பெண்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பெண்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 13 ஜூலை, 2013

பெண்களின் ஆட்சி!

பெண்களின் ஆட்சி!

ஊராட்சி மன்ற ப் பணியை ச் சிறப்பாக ச் செய்ததற்காக, மன்மோகன் சிங் மற்றும் ஜெயலலிதாவிடம் பரிசு பெற்ற, சுதா மணிரத்தினம்: நான், கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகேயுள்ள நாட்டார்மங்கலத்தின், ஊராட்சி மன்றத் தலைவியாக இருக்கிறேன். பட்டதாரி ஆசிரியையாக பணியாற்றியதால், ஊருக்கு, பல தொண்டுகள் செய்து வந்தேன். ஊர் மக்களின் வற்புறுத்தலால், ஆசிரியர் பணியை ராஜினாமா செய்து, 2011ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில், ஊராட்சி மன்றத் தலைவியாக, போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டேன். எங்கள் ஊராட்சியில், 100 சதவீதமும் பெண் உறுப்பினர்களே என்பது, கூடுதல் சிறப்பு. பெண்களை உள்ளாட்சி பொறுப்புகளில் அமர்த்திவிட்டு, "பெண்களுக்கு எதுவும் தெரியாது' என்று தாங்களாகவே, "தலைவர்' என, தம்பட்டம் அடிக்கும் அகம்பாவ ஆண்களின் தலையில், குட்டுகிற வகையில் செயல்பட வேண்டும் என, தீர்மானித்து செயல்பட்டேன்.மக்கும் குப்பை, மக்காத குப்பை என, மக்களை வீடுகளிலேயே பிரிக்க வைத்து, பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைத்தேன். அரசு உதவியுடன் குடிசைகளை அகற்றி, "கான்கிரீட்' வீடு மற்றும் கழிப்பறைகளை கட்டித் தந்தேன். சுய உதவி குழு மூலம், பெண்களை ஒன்றிணைத்து, நிரந்தர வேலைவாய்ப்பிற்கான பயிற்சி தந்து, சுயதொழில் துவங்கவும் உதவினேன். இதனால், பெண்களின் திறன் வளர்ந்ததோடு, அவர்களின் குடும்ப வருமானத்தையும், அதிகரிக்கச் செய்தேன். நான் எடுக்கும் ஒவ்வொரு நல்ல முயற்சிக்கும், ஊர் மக்கள், நன்கு ஒத்துழைத்தனர். இதனால், கிராம நிர்வாகம் மற்றும் சிறப்பான செயல்பாட்டிற்காக, "பஞ்சாயத் சஷாக்திகரன் புரஸ்கார்' என்ற விருதை, பிரதமர் மன்மோகன் சிங்கிடமும்; சமீபத்தில், சிறந்த ஊராட்சிக்கான விருதை, ஜெயலலிதாவிடமும் பெற்றேன். டில்லியில் செயல்படும், "இன்ஸ்டிடியூட் ஆப் சோஷியல் சயின்ஸ்' நிறுவனத்தின், "சிறந்த பெண் ஊராட்சித் தலைவர்' விருதும்; மாநில அளவில் வழங்கப்படும், "கிராமிய ரத்னா விருது'ம் பெற்றேன்

வெள்ளி, 5 ஜூலை, 2013

கடை முழுவதும் பெண்களே!

கடை முழுவதும் பெண்களே!


பெண்கள் மட்டுமே நிர்வகிக்கும், தொலைபேசி தொடர்பான வாடிக்கையாளர் உதவி மையத் தின் மேனேஜர், கீதா: நான், சென்னையில் உள்ள, ஒரு தனியார் தொலைபேசி நிறுவனத்தில், வாடிக்கையாளர் சேவை மைய மேனேஜராக பணியாற்றுகிறேன். எல்லா அலுவலகங்களிலும், ஆண்களே அதிக அளவில் பணியாற்றுவர். பெயரளவில் மட்டுமே, பெண்கள் பணியாற்றும் சூழ்நிலை உள்ளது. ஆண்களுக்கு நிகராக, பெண்கள் வேலை செய்தாலும், ஆண்களின் ஆதிக்கமே மேலோங்கி வருகிறது. எங்கள் நிறுவனத்தின் புதிய கிளையை, சென் னையின், டி.டி.கே., சாலையில் அமைக்க தீர்மானித்தோம். எங்களின் மற்ற மையங்களை விட, இது முற்றிலும் மாறுபட்டதாக இருக்க வேண்டும் என, திட்டமிட்ட போது, பெண்களை வைத்தே அனைத்து பணிகளையும் செய்வது என, முடிவெடுத்து, 2012 நவம்பர் மாதத்தில், திட்டமிட்டபடி புதிய கிளையை துவக்கினோம்.அலுவலகத்திற்குள் நுழைந்தாலே, பாதுகாப் பிற்கு நிற்கும், "செக்யூரிட்டி' அலுவலக பணிகளில் ஈடுபடும், "டேட்டா என்ட்ரி' பெண்கள், மேனேஜராக இருக்கும் நான் என, 15 பேரும் பெண்களே. அதனால், எங்களின் மையத்திற்கு, "ஏஞ்சல் ஸ்டோர்' என, செல்ல பெயர் வைத்திருக்கிறோம். ஆண்களுடன் வேலை பார்த்த அனுபவத்தை விட, பெண்களுடன் மட்டுமே பணியாற்றும் இச்சூழல், வசதியாக இருப்பதாக நாங்கள் உணர்கிறோம். இதனால், சில பாதகங்களும் வருவதுண்டு. சில ஆண் வாடிக்கையாளர்கள், வாய்ச்சண்டையில் ஈடுபட்டால், அனைத்து பெண்களும் ஒற்றுமையாக களத்தில் இறங்கி, பிரச்னையை சமாளிக்கிறோம். அப்போது, சில வாடிக்கையாளர்களும், எங்களுக்கு உதவி கரம் நீட்டுவது, சந்தோஷமாக உள்ளது. "பொம்பளைங்க கையில் முழு பொறுப்பையும் கொடுத்தா, காரியம் வீணாகும்' என, யாரும் சொல்லக் கூடாது என்பதற்காகவே, அவர் அவர் வேலையில், இரண்டு மடங்கு கவனம் செலுத்தி, உழைக்கிறோம். பெண்களால், ஒரு அலுவலகம் முழுவதையும், வெற்றிகரமாக இயக்க முடியும் என்பதற்கு, நாங்கள் சாட்சிகளாக இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது.

வெள்ளி, 21 ஜூன், 2013

பெண்களும் வணிகம் புரியலாம்!

பெண்களும் வணிகம் புரியலாம்!

சிறுவயதிலேயே பிசினஸ் மீதான ஆர்வத்தால், தென்னை நார் ஏற்றுமதி தொழிலில் வெற்றி பெற்ற, நேருமதி: நான், பட்டுக்கோட்டையை சேர்ந்தவள். பிளஸ் 2 வரை மட்டுமே படித்தேன். பள்ளியில் படிக்கும் போதே ஒரு, "பிசினஸ் பெண்மணி'யாக வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. இந்த ஆர்வம் திருமணம் முடிந்த பின்னும் குறையவில்லை. ஒரு முறை பேருந்தில் சென்ற போது, வழியில், தேங் காய் நார் உதிர்க்கப்பட்ட தூளை, காயவைத்து கொண்டிருந்தனர். இதில், என்ன தொழில் செய்வர் என்ற ஆர்வத்தால், மறுநாள் அதே இடத்திற்கு சென்றேன். அத்தூளை செங்கல் வடிவத்திற்கு மாற்றி வெளி நாடுகளுக்கு, "எக்ஸ்போர்ட்' செய்தால், நல்ல லாபம் கிடைக்கும் என்ற தகவல் கிடைத்தது. உடனே, அந்த முதலாளி வீட்டிற்கு சென்று, அத்தொழில் தொடர்பான அனைத்து தகவல்களையும் தெரிந்து கொண்டேன். கணவர் உதவியுடன், நார் துண்டுகள் தயாரிக்கும் தொழிற்சாலையை துவங்கினேன். தேங்காய் மட்டையை உடைத்து, கயிறு திரிப்பதற்கான நாரை எடுத்த பிறகு கிடைக்கும் தூளை, இயந்திரத்தில் கொட்டி நன்கு, "பிரஷர்' கொடுத்து அழுத்தினால், செங்கல் துண்டுகள் போன்ற வடிவத்தில் கிடைக்கும். ஒவ்வொரு துண்டும், 5 கிலோ எடை இருக்கும். விவசாய நிலத்தில், இந்த துண்டுகளை உதிர்த்து போட்டு தண்ணீர் பாய்ச்சினால், ஒரு துண்டு, 80 முதல், 90 லிட்டர் நீரை உறிஞ்சி, தன்னுள் வைத்துக் கொள்ளும். இதனால் செடிகளுக்கு, ஆறு மாதத்திற்கு தண்ணீரே தேவைப்படாது. இத்துண்டுகளை, வெளிநாடுகளுக்கே அதிகம் ஏற்றுமதி செய்கிறோம். மார்ச் முதல் ஆகஸ்ட் வரையிலான கோடை காலத்தில், மாதத்திற்கு, ஒரு லட்சம் வரை சம்பாதிக்க முடியும். மழை காலங்களில், சிறு தொய்வு இருக்கும். நார் தயாரிப்பிற்கான அனைத்து வேலைகளையும், பெண்களே செய்கிறோம்; கடந்த, 10 ஆண்டுகளாக இத்தொழிற்சாலையை வெற்றிகரமாக நடத்தி வருகிறோம்.

புதன், 19 ஜூன், 2013

பெண்களுக்குத் தன்னம்பிக்கை வேண்டும்!


பெண்களுக்கு த் தன்னம்பிக்கை வேண்டும்!

ஆண்களுக்கு நிகராகப் பெண்களும், உயர் பொறுப்புகளை அடைவதற்கான வழிமுறைகளைக் கூறும், ஏ.கே. சுகுமாரன்: நான், காம்பை சொல்யூஷன் நிறுவனத்தில், எச்.ஆர்., கன்சல்டன்டாக பணியாற்றுகிறேன். பெண்களும், ஆண்களும், ஒரே மாதிரி கல்வி கற்கின்றனர்; ஒரே மாதிரி வேலை தேடுகின்றனர். ஆனால், வேலை கிடைத்த பின், அந்த வேலையை தக்க வைப்பதிலோ அல்லது அந்நிறுவனத்தின் உயர் பொறுப்புகளை அடைவதிலோ, பெண்கள் குறைவாகவே உள்ளனர். சாப்ட்வேர், தகவல் தொழில்நுட்பம், மருத் துவ துறை, வங்கி மற்றும் நிதி துறை, ரீடெயில் என, பெண்கள் இன்று அனைத்து துறைகளில் சாதித்தாலும், ஏன் உயர் பதவியை எட்ட முடிய வில்லை? சமீபத்திய சர்வேயில், இந்தியாவில் உயர் அதிகாரிகளாக நிலைத்து நிற்க கூடிய பெண்கள் வெறும், 19 சதவீதம் மட்டுமே என, தெரிய வந்துள்ளது. 
படித்த துறையில் வேலை கிடைக்காத பட்சத்தில், மற்ற துறையிலும் பிரகாசிக்கும் வாய்ப்பு, இப்புதிய தலைமுறை பெண்களுக்கு, "பிளஸ்' என்றாலும், பணி செய்யும் துறை பற்றி, மேலும் அறிந்து கொள்ளும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்வதிலோ, அது பற்றிய கல்விக்கோ, பயிற்சிக்கோ, அதிக ஆர்வம் காட்டுவதில்லை.
நிறுவனங்கள் எதிர்பார்க்கும் தகுதிகள், பல பெண்களிடம் இருப்பதில்லை. அத னால், பெண்கள் கல்லூரி படிக்கும் காலத்திலேயே, தாங்கள் விரும்பும் வேலை சார்ந்த துறை மற்றும் அதன் வளர்ச்சி குறித்த தகவல்களை, "அப்டேட்' செய்வது நல்லது. இதனால், செய்யும் பணிக்கு இன்னும் தகுதியுள்ளவர்களாக, உயர்த்திக் கொள்ள முடியும். எனக்கு தன்னம்பிக்கை இல்லை என, தன்னைத் தான் சுயபரிசோதனை செய்து, தன்னம்பிக்கையை திடீரென பெற முடி யாது. ஆரம்பத்தில் இருந்தே வளர்த்துக் கொள்ள வேண்டும். இது இருந்தால், "பாசிடிவான' விஷயங்கள் அதிகரித்து, "நெகடிவான' விஷயங்கள் குறையும். பெண்களிடம் தன்னம்பிக்கை இருந்தால், இன்னும் அதிகப்படியான உயர் பதவிகளை அடைய முடியும்

வெள்ளி, 8 மார்ச், 2013

பெண்களின் காலம்!






 



பெண்களின் காலம்!


மகளிர், தொழில் முனைவோருக்கான பயிற்சியாளர் மற்றும் சமூக ஆர்வலர், வி.ஷீலா ராபர்ட்: இன்றைய பெண்களுக்கு, வீட்டில் இருந்தபடியே, சுய தொழில் செய்யும் வாய்ப்புகள் அதிகம். அதிலும், நகரங்களை விட கிராமங்கள் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் தான், தொழில் முனைவோருக்கான வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. அரசு மற்றும் அரசு சாரா அமைப்புகளின், பயிற்சி மற்றும் நிதி உதவிகள் என அனைத்தும், கிராமத்தை நோக்கியே வருகின்றன.நபார்டு மற்றும் ஐ.ஓ.பி., போன்ற அரசு சார்ந்த வங்கிகள், கிராமப்புற பெண்களின் மேம்பாட்டுக்கு என, தனி திட்டங்கள் வைத்திருக்கின்றன. இவற்றின் கீழ், ஒவ்வொரு மாவட்டத்திலும், "கிராமப்புற சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம்' என்ற பெயரில், பெண்களுக்கு தேவையான பயிற்சிகளை, மதிய உணவுடன் இலவசமாக வழங்குகிறது.தமிழக அரசின், "புது வாழ்வு' திட்டத்தின் கீழ் ஆண், பெண் என, இருபாலருக்குமான சுய வேலைவாய்ப்பு பயிற்சிகளை, மாநில அரசு வழங்குகிறது. இதற்கு, மாவட்ட திட்ட அலுவலகத்திற்கு சென்றால், நமக்குத் தேவையான தொழில் பற்றிய பயிற்சி வகுப்புகள் மற்றும் அது பற்றிய கவுன்சிலிங்கும், இலவசமாக கற்றுத் தருகின்றனர்.கிராமப்புற விவசாயக் குடும்பத்தில் உள்ள இளையோர், கிராம விவசாயக் குழுவில் சேர்ந்தால், விவசாய தொழில் சார்ந்த தோட்டக் கலை, காய்கறி மற்றும் பூந்தோட்ட பராமரிப்புக்கு பயிற்சி, மானியம், நிதி உதவி என, அனைத்தும் இலவசமாகக் கிடைக்கும்.கிராமப் பெண்கள், குழுவாக ஒன்றிணைந்து, ஒரு தொழிலை தேர்ந்தெடுத்து, அந்த குழுவின் மூலம் பயிற்சி வகுப்புகளுக்கு கோரிக்கை வைத்தால், சம்பந்தப்பட்ட குழுவிற்கு, சிறப்பு பயிற்சி வகுப்புகளை ஏற்படுத்தி தருகின்றனர்.அரசு சார்ந்த, இலவச பயிற்சி நிறுவனங்களில் பயிற்சி பெற்ற பின், தொழில் துவங்குவதற்கு தேவையான நிதி உதவிகளை, நபார்டு மற்றும் அரசு வங்கிகள் மூலம், அவர்களே வாங்கித் தருகின்றனர். அதிக தொழில் வாய்ப்புகளால், இனி வரும் காலம், பெண்களின் காலமாக மாறலாம்.






ஞாயிறு, 24 பிப்ரவரி, 2013

கை இல்லை என்றாலும் கணினி ஆசிரியர்!



கை இல்லை என்றாலும் கணினி ஆசிரியர்!
இலங்கையில் நடைபெற்ற போரால், இரண்டு கைகளை இழந்தாலும், கணினி கற்றுத் தரும், செல்வநாயகி: நான், இலங்கையில் உள்ள, வெற்றிலைக்கேணி முள்ளியானை என்ற இடத்தில், தமிழ் குடும்பத்தில் பிறந்தவள். இலங்கை ராணுவம் நடத்திய, கடுமையான போர் தாக்குதலில், விடுதலைப் புலிகள் மட்டுமின்றி, பொது மக்கள் மீதும், பல தாக்குதல்கள் நடந்தன. கடந்த, 1990ம் ஆண்டு மார்கழி, 22ம் தேதி இலங்கை ராணுவம், புலிகளுக்கு எதிராக நடத்திய தாக்குதலில், அவர்கள் வீசிய எறிகணை வீச்சில், என் இரு கைகளையும் இழந்த போது, எனக்கு, 14 வயது. நான், வாழ வழியற்ற நிலையில், இருந்த போது, "தமிழ் புனர் வாழ்வுக் கழகம்' என்ற தமிழர் அமைப்பு, என்னை பராமரித்து வளர்த்தது. அந்த அமைப்பிலேயே வளர்ந்ததால், எனக்கு கணினி பயிற்சியும் தர, முன்வந்தனர். கணினி பயிற்சியை, நல்ல முறையில் கற்றுக் கொண்டேன். தற்போது, தமிழர்கள் அதிகம் வசிக்கும், வன்னிப் பகுதியில் வசிக்கிறேன். 2009ம் ஆண்டு, இலங்கை ராணுவத்தினரின் போர் நடவடிக்கைகள், முடிவுக்கு வந்த பின், மீண்டும் எனக்கு தமிழர் புனர் வாழ்வுக் கழகம், ஆதரவளித்தது. கணினி துறையில், எனக்குள்ள ஆர்வத்தை பார்த்து, என் வளர்ச்சிக்கு உதவினர். அன்று கற்ற கணினி கல்வி மூலம், பலருக்கு கணினியை கற்றுத் தரும், ஆசிரியர் என்கிற, உன்னத இடத்திற்கு முன்னேறி உள்ளேன். முல்லைத் தீவுக்கு அருகில், மாமூலையில் உள்ள கணினி நிலையத்தில், ஆசிரியராக பணியாற்றி வருகிறேன். இரண்டு கைகளும் இல்லாததால், நேரடியாக கரும்பலகையில் எழுதி, மாணவர்களுக்கு சொல்லித் தர இயலாது. எனவே, நான் சொல்வதை, ஒருவர் கரும்பலகையில் எழுத, அதை, மாணவர்கள் குறிப்பெடுத்து படிக்கின்றனர். கணினியில், நேரடியாக விளக்க வேண்டியவற்றை, யாருடைய உதவியும் இன்றி, நானே மாணவர்களுக்கு விளக்குகிறேன். எதிர்காலத்தில், கணினி மையம் ஒன்றை, சொந்தமாக நடத்த வேண்டும்
என்பதே, என் லட்சியம்.


பெண்களை முன்னேற்றணும்!



விவசாயப் பெண்களுக்கு, பைகள் உற்பத்தி செய்ய பயிற்சி தந்து, வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தரும் ராகுலன்: என் சொந்த ஊர், கும்பகோணத்திற்கு அருகில் உள்ள, திருப்பனந்தாள் கிராமம். தந்தையின் வேலை காரணமாக, மும்பை சென்றோம். அவர் மரணத்திற்கு பின், சொந்த ஊர் திரும்பினோம். இங்கு வாழ்க்கையை நடத்த, மேற்கொண்ட பல முயற்சிகள், பலன் அளிக்கவில்லை. அதனால், பல ஊர்கள் சுற்றி, கடைசியில் கரூர் வந்தேன். ஏற்றுமதி தொழில், அங்கு சிறப்பாக நடைபெற்றதால், அங்கேயே ஒரு சில நிறுவனங்களில் பணியாற்றி, சொந்தமாகவே ஒரு ஏற்றுமதி தொழில் துவங்கினேன். ஹாலந்து நாட்டிற்கு ஏற்றுமதி செய்ய நிறைய ஆர்டர்கள் கிடைத்ததால், அங்கேயே குடிஉரிமை பெற்று குடியேறினேன். இருந்தாலும், ஆண்டிற்கு ஒரு முறையாவது, சொந்த ஊரான திருப்பனந்தாளுக்கு, குடும்பத்துடன் வருவது வழக்கம். மூன்று ஆண்டுகளுக்கு முன் வந்த போது, சுற்றுப்புற ஊர்களையும், மக்களையும் கவனித்ததில், பெண்களின் வாழ்க்கைத் தரம் குறைந்து வருவது தெரிந்தது. அடிப்படைத் தேவைகளுக்கும், குடும்பத்து ஆண்களையே நம்ம வேண்டியிருந்தது.
பெண்கள், வெறுமனே அடுப்பூதி, கட்டாயத்திற்காக வாழ்க்கையை வாழ்ந்து முடிப்பதைக் கண்டு, மனம் வாடினேன். எனவே, என் பணியான, ஏற்றுமதி தொழில் மூலம், சொந்த ஊரில் உள்ள பெண்களுக்கு உதவலாம் என, எண்ணி, "க்ரீன் இன்னோவேஷன்ஸ்' எனும் நிறுவனம் துவங்கினேன். அதன் மூலம், நம்மூரில் குப்பையில் போடப்படும், தேவையற்ற பிளாஸ்டிக் கழிவுப் பொருட்களை, நேரடியாக விலை கொடுத்து வாங்கி, "அப்சைக்ளிங்' எனும் உயர்சுழற்சி முறையில், லேப்-டாப் பேக், டிராவல் பேக், ஸ்கூல் பேக் என, தரமாக தயாரிக்க, பெண்களுக்கு உதவினேன். உயர்சுழற்சி முறையில் தயாரிக்கப்பட்டதால், ஐரோப்பிய சந்தைகளில் நல்ல வரவேற்பு பெற்றது. தற்போது, 25 பெண்கள் தொழிலை கற்று, வேலை செய்கின்றனர். குடும்பத் தேவையை தாங்களே சமாளிக்கும் அளவிற்கு முன்னேறிஉள்ளனர்.

ஞாயிறு, 6 ஜனவரி, 2013

பெண்களை த் தொடரும் பேய்கள்

பெண்களை த் தொடரும் பேய்கள்

அந்த முகமும், பெயரும் வெளியிடப்படாத, டில்லி மருத்துவ மாணவி தன்னை பலி கொடுத்து, கொளுத்தி போட்ட தீ, இந்திய மக்கள் மனதில் பற்றி எரிகிறது."குற்றவாளிகளை தூக்கில் போடுங்கள், சோறு தண்ணீர் இல்லாமல் தனியறையில் அடைத்துவைத்து கொல்லுங்கள்; அரபு நாடுகளைப் போல பொதுமக்கள் மத்தியில் கல்லால் அடித்துக்கொல்லுங்கள், நடுரோட்டில் நரபலி கொடுங்கள்' என்று எண்திசைகளிலிருந்தும் குரல் வருகிறது.
இதயத்தில் ஏற்பட்ட ரத்தக்கசிவே :

டில்லியில் எழுந்தது சாதாரண குரல் அல்ல; கலாசார சீரழிவிற்கு எதிரான குரல். அரசின் கையாலாகாத்தனத்தை கண்டிக்கும் குரல், சட்டம் - ஒழுங்கு செயல்படாமையை சுட்டிக்காட்டும் குரல், செயல்படாத அரசு இயந்திரத்திற்கு குட்டுவைக்கும் குரல், போலீசின் பொறுப்பில்லாத்தனத்தை தட்டிவைக்கும் குரல், ஒட்டிக்கொள்ள ஒரு பதவிக்காக, அதுவும் சம்பாதிப்பதற்காக அலையும் அக்கறை இல்லாத அரசியல்வாதிகளை எச்சரிக்கும் குரல். இன்னும் சுருக்கமாக சொல்வதானால், மக்களின் இதயத்தில் ஏற்பட்ட ரத்தக்கசிவே அந்தக்குரல். தூக்கில் போட்டால் கூட உடனே இறந்துவிடக்கூடும், கொஞ்சம் கொஞ்சமாக, தான் செய்த தவறை நினைத்து வருந்தவேண்டும்; அதே நேரம் தண்டனையும் அடைய வேண்டும். அதற்கேற்ப, ஐரோப்பிய நாடுகளில் உள்ளது போல, "வேதியியல் முறையில் ஆண்மை நீக்கம் செய்யவேண்டும்' என்றும் எடுத்துக்கொடுக்கின்றனர்.

திரும்ப, திரும்ப பேச வைத்து:

குற்றவாளிகளில் ஐந்து பேர் மேஜர், ஒருவர் மட்டுமே மைனர். "மைனர் சட்டத்தை திருத்துங்கள், பதினைந்து வயதானாலே, "மேஜர்' என்று அறிவியுங்கள். அந்த சட்டத்தையும் உடனே கொண்டுவந்து சம்பந்தப்பட்ட குற்றவாளியையும் விட்டுவிடாமல் தண்டியுங்கள்' என்று குமுறுகின்றனர். எந்த காரணத்தை சொல்லியும், குற்றவாளிகளை தப்பவிட்டுவிடக்கூடாது என்பதில் மக்கள், அதிலும் இளைஞர்கள் உறுதியாக இருக்கின்றனர்.எந்தவித தூண்டுதலும் இல்லாமல், யாருடைய தலைமையும் இல்லாமல், மக்கள் ஒருமித்த கருத்துடன், ஒன்று திரண்டு நின்று போராடி, ஒட்டு மொத்த இந்தியாவையும் திரும்பிப்பார்க்க வைத்துவிட்டனர்; திரும்ப, திரும்ப பேச வைத்துக்கொண்டும் இருக்கின்றனர்.
ஒரு கைபார்த்துவிடலாம். :

இந்த விஷயம் உலகை உலுக்கியது பெரிதல்ல... உலுக்க வேண்டியவர்களை உலுக்கி எடுக்காமல் போய் விடுமோ என்ற கவலை எழுந்தபோது, மவுனம் காக்காமல், "விரைந்து நடவடிக்கை' என்று சொல்லியிருக்கிறார் பிரதமர்; ஆனாலும், இது போதாது என்கின்றனர் பொதுமக்கள். காரணம், அந்தளவிற்கு நடந்த சம்பவம் அவ்வளவு கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர்களது கோபம் நாட்டின் மீதும், நாட்டின் சட்டத்தின் மீதும் இப்போது திரும்பியிருக்கிறது. சிங்கப்பூரில் குற்றவாளிகளுக்கு கசையடிதான் தண்டனை. அதனால், குற்றவாளிகள் அதற்கு பயந்தே செத்துப்போவர். இந்தியாவிலோ மரணதண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகூட, சிரித்துக்கொண்டே கோர்ட்டைவிட்டு வெளியே வருகிறான். காரணம், கருணைமனு வரை ஒரு கைபார்த்துவிடலாம். அதற்குள், எங்காவது ஓட்டை ஏற்படுத்தி தப்பிவிடலாம் என்கின்ற தைரியம்.
ஊழலில் கரைந்து போகாத காவல்துறை:

மக்களை மதிக்காத சட்டமும், சட்டத்தை மதிக்காத மக்களும் இருப்பது நல்லதல்லவே. இன்றைய தேதிக்கு, நடைமுறையில் உள்ள பாலியல் சட்டங்கள் எதுவும், பெண்களுக்கானதாக இல்லை. கடந்த ஆண்டு மட்டும் நாடு முழுவதும் போலீசாருக்கு தண்டம் கட்டமுடியாமல், சட்டரீதியாக பாலியலில் குற்றம் சுமத்தப்பட்டவர்கள், 436 பேர் என்றால், தண்டிக்கப்பட்டவர்கள் ஒரே ஒருவர்தான். மற்றவர்கள், தற்போது சுதந்திரமாய் வெளியே திரிகின்றனர் என்றும் ஒரு புள்ளி விவரம் கூறுகிறது. சட்டம் இயற்றும் பார்லிமென்டில் இடம் பெற்றுள்ள, மாண்புமிகு எம்.பி.,க்களில் பலரே, குற்றவழக்கு பின்னணி உடையவர்கள்தான் என்றும், அதிலும் சிலர், பாலியல் குற்ற தொடர்பு உடையவர்களே என்றும் ஒரு குறிப்பு சொல்கிறது. ஊழலில் கரைந்து போகாத காவல்துறையினரையும், சந்தர்ப்பவாதத்தில் சறுக்கிவிழாத அரசியல்வாதியையும், கண்ணிற்கு எட்டிய தொலைவு வரை காணோம் என்பதால், பெண்ணைப்பெற்றவர்கள் தம் பெண் வீடு திரும்பும்வரை, வயிற்றில் நெருப்பைக்கட்டிக்கொண்டுதான் இருக்க நேரிடுகிறது. இப்படி நாட்டின் சட்டத்தின் மீது குற்றம் சுமத்தும் முன், இந்த விஷயத்தில் யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளாத, ஆனால், எடுத்துக்கொள்ள வேண்டிய சில விஷயங்களையும், இங்கே நாம் ஆராயவேண்டியுள்ளது.அதுதான் மது போதை...
டில்லி சம்பவத்தில் மட்டுமல்ல, அதற்கு நிகராக, தூத்துக்குடியிலும், வேலூரிலும், பின்னர் பெங்களூருவிலும், மீண்டும் டில்லியிலும் இத்தனை களேபரத்திற்கு நடுவிலும் பாலியல் பலாத்கார சம்பவம் நடந்துகொண்டுதான் இருந்தது. இதில், ஈடுபட்டவர்கள் பெரும்பாலும் மது அருந்திவிட்டே இந்த பாலியல் கொடுமையில் ஈடுபட்டிருக்கின்றனர்.மது தந்த போதை, மாதுவை தேடி தேடி நாசம் செய்யத்தூண்டி உள்ளது. இவர்கள் கண்ணில் பட்ட பெண், சிறுமி என்பது கூட தெரியாத அளவிற்கு காமம் கண்ணை மறைத்துள்ளது; காமத்திற்கு மதுவே துணை நின்றுள்ளது. மது என்பது எத்தனை சமாதானம் சொன்னாலும், செய்தாலும் ஏற்றுக்கொள்ளமுடியாத அரக்கன் என்பதில், இரண்டாவது கருத்தே இருக்க முடியாது.இன்னும் கொஞ்ச நாளில், தெரிந்தே குடிப்பவர்கள், தெரியாமல் குடிப்பவர்கள் என்ற இரண்டே இனம்தான் இருக்கப்போகிறது. அந்தளவிற்கு ரேஷன் கடைகள், பள்ளிக்கூடங்களை விட முக்கியத்துவம் தந்து மதுக்கடை திறக்கப்படுகிறது. மது விற்பனை சாதனையாக கணக்கிடப்படுகிறது.
மதுக்கடைகள் மூடப்படும் ?

"பாலியல் குற்றம்புரிந்தவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவர், பாதிக்கப்பட்ட பெண்ணுக்காக, அரசு பெண் வழக்கறிஞர்களே வாதிடுவர், இன்ஸ்பெக்டர் நேரடியாக விசாரிப்பார், அதை எஸ்.பி., மேற்பார்வையிடுவார், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு அரசே அனைத்து செலவையும் ஏற்றுக்கொள்ளும்' என்று, தமிழக முதல்வர் இந்த சம்பவம் தொடர்பாக நிறைய சொல்லி இருக்கிறார். இதை எல்லாம் சொல்லியது சரி, இதற்கும் மேலாக ஒரே ஒரு வார்த்தை, மதுக்கடைகள் மூடப்படும் என்று, சொல்லுங்கள். சொல்லியபடி செயல்படுத்திப்பாருங்கள். பாலியல் குற்றம் மட்டுமில்ல, எந்த குற்றமும் தமிழகத்தில் நடக்காது. இப்போதோ, சர்வசாதாரணமாக பிறன்மனை நோக்கலும், ஓடிப்போதலும், கற்பழிப்பும், அதிலும் குழந்தைகள் மீதான வன்முறையும் வரைமுறை இல்லாமல் போய்க்கொண்டு இருக்கிறது. அதற்கு காரணமாக சந்தேகமே இல்லாமல், சினிமாவையும், தொலைக் காட்சியையும்தான் சொல்ல வேண்டியிருக்கிறது. வீட்டின் வரவேற்பறையில் அரைகுறை உடையுடன் போடும் குத்தாட்டங்களை குடும்பத்துடன் ரசிக்குமளவு, மனதை கொஞ்சம் கொஞ்சமாக விஷமாக்கி வைத்திருக்கிறோம். ஆபாசத்தை நவீன முறையில் கொடுத்து, பார்ப்பவர்களின் மனதை கெடுத்துவருகின்றனர் என்பதில், எந்தவித சந்தேகமுமில்லை. இதை தருவதற்கும், தடுப்பதற்கும், ஏற்பதற்கும், விலக்குவதற்கும் சட்டமேதுமில்லை. அப்படி ஒரு சட்டம் வேண்டும் என்றாலே, ஜனநாயக காவலர்கள் வேல்கம்பு எடுத்து தேடிவருவர்.
குறைந்தபட்சமாக இது போன்ற நிகழ்ச்சிகளை கொடுப்பதிலும், பார்ப்பதிலும் என்ன பலன் என்று, அவரவர் மனசாட்சியை பேசவிட்டு கேட்டுச் சொல்லுங்கள். மூன்றாவதாக வளர்ப்பு: ஆணோ, பெண்ணோ பார்க்கவேண்டியதும், பராமரிக்கவேண்டியதும் பெற்றோர் கையில் உள்ளது. முன்பு போல பெண் தின்னும் வல்லூறுகள், கலைந்த தலை, முகத்தில் பரு, வடு விழுந்த கன்னம், கடூர குரல், கொடூர முகம் என்று, தனி அடையாளம் கொண்டு வருவதில்லை; நுனி நாக்கில் ஆங்கிலம் பேசி, நவநாகரிகவேடம் அணிந்து அலைகின்றன. இதில் மாணவியிடம் சில்மிஷம் செய்து அடிபடும் ஆசிரியர்களையும், பெண் போலீசுடன் உல்லாசம் என்று பிடிபடும் போலீஸ் அதிகாரிகளையும் பற்றி அறியும் போது, உதாரணமாக இருக்கவேண்டியவர்களே, இப்படியா என்ற வேதனையே மிஞ்சுகிறது.
இந்த விஷயத்தில், எந்தவித கட்டுப்பாடும் இல்லாத நம்நாட்டைவிட, கட்டுப்பாடு நிறைந்த அரபு நாடுகளின் சட்டங்கள் மேல்தானோ என, நினைக்கத் தோன்றுகிறது. அங்குள்ள பெண்கள் மகிழ்ச்சியாக, குடும்பம், குழந்தை என்று இருக்கின்றனர்; இவை எல்லாவற்றையும் விட, நிம்மதியாக இருக்கின்றனர். இங்கே கருவறை முதல் கல்லறை வரை பெண் சந்திக்கும் பிரச்னையை பார்த்தால், அதுவும் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை ஏற்படும் வயதில், வாழ்க்கையே திசைமாறிப் போகுமளவு பிரச்னை என்றால், மங்கையராய் பிறப்பதற்கு மாதவம் அல்ல, மாபாவம்தான் செய்திருக்கவேண்டும்.
உயிரினும் மேலானது மானம்;

அந்த மானத்தையும் இழந்து, உயிரையும் கொடுத்த டில்லி மாணவியின் கடைசி நேர கதறல், எனக்கு நேர்ந்த கொடுமை, இனி எந்த பெண்ணிற்கும் நடக்கக்கூடாது என்பதுதான். ஆனால், துரதிருஷ்டவசமாக அதற்கு பிறகும் இந்த கொடுமைகள் தொடர்கின்றன என்றால், பாலியல் குற்றம் செய்பவர்களுக்கு பயமில்லையா அல்லது இது குறித்து படிப்பினை இல்லையா...?
email: murugaraj2006@gmail.com முருகராஜ் பத்திரிகையாளர்/சிந்தனையாளர்.

வியாழன், 3 ஜனவரி, 2013

கோடம்பாக்கம் கைத்தறி ச் சேலைக்குச் செல்வாக்கு : மதுரையின் பெருமை

கோடம்பாக்கம் கைத்தறி ச் சேலைக்கு மவுசு : மதுரையின் பெருமை பேசும் பெண்கள்

மதுரை: மதுரையில் உற்பத்தி செய்யப்படும் "கோடம்பாக்கம்' கைத்தறி சேலைக்கு சிங்கப்பூர், மலேசியா, இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளில் மவுசு அதிகரித்துள்ளது.மதுரையை சேர்ந்த கைத்தறி நெசவு தொழிலாளி தெய்வேந்திரன். இவர், நூறு சதவீதம் தரமான பருத்தி நூலை பயன்படுத்தி காட்டன் சேலைகளை ஜரிகையுடன் தயாரித்து கைத்தறியில் புதுமையை புகுத்தினார்.

இவ்வகையான சேலைகளை பெண்கள் அணிவதற்கு ஈசியாகவும், பேஷனாகவும், எடை குறைவாகவும் இருந்தன. நாளடைவில் கைத்தறி காட்டன் சேலைகளுக்கு பெண்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருந்தது. குறிப்பாக, கோடம்பாக்கம் கோலிவுட் நடிகைகள் விரும்பி அணிந்தனர். இதனாலேயே, இச்சேலைகளுக்கு "கோடம்பாக்கம் கைத்தறி சேலை' என பெயர் வந்தது. ஏற்றுமதி அமோகம்:கோடம்பாக்கம் கைத்தறி காட்டன் சேலைகளுக்கு சிங்கப்பூர், மலேசியா, இலங்கை மற்றும் வடமாநில பெண்களிடையே அமோக வரவேற்பு உள்ளது. அதிகளவு ஏற்றுமதி செய்யப்படுகிறது. மதுரையில் ஒத்தக்கடை, கடச்சனேந்தல்,  திருப்பரங்குன்றம் கைத்தறிநகர், வில்லாபுரம், அவனியாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கோடம்பாக்கம் சேலைகளை ஆர்டரின் பேரில் நெசவாளர்கள் உற்பத்தி செய்கின்றனர்.
ரூ.800 முதல் விலை:
மதுரை நரசிங்கம்பட்டியை சேர்ந்த நெசவாளர் கண்ணன்: விசைத்தறியில் பெரிய டிசைன் சேலைகளை தயாரிக்க முடியாது. இது கைத்தறியில் சாத்தியமாகும். "நைசாகவும்' இருக்கும். இவ்வகை சேலைகளுக்கு என்றைக்குமே மவுசு இருந்து கொண்டே இருக்கிறது. ஒரு பாவுக்கு பத்து சேலைகளை தயாரிக்கலாம். ஒரு சேலைக்கு 200 ரூபாய் கூலி. நாள் ஒன்றுக்கு ஒரு சேலை தான் தயாரிக்க முடியும். சேலையின் விலை 800 ரூபாய் என்றார்.மதுரை த்தக்கடையை சேர்ந்த நெசவாளர் கிருஷ்ணமூர்த்தி: கைத்தறி ஜவுளி தொழிலில் நிலைத்து நிற்பது கோடம்பாக்கம் சேலைகள் தான். இதனை கைத்தறியில் மட்டுமே தயாரிக்க முடியும். விசைத்தறியில் இயலாது. சம்பளம் குறைவாக இருப்பதால், கைத்தறி நெசவு படிப்படியாக குறைந்து வருகிறது.

புதன், 2 ஜனவரி, 2013

சிறுமியர், பெண்களுக்குச் "சாட்டையடி' :கொடுமையான நேர்த்திக் கடன்

சிறுமியர், பெண்களுக்குச்  "சாட்டையடி' : வினோத நேர்த்திக்  கடன்
ஓசூர்: ஓசூர் அருகே, கோவில் திருவிழாவில், பெண்கள் மற்றும் சிறுமியர் மீது பேய் நெருங்காமல் இருக்க, சாட்டையால் அடித்தும், ஆண்கள் தலையில் தேங்காய் உடைத்தும், வினோத வழிபாடு செய்தனர்.
கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில், குரும்பர் இன மக்கள் அதிகம் வசிக்கின்றனர். தற்போது, சொந்த ஊர்களில் வசிப்பவர்கள், ஆடு மேய்ச்சல் தொழிலை செய்து வந்தாலும், வேலை வாய்ப்புக்காக, இடம் பெயர்ந்தவர்கள், பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ளனர்.இவர்களின், குல தெய்வமான, வீரபத்திர சுவாமிக்கு விழா எடுத்து, ஆண்கள் தலையில் தேங்காய் உடைத்தும், பெண்களை சாட்டையால் அடித்தும், வினோத முறையில் நேர்த்தி கடன் செலுத்துவதை, வழக்கமாக செய்து வருகின்றனர். வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் தாலுகா எலவம்பட்டி, குறும்பேரி கிராமங்களை சேர்ந்த, நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர், ஓசூர் அடுத்த மூக்கண்டப்பள்ளி பகுதியில் வசிக்கின்றனர்.
இவர்கள் ஆண்டுதோறும், புத்தாண்டையொட்டி, ஓசூர் மூக்கண்டப்பள்ளி தோப்பம்மா தேவி கோவில் வளாகத்தில், தங்கள் குலதெய்வமான வீரபத்திர சுவாமி கோவில், திருவிழாவை கொண்டாடுவர். நேற்று, புத்தாண்டை முன்னிட்டு, சிறப்பு பூஜை செய்தனர். குறும்பர் இன பராம்பரிய நடனமான, சேவாட்டம் நடந்தது.அதன் பின், தேங்காய் உடைக்கும் பக்தர்கள், கைளை மேலே உயர்த்தி, தங்கள் குலதெய்வத்தை வணங்கினர். அவர்கள் தலை மீது, கோவில் குருசாமி தேங்காய்களை உடைத்தார். வீரபத்திர சுவாமி சத்தியா வந்து தேங்காயை உடைப்பதால், தங்கள் தலைக்கு வலி ஏற்படவில்லை என, பக்தர்கள் தெரிவித்தனர்.சிறுமியர் மற்றும் பெண்களை, பேய் நெருங்காமல் இருக்க, சாட்டையால் அடிக்கும் வினோத வழிப்பாடும் நடந்தது. சிறுமியர், பெண்கள் வரிசையாக நிற்க, அவர்கள் கைகள், முதுகில், கோவில் குருசாமி சாட்டையால் அடித்தார்.இதுகுறித்து, கோவில் குருசாமி, வீரபத்திரப்பா கூறியதாவது;எல்லா தெய்வங்களுக்கும், குழந்தை பருவ காலம் உண்டு. ஆனால், எங்கள் தெய்வமான, வீரபத்திர சுவாமிக்கு, குழந்தை பருவ காலம் கிடையாது. வீரத்தில் பிறந்த எங்கள் சுவாமிக்கு, தலையில் தேங்காய் உடைத்தும், சாட்டையடி வாங்கியும், வழிப்பாட்டால், தங்கள் உடல் ஆரோக்கியம் பெருகும். வேண்டுதல்கள் நிறைவேறும் என்பது, எங்களுடைய நம்பிக்கையாக உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

வியாழன், 27 டிசம்பர், 2012

தன்னம்பிக்கைப் பெண்கள்

சொல்கிறார்கள்

"தன்னம்பிக்கை ப் பெண்கள்!'உள்ளாடை தயாரிப்பில் ஈடுபட்டுள்ள, புதுவலவு மகளிர் சுய உதவிக் குழு பெண்கள்: திருப்பூர் மாவட்டம், குன்னத்தூர் அருகிலுள்ள புதுவலவு தான், எங்கள் கிராமம். விவசாய கூலி போதவில்லை. எனவே, ஏதாவது தொழில் பண்ண நினைத்தோம்.தோட்ட வேலைக்கு போன, 14 பேரும் சேர்ந்து, ஒரு குழு ஆரம்பித்தோம். சில நாட்களில், திருப்பூரிலிருந்து, பனியன் கட்டிங் வேஸ்டேஜை வாங்கி, அதை வைத்து, ஜட்டி தயாரிக்கலாம் என கூறினர். எங்களில், சிலருக்கு மட்டும் தான், டெய்லரிங் தெரியும். அவர்களின் தன்னம்பிக்கையை பார்த்து, தைரியமாக இறங்கினோம். முதலில், மூன்று மெஷின் போட்டு துவங்கினோம். இப்போது, 10 மெஷின்கள் உள்ளன. 10 - 20 ரூபாய்க்கு திண்டாடினோம். இப்போது, ஒரு ஆளுக்கு, 160 ரூபாய் வரை கூலி கிடைக்கிறது.குழு துவங்கிய போது, ஐந்து பேருக்கு மட்டும் தான் தொழில் தெரியும். ஓர் ஆண்டிலேயே, எங்களின் செயல்பாடுகளைப் பார்த்து, 2.5 லட்சம் ரூபாய் மானியம் கடன் கொடுத்தனர். அடுத்தடுத்து, "ஆர்டர்ஸ்' வர, வெளி ஆட்களை வைத்து, வேலை பார்க்கும் அளவுக்கு உயர்ந்திருக்கோம்.எல்லாரும் முல்லை, தென்றல் என்று தான், மகளிர் குழுக்களுக்கு பெயர் வைப்பர். ஆனால், ஊர் பாசத்தில், நாங்கள், ஊரின் பெயரிலேயே குழுவை துவங்கினோம்.நாங்க தயாரிக்கும் உள்ளாடைகளை, ஆட்களை வைத்து, ஈரோடு துணிச் சந்தையில் இறக்குவோம். ஆந்திரா, கர்நாடகா, கேரள வியாபாரிகள் போட்டி போட்டு, மொத்தமாக வாங்கிப் போய் விடுவர்.ஒரு கட்டத்தில், அதிகமான டிமாண்ட் வந்த போது, எங்களால், அந்த அளவுக்கு பண்ண முடியவில்லை.எந்த அளவுக்கு, "ஹை குவாலிட்டி' உள்ளாடைகளின் தேவை கூடிக் கொண்டே போகிறதோ, அதே அளவு, "சீப்' ரேட்டில் கிடைக்கிற உள்ளாடைகளுக்கும், நல்ல டிமாண்ட் இருந்து கொண்டு தான் இருக்கும். அதனால், இதற்கு, எப்பவும் மவுசு குறையாது.

வெள்ளி, 7 டிசம்பர், 2012

3500 ஆண்டுகளுக்கு முன்னரே பெண்களுக்குஅணிகலன் ஆசை

3500 ஆண்டுகளுக்கு முன்னரே பெண்களுக்கு ஆபரண ஆசை இருந்தது: ஆய்வில் தகவல்
சேக்சானி (ஜெர்மனி), டிச.7-
 
தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.3 ஆயிரத்தை நெருங்கி வரும் வேளையிலும் நம்நாட்டு பெண்களுக்கு தங்க நகைகளை வாங்கி, அணிந்துக் கொள்ளும் ஆசை சற்றும் குறைந்தபாடில்லை.
 
இந்த ஆபரண ஆசை, பெண்களுக்கிடையில் இன்று, நேற்று, உருவானதல்ல. கற்காலத்தின் போதே உலோகங்களால் உருவான ஆபரணங்களை அணியும் வழக்கம் பெண்களிடம் இருந்துள்ளது என்பது சமீபத்தில் தெரியவந்துள்ளது.
 
கி.பி. 21-ம் நூற்றாண்டில் வசிக்கும் நவநாகரிக மங்கையருக்கு இணையாக, கி.மு.1550-ம் ஆண்டில் வசித்த ஜெர்மனி பெண் ஒருவரும், வெண்கலத்தால் ஆன, சுருள் சுருளான கிரீடம் போன்ற ஆபரணத்தை அணிந்துள்ளது. தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
கடந்த 2008-ம் ஆண்டு, கிழக்கு ஜெர்மனியில் உள்ள ரோக்லிட்ஸ் பகுதியில், புதிய ரெயில் பாதை அமைப்பதற்காக பூமியை தோண்டியபோது, ஒரு பெண்ணின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது.
 
அந்த எலும்புக் கூட்டின் மண்டை ஓட்டில்தான், வெண்கலத்தால் செய்யப்பட்ட, இந்த தலை அலங்கார ஆபரணம் கிடைத்துள்ளது.
 
இந்த எலும்புக்கூட்டினை ஆய்வு செய்த தொல்பொருள் நிபுணர்கள், அந்த பெண் கி.மு. 1550-1250-க்கு இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்திருக்கக் கூடும் என்பதை உறுதி செய்துள்ளனர்.
 
3500 ஆண்டுகள் பழமையான இந்த அபூர்வ மண்டை ஓடு, ஜெர்மனியின் ஹாலே நகரில் உள்ள அருங்காட்சியகத்தில், பொதுமக்கள் பார்வைக்கு இன்று வைக்கப்பட்டது.

ஞாயிறு, 2 டிசம்பர், 2012

ஒடுக்கப்பட்டவர் அல்லாத பெண்களுக்குப் பாதுகாப்பு தேவை: இராமதாசு

தலித் பகுதிகளின் வழியாகச் செல்லும் தலித் அல்லாத பெண்களுக்குப் பாதுகாப்பு தேவை: இராமதாசு


தலித் பகுதிகளின் வழியாகச் செல்லும் தலித் அல்லாத பெண்கள், மாணவிகள் சுதந்திரமாகச் செல்ல முடியாத நிலை உள்ளது. அவர்களை அப்பகுதி இளைஞர்கள் அறுவறுக்கத்தக்க வகையில் ஈவ்-டீசிங் செய்வதால் பலரும் படிப்பை பாதியில் நிறுத்திவிடும் நிலை உள்ளது; அவர்களுக்குப் பாதுகாப்பு தரவேண்டும் என்பன உள்ளிட்ட 7 தீர்மானங்கள் பாமக நிறுவுனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற அனைத்து சமுதாயத் தலைவர்கள் பங்கேற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
இது குறித்த தீர்மான விவரம்:

தீர்மானம் 1: எஸ்.சி/ எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை திருத்த வேண்டும்
அனைத்து சமுதாய மக்களும் சம உரிமையுடனும், சம மரியாதையுடனும் வாழ வேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பமும், கருத்தும் ஆகும். சாதியின் பெயராலோ அல்லது மதத்தின் பெயராலோ பாகுபாடு காட்டப்படுவதை எவரும் விரும்பவில்லை. குறிப்பாக காலங்காலமாக ஒடுக்கப்பட்ட தலித் சமுதாயத்தினர் கல்வி, வேலைவாய்ப்பு , பொருளாதாரம் ஆகியவற்றில் முன்னேனற
வேண்டும் என்பதுதான் அனைத்து சமுதாயத்தினரின் விருப்பமாகும். இந்தத் துறைகளில் அவர்கள் முன்னேனறி வருவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
அதேபோல், தமிழகத்தின் எந்தப்பகுதிகளிலும் தீண்டாமை என்பது எந்த வடிவத்திலும் நிலவக்கூடாது; மனதளவில் கூட தீண்டாமையை எவரும் கடைபிடிக்கக்கூடாது என்பது தான் இக்கூட்டத்தில் பங்கேற்றுள்ள அனைத்து சமுதாயத் தலைவர்களின் நிலைப்பாடு ஆகும். தீண்டாமை இல்லாத தமிழகத்தை உருவாக்குவதற்காக அனைத்து சமுதாயத்தினரும் மேற்கொண்ட முயற்சிகளின் பயனாக தமிழகத்தில் தீண்டாமை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டிருக்கிறது என்பது அனைவராலும் ஒப்புக்கொள்ளப் பட்ட ஒன்றாக உள்ளது.
இந்தியாவின் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், தமிழகத்தில் தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிட்ட நிலையில், அதை எண்ணி மகிழ்ச்சி அடைய வேண்டிய தலித் சமுதாயத்தினரில் சிலர், தங்களுக்கு பிடிக்காதவர்களை பழி வாங்கவேண்டும் என்பதற்காக அவர்கள் மீது எஸ்.சி/ எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கும்படி பொய்ப் புகார்களை அளிப்பது வருத்தமும் வேதனையும் அளிக்கிறது.
பொதுவாகவே, தங்களுக்கு பிடிக்காதவர்களை பழி வாங்கவும், பொய்ப் புகார்களை அளிக்கவும், காவல் நிலையங்களில் கட்டப்பஞ்சாயத்து செய்யவும் தான் எஸ்.சி/ எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தை தலித்துகளில் சிலர் தவறாக பயன்படுத்தி வருகின்றனர் .1989ஆம் ஆண்டில் இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்த நாளிலிருந்து இன்று வரை, இச்சட்டப் பிரிவுகளின் படி தொடரப்பட்ட வழக்குகளில் 2.2 விழுக்காடு வழக்குகளில் மட்டுமே குற்றச்சாற்றுகள் நிரூபிக்கப்பட்டிருக்கின்றன. இதிலிருந்தே இந்தச் சட்டப்படி தொடரப்பட்ட வழக்குகளில் 97.8 விழுக்காடு வழக்குகள் பொய் வழக்குகள் என்பது தெளிவாகிறது. இச்சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவது குறித்து கவலை தெரிவித்த தில்லி அமர்வு நீதிமன்றம்,‘‘ எஸ்.சி/ எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டம் எதற்காக கொண்டுவரப்பட்டதோ, அந்த நோக்கத்திலிருந்து விலகிச் சென்று கொண்டிருக்கிறது.தங்களுக்கு பிடிக்காதவர்களுடனான சிறு சிறு பிரச்னைகளை தீர்த்து பழி வாங்குவதற்காக இச்சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தப் போக்கை தடுத்து நிறுத்த அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ என்று அறிவுறுத்தியுள்ளது. இந்தச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது என்பதை மத்திய அரசே நாடாளுமன்றத்தில் ஒப்புக்கொண்டிருக்கிறது.
வன்கொடுமை தடுப்புச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவது தான் பல்வேறு சமுதாயங்களிடையே மோதலை ஏற்படுத்தி சமூக நல்லிணக்கம் பாதிக்கப்படுவதற்கு காரணமாக அமைகிறது. சமூக நல்லிணக்கம் பாதுகாக்கப்பட வேண்டுமானால் இச்சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவது தடுக்கப்பட வேண்டும். வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டால், அதன்படி கைது செய்யப்படுபவர் ஜாமினில் வெளிவரமுடியாத நிலை உள்ளது; இதை மாற்றி ஜாமினில் வெளிவரும் வகையில் சட்டத்திருத்தம் செய்யப்படவேண்டும்.
எனவே, இந்தச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்கும் வகையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட நீதிபதி தலைமையில்,கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும்வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்படி அளிக்கப்படும் புகார்கள் அனைத்தையும் இக்குழுவின் பார்வைக்கு அனுப்பி, ஒப்புதல் பெற்ற பிறகே அதன்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் வன் கொடுமை தடுப்புச் சட்டத்தின் அளிக்கப்படும் புகார்கள் நிரூபிக்கப்படாத பட்சத்தில், அவை பொய்ப் புகார்கள் எனக் கருதப்பட்டு, அவற்றை அளித்தவர்கள் மீது நேரடியாக கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பிரிவுகளை சேர்க்கும் வகையில் எஸ்.சி/ எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை அனைத்து சமுதாய தலைவர்கள் கூட்டம் வலியுறுத்துகிறது.

தீர்மானம் 2: வன் கொடுமை சட்டத்தில் திருத்தம் கோரி போராட்டம்
தமிழ்நாட்டில் எஸ்.சி/ எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டப் பிரிவுகள் தவறாக பயன்படுத்தப்படுவது ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. தீண்டாமையை ஒழிக்க வேண்டும் என்பதில் காட்டும் அதே அக்கறையை, அதற்கான வன்கொடுமை தடுப்புச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுப்பதிலும் மத்திய, மாநில அரசுகள் காட்ட வேண்டும். அப்போது தான் சமூக நல்லிணக்கம் பாதுகாக்கப் படுவதையும், இச்சட்டப் பிரிவுகளால் அப்பாவிகள் பழிவாங்கப்படாமல் இருப்பதையும் உறுதி செய்ய முடியும். எனவே,எஸ்.சி/ எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்கும் வகையில், அதில் தேவையான திருத்தங்களைச் செய்ய வலியுறுத்தி அனைத்து சமுதாயங்களின் சார்பில் வரும் 2013ஆம் ஆண்டு ஜனவரி 4ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் தொடர்முழக்கப் போராட்டம் நடத்துவதென இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

தீர்மானம் 3: காவல்துறை நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

தமிழக காவல்துறையில் உள்ள சில அதிகாரிகள் ஒருதலை பட்சமாக நடந்து கொள்கின்றனர். நியாயத்தின் பக்கம் நிற்க வேண்டிய காவல்துறை அதிகாரிகள், அதை காலில் போட்டு மிதித்துவிட்டு, சாதி உணர்வுடன் தங்களது சாதிக்காரர்கள் பக்கமே நிற்கின்றனர். இதனால், பல இடங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படுவதற்குப் பதிலாக, அவர்கள் மீதே பொய் வழக்குகள் போடப்படுவதும், பழி வாங்கலுக்கு உள்ளாக்கப்படுவதும் நடைபெறுகிறது. சமூக நல்லிணக்கம் பாதிக்கப்படுவதற்கு சில காவல்துறை அதிகாரிகளின் இந்தப் போக்கே காரணமாக உள்ளது. இப்போக்கு கடுமையாக கண்டிக்கத்தக்கது. சமூக நல்லிணக்கத்தை பாதுகாப்பதற்காக, நேர்மையுடனும், ஒரு தரப்பு நிலை எடுக்காமலும் பணியாற்ற வேண்டும் என்று காவல்துறை அதிகாரிகள் அனைவருக்கும் அறிவுரைகளை வழங்க வேண்டும் என்று காவல்துறை தலைமை இயக்குனர் அவர்களை இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 4: 21 வயதுக்கு முன்பாக திருமணம் செய்ய பெற்றோர் சம்மதம் அவசியம்

நாகரீக சமுதாயத்தில் காதல் திருமணங்களுக்கோ அல்லது கலப்பு திருமணங்களுக்கோ தடை போடுவது சரியானதாக இருக்காது. இத்தகைய திருமணங்களை நாங்கள் எதிர்க்கவும் இல்லை.
ஆனால், காதல் திருமணங்கள் என்ற பெயரில் நடத்தப்படும் நாடகத் திருமணங்களால் சமுதாயத்தில் பல்வேறு சீரழிவுகள் ஏற்படுகின்றன. எனவே,இத்தகைய நாடகத் திருமணங்களைத் தான் அனைத்து சமுதாயங்களும் எதிர்க்கின்றன. இந்தத் திருமணங்கள் உண்மையான அன்பையும் நேசத்தையும் அடிப்படையாகக் கொண்டிருக்காமல் , உடல்கவர்ச்சி, நாடகம் நடத்தி திருமணம் செய்த பின்னர் பெண் வீட்டாரிடமிருந்து பணம் பறிக்கும் நோக்கம் ஆகியவற்றையே அடிப்படையாக கொண்டிருக்கின்றன. இரு மனம் இணைவது தான் திருமணம் என்ற இலக்கணத்திற்கு பொருந்தாத வகையில் நடைபெறும் இந்த நாடகத் திருமணங்கள் ஓரிரு மாதங்களினேலயே தோல்வியில் முடிகின்றன. இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வுகளின் முடிவுகளும் இதை உறுதி செய்கின்றன.
உதாரணமாக நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் நடைபெற்ற 955 காதல் நாடகத் திருமணங்களில் 712 திருமணங்கள் தோல்வியில் முடிவடைந்திருக்கின்றன. திருமணத்திற்கு பிறகு எதிர்கொள்ளும் கொடுமைகளை தாங்கிக் கொள்ள முடியாமல் 32 இளம் பெண்களும், அவமானத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் 37 பெற்றோர்களும் தற்கொலை செய்துகொண்டிருக்கின்றனர். காதல் நாடகத் திருமணங்களால் சமுதாயத்திற்கு கிடைக்கும் பயன் தோல்வியடைந்த திருமணங்களும், பெற்றோரின் தற்கொலைகளும் தான். சமூக மோதலுக்கும், நல்லிணக்கம் கெடுவதற்கும் இவைதான் அடிப்படையாக அமைகின்றன. தோல்வியடைந்த காதல் நாடகத் திருமணங்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் அனைவருமே தலித் அல்லாத சமுதாயங்களைச் சேர்ந்தவர்கள் ; அவர்களை ஏமாற்றி மணந்து கொண்டவர்கள் அனைவரும் தலித்துகள் என்பதிலிருந்தே ,இத்தகைய திருமணங்கள் எப்படி திட்டமிட்டு நடத்தப்படுகின்றன என்பதையும், இத்தகைய திருமணங்களை செய்யும்படி தலித் இளைஞர்களை அந்த சமுதாய தலைவர்கள் எப்படியெல்லாம் தூண்டுகிறார்கள் என்பதையும் உணர முடியும்.
காதல் நாடகத் திருமணங்கள் என்ற வலையில் வீழ்த்தப்படும் பெண்கள் அனைவருமே பதின் வயது பிரிவைச் சேர்ந்தவர்கள். இந்த வயதில் அவர்களால் தங்களின் எதிர்காலம் பற்றி சிந்திக்க முடியாது. உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் குடும்பம் நடத்துவதற்குரிய தகுதியை அவர்கள் பெற்றிருப்பதில்லை என்பதால் இவை குழந்தை திருமணங்களாகவே அமைகின்றன. இதனால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க பெண்களின் திருமண வயதை 21 ஆகவும், ஆண்களின் திருமண வயதை 23 ஆகவும் உயர்த்த வேண்டும். இந்த வயதுக்கு முன்பாக அவர்கள் திருமணம் செய்துகொள்வதாக இருந்தால், அதற்கு பெற்றோரின் ஒப்புதல் அவசியம் என்று சட்டத்திருத்தம்
கொண்டுவரப்பட வேண்டும். சீனா, சிங்கப்பூர், ஜப்பான், பிரேசில் உள்ளிட்ட நாடுகளிலும், அமெரிக்காவின் மிசிசிபி மாநிலத்திலும் குறிப்பிட்ட வயதுக்கு முன்பாக திருமணம் செய்துகொள்ள பெற்றோரின் ஒப்புதல் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதே போன்ற
சட்டத்தை இந்தியாவிலும் கொண்டுவந்து காதல் நாடக திருமணங்களைத் தடுக்கவேண்டும் என்று அனைத்து சமுதாய தலைவர்கள் கூட்டம் மத்திய , மாநில அரசுகளை வலியுறுத்துகிறது. இஸ்லாமிய, கிறித்தவ மத கோட்பாடுகளுக்குட்பட்டு நடைபெறும் திருமணங்களை இத்தீர்மானம் கட்டுப்படுத்தாது என்றும் இக்கூட்டம் தெரிவித்துக்கொள்கிறது.

தீர்மானம் 5 : மாணவிகள், பெண்களுக்கு பாதுகாப்பு தேவை
தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் தலித்துகள் வாழும் பகுதிகள் வழியாக மாணவிகனேளா, பெண்கனேளா சுதந்திரமாக நடமாட முடியாத நிலை காணப்படுகிறது. அவ்வழியே செல்லும் மானவிகளை அப்பகுதியில் உள்ள இளைஞர்கள் அருவறுக்கத்தக்க வகையில் ஈவ் டீசிங் செய்வதால் மாணவிகள் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல முடியாமல் படிப்பை பாதியில் நிறுத்தவேண்டிய நிலை ஏற்படுகிறது.இதைத்
தடுக்க காவல்துறையில் ஈவ் டீசிங் தடுப்புப் பிரிவு என்ற தனிப்பிரிவை ஏற்படுத்தி , அப்பிரிவைச் சேர்ந்த காவலர்களை மாணவியரும், பெண்களும் செல்லும் பாதைகளிலும், னேபரூந்து நிறுத்தங்கள் , பள்ளி மற்றும் கல்லூரிகள் அமைந்துள்ள இடங்களிலும் சாதாரண உடையில் நிறுத்தி கண்காணிக்க வேண்டும்.
மாணவிகளிடம் தவறாக நடந்துகொள்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் சென்னையில் இருப்பதைப் போல மாணவிகளும், பிற பெண்களும் பயணம் செய்வதற்கு வசதியாக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகங்கள் உள்ள பகுதிகளுக்கு ‘மகளிர் மட்டும்’ என்ற சிறப்பு னேபரூந்துகளை இயக்க வேண்டும் என்று தமிழக அரøச அனைத்து சமுதாய தலைவர்கள் கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் 6 : 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை தொகுதி மாற்றம்

சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தனித் தொகுதிகள் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை என சுழற்சி முறையில் மாற்றி அமைக்கப்படுவதற்கு ஏற்ற வகையில் சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும் என்று மத்திய அரசை அனைத்து சமுதாய தலைவர்கள் கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் 7 : காதல் நாடகத் திருமணங்களால் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றி விசாரணை
தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகளில் நடத்தப்பட்ட காதல் நாடகத் திருமணங்களால் ஆயிரக்கணக்கான இளம்பெண்களும், அவர்களின் குடும்பத்தினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் தலைமையில் ஓர் விசாரணைக் குழுவை அமைத்து, விசாரித்து, உண்மை நிலையை நாட்டு மக்களுக்கு அறிவிக்க வேண்டும் என்று இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

சனி, 6 அக்டோபர், 2012

பெண்கள் உயர்கல்வி பெற கல்வி உதவித்தொகை

பெண்கள் உயர்கல்வி பெற கல்வி உதவித்தொகை

First Published : 03 October 2012 11:20 AM IST
பெண்கள் பல்வேறு துறைகளில் அதிகாரம் பெற ஊக்கப்படுத்துவதற்காகவும் உயர் கல்வி பெறவும்  பேர் அண்ட் லவ்லி நிறுவனம் உதவித்தொகை வழங்கவுள்ளது. இந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் நிறுவனத்தின் சமூக பொறுப்பு என்ற வகையில் இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.
10வது ஆண்டில் காலடி எடுத்துவைத்துள்ள பேர் & லவ்லி அறக்கட்டளை நாடு முழுவதிலுமிருந்தும் பெண்களிடமிருந்து உயர்கல்வியை மேற்கொள்வதற்காக பேர் & லவ்லி கல்வி உதவித்தொகை திட்டத்திற்கான விண்ணப்பங்களை பெறுகிறது. இந்த ஸ்காலர்ஷிப் திட்டம் மற்றும் விண்ணப்ப செயல்முறைகள் குறித்த தகவல்கள் www.fairandlovely.in என்ற தளத்தில் கிடைக்கப்பெறும்.
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு அகியவைகளில் குறைந்தபட்சம் 60 சதவிகித மதிப்பெண்களை பெறுவதே இதற்கான குறைந்தபட்ச தகுதியாகும்.
விண்ணப்பிக்கும் முறை; www.fairandlovely.in என்னும் தளத்திலிருந்து விண்ணப்பங்கள் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து சமர்பிக்கலாம். ஆர்வமுள்ள பெண்கள் 1800 220 130 என்னும் கட்டணமில்லா எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
விண்ணப்பங்களை சமர்பிப்பதற்கான இறுதித் தேதி 30 அக்டோபர், 2012 ஆகும். பின்வரும் முகவரிக்கும் விண்ணப்பங்கள் தபாலில் அனுப்பப்படலாம்: பேர் & லவ்லி ஸ்காலர்ஷிப்  2012, பேர் & லவ்லி அறக்கட்டளை, தபால் பெட்டி எண்.11281, மரைன் லைன்ஸ் தபால் அலுவலகம், மும்பை – 400 020

புதன், 10 நவம்பர், 2010

பெண்களுக்குத் தற்காப்புக் கலைப் பயிற்சி

பெண்களுக்கு தற்காப்புக் கலை பயிற்சி

சமூக நலத்துறை சார்பில் பயனாளிக்கு தையல் இயந்திரம் வழங்கும் மாநில மகளிர் ஆணைய தலைவர் சற்குணபாண்டியன் (இடமிருந்து 2-வது). (வலது) கூட்டத்தில் பங்கேற்ற அல
திருவள்ளூர், நவ. 9: பாலியல் கொடுமையில் இருந்து தற்காத்துக் கொள்ளவும், இரவு நேரத்தில் தனியாக செல்லும்போது ஆபத்து நேர்ந்தால் தங்களை பாதுகாத்துக் கொள்ளவும் தமிழகத்தில் உள்ள அனைத்து பெண்களுக்கும் தற்காப்புக் கலை பயிற்சி அளிக்க மாநில மகளிர் ஆணையம் முயற்சிகள் மேற்கொண்டுள்ளது என அதன் தலைவி சற்குணபாண்டியன் தெரிவித்தார்.மாநில மகளிர் ஆணையம் சார்பில் சமூகநலத் துறையில் பெண்கள் தொடர்பாக வரப்பெற்ற குடும்ப வன்முறை, வரதட்சிணை கொடுமை, பாலியல் தொல்லை உள்ளிட்ட பல்வேறு புகார்கள் தொடர்பாக வரப்பெற்ற மனுக்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் டி.பி.ராஜேஷ் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் மாநில மகளிர் ஆணைய தலைவி சற்குணப்பாண்டியன், மாநில ஆணைய உறுப்பினரும் மாவட்ட எஸ்.பி.யுமான வனிதா ஆகியோர் பங்கேற்று ஆய்வு நடத்தினர்.ஆய்வுக்குப் பின் செய்தியாளர்கள் சந்திப்பில் மாநில மகளிர் ஆணையத் தலைவி சற்குணபாண்டியன் கூறியது:தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் சமுகநலத் துறை சார்பில் வரப்பெற்ற மனுக்களின் நிலை குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 19 மாவட்டங்களில் ஆய்வை முடித்துள்ளேன். இது 20-வது மாவட்டம்.திருவள்ளூர் மாவட்டத்தை பொறுத்த வரையில் 2007-ம் ஆண்டு முதல் நடப்பாண்டு வரை குடும்ப வன்முறைச் சட்டம் தொடர்பாக 506 மனுக்கள் வரப்பெற்றுள்ளது. இதில் 334 மனுக்கள் சமூகநலத் துறை மூலம் தீர்க்கப்பட்டுள்ளன. 96 மனுக்கள் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டு அதில் 31 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளது. மற்ற மனுக்கள் விசாரணையில் உள்ளன.தமிழகத்தை பொறுத்தவரையில் கடந்த 2006-ம் ஆண்டு முதல் நடப்பாண்டு வரை 6259 மனுக்கள் வரப்பெற்றன. அதில் 2959 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளது. மற்ற மனுக்கள் நிலுவையில் உள்ளன. குடும்ப பெண்கள் தங்களது பிரச்னைகளை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றால் மற்ற குடும்ப உறுப்பினர்கள் என்னை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுவிட்டாயா என கூறி மேலும் எதிரியாக நினைக்கின்றனர். இதனால் பெரும்பாலான வழக்குகளில் பிரிவு ஏற்படுகிறது.ஆனால், சமூகநலத் துறையில் வழங்கப்படும் புகார்களில் அதுபோல் பிரச்னை ஏற்படாமல் அனைவரும் நல்ல முறையில் ஒத்துழைப்பு தருகின்றனர். குடும்பப் பிரச்னை காரணமாக நீதிமன்றத்துக்கு வரும் பெண்களை அவர்களின் வழக்கறிஞர்கள் வாய்தா போட்டு அலைய வைக்காமல் விரைவில் குடும்ப வழக்குகளை முடிக்க துணை புரிய வேண்டும் என்றார்.இக்கூட்டத்தில் காவல் துறையினர், சமூகநலத் துறையினர் மற்றும் பல அதிகாரிகள் பங்கேற்றனர். இறுதியில் சமூகநலத் துறை சார்பில் பயனாளிகளுக்கு தையல் இயந்திரம், திருமண நிதியுதவித் தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சாரதி நன்றி கூறினார்.
கருத்துகள்

நான் 90களில் பெண்களுக்குத் தற்காப்புப்க்கலைப் பயிற்சியும் சிலம்பக்கலைப் பயிற்சியும் பயிற்சி முகாம்கள் மூலம் அளித்துள்ளேன். நல்ல பயன் இருந்ததாகப் பங்கேற்றோர் தெரிவித்துள்ளார்கள். மகளிர் ஆணையம் மாவட்டங்கள் தோறும் உள்ள மாவட்டக்கலை மன்றங்கள் மூலமாக இப்பயிற்சிகளை அளிக்கலாம். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
11/10/2010 2:37:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் * Tamil English