-எல்.முருகராசு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
-எல்.முருகராசு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 24 பிப்ரவரி, 2013

அழுகையை அடக்க முடியவில்லையடா பாலச்சந்திரா

அழுகையை அடக்க முடியவில்லையடா பாலச்சந்திரா...மணல் மூடைகளால் சூழப்பட்ட ராணுவத்தினருக்கான பாதுகாப்பு அரணாக விளங்கும் அறை அது என்று பார்த்த உடனேயே தெரிகிறது.

அதனுள் ஒரு மரப்பலகை.

அந்த பலகையின் மீது ஒரு 12 வயது பாலகன் உட்கார வைக்கப்பட்டிருக்கிறான்.

சந்தையில் தொலைந்து போய் கண்டுபிடிக்கப்பட்டவன் போல பரிதாபமான தோற்றத்துடன், சட்டை இல்லாத வெற்று உடம்புடன், பார்த்த உடனேயே அள்ளி, அரவணைத்து தூக்கி கொஞ்ச தோன்றும் பால்மணம் மாறாத குழந்தை முகத்துடன் அந்த பாலகன் அமர்ந்து இருக்கிறான்.

கறுப்பு கலரில் கால்சட்டை, தோளில் கந்தலாய், கசங்கிப் போன, அணிந்து கொள்ள பிடிக்காமல் போட்டிருப்பது போல ஒரு லுங்கி.
கையில் பிஸ்கெட் போன்ற ஒன்றை வாயில் வைத்திருக்கிறான் ஆனால் அதை சாப்பிட பிடிக்கவில்லை என்பதை பரிதாபமான அவனது முகம் காட்டுகிறது. ஏதோ ஒரு இக்கட்டில் சிக்கியிருக்கிறோம், அம்மா, அப்பா முகம் கூட வேண்டாம், ஏதாவது ஒரு தெரிந்த முகம் தென்படாத என்ற ஏக்கம் கண்களில் அலை பாய்கிறது.
அடுத்த படத்தில் அவன் கண்களில் ஒருவித பதட்டம் தென்படுகிறது, ஏதோ ஒரு பயங்கரத்தை எதிர்நோக்கும் சிறுவனின் அந்த பார்வையே நம்மை திகைக்கவைக்கிறது.
அடுத்த வினாடி அவன் கைநீட்டி தொட்டுவிடும் தூரத்தில் இருந்து வெடித்த சிங்கள சிப்பாயின் துப்பாக்கியில் இருந்து புறப்பட்ட குண்டு மார்பை துளைக்க, அப்படியே மல்லாந்து சாய்கிறான், மண்மீது கைகால் இழுத்தபடி சரிகிறான், "இதற்குதான் கூட்டிவந்து பிஸ்கட் கொடுத்தீர்களா?' என்பது போல கையறு நிலைகொண்டு பரிதாபமாக பார்க்கிறான், சிப்பாயின் துப்பாக்கி மீண்டும் சீறுகிறது, மீண்டும் மீண்டும் சீறுகிறது, தொடர்ந்து நான்கு முறை அந்த பாலகனின் உடலை சல்லடையாக துளைக்கிறது, நிறைய கனவுகளுடன் வளர்ந்த அந்த சிறுவன் சின்ன, சின்ன துள்ளலுக்கு பிறகு செத்து போகிறான்.
இறந்து போன அந்த சிறுவன் பெயர் பாலசந்திரன்.
விடுதலை புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரனின் மகன்.
மூன்று நாட்களுக்கு முன் சானல் 4 தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்ட "கில்லிங் பீல்ட்ஸ் ஆப் ஸ்ரீலங்கா' என்ற தலைப்பில் வெளியிட்ட புதிய ஆவண படத்தில்தான் இந்த காட்சிகள் பதிவாகியுள்ளன.
பார்த்தவர்கள் அத்தனைபேர் இருதயத்தையும் வெட்டிப் பிளந்தது போன்ற உணர்வு.
கொஞ்சமும் மனிதாபிமானமற்ற மன்னிக்கமுடியாத இந்த செயலை செய்தததன் மூலம் இலங்கை மன்னிக்கமுடியாத மாபெரும் போர்க்குற்றம் புரிந்துள்ளது என்று தனது கண்டனத்தை கடுமையாக பதிவு செய்துள்ள முதல்வர் ஜெயலலிதா, இலங்கை மீது சர்வதேச பொருளாதார நெருக்கடி கொடுக்க வேண்டும், அங்கு வாழும் தமிழர்கள் சமஉரிமை பெற்ற பிறகே பொருளாதார தடையை நீக்கவேண்டும் என்று சொல்லியிருக்கிறார்.
