திங்கள், 22 அக்டோபர், 2012

"அயராத உழைப்பால் நிமிர்ந்தது வாழ்க்கை!'



சொல்கிறார்கள்


"அயராத உழைப்பால் நிமிர்ந்தது வாழ்க்கை!'


முதலீடாக, 500 ரூபாயில் துவங்கி, பலகாரங்கள் விற்பனையில், இன்று மாதம் நான்கு லட்சம் ரூபாய் வியாபாரம் பார்க்கும் இன்பவள்ளி: என் கணவர் மளிகைக் கடை வைத்திருந்தார். எதிர்பாராத விதமாக அதில், நஷ்டம் ஏற்பட, கடன் ஒரு புறம், மகன்களின் படிப்பு மறுபுறம் என, இக்கட்டான சூழ்நிலையிலிருந்து மீள முடியாமல், தவித்தேன். தஞ்சையிலிருந்து, பிழைப்புத் தேடி திருச்சி வந்தோம். அங்கு, கணவருக்கு கிடைத்த மிகக் குறைவான ஊதியம் மூலம், மாதம் முழுவதும் சிக்கன வாழ்க்கை நடத்தினேன்.அப்போது, எங்கள் பகுதியில் துவங்கிய மகளிர் சுய உதவிக் குழுவில் நானும் உறுப்பினராக சேர்ந்தேன். தெரிந்தவர்கள் மூலம், 500 ரூபாய் கடன் வாங்கி, காய்கறிகளைக் கொண்டு, 10 வகையான ஊறுகாய்களை தயார் செய்தேன். ஒரு முறை மகளிர் சுய உதவிக் குழுக்களுக்குள் நடந்த போட்டியில், என் தயாரிப்பான, பாகற்காய் ஊறுகாய்க்கு பரிசு கிடைத்தது. பின், ஆங்காங்கே ஸ்டால்கள் அமைத்ததன் மூலம், நல்ல பெயர் கிடைத்தது.ஒரு முறை தெரிந்தவருக்கு, தேன் குழல் முறுக்கு செய்து கொடுத்தேன். அது அவருக்கு பிடித்துப் போக, செட்டிநாட்டுப் பலகாரங்கள் செய்து விற்பனை செய்தால், நல்ல லாபம் பார்க்க முடியும் என, யோசனை கூறினர். நானும் ஒரு ஆர்வத்தில், பலகாரங்கள் செய்ய துவங்கினேன்.மகளிர் தொழில் முனைவோர் சங்கம் மூலம், 25 ஆயிரம் ரூபாய் கடன் பெற்று, பலகாரம் செய்ய மிஷின் வாங்கினேன். என் தயாரிப்பின், சுவையும், தரமும் நன்றாக இருந்தாலும், மார்க்கெட்டிங் செய்வதில் தயக்கம் இருந்தது. திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசிரியர் மூலம், மாணவர்களிடம் விற்பனை செய்தேன்.வியாபாரம் வளரத் துவங்கியது. பல ஸ்வீட் கடைக்காரர்கள், டிபார்ட்மென்ட் ஸ்டோர் முதலாளிகள் பலருக்கும் என் கை பக்குவம் பிடித்ததால், ஆர்டர் கொடுத்தனர். மாவு வறுப்பது, அரைப்பது, இடிப்பது என, அனைத்து வேலைகளையும் நானே கவனமாக செய்வேன். 10க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிகின்றனர். இன்று மாதத்திற்கு, நான்கு லட்சம் ரூபாய்க்கு மேல் வியாபாரம் செய்கிறேன்.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக