப்டம்பர், 2013

இலங்கையில் சந்தித்தவர்களுக்குப் பாதுகாப்பு வேண்டும்

http://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_799786.jpg

இலங்கையில் என்னை ச் சந்தித்தவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்
கொழும்பு : ""இலங்கையில் என்னை சந்தித்த பத்திரிகையாளர்கள் மற்றும் மக்களுக்கு, உரிய பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும்,'' என, ஐ.நா., மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை தெரிவித்துள்ளார்.

இலங்கையில், விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே நடந்த சண்டை, 2009ல் முடிவுக்கு வந்தது. இந்த சண்டையில், போர் குற்றம் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதற்கிடையே, ஐ.நா., மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை, இலங்கையில் போர் பாதித்த பகுதிகளில் நடக்கும், சீரமைப்பு நடவடிக்கைகளை, கடந்த மாதம், ஆய்வு செய்தார்; இந்நிலையில், ஐ.நா., மனித உரிமை ஆணையத்தின், 24வது கூட்டம், ஜெனிவாவில் நேற்று துவங்கியது. வரும், 27ம் தேதி வரை, இந்த கூட்டம் நடக்க உள்ளது. இலங்கை உள்ளிட்ட, 20 நாடுகளின், மனித உரிமை நிலை குறித்த அறிக்கை, இந்த கூட்டத்தில் சமர்பிக்கப்பட உள்ளது.இலங்கை பயணம் மேற்கொண்ட, நவநீதம் பிள்ளை, அந்நாட்டின் மனித உரிமை நிலை குறித்த அறிக்கையை, இம்மாத இறுதியில் தாக்கல் செய்ய உள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:இலங்கையில் போர் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்ய, இலங்கை அரசு உதவி செய்தது. இது தொடர்பான அறிக்கையை, கூட்டத்தின் முடிவில் சமர்ப்பிக்க உள்ளேன். இலங்கை பயணத்தின் போது, என்னை சந்தித்த பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும், உரிய பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும்.இவ்வாறு, நவநீதம் பிள்ளை கூறினார்.

செவ்வாய், 23 ஏப்ரல், 2013

வன்முறை யிலிருந்து காக்கும் ஆடைகள், கருவிகள்: மாணவியர்

 
 
வன்முறை யிலிருந்து காக்கும் ஆடைகள், கருவிகள்: விதவிதமாக கண்டுபிடித்து அசத்தும் மாணவியர்

புதுதில்லி:பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ய விடாமல் தடுக்கும் அதிநவீன கருவிகளை, மாணவியர் மற்றும் பெண்கள் தயாரித்துள்ளனர். பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்கார சம்பவங்கள், சமீப காலமாக அதிகரித்துள்ளன. அதனால், பாலியல் பலாத்காரத்திலிருந்து பெண்களை காக்கும் கருவிகளுக்கு வரவேற்பு அதிகமாக உள்ளது.
எஸ்.ஆர்.எம்., பல்கலை மாணவி:

சென்னை, எஸ்.ஆர்.எம்., பல்கலைக் கழகத்தில், "ஏரோநாட்டிகல் இன்ஜினியரிங்' படிக்கும் மனிஷா, இன்ஜினியரிங் மாணவர்களான, நீலாத்ரி பாசு மற்றும் ரிம்பி திரிபாதி ஆகியோருடன் இணைந்து, "எஸ்.எச்.இ.,' என்ற கருவியை கண்டு பிடித்துள்ளார்.சாதாரண, "நைட்டி' போல காட்சியளிக்கும் உடையில், அதிநவீன கருவி இணைக்கப்பட்டுள்ளது. பிறரால் பலாத்காரத்திற்கு உள்ளாகிறோம் என்பதை அறிந்தவுடன், அந்த உடையில் பொருத்தப்பட்டிருக்கும், பொத்தானை அழுத்தினால் போதும்; 3,800 கிலோ வாட், "எலக்ட்ரிக் ஷாக்' அடித்து, தொட்ட நபர் மயங்கி சரிவார்.ஆனால், இந்த உடையை அணிந்திருக்கும் பெண்ணுக்கு, எவ்வித பாதிப்பும் ஏற்படாது. மேலும், அடுத்த வினாடி, உடையுடன் இணைக்கப்பட்டிருக்கும், ஜி.பி.ஆர்.எஸ்., கருவி செயல்பட்டு, போலீஸ், பெண்ணின் உறவினர்கள் மொபைல் போன் எண்களுக்கு, எச்சரிக்கை செய்திகளை அனுப்பும்.

குறைந்த விலையில்:

""இது போன்ற கருவியை, அமெரிக்காவின், மாசாசூசெட்ஸ் தொழில்நுட்ப கல்வி நிறுவன மாணவர்கள் தயாரித்துள்ளனர். அதன் விலை, பல லட்ச ரூபாய் இருக்கும் என, கூறப்படுகிறது. ஆனால், நாங்கள் தயாரித்துள்ள ஆடையின் விலை, அதிகபட்சம், 1,500 ரூபாய்க்குள் தான் இருக்கும்; ஆடையை சலவையும் செய்யலாம்,'' என, மாணவி மனிஷா தெரிவிக்கிறார். அது போல், தேசிய ஆடை அலங்கார தொழில் நுட்பம் படிக்கும் மாணவர்கள், நிஷாந்த் பிரியா, ஷாஜத் அகமது ஆகியோர், பேராசிரியர், நூபூர் ஆனந்த் துணையுடன், "ஜாக்கெட்' ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். அதை அணிந்திருக்கும் போது, தேவையில்லாமல் யாராவது தொட்டால், தொட்ட நபருக்கு, எலக்ட்ரிக் ஷாக் கிடைக்கும்.

பயங்கர "ஷாக்':

எலக்ட்ரிக் ஷாக்கால் பாதிக்கப்பட்டவர், 15 நிமிடத்திற்கு எதுவும் செய்ய முடியாது; மயக்க நிலையை அடைந்து விடுவார். அந்த ஜாக்கெட்டிலிருந்து வெளியாகும், 110 வோல்ட் மின்சாரம், சில்மிஷ நபரையோ அல்லது பலாத்கார நபரையோ நிலைகுலையச் செய்து விடும்.வியர்வை மற்றும் மழை நீர் பட்டாலோ, அணிந்திருப்பவருக்கு எத்தகைய ஆபத்தையும் அளிக்காத வகையில், இந்த ஜாக்கெட் தயாரிக்கப்பட்டு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.இந்த வரிசையில், தவறான எண்ணத்துடன் தொட்டவுடன், சகிக்க முடியாத நாற்ற நீரை, அந்த நபர் மீது பீய்ச்சி அடைக்கும் ஆடைகள், தொட்டவுடன், முள்ளெலி போல, கூர்மையான கம்பிகளால், பலாத்காரம் செய்பவனின் உடலை துளைக்கும் ஆடைகளும் தயாரிக்கப்பட்டுள்ளன.அவை, காப்புரிமைக்காகவும், குறைந்த விலையில் தயாரிப்பதற்காகவும், அடுத்த கட்ட சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.



திங்கள், 22 ஏப்ரல், 2013

அச்சுறுத்தி ப் பணம் பறிக்கும் தேவானந்தா : அமெரிக்க முறையீடு






அச்சுறுத்தி ப் பணம் பறிக்கும் தேவானந்தா கட்சி : அமெரிக்க வெளியுறவுத்துறை  முறையீடு

கொழும்பு : சட்ட விரோத கொலைகள், ஆட்கள் காணாமல் போதல் போன்ற மனித உரிமை மீறல்கள், கடந்த ஆண்டு இலங்கையில் நடந்ததாக, அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

அமெரிக்க வெளியுறவு அமைச்சகம், இலங்கையின் மனித உரிமை மீறல் குறித்து கடந்த ஆண்டுக்கான அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.

அறிக்கையில் கூறியுள்ளதாவது:இலங்கையில் சமூக ஆர்வலர்கள், தொண்டு செய்பவர்கள் மீது விடுதலை புலிகள் ஆதரவாளர்கள் என்ற முத்திரை குத்தப்பட்டு கொடுமைக்கு ஆளாக்கப்படுகின்றனர். அரசுக்கு ஆதரவான செய்திகளை வெளியிடும் படி பத்திரிகையாளர்கள் அச்சுறுத்தப்படுகின்றனர்.கடந்த ஆண்டில், அரசு படைகளால், சட்ட விரோத கொலைகளும், ஆட்கடத்தலும் நடந்துள்ளன. மனித உரிமை மீறலில் ஈடுபட்ட ஒரு சில அதிகாரிகள் மட்டுமே, அரசால் விசாரிக்கப்பட்டுள்ளனர். மற்றவர்களிடம் விசாரணை நடைபெறவில்லை.

இலங்கை அரசுடன் கூட்டணி வைத்துள்ள, டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயக கட்சி, யாழ்பாண பகுதியில், மக்களை மிரட்டி பணம் பறித்தல், அச்சுறுத்தல், ஊழல் மற்றும் வன்முறையில் ஈடுபட்டுள்ளது.பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதலை தடுக்க, இலங்கை அரசு தவறி விட்டது.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.இதேபோன்ற குற்றச்சாட்டை கடந்த வாரம், பிரிட்டிஷ் அரசு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


ஞாயிறு, 24 பிப்ரவரி, 2013

கும்பமேளாவில் கார்த்திகேயன் கைவண்ணம்

 
 
ஆர்.கார்த்திகேயன்.

செய்தி பத்திரிகை நிறுவனத்தில் நியூஸ் மற்றும் இன்போகிராபிக் டிசைனர் வேலை பார்ப்பவர்.

இந்த வேலை எப்படிப்பட்டது என்றால் பத்திரிகை புகைப்படக்கலைஞர்கள், மற்றும் கார்ட்டூனிஸ்ட்கள், நிருபர்கள் போன்ற படைப்பாளிகள் தரும் படைப்பை மெருகேற்றி பக்கங்களில் நேர்த்தியாகவும், வித்தியாசமாகவும், அழகுபடவும் சேர்க்கும் அருமையான பணி.
இதற்காக டில்லி, பெங்களூருவில் நடந்த சர்வதேச கருத்தரங்குகளில் கலந்துகொண்டு தனது பணியை மேம்படுத்திக்கொண்டவர்.
வேலையின் போது இவர் கவனத்திற்கு வரும் பத்திரிகை புகைப்படங்களை அடிக்கடி பார்த்ததில் இவருக்கு புகைப்படக்கலை மீதும் ஒரு கண் விழுந்தது.
இதன் காரணமாக நேரம் கிடைக்கும் போது பத்திரிகை புகைப்படக் கலைஞர்களுடன் சென்று, அவர்கள் படமெடுக்கும் பாங்கினை மனதில் வாங்கி பதிய வைத்துக் கொண்டே வந்தார்.
இதே போல தானும் ஒரு சொந்தமாக ஒரு கேமிரா வாங்கி நிறைய படங்கள் எடுக்கவேண்டும் என்று எண்ணியிருந்தார், இவரது இந்த எண்ணம் ஈடேற நான்கு ஆண்டுகளாயிற்று.
சமீபத்தில் சொந்தமாக நிக்கான் டி.90 கேமிரா வாங்கினார், கேமிரா வாங்கிய அதிர்ஷ்டம் உ.பி., மாநிலம் அலகாபாத்தில் நடைபெறும் மகா கும்பமேளாவைக் காண செல்லும் வாய்ப்பு கிடைத்தது.
கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று புண்ணிய நதிகள் கலக்கும் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் மகா கும்பமேளாவில் நீராட உலகம் முழுவதிலும் இருந்து மூன்று கோடி பேர் வருவார்கள் என்பதும், அவர்களில் வெளி உலகத்திற்கு தங்களை காட்டமால் இருந்து வரும் நாகா சாமியார்கள் எனப்படும் நிர்வாண சாமியார்களும் இருப்பார்கள் என்பதும் விசேஷமாகும்.
இதற்காக கடந்த பிப்ரவரி மாதத்தில் ஏழாம் தேதி துவங்கி பதிமூன்றாம்தேதி வரையிலான எட்டு நாட்கள் அங்கேயே முகாமிட்டு, இரவு இரண்டு மணிக்கு வீசும் உறையவைக்கும் குளிரையும் பொருட்படுத்தாமல் பல படங்களை எடுத்து வந்துள்ளார்.
பல படங்கள் அருமையாக வந்துள்ளது. அடுத்த மகா கும்பமேளா வரை பேசப்படும் இந்த ஆவண படங்களில் இருந்து சில படங்கள் இங்கே உங்கள் பார்வைக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த பக்கம் பருப்பு வேகாத நிலையில், கும்பமேளாவிற்கு தன் தொண்டர்கள் சகிதம் சென்று, அங்குள்ள அகடா (சாமியார்களுக்கான மடம்) ஒன்றை மதுரை ஆதினத்தை பிடித்தது போல பிடித்து, அந்த மடத்தின் மகா மண்டேலஸ்வரர் என்ற பட்டம் சூட்டிக்கொண்டு, கங்கையில் புனித நீராட தங்க பல்லக்கில் வந்த நித்யானந்தாவை, இவர் மட்டுமே படமாக பதிவு செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கார்த்திகேயன் படத்திற்கு கீழே உள்ள போட்டோ கேலரி என்ற சிவப்பு பட்டையை கிளிக் செய்து கும்பமேளாவில் எடுத்த படங்களை பார்க்கலாம், படங்கள் குறித்து கார்த்திகேயனிடம் பேசுவதற்கான எண்: 8754481047.

- எல்.முருகராசு
 

ஞாயிறு, 13 ஜனவரி, 2013

சாவுக்கு அல்ல; வாழ்வுக்கானது பறை இசை

பறை இசையைக் குறிப்பிட்ட  வகுப்பிற்கான அல்லது குறிப்பிட்ட  இசைக்கான கலையாக இளைஞர்கள் கருதுவதில்லை. நான் மதுரையில் மாவட்டக்கலைமன்றச் செயலராக இருந்த பொழுது பறைஇசைக்கான பயிற்சிப்பட்டறைகள் நடத்தினேன். அரசு விழாக்களின் தொடக்க நிகழ்ச்சியாகப் பறை இசையையும் அடுத்துப் பெருவங்கிய(நாதசுர) இசையையும் வைத்தேன். நல்ல வரவேற்பு இருந்தது. கலைபண்பாட்டுத்துறையின் துணை இயக்குநராகப் பொறுப்பேற்ற பொழுது பிற மண்டலங்களிலும் பறை இசைப்பயிற்சிப் பட்டறைகளுக்கு ஏற்பாடு செய்தேன்.ஆர்வமுடன் சிறுவர்களும் இளைஞர்களும் பங்கேற்றனர்.  விழாவின் தொடக்க நிகழ்ச்சியாக ப் பறை இசையைப் பரபபினேன்.  பறை இசை தங்களுக்கு உரியது என எண்ணிக் கொண்டிருப்பவர்கள்தாம்  சாவுப்பறையாக நடத்துகின்றனர். பிறர்  பொதுவான இசையாகத்தான் கருதுகின்றனர். பறை இசை என்பது தமிழர்களின் தொல்லிசைகளில் ஒன்று.  இவ்விசையை நன்கு அறிந்த மக்கள் கல்வியறிவிலும் மேம்பட வேண்டும் . குடிப்பழக்கத்தைத் தவிர்த்துக் க்ல்வியில் கருத்து செலுத்தினால் மட்டுமே மேம்பாடு காண முடியும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்!இனத்தைக் காப்போம்!/

சொல்கிறார்கள்


சாவுக்கு அல்ல; வாழ்வுக்கானது பறை இசை!
"கும்கி' திரைப்படத்தின், "சொய்ங்... சொய்ங்...' பாடல் பாடியுள்ள, மகிழினியின் கணவரும், "புத்தர் கலைக் குழு'வை நடத்தி வருபவருமான, மணிமாறன்: பறை இசை, தமிழருடைய ஆதி கலை வடிவம். சாவுக்கு மட்டுமே இசைக்கக் கூடிய, அமங்கலமான விஷயங்களுக்கு மட்டும் என, இது மாறி விட்டது. ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்கள் மட்டும் தான் இசைக்க வேண்டும் என, நிர்பந்திக்கப்பட்ட ஒன்றாக மாற்றப்பட்டு விட்டது. ஆனால் இது, நம் வாழ்க்கையின், கொண்டாட்டத்தின், வெற்றியின், நல்ல செய்தியைச் சொல்ல பயன்படுத்தும் இசை. ஒரு முறை இதன் சுவையை அனுபவித்தவர்கள், இதை உளமார நேசிக்கத் துவங்கி விடுவர். இதை, அனைவருக்குமான கலையாக, தமிழர்களின் இசையாக மாற்றுவது தான், எங்கள் குழுவின் நோக்கம். பறையிசையில், சாவுக்கு ஒரு தாளம், திருமணத்துக்கு ஒரு தாளம், மாடு பிடிக்கு ஒரு தாளம் என, தனித் தனி தாளம் உள்ளது. தமிழ் இசையில் இசைக் குறிப்புகள் இருப்பது போல, பறையிசைக்கும் இசைக் குறிப்புகளை உருவாக்கி உள்ளோம். குடிப் பழக்கம் தான், பறையிசைக் கலைஞர்களை, இத்தனை ஆண்டுகளும் அடிமையாக, சமூகத்தில் எந்த அங்கீகாரமும் இல்லாதவர்களாக வைத்திருந்தது. அதை மாற்ற வேண்டும்; பறையிசைக் கலைஞர்கள், கல்வி கற்க வேண்டும் என்பது, எங்கள் நோக்கம். இறந்தவர்களை வழியனுப்ப பறையிசைக்க வேண்டியது தான். ஆனால் அதை, தலித் சமூகத்தினர் மட்டும் தான், காலம் காலமாக செய்கின்றனர். கல்வியில்லாமல் குடியில் மூழ்கி, இதையே தொழிலாகச் செய்து, எந்த முன்னேற்றமும் இன்றி இருக்கின்றனர். இதை உணர்ந்த பிறகு தான், சாவுக்கு பறை வாசிப்பதில்லை என, முடிவெடுத்தோம். கோவில், திருவிழாக்களில், குடும்ப நிகழ்ச்சிகளில், கட்சி நிகழ்ச்சிகளில், அரசியல் கூட்டங்களில், பறை இசைக்கிறோம். எல்லா மேடைகளிலும், "எம் பறை ஒலி, சாவுக்கானது அல்ல; வாழ்வுக்கானது! எம் பறை முழக்கம், சாமிகள் ஆடுவதற்கல்ல; ஆதிக்கம் ஆட்டம் காண்பதற்கு! ஓங்கி அடிப்பதில் கிழியட்டும்... பறைகள் அல்ல, இந்திய ஜாதிகள்!' என, சொன்ன பிறகு தான், நிகழ்ச்சியை தொடங்குவோம்.இந்த பறையின் மூலமாக, ஜாதி வேறுபாடுகளை அகற்றணும். அது தான் எங்களுடைய இப்போதைய இலக்கு.

"எண்ணெய் தேய்த்துக்குளியுங்கள்!':ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி ஆயூர்வேத கல்லூரி டீன், ஆயுர்வேத டாக்டர் சுவாமிநாதன்: கடுமையான வேலை, டென்ஷனுக்குப் பின், நம்ம உடம்பை ரிலாக்ஸ் பண்றதுக்கு ஒரு சிறந்த தீர்வு, எண்ணெய் தேய்ச்சுக் குளிக்கறது தான். எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது, வெயில் காயணும்; தண்ணீர் காயணும்; சீயக்காய் சுடுதண்ணியில கரைச்சு வெதுவெதுப்பா இருக்கணும்.சூரிய வெளிச்சம் வர்றதுக்கு முன்னாடியே, எண்ணெய் குளியல் எடுக்கக் கூடாது. சூடு எண்ணெயின் வீரியத்தால், உடம்பின் உட்புற குழாய்களில் உள்ள, அழுக்குகள் நெகிழும். சுடுதண்ணீரை உடம்பில் ஊத்தும் போது, அது கரைந்து, மலம், சிறுநீர், வியர்வை மூலமா, வெளியேறத் தொடங்கும்.இரும்புக் கரண்டியில் நல்லெண்ணெயுடன், மிளகு, சீரகம் போட்டு பொரித்து, அந்த மிளகு, சீரகத்தை, அப்படியே வாயில் போட்டு மென்று, எண்ணெய் வெதுவெதுப்பாக இருக்கும்போதே தேய்க்கணும். இரும்புடன் எண்ணெய் சேரும் போது, நரம்புகளை வலுப்படுத்தும் தன்மை அதிகரிக்கும். உச்சி முதல் பாதம் வரை, எண்ணெயை ஊற வைத்து, 20 நிமிடம் வரை, மசாஜ் பண்ணலாம். அதிகபட்சம், 45 நிமடங்கள் வரை, எண்ணெய் ஊறலாம்.எண்ணெய் தேய்க்கும் போது, மேலிருந்து கீழாக தேய்ப்பதே சரியான முறை. சில பேருக்கு வயிற்றில், வாயுத் தொல்லை இருக்கும். அவர்கள் வலது பகுதியில் இருந்து, இடது பகுதிக்கு உருட்டி உருட்டி, தேய்க்க சரியாகும். இடுப்பு வலி இருந்தால், விளக்கெண்ணெய் சூடு பண்ணி, அந்த பகுதியில் தேய்த்துக் குளிக்கலாம். மலச் சிக்கலும் போகும்.தலையில் நல்லெண்ணெயை அரக்கித் தேய்க்கும் போது, மூளை நரம்புகள் வலுப் பெறும். மூளையில் உள்ள ஹைபோதாலமஸ், பிட்யூட்டரி கிளாண்ட் சரியாய் இயங்கும். பிட்யூட்டரி சீராய் இயங்க, உடம்பில் அத்தனை சுரப்பிகளும் சீராகும். ஆனால், முடி கொட்டுறவர்கள் தலையை அரக்கித் தேய்க்க கூடாது. அது முடி உதிர்தலை மேலும் அதிகரிக்கும். அவங்க எண்ணெயை பஞ்சில் முக்கி உச்சந்தலையில் வைக்க, எண்ணெயோட வீரியம் அப்படியே தலையில் இறங்கும். அதுவே அவர்களுக்கு போதுமானது.மாதவிடய் காலங்களில், உடம்பில் ஏகப்பட்ட ஹார்மோன்ஸ் மாற்றங்கள் இருக்கும். அன்று, எண்ணெய் குளியல் கூடவே கூடாது. எப்போதும் குளித்த பிறகு, தலைக்கு எண்ணெய் தடவக் கூடாது. அப்படி தடவினால், கை, கால் வலி வர வாய்ப்புண்டு.

வெள்ளி, 11 ஜனவரி, 2013

முடி வெட்டச் சென்ற இளைஞர்களின் சிறுவன் உயிரை க் காக்கும் முயற்சி

முடி வெட்ட ச் சென்ற இளைஞர்கள் சிறுவன் உயிரை க் காக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்
 
பெங்களூரு: முடி வெட்ட பார்பர் ஷாப் சென்று, சவர தொழிலாளியின் மகனை காப்பாற்றும் முயற்சியில் இறங்கியுள்ள, இளைஞர்களின் நல்ல எண்ணத்தை பலரும் பாராட்டுகின்றனர்.

பெங்களூரு நகரின், பெல்லாண்டர் பகுதியில், "பார்பர் ஷாப்' நடத்தி வருபவர், ரஷீத் ஆலம், 30. இவரின் கடைக்கு, பன்னாட்டு கம்ப்யூட்டர் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும், ரஷீத் கான், 22, முடிவெட்டி கொள்ள, அவ்வப்போது செல்வது வழக்கம்.அதுபோன்றே, ரஷீத் கானின் நண்பர், நிலாப் என்ற, கை நிறைய சம்பாதிக்கும், தகவல் தொழில்நுட்ப துறை இளைஞரும், அந்த கடைக்கு செல்வது உண்டு.

ஒரு நாள், கடையில் முடிவெட்டி கொண்டிருந்த ரஷீத் ஆலம், சோகமாக காணப்பட்டார். முடி வெட்ட சென்ற நிலாப் மற்றும் ரஷீத் கான், "ஏன் சோகமாக இருக்கிறீர்கள்' என, கேட்டுள்ளனர். பார்பர் ஷாப் உரிமையாளர் தெரிவித்த தகவல், அந்த இளம் உள்ளங்களை கரைத்தது.
"என் மகன் சிசானுக்கு, ரத்த புற்றுநோய் உள்ளது. 6 வயதே ஆகும் அவனுக்கு இது வரை கையில் இருந்த பணத்தை எல்லாம் செலவழித்து, சிகிச்சை அளித்தோம். பணம் அனைத்தும் கரைந்து விட்டது; அடுத்து என்ன செய்வது என தெரியாமல் விழித்து கொண்டிருக்கிறேன்' என, கூறினார்.
ரஷீத் ஆலம் சோக கதையை கேட்டு மனம் இரங்கிய அந்த இளைஞர்கள், சிறுவன் சிசானின் மருத்துவ சான்றுகளை வாங்கி பார்த்தனர்.

"நிரந்தர நிவாரணத்திற்கு வழியே இல்லை; 20 லட்ச ரூபாய் செலவழித்தால், எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை அளித்தால், குணம் கிடைக்க வாய்ப்பு உண்டு' என, மருத்துவர்கள் கூறியிருந்தனர்.உடனே, நண்பர்கள் இருவரும், "பேஸ்புக்' இணையதளம் மூலம், "சேவ் சிசான்' என்ற பெயரில் ஒரு பக்கத்தை துவக்கி, அதில், சிறுவன் சிசானின் நோய், சிகிச்சை, அதற்கான செலவு என அனைத்து தகவல்களையும் சேர்த்து, நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களுக்கு அனுப்பி வைத்து, நிதியுதவி செய்யுமாறு கேட்டு கொண்டனர்.இணைய பக்கத்தை துவக்கிய முதல் நாளில் மட்டும், 40 ஆயிரம் ரூபாய் சேர்ந்ததால், நம்பிக்கை அடைந்த அந்த இளைஞர்கள், தொடர்ந்து பலருக்கும், அனுப்பி, உதவி செய்யுமாறு கேட்டு கொண்டுள்ளனர்.

"பேஸ்புக்' இணைய பக்கத்தில், சிசானின் தந்தை ரஷீத் ஆலம் வங்கி, கணக்கு எண் விவரங்களை அளித்துள்ளதால், நாள் தோறும், குறைந்தபட்சம், சில ஆயிரம் ரூபாயாவது சேர்ந்து வருகிறது.
"சில மாதங்களில், பணத்தை சேர்த்து, மகனுக்கு, எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை அளித்து விட முடியும்' என்ற, நம்பிக்கை அடைந்துள்ள பார்பர் ரஷீத் ஆலம், தன் வாடிக்கையாளர்கள் ரஷீத் கான் மற்றும் நிலாப்பிற்கு நன்றி தெரிவிக்கிறார். இந்த உன்னத முயற்சியில் இறங்கியுள்ள இளைஞர்களை பலரும் பாராட்டுகின்றனர்.
 

நீர் ஆதாரம் இல்லாமல் வேளாண்மை!

சொல்கிறார்கள்

நீர் ஆதாரம் இல்லாமல் வேளாண்மை!

நீர் ஆதாரம் இல்லாத இடத்தில், ஆண்டு முழுவதும் விவசாயம் செய்யும் சின்னசாமி: ஆறு, ஓடை, குளம், குட்டை என, வானம் பார்த்த, பல்லடம் பகுதியை சார்ந்தவன். கோவை, தேவாம்பாளையத்தில், ஏழை விவசாய குடும்பத்தில் பிறந்தேன். மூன்றாம் வகுப்பு வரை படித்தேன். 12 வயதிலேயே, பழக் கடை ஒன்றில், அப்பா வேலைக்கு சேர்த்தார்.

18 வயதில், மில் வேலை பார்த்தேன். எட்டு மணி நேர வேலை போக, மீதி நேரத்தை பழம் விற்க முடிவெடுத்து, ஊர் ஊராக, தள்ளு வண்டியில் விற்பனை செய்தேன்.பழங்களை நானே உற்பத்தி செய்ய திட்டமிட்டேன். இரண்டு ஏக்கர் அளவில் சிறு குட்டை வெட்டி, மழை நீரை தேக்கி, 70 ஏக்கர் நிலத்தில் நான்கு கிணறுகளை வெட்டி, குட்டையில் தேங்கிய நீரை, பி.வி.சி., பைப் மூலம் கிணற்றுக்குள் செலுத்தி, அதன் மூலம், 20 ஆழ்துளை கிணறுகள் அமைத்து, நீர் ஆதாரம் இல்லாத இடத்தில், ஆண்டு முழுவதும் விவசாயம் செய்கிறேன்.

இனிப்பு சுவையுடைய, 60 தாய்லாந்து புளியம் மரங்களை நட்டு வளர்த்து வருகிறேன். ஒரு மரத்திலிருந்து ஆண்டிற்கு, 15,000 ரூபாய் லாபம் கிடைக்கிறது. "கோ-3' ரக சப்போட்டா கன்றுகளை, சீரான இடைவெளியில் நட்டதில் மரத்திற்கு, 100 பழங்கள் வீதம், நன்கு காய்கின்றன.

என்னிடம் உள்ள, 70 பசுக்கள், 150 ஆடுகளிலிருந்து சாணம், புழுக்கை, சிறுநீரையும்; கோழி பண்ணையிலிருந்து பெறும் கோழிக் கழிவுகளையும்; கல் உப்பு, காய்ந்த சருகு, சோகையை மக்கச் செய்து, இயற்கை உரமாக பயன்படுத்துகிறேன். வேப்ப மரங்களின் விதையை அரைத்து, பூச்சிகள் வராமல் தெளிக்கிறேன். ஊடு பயிராக பீட்ரூட், கத்தரிச் செடி, மிளகாய் செடி, வெண்டை என, பயிரிடுகிறேன். வீட்டின் முன்னே கொடியில் பாகற்காய், புடலங்காய், பீர்க்கங்காயும். கீரை வகைகளையும் பயிரிட்டு, தினமும் லாபம் ஈட்டுகிறேன்.

திங்கள், 7 ஜனவரி, 2013

யானைச் சண்டையைப் படம் எடுத்த உலோகநாதன்

யானை ச் சண்டையை ப் படம் எடுத்த உலோகநாதன்
கோவை வடவள்ளியைச் சேர்ந்தவர் லோகநாதன். கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக புகைப்படக் கலையை நேசிப்பவர், நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக யானைகளை படம் எடுத்து வருபவர்.
யானைகளை பற்றி பேசுவது என்றால் நேரம், காலம் போவது தெரியாமல் பேசிக்கொண்டு இருப்பார். அதே போல யானைகளை படம் எடுக்கவேண்டும் என்றால் அலாதியான ஆர்வத்துடன் கிளம்பிவிடுவார்.
யானைகளை ஒரு குழுவாக படம் எடுக்கவேண்டும் என்பதற்காக கடந்த ஆறு மாதகாலமாக முயற்சி செய்து ஒரு இடத்திற்கு சென்றார். போன இடத்தில் யாரும் எதிர்பாராதவிதமாக இரண்டு யானைகளுக்குள் கடுமையாக சண்டை வர அதனை படம் எடுத்து திரும்பியிருக்கிறார். அந்த படங்களை வரிசையாக போட்டோ கேலரியில் பார்க்கலாம்.
யானைகளை பற்றி நிறைய தகவல் சொல்கிறார்.
முதலில் ஓரு இடத்தில் யானைகள் நன்றாக இருக்கிறது என்றால் அங்கு காடு நன்றாக இருக்கும், காடு எங்கு நன்றாக இருக்கிறதோ அங்கு நாடும் நன்றாக இருக்கும். ஆகவே யானைகளை எப்போதுமே குற்றம் சொல்லக்கூடாது, அதன் ஒவ்வொரு செயலுக்கும் அர்த்தம் உண்டு. அதனை புரிந்து கொள்ளாமல், அதன் வழித்தடத்தில் வீடுகளையும், ஆஸ்ரமங்களையும், கல்லூரிகளையும் கட்டிவிட்டு, யானை வருகிறது, யானை வருகிறது என்றால், அது பல நூறு ஆண்டுகளாய் வந்து போய்க் கொண்டிருந்த வழித்தடத்தில் வராமல் வேறு என்ன செய்யும். வழித்தடம் மாறும் போதும், உணவிற்கு வழியில்லாத போதும் வயலுக்கு வருகிறது, ஊருக்குள் புகுகிறது.
சினிமாக்களில் காட்டுவது போல யானைகள் மோசமான மிருகம் அல்ல, தன்னை சீண்டுபவனையும், துன்புறுத்துபவனையும்தான் யானை தாக்குமே தவிர மற்றபடி அது சாதுவான பிராணியே. பொதுவாக யானைக்கு மதுவின் வாடையே ஆகாது, குடித்துவிட்டு பக்கத்தில் வருவது பாகனே ஆனாலும் பொறுத்துக் கொள்ளாது. அதே நேரம் குட்டி போட்டு இருக்கும் நேரத்தில் யாராக இருந்தாலும் குட்டியிடம் நெருங்கவிடாது, அந்த அளவிற்கு பாசம் அதிகம். மனிதர்களைப் போல குட்டிக்கு தும்பிக்கை வழியாக மூச்சு காற்றை செலுத்தி பிழைக்க வைத்த நிகழ்ச்சி எல்லாம் உண்டு. பத்து கிலோமீட்டர் சுற்றுவட்டாரத்தில் உள்ளவைகளை மோப்பம் பிடித்தே அறிந்து கொள்ளும். யானைக்கு கழுத்து பகுதி கிடையாது என்பதால், திரும்பிப் பார்க்கவேண்டும் என்றால் அது உடம்பையே திருப்பித்தான் பார்க்குமே தவிர ,கழுத்தை மட்டும் திருப்பிப்பார்க்காது. அதே போல யானைக்கு நேர் பார்வைதான் உண்டு, அது விரட்டும் போது நேர் பார்வையில் படாமல் பக்கவாட்டில் தப்பி ஒடினாலே பிழைத்துக் கொள்ளலாம்.
சினிமாக்களில் காட்டுவது போல கும்கி யானையை தனியார் வளர்க்க முடியாது. அரசாங்கத்தின் வனத்துறையினர்தான் வளர்க்கமுடியும். காட்டில் இருந்து நாட்டிற்குள் வரும் யானையை விரட்டியடிக்க பயிற்சியளிக்கப்பட்ட யானையே கும்கி. குட்டியில் இருந்தே சரியான யானையை அடையாளம் கண்டு அதனை கடுமையான பயிற்சி கொடுத்து வனத்துறையினர் வளர்த்து வருவார்கள். இந்த கும்கி யானை கூட பெண் யானையைத்தான் விரட்ட முடியும், இதைவிட உயரமான "டஸ்கர்' என்று சொல்லக்கூடிய பத்து அடி உயரத்திற்கு மேல்பட்ட ஆண் யானையைக் கண்டால் கும்கி யானையே ஒடிவந்துவிடும், அந்த மாதிரி யானையை இரண்டு கும்கி யானைகளைக் கொண்டுதான் விரட்டுவார்கள்.
இது போல இன்னும் பல சுவராசியமான யானைகள் பற்றிய விஷயங்களை அறிந்து கொள்ள, அதனை படம் எடுக்கும் வித்தையை தெரிந்து கொள்ளவும் தொடர்பு கொள்ள வேண்டிய எண்: 9363210668.


வியாழன், 3 ஜனவரி, 2013

கோடம்பாக்கம் கைத்தறி ச் சேலைக்குச் செல்வாக்கு : மதுரையின் பெருமை

கோடம்பாக்கம் கைத்தறி ச் சேலைக்கு மவுசு : மதுரையின் பெருமை பேசும் பெண்கள்

மதுரை: மதுரையில் உற்பத்தி செய்யப்படும் "கோடம்பாக்கம்' கைத்தறி சேலைக்கு சிங்கப்பூர், மலேசியா, இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளில் மவுசு அதிகரித்துள்ளது.மதுரையை சேர்ந்த கைத்தறி நெசவு தொழிலாளி தெய்வேந்திரன். இவர், நூறு சதவீதம் தரமான பருத்தி நூலை பயன்படுத்தி காட்டன் சேலைகளை ஜரிகையுடன் தயாரித்து கைத்தறியில் புதுமையை புகுத்தினார்.

இவ்வகையான சேலைகளை பெண்கள் அணிவதற்கு ஈசியாகவும், பேஷனாகவும், எடை குறைவாகவும் இருந்தன. நாளடைவில் கைத்தறி காட்டன் சேலைகளுக்கு பெண்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருந்தது. குறிப்பாக, கோடம்பாக்கம் கோலிவுட் நடிகைகள் விரும்பி அணிந்தனர். இதனாலேயே, இச்சேலைகளுக்கு "கோடம்பாக்கம் கைத்தறி சேலை' என பெயர் வந்தது. ஏற்றுமதி அமோகம்:கோடம்பாக்கம் கைத்தறி காட்டன் சேலைகளுக்கு சிங்கப்பூர், மலேசியா, இலங்கை மற்றும் வடமாநில பெண்களிடையே அமோக வரவேற்பு உள்ளது. அதிகளவு ஏற்றுமதி செய்யப்படுகிறது. மதுரையில் ஒத்தக்கடை, கடச்சனேந்தல்,  திருப்பரங்குன்றம் கைத்தறிநகர், வில்லாபுரம், அவனியாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கோடம்பாக்கம் சேலைகளை ஆர்டரின் பேரில் நெசவாளர்கள் உற்பத்தி செய்கின்றனர்.
ரூ.800 முதல் விலை:
மதுரை நரசிங்கம்பட்டியை சேர்ந்த நெசவாளர் கண்ணன்: விசைத்தறியில் பெரிய டிசைன் சேலைகளை தயாரிக்க முடியாது. இது கைத்தறியில் சாத்தியமாகும். "நைசாகவும்' இருக்கும். இவ்வகை சேலைகளுக்கு என்றைக்குமே மவுசு இருந்து கொண்டே இருக்கிறது. ஒரு பாவுக்கு பத்து சேலைகளை தயாரிக்கலாம். ஒரு சேலைக்கு 200 ரூபாய் கூலி. நாள் ஒன்றுக்கு ஒரு சேலை தான் தயாரிக்க முடியும். சேலையின் விலை 800 ரூபாய் என்றார்.மதுரை த்தக்கடையை சேர்ந்த நெசவாளர் கிருஷ்ணமூர்த்தி: கைத்தறி ஜவுளி தொழிலில் நிலைத்து நிற்பது கோடம்பாக்கம் சேலைகள் தான். இதனை கைத்தறியில் மட்டுமே தயாரிக்க முடியும். விசைத்தறியில் இயலாது. சம்பளம் குறைவாக இருப்பதால், கைத்தறி நெசவு படிப்படியாக குறைந்து வருகிறது.

புதன், 2 ஜனவரி, 2013

சூரியனுக்கு அருகில் செல்கிறது பூமி

 சூரியனுக்கு அருகில் செல்கிறது பூமி


சென்னை: சூரியனுக்கு அருகே பூமி செல்லும் நிகழ்வு நாளை நடக்கவுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கோள்கள் சூரியனை நீள்வட்டப்பாதையில் சுற்றி வருகின்றன. இதன் காரணமாக, அவை சூரியனுக்கு மிக அருகிலும், மிக தொலைவிலும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் சுற்றி வரும். இதன்படி, சூரியனை, பூமி நெருங்கும் நிகழ்வு நாளை (ஜனவரி 2) நடக்கவுள்ளது. அப்போது பூமிக்கும், சூரியனுக்கும் இடையேயான தொலைவு 14.7 கோடி கி.மீ., ஆக இருக்கும். எனினும் இதன் காரணமாக பூமியின் தட்பவெப்ப நிலையில், எவ்வித மாற்றமும் ஏற்படாது என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

திங்கள், 31 டிசம்பர், 2012

திருடர்கள், ஊழல்வாதிகள் பதவிக்கு வரக்கூடாது:சகாயம்

திருடர்கள், ஊழல்வாதிகள் பதவிக்கு வரக்கூடாது:சகாயம் பேச்சு

சேலம்:""உத்திரமேரூர் கல்வெட்டில், மக்கள் பிரதிநிதிகளாக வருபவர்களுக்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும். அதற்கான தகுதி நிர்ணயம் குறித்த தகவலும், திருடர்கள், ஊழல்வாதிகள் பதவிக்கு வரவிடக்கூடாது. நேர்மையானவர்கள் மட்டுமே பதவிக்கு வரவேண்டும் என்பது பற்றியும், அதில் குறிப்பிடப்பட்டுள்ளது, அதுபோல் ஆட்சியாளர்கள் வரவேண்டும்,'' என,கோ ஆப்டெக்ஸ் மேலான் இயக்குனர் சகாயம் பேசினார்.

லஞ்ச, ஊழலற்ற சமுதாயம் என்ற தலைப்பில், சேலம் குஜராத்தி திருமண மண்டபத்தில், சிறப்பு கருத்தரங்கு நேற்று நடந்தது. கோ ஆப்டெக்ஸ் மேலாண் இயக்குனர் சகாயம் பேசியதாவது:ரத்தம் சிந்தி வாங்கிய தேசத்தில், லஞ்சமும், ஊழலும் பெருகி கிடக்கிறது. நாமக்கல் கலெக்டராக பணியாற்றியபோது, ராசிபுரத்தில் கல்லூரி விழாவுக்கு காரில் சென்று கொண்டிருந்தேன். அப்போது, முன்னால் இரு சக்கர வாகனத்தில் சென்ற, இரு வாலிபர்கள், அங்கும், இங்குமாக ஓடியபடி சென்றனர்.

அவர்களை மறித்து, என்னுடைய உதவியாளர்கள் சோதனை செய்தபோது, அவர்கள் மது அருந்தியிருந்ததும், லைசென்ஸ் இல்லாமல் வண்டி ஓட்டியதும் தெரியவந்தது. உடனடியாக அவர்களை எச்சரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டேன்.அப்போது, அதில் ஒரு வாலிபர், 100 ரூபாயை எடுத்து என்னுடைய கையில் கொடுத்தான். லஞ்சம் கொடுத்தால், தப்பித்து விடலாம் என்ற பழக்கத்தை, இந்த சமூகம் உருவாக்கியுள்ளது.

மூன்று ஆண்டுக்கு முன், அப்போதைய முதல்வருக்கு கடிதம் எழுதினேன். அதில், "நான் சரியாக வேலை செய்யவில்லையென்றால், என்னை பணி நீக்கம் செய்யுங்கள். ஜாதி, மத ரீதியாக யாருக்காவது உதவியிருந்தால் கைது செய்யுங்கள். 19 ஆண்டு காலத்தில், யாரிடமாவது, ஒரு ரூபாய் லஞ்சமாக பெற்றிருந்தால், தூக்கிலிடுங்கள்' என, கூறினேன். என்னுடைய இருக்கைக்கு பின்புறம், "லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர்' என்ற வாசகம் தான் இருக்கும்.

உத்திரமேரூர் கல்வெட்டில், அப்போதே, மக்கள் பிரதிநிதிகள் எப்படியிருக்க வேண்டும். அவருக்கு உண்டான தகுதிகள் என்னன்ன, திருடர்கள், ஊழல்வாதிகள் பதவிக்கு வரக்கூடாது. நேர்மையானவர்கள் மட்டுமே வரவேண்டும் என, கூறப்பட்டுள்ளது.ஊழல் நாடுகள் பட்டியலில், இந்தியா, 140வது இடத்தில் உள்ளது. இது, இந்தியாவுக்கு நேர்ந்த தேசிய அவமானம். அரசு பள்ளிகளில், முன்பு ஆய்வு செய்தபோது, அங்குள்ள மாணவர்களிடம், உன்னுடைய லட்சியம் என்னவென்று கேட்டால், சம்பாதித்து அரிசி வாங்க வேண்டும் என்கின்றனர். அந்த அளவுக்கு வறுமையின் பிடியில் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

லஞ்சத்தை ஒழிப்பதை பற்றி பேசுகின்றனர், ஆனால், பின்னர், அவர்களே லஞ்ச ஒழிப்பு போலீஸில் சிக்குகின்றனர். ஊழல், லஞ்சம் என்பது புற்றுநோய் போன்றது. அது தொற்றுநோயாக உருவெடுத்து, தேசத்தையே அழித்து விடும்.

தமிழகத்தில், கடந்த காலங்களில், 40 சதவீதம் இருந்த ஊழல், தற்போது, 80 சதவீதமாக உயர்ந்து விட்டது. கோவணம் தான், இன்றைய விவசாயியின் தேசிய அடையாளமாக மாறிவிட்டது. ஒவ்வொரு மாணவரும், லஞ்சம், ஊழலற்ற சமூகத்தை உருவாக்க வேண்டும் என, சபதம் ஏற்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.ஜெயராம் கல்லூரி தலைவர் ராஜேந்திரபிரசாத், கன்ஸ்யூமர் வாய்ஸ் பூபதி, ஐந்தாவது தூண் ராசமாணிக்கம் உள்பட பலர் பங்கேற்றனர்.

புதன், 26 டிசம்பர், 2012

பள்ளி நீச்சல் குளத்தில்,பாய்வு வசதி கூடாது


பள்ளி நீச்சல் குளத்தில், "டைவ்' வசதி கூடாது: புதிய விதிமுறையில் அரசு உத்தரவு

சென்னை :பள்ளி நீச்சல் குள பராமரிப்பு தொடர்பாக, தமிழக அரசு, பல்வேறு கிடுக்கிப்பிடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

கடந்த ஆகஸ்டில், சென்னை, கே.கே.நகரில் உள்ள, ஒரு தனியார் பள்ளி நீச்சல் குளத்தில், மாணவன் ஒருவன் மூழ்கி பலியானான். இந்த சம்பவத்தை தொடர்ந்து, பள்ளிகளில் உள்ள நீச்சல் குளங்களை ஆய்வு செய்ய, அரசு உத்தரவிட்டது.இந்நிலையில், பள்ளி நீச்சல் குளங்கள் பராமரிப்பு தொடர்பாக, தமிழக அரசு, ஒரு புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:
* பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளித்து, நீச்சல் குளங்களை கட்ட வேண்டும். அரசு வகுத்துள்ள விதிமுறைகளை, 100 சதவீதம் கடைபிடிக்க வேண்டும்.
* "டைவிங்' வசதி இருக்கக் கூடாது; அப்படி இருந்தால், உடனே, அத்தகைய வசதியை அப்புறப்படுத்த வேண்டும்.
* நீச்சல் குளத்தின் ஆழம், 5.5 அடிக்குள் இருக்க வேண்டும். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் மத்திய அரசின் விளையாட்டுத்துறை அமைச்சகம் வரையறுத்துள்ள விதிமுறைகளுக்கு உட்பட்டு, நீச்சல் குளத்தை கட்ட வேண்டும்.
* நீச்சல் குளங்கள், நீளம், அகலத்தில், நான்கு விதமாக கட்டுவதற்கு, அனுமதி வழங்கப்படுகின்றன. பள்ளிகளின் அமைவிடம், தேவைக்கு ஏற்ப, குறிப்பிட்ட நீள, அகலத்தில், நீச்சல் குளத்தை கட்ட வேண்டும்.
* அதிகபட்ச ஆழம், 5.5. அடியாக இருந்தாலும், அதிலும், முதலில் குறைவு, நடுத்தரம், அதிகம் என்ற, மூன்று நிலையில் இருக்க வேண்டும். மாணவர்களின் வயதிற்கு ஏற்ப, குறிப்பிட்ட பிரிவு ஆழத்திற்குள் அவர்களை அனுமதிக்க வேண்டும். பாதுகாப்பு சாதனங்கள், லைப்-ஜாக்கெட்டுகள், முதலுதவி வசதி போன்றவை, கண்டிப்பாக இருக்க வேண்டும்.
* மாநகராட்சி, தீயணைப்புத் துறையிடம் இருந்து, சான்றிதழ்களை பெற வேண்டியது, மிகவும் அவசியம். மற்ற பகுதிகளில், அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளிடம் சான்றிதழ் பெற வேண்டும்.இவ்வாறு, உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.