இலங்கைக் கடற்படை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இலங்கைக் கடற்படை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 9 ஏப்ரல், 2013

மீனவர்களைத் தாக்குவது வேறு யார்? சீமான் கேள்வி

தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை தாக்கவில்லை எனில் தாக்குவது வேறு யார்? சீமான் கேள்வி

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தாக்கவில்லை என்றால், பிறகு தாக்குவது யார்? என்று இலங்கை அரசுக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,
இலங்கையை நட்பு நாடு என்று அழைக்கக்கூடாது என்றும், அதற்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்றும் தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தங்களின் மன அமைதியை குலைப்பதாக உள்ளது என்றும், இலங்கை அரசுக்கு எதிராக கூறப்படும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் மிகைப்படுத்தப்பட்டவை என்றும் இலங்கை அயலுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தங்களின் மன அமைதியை குலைப்பதாக கூறும் சிங்கள பெளத்த இனவாத இலங்கை அரசு, தனது முப்படைகளையும் பயன்படுத்தி, ஒன்றே முக்கால் இலட்சம் தமிழர்களை கொன்றொழித்தது தமிழ்நாட்டு மக்களின் மன அமைதியை எந்த அளவிற்கு பாதித்திருக்கும் என்பதை நினைத்துப் பார்க்கும் மனிதாபிமானமுள்ள அரசா என்று கேட்கிறோம்.
தங்களுடைய அரசுக்கு எதிரான மனித உரிமை குற்றச்சாற்றுகள் அனைத்தும் வதந்தி மற்றும் தவறான தகவல்களின் அடிப்படையில் கூறப்படும் குற்றச்சாற்றுகள் என்று கூறும் இலங்கை அரசு, பின் எதற்காக சுந்திரமான பன்னாட்டு விசாரணை ஏற்க மறுக்கிறது?
இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரில் தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடுமைகளை இலங்கை அதிபரே நியமித்த கற்ற பாடங்களும் இணக்கப்பாடு ஆணையம் என்ற விசாரணை அமைப்பே தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளதே. ஐ.நா. மனித உரிமை மன்றத்தின் கடந்த செப்டம்பரில் நடந்த மனித உரிமை மீளாய்வுக் கூட்டத்தில் இலங்கை அரசுக்கு எதிராக தெரிவிக்கப்பட்ட 40 மனித உரிமை மீறல் குற்றச்சாற்றுகளில் 20 குற்றச்சாற்றுகளை உங்கள் அரசு ஏற்றுக்கொண்டிருக்கிறதே? உலகின் முன்னணி மனித உரிமை அமைப்புகள் நான்கும் இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரில் பல்லாயிரக்கணக்கில் அப்பாவித் தமிழ் மக்களை இலங்கையின் முப்படைகளும் கொன்றொழித்தன என்று ஆதாரத்துடன் கூறுகின்றனரே? இறுதி கட்ட போருக்குப் பிறகு வன்னிப் பகுதியில் இருந்த மக்களில் 1,46,679 பேர் இல்லையே, அவர்கள் என்ன ஆனார்கள் என்று மன்னார் பேராயர் ஜோசப் ராயப்பு எழுப்பிய கேள்விக்கு இன்றுவரை இலங்கை அரசு பதில் கூறாதது ஏன்?
அரசியல் சம உரிமை கேட்டு போராடிய எமது மக்களின் மீது தெற்காசிய வல்லாதிக்கங்களின் ஆதரவுடன்  போர் நடத்தி, தடை செய்யப்பட்ட ஆயுதங்களை பயன்படுத்திக் கொன்று குவித்ததோடு நிறுத்திக்கொள்ளாமல், தமிழீழ தேசத்தையே முழுமையான இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் வைத்து, வாழவும் விடாமல், சாகவும் விடாமல் வதைத்துக்கொண்டிருக்கும் சிங்கள பெளத்த இனவாத இலங்கை அரசு, ஏதோ புனிதர்களைப் போல் பேசுவதை ஏற்றுக்கொள்ள இந்த உலகி்ல் ஒரு மடையனும் இல்லை என்பதை இலங்கை இனவெறி அரசு புரிந்துகொள்ள வேண்டும்.
 எங்களைப் பொறுத்தவரை, தமிழீழ விடுதலையை வென்றெடுக்காமல் எமது மக்கள் சுதந்திரமாக, அரசியல் முழு உரிமையுடன் வாழ வழியேதும் இல்லை என்பதில் உறுதியாகவுள்ளோம். அந்த இலக்கை எட்டும் வரை தமிழ்நாடு மட்டுமல்ல, உலக நாடுகளில் உள்ள தமிழர்கள் அனைவரும் தொடர்ந்து போராடுவோம்.
 ‘எல்லை தாண்டி வரும்’ தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தாக்குவதாக வெளியாகும் தகவல்கள் அனைத்தும் தவறானவை என்றும், அதில் உண்மை ஏதும் இல்லை என்றும் இலங்கை அரசு அறிக்கை கூறுவது வேடிக்கையாகவுள்ளது. தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தாக்கவில்லையென்றால் பிறகு அவர்களை தாக்குவது யார் என்பதை இலங்கை அரசு கூற வேண்டும்.
 எல்லைத் தாண்டிச் சென்று மீன் பிடிப்பதால்தான் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டிற்கு இரையாகிறார்கள் என்று இந்திய மத்திய அரசே இந்தியாவின் நாடாளுமன்றத்தில் கூறியிருக்கிறது என்பதை அதன் நட்பு நாடான இலங்கை அரசு மறந்துவிட்டதா? இந்தியாவின் கடல் எல்லைக்குள் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது எத்தனை முறை இலங்கை கடற்படையினரால் எமது மீனவர்கள் தாக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியும். இது பற்றி ஆயிரக்கணக்கான புகார்களை எமது மீனவர்கள் அளித்திருக்கிறார்கள். ஆனால், அவைகளின் மீது நியாயமான விசாரணை நடத்த வேண்டும் என்ற எண்ணமற்ற அரசாக இந்திய மத்திய அரசு இருப்பதால், எமது மீனவர்களுக்கு நியாயம் கிட்டவில்லை. எனவே முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கு வித்தையை அறிக்கைகளில் காட்டி ஏமாற்ற முயற்சிக்க வேண்டாம்.
எல்லைத்தாண்டி வந்து இந்திய கடற்பரப்பிற்குள் மீன் பிடிக்கும் சிங்கள மீனவர்களை கைது செய்யும் இந்திய கடலோர காவற்படை எப்போதாவது அவர்களை அடித்துத் துன்புறுத்தியுள்ளதா? என்று கேட்கிறோம். ஏனெனில் இந்திய அரசு உங்களை நட்பு நாடாக கருதுகிறது, ஆனால் நீங்கள் இந்திய மீனவர்களை எதிரி நாட்டு மீனவர்களாகவே கருதி தாக்குதல் நடத்துகிறீர்கள். இதனை தெரிந்தே இந்திய மத்திய காங்கிரஸ் அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது. இந்த உண்மையெல்லாம் தமிழக மக்கள் நன்றாக அறிந்திருக்கிறார்கள். அவர்கள் அடுத்து வரும் மக்களவைத் தேர்தலில் இதற்கெல்லாம் பதில் சொல்வார்கள்.
- என்று கூறியுள்ளார்.

வியாழன், 3 ஜனவரி, 2013

மீனவர்கள் விரட்டியடிப்பு: இலங்கைக் கடற்படை அட்டூழியம்

கச்சத்தீவு அருகே இராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு: இலங்கைக் கடற்படை அட்டூழியம்
கச்சத்தீவு அருகே ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு: இலங்கை கடற்படை அட்டூழியம்
இ ராமேசுவரம், சன. 3-
 
கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன்பிடிக்க சென்ற ராமேசுவரம் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் இலங்கை கடற்படையினர் விரட்டியடித்தனர். இதனால் அவர்கள் ஏமாற்றத்துடன் கரைக்கு திரும்பினர்.
 
ராமேசுவரம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளை சேர்ந்த 2500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் சுமார் 500 விசைப்படகுகளில் நேற்று கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். அவர்கள் மீன் வளம் நிறைந்து காணப்படும் கச்சத்தீவு அருகே வலைகளை விரித்து மீன் பிடித்து கொண்டு இருந்தனர்.
 
அப்போது சிறிய ரோந்து படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர், ராமேசுவரம் மீனவர்களை பார்த்து இங்கு வந்து மீன் பிடிக்கக்கூடாது என்று கூறி தரக்குறைவான வார்த்தைகளால் பேசினர். படகுகளில் ஏறி அவர்களை மிரட்டினர்.
 
மேலும் கரைக்கு உடனே திரும்பி செல்லுங்கள், இல்லை என்றால் சிறைபிடித்து செல்வோம் என்று மீனவர்களிடம் மிரட்டினர். இதனால் பீதியடைந்த மீனவர்கள் அவசர அவசரமாக வலைகளை எடுத்துக் கொண்டு பெருத்த ஏமாற்றத்துடன் மீன்களை பிடிக்காமல் கரைக்கு திரும்பினர்.
 
இதுகுறித்து மீனவர்கள் கூறியதாவது:-
 
நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டு இருந்த எங்களை இலங்கை கடற்படையினர் மிரட்டி, தரக்குறைவாக பேசி உடனே கரைக்கு செல்லுங்கள் என்று எச்சரித்தனர். எனவே நாங்கள் மீன் பிடிக்காமல் வெறுங்கையுடன் திரும்பிவிட்டோம்.
 
ஒவ்வொரு முறையும் மீன்பிடிக்க செல்லும்போது இலங்கை கடற்படையினர் எங்களை தாக்குவதும், மீன் பிடிக்கவிடாமல் தடுப்பதும் தொடர்கதையாக இருந்து வருகிறது.
 
இந்த அவல நிலையை போக்க மத்திய- மாநில அரசுகள் மவுனம் கலைத்து உரிய நடவடிக்கை எடுத்து எங்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்.
 
இவ்வாறு அவர்கள் கூறினர்.

திங்கள், 24 டிசம்பர், 2012

மீனவர்கள் இலங்கை க் கடற்படையால் சிறைப்பிடிப்பு

மீனவர்கள் இலங்கை க் கடற்படையால் சிறைப்பிடிப்பு


நாகை: கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாகை அக்கரைப்பேட்டையை சேர்ந்த ஒரு விசைப்படகு, நம்பியார் நகரை சேர்ந்தஒரு விசைப்படகு மற்றும் காரைக்காலை சேர்ந்த 2 விசைப்படகுகளில் மீன்பிடித்து கொண்டிருந்த சுமார் 35 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெள்ளி, 19 அக்டோபர், 2012

இலங்கை க் கடற்படையுடன் கூட்டு ப் பயிற்சி தென் மாநிலங்களை த் தவிர்க்க அறிவுரை

இலங்கை க் கடற்படையுடன் கூட்டு  ப் பயிற்சி தென் மாநிலங்களை  த் தவிர்க்க  அறிவுரை

புதுடில்லி:இலங்கை ராணுவத்தினருக்கு இந்தியாவில் பயிற்சி அளிப்பதற்கு, தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவிப்பதால், கடற்படை கூட்டு பயிற்சியை நடத்துவதற்கு நான்கு தென் மாநிலங்களை தவிர்க்கும்படி ராணுவ அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இந்திய - இலங்கை கடற்படைகள் கூட்டு பயிற்சியை, இதற்கு முன் இரண்டு முறை நடத்தியுள்ளது. முதலாவது பயிற்சி,2005ம் ஆண்டும், அதை தொடர்ந்து இரண்டாவது பயிற்சி, 2011ம் ஆண்டு திரிகோணமலையில் நடந்தது.

இந்நிலையில், இலங்கை ராணுவ வீரர்களுக்கு இந்தியாவில் பயற்சி அளிப்பதற்கு, தமிழக அரசியல் கட்சிகள் கடும்எதிர்ப்பு வருகின்றன. எனவே கடற்படை கூட்டு பயிற்சியை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து, மத்திய ராணுவ அமைச்சகம் இந்திய கடற்படைக்கு விடுத்த வேண்டுகோளில்," இந்திய - இலங்கை கடற்படை கூட்டு பயிற்சியை நடத்த தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய நான்கு மாநில கடலோர பகுதியை தவிர்க்கும்படி ஆலோசனை வழங்கியுள்ளது.இரு நாடுகளுக்கு இடையேயான கூட்டு பயிற்சி, இம்முறை இந்திய கடல் பகுதியில் நடத்தப்பட வேண்டும். இதையடுத்தே, ராணுவ அமைச்சகம் இந்த வேண்டுகோளை வைத்துள்ளது.
-  தினமலர்

வியாழன், 18 அக்டோபர், 2012

தமிழ்நாடு இந்தியாவில் இல்லையா?தமிழக மீனவர்கள் மீது இலங்கை மீண்டும் வெறி த் தாக்குதல்

கச்சத்தீவு அருகே இராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை க் கடற்படை மீண்டும் வெறி த் தாக்குதல்
கச்சத்தீவு அருகே ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை மீண்டும் வெறி தாக்குதல்
ராமேசுவரம், அக். 18-

கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதும், மீன்பிடி வலைகளை அறுத்தும் கடலில் வீசி எறிவதும் வாடிக்கையாகி விட்டது. இதனால் மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்த நிலையில் கச்சத்தீவு அருகே மீன் பிடிக்க சென்ற 5 மீனவர்களை இலங்கை கடற்படையினர் மீண்டும் தாக்கி விரட்டியடித்துள்ளனர்.

ராமேசுவரத்தில் இருந்து நேற்று 530 படகுகளில் 2500 மீனவர்கள் மீன் பிடிக்க சென்றனர். சில மீனவர்கள் கச்சத்தீவு அருகே சென்றபோது இலங்கை கடற்படையினர் குட்டி படகுகளில் அங்கு வந்தனர். அவர்கள் ராமேசுவரம் மீனவர்களை பார்த்து இங்கு மீன் பிடிக்க வரக்கூடாது என்று எத்தனை முறை சொல்வது என கூறி விரட்டியடித்தனர். ராஜேந்திரன் என்பவரது படகில் இருந்த 5 மீனவர்களை அவர்கள் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.

இலங்கை கடற்படையினரின் தாக்குதலுக்கு பயந்து மற்ற மீனவர்கள் மீன் பிடிக்காமல் கரை திரும்பினர். இலங்கை கடற்படையினரின் அட்டகாசத்தை தடுக்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.