மனிதகுலத்தின் மனசாட்சி இன்னுமா விழிக்கவில்லை, உலகத்தில் நீதி மொத்தமாக செத்து விட்டதா? இப்படி எத்தனை, எத்தனை பாலசந்திரன்களை பலிகொடுத்தோமா? ஜெர்மானிய நாஜிகள் நடத்திய படுகொலைகளை விட இவர்கள் நடத்திய இந்த இனப்படுகொலைதான் மிகவும் கொடூரமானது, என்னால் தாங்க முடியவில்லை என் இதயத்தை வெட்டி கூறுபோட்டது போல உணர்கிறேன் என்று மனம் வெதும்பியுள்ளார் வைகோ.
இல்லை இவையெல்லாம் நம்பமுடியாது என்று இலங்கை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
திருடன் நான்தான் திருடினேன் என்று எப்போது ஒத்துக்கொண்டுள்ளான், அது போலத்தான் இவர்கள் கூற்றும்.
சில நிமிடங்களே ஒடும் இந்த ஆவண படத்தை கடந்த மூன்று ஆண்டுகளாக உண்மையின் பக்கம் மட்டுமே நின்று தயாரித்துள்ளதாக கூறுகிறார் கெலம் மெக்ரே.
ஆவண படத்தை பார்த்த பல தடயவியல் நிபுணர்களில் ஒருவரான டெரிக் பவுண்டர் இந்த படத்தில் எந்த பகுதியிலும் பொய்யில்லை, சிறுவன் பாலசந்திரன் உயிருடன் இருக்கும் போதும், இறந்த பிறகும் எடுத்த நான்கு படங்களுமே ஒரே டிஜிட்டல் கேமிராவில் ஒரே நாளில் ஒரு சில மணி நேர இடைவெளியில் எடுக்கப்பட்டுள்ளது. சிறுவனின் மார்பில் குண்டு பாய்ந்த இடத்தின் நிறத்தையும், அது உடலை சிதைத்துள்ள விதத்தையும் பார்க்கும் போது மிக அருகில் நின்று சிறுவனை குரூரமாக கொன்றிருக்கிறார்கள் என்பது நிரூபணமாகிறது என்று சொல்லியுள்ளார்.
நாங்கள் நடத்தியது மனிதாபிமானப் போர்தான், பிரபாகரன் குடும்பத்தை பாதுகாப்பாகத்தான் வைத்திருந்தோம், போரின் போது ஏற்பட்ட குண்டு வெடிப்புகளில் காயம்பட்டே பிரபாகரன் இறந்தார். அவரது மனைவி, மகன் பற்றியெல்லாம் எங்களுக்கு தகவல் தெரியாது, பிரபாகரன் உடலையே கருணா அடையாளம் காட்டித்தான் கண்டுபிடித்தோம் என்றெல்லாம் ராஜபக்ஷே சொன்னது அத்தனையும் பொய், புளுகு என்பதை இந்த படங்கள் இப்போது உலகிற்கு எடுத்துக் காட்டியுள்ளது என்றே உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் கருதுகிறார்கள்.
இது வெறும் கருத்து மட்டுமல்ல, உணர்வு, ஒரு தொப்புள் கொடி உறவின் வெளிப்பாடு, ஒரு சின்னஞ்சிறு குருத்து காரணமேயில்லாமல் இனவாத அடிப்படையில் சாய்க்கப்பட்டதே என்ற வேதனை.
மனதிலும், கண்களிலும் ரத்தத்தை வரவழைத்த இந்த சம்பவம் வெறும் அனுதாப அலையோடு நின்றுவிடக் கூடாது, விரைவில் கூடவிருக்கும் ஐ.நா சபையில் எதிரொலிக்க வேண்டும், மன்னிக்கமுடியாத போர்க்குற்றம் புரிந்தவர்கள் என்று இலங்கைக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டும். அரசியலுக்கு அப்பாற்பட்டு ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வும் இதில் ஒன்றுபட வேண்டும் என்பதே இன்றைய தேதிக்கு அனைவரது கருத்தாகும்.
- எல்.முருகராசு
Bookmark and Share
 









கும்பமேளாவில் கார்த்திகேயன் கைவண்ணம்

 
 
ஆர்.கார்த்திகேயன்.

செய்தி பத்திரிகை நிறுவனத்தில் நியூஸ் மற்றும் இன்போகிராபிக் டிசைனர் வேலை பார்ப்பவர்.

இந்த வேலை எப்படிப்பட்டது என்றால் பத்திரிகை புகைப்படக்கலைஞர்கள், மற்றும் கார்ட்டூனிஸ்ட்கள், நிருபர்கள் போன்ற படைப்பாளிகள் தரும் படைப்பை மெருகேற்றி பக்கங்களில் நேர்த்தியாகவும், வித்தியாசமாகவும், அழகுபடவும் சேர்க்கும் அருமையான பணி.
இதற்காக டில்லி, பெங்களூருவில் நடந்த சர்வதேச கருத்தரங்குகளில் கலந்துகொண்டு தனது பணியை மேம்படுத்திக்கொண்டவர்.
வேலையின் போது இவர் கவனத்திற்கு வரும் பத்திரிகை புகைப்படங்களை அடிக்கடி பார்த்ததில் இவருக்கு புகைப்படக்கலை மீதும் ஒரு கண் விழுந்தது.
இதன் காரணமாக நேரம் கிடைக்கும் போது பத்திரிகை புகைப்படக் கலைஞர்களுடன் சென்று, அவர்கள் படமெடுக்கும் பாங்கினை மனதில் வாங்கி பதிய வைத்துக் கொண்டே வந்தார்.
இதே போல தானும் ஒரு சொந்தமாக ஒரு கேமிரா வாங்கி நிறைய படங்கள் எடுக்கவேண்டும் என்று எண்ணியிருந்தார், இவரது இந்த எண்ணம் ஈடேற நான்கு ஆண்டுகளாயிற்று.
சமீபத்தில் சொந்தமாக நிக்கான் டி.90 கேமிரா வாங்கினார், கேமிரா வாங்கிய அதிர்ஷ்டம் உ.பி., மாநிலம் அலகாபாத்தில் நடைபெறும் மகா கும்பமேளாவைக் காண செல்லும் வாய்ப்பு கிடைத்தது.
கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று புண்ணிய நதிகள் கலக்கும் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் மகா கும்பமேளாவில் நீராட உலகம் முழுவதிலும் இருந்து மூன்று கோடி பேர் வருவார்கள் என்பதும், அவர்களில் வெளி உலகத்திற்கு தங்களை காட்டமால் இருந்து வரும் நாகா சாமியார்கள் எனப்படும் நிர்வாண சாமியார்களும் இருப்பார்கள் என்பதும் விசேஷமாகும்.
இதற்காக கடந்த பிப்ரவரி மாதத்தில் ஏழாம் தேதி துவங்கி பதிமூன்றாம்தேதி வரையிலான எட்டு நாட்கள் அங்கேயே முகாமிட்டு, இரவு இரண்டு மணிக்கு வீசும் உறையவைக்கும் குளிரையும் பொருட்படுத்தாமல் பல படங்களை எடுத்து வந்துள்ளார்.
பல படங்கள் அருமையாக வந்துள்ளது. அடுத்த மகா கும்பமேளா வரை பேசப்படும் இந்த ஆவண படங்களில் இருந்து சில படங்கள் இங்கே உங்கள் பார்வைக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த பக்கம் பருப்பு வேகாத நிலையில், கும்பமேளாவிற்கு தன் தொண்டர்கள் சகிதம் சென்று, அங்குள்ள அகடா (சாமியார்களுக்கான மடம்) ஒன்றை மதுரை ஆதினத்தை பிடித்தது போல பிடித்து, அந்த மடத்தின் மகா மண்டேலஸ்வரர் என்ற பட்டம் சூட்டிக்கொண்டு, கங்கையில் புனித நீராட தங்க பல்லக்கில் வந்த நித்யானந்தாவை, இவர் மட்டுமே படமாக பதிவு செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கார்த்திகேயன் படத்திற்கு கீழே உள்ள போட்டோ கேலரி என்ற சிவப்பு பட்டையை கிளிக் செய்து கும்பமேளாவில் எடுத்த படங்களை பார்க்கலாம், படங்கள் குறித்து கார்த்திகேயனிடம் பேசுவதற்கான எண்: 8754481047.

- எல்.முருகராசு
 

ஞாயிறு, 11 நவம்பர், 2012

குற்றாலத்தில் அருமையான சுற்றுச்சூழல் பூங்கா -எல்.முருகராசு

குற்றாலத்தில் அருமையான  சுற்றுச்சூழல் பூங்கா -எல்.முருகராசு

குற்றாலத்தில் ஐந்தருவிக்கு அருகே உள்ள பழத்தோட்டம்.
இங்குள்ள பழத்தோட்ட அருவிக்கு ஒரு காலத்தில் சிபாரிசு கடிதம் வாங்கிப்போய் குளித்தவர்கள் உண்டு. ஆனால் திடீரென ஒரு நாள் பழத்தோட்ட அருவி மூடப்பட்டது.

சில ஆண்டுகளாக மூடியே கிடந்த பழத்தோட்ட அருவி பகுதியில் என்னதான் நடக்கிறது என்பதை பற்றி யாருக்கும் தெரியவில்லை.
இந்த நிலையில் திடீரென கடந்த மாத இறுதியில் குற்றாலம் பழத்தோட்ட பகுதியில் சுமார் ஆறு கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுச்சுழல் பூங்காவை முதல்வர் ஆன்லைனில் திறந்து வைத்தார் என்பதை பார்த்த உடனேயே மனதிற்குள் சந்தோஷம்.

குற்றால பிரியரான நான் உடனடியாக அங்கு ஆஜரானேன்.
பழத்தோட்ட அருவியினுள் உள்ள தோட்டக் கலைத்துறை அலுவலர் முத்துமாலை, இந்த சுற்றுச்சூழல் பூங்காவினை அங்குலம், அங்குலமாக நேசிக்கிறார் என்பது அவர் சுற்றிக் காட்டும்போதே தெரிந்தது.

அடர்ந்த காடாக கிடந்த அப்போதைய பழத்தோட்டம் அடியோடு மாறியுள்ளது. ஒவ்வொரு இடத்தையும் பார்த்து, பார்த்து உருவாக்கியுள்ளனர். சுமார் 40 ஏக்கரில் மூங்கில் தோட்டம், வண்ணத்துபூச்சி பூங்கா, நீருற்று, மலர்த்தோட்டம், சிறுவர் பூங்கா, இளைஞர்களுக்கான சாகச பூங்கா, அருவியின் ஒசையைக் கேட்டுக்கொண்டே நடக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள நீண்ட மரப்பலகை பாதை, கற்பாறை பூங்கா, பசுமை குடில், வியூ பாயின்ட் என்று ஓரு நாள் முழுவதும் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.
இயற்கை ஆர்வலர்கள் இந்த இடத்தை பார்த்தால் வெளியே வரவே மாட்டார்கள் அந்த அளவிற்கு இயற்கையின் அனைத்து விஷயங்களும் நிறைந்து கிடக்கிறது.

இவ்வளவு நாளும் குற்றாலத்தில் குளியலைவிட்டால் பொழுது போவதற்கு சரியான இடமில்லாமல் சுற்றுலா பயணிகள் தவித்து வந்ததனர், அவர்களது சுற்றுலா தாகத்தை இந்த சுற்றுச்சூழல் பூங்கா நிச்சயம் தீர்த்து வைக்கும். காலை 8 மணி முதல் மாலை 6 மணிவரை வருடத்தில் 365 நாளும் விடுமுறையின்றி இந்த பூங்கா திறந்து இருக்கும்.
முக்கிய குறிப்பு: சுற்றுச்சூழல் பூங்கா பற்றிய படங்களை பார்க்க சிவப்பு பட்டையில் உள்ள போட்டோ கேலரியை கிளிக் செய்யவும்.