வேளாண்மை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வேளாண்மை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 8 ஜூன், 2013

அழிவுப் பாதையில் வேளாண்மை!

அழிவுப் பாதையில்  வேளாண்மை!
விவசாயத்தின் அழிவு மற்றும் அவல நிலையை சொல்லும், வேளாண் பொருளாதார வல்லுனரும், கோவை, வேளாண் பல்கலையின், முன்னாள் துணை வேந்தருமான இராமசாமி: தற்போது, அமெரிக்காவின் கார்வெல் விவசாய பல்கலை கழகத்தின் ஆலோ சகராகவும் பணியாற்றி வருகிறேன். கடந்த, 2001 முதல், 2011 வரை, 8.67 லட்சம் பேர், விவசாய தொழிலை விட்டு, நகரத்திற்கு குடிபெயர்ந்ததாக, தமிழக மக்கள் தொகை கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. விவசாயிகள் வெளியேறுவதால், விவசாயமும் சேர்ந்தே வெளியேறி, அழிவுப் பாதையில் செல்கிறது. செலவு இல்லாத பாரம்பரிய விவசாயம் செய்தவனை, பசுமை புரட்சி என்ற பெயரில், பணக்கார நாடுகளின் வேளாண் முறைகள், செலவை அதிகரித்து கடனாளியாக மாற்றியது. 1970களில் நான்கு மூட்டை நெல்லை விற்று, ஒரு சவரன் தங்கம் வாங்கிய விவசாயி, இன்று, ஒரு நெல் மூட்டையை, 1,000 ரூபாய்க்கு விற்க முடியாத நிலை உள்ளது. இதனால், 40 வயதிற்கும் கீழ் உள்ள இன்றைய தலைமுறையினர், படித்த பின் விவசாயத்தை தவிர்த்து, நிரந்தர ஊதியம் கிடைக்கும் பணிகளுக்கு செல்கின்றனர்.
பல்லாயிரக்கணக்கில் இருந்த விவசாய நிலங்கள், கல்லூரிகளாகவும், தொழிற்சாலைகளாகவும் உருமாறி விட்டன. முப்போகம் விளைந்த பூமியில், ரியல் எஸ்டேட்காரர்களின் கலர் கொடிகள் பறப்பதால், வாழ்வாதாரத்திற்கு கைகொடுத்து வந்த, கால்நடைகள் மேய்வதற்கும் இடமின்றி போய் விட்டது. விவசாயம் செய்வதை விட, கூலியாக இருப்பது நிரந்தர வருமானம் தரும் என்ற கீழ் நிலைக்கு, விவசாயிகள் தள்ளப்பட்டனர். ஆட்கள் பற்றாக்குறையை நீக்க, சிறு சிறு வேளாண் கருவிகளை உருவாக்க வேண்டும். துண்டு நிலங்களை ஒன்றாக்கி, பல ஏக் கரில் ஒரே பயிர் சாகுபடியை நடைமுறைபடுத்த வேண்டும். விவசாய விளை பொருட்களுக்கான குளிர்பதன சேமிப்பு கிடங்குகளை, கிராமங்கள் தோறும் அமைத்து, பாரம்பரிய விவசாயத்தை நவீன முறையில் மேற்கொள்ள, விவசாயிகளுக்கு ஊக்கம் கொடுத்து, அழிவு பாதையில்
உள்ள விவசாயத்தை காப்பாற்ற வேண்டும்

புதன், 17 ஏப்ரல், 2013

முள் இல்லா மூங்கில்!








முள் இல்லா மூங்கில்!

வழுவழுப்பான, முற்கள் இல்லாத மூங்கிலைக் கண்டுபிடித்த விவசாய விஞ்ஞானி, பாரதி: நான், ஓசூரைச் சேர்ந்தவன். 15 ஆண்டுகளுக்கு முன், குரோமோர் பயோடெக் எனும் திசுவளர்ப்பு ஆராய்ச்சி நிலையத்தை நிறுவி, கரும்பு, வாழை, சவுக்கு, பூச்செடிகள் போன்றவற்றில், நல்ல மகசூல் தரும் புது ரகங்களை கண்டுபிடித்து, விவசாயிகளுக்கு கொடுத்து வந்தேன். இதுவரை, 60 வகையான புதுரக நாற்றுகளை, திசு வளர்ப்பு முறையில் உருவாக்கியுள்ளேன்.தொடர்ந்து, 10 ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து, முள் இல்லாத பீமா என்ற, புதுரக மூங்கிலை கண்டுபிடித்தேன். இது, வீடுகள் கட்டவும், பர்னிச்சர்கள் செய்யவும், ஊதுபத்திக் குச்சிகள் தயாரிக்கவும், இதில் உள்ள பஞ்சு மூலம் ஆடை நெய்யவும் பயன்படுவதால், இதற்கான சந்தை வாய்ப்புகள் அதிகம்.இவ்வகை மூங்கில், ஒரு ஏக்கருக்கு, 40 முதல், 50 டன் வரை விளைச்சல் தருவதோடு, முள் இல்லாமல், வழுவழுப்பாக இருக்கும். மற்ற ரகங்கள் ஏக்கருக்கு, 200 கன்றுகளை மட்டுமே நட்டு, ஐந்து ஆண்டுகளுக்கு பின்னரே வெட்டி விற்க முடியும். ஆனால், பீமாவில் ஏக்கருக்கு, 1,000 கன்றுகள் வரை நட்டு, இரண்டு ஆண்டுகளிலேயே மூங்கிலை வெட்டி, லாபத்தை ஈட்டலாம்.கிருஷ்ணகிரி விவசாயிகள் மூலம், 500 ஏக்கரில் மூங்கில் தோட்டம் அமைத்து மின்சாரம் தயாரிக்க, தமிழக தோட்டக்கலைத் துறை ஒப்பந்தம் செய்துள்ளது. 1 கிலோ மூங்கிலில் இருந்து, 1 யூனிட் மின்சாரம் கிடைக்கும். வெட்ட வெட்ட வளர்ந்தபடி இருப்பதால், ஒரு முறை நட்டு வைத்தாலே போதும், 150 ஆண்டுகளுக்கும் மேல் தொடர்ந்து பலன் தருவதால், ஒவ் வொரு ஆண்டும், 1.5 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டலாம்.இயற்கை சீற்றத்தால் வாழை மற்றும் தென்னை மரங்களைப் போல், பீமா ரக மூங்கில்கள் பாதிப்படைவதில்லை. சாதாரண மூங்கிலில் பூ வந்து விட்டால், அந்த மரம் செத்துவிடும். ஆனால், பீமாவில் பூ வந்தும், அழியாமல் இருக்கும். முள்ளில்லா மூங்கில் கன்றுகளை, வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறோம்.

வெள்ளி, 11 ஜனவரி, 2013

நீர் ஆதாரம் இல்லாமல் வேளாண்மை!

சொல்கிறார்கள்

நீர் ஆதாரம் இல்லாமல் வேளாமை!

நீர் ஆதாரம் இல்லாத இடத்தில், ஆண்டு முழுவதும் விவசாயம் செய்யும் சின்னசாமி: ஆறு, ஓடை, குளம், குட்டை என, வானம் பார்த்த, பல்லடம் பகுதியை சார்ந்தவன். கோவை, தேவாம்பாளையத்தில், ஏழை விவசாய குடும்பத்தில் பிறந்தேன். மூன்றாம் வகுப்பு வரை படித்தேன். 12 வயதிலேயே, பழக் கடை ஒன்றில், அப்பா வேலைக்கு சேர்த்தார்.

18 வயதில், மில் வேலை பார்த்தேன். எட்டு மணி நேர வேலை போக, மீதி நேரத்தை பழம் விற்க முடிவெடுத்து, ஊர் ஊராக, தள்ளு வண்டியில் விற்பனை செய்தேன்.பழங்களை நானே உற்பத்தி செய்ய திட்டமிட்டேன். இரண்டு ஏக்கர் அளவில் சிறு குட்டை வெட்டி, மழை நீரை தேக்கி, 70 ஏக்கர் நிலத்தில் நான்கு கிணறுகளை வெட்டி, குட்டையில் தேங்கிய நீரை, பி.வி.சி., பைப் மூலம் கிணற்றுக்குள் செலுத்தி, அதன் மூலம், 20 ஆழ்துளை கிணறுகள் அமைத்து, நீர் ஆதாரம் இல்லாத இடத்தில், ஆண்டு முழுவதும் விவசாயம் செய்கிறேன்.

இனிப்பு சுவையுடைய, 60 தாய்லாந்து புளியம் மரங்களை நட்டு வளர்த்து வருகிறேன். ஒரு மரத்திலிருந்து ஆண்டிற்கு, 15,000 ரூபாய் லாபம் கிடைக்கிறது. "கோ-3' ரக சப்போட்டா கன்றுகளை, சீரான இடைவெளியில் நட்டதில் மரத்திற்கு, 100 பழங்கள் வீதம், நன்கு காய்கின்றன.

என்னிடம் உள்ள, 70 பசுக்கள், 150 ஆடுகளிலிருந்து சாணம், புழுக்கை, சிறுநீரையும்; கோழி பண்ணையிலிருந்து பெறும் கோழிக் கழிவுகளையும்; கல் உப்பு, காய்ந்த சருகு, சோகையை மக்கச் செய்து, இயற்கை உரமாக பயன்படுத்துகிறேன். வேப்ப மரங்களின் விதையை அரைத்து, பூச்சிகள் வராமல் தெளிக்கிறேன். ஊடு பயிராக பீட்ரூட், கத்தரிச் செடி, மிளகாய் செடி, வெண்டை என, பயிரிடுகிறேன். வீட்டின் முன்னே கொடியில் பாகற்காய், புடலங்காய், பீர்க்கங்காயும். கீரை வகைகளையும் பயிரிட்டு, தினமும் லாபம் ஈட்டுகிறேன்.

திங்கள், 19 நவம்பர், 2012

படித்தவர்கள் வேளாண் தொழிலுக்கு வர வேண்டும்

சொல்கிறார்கள்
படித்தவர்கள் விவசாயத்திற்குவர வேண்டும்!' விவசாயம் செய்ய முடியவில்லை என கூறி, நகரத்திற்கு இடம் பெயர்பவர்கள் மத்தியில், விவசாயத்தில் லாபம் பார்க்கும், வினோதா, முருகானந்தம்: கரூர் அருகே உள்ள, தட்டாம்புதூர் தான், எங்கள் சொந்த ஊர். பெற்றோர், விவசாயம் பார்த்து, எங்களை படிக்க வைத்தனர். நாங்கள் படித்து, நல்ல வேலைக்குச் செல்ல வேண்டும் என விரும்பினர். பெற்றோருக்கு உதவியாக, கல்லூரி செல்வதற்கு முன்பும், சென்று வந்த பின்பும் தோட்டத்தில் வேலை செய்வோம்.என் அக்கா, வினோதா எம்.பி.ஏ., முடித்ததும், வேலைக்கு செல்லலாம் என முடிவு செய்தார். சம்பளம், 10 ஆயிரம் ரூபாய் தருவதாகக் கூறினர். அக்கா அந்த வேலைக்குச் செல்லவில்லை. அதைவிட, விவசாயத்தில் அதிகமாக சம்பாதிக்கிறேன் என, சவால் விட்டார்.கல்லூரிக்குச் சென்று கொண்டே நானும், அக்காவிற்கு உதவியாக இருந்தேன். படிப்பை முடித்தவுடன், முழுநேர விவசாயத்தில் இறங்கினேன். "விவசாயத்தில் ஜெயித்துக் காட்டுகிறோம் பாருங்கள்' என்று கூறி, நாங்கள் இருவரும் கடுமையாக உழைத்தோம்; முதல் இரண்டு ஆண்டு, லாபம் கிடைக்கவில்லை. ஊர்க்காரர்கள் கிண்டல் செய்ய ஆரம்பித்தனர். அதைப்பற்றி கவலைப்படாமல், திட்டமிட்டு பயிர் செய்தோம். முருங்கை, தர்பூசணி, கடலை என பயிரிட்டோம். முடிந்தவரை இயற் கை உரங்களை மட்டுமே பயன்படுத்து வோம்.காலை, 6:00 மணிக்கு, தோட்டத்திற்குள் சென்றால், மதியம், 12:00 மணிக்குத் தான், வெளியே வருவோம். கடுமையாக உழைத்ததால், 2 ஏக்கரில், 60 டன் தர்பூசணியை, 70 நாளில் எடுத்தோம். முருங்கையும் நல்ல லாபம் தந்தது. கடந்த ஆண்டு மட்டும், 7 லட்ச ரூபாய் சம்பாதித்தோம்.கிண்டல் செய்தவர்கள் எல்லாம், இப்போது, ஆச்சரியப்பட்டு நிற்கின்றனர். தற்போது, மலைவேம்பு நடவு செய்து வருகிறோம். அது மிகுந்த லாபம் தரும். "விவசாயத்தை கை விடாதீர்கள்; முறையாக செய்தால், அதை விட, லாபம் தரும் தொழில் ஏதும் இல்லை' என, பிரசாரம் செய்கிறோம்.