திருடர்கள், ஊழல்வாதிகள் பதவிக்கு வரக்கூடாது:சகாயம் பேச்சு
சேலம்:""உத்திரமேரூர் கல்வெட்டில், மக்கள் பிரதிநிதிகளாக வருபவர்களுக்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும். அதற்கான தகுதி நிர்ணயம் குறித்த தகவலும், திருடர்கள், ஊழல்வாதிகள் பதவிக்கு வரவிடக்கூடாது. நேர்மையானவர்கள் மட்டுமே பதவிக்கு வரவேண்டும் என்பது பற்றியும், அதில் குறிப்பிடப்பட்டுள்ளது, அதுபோல் ஆட்சியாளர்கள் வரவேண்டும்,'' என,கோ ஆப்டெக்ஸ் மேலான் இயக்குனர் சகாயம் பேசினார்.
லஞ்ச, ஊழலற்ற சமுதாயம் என்ற தலைப்பில், சேலம் குஜராத்தி திருமண மண்டபத்தில், சிறப்பு கருத்தரங்கு நேற்று நடந்தது. கோ ஆப்டெக்ஸ் மேலாண் இயக்குனர் சகாயம் பேசியதாவது:ரத்தம் சிந்தி வாங்கிய தேசத்தில், லஞ்சமும், ஊழலும் பெருகி கிடக்கிறது. நாமக்கல் கலெக்டராக பணியாற்றியபோது, ராசிபுரத்தில் கல்லூரி விழாவுக்கு காரில் சென்று கொண்டிருந்தேன். அப்போது, முன்னால் இரு சக்கர வாகனத்தில் சென்ற, இரு வாலிபர்கள், அங்கும், இங்குமாக ஓடியபடி சென்றனர்.
அவர்களை மறித்து, என்னுடைய உதவியாளர்கள் சோதனை செய்தபோது, அவர்கள் மது அருந்தியிருந்ததும், லைசென்ஸ் இல்லாமல் வண்டி ஓட்டியதும் தெரியவந்தது. உடனடியாக அவர்களை எச்சரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டேன்.அப்போது, அதில் ஒரு வாலிபர், 100 ரூபாயை எடுத்து என்னுடைய கையில் கொடுத்தான். லஞ்சம் கொடுத்தால், தப்பித்து விடலாம் என்ற பழக்கத்தை, இந்த சமூகம் உருவாக்கியுள்ளது.
மூன்று ஆண்டுக்கு முன், அப்போதைய முதல்வருக்கு கடிதம் எழுதினேன். அதில், "நான் சரியாக வேலை செய்யவில்லையென்றால், என்னை பணி நீக்கம் செய்யுங்கள். ஜாதி, மத ரீதியாக யாருக்காவது உதவியிருந்தால் கைது செய்யுங்கள். 19 ஆண்டு காலத்தில், யாரிடமாவது, ஒரு ரூபாய் லஞ்சமாக பெற்றிருந்தால், தூக்கிலிடுங்கள்' என, கூறினேன். என்னுடைய இருக்கைக்கு பின்புறம், "லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர்' என்ற வாசகம் தான் இருக்கும்.
உத்திரமேரூர் கல்வெட்டில், அப்போதே, மக்கள் பிரதிநிதிகள் எப்படியிருக்க வேண்டும். அவருக்கு உண்டான தகுதிகள் என்னன்ன, திருடர்கள், ஊழல்வாதிகள் பதவிக்கு வரக்கூடாது. நேர்மையானவர்கள் மட்டுமே வரவேண்டும் என, கூறப்பட்டுள்ளது.ஊழல் நாடுகள் பட்டியலில், இந்தியா, 140வது இடத்தில் உள்ளது. இது, இந்தியாவுக்கு நேர்ந்த தேசிய அவமானம். அரசு பள்ளிகளில், முன்பு ஆய்வு செய்தபோது, அங்குள்ள மாணவர்களிடம், உன்னுடைய லட்சியம் என்னவென்று கேட்டால், சம்பாதித்து அரிசி வாங்க வேண்டும் என்கின்றனர். அந்த அளவுக்கு வறுமையின் பிடியில் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
லஞ்சத்தை ஒழிப்பதை பற்றி பேசுகின்றனர், ஆனால், பின்னர், அவர்களே லஞ்ச ஒழிப்பு போலீஸில் சிக்குகின்றனர். ஊழல், லஞ்சம் என்பது புற்றுநோய் போன்றது. அது தொற்றுநோயாக உருவெடுத்து, தேசத்தையே அழித்து விடும்.
தமிழகத்தில், கடந்த காலங்களில், 40 சதவீதம் இருந்த ஊழல், தற்போது, 80 சதவீதமாக உயர்ந்து விட்டது. கோவணம் தான், இன்றைய விவசாயியின் தேசிய அடையாளமாக மாறிவிட்டது. ஒவ்வொரு மாணவரும், லஞ்சம், ஊழலற்ற சமூகத்தை உருவாக்க வேண்டும் என, சபதம் ஏற்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.ஜெயராம் கல்லூரி தலைவர் ராஜேந்திரபிரசாத், கன்ஸ்யூமர் வாய்ஸ் பூபதி, ஐந்தாவது தூண் ராசமாணிக்கம் உள்பட பலர் பங்கேற்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக