பேச்சு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பேச்சு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 7 அக்டோபர், 2013

நூறு நாள் வேலைத் திட்டம் தேவையா? - நம்மாழ்வார்

http://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_821070.jpg

நூறு நாள் வேலைத் திட்டம் தேவையா? வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் பேச்சு
காரைக்குடி : ""வறட்சி நிவாரணம் வழங்குவதை விட, வறட்சிக்கான காரணத்தை கண்டுபிடித்து நிவர்த்தி செய்ய வேண்டும்,'' என, இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் பேசினார்.

காரைக்குடியில் செந்தமிழர் பேரவை சார்பில் நடந்த உணவுத்திருவிழாவில், அவர் பேசியதாவது: கனிம வளங்களை, தோண்டி எடுப்பதுதான், அரசியல்வாதிகளின் மிகப்பெரிய தொண்டாக உள்ளது. இந்த நாடு நமக்கு உரியது என்று கொடி பிடிக்க வேண்டிய காலம், இது. வனம், பயிர், விதை, கால்நடை மட்டுமன்றி, உழைக்கக் கூடிய கரங்களையும், "நூறுநாள் வேலை திட்டம்' என்ற பெயரில் இழந்து நிற்கிறோம். "ஏசி' அறையில் உட்கார்ந்து கொண்டு, விவசாய திட்டங்களை திட்டமிட கூடாது. விவசாய மட்டத்திலிருந்து திட்டமிடல் வரவேண்டும்."பச்சை புரட்சி' என ஆங்கிலத்தில் எழுதி வைத்துள்ளனர். அதனால், விவசாயிக்கு பலன் இல்லை. ரஷ்யாவின் மடகாஸ்கரில், ஒரு ஏக்கருக்கு சராசரியாக 6 டன் நெல் விளைகிறது. நாம், 2 டன் எடுக்க சிரமப்படுகிறோம். முன்னோர்கள் மேற்கொண்ட, ஒற்றை நாற்று நடும் முறையை மேற்கொண்டால், விளைச்சலை பெருக்கலாம்; ஒற்றை நாற்று நடவு முறைதான், விஞ்ஞானிகள் கண்டுபிடித்ததாக கூறும் திருந்திய நெல் சாகுபடி.

பூமியை உயிரோட்டமாக வைக்க வேண்டும். அனுபவமே சிறந்த அறிவு. வறட்சி நிவாரணம், 31 மாவட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அதற்குரிய காரணத்தை கண்டுபிடித்து, நிவர்த்தி செய்ய வேண்டும். கருவேல மரங்களை அகற்றுவதற்கு நிதி ஒதுக்க வேண்டும். கண்மாய் வண்டல் மண்ணை, விவசாயிகள் எடுத்து பயன்படுத்த அனுமதி தரவேண்டும்இவ்வாறு பேசினார்.

சனி, 13 ஏப்ரல், 2013

இலங்கையின் வஞ்சகத்தை உணருங்கள்: இராமதாசு கண்டனம்

இலங்கையின் வஞ்சகத்தை இப்போதாவது உணருங்கள்: கோத்தபய இராசபட்ச பேச்சுக்கு இராமதாசு கண்டனம்

இலங்கை அதிபர் மஹிந்த ராஜபட்சவின் சகோதரர் கோத்தபய ராஜபட்சவின் இந்தியா குறித்த அவதூறுப் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பாமக நிறுவுனர் ராமதாஸ், இப்போதாவது இலங்கையை இந்தியா புரிந்துகொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,
இலங்கை பிரச்னையில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து அந்நாட்டின் பாதுகாப்புத் துறை செயலாளரும், அதிபர் ராஜபட்சவின் சகோதரருமான கோத்தபய ராஜபட்ச அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளைக் கூறியிருக்கிறார். அவரது குற்றச்சாற்றுக்கள் கடுமையாக கண்டிக்கத் தக்கவை.
இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரை நடத்தியதே இந்தியா தான் என்றும், இலங்கைப் போரை நிறுத்தும்படி உலக நாடுகளிடமிருந்து நெருக்கடி வந்த போதெல்லாம் அதை சமாளித்து இலங்கையை காப்பாற்றியது இந்தியா தான் என்றும் தான்  கோத்தபாய ராஜபக்சே இதுவரை கூறி வந்தார். ஆனால், இப்போது தனது நிலைப்பாட்டை தலைகீழாக மாற்றிக் கொண்டு இந்தியாவுக்கு எதிராக குற்றஞ்சாட்டத் தொடங்கியுள்ளார். இதற்குக் காரணம் இலங்கை அரசு தற்போது முழுக்க முழுக்க சீனா, பாகிஸ்தான் போன்ற இந்தியாவின் எதிரி நாடுகளின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிட்டது தான். சீனாவைக் காட்டி மிரட்டியே இந்தியாவிடம் காரியம் சாதித்துக் கொண்ட இலங்கை, இப்போது காரியம் முடிந்ததும் இந்தியாவை கைவிட்டு சீனாவிடம் தஞ்சம் அடைந்து விட்டது.
இலங்கை அரசு வெளிப்படையாகவே இந்தியாவுக்கு எதிராக செயல்படத் தொடங்கிவிட்ட போதிலும், இலங்கை எங்கள் நட்பு நாடு என்ற வசனத்தையே இந்தியா திரும்பத் திரும்ப கூறிவருகிறது. கோத்தபாய ராஜபக்சேவின் இந்தக் குற்றச்சாற்று குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் கட்சி, அந்த குற்றச்சாற்றுகளை மறுக்காமல், இலங்கையை நாங்கள் மிகவும் மதிக்கிறோம் என்று கூறியிருப்பதை பார்க்கும்போது இலங்கையை இந்தியா இன்னும் புரிந்து கொள்ளவில்லையோ? என்று தான் எண்ணத் தோன்றுகிறது. 1962-ஆம் ஆண்டு சீனா போரின் போதும், அதன் பின்னர் நடந்த பாகிஸ்தானுடனான போர்களின் போதும் இலங்கை அரசு இந்தியாவுக்கு ஆதரவாக இருக்கவில்லை.
இலங்கையை எந்தக் காலத்திலும் நம்பக்கூடாது என்று மத்திய அரசை தமிழகம் தொடர்ந்து வலியுறுத்தி வந்த போதிலும், இலங்கை தொடர்பான வெளியுறவுக் கொள்கையை இந்தியா மாற்றிக்கொள்ளவில்லை. மாறாக சீனா பக்கம் இலங்கை சாய்ந்து விடக்கூடாது என்பதற்காக கச்சத்தீவு போன்ற தமிழகத்தின் சொத்துக்களை இலங்கைக்கு மத்திய அரசு தாரை வார்த்தது. இப்போது இந்தியாவுக்கு எதிராக இலங்கை திரும்பியிருப்பதன் மூலம் அந்நாடு தொடர்பான இந்தியாவின் வெளியுறவுக்கொள்கை தோல்வியடைந்து விட்டது உறுதியாகிவிட்டது.
எனவே, இனியாவது இலங்கையின் வஞ்சகத்தை இந்தியா புரிந்து கொள்ள வேண்டும். அண்டை நாடு, நட்பு நாடு என்று கூறிக்கொண்டு இலங்கையின் தவறுகளுக்கு துணை போவதை விட வேண்டும். இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்ட கச்சத்தீவை திருமபப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழீழம் தான் இந்தியாவின் பாதுகாப்புக்கு உதவியாக இருக்கும் என்பதை உணர்ந்து, அதற்கேற்றவாறு இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை மத்திய அரசு மாற்றியமைக்க வேண்டும்.
- என்று கூறியுள்ளார்.

கருத்துகள்(2)

"இலங்கை விவகாரத்தில் இந்தியா தலையிட்ட 1988-ம் ஆண்டில் இந்தியாவில் பயிற்சி பெற்ற பயங்கரவாதிகள், மாலத்தீவு மீது தாக்குதல் நடத்தினர். இலங்கையில் பயங்கரவாதத்தை ஒழிப்பதில் இந்தியா பொறுப்புடன் செயல்படவில்லை.- கோத்தபய ராஜபட்ச". இவருக்கு போராடவீரர்களுக்கும், உண்மையான பயங்கரவாதி களுக்கும் வித்தியாசம் தெரியவில்லை. இலங்கை சுதந்திரம் பெற்றது 1948-ல். புலியிக்கம் தோன்றியது 1983-ல். 35 ஆண்டுக் காலமாக அறவழியில் நின்று போராடினார்கள்; பெளத்தமத்ததை சார்ந்த இலங்கைத் தலைவர்கள் முன் இந்த அறவழிக்கு எந்த மரியாதையுமில்லை. ஆயுதம் ஏந்தக் கூடிய நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டார்கள்; இவர்கள்தான் புலிகளைப் பார்த்து பயங்கரவாத இயக்கம் என்று சொல்கின்றார்கள்? ராஜீவ் கொலைக்குப் பின் தானே இந்த இயக்கம் பயங்கரவாத இயக்கம் என்று அறிவிக்கப்பட்டது. ராஜீவ் உயிரோடு இருந்தப் போதுதானே மாலத் தீவில் தாக்குதல் நடத்தப்பட்டது. பின்பு புலி இயக்கம் எப்படி அப்போது பயங்கரவாதியானார்கள்? புலியக்கம் தோன்றுவதற்கு முன்னும் பின்னும் இதே இலங்கை ஆகாயப் படை தமிழர்கள் வாழும் பகுதிகளில் குண்டுகளை வீசி எத்தனையோ தமிழர்களை கொன்று குவித்தார்களே! இது என்ன?
yes


செவ்வாய், 19 மார்ச், 2013

இந்திய இலங்கை - பாதுகாப்புத்துறைச் செயலர்கள் பேச்சு ஒத்திவைப்பு

இந்திய இலங்கை - பாதுகாப்புத்துறை ச் செயலர்கள் பேச்சு ஒத்திவைப்பு

புதுடில்லி: வரும் மார்ச் 23ம் தேதி நடக்கவிருந்து இந்திய இலங்கை பாதுகாப்புத்துறை செயலர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இலங்கைக்கு எதிரான போராட்டங்கள் வலுத்து வருவதையடுத்து, மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

வியாழன், 14 மார்ச், 2013

இந்தியைத் திணித்தால் எதிர்த்துப் போராடுவோம்: தில்லி- மேல்-சபையில் கனிமொழி பேச்சு

இந்தியைத் திணித்தால் எதிர்த்துப் போராடுவோம்:  தில்லி- மேல்-சபையில் கனிமொழி பேச்சு
இந்தியை திணித்தால் எதிர்த்து போராடுவோம்: டெல்லி மேல்-சபையில் கனிமொழி எம்.பி. பேச்சு
சென்னை, மார்ச்.14-
 
கனிமொழி எம்.பி. டெல்லி மேல்- சபையில்பேசியதாவது:-
 
நான் இந்த அவையில் எனது மொழியில் பேச வேண்டுமென்றால் முன்னதாகவே தகவல் தெரிவிக்க வேண்டும். அனுமதி பெற வேண்டும். எனது மொழியில், எனது பிரச்சினைகள் குறித்து பேசுவதற்கு பல முன்னேற்பாடுகளை செய்ய வேண்டியிருக்கிறது. என்றாவது ஒரு நாள், இப்போது உள்ள இந்த நடைமுறைகள் இல்லாமல் போகும் நிலை வரும் என்று நம்புகிறேன்.
 
இங்கே பேசிய ஒரு உறுப்பினர் மொழிக்கான போராட்டங்கள் அரசியல் தந்திரம் என்றும், பிரபலமாகுவதற்காக நடத்தப்பட்ட போராட்டம் என்றும் பேசினார். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைப் பற்றி நான் பேசுகையில் இது எந்த மொழிக்கும் எதிரானது அல்ல என்பதையும் நான் தெளிவுபடுத்திட விரும்புகிறேன். நாங்கள் விரும்பாதபோது இந்தியை எங்கள் மீது திணிக்க நடந்த முயற்சியைக் கண்டித்தே இந்தி எதிர்ப்பு போராட்டம் நடைபெற்றது.
 
தங்கள் மொழியையும், கலாச்சாரத்தையும் பண்பாட்டையும், தங்கள் அடையாளத்தையும் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக உயிரை மாய்த்துக்கொண்டார்கள். ஒரு உதாரணம் சொல்ல வேண்டுமென்றால், எனது தந்தையும், தி.மு.க. தலைவருமான கருணாநிதி தனது 14-வது வயதில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அவர் அரசியல்வாதி கிடையாது.
 
ஒரு சாதாரண மாணவன். தனக்கு ஒரு பிரகாசமான அரசியல் எதிர்காலம் இருக்கிறது என்பதோ, தமிழகத்துக்கே முதலமைச்சர் ஆகப்போகிறோம் என்பதோ, தேசிய அரசியலில் ஒரு முக்கியப்பங்கை வகிக்கப்போகிறோம் என்பதோ, அவருக்கு அப்போது தெரியாது. அவருக்கு ஜோதிடத்தில் நம்பிக்கையும் கிடையாது. அப்படிப்பட்ட தலைவர்களை நீங்கள் அவமானப்படுத்தக்கூடாது.
 
இது போன்ற போராட்டங்களில் அவர் எங்கள் அடையாளத்தை பாதுகாக்கவே இறங்கினார். அப்படிப்பட்ட தலைவர்களின் போராட்டங்களை அரசியல் தந்திரங்கள் என்று கூறுவது வருந்தத்தக்கது. இங்கே பேசியவர்கள் இந்தி பெருபான்மையானவர்கள் பேசும் மொழி ஆனால் சிறுபான்மையினர் எதிர்க்கிறார்கள் என்று கூறினார்கள்.
 
எங்களுக்கு இந்நாட்டில், இவ்வுலகில் பேசப்படும் அனைத்து மொழிகளும் எங்களுக்கு சம்மதமே ஆனால் இங்கே பேசியவர், இந்தி கற்காததால் நீங்கள் எதையோ இழந்து விட்டதாக உணரவில்லையா என்று கேட்டார். நான் இந்தி கற்கவில்லை. சிவா இந்தி கற்கவில்லை, இது போல பலர் இந்தி கற்கவில்லை.
 
இதனால்தான் நான் இந்த விவகாரத்தில் நிதி அமைச்சரைப் பற்றிப் பேச விரும்புகிறேன். இந்தி கற்காமல் ஒருவர் இந்நாட்டின் நிதி அமைச்சராகி சிறப்பாக செயல்பட முடியும்போது நாங்கள் எதை இழந்து விட்டோம். பெருந்தலைவர் காமராஜரையும் இந்த இடத்தில் நினைவுபடுத்த விரும்புகிறேன்.
 
காமராஜரும் இந்தி அறிந்தவர் அல்ல. இப்படி இருக்கையில் இந்தி கற்றே ஆக வேண்டும் என்று என்ன கட்டாயம்? இந்தி பேசத்தெரியாவிட்டால் அவர் இந்தியர் இல்லையா? உலகில் எத்தனையோ மொழிகள் பேசப்பட்டு வருகின்றன. அவை அனைத்தும் எனக்குத் தெரியாது. எனக்கு இரண்டு மொழிகள்தான் தெரியும்.
 
இதனால் நான் என்ன இழந்து விட்டேன்? ஒரு மொழி தெரியாத காரணத்தால் நான் இந்தியன் இல்லை என்று ஆகி விடுமா என்ன? இங்கே இந்தி தெரியாமல் இருப்பவர்களும் இந்தியர்கள் இல்லையா? நம்மை இணைக்கும் பாலமாக இருப்பது இந்தி மொழி மட்டுமா? பெரும்பான்மையினர் பேசும் மொழி என்பதாலேயே, சிறுபான்மையினர் மீது அதைத் திணிப்பது சரியல்ல.
 
இந்தியா என்பது பல்வேறு விஷயங்களை உள்ளடக்கியது. அதன் கலாச்சாரம், பண்பாடு போன்ற பல்வேறு அம்சங்கள் இந்தியாவை இணைத்து வைத்துள்ளது. ஒரு மொழி மட்டுமே அல்ல. திமுக சார்பாக இந்த அவைக்கு ஒன்றை உறுதியாக சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் எங்கள் மீது மொழி திணிக்கப்பட்டால் அதை எதிர்ப்போம்.
 
இவ்வாறு அவர் பேசினார். 

திங்கள், 31 டிசம்பர், 2012

திருடர்கள், ஊழல்வாதிகள் பதவிக்கு வரக்கூடாது:சகாயம்

திருடர்கள், ஊழல்வாதிகள் பதவிக்கு வரக்கூடாது:சகாயம் பேச்சு

சேலம்:""உத்திரமேரூர் கல்வெட்டில், மக்கள் பிரதிநிதிகளாக வருபவர்களுக்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும். அதற்கான தகுதி நிர்ணயம் குறித்த தகவலும், திருடர்கள், ஊழல்வாதிகள் பதவிக்கு வரவிடக்கூடாது. நேர்மையானவர்கள் மட்டுமே பதவிக்கு வரவேண்டும் என்பது பற்றியும், அதில் குறிப்பிடப்பட்டுள்ளது, அதுபோல் ஆட்சியாளர்கள் வரவேண்டும்,'' என,கோ ஆப்டெக்ஸ் மேலான் இயக்குனர் சகாயம் பேசினார்.

லஞ்ச, ஊழலற்ற சமுதாயம் என்ற தலைப்பில், சேலம் குஜராத்தி திருமண மண்டபத்தில், சிறப்பு கருத்தரங்கு நேற்று நடந்தது. கோ ஆப்டெக்ஸ் மேலாண் இயக்குனர் சகாயம் பேசியதாவது:ரத்தம் சிந்தி வாங்கிய தேசத்தில், லஞ்சமும், ஊழலும் பெருகி கிடக்கிறது. நாமக்கல் கலெக்டராக பணியாற்றியபோது, ராசிபுரத்தில் கல்லூரி விழாவுக்கு காரில் சென்று கொண்டிருந்தேன். அப்போது, முன்னால் இரு சக்கர வாகனத்தில் சென்ற, இரு வாலிபர்கள், அங்கும், இங்குமாக ஓடியபடி சென்றனர்.

அவர்களை மறித்து, என்னுடைய உதவியாளர்கள் சோதனை செய்தபோது, அவர்கள் மது அருந்தியிருந்ததும், லைசென்ஸ் இல்லாமல் வண்டி ஓட்டியதும் தெரியவந்தது. உடனடியாக அவர்களை எச்சரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டேன்.அப்போது, அதில் ஒரு வாலிபர், 100 ரூபாயை எடுத்து என்னுடைய கையில் கொடுத்தான். லஞ்சம் கொடுத்தால், தப்பித்து விடலாம் என்ற பழக்கத்தை, இந்த சமூகம் உருவாக்கியுள்ளது.

மூன்று ஆண்டுக்கு முன், அப்போதைய முதல்வருக்கு கடிதம் எழுதினேன். அதில், "நான் சரியாக வேலை செய்யவில்லையென்றால், என்னை பணி நீக்கம் செய்யுங்கள். ஜாதி, மத ரீதியாக யாருக்காவது உதவியிருந்தால் கைது செய்யுங்கள். 19 ஆண்டு காலத்தில், யாரிடமாவது, ஒரு ரூபாய் லஞ்சமாக பெற்றிருந்தால், தூக்கிலிடுங்கள்' என, கூறினேன். என்னுடைய இருக்கைக்கு பின்புறம், "லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர்' என்ற வாசகம் தான் இருக்கும்.

உத்திரமேரூர் கல்வெட்டில், அப்போதே, மக்கள் பிரதிநிதிகள் எப்படியிருக்க வேண்டும். அவருக்கு உண்டான தகுதிகள் என்னன்ன, திருடர்கள், ஊழல்வாதிகள் பதவிக்கு வரக்கூடாது. நேர்மையானவர்கள் மட்டுமே வரவேண்டும் என, கூறப்பட்டுள்ளது.ஊழல் நாடுகள் பட்டியலில், இந்தியா, 140வது இடத்தில் உள்ளது. இது, இந்தியாவுக்கு நேர்ந்த தேசிய அவமானம். அரசு பள்ளிகளில், முன்பு ஆய்வு செய்தபோது, அங்குள்ள மாணவர்களிடம், உன்னுடைய லட்சியம் என்னவென்று கேட்டால், சம்பாதித்து அரிசி வாங்க வேண்டும் என்கின்றனர். அந்த அளவுக்கு வறுமையின் பிடியில் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

லஞ்சத்தை ஒழிப்பதை பற்றி பேசுகின்றனர், ஆனால், பின்னர், அவர்களே லஞ்ச ஒழிப்பு போலீஸில் சிக்குகின்றனர். ஊழல், லஞ்சம் என்பது புற்றுநோய் போன்றது. அது தொற்றுநோயாக உருவெடுத்து, தேசத்தையே அழித்து விடும்.

தமிழகத்தில், கடந்த காலங்களில், 40 சதவீதம் இருந்த ஊழல், தற்போது, 80 சதவீதமாக உயர்ந்து விட்டது. கோவணம் தான், இன்றைய விவசாயியின் தேசிய அடையாளமாக மாறிவிட்டது. ஒவ்வொரு மாணவரும், லஞ்சம், ஊழலற்ற சமூகத்தை உருவாக்க வேண்டும் என, சபதம் ஏற்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.ஜெயராம் கல்லூரி தலைவர் ராஜேந்திரபிரசாத், கன்ஸ்யூமர் வாய்ஸ் பூபதி, ஐந்தாவது தூண் ராசமாணிக்கம் உள்பட பலர் பங்கேற்றனர்.

சனி, 29 டிசம்பர், 2012

ஐரோப்பா இருக்கும் வரை தமிழ்மொழி சாகாது: தமிழறிஞர் சிவப்பிள்ளை

ஐரோப்பா இருக்கும் வரை தமிழ்மொழி சாகாது: தமிழறிஞர் இங்கிலாந்து சிவப்பிள்ளை பேச்சு

சிதம்பரம்:சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நேற்று துவங்கிய 11வது உலக தமிழ் இணைய மாநாட்டை துணைவேந்தர் ராமநாதன் துவக்கி வைத்தார்.கணினி, இணையம் ஆகியவற்றில் தமிழின் பயன்பாடுகள், உலகில் தமிழும், தொழில் நுட்பமும் பல நாடுகளில் செய்துவரும் ஆராய்ச்சிகள் பயன்முறைகள் பலவற்றை உலக தமிழறிஞர்கள் கலந்தாய்வு செய்யவும், தமிழர்களிடையே பரப்பவும் 11வது உலக தமிழ் இணைய மாநாடு சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழக குமாராஜா முத்தையா அரங்கில் நேற்று துவங்கி வரும் 30ம் தேதி வரை நடக்கிறது.

மாநாட்டை துணைவேந்தர் ராமநாதன் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். மொழியியல் உயராய்வு மைய புல முதல்வர் கணேசன் வரவேற்றார். உத்தமம் அமைப்பின் தலைவர் மணிவண்ணன் தலைமை உரையாற்றினார்.இங்கிலாந்து சிவப்பிள்ளை, சிங்கப்பூர் மணியம், மலேஷியா இளந்தமிழ், இலங்கை சிவ அனுராஜ், ஆஸ்திரேலியா முகுந்த் ராமமூர்த்தி, இந்தியா ராமமூர்த்தி வாழ்த்திப் பேசினர்.

உலக நாடுகளில் இருந்த 100க்கும் மேற்பட்ட தமிழ் அறிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள் வருகை தந்துள்ளனர். கருத்தரங்கம், கண்காட்சி, மக்கள் கூடம் என மூன்று முனைகளில் மாநாடு நடக்கிறது. கண்காட்சி காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடக்கிறது. பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து பார்த்து பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.மாநாடு ஏற்பாடுகளை உத்தமம் அமைப்பின் தலைவர் மணிவண்ணன், கணித்தமிழ் சங்க தலைவர் வள்ளி ஆனந்தன் செய்துள்ளனர்.

தமிழறிஞர் இங்கிலாந்து சிவப்பிள்ளை பேச்சு: ஐரோப்பா இருக்கும் வரை தமிழ்மொழி சாகாது'' என இங்கிலாந்து சிவபிள்ளை பேசினார். சிதம்பரம் அண்ணாமலைப்பல்கலைக் கழகத்தில் நேற்று துவங்கிய உலகத்தமிழ் இணைய மாநாட்டில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தமிழறிஞர்கள் கருத்துரை வழங்கினர்.

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த சிவப்பிள்ளை பேசுகையில்,"ஐரோப்பா இருக்கும் வரை தமிழ் சாகாது. இணையதளத்தில் ஐரோப்பியா, அமெரிக்கா நாடுகளில் தமிழ் இரண்டாவது இடத்தில் உள்ளது. இங்கிலாந்தில் 326 மொழி பேசப்படுகிறது. அவற்றில் தமிழ்மொழியும் ஒன்று. அதே போன்று பயிற்சி மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்றாக உள்ளது' என்றார்.

மலேசியாவைச் சேர்ந்த இளந்தமிழ் பேசுகையில்," மலேசியாவில் 523 தமிழ் பள்ளிகள் உள்ளன. இதில் ஒரு லட்சத்து 3 ஆயிரம் மாணவர்கள் படிக்கின்றனர். அரசு சார்பில் நிதி உதவி அளிக்கும் 60 தமிழ் பள்ளிகளில் 20 ஆயிரம் பேர் தமிழ் தொழில்நுட்பம் படிக்கின்றனர். மலேசியாவில் மலையா, சீனம் பேசுகிறவர்கள் யாரும் அந்த மொழி சோறு போடுமா என கேட்பது இல்லை. ஆனால் அடிப்படையில் தமிழ் உணர்வு இல்லாதவர்கள், "தமிழ்' சோறு போடுமா என கேட்கின்றனர். பேசுவதற்கும், கருத்துரை நடத்துவதற்கும் தமிழ் தொழில் நுட்பம் தேவைப்படுகிறது' என்றார்.

இலங்கை சிவ அனுராஜ் பேசுகையில்,"உலகத்தில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதி தமிழ்நாட்டிற்கு அடுத்தது இலங்கை தான். உலகத்தமிழ் இணைய மாநாடு இன்னும் இலங்கையில் நடத்தப்படவில்லை. 2004, 2005ம் ஆண்டு உலக தமிழ் இணைய மாநாடு நடத்த முயற்சி எடுக்கப்பட்டது. அப்போது அமைச்சர் இறந்ததால் அந்த முயற்சி கைவிடப்பட்டது. தமிழிலே தொழில்நுட்பம் பெற வேண்டும் என தமிழ் ஈழ மக்கள் ஆர்வமாக உள்ளனர்' என்றார்.

இந்தியாவைச் சேர்ந்த ராமமூர்த்தி பேசுகையில்,"பத்து நாடுகளில் உலகத்தமிழ் இணைய மாநாடு நடத்தப்பட்டுள்ளது. அதில் ஏழு மாநாடு வெளிநாடுகளிலும், தமிழ்நாட்டில் மூன்று மாநாடுகள் அரசு உதவியுடன் நடந்துள்ளது. அரசிற்கு இணையாக அண்ணாமலைப் பல்கலைக் கழகம் உதவியுடன் இன்று சிதம்பரத்தில் உலகத்தமிழ் இணைய மாநாடு நடத்தப்படுவது பெருமையாக உள்ளது. மொழியியல் கணினி என்பது ஊடகம். அதை உள்ளடக்கமாக பார்க்கலாம். கணினி வழியாக தமிழ் தொழில்நுட்பம் உள்ளடக்கம் வளர்ந்தால் தமிழ் வளரும்' என்றார்.

உலகத் தமிழ் இணைய மாநாட்டில் 142 கட்டுரைகள் சமர்ப்பிப்பு: மாநாட்டில், வெளிநாட்டை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட கணினித்தமிழ் ஆய்வாளர்கள், தமிழ் அறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் கருத்துரை வழங்கினர்.பிற்பகல் மாநாட்டில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தமிழ் ஆய்வாளர்கள் 142 கட்டுரைகளை சமர்ப்பித்தனர். இதில் தொழில்நுட்பம் தொடர்பாக 48 கட்டுரைகளும், கல்வி தொடர்பாக 24 கட்டுரைகளும், பொதுவான தமிழ் கணினி சார்ந்த கட்டுரைகள் 70ம் அடங்கும்.
இன்று நிறைவு விழா:


உலகத் தமிழ் மாநாட்டின் 2ம் நாளான இன்று காலை தமிழ் ஆய்வாளர்கள் பேசுகின்றனர். பிற்பகல் நிறைவு விழா நடக்கிறது. அண்ணாமலை பல்கலைக்கழக பதிவாளர் மீனாட்சிசுந்தரம் தலைமையுரையாற்றுகிறார். மொழியில் உயராய்வு மைய புல முதல்வர் கணேசன் முன்னிலை வகிக்கிறார். அண்ணாமலை பல்கலைக்கழக தமிழியல்துறை பேராசிரிய
ர் அரங்க.பாரி வரவேற்கிறார்.சென்னை தமிழ் வளர்ச்சித்துறை இயக்குனர் சேகர், உலகத் தமிழ் சங்க தனி அலுவலர் பசும்பொன், கணித்தமிழ் சங்க தலைவர் வள்ளி ஆனந்தன், மைசூர் இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம் முன்னாள் தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி நடராஜ பிள்ளை ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.எஸ்.ஆர்.எம்., பல்கலைக்கழக துணைவேந்தர் பொன்னவைக்கோ நிறைவுரையாற்றுகிறார்.

செவ்வாய், 25 டிசம்பர், 2012

நிலை உயரும்போது பணிந்து நடக்க வேண்டும்: அறவாணன்

மனிதர்கள் நிலை உயரும்போது பணிந்து நடக்க வேண்டும்: முன்னாள் துணைவேந்தர் அறவாணன் பேச்சு

குறிச்சி: " வாழ்வின் நிலை உயரும்போது, மற்றவர்களிடம் பணிந்து நடக்க வேண்டும்,'' என, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையின் முன்னாள் துணைவேந்தர் அறவாணன் பேசினார். கோவை, ஈச்சனாரியில் உள்ள கற்பகம் பல்கலையில், "ஆர்' அனைத்திந்திய ஆராய்ச்சிக் கழகத்தின், எட்டாவது பன்னாட்டு கருத்தரங்கு, நேற்று முன்தினம் துவங்கியது. "உலகத் தர ஆராய்ச்சியை நோக்கி' எனும் தலைப்பில், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையின் முன்னாள் துணைவேந்தர் அறவாணன் பேசியதாவது: சர்வதேச அளவில், ஒரு ஆண்டில், ஒருவர், 2,000 பக்கங்களை படிக்கிறார், நம் நாட்டில், 30 பக்கங்களை மட்டுமே படிக்கும் பழக்கம் உள்ளது. புத்தகங்கள் படிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக, நம் மாநிலத்தில், வாசிப்போரின் எண்ணிக்கை மிக, மிக குறைவாக உள்ளது. கேரள மாநிலம், படித்தவர்களின் எண்ணிக்கையை அதிகளவு கொண்டுள்ளது. அங்கு சுகாதாரத்திலும் முதலிடத்தில் உள்ளனர். கொசுத் தொல்லை, பிரசவத்தின் போது பெண்கள் இறப்பது போன்றவையும் அங்கு குறைவு. இதற்கு முக்கிய காரணம், படிப்பறிவே. மனிதர்கள் தங்கள் வாழ்க்கையில் நிலை உயரும்போது, மற்றவர்களிடம் பணிந்து நடக்க வேண்டும். சர்வதேச அளவில், சிறந்த நூறு பேர் பட்டியலை, மைக்கேல் ஆர்ட் என்பவர் வெளியிட்டபோது, நம் தேசத்தின், தந்தை மகாத்மா காந்தியின் பெயர் இடம் பெறவில்லை. இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, "ஒருவரது கருத்துகளை பின்பற்றுவோர், அதனால் சமூகத்தில் ஏற்பட்ட பாதிப்பு, எத்தனை பேர் அவரது கருத்தை மேற்கோள் காட்டுகின்றனர் உள்ளிட்டவைகளை கருத்தில்கொண்டு, பட்டியல் தயாரிக்கப்பட்டது. அதில், காந்தியின் அகிம்சை கொள்கையை, அவரது நாட்டினரே பின்பற்றவில்லை. அதனால் தான் அவர் பெயர் இடம் பெறவில்லை' என, பதிலளித்தார்.
அதுபோல நாம், நல்ல கருத்துகளை பின்பற்றாமல் விட்டு விடுகிறோம். சமூகத்தில் பெண்களை முன்னிலைப்படுத்த வேண்டும். நம் நாட்டில், வலது கை பழக்கம் காணப்படுவதற்கு, பெண்களே முக்கிய காரணம். எவ்வாறு எனில், குழந்தை பிறந்தவுடன், தன் பணிகளை, வலது கையால் தான் பெண்கள் மேற்கொள்வர். அதற்கேற்ப, குழந்தையை, தன் இடது புறத்தில், இதயத்தின் அருகே தூக்கி வைத்துக் கொள்வர். குழந்தைக்கு, வெதுவெதுப்பான வெப்பமும் கிடைக்கும். இத்தகையை சூழலே பிற்காலத்தில், வலது கை பழக்கத்தை ஏற்படுத்துகிறது. வர்ணாஸ்ரம தர்மத்தின்படி, க்ஷத்ரியர்களுக்கு போர் புரியவும்; சூத்திரர்களுக்கு விவசாயமும்; பிராமணர்களுக்கு வேதங்கள் முழங்கவும், பணிகள் ஒதுக்கப்பட்டன. இதனால் நமக்கு, கல்வி என்பது, இல்லாத ஒன்றாகி விட்டது. அக்காலத்தில், கோட்டைகள் கட்டியதை விட, கோவில்கள் அதிகளவு கட்டப்பட்டன. 1567ம் ஆண்டு, தூத்துக்குடியில், புன்னைகோவில் எனும் இடத்தில், ஹென்ரிக் என்ற பாதிரியாரால், முதன் முதலில் பள்ளிக்கூடம் துவக்கப்பட்டது. அதுவரை, பள்ளிகளே கிடையாது. பண்டைய காலத்தில், ராணுவ பயிற்சி கட்டாயமாக இருந்தது. தற்போது, அம்முறை கிடையாது. ஆனால், மற்ற நாடுகளில், நடைமுறையில் உள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடுகளில், ஜப்பானுக்கு அடுத்து, சிங்கப்பூர், வளர்ந்த நாடாக உள்ளது. நம் ஆராய்ச்சிகள், மேம்பாட்டுக்கு துணையாக இருக்குமாறு மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு, முன்னாள் துணைவேந்தர் அறவாணன் பேசினார்
.

ஞாயிறு, 23 டிசம்பர், 2012

பாரதி, இராமானுசத்தை மாணவர்கள் நேசிக்க வேண்டும்: மயில்சாமி அண்ணாதுரை

பாரதி, இராமானுசத்தை மாணவர்கள் நேசிக்க வேண்டும்: மயில்சாமி அண்ணாதுரை பேச்சு




பாரதியார், கணித மேதை ராமானுஜம் ஆகியோரை மாணவ, மாணவிகள் நேசிக்க வேண்டும் என்று இஸ்ரோ நிறுவனத்தின் சந்திரயான் திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை கூறினார்.
ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் ஈரோட்டில் சனிக்கிழமை நடைபெற்ற ராமானுஜனின் 125-வது பிறந்த தின விழாவில் அவர் பேசியது:
பாரதியை விட பாரதி பற்றிய பாடல்களையும், காந்தியை விட காந்தியத்தையும், ராமானுஜத்தைவிட அவரது கணிதத்தையும், பெரியாரைவிட பகுத்தறிவையும் படிக்க வேண்டும். வரலாறு என்பது படிப்பதற்காக மட்டும் அல்ல. அதை படிப்பவர்கள் தங்களது வாழ்விலும் வரலாறு படைக்க வேண்டும். 
கணிதம் என்பது கசப்பானது அல்ல. வார்த்தைகளை கவிதைகளாக்குவது போல எண்களை கவிதைகளாக மாற்றத் தெரிந்தால் கணித மேதை ஆகலாம். எண்களின் கவிஞராக இருந்தவர் ராமானுஜம். 
கணிதத்தின் காதலன் ராமானுஜம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றின் மீது காதல் வரும். ராமானுஜத்துக்கு கணிதம் மீது காதல் வந்தது. ஒன்றின் மதிப்புக்கு பின்பு பூஜ்ஜியத்தை போட்டால் ஒன்றின் மதிப்பு அதிகமாகும்.
எண்ணும், எழுத்தும் நன்கு தெரிந்தால்தான் கல்வியில் முன்னேற முடியும். எண்ணுக்கு ராமானுஜரும், எழுத்துக்கு பாரதியும் தலைவராக இருந்து வருகின்றனர். எனவே, ராமானுஜத்தையும், பாரதியையும் மாணவ, மாணவிகள் நேசிக்க வேண்டும். எண்ணும், எழுத்தும் உள்ளவரை ராமானுஜமும், பாரதியும் வாழ்வார்கள்.
குறைந்த ஆண்டுகளே வாழ்ந்த இருவரது தனிப்பட்ட வாழ்வில் பல சோதனைகள் இருந்தன. ஆனால், அதையெல்லாம் மீறி இருவரும் சாதனை படைத்தனர். எனவே இளைஞர்கள் தன்னம்பிக்கையுடன் சாதிக்க வேண்டும் என்றார்.
விழாவையொட்டி ஈரோட்டின் கணித முன்னோடிகளான ஏ.பி.நாடார், யு.எஸ்.லட்சுமி நாராயணன், கே.வி.சுப்பிரமணியன் ஆகியோரின் திருவுருவப்படங்களை திருவுருவப்படங்களை மாவட்ட ஆட்சியர் வே.க.சண்முகம் திறந்துவைத்தார். ராமானுஜம் கைப்பட எழுதி அச்சிடப்பட்ட அரிய கணித நூல்கள், அறிவியல் நூல்கள் அடங்கிய சிறப்பு புத்தகக் கண்காட்சி நடைபெற்றது. இங்கு வைக்கப்பட்டிருந்த ராமானுஜனின் சிலையை  மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பார்வையிட்டன். விழாவில் மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன், செயலர் க.நா.பாலன், செயற்குழு உறுப்பின் டி.ராஜன உள்பட பலர் பங்கேற்றனர்.