எல்.முருகராசு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எல்.முருகராசு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 20 அக்டோபர், 2013

ஓவிய வடிவில் திருக்குறள் : ஓவியர் நடராசன்

http://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_830349.jpg

ஓவிய வடிவில் திருக்குறள் தந்துள்ள ஓவியர் நடராசன்
உலகின் மூத்த, இனிய, ஒப்புவமையற்ற மொழியான தமிழ் மொழியில் எண்ணற்ற காப்பியங்கள் இயற்றப்பட்டுள்ளன. இவைகளில் தனிச்சிறப்பு கொண்டது திருக்குறள்.
வாழ்க்கைக்கு தேவையான அறம், பொருள், இன்பம் ஆகிய முப்பாலையும் 1330 குறளில் வடித்திட்ட வள்ளுவனின் வார்த்தைகள் இன்றைய காலகட்டத்திற்கும் ஒத்துவருவதுதான் மிகப் பெரிய விஷயம்.
இதன் காரணமாகவே திருக்குறள் உலகின் பல்வேறு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு உலக பொதுமறையாக போற்றப்படுகிறது. இரண்டாயிரம் வருடங்களை தாண்டியும் இப்போதும் திருக்குறளுக்கு உரை பலரும் எழுதிக் கொண்டுதான் இருக்கின்றனர்.
ஆனால் ஒரே ஒருவர் மட்டும் 1330 குறளுக்கும் ஏற்ப ஓவியம் வரைந்துள்ளார்.
அவர் பெயர் நடராஜன், திருப்பூர் பக்கம் உள்ள நல்லூர் விஜயாபுரத்தில் குடியிருக்கும் இவர் ஒரு நல்லாசிரியர் விருது பெற்ற ஓவிய ஆசிரியராவார். இப்போது பணி ஓய்வு பெற்றுவிட்டாலும் ஓவியப்பணியில் இருந்து ஓய்வு பெறாமல் எப்போதும் தூரிகையும், கையுமாகவே இருப்பவர். பித்தன் சித்ர கூடம் அமைத்து இலவசமாக ஓவிய பயிற்சியளித்து வருபவர்.
சிறு வயது முதலே இயற்கை காட்சிகள், சாமி படங்கள், தேசிய தலைவர்கள், மனித நேயமிக்கவர்களை ஓவியங்களாக வரைந்தவர், யாரும் செய்திடாத ஒரு சாதனையை படைத்திட எண்ணினார்.
அப்போதுதான் இவரை பெரிதும் ஈர்த்திட்ட திருக்குறளை ஏன் ஓவியமாக வரைந்திடக்கூடாது என்று முடிவு செய்து களமிறங்கினார். ஒவ்வொரு குறளுக்கும் ஏ3 பேப்பரில் தத்ரூபமாக குறளுக்கு ஏற்ப ஓவியம் வரைய ஆரம்பித்தார்.
இது பற்றி ஓவியர் நடராஜன் கூறுகையில், "அதிகாலை மூன்று மணிக்கு ஓவியம் வரைய ஆரம்பித்தேன். குறளின் அர்த்தத்தை நன்றாக உள்வாங்கி அதே நேரத்தில் எளிமைப்படுத்தும் விதத்தில் வரைந்தேன். வரைந்தேன் என்பதை விட வள்ளுவரோடு ஓரு வருட காலத்திற்கு மேல் வாழ்ந்தேன் என்றே சொல்லலாம். அதிலும் 250 குறள் மட்டுமே உள்ள இன்பத்து பாலை வரையும்போது அதிகம் கவனம் எடுத்துக்கொண்டேன் காரணம் கோடு கொஞ்சம் மாறினாலும் தவறான அர்த்தத்தையும் கொடுத்து விடுமே. ஆனால் எல்லாம் நல்லபடியாகவே முடிந்தது, காரணம் முன்பே சொன்னது போல வள்ளுவர் துணை நின்றதால்'' என்று சந்தோஷத்துடன் குறிப்பிட்டார்.
அகர முதல எழுத்தெல்லாம் எனும் முதல் குறளில் துவங்கி 1330 குறளுக்கும் ஓவியம் வரைந்து முடித்திட்ட போது அது 13 தொகுதிகளை கொண்டிருந்தது. இதற்கு திருக்குறளோவிய மத நல்லிணக்க தேசிய ஒருமைப்பாட்டு ஓவியப்பேழை' என்ற தலைப்பிட்டுள்ளார்.
இந்த குறளோவிய பேழையை போட்டோ பிரின்ட் மூலமாக கையடக்க புத்தகமாகவும், சிடியாகவும் மாற்றி முதல்வர் மூலமாக வெளியிடும் முயற்சியில் இறங்கியுள்ளார். இந்த முயற்சி வெற்றி பெறுவதை அடுத்து பாரதியார் கவிதைகள் துவங்கி இனியவை நாற்பது வரையிலான பல்வேறு தமிழ இலக்கியங்களையும் ஓவியமாக படைத்திட எண்ணியுள்ளார்.
இவரது எண்ணமும், எழுத்தோவியமும் வெற்றி பெறட்டும்.
இவருடன் தொடர்பு கொள்ள: 
99762 55579, 0421-2375124.
குறளோவியங்களை பார்க்க சிவப்பு பட்டையில் உள்ள போட்டோ கேலரி பகுதியை கிளிக் செய்திடவும்.
- எல்.முருகராசு






வெள்ளி, 4 அக்டோபர், 2013

நெசவாளர் பானுமூர்த்திக்கு இலட்சத்தைவிட மகிழ்ச்சி

http://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_818663.jpg

நெசவாளர் பானுமூர்த்திக்கு இலட்சத்தைவிட மகிழ்ச்சி தருவது எது?


புதிய கண்டுபிடிப்புகளுக்கான முதல் பரிசை ப் பெறுபவர் வேலூர் மாவட்டம் ஆரணியை அடுத்துள்ள துருகம் பகுதியைச் சேர்ந்த நெசவாளி பானுமூர்த்தி என்று அறிவித்து ,ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கிய போது கோவை கொடீசியாவில் திரண்டிருந்த மொத்த கூட்டமும் எழுந்து நின்று ஆர்ப்பரித்து கைதட்டி மகிழ்ந்தது.
யார் இந்த பானுமூர்த்தி, இவரது கண்டுபிடிப்புதான் என்ன.?
கைத்தறி தொழிலும்,அந்த தொழிலில் ஈடுபட்டுள்ள நெசவாளர்களும் செழிப்புடன் காணப்படும் துருகம் பகுதியைச் சேர்ந்தவர் பானுமூர்த்தி. பத்தாவது படிக்கும்போது எதிர்பாராதவிதமாக இவரது தாய் இறந்துவிட, பெரியவன் என்ற முறையில் குடும்ப பாரத்தை தந்தையுடன் பகிர்ந்து கொள்ளும் பொருட்டு பதினான்கு வயதில் கைத்தறி தொழிலில் இறங்கினார்.
கொஞ்சம், கொஞ்சமாக இந்த தொழிலின் நுணுக்கத்தை கற்றுத் தேர்ந்தார். தறியில் நெய்த புடவைகளை கொண்டு போய் கொடுக்கப்போகும் போது, கொஞ்சம் புது டிசைனில் நெய்ய வேண்டும் ஆனா அது உங்களால முடியுமா? என்று சொல்லியிருக்கின்றனர். இவருக்கு "சுருக்'கென்று பட்டது . என்னால் நிச்சயமாக முடியும் என்று சொல்லி ஆர்டரை கேட்டு வாங்கி வந்து நெய்து கொடுத்துள்ளார். இதன் காரணமாக பாராட்டும், ஆர்டர்களும் குவிந்தன.
இதற்கு பிறகு மேலும் மேலும் தொழிலில் பல நுணுக்கங்களை கற்றவர் கடைசியாக ஒரு புதிய விஷயத்தை கண்டுபிடித்து இந்த கைத்தறி தொழிலில் புகுத்தினார்.
இந்த புதிய கண்டுபிடிப்பை தறியில் அமல்படுத்த சின்ன,சின்ன மாற்றங்கள் செய்தால் போதும், இதற்கு ஐநூறு ரூபாய் வரைமட்டுமே செலவாகும்.ஒரு அரைமணி நேர பயிற்சி வேண்டும். அவ்வளவுதான்.
இதன் மூலம் ஒருவர் இரண்டு மணிநேரம் நெய்வதை ஒரு மணி நேரத்தில் நெய்து விடலாம், இரண்டு ஆள் செய்வதை ஒரு ஆளே செய்துவிடலாம். நூலிழை கம்பிகளின் உறுதியும் ஐம்பது சதவீதம் அதிகரிக்கும். விருப்பப்பட்ட டிசைன்களை எளிதில் வடிவமைக்கலாம். குழந்தை தொழிலாளர் முறை அடியோடு ஒழியும்.
இந்த கண்டுபிடிப்பின் மூலம் இவரது தொழில் பெருகியது. இதன் மூலம் இவர் மட்டுமே பயன்பெற விரும்பவில்லை, மாறாக தான் சார்ந்த நெசவாள சமுதாயமே பயன்பெற வேண்டும் என்று விரும்பினார்.
ஆனால் பத்தாவது படிப்பைக்கூட தாண்டாத என்னால் இந்த கண்டுபிடிப்பை எப்படி வெளியே கொண்டு செல்வது என்று நினைத்த போதுதான், தினமலர் செய்தியை பார்த்த சேவா தொண்டு நிறுவன விவேகானந்தன் என்பவர் முயற்சியால், கோவை கொடீசியாவில் நடைபெறும் ஐ3 எக்ஸ்போவில் எனது கண்டுபிடிப்பை இடம் பெறச்செய்யும் வாய்ப்பை பெற்றேன் என்கிறார் பானுமூர்த்தி.
அவர் மேலும் பேசுகையில் நெசவு தொழிலை நேசித்து செய்பவர்கள் வாழ்க்கையில் என்றும் வளம்தான். என்னுடன் மகன் சீனிவாசன், மகள் வனிதா ஆகியோர் இந்த நெசவு தொழில் செய்துவருவதை பெருமையாக கருதுகிறேன். என் தந்தையும் குருவுமான லட்சுமணன் 83 வயது வரை நெசவு செய்து ஆரோக்யமாக இருந்தார் என்று சந்தோஷத்துடன் குறிப்பிட்டார்.
கோவையின் சுற்றுப்புற பகுதியில் நிறைய நெசவாளர்கள் இருக்கிறார்கள் அவர்களுக்கு நிச்சயம் இந்த கண்டுபிடிப்பு பயன்படும் என்ற நோக்கில்தான் நான் இங்கு அரங்கம் அமைத்தேன். கிட்டத்தட்ட ஐநூறு பேர் அரங்கம் அமைத்திருந்தும், சமுதாயத்திற்கு பயன்படக்கூடிய அருமையான கண்டுபிடிப்பு என்று, அறிஞர்கள் கூடி எனது கண்டுபிடிப்பை அங்கீகரித்து முதல் பரிசு வழங்கி கவுரவித்திருக்கிறார்கள், மிகவும் சந்தோஷமாக இருக்கிறது என்றவர், பரிசு பெறும் போது, " மேடையேறி பேசி பழக்கம் இல்லை இருந்தாலும் ஒரு வார்த்தை சொல்லிக் கொள்கிறேன், இந்த கண்டுபிடிப்பை கத்துக்கிட்டு ஓரு நூறு நெசவாளிகளாவது பயன் பெற்றார்கள் என்றால் அது இப்ப எனக்கு கிடைச்ச ஒரு லட்ச ரூபாய் பரிசைவிட மகிழ்ச்சிதரும்' என்றார்.
தனக்கு கிடைத்த பரிசு பணத்தை வைத்து தனது கண்டுபிடிப்பை எளிமையாக வீடியோ சி.டி போன்ற ஊடகங்கள் மூலமாக மக்களிடம் கொண்டு போக எண்ணியுள்ளார். நெய்யும் தொழிலை தெய்வமாக போற்றி அதில் தான் உயர்ந்தால் போதாது தன்னைப்போல பிறரும் உயர வேண்டும், வளர வேண்டும், நன்றாக வாழவேண்டும் என்று எண்ணம் கொண்டுள்ள அபூர்வ மனிதர் பானுமூர்த்தியுடன்
 தொடர்பு கொண்டு பேசுவதற்கான எண்: 
99944 66498.

- எல்.முருகராசு

திங்கள், 30 செப்டம்பர், 2013

கருணை உள்ளமே, கரும்பழுப்பு வடிவமே...

http://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_815326.jpg

கருணை உள்ளமே,காக்கி வடிவமே...

கோவையில் உள்ள அந்த மயானத்தில் ஒரு பிணம் புதைக்கப்படுகிறது, அந்த பிணத்தை புதைக்கும் தொழில் செய்யும் வெட்டியானை தவிர அந்த பிணத்தின் அருகில் இருந்தது ஒரே ஓருவர்தான், அவரும் உறவினரோ, நண்பரோ அல்ல. ஆனால் உறவினக்கும், நண்பருக்கும் மேலான சிரத்தை எடுத்து எல்லா "காரியங்களையும்' செய்துவிட்டு கிளம்புகிறார்.
இப்படி ஒன்றல்ல இரண்டல்ல இதுவரை முந்நூறுக்கும் அதிகமான ஆதரவற்ற பிணங்களுக்கு , ஆதரவாளனாக இருந்து கடைசிகால காரியங்களை செய்து வருகிறார்.
அவரது பெயர் சபரிராசு
தற்போது கோவை போத்தானூரில் உள்ள ரயில் நிலையத்தில் உள்ள காவல் நிலையத்தின் சிறப்பு உதவி ஆய்வாளராக இருந்து வருகிறார்.
இவரது வேலை காரணமாக பல்வேறு ஊர்களில் உள்ள ரயில் நிலையங்களில் கடந்த 28 வருடங்களாக காவலராகவும், தலைமைக் காவலராகவும் பணியாற்றி வந்துள்ளார்.
ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொள்பவர்களையும், அடிபட்டு இறப்பவர்களையும் உரியவர்களிடம் சேர்ப்பிக்க வேண்டும், ஆனால் இறந்தவர்களில் தொன்னூறு சதவீதம் பேர் கேட்பாரற்று இருப்பார்கள். இதன் காரணமாக இவர்களை நல்லடக்கம் செய்யவேண்டிய பொறுப்பு போலீசார் தலையிலே விழும்.
இதற்கான செலவு மற்றும் சிரமத்தை பகிர்ந்து கொள்ள ஆள்கிடைக்காத சூழ்நிலையில், நிலையத்தில் உள்ள காவலர்கள் நொந்து கொண்டே இந்த காரியங்களை செய்வார்கள். அதுவும் மயானத்தில் எல்லாம் முடிந்து அடக்கம் செய்யும் போது அடையாளம் காண்பதற்காக எட்டிப் பார்த்துவிட்டு வந்துவிடுவார்கள். இதுதான் ரயிலில் அடிபட்டு இறந்த பிணங்களை அடக்கம் செய்வதற்கான பொதுவான நடைமுறை.
ஒரு முறை இந்த பொறுப்பு சபரிராஜுவிடம் வந்தபோது, பாவம் இந்த உடலும் ஒரு உயிரைச் சுமந்திருந்த ஆத்மாதானே, அதற்கான மரியாதை தரவேண்டாமா? என யோசித்தவர், தானே இறந்த பிணத்தின் உறவாக மாறி எல்லா சிரமங்களையும், செலவுகளையும் ஏற்றுக் கொண்டு அந்திம காரியங்களை செய்தார். அப்போது அவருக்குள் ஏதோ ஒரு இனம்புரியாத ஒரு நல்ல காரியம் செய்த திருப்தி ஏற்பட்டது.
அதன்பிறகு இதே போல அடுத்தடுத்து பிணங்களுக்கும் இவரது மரியாதை தொடர்ந்தது, வேறு ஏதாவது ரயில் நிலையத்திலோ அல்லது வேறு ஒருவர் பொறுப்பில் இருக்கும்போது இந்த நிலை ஏற்பட்டாலும், "சபரிராஜிடம் சொல்லிவிடு அவர் இதை சரியாக செய்வார்' என்ற பெயர் ஏற்பட்டுவிட்டது. அந்த எண்ணிக்கைதான் இப்போது முன்னூறை தாண்டிச் சென்று கொண்டு இருக்கிறது.
இது இவரது ஒரு பக்கம் என்றால் இன்னோரு பக்கம் தேர்வுக்கு பயந்து, சினிமா மோகம் ஏற்பட்டு ரயிலேறி வரும் சிறுவர்கள், இளம் பெண்கள் பலரை சரியான அறிவுரை சொல்லி திரும்ப பெற்றோரிடம் ஒப்படைக்கும் பொறுப்பையும் செய்துவருகிறார். மேலும் வழிதவறி ரயிலில் வந்துவிடும் வயதானவர்களை உரியவர்களிடம் சேர்ப்பிப்பதும் இவரது இன்னொரு வேலையாகி விட்டது.
ஆனால் இதையெல்லாம் வேலையாகச் செய்வது இல்லை நமக்கு நல்லது செய்ய கிடைத்த வாய்ப்பு என்று விரும்பி செய்வார். கடந்த வாரம் எழுபத்தைந்து வயது மதிக்கத்தக்கவர் இவரிடம் வந்து சேர்ந்தார். பெயர் அருக்காணி என்று மட்டும் சொல்லத் தெரிந்தது. இவரை ஒரு ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு ஒரு வாரமாக பொறுமையாக அலைந்து திரிந்து அவரது உறவினர்களிடம் ஒப்படைத்தார். இந்த ஒரு வார காலத்திற்குள் தாய்-மகன் பாசம் ஏற்பட்டுவிட, அருக்காணி உறவினர்களிடம் போக மறுத்து, " உன்கூடவே இருந்துடேறேன்ம்பா'' என்று சபரிராஜின் கையை பிடித்து கெஞ்சியபோது இருவரின் கண்களிலும் கண்ணீர்.
காக்கி சட்டையை அணியும் போது கருணையை கழட்டி வைத்து விடும் காவலர்கள் மத்தியில் ,காக்கி சட்டையுடனும் கருணையையும் சேர்த்து அணிந்து கொண்டுள்ள சிறப்பு உதவி ஆய்வாளர் சபரிராஜ் உடன் பேசுவதற்கான எண்: 9843258339.

- எல்.முருகராசு,  

ஞாயிறு, 29 செப்டம்பர், 2013

குற்றாலம் சிததிரக்கூடத்தில் பேசும் சித்திரங்கள்...

குற்றாலம் சித்திரசபையில் பேசும் சித்திரங்கள்...


























குற்றாலத்தின் மெயினருவி போவதற்கான வளைவைத் தாண்டி ஐந்தருவி போகும் வழியில், தேர் நிலைக்கு பக்கத்தில் வலது பக்கத்தில் எந்தவித விளம்பர பலகையும் இல்லாமல் காணப்படுவதுதான் சித்ரசபை.
இந்த இடம் வாகனங்கள் நிறுத்துமிடமாக பயன்படுத்தப்படுவதால் வாகனங்கள் வந்து நின்றவுடன் "அவசரத்திற்கு' ஒதுங்கி இந்த சித்திரசபை கோவிலின் மதில் சுவரை கொஞ்சமும் மனசசாட்சி இல்லாமல் ஈரம் செய்பவர்கள், கொஞ்சம் ஈரமனதுடன் உள்ளே போய் என்னதான் இருக்கிறது என்று எட்டிப்பார்க்கலாம்.
இந்தியாவில் அமைந்துள்ள சிவாலயங்கள் ஐந்து திருச்சபைகளின் பெயரால் அழைக்கபடுகிறது.
சிதம்பரம் நடராசர் ஆலயம் "கனகசபை" என்றும்
திருவாலங்காடு சிவாலயம் "இரத்தினசபை" என்றும்
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயம் "வெள்ளிசபை" என்றும்
திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் "தாமிரசபை" என்றும்
குற்றாலம் குற்றாலநாதர் கோவில் "சித்திரசபை" என்றும் அழைக்கப்படுகிறது.
பொதுவாக கோவில்களில் விக்கிரஹ வழிபாடுதான் பிரதானமாக இருக்கும். ஆனால் சித்திர வடிவில் இறைவனை வழிபடுவது உலகிலேயே இங்கு மட்டும்தான். இங்கு இறைவன் ஓவியமாக காட்சியளிக்கிறார். பலவகை தாண்டவங்களில் ஒன்றாகிய திரிபுரதாண்டவம் இந்த சபையில் நடைபெற்றதாக திருப்பத்தூர் புராணம் கூறுகிறது.
சித்ரசபையில் நடராஜபெருமான் தேவியாருடன் எழுந்தருளியிருக்கிறார். மார்கழி மாதம் திருவாதிரை விழா இங்கு விமர்சையாக நடைபெறும். சபையில் இறைவன் திருநடனம் புரியும் காட்சியைக் கண்டு பிரம்மதேவன் ஆதி சிவனின் சொரூபங்களைச் சுவரில் எழுதிவைத்தார். இதனால் வியாசர் முதலியோர் இதனைச் சித்திரசபை என்று அழைத்ததாக புராணங்கள் கூறுகிறது.
சித்திர சபை, குற்றால நாதர் கோயிலுக்குப் அருகில் தனிக்கோயிலாக உள்ளது.
சபையின் உட்சுவற்றில் துர்க்கையின் பல்வேறு வடிவங்கள், வீரபத்திரர், கஜேந்திரமோட்சம், திருவிளையாடற்புராண வரலாறுகள், அறுபத்துமூவர் உருவங்கள், பத்மநாபரின் கிடந்தகோலம், இரணிய சம்ஹாரம், பைரவரின் பல்வேறு உருவங்கள், சனிபகவான் ஆகியவை வண்ணத்தில் எழுதப்பட்டுள்ளன. பல நூறு வருடங்களுக்கு முன் அழியாத மூலிகை வண்ணத்தில் வரையப்பட்ட இந்த சித்ரசபையின் கும்பாபிஷேகம் சமீபத்தில் நடந்திருப்பதால் இப்போது இன்னும் பொலிவு பெற்று விளங்குகிறது. இனிமேலாவது அந்தப்பக்கம் போனால் எட்டிப்பாருங்கள்.
- எல்.முருகராசு

ஞாயிறு, 22 செப்டம்பர், 2013

ஒளிப்படம் எடுப்பது குருதியோடு கலந்தது

புகைப்படம் எடுப்பது என் ரத்தத்தோடு கலந்தது.

http://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_809160.jpg



 
 
 
 
 
 
 
 
 
சத்சங்கி
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் 1944ம் ஆண்டில் பிறந்தவர், சிறுவயது முதலே புகைப்படத்தின் மீது ஆர்வம் கொண்டவர். 1961ம் ஆண்டு ஆக்பா அறிமுகம் செய்த பாக்ஸ் டைப் கேமிராவை பதினெட்டு ரூபாய் எழுபத்தைந்து பைசாவிற்கு வாங்கி தனது புகைப்பட வாழ்வைத்துவக்கியவர்.
என்ஜினியரிங் முடித்துவிட்டு வியாபாரத்தில் ஈடுபட்டு அதன் மூலம் பரபரப்பான வாழ்க்கை வாழ்ந்து முடித்தவர், தற்போது சென்னையில் தன் மனைவியுடன் அழகான ஒரு பிளாட்டில் புகைப்படமே வாழ்க்கை என வாழ்ந்து கொண்டு இருப்பவர்.
கடந்த 89ம் ஆண்டில் இருந்து சீரியஸ் புகைப்படக் கலைஞரானவர். வைல்டு லைப், லேண்ட்ஸ்கேப், மைக்ரோ, போர்ட்ரெய்ட் என்று புகைப்பட பிரிவின் அனைத்து பிரிவிலும் தனது முத்திரையை பதித்தவர்,
படம் எடுப்பதற்காக ஹாங்காங், மலேசியா, இந்தோனேசியா, கம்போடியா, ஆஸ்திரேலியா, அலஸ்கா, தான்சானியா, கென்யா, ஜாம்பியா, ஜிம்பாப்வே மற்றும் போஸ்வானா ஆகிய நாடுகளுக்கு போய்வந்தவர்.
புகைப்படம் தொடர்பான சர்வதேச போட்டிகளில் கலந்து கொள்பவர், இவரது படங்கள் பல முறை சர்வதேச பரிசுகள் பெற்றுள்ளது. அமெரிக்காவில் உள்ள 
போட்டோகிராபி அமைப்பு உலகம் முழுவதிலும் உள்ள சிறந்த புகைப்படக் கலைஞர்களின் படங்களை தொகுத்து புத்தகமாக வெளியிட்டுள்ளது. அந்த புத்தகத்தில் இவரது படமும் இடம் பெற்றுள்ளது என்பதே இவரது பெருமைக்கு சான்றாகும்.
நிக்கான் கேமிரா காதலரான இவர் ஒரே நேரத்தில் மூன்று கேமிராக்களையும், மூன்றுவித லென்சுகளையும் எடுத்துக்கொண்டு செல்வார்.
இவ்வளவு படங்கள் எடுத்தாலும் எந்த படங்களையும் காசாக்க நினைக்காதவர். தனது ஆத்ம திருப்திக்காக மட்டுமே எடுக்கக்கூடிய படங்களை பொதுமக்கள் பார்க்கவேண்டும், அவர்களும் புகைப்படம் எடுப்பதில் ஆர்வமாக முன்வரவேண்டும் என்று நினைப்பவர்.
இவரது படங்களை சிவப்பு பட்டையில் உள்ள போட்டோகேலரி பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.
இவருடன் தொடர்பு கொண்டு பேசுவதற்கான எண்: 9884039713
- எல்.முருகராசு


வெல்லப் பிறந்தவர்கள் நாம்

http://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_809104.jpg


நாம் ஜெயிக்கப் பிறந்தவர்கள்.
திருப்பூர் சின்னக்கரையில் உள்ள பார்க்ஸ் கல்லூரியின் அரங்கம் மாணவ, மாணவியரால் நிரம்பியிருந்தது. அமர்ந்திருந்த மாணவ, மாணவியர் ஒரு அற்புதமான பெண்மணியின் பேச்சைக் கேட்கப் போகும் ஆர்வத்துடனும், அமைதியுடனும் இருந்தனர். அவர்கள் எதிர்பார்த்த அந்த பெண் பேச்சாளரும் மேடைக்கு வந்தார். பதினைந்து நிமிடம் பேச நினைத்து வந்தவர் மாணவர்களின் ஆர்வத்தையும்,அமைதியையும் பார்த்துவிட்டு 45 நிமிடங்கள் பேசினார்.


எதுகை, மோனையுடனோ, இலக்கிய இலக்கணத்துடனோ, சவால் விடும் சரித்திர சான்றுகளுடனோ அவர் பேசவில்லை. சாதாரணமாக , ஆணித்தரமாக, மென்மையாக ஆனால் அழுத்தமாக சகோதர, சகோதரிகளிடம் பேசுவது போல பரிவுடன், பாசத்துடன் பேசினார்.


அவர் பேசினார் என்பதை விட கொஞ்சம், கொஞ்சமாய் கேட்பவர் மனதில் தன்னம்பிக்கை எனும் விதையை ஆழமாக விதைத்துக் கொண்டிருந்தார் என்றே சொல்லலாம். அவர் பேசப்பேச யார் இவர்? என்றறியும் ஆர்வம் இப்போது அரங்கில் இருந்த ஆசிரியர்களுக்கும் ஏற்பட்டது.


யார் இவர்?


காம்கேர் கே.புவனேசுவரி, எந்தவித பெரிய பின்னணியும் இல்லாமல் சுயம்புவாக முளைத்தவர், ஒழுக்கத்தையும், பண்பாட்டையும் உரமாக்கி வளர்ந்தவர், தான் சார்ந்த சமுதாயத்திற்கு ஏதாவது செய்யவேண்டும் என்று எப்போதும் எண்ணுபவர், இந்த எண்ணத்தினால் தனித்துவம் பெற்றவர்.
சென்னையில் உள்ள காம்கேர் சாப்ட் வேர் நிறுவனத்தின் சிஇஒ மற்றும் நிர்வாக இயக்குனர்.
கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக இந்தியா தொடர்பான திட்டங்களை மட்டுமே தன் நிறுவனத்தின் வாயிலாக தயாரித்து வெளியிட்டு வருபவர்.
சாப்ட்வேர் துறை வல்லுநர், கல்வியாளர், தொழில் ஆலோசகர், கிரியேடிவ் டைரக்டர், டாக்குமெண்டரி பிலிம் தயாரிப்பாளர், பதிப்பாளர், எழுத்தாளர் என்று இவரைப்பற்றி சொல்லிக் கொண்டே போகலாம். இருபதிலேயே அறுபதின் சாதனையை தொட்டவர்.
தன் நிறுவனத்தின் மூலமாகவும், தனது வாடிக்கையாள நிறுவனங்களின் மூலமாகவும் ஆயிரக்கணக்கானவர்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்கியவர்.


நம் நாட்டில் கம்ப்யூட்டர் பிரபலமாவதற்கு முன்பே தமிழையும், கம்ப்யூட்டரையும் இணைத்து சாப்ட்வேர் மற்றும் கம்ப்யூட்டர் தொடர்பான புத்தகங்கள் எழுதியவர். தமிழ் ஆர்வாலரான இவர் யாரும் எளிதில் புரிந்து கொள்ளும்படியாக கம்ப்யூட்டர் தொடர்பான பல புத்தகங்களை எழுதியவர், எழுதிக்கொண்டிருப்பவர்.
இவர் எழுதிய பல புத்தகங்கள் பல பல்கலைகழகங்களில் பாடபுத்தகங்களாக உள்ளன. கம்ப்யூட்டர் தொடர்பாக எழுபதற்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். இது தவிர பக்தி, இலக்கியம், சமூகம், கல்வி, குழந்தை இலக்கியம் ஆகிய தலைப்புகளிலும் எழுதி வருபவர்.


இவரது நிறுவனத்தின் மல்டி மீடியா தயாரிப்புகள் மற்றும் ஆவணபடங்களுக்கு ஸ்கிரிப்ட் ரைட்டர் இவரே. அனிமேஷனில் உருவாக்கிய கந்தர் சஷ்டியும், அனைத்து பதிகங்களையும் கொண்ட திருவாசக மல்டி மீடியா சி.டி.,யும் மக்களால் பெரிதும் விரும்பி வரவேற்கப்பட்டவையாகும்.
தனது பெற்றோர் பெயரிலான பத்ம கிருஷ் அறக்கட்டளை மூலமாக தொண்டு செய்து வருபவர். , தனது கொண்டாட்டங்கள் அனைத்தையும் ஆதரவில்லாத குழந்தைகளுடனும், மாற்றுத் திறனாளிகளுடனும் பகிர்ந்து கொள்பவர். ஒரு நாளைக்கு இருபத்து நான்கு மணி நேரம் போதாது என்று இருக்கக் கூடியவர், வளரும் சமுதாயம் இனிதாக மாறவேண்டும் என்ற அக்கறையுடன் கல்லூரிகளுக்கு சிறப்பு அழைப்பாளராக சென்று பேசிவருபவர்.


இவரைப்பற்றிய அறிமுகம்தான் இதுதான். அன்று அவர் பேசியதில் இருந்து சுருக்கமாய் சில குறிப்புகள். இந்த குறிப்புகள் அவர் மீது இன்னும் நேசம் கொள்ளச் செய்யும்.
திறமை என்பது பாட்டுப் பாடுவதும், படம் வரைவதும் மட்டுமல்ல எப்பொழுதும் சிரித்த முகத்தைக் கொண்டிருப்பது, தைரியமாக வாழ்வது, கடமை தவறாமல் இருப்பது , நட்பாய் பழகுவது, எந்த வேலையையும் நேசித்து செய்வது... இவை எல்லாம் கூட திறமைகள்தான். திறமை இல்லாத மனிதர்களே இந்த உலகத்தில் கிடையாது, நம்மிடம் உள்ள திறமைகளை நம் அனுபவத்தில் வெளிக்கொண்டு வருவதில்தான் வெற்றி இருக்கிறது. படிப்பு என்பது வேலைக்காகவும், பணம் சம்பாதிக்கவும் மட்டுமே என்கின்ற எண்ணத்தை மாற்றுங்கள், பெற்றோர்களே.. உங்கள் குழந்தைகளை படிக்க வைப்பதை முதலீடாக நினைக்காதீர்கள், ஐடி பீல்டு மட்டுமே வாழ்க்கையில்லை.


உங்கள் திறமையால் இந்த உலகை ஆள ஆயிரம் விஷயங்கள் கொட்டிக் கிடக்கின்றன, உங்கள் கோபம், சிடுசிடுப்பு,ஆவேசம், படபடப்பு போன்ற குணங்களை தூக்கிஎறிந்து பாருங்கள் பெரிய மாற்றம் ஏற்படும். டி.வி.,சீரியல்களில் பொழுதைக் கழிக்காமல் உண்மையான உலகத்தைக் காணவும், அனுபவம் பெறவும் வீட்டைத் தாண்டி வெளியே வாருங்கள். வெறும் படிப்பு மட்டும் போதாது உங்களைச்சுற்றி என்ன நடக்கிறது என்பதை உணர்ந்து அதற்கேற்ப உங்களை புதுப்பித்துக் கொண்டே இருக்கவேண்டும். அப்போதுதான் உலகம் வசப்படும். கனவு, கற்பனை, உழைப்போடு உங்கள் தொழிலை, வேலையை, படிப்பை நேசித்து செய்யுங்கள் வெற்றி நிச்சயம் இது என் ஆசிமட்டுமல்ல அனுபவ பூர்வமான உண்மையும் கூட. மேற்கண்டவாறு காம்கேர் கே.புவனேஸ்வரி பேசி முடித்த போது மீண்டும் அரங்கம் நிறைந்தது- இந்த முறை கைதட்டலால்.
காம்கேர் கே.புவனேசுவரியுடன் தொடர்பு கொள்ள எண்: 98842 80265.


எல்.முருகராசு,

செவ்வாய், 17 செப்டம்பர், 2013

விவிலியாவின் கருவூலங்கள்







சென்னையைச் சேர்ந்தவர் 
விவியா வாலண்டினா. 
எம்எஸ் பயோ டெக்னாலாஜி படித்துவிட்டு அமெரிக்காவில் கொஞ்ச நாள் வாசம், பின் தேசத்தின் மீதான நேசம் காரணமாக திரும்ப இங்கே வந்தவர் தற்போது சென்னையில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணியாற்றிவருகிறார். இவருக்கு ஓவிய கலையின் மீது அளவு கடந்த பற்றும் பாசமும் உண்டு. பள்ளி பருவத்திலேயே இதற்காக பல பரிசுகள் பெற்றுள்ளார். பின்னர் தனது ஓவிய திறமையை நிறையவே வளர்த்துக் கொண்டுள்ளார்.
ஓவியங்கள் ஒவ்வொன்றும் ஒருவித அற்புதமான அழகுடன் மிளிர்கிறது. லேண்ட்ஸ்கேப் வகை ஓவியங்கள் வரைவதில் தேர்ச்சி பெற்ற இவரின் கைவண்ணம் அது தொடர்பான அலைகள், கடற்கரை, பனிக்காடு போன்ற ஓவியங்களில் அழகாக வெளிப்பட்டுள்ளது.
அதே போல கறுப்பு வெள்ளையில் சிவப்பு வண்ண பின்னணியில் இவர் வரைந்துள்ள ஆண், பெண் ஓவியம் ஒரு காவியம் போல பல கதை சொல்கிறது. தண்ணீரில் அலைபாயும் பாய்மரப் படகின் ஓவியம் பார்ப்பவரின் மனதை சந்தோஷத்தில் அலைபாய வைக்கிறது. பசுமை நிறைந்த காட்டுக்குள் பாயும் தண்ணீர் நம்மை ஜில்லிட வைக்கிறது. இப்படி ஒவ்வொரு ஓவியமும் ஒரு உணர்வை நம்முள் உண்டாக்குகிறது என்றால் அது ஓவியரின் திறமையே.
இவரது ஓவிய கண்காட்சி சென்னை எக்மோர் மாண்டியத் சாலையில் உள்ள ஓட்டல் அம்பாசடர் பல்லவாவில் வருகின்ற செப்டம்பர் 30ம்தேதி வரை நடைபெற உள்ளது.
இவரது தொடர்பு எண்: 9789859717.
இவரது ஓவியங்களை சிவப்பு பட்டையில் உள்ள போட்டோ கேலரியை கிளிக் செய்து பார்க்கவும்.
- எல்.முருகராசு,

சனி, 14 செப்டம்பர், 2013

சக்கர நாற்காலியில் ,அருவினையாளர்


சக்கர நாற்காலியில் ஒரு சாதனையாளர்...

ஊன்றி நடக்கஉறுதி கொண்டால்ஒட்டடை நூல்கூடஊன்று கோல்தான்.


என்ற கவிதைக்குச் சாட்சியாக காட்சியளிப்பவர்தான் சூர்யா என்றழைக்கப்படும் அருள்மொழிவர்மன்


நடுங்கும் கைகளுடன் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி திணறி, திணறிப் பேசும் சூர்யாவாவிற்கு 23 வயதாகிறது.
இவரை நேரில் பார்ப்பவர்கள் இவரா இதையெல்லாம் செய்வது என்று நிச்சயம் ஆச்சர்யப்பட்டு போவார்கள்.


அப்படி சூர்யா என்னதான் செய்கிறார் கொஞ்சம் ஆரம்பத்தில் இருந்து தெரிந்து கொள்ளுங்களேன்.


பிறந்த 6 மாதத்திலேயே சூர்யா இயல்பானவன் இல்லை என்பது தெரிந்து விட்டது. முதுகுத் தண்டுவடப் பிரச்னை காரணமாக அவனது இடுப்புக்குக் கீழ் உள்ள பகுதி சரியாகச் செயல்படாது என்ற சூழ்நிலை.
செயல்படாத உடம்பின் பாகங்களுக்கும் சேர்த்து மூளை அபாரமாகச் செயல்பட்டது. இடதுகைப் பழக்கம் காரணமாக, இடக்கையில் எடுத்துச் சாப்பிடுவதைக் கவனித்த தாத்தா, சாப்பிடுவதையாவது வலது கையில் செய்யக் கூடாதா? என்று கேட்டதும், சற்றும் தயங்காமல், “கடவுள் எனக்கு வலது கையை இந்தப் பக்கம் வச்சுட்டான் தாத்தா”, என்று சொன்ன போது சூரியாவுக்கு வயது 3 தான். இப்படி அறிவான சூர்யாவை சென்னையில் உள்ள சிறப்பு பள்ளியில் பெற்றோர் படிக்க வைத்தனர். சூர்யாவும் இங்கு சிறப்பாக படித்தான்.


நான்காம் வகுப்புப் படிக்கும் போது இன்னொரு கடுமையான சோதனை,‘வாக்கரின்’ உதவியோடு நடந்து கொண்டிருந்த சூர்யாவை விளையாடிக் கொண்டிருந்த வேறு சில சிறுவர்கள் தெரியாமல் தள்ளிவிட்டதில் சூர்யாவிற்குத் தலையில் பலத்த அடி. உடனடியாக மருத்துவமனைக்குத் தூக்கிக்கொண்டு சென்றனர். சிகிச்சையளித்த மருத்துவர்கள், சூர்யா இனிமேல் ‘வாக்கர்’ வைத்தும் நடக்கமுடியாது ‘வீல்சேரில்தான்’ நடமாட முடியும், இதுவரை இயங்கி வந்த கைகளும் வழக்கம் போல இயங்காது, ஒருவித நடுக்கத்துடன்தான் செயல்படும், பேசும்போது வார்த்தைகள் ரொம்பவே திக்கும், என்று சொல்லிவிட்டனர். இந்த வேதனையை எல்லாம்கூடத் தாங்கிக் கொண்ட சூரியாவால் பள்ளியில் படிப்பைத் தொடரமுடியாது என்ற வேதனையைத்தான் தாங்கமுடியவில்லை.
வீட்டிலிருந்தபடியே படிக்க ஆரம்பித்தான். தனது அண்ணனின் கம்ப்யூட்ரைப் பொழுது போக்காக இயக்க ஆரம்பித்தான். நடுங்கும் தனது கைகளைக் கொஞ்சமாவாது நிலையாக நிறுத்த அது ஒரு பயிற்சியாக இருந்தது; அண்ணனும் தனக்குத் தெரிந்ததைத் தம்பிக்கு ஆர்வமுடன் கற்றுக் கொடுத்தார். கம்ப்யூட்டரே தனக்கான வடிகால் என்று சூர்யா எடுத்துக் கொண்டதும் அதில் முழுமூச்சாக இறங்கிவிட்டான்.


கம்ப்யூட்டரை ஆராய்ந்து, ஆராய்ந்து இத்தனை வருடங்களில் அதில் தேர்ந்து விட்ட சூர்யா இப்போது அகில இந்திய அளவில் செயல்படக்கூடிய பெரிய சிறிய நிறுவனங்களின் வெப் டிசைனர் ஆவார்.
நிறுவனங்கள் பெரியதோ, சிறியதோ தம்மைப் பற்றி வெளியில் சொல்ல ஒரு வெப் சைட் அவசியம் தேவை, அந்த வெப்சைட் பார்ப்பவர்களை ஈர்க்கும்படியாக இருக்க வேண்டும், எல்லாவிதத் தகவல்களையும் சுவாரசியமாகச் சொல்ல வேண்டும்.
இப்படி ஒரு வெப் சைட்டை உருவாக்கித் தருவதுடன், அனிமேசன் மற்றும் ஆடியோ வீடியோ எடிட்டிங் போன்ற அருமையான புத்திசாலித்தனமான துறைகளிலும் ‘ஒன்மேன்ஆர்மியாக’ சூர்யா தற்போது சாதித்து வருகிறார்.


புகழ் பெற்ற திருமண அழைப்பிதழ்கள் தயாரிக்கும் நிறுவனமான MENAKA CARDS PVT LTD,NORTH EASTERN MARITIMES SERVICE PVT.LTD,BUDGET FURNITURE,IMPERIAL INFOTECH,VARNA உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் வெப் சைட்கள் இவர் டிசைன் செய்தவைதான்.
சூர்யாவின் தந்தை காவல்துறையின் கைரேகைப் பிரிவில் இன்ஸ்பெக்டராக சென்னையில் இருந்தவர். பணி ஒய்வுக்குப் பிறகு குடும்பத்துடன் பொள்ளாச்சி சென்றுவிட்டார். சூர்யா தற்போது பொள்ளாச்சியில் இருந்து கொண்டுதான் இயங்கிக் கொண்டு இருக்கிறார். தந்தை பாலகுருசாமி, தாயார் தேன்மொழி, அண்ணன் நாகசுந்தரம், அண்ணி மதுமதி ஆகியோர், ‘எப்படியும் நம்ம சூர்யா நாலுபேர் பாராட்டும்படி வருவான்’ என்ற நம்பிக்கையுடன் அன்பையும், பாசத்தையும் வற்றாது வழங்கி வருகின்றனர்.


அவர்களது நம்பிக்கைக்கு ஏற்ப, பல இரவுகளைப் பகலாக்கிக் கடுமையாக உழைத்து, நல்லதொரு வெப் டிசைனராக வளர்ந்து வரும் சூர்யா தனக்கு உற்றுழி உதவிய பக்கத்து வீட்டு அண்ணன்கள் சதீஷ், காளிராஜ் , மற்றும் பல நண்பர்களையும் உறவினர்களையும் மிகுந்த நன்றியோடு நினைவு கூறுகிறார்.
இவ்வளவு திறமையா என்று இவரது வெப் டிசைனைப் பார்த்தவர்கள் பாராட்டுகின்றனர்.


ஆனால், சூர்யாவின் அணுகுமுறை வேறாக இருக்கிறது; என்னைப் பார்த்து என் மீது இரக்கப்பட்டு வரும் வாய்ப்புகள் எனக்கு வேண்டாம்; என் திறமையை, என் கற்பனையை, என் தொழிலை மட்டும் பாருங்கள்; பின் உங்கள் நிறுவனத்தின் வெப் சைட்டை டிசைன் செய்ய எனக்கொரு வாய்ப்புத் தாருங்கள்; அது போதும் என்று சொல்லும் சூர்யாவின் ஆற்றலை அறிய, கிரியேடிவ் இ ஸ்டுடியோ.காம் (creative E studio.com) என்ற வலைதளத்துக்குச் செல்லவும்.
அவரது அலைபேசி எண்: 9790741542.


- எல்.முருகராசு,

ஞாயிறு, 8 செப்டம்பர், 2013

காளியாட்டக்கலைஞர் முத்துக்குமார்

http://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_798092.jpg













காளியாட்டக்கலைஞர் முத்துக்குமார்

தேசபக்தி, ஒருமைப்பாடு, கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றை வெளிப்படுத்தி வந்த கிராமியக் கலைகள் தற்போது மேற்கத்திய கலாச்சாரத்தினாலும், சினிமா மோகத்தினாலும் மங்கி வருகிறது, ஆனாலும் நமது கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் பொக்கிஷம் போன்ற நாட்டுப்புறக் கலைகள் முற்றிலும் மறைந்துவிடாமல் காப்பாற்றிவரும் ஊரகக் கலைஞர்களில் ஒருவர்தான் சா.முத்துக்குமார்.
திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தற்போது திருச்சி துறையூர் பகுதியை வசிப்பவர் . காளியாட்டக்கலைஞர் முத்துக்குமார் என்றால் சின்ன பிள்ளைகூட அவரை அடையாளம் காட்டும்,


அந்த அளவிற்கு இந்த காளியாட்டக்கலையில் இருபத்தைந்து வருட அனுபவங்களைக் கொண்டுள்ள இவர் இதற்காகவே தான் பார்த்து வந்த போக்குவரத்துக்கழக வேலையையே தூக்கிப் போட்டவர்.


சிறுவயது முதலே நாட்டியத்தில் ஈடுபாடு கொண்டவர் முதலில் கவனம் செலுத்தியது பரதநாட்டியத்தில்தான், பின் ஒரு முறை காளியாட்டத்தை பார்த்தது முதலே அதில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.


காளியாட்டம் என்பது இருப்பதிலேயே சிரமமான ஆட்டமாகும். எட்டு கைகள் மற்றும் உடைகள் அலங்காரங்கள், ஆபரணங்கள் என்று சுமார் பத்து கிலோ எடையை தூக்கிக் கொண்டு ஆட வேண்டும். மூன்று மணி நேரத்திற்கு முன்பாகவே மேக்கப் போட்டுக் கொள்ள ஆரம்பிக்க வேண்டும், ஆடி முடித்த பிறகு மேக்கப்பை கலைக்கவும் இரண்டு மணி நேரமாகும். கண்களுக்கு மேல் கண்மலர் என்ற கண்ணைப்போன்ற வடிவம் கொண்ட இரும்புத் தகடை பொருத்திக் கொள்வோம், இதில் உள்ள ஒரு சிறு ஓட்டையின் மூலம் கிடைக்கும் எழுபது சதவீத பார்வையை வைத்துதான் அரங்கம் முழுவதும் ஆவேசமாக நடனமாடுவோம். எவ்வளவோ பேரை மகிழ்ச்சிபடுத்த நமக்கு கிடைத்த வாய்ப்பு என்று எடுத்துக்கொள்ளும் போது எல்லாம் எளிதாகி விடுகிறது.
இந்த நடனம் என்னை பல்வேறு வெளிநாடுகளுக்கு அழைத்துச் சென்றுள்ளது, கலைமாமணி விருதினை பெற்றுத் தந்துள்ளது. இப்படி பல்வேறு சிறப்புகளை கொண்டுள்ள காளியாட்டத்தை இன்னும் பல தலைமுறைகளுக்கு கொண்டு செல்ல விரும்புகிறேன்.
காளியாட்டக்கலைஞர் முத்துக்குமாருடன் தொடர்பு கொள்ள: 9942533228.
- எல்.முருகராசு

ஞாயிறு, 1 செப்டம்பர், 2013

இலடாக்கின் மறுபக்கம்...

http://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_79290420130831194252.jpg 
இலடாக்கின் மறுபக்கம்...


இலடாக்
நம் நாட்டின் வடக்கு எல்லையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்குட்பட்ட தனி மாவட்டமாக விளங்குகிறது.
சீனாவின் ஊடுருவல் காரணமாக கடந்த மாதம் முழுவதும் நம் ஆட்சியாளர்களுக்கு தலைவலியை ஏற்படுத்திய மலைப்பிரதேசம்.இந்தியா- பாக்.,கிற்கு இடையே நடைபெற்ற பல போர்களிலும், 1962ல் நடைபெற்ற சீனா போரின்போதும் முக்கிய பங்கு வகித்த பூமியாகும்.
மாவட்ட தலைநகரான லே மற்றும் கார்கில் ராணுவ மண்டலமாக அறியப்பட்டுள்ளது
காஷ்மீர் மாநிலத்தின் உயர்ந்த பீடபூமியாகும். (உயரம் சுமார் 9,800 அடி)
இந்தோ ஆரியர் மற்றும் தொல்குடி திபேத்திய வம்சத்தினர் இங்கு வாழ்கின்றனர், இவர்கள் பேசும் மொழி திபேத்திய மொழியாகும்.
விவசாயம் தவிர்த்து இங்கு சுற்றுலாதான் பிரதானமாக கருதப்படுகிறது. மலையேற்றம், ஆற்றுப்பயணம், பனிச்சறுக்கு போன்ற சாகச விளையாட்டுகளுக்காக நிறைய பேர் உலகம் முழுவதும் இருந்து இங்கு வருகின்றனர்.
வருடத்திற்கு சுமார் 30 ஆயிரம் சுற்றுலா பயணிகள் இங்கு வருகை தருகின்றனர். ஜூன் முதல் அக்டோபர் வரை அருமையான சீசனாகும்.
நீண்ட மலைத்தொடரின் அழகை காணவும், சாகச பயணங்கள் செய்யவும் வரக்கூடிய பயணிகள் கூடுதலாக இங்குள்ள ஷேய்மடம், சாந்தி ஸ்தூபம் போன்ற இடங்களை பார்த்துவிட்டு பின் இங்குள்ள புகழ் பெற்ற காட்டெருதுகளுடன் படம் எடுத்துக் கொண்டு திரும்பி விடுகின்றனர்.
இங்கு கறுப்பு கழுத்து கொக்கு, குள்ள வாத்து, பனிக்காக்கை, சிவப்பு அலகுள்ள காக்கை, நீல ஆடு, திபேத்திய காட்டு கழுதை, மறிமான், மற்றும் பனிச்சிறுத்தை என்று சுமார் 225 உயிரினங்கள் உள்ளன என்பது பலருக்கும் தெரியாத ஒன்றாகும்.
உண்மையில் இது "வைல்டு லைப் போட்டோகிராபிக்கு' ஏற்ற ஊராகும். இதன் காரணமாக இங்கு சென்ற சென்னை புகைப்படக் கலைஞர்கள் அடங்கிய குழுவில் இடம் பெற்றிருந்த வைல்டு லைப் போட்டோகிராபர் ரமணன் பத்மநாபன் தனது கேமிராவில் பதிவு செய்து வந்துள்ள படங்களை நமக்கு வழங்கியுள்ளார்.
அந்த படங்களை பார்க்க சிவப்பு பட்டையில் போட்டோ கேலரி என்ற பகுதியை கிளிக் செய்யவும்.
- எல்.முருகராசு