music லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
music லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 31 ஆகஸ்ட், 2013

வடகொரியாவில் பாடகி உட்பட 12 பேருக்கு மரணத்தண்டனை

வடகொரியாவில் பாப் பாடகி உட்பட 12 பேருக்கு மரண த் தண்டனை நிறைவேற்றம்


வடகொரியாவில் ஆபாச நடனமாடி, அதனை சிடிக்களாக விற்பனை செய்த பாப் பாடகி மற்றும் அவரது குழுவில் இடம்பெற்ற 11 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
உன்னாஸ் ஆர்கெஸ்ட்ரா என்ற இசைக் குழுவை நடத்தி வரும் அயான் சாங்-வோல் என்பவர், ஆபாசமாக நடனமாடி அதை வீடியோ படம் எடுத்து பல்வேறு நாடுகளில் விற்பனை செய்துள்ளார்.  இது வடகொரிய நாட்டு சட்டப்படி குற்றமாகும்.
இதன் அடிப்படையில் கைது செய்யப்பட்ட ஹையான் சாங் -வோல் உட்பட இசைக் குழுவைச் சேர்ந்த 12 பேர் கைது செய்யப்பட்டு, விசாரணையின் முடிவில் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, இயந்திர துப்பாக்கியால் சுட்டு அவர்கள் 12 பேருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு விட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உயிரிழந்த ஹையான் சாங்- வோல் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் முன்னாள் காதலி என்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 25 செப்டம்பர், 2012

"இசைக் கலைஞனாக வெல்வேன்.!'



சொல்கிறார்கள்


"இசைக் கலைஞனாக  வெல்வேன்.!'
ஒன்றரை அடி உயரம் கொண்ட, பதினாறு வயது இளைஞர், பெரிய சாமி: சேலம் மாவட்டம், நாயக்கன்பட்டி கிராமம் தான் என் ஊர். பெற்றோர் கூலி வேலை செய்கின்றனர். நான், 10ம் வகுப்பு வரை படித்தேன். சக நண்பர்கள், என் உயரக் குறைவை கிண்டல் செய்ததால், மேற்கொண்டு படிப்பை தொடரவில்லை.எனக்கு இசையின் மீது ஆர்வம் அதிகம். "டிவி'யில் ஒளிபரப்பாகும் பாடல்களுக்கு தகுந்தவாறு, ஏதாவது டப்பாவிலோ, காலிக் குடத்திலோ தினமும் தாளம் அடித்துக் கொண்டிருப்பேன்.நண்பன் மூலமாக, சேலத்தில், அரசு இசைப்பள்ளி இயங்குவதைக் கேள்விப்பட்டேன். அங்கு சேர விரும்பிய நான், வசதியில்லாத காரணத்தால், என் அம்மாவுடன், மக்கள் குறை தீர்க்கும் நாளன்று, கலெக்டர் மகாபூஷணத்தைச் சந்தித்து, மனு கொடுத்தேன்.என் இசை ஆர்வத்தைப் புரிந்து கொண்ட கலெக்டர், உடனடியாக, சேலம் இசைப் பள்ளியின்  தலைமை ஆசிரியர் சங்கர்ராமனை, சில இசைக் கருவிகளோடு வரவழைத்து, என் ஆர்வத்தை சோதிக்கச் சொன்னார்.அவர், மிருதங்கம் எடுத்து வந்து, கலெக்டர் அலுவலகத்திலேயே வாசிக்கச் சொன்னார்; நானும் வாசித்தேன். என் வாசிப்பில், தாளலயம் இருப்பதை உணர்ந்த பள்ளி முதல்வர், என்னை மிருதங்க வகுப்பில் சேர்த்துக் கொள்ளலாம் என்று கூறினார். உடனே கலெக்டர், என் ஏழ்மை நிலையைக் கருதி, மூன்று ஆண்டு மிருதங்க வகுப்பில், கட்டணமில்லாமல் சேர்த்துக் கொள்ளவும், இலவச உணவுடன் ஹாஸ்டலில் தங்கிக் கொள்ளவும், மாதம், 400 ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கவும் உத்தரவிட்டார்.இந்த இசைப் பள்ளியின் சூழ்நிலையே, ரம்மியமாக இருக்கிறது. என் குறையைப் பார்க்காமல், என் ஆர்வத்திற்கு மட்டுமே மதிப்பு கொடுக்கிற தலைமை ஆசிரியர்  மற்றும் ஆசிரியர்களுக்கு, நான் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன்.உடன் பயில்கிற மாணவர்களின் இசை ஆர்வம், என்னை மேலும் ஊக்கப்படுத்துகிறது. நிச்சயம் ஓர் இசைக் கலைஞனாக, எதிர்காலத்தில் ஜெயிப்பேன். 

வெள்ளி, 31 ஆகஸ்ட், 2012

என்னால் பெற்றோருக்கு ப் பெருமை!




சொல்கிறார்கள்



என்னால் பெற்றோருக்கு ப் பெருமை! இரண்டாம் வகுப்பு படிக்கும் போதே, இசையால் அனைவரையும் கவர்ந்திழுக்கும் திவ்யதர்ஷன்: சிறு வயதில் பேச்சு வந்தவுடன், "டிவி'யில் வரும் பாட்டை பார்த்து, "ஹம்மிங்' செய்து கொண்டே இருப்பேன். என் செய்கை, அம்மாவிற்கு ஆச்சரியமாக இருந்தது. எனக்கு இசையில் உள்ள ஆர்வத்தை அறிந்த என் அப்பா, இசை வகுப்பில் சேர்த்து விட்டார். மூன்றரை வயதிலேயே, "கீ போர்டு' பழக ஆரம்பித்தேன். ஒரு வருடத்திலேயே நன்றாக வாசிக்க ஆரம்பித்து விட்டேன். என் மாஸ்டர், "நோட்ஸ்' தந்தால், அதையும் அழகாக வாசிக்க ஆரம்பித்தேன். என் இசை, எங்கள் பகுதியில் பிரபலமானது. ஒரு முறை திருமண விழாவில், "கீ போர்டு' வாசிக்க ஆள் இல்லாததால், என்னையும், அழைத்துச் சென்றனர். நான் வாசித்தது, அங்கிருந்த அனைவரையும் கவர்ந்தது. வந்தவர்களெல்லாம் பாராட்டினர். அதிலிருந்து நிறைய நிகழ்ச்சிகளுக்கு சென்று வாசிக்கிறேன். நான் பங்கேற்கும் போட்டிகளில் எல்லாம், பதக்கமும், ஷீல்டும் வென்று விடுவேன். மணப்பாறை கோவில் விழாவில், என், "கட்-அவுட்'டும் வைத்திருந்தனர். என் பெற்றோருக்கு பெருமையாக இருந்தது. என் இசைத் திறமையை பார்த்து, நான் கேட்ட, "கீ போர்டை' என் பாட்டி, 20 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கிக் கொடுத்தார். "நோட்ஸ்' இல்லாமல் மனப்பாடமாக என்னால், 70 பாடல்களை, "கீ போர்டு' மூலம், வாசிக்க முடியும். "மெலோடி'யான பாடல்களுக்கு இசை வாசிப்பது, எனக்கு மிகவும் பிடிக்கும். பள்ளியில் கூட, நண்பர்கள் என்னை பாட்டுப் பாடச் சொல்லி ரசித்துக் கேட்பர். என் படிப்பு கெடாத வகையில், இசை பயிற்சிக்கும், நிகழ்ச்சிக்கும் நேரம் ஒதுக்குகிறேன். விடுமுறை நாட்களில் தான் கச்சேரிக்கு செல்வேன்.

திங்கள், 27 ஆகஸ்ட், 2012

திருக்குறள் இசை!



திருக்குறள் இசை!




மெல்லிய மழைத் தூறல் தில்லியை நனைத்துக் கொண்டிருந்த ஞாயிறு மாலை நேரம். தில்லித் தமிழ்ச் சங்கத்தின் திருவள்ளுவர் அரங்கில், இனிய இசை கதவிடுக்கின் வழியாகத் தமிழ்ச் சொற்களைச் சுமந்து கொண்டு கசிந்தது.  உள்ளே எட்டிப் பார்த்தால், 14 வயது இளைஞர்!  ‘ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு எனும் திருக்குறளை இசையில் தோய்த்துப் பாடிக் கொண்டிருக்கிறார்!  பெயர் அமுதீசர் சச்சிதானந்தம். ஏறத்தாழ ஒருமணி நேர நிகழ்ச்சியால் அங்கிருந்தவர்களைக் குதூகலிக்கச் செய்தார்.    எங்கள் தந்தை, மூதாதையர் எல்லோரும் இலங்கைத் தமிழ் மண்ணைத் தாயகமாகக் கொண்டவர்கள். ஆனால் நான் பிறந்தது கனடாவில். இருந்தாலும் மண்ணின் மொழியும் இசையும் என்னுள் கலந்து விட்டிருக்கிறது!' என்று பணிவு, இறையன்பு, இசைநயம் ஆகியவற்றைக் கலந்து பேசத் தொடங்கினார். தொராண்டோவில் வாழும் இவர் தம்பி கபிலன் சச்சிதானந்தம் மிருதங்கக் கலைஞர்.  தன் அம்மா சுந்தரேசுவரி சச்சிதானந்தமே ஆசிரியை என்று சொன்னார். அதன் பிறகு, வாய்ப்பாட்டைப் பூமா கிருட்டிணனிடம் கற்றார். மிருதங்கத்தைத் திருவாரூர் பக்தவத்சலத்தின் சீடர் கௌரிசங்கர் பாலச்சந்திரனிடம் கற்றார்.  அமுதீசர், முறையாகக் கருநாடக இசையைக் கற்றிருந்தாலும் அரங்கேற்றம் எதுவும் நிகழ்த்தவில்லை. கனடாவில் பல இசை அமைப்புகளில் இசை நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறார். எட்டு வயது ஆனபோது கனடா தெய்விக இசை அரங்கம் என்னும் அமைப்பின் சார்பில் வரசித்தி விநாயகர் ஆலயத்தில் இசைக் நிகழ்ச்சியைத் தொடங்கியுள்ளார்.  “ஆனால், அதற்கு முன்பே ஒன்றரை வயதில் மிருதங்கம் வாசிக்கத் தொடங்கினேன் என்கிறார் அமுதீசர். வாய்ப்பாட்டு, மிருதங்க இசை இரண்டும் கற்றிருக்கும் அமுதீசர் நிறைய வழங்குவது வாய்ப்பாட்டு இசைதான்.  எட்டு வயதில் இசை வழங்கத் தொடங்கி, இன்று வரையில் 150 மேடைகளில் தேன் குரலால் கருநாடக இசையை வழங்கியிருக்கிறார். பெரும்பாலும், கனடாவிலும் அமெரிக்காவிலும் உள்ள தமிழ் அமைப்புகள், திருக்கோயில்கள், பண்பாட்டு அமைப்புகளின் மேடையில்தான்.  ஆனால் மிகவும் பெருமிதமாக இவர் கருதுவது, கிளீவுலேண்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டதைத்தான். அமெரிக்காவில் உள்ள கிளீவுலேண்டில் ஆண்டுதோறும் தியாகையர் வழிபாட்டு இசை நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். “அங்கு 2011ஆம் ஆண்டு தியாகையர் வழிபாட்டை ஒட்டி நடைபெற்ற இசைப் போட்டியில் பல்லவி பாடும் போட்டியிலும், மிருதங்க இசைப் போட்டியிலும் பரிசு பெற்றது எனக்கு நெகிழ்ச்சியான ஒன்று என்கிறார் அமுதீசர். அங்கு, இராக மாலிகை போல ‘தாள மாலிகை எனப்படும் இந்தப் போட்டியில் மூன்று வகையான தாளங்களைக் கலந்து இசைத்தார்.  புகழ்பெற்ற கருநாடக இசையறிஞர் திருச்சி சங்கரனும், இக்கின்சு பாகவதரும் அமெரிக்காவில் நிறுவிய ‘பாரதி கலா மன்றத்தில் பாடியதையும் பெருமையுடன் குறிப்பிட்டார் அந்த இளைஞர்.  இந்தியாவில் தில்லி மட்டுமின்றி பெங்களூர், சென்னை, திருச்சி, திருவரங்கம் ஆகிய இடங்களுக்குச் சென்று கருநாடக இசைப் பயணம் மேற்கொள்ளும் அமுதீசர், திருவரங்கத்தில் நாதசுர இசையறிஞர் சேக்கு மெகபூபு சுபானியிடம் நாதசுர பாணி இசையைக் கற்றுக் கொள்ளத் திட்டமிட்டுள்ளார். இந்த இசையை இதுவரை இணையம் வழியே கற்று வருகிறார் அமுதீசர்.  அமுதீசர் பெருமைப்படுவது, ஆபேரிப் பண்ணை (இராகத்தை) கனடா நாட்டு மண்ணில் பரப்பியதை. “2011ஆம் ஆண்டில், மார்க்காம் நகரத்தில், நான் பயிலும் இராண்டல் பொதுப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆபேரிப் பண்ணில் இசைக் குறிப்புகளை ஆயத்தம் செய்து வைத்துக் கொண்டு ‘கருவி (Orchestra) இசை வழங்கினேன்.  அதில், சாக்சபோன், கிளாரினெட்டு, திரம்பெட்டு போன்ற ஐந்து வகையான மேலைநாட்டுக் கருவிகளைக் கொண்டு ஆபேரியை இசைத்தோம். அது ஒருவகையான இணைப்பு இசையாகும் என்று கண்கள் பளிச்சிடக் கூறினார். உயோர்க் இரீசனில் நடைபெற்ற இசைப் போட்டியில் பரிசு வென்ற இவருக்கு இசை தம்பி கபிலன்தான்.

வியாழன், 3 மே, 2012

இசையுடன் புத்தக வாசிப்பு:

சொல்கிறார்கள்

இசையுடன் புத்தக வாசிப்பு:


பள்ளிக் குழந்தைகளுக்கு கதைகள் மூலம் புத்தகம் படிக்கும் வழக்கத்தை ஏற்படுத்தி வரும் நரேஷ்: கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், சென்னை ஐ.ஐ.டி.,யில் ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் படிப்பை முடித்தேன். குழந்தைப் பருவத்தில் இருந்தே நடிப்பு மீது எனக்கு ஆர்வம் அதிகம். படிப்பு முடித்தவுடன், ஒரு நாடகக் குழுவில் இணைந்து நாடக நடிகரானேன். இந்த சமயத்தில், என் கல்லூரி நண்பர், மிஸ்ராவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர், குழந்தைகளுக்கான கதைகளை புத்தக வடிவில் தயாரித்ததுடன், அதை ஆன்-லைனிலும் பிரபலப்படுத்த விரும்பினார். புத்தகத்தில் உள்ள கதைகளில் ஒன்றை பள்ளிக் குழந்தைகள் முன் நாடகமாக நடித்துக் காட்டலாம் என்ற எண்ணம் எனக்கு தோன்றியது. முதன்முறையாக, மயிலாப்பூரில் உள்ள ஒரு பள்ளியில் இதற்கான சோதனை முயற்சியில் இறங்கினோம். இந்நிகழ்ச்சி, மாணவர்களிடம் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. மாணவர்களிடம் புத்தகம் படிக்கும் பழக்கத்தை அதிகரிக்கச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன், நூலகம் உள்ள பள்ளிகளை தேர்வு செய்து, அங்குள்ள புத்தகத்தில், ஏதேனும் ஒரு பகுதியை நடிப்புடன் மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க ஆரம்பித்தேன். பள்ளி நூலகத்திற்கு, 15 சதவீதமே வருகை தந்து கொண்டிருந்த மாணவர்களின் எண்ணிக்கை, என் நிகழ்ச்சிக்குப் பின், 85 சதவீதமாகியுள்ளது என்பதை அறிந்து மகிழ்ச்சியாக இருக்கிறது. புத்தகம் படிப்பதற்கான இந்தப் புதுமை நிகழ்ச்சியை மாநிலம் முழுவதும் பரவச் செய்ய இந்த முயற்சியை, மேலும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளேன்.

வெள்ளி, 9 மார்ச், 2012


பிரபல நகைச்சுவை எழுத்தாளர் பாக்கியம் ராமசாமியால் நிறுவப்பட்ட அப்புசாமி - சீதா பாட்டி இசைக்கூடல் அமைப்பு, மற்ற சபாக்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. நன்றே அடிப்படை என்ற உயர்ந்த குறிக்கோளுடன் கலைஞர்களை தேர்ந் தெடுத்து, மேடை வாய்ப்பு கொடுக்கும் இதன் நோக்கங்கள் சிறப்பானவை. மயிலை, கற்பகாம்பாள் நகர் கோகலே சாஸ்திரி வளாகத்தில் நடைபெற்றது, இந்த இசை நிகழ்ச்சி. இசைக் கலைமணி மல்லிகா ரமணன் இந்த நிகழ்ச்சியில், மகாகவி பாரதியின் அற்புத படைப்புகளை முழுவதுமாக தேர்ந்தெடுத்து, தமிழ் மணக்க, செவிகள் இனிக்கப் பாடியது, கேட்க இன்பமாக இருந்தது. கர்நாடக இசைக் கச்சேரிகளில் தமிழ்ப் பாடல்கள் பெரும்பாலும், துக்கடாக்களின் பகுதியிலோ அல்லது இடைச் செருகலாகவோ மட்டுமே இடம் பெற்று வருவது, மிக வருந்தத்தக்க நிலையாகும். மிகத் துணிவாக, பாரதியின் முழு தமிழ்ப் பாடல்களை மட்டுமே உள்ளடக்கிய இசைக் கச்சேரிக்கு ஏற்பாடு செய்திருந்தது. ஒரு வேளை, மகாகவி பாரதியின் வீரம் செறிந்த பாடல்கள் காரணமாக இந்த ஏற்பாடா எனத் தெரியவில்லை.

மல்லிகா ரமணன் நிகழ்ச்சியின் துவக்கத்தில், மகாகவி பாரதியின் விநாயகர் நான்மணி மாலையில் இருந்து, கற்பக விநாயக கடவுளைப் போற்றி (கல்யாணி) என்று மதுரமாகப் பாடி, தொடர்ந்து பாருக்குள்ளே (ஜோன்புரி) - மற்றும் இமயமலை (மோகனம் - சண்முகப்ரியா - பெகாக்) ராகங்களில் பாடியது, குறிப்பாக சங்கதிகளில் வல்லினம், மெல்லினம் தெரிந்து இதமாகப் பாடியது, கேட்க பரவசமாக இருந்தது.

நிகழ்ச்சியில், மகாகவி பாரதியின் அருமையான பாடல்களாக செந்தமிழ் நாடெனும் (செஞ்சுருட்டி), எந்தையும் தாயும் (இந்தோளம்), "வாழ்க நீ எம்மானிந் (சுருட்டி) கானடா - மோகனம் - தன்யாகி, (மத்யமாவதி) காந்திஜி மீது அவர் பாடிய வரிகளில், மனம் நெகிழ்ந்துருகியது. வெள்ளைத் தாமரை (பீம்ப்ளாஸ்) கலைமகளின் சிறப்பு சங்கதிகள் அருமை. தீராத விளையாட்டுப் பிள்ளை (ராகமாலிகை) உச்சரிப்பு தெளிவுடன், அமரர் டி.கே.பியை நினைவு படுத்தியது. ரமணனின் குரலில், நவரச உணர்வுகளையும் கேட்டு மகிழ முடிந்தது. வாழிய செந்தமிழுடன் நிகழ்ச்சி இனிதே முடிந்தது. மோகனம் - இந்தோனம் ராகங்களில் விரிவுகளை அநாயாசமாக, குறிப்பாக மேல்ஸ்தாயி படு துல்லியமாக கேட்க பரவசமூட்டியது. டாக்டர் பாலமுரளியிடம் பயின்றவர் என்று அறியப்பட்ட, இப்படிப்பட்ட இசைக் கலைஞர்களின் பாடல்களை இந்த மேடையிலாவது கேட்டு மகிழும் வாய்ப்பு கிடைத்ததற்காக, அப்புசாமி - சீதாபாட்டி இசைக்கூடலை வாழ்த்தலாம். மல்லிகா ரமணனுக்கு பக்கவாத்தியம் படு அமர்க்களம். வயலினில் சிவகாமி நாராயணனின் அடக்கமும், நயமுமான வாசிப்பு மனதை விட்டகலவில்லை. மிருதங்கத்தில் மதுரமான நாதத்துடன், நயமாக வாசித்த கலைஞர் லட்சுமி கணேஷ், ஒரு பெரிய லயசிம்மத்தின் புதல்வர். கும்பகோணம் நாராயணசாமி அய்யர் லயத்தில் ஒரு ஆலவிருட்சமாக திகழ்ந்தவர் மட்டுமின்றி, பல லய வேர்களை உருவாக்கியவர். லட்சுமி கணேஷ் இந்த நிகழ்ச்சியில் வாசித்த விதம், மிக உயர்வானது; பாராட்டத்தக்கது.

- மாளவிகா

சனி, 15 ஜனவரி, 2011

music sense is basic sense

தாய்மொழியைக் கற்றுக் கொடுங்கள் என்னும் ஆசிரியரின் அறிவுரையை அனைவரும் பின்பற்றினால் நாடு நலம் பெறும்! வளம் பெறும்! ஆனால், தமிழ் நாட்டில் பிற மொழிக்கல்விக்குத் தரும் ஊக்கம் தாய்த்தமிழுக்கு இல்லையே! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

சங்கீத ரசனை இந்தியரின் அடிப்படை உணர்வு: 
தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன்

சென்னை, டிச. 14: சங்கீத ரசனை இந்தியர்களின் அடிப்படை உணர்வு என்று தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன் தெரிவித்தார்.  ஹம்ஸத்வனி அமைப்பின் 21-வது ஆண்டு இசை, நாடக விழா சென்னையில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இந்த விழாவைத் தொடக்கி வைத்து தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன் பேசியதாவது: உலகில் வேறு எந்த நாட்டுக்கும், பகுதிக்கும் இல்லாத பெருமை சென்னைக்கு உண்டு. ஆண்டின் 365 நாள்களும் - இலக்கியம், கலை, நாடகம், ஆன்மிகம் என ஏதாவது ஒரு நிகழ்ச்சி தினந்தோறும் ஏதாவது ஒரு பகுதியில் நடத்தப்பட்டு வரும் பெருமை சென்னைக்கு மட்டுமே உண்டு.  உலகில் பல்வேறு இனங்கள் உள்ளன. அந்தந்த இனங்களுக்கு என்று சில தனித்தன்மைகள் உண்டு. சில இனங்கள் செல்வத்துக்கு முன்னுரிமை அளிக்கும். நாடுகளைப் பிடிப்பதிலும் மதத்தைப் பரப்புவதிலும் வேறு சில இனங்கள் ஆர்வம் காட்டும். ஆனால் மனிதன் எப்படி வாழ வேண்டும் என காட்டுவதுதான் நம் இனத்தின் தலையாய பண்பு.  "ஈதலும் இசைபட வாழ்தலும்' தான் நமது இனத்தின் சிறப்பு, தனித்தன்மை. நம்மிடம் இருப்பதை பிறருடன் பகிர்ந்து கொள்வது, இசையோடு இயைந்து வாழுவது என்பதுதான் இதன் பொருள்.  இசையோடு ஏன் வாழ வேண்டும்? இசை இல்லாவிட்டால் இரக்கம் இருக்காது; இரக்கம் இல்லாவிட்டால் மனிதாபிமானம் இருக்காது; மனிதாபிமானம் இல்லாவிட்டால் மானுடனாக இருப்பதற்கே அர்த்தம் இருக்காது.  இன்றைய காலகட்டத்தில் சமுதாய மாற்றங்களுக்கு ஏற்ப கிராமங்களிலிருந்து அவசர கதியில் இயங்கும் நகர்ப்புறங்களை நோக்கி மனிதர்கள் இடம்பெயருகிறார்கள். அலுவலகங்களில் இருப்பதைவிட அலுவலகங்களுக்குப் போய் விட்டு வருவதே மக்களுக்கு மிகப் பெரிய "டென்ஷன்' ஆக இருக்கிறது. போக்குவரத்து நெரிசல் ஒன்று போதும், மனஅழுத்தத்தையும் ரத்த அழுத்தத்தையும் ஒருசேர அதிகரிக்க.  அலுவலகம் உள்ளிட்ட எல்லா இடங்களிலும் இந்த இறுக்கமான சூழ்நிலை தொடருகிறது. தொலைக்காட்சி, சினிமா, ஏன் பத்திரிகைகள் என எதை எடுத்தாலும் நமது அழுத்தத்தை மேலும் அதிகரிப்பதாகவே இருக்கின்றன. இதிலிருந்து விடுபட வேண்டுமானால் அதற்கு ஒரே வழி இசைதான். அதற்கு இதுபோன்ற சபாக்கள்தான் உதவுகின்றன.  நாகரிக மாற்றங்களில் பல, நம்மை பாதித்துக்கொண்டே இருப்பதால் நமது அடித்தளம் அசைக்கப்படுகிறது. நமது நாகரிகம், கலாசாரம், பண்பாடு இவையெல்லாம் உலகமயம் என்ற சூழலில் தகர்ந்து கொண்டிருக்கிறது.  நமது முன்னோர்கள் தீர்க்கதரிசிகள். மனிதனின் அடிப்படை பயம் நிலையாமைதான். நிலையாமை உள்ளவரை இறையுணர்வும் இருக்கும் என்பதை உணர்ந்ததால்தான் மொழியையும், சமயத்தையும் இணைத்தார்கள். மொழியை சமயமும், இறையுணர்வை மொழியும், ஒன்றையொன்று பாதுகாக்கும் என்று கணித்தனர்.  இன்று பேச்சு வழக்கில் இல்லாவிட்டாலும்கூட உலகின் தொன்மையