மனநலம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மனநலம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 30 ஜூலை, 2013

மனத்துணிவால் தற்கொலையைத் தவிர்க்கலாம்!

மனத்துணிவால் தற்கொலையை த் தவிர்க்கலாம்!

மன அழுத்தம், தற்கொலை எண்ணம் போன்ற, எதிர்மறை மனநிலை கொண்டோருக்கு, இலவச ஆலோசனை வழங்கும், மன நல மருத்துவர் இலட்சுமி: தற்கொலைக்கு முயற்சிப்போரின் பிரச்னைக்கு தீர்வு வழங்கவும், இலவச ஆலோசனை வழங்கவும், "சினேகா' என்ற அமைப்பை, 26 ஆண்டுகளுக்கு முன் ஆரம்பித்தேன். இங்கு, 24 மணி நேரமும், எங்கள் தன்னார்வ தொண்டர்கள் பணியாற்றுவதால், எப்போதும் ஆலோசனை பெறலாம். உறவுகளில் குழப்பம், தேர்வில் தோல்வி, குடும்பத்தில் பிரச்னை என, தமிழகத்தில் மட்டும், கடந்த ஆண்டு, 16,927 பேர் தற்கொலை செய்துள்ளதாக, சமீபத்தில் வெளியான, தேசிய குற்றவியல் அறிக்கை கூறுகிறது; ஆந்திராவில், 14,238 பேர், கர்நாடகாவில், 12,753 என, பட்டியல் நீழ்கிறது. தற்கொலையை, யாருமே விரும்பி செய்வதில்லை. "என் பிரச்னையை, காது கொடுத்து கேட்க, யாரும் இல்லையே' என்ற குற்ற உணர்ச்சியால் தான், தற்காலிக பிரச்னைகளுக்கு கூட, தற்கொலை தான் நிரந்தர தீர்வு என, அவசர கோலத்தில், விபரீத முடிவு எடுக்கின்றனர். பின், மரண படுக்கையில், தன் முடிவுக்கு வருத்தப்பட்டு, "நாம் பிழைக்க மாட்டோமா' என, ஏங்குவோரும் உண்டு. தீவிர மன அழுத்தத்தில், தற்கொலை செய்ய முயற்சிக்கும், 80 சதவீத பேர், தான் தற்கொலை செய்யப் போவதை, நெருங்கியவரிடம் சொல்ல முயற்சிக்கின்றனர். பாதிக்கப்பட்டவர் என்ன சொல்ல வருகிறார் என, முற்றிலும் கேட்காமல், "இது என்ன பெரிய கஷ்டம்' என, நெருங்கியவர், உதாசீனம் படுத்துவதாலே, அதிக தற்கொலைகள் நிகழ்கின்றன. இளைய தலைமுறையினர், வேலை, படிப்பு, சொந்த விஷயம், கேளிக்கை, காதல் என, ஆசைப்பட்ட நிமிடத்திலேயே அனைத்தும் கிடைக்க வேண்டும் என, எதிர்பார்க்கின்றனர். அப்படி நடக்காவிட்டால், உடனே தற்கொலை செய்கின்றனர். ஏமாற்றங்களை தாங்கும் மனப்பக்குவமும், தைரியமும் இருந்தால், தற்கொலையை தவிர்க்கலாம். தொடர்புக்கு: 044-2624 0050,

திங்கள், 17 ஜூன், 2013

கோடியிலும் கிடைக்காத மன நிறைவு

கோடியிலும் கிடைக்காத மன நிறைவு
மனநலம் பாதிக்கப்பட்டு, சாலையோரங்களில் சுற்றி திரிபவர்களுக்கு மறுவாழ்வு கொடுக்கும், வெங்கடேசு: நான், சென்னை திரு வான்மியூரைச் சேர்ந்தவன். 10ம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கி றேன். கூரியர் டெலிவரி, மருத்துவமனையில் வார்டு பாய், கம்பி கட்டுவது என, நான் பார்க்காத வேலையே இல்லை. இருந்தாலும், கிடைக்கிற ஓய்வு நேரங்களில், நூலகத்திற்கு செல்லும் பழக்கம் இருந்தது. புத்தர், நபிகள் நாயகம், வள்ளலார் போன்றோரின், புத்தகங்களை படித்த போது, அன்பு ஒன்றை மட்டுமே அவர்கள் வலியுறுத்தி இருந்தனர். இக்கருத்துக்கள், என் மனதில் அப்படியே ஆழமாக பதிந்தன. 1995ல், திருவான்மியூர் பகுதியில், அரை நிர்வாணமாக, ஒரு வட மாநில பெண் சுற்றி திரிந்தார். மற்றவர்கள் வேடிக்கை பார்க்க, நான் முன்வந்து அவரை காப்பகத்தில் சேர்த்து வீடு திரும்பிய போது, எனக்கு ஏற்பட்ட மனதிருப்தி, கோடி ரூபாய் கிடைத்தாலும் வராது. அடுத்த உயிர்கள் மீது அன்பு செலுத்திய போது, உருவான அற்புதமான அனுபவத்தை அன்று தான், உணர்ந்தேன். இந்த அனுபவத்திற்கு பின், குழந்தைகள், பெண்கள், முதியோர் என, சாலையோரங்களில் மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றி திரிந்த, 1,000த்திற்கும் மேற்பட்டவர்களை, அரசு மற்றும் தனியார் காப்பகங்கள் மற்றும் மருத்துவமனைகளில் சேர்த்திருக்கிறேன். அவர்களுக்கு தெரிந்த மொழியிலேயே பக்குவமாக பேசி, குளிப்பாட்டி, தலை முடியை வாரிவிட்டு, ஆடைகளை அணிவித்து, சாப்பிட வைத்த பின்னரே அங்கு சேர்ப்பேன். சேர்த்த பின்னும், அவர்கள் எப்படி இருக்கின்றனர் என, தொடர்ந்து பார்த்து வருகிறேன். மற்றவர்களுடன் இணைந்து, ஒரு தொண்டு நிறுவனமாகவோ, தனியார் அமைப்பாகவோ இல்லாமல், தனியொரு மனிதனாகவே கடந்த, 18 ஆண்டுகளாக, இச்சேவையை செய்து வருகிறேன். இச்சேவையை செய்யும் போது, ஒரு சில நேரங்களில், வீடு திரும்ப ரொம்ப நேரம் ஆகும்; இருந்தாலும், என் மனைவி சலித்துக் கொள்ளாமல், என்னை ஊக்கப்படுத்துவாள்.
தொடர்புக்கு: 93801 85561

வெள்ளி, 19 அக்டோபர், 2012

மிகுதியான கற்பனை, சிக்கல்களை உண்டாக்கும்

சொல்கிறார்கள்

"அதீத க் கற்பனை , சிக்கல்களை உண்டாக்கும்!'

மன நல மருத்துவர் ரஹ்மான்கான்: "நாலு பேர் நாலு விதமாக நம்மைப் பற்றி...' என்பதான சந்தேகம், நம் அனைவரையும் கடந்து செல்வது தான். ஆனால், எந்தவொரு முகாந்திரமும் இல்லாது, ஒரே நாளில் அடிக்கடி இந்த சந்தேகம் ஏற்பட்டால், அது தீவிர உளவியல் பாதிப்பின் ஆரம்பமாக இருக்கும்.சுயமதிப்பீடு குறைவாக இருப்பவர்கள், ஏதேனும் குற்ற உணர்வில் உழல்பவர்கள், தாழ்வு மனப்பான்மையில் சிக்கித் தவிப்பவர்கள், சந்தேகப்படுவதை குணமாகக் கொண்டவர்கள், கட்டுப்பாடான சூழலில் இறுக்கமாக வளர்பவர்கள், இப்படிப்பட்டவர்களுக்கு, இந்த எண்ணம் மேலோங்கும்.

அடுத்த கட்டமாக, மனச்சிதைவு, அதி தீவிர சந்தேக உணர்வு, அதீத மனக் கிளர்ச்சி என, மற்ற சில மனநலக் கேடுகளை இதுவே வரவழைத்து விடும்.இல்லாததை இருப்பதாகவும், இருப்பதை இல்லாததாகவும், சுலபமாக கற்பனை செய்து கொள்வர். நண்பர்கள், குடும்பத்தினர்களையே எதிரியாக பாவித்து, சங்கடங்களை உருவாக்கிக் கொள்வர்.
ஒரு கட்டத்தில், செய்தித் தாளில் வரும் செய்தியும், "டிவி' சீரியல்களும் கூட, தம்மை கிண்டல் செய்யவே திட்டமிட்டு ஒளிபரப்புவதாகவும், மிகையான கற்பனைக்குள், தீவிர நம்பிக்கையுடன், உலா வருவர்.இந்தப் போக்கில், திடீரென எண்ணம், சொல், செயல் எதுவுமே, ஒன்றுக்கொன்று தொடர்பின்றி, மாறிப் போகும் ஆபத்தும் உண்டு.
பாதிக்கப்பட்டவர் பேசுவதை, புலம்புவதை பரிகாசம் இன்றி, காது கொடுத்துக் கேட்கப் பழக வேண்டும்.

இந்த முயற்சியில் பலனில்லை எனில், அவரின் நிலையில், தூக்கமின்மை, பசியின்மை, கவனச்சிதறல், சமூகத்துடன் ஒன்ற முடியாது, நாளும் புதுப் பிரச்னைகள் என, கூடுதல் உபத்திரவங்கள் உருவானால், பாதிக்கப்பட்டவருக்கு மருத்துவம் அவசியம்.
ஆரம்ப நிலையில் மன நல ஆலோசகரிடம் சென்றால், கவுன்சிலிங் மூலம், மனப் பயிற்சி கிடைக்கும். கூடுதல் அவஸ்தைகளுடன், சற்றே முரண்டு பிடிக்கும் நிலையில் இருப்பவருக்கு, மருந்து, மாத்திரைகளுடன் கூடிய மனநல கவுன்சிலிங் தரப்படும்.