செவ்வாய், 25 செப்டம்பர், 2012

"இசைக் கலைஞனாக வெல்வேன்.!'



சொல்கிறார்கள்


"இசைக் கலைஞனாக  வெல்வேன்.!'
ஒன்றரை அடி உயரம் கொண்ட, பதினாறு வயது இளைஞர், பெரிய சாமி: சேலம் மாவட்டம், நாயக்கன்பட்டி கிராமம் தான் என் ஊர். பெற்றோர் கூலி வேலை செய்கின்றனர். நான், 10ம் வகுப்பு வரை படித்தேன். சக நண்பர்கள், என் உயரக் குறைவை கிண்டல் செய்ததால், மேற்கொண்டு படிப்பை தொடரவில்லை.எனக்கு இசையின் மீது ஆர்வம் அதிகம். "டிவி'யில் ஒளிபரப்பாகும் பாடல்களுக்கு தகுந்தவாறு, ஏதாவது டப்பாவிலோ, காலிக் குடத்திலோ தினமும் தாளம் அடித்துக் கொண்டிருப்பேன்.நண்பன் மூலமாக, சேலத்தில், அரசு இசைப்பள்ளி இயங்குவதைக் கேள்விப்பட்டேன். அங்கு சேர விரும்பிய நான், வசதியில்லாத காரணத்தால், என் அம்மாவுடன், மக்கள் குறை தீர்க்கும் நாளன்று, கலெக்டர் மகாபூஷணத்தைச் சந்தித்து, மனு கொடுத்தேன்.என் இசை ஆர்வத்தைப் புரிந்து கொண்ட கலெக்டர், உடனடியாக, சேலம் இசைப் பள்ளியின்  தலைமை ஆசிரியர் சங்கர்ராமனை, சில இசைக் கருவிகளோடு வரவழைத்து, என் ஆர்வத்தை சோதிக்கச் சொன்னார்.அவர், மிருதங்கம் எடுத்து வந்து, கலெக்டர் அலுவலகத்திலேயே வாசிக்கச் சொன்னார்; நானும் வாசித்தேன். என் வாசிப்பில், தாளலயம் இருப்பதை உணர்ந்த பள்ளி முதல்வர், என்னை மிருதங்க வகுப்பில் சேர்த்துக் கொள்ளலாம் என்று கூறினார். உடனே கலெக்டர், என் ஏழ்மை நிலையைக் கருதி, மூன்று ஆண்டு மிருதங்க வகுப்பில், கட்டணமில்லாமல் சேர்த்துக் கொள்ளவும், இலவச உணவுடன் ஹாஸ்டலில் தங்கிக் கொள்ளவும், மாதம், 400 ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கவும் உத்தரவிட்டார்.இந்த இசைப் பள்ளியின் சூழ்நிலையே, ரம்மியமாக இருக்கிறது. என் குறையைப் பார்க்காமல், என் ஆர்வத்திற்கு மட்டுமே மதிப்பு கொடுக்கிற தலைமை ஆசிரியர்  மற்றும் ஆசிரியர்களுக்கு, நான் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன்.உடன் பயில்கிற மாணவர்களின் இசை ஆர்வம், என்னை மேலும் ஊக்கப்படுத்துகிறது. நிச்சயம் ஓர் இசைக் கலைஞனாக, எதிர்காலத்தில் ஜெயிப்பேன். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக