உழைப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உழைப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 1 மே, 2013

களைப்பு இல்லாத உழைப்பு : -இன்று உலகத் தொழிலாளர் நாள்-

களைப்பு இல்லாத உழைப்பு : -இன்று உலக த் தொழிலாளர்  நாள்-
தொழிலாளர் இல்லையெனில் உலகம் இயங்காது. எத்தனையோ வித தொழிலாளர்கள் உலகளவில் உள்ளனர். அவர்களுக்கு உரிய உரிமைகள் தொடர்ந்து வழங்க வேண்டும் என்பதே இத்தினத்தின் நோக்கம்.
சமூக, பொருளாதார உலகில் தொழிலாளர்களின் பங்களிப்பை பாரட்டும் விதமாகவும், அவர்களை கவுரவிக்கும் விதமாகவும் மே 1ம் தேதி, உலக தொழிலாளர் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. தொழிலாளர்களுக்கு "8 மணி நேர வேலை, 8 மணி நேர ஓய்வு, 8 மணி நேர தூக்கம்' என்ற வகையில் இருக்க வேண்டும் என்பதை இத்தினம் வலியுறுத்துகிறது. இந்தியா உள்ளிட்ட 80க்கும் மேற்பட்ட நாடுகளில் இத்தினத்துக்காக விடுமுறை விடப்படுகிறது.
எப்படி வந்தது
முன்பெல்லாம், தற்போது உள்ள நடைமுறைகள் தொழிலாளர்களுக்கு கிடைத்ததில்லை. 18ம் நூற்றாண்டின் இறுதி மற்றும் 19ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளில் 12 மணி நேரம் முதல் 18 மணி நேரம் கட்டாயம், வேலை செய்ய வேண்டும் என்ற நிலை இருந்தது. தகுதியான ஊதியமும் வழங்கப்படுவதில்லை.
இதை எதிர்த்து, தொழிலாளர்கள் சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. அதன் மூலம் அவர்களது கோரிக்கைகள் ஏற்கப்பட்டன. இப்போராட்டங்கள் தான், தொழிலாளர் தினம் உருவாக காரணமாக அமைந்தன. 

புதன், 24 அக்டோபர், 2012

நினைத்ததை உழைப்பால் சாதிக்கலாம்! விழியின்றி அறிவொளி ஏற்றும் ஆசிரியை

நினைத்ததை உழைப்பால் சாதிக்கலாம்! விழியின்றி அறிவொளி ஏற்றும் ஆசிரியை
திண்டுக்கல்:"நினைத்ததை உழைப்பினால் சாதிக்கலாம்' என்கிறார், பார்வையற்ற கல்லூரி உதவி பேராசிரியை ஹேமலதா.விழி இல்லாவிட்டாலும் தனது மனக்கண்ணா<<லும், முயற்சியாலும், திண்டுக்கல் எம்.வி.எம்., கலைக்கல்லூரி மாணவிகளுக்கு பாடம் நடத்துகிறார், உதவிபேராசிரியை ஹேமலதா,36.
திண்டுக்கல் மாவட்டம், இடையகோட்டையில் பிறந்தவர். பிறவி முதல் பார்வை இழந்தவர். மனம் தளராத ஹேமலதா, சென்னை பார்வையற்றோர் பள்ளியில் படித்தார். பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்றார். திண்டுக்கல் எம்.வி.எம்., கலைக்கல்லூரியில் இளங்கலை, முதுகலை (ஆங்கிலத்தில்) படித்து, பல்கலை அளவில் தங்க மெடல் வாங்கி சாதனை படைத்தார். இதே கல்லூரியில் எம்.பில்., முடித்தார். பல்கலை நடத்தும் "ஸ்லெட்' தேர்வில் வெற்றி பெற்று, தான் படித்த கல்லூரியிலேயே உதவி பேராசிரியராக இன்று பணிபுரிகிறார்.
தெளிவு: ஆங்கில புத்தகத்தில் அனைத்து பாடத்தையும் "பிரெய்லி' முறையில் படித்து, மனப்பாடம் செய்துள்ளார். இளங்கலை ஆங்கில வகுப்பில், பாடங்களை மாணவிகள் புரியும் வகையில் நடத்துகிறார். மாணவிகள் கேட்கும் சந்தேகங்களுக்கும் தெளிவாக பதிலளிக்கிறார்.
ஹேமலதா கூறியதாவது: விவசாய குடும்பத்தில் நான் பிறந்தேன். எனது பெற்றோர் படிக்காதவர்கள். அவர்களது, உறவு முறை திருமணம் எனது கண்களை பாதித்தது. மனம் தளரவில்லை. ஐ.ஏ.எஸ்., படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். இன்று கல்லூரி ஆசிரியராகி விட்டேன். நல்ல மாணவிகளை உருவாக்குகிறேன் என்ற சந்தோஷம் உள்ளது.
என்னை போல ஏழை மாணவிகள் தன்னம்பிக்கையுடன் படித்தால், முன்னேறலாம், நீங்கள் நினைத்தை உழைப்பினால் மட்டுமே சாதிக்க முடியும். உறவு முறை திருமணம் வேண்டாம். புறக்கண்கள் இல்லாவிட்டாலும், அகக்கண்களால் அனைவரும் பாராட்டும் வகையில் பணி மேற்கொண்டுள்ளேன்,என்றார்.­

ிர்

திங்கள், 22 அக்டோபர், 2012

"அயராத உழைப்பால் நிமிர்ந்தது வாழ்க்கை!'



சொல்கிறார்கள்


"அயராத உழைப்பால் நிமிர்ந்தது வாழ்க்கை!'


முதலீடாக, 500 ரூபாயில் துவங்கி, பலகாரங்கள் விற்பனையில், இன்று மாதம் நான்கு லட்சம் ரூபாய் வியாபாரம் பார்க்கும் இன்பவள்ளி: என் கணவர் மளிகைக் கடை வைத்திருந்தார். எதிர்பாராத விதமாக அதில், நஷ்டம் ஏற்பட, கடன் ஒரு புறம், மகன்களின் படிப்பு மறுபுறம் என, இக்கட்டான சூழ்நிலையிலிருந்து மீள முடியாமல், தவித்தேன். தஞ்சையிலிருந்து, பிழைப்புத் தேடி திருச்சி வந்தோம். அங்கு, கணவருக்கு கிடைத்த மிகக் குறைவான ஊதியம் மூலம், மாதம் முழுவதும் சிக்கன வாழ்க்கை நடத்தினேன்.அப்போது, எங்கள் பகுதியில் துவங்கிய மகளிர் சுய உதவிக் குழுவில் நானும் உறுப்பினராக சேர்ந்தேன். தெரிந்தவர்கள் மூலம், 500 ரூபாய் கடன் வாங்கி, காய்கறிகளைக் கொண்டு, 10 வகையான ஊறுகாய்களை தயார் செய்தேன். ஒரு முறை மகளிர் சுய உதவிக் குழுக்களுக்குள் நடந்த போட்டியில், என் தயாரிப்பான, பாகற்காய் ஊறுகாய்க்கு பரிசு கிடைத்தது. பின், ஆங்காங்கே ஸ்டால்கள் அமைத்ததன் மூலம், நல்ல பெயர் கிடைத்தது.ஒரு முறை தெரிந்தவருக்கு, தேன் குழல் முறுக்கு செய்து கொடுத்தேன். அது அவருக்கு பிடித்துப் போக, செட்டிநாட்டுப் பலகாரங்கள் செய்து விற்பனை செய்தால், நல்ல லாபம் பார்க்க முடியும் என, யோசனை கூறினர். நானும் ஒரு ஆர்வத்தில், பலகாரங்கள் செய்ய துவங்கினேன்.மகளிர் தொழில் முனைவோர் சங்கம் மூலம், 25 ஆயிரம் ரூபாய் கடன் பெற்று, பலகாரம் செய்ய மிஷின் வாங்கினேன். என் தயாரிப்பின், சுவையும், தரமும் நன்றாக இருந்தாலும், மார்க்கெட்டிங் செய்வதில் தயக்கம் இருந்தது. திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசிரியர் மூலம், மாணவர்களிடம் விற்பனை செய்தேன்.வியாபாரம் வளரத் துவங்கியது. பல ஸ்வீட் கடைக்காரர்கள், டிபார்ட்மென்ட் ஸ்டோர் முதலாளிகள் பலருக்கும் என் கை பக்குவம் பிடித்ததால், ஆர்டர் கொடுத்தனர். மாவு வறுப்பது, அரைப்பது, இடிப்பது என, அனைத்து வேலைகளையும் நானே கவனமாக செய்வேன். 10க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிகின்றனர். இன்று மாதத்திற்கு, நான்கு லட்சம் ரூபாய்க்கு மேல் வியாபாரம் செய்கிறேன்.






ஞாயிறு, 30 செப்டம்பர், 2012

உழைப்பிற்கு ஊதியம் உண்டு

உழைப்பிற்கு ஊதியம் உண்டு
மார்ச் 29,2010,09:34  IST

 தினமலர்


* தேவையுள்ளவன் என்றைக்குமே மறைக்கப்படுவதில்லை. எளியவர்களின் எதிர்பார்ப்பு என்றைக்குமே நசித்துப் போய் விடுவதில்லை.
* இரவோ முன்பே கழிந்து போயிற்று. பகலோ மிகவும் நெருங்கிவிட்டது. ஆகையால் இரவின் செயல்களை உதறிவிட்டு ஒளியின் கவசங்களை அணிந்து கொள்வோம்.
* கோபத்திலிருந்து நீங்கி, உக்கிரத்தைக் கைவிட்டு விடு. பொல்லாங்கு செய்வதற்கு ஏதுவான எரிச்சல் உன் புத்திக்கு வேண்டாம்.
* எந்த உழைப்பிலும் ஊதியம் உண்டு. வெறும் வாய்ப் பேச்சில் ஒரு பலனும் இல்லை.
*தீய மனம் படைத்தவர்களும் மதியை மயக்கி கெடுப்பவர்களும் மோசத்திற்கு மேல் மோசமாய் உருகிப் பிறரையும் ஏமாற்றித் தாங்களும் ஏமாந்து போகிறார்கள்.
* நடுகிறவனும் நீர் பாய்ச்சுகிறவனும் ஒரு மாதிரிதான்.ஆயினும், ஒவ்வொருவனும் தன் உழைப்புக்கேற்ற ஊதியத்தைப் பெறுவான்.
* ஆட்டு மந்தைக்குள் வாசல் வழியே நுழையாமல் வேறு வழிகளில் நுழைபவன் கள்ளனாயிருப்பான். கொள்ளைக்காரனாயுமிருப்பான்.
-பைபிள் பொன்மொழிகள்

ஞாயிறு, 29 ஜூலை, 2012

நிமிர வைத்த உழைப்பு!


"ஒரு ரூபாய்க்கு சப்பாத்தி விற்கிறோம்!'

குறைந்த விலையில் சப்பாத்தி விற்கும், மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த மாரியம்மா: ஓசூர் அருகில் உள்ள, கொத்தகொண்டப்பள்ளி கிராமத்தில், 400க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கிறோம். கிராமப் பகுதி என்பதால், படித்தவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். இங்கு, ஆண்களும், பெண்களும் விவசாயக் கூலி வேலைகளுக்குச் சென்று கொண்டிருந்தோம். வறுமையான சூழ்நிலையிலும், குழந்தைகளை படிக்க வைக்க நினைத்தோம். ஆனால், எங்களுக்கு சாப்பாட்டிற்கே கஷ்டமாயிற்றே... அதனால், கிராமப் பெண்கள், சுயமாக தொழில் செய்து முன்னேற முடிவெடுத்தோம். அந்த சமயத்தில் தான், "வேணுகோபால் சேவைகள் அறக்கட்டளை' சார்பில், பல கிராம மக்களுக்கு, உதவி களும், பெண்களுக்கு இலவசப் பயிற்சிகளையும் செய்து வருவது பற்றி அறிந்து, உதவி யை நாடினோம். எங்கள் ஆர்வத்தைப் புரிந்து கொண்ட அவர்கள், அனைத்துப் பெண்களுக்கும் தரமாக சப்பாத்தி தயாரிப்பது குறித்தும், அதன் வியாபார உத்திகளையும் சொல்லிக் கொடுத்து, இமாச்சலப் பிரதேசத்திலிருந்து பயிற்சியாளர்களை அழைத்து வந்து, இலவசமாக ஒரு மாதம் பயிற்சி அளித்தனர். பயிற்சி முடித்த பின், நம்பிக்கையுடன் தொழிலில் இறங்கினோம். வசதியுள்ளவர்கள் ஒரு, "செட்' சப்பாத்திக்கு, 30 ரூபாய் வரை செலவு செய்து சாப்பிடுவர். ஆனால், ஏழைகள்? அதனால், ஒரு ரூபாய்க்கு சப்பாத்தி விற்கலாம் என, முடிவு செய்து, செயலில் இறங்கினோம். வீட்டில் அதிகளவில், சப்பாத்திகளை செய்ய முடியாது என்பதால், சிறிய தொழிற்கூடத்தை நாங்களே அமைத்தோம். இதற்காக வங்கியில், நான்கு லட்சம் ரூபாய் கடன் வாங்கி, எங்களுக்குச் சொந்தமான நிலத்திலேயே, ஆறு கட்டடங்களை வெற்றிகரமாகக் கட்டி முடித்தோம். எங்கள் பகுதியில் உள்ள, ஆறு சுய உதவிக் குழுக்களையும் சேர்த்து, 110 பெண்கள் இத்தொழிலில் இன்று வரை, ஒற்றுமையாகச் செயல்பட்டு வருகிறோம். குறைந்த விலைக்கு சப்பாத்தி விற்பதால், பல கூலித் தொழிலாளிகள் வயிறும், மனமும் நிறைந்து, வாயாரப் பாராட்டுகின்றனர். அந்தப் பாராட்டு தான், எங்களை மேலும் சிறப்பாகச் செயல்பட வைக்கிறது.

     வீழ்த்திய திருமணம்; நிமிர வைத்த உழைப்பு!    

பால்ய விவாகத்தால் பாதிக்கப்பட்டு, இன்று சாதனைப் பெண்ணாக உருவெடுத்துள்ள கல்பனா: நான் ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே, பெற்றோர் எனக்கு திருமணம் செய்து விட்டனர். கணவருடன் மும்பையில் குடியேறிய என்னை, புகுந்த வீட்டினர் கொடுமைப்படுத்தினர். எதிர்த்துப் போராட முடியாத வயதில், தற்கொலைக்கு முயன்றேன்; ஆனால், காப்பாற்றப்பட்டேன். கணவர் குடும்பத்து ஆண்களால், பாலியல் தொந்தரவுகளுக்கும் ஆளானேன். என்னைப் பார்க்க வந்த தந்தை, நான் அனுபவிக்கும் கொடுமைகளைப் பார்த்து தாங்க முடியாமல், அவருடனேயே அழைத்துச் சென்று விட்டார். பெற்றோர் வீட்டிற்கு வந்தும், எனக்கு நிம்மதி இல்லை. அக்கம் பக்கத்தினர், என்னைப் பற்றி அவதூறாகப் பேச துவங்கினர். மீண்டும் தற்கொலைக்கு முயன்றேன்; என் அத்தை காப்பாற்றி விட்டார். என் இரண்டாவது தற்கொலை முயற்சி, வாழ்வின் மீது பிடிப்பை ஏற்படுத்தியது. 16 வயதில் மீண்டும், மும்பைக்கே வந்து விட்டேன். ஒரு நிறுவனத்தில், தையல் இயந்திரங்களை இயக்கும் பணியில் வேலைக்குச் சேர்ந்தேன். என் தங்கை எனக்கு, துணையாக வந்திருந்தாள். நான் கஷ்டத்தில் இருந்த சமயம் தான், பணத்தின் மதிப்பை உணர ஆரம்பித்தேன். வங்கியில் கடன் பெற்று, சிறிய அளவில், "பர்னிச்சர்கள்' வாங்கி விற்கும் தொழில் செய்தேன். இந்த தொழில், எனக்கு இரண்டாவது திருமண பந்தத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. என் நண்பர் நடத்தி வந்த சிறிய நிறுவனம், நஷ்டத்தில் இயங்கியதால், மூட தீர்மானித்தார். அந்நிறுவனத்தை நான் நடத்துகிறேன் என, நம்பிக்கையுடன் வாங்கினேன். இரவு, பகல் பாராமல் தொழிலாளர்களுடன் உழைத்தேன். என் கஷ்டம் வீண் போகவில்லை. இன்று என், "கமானி ட்யூப்ஸ்' நிறுவனம் மூலம், ஆண்டிற்கு, 100 கோடி ரூபாய் சம்பாதிக்கிறேன். சிறந்த தொழிலதிபருக்கான ஜனாதிபதி விருதையும் பெற்றுள்ளேன். பிறரின் கேலி பேச்சுகளுக்கு செவி கொடுக்காமல், உறுதியான உள்ளத்துடன் எந்த வேலையை செய்தாலும் வெற்றி பெறலாம்; அது தான், என் வெற்றி ரகசியம்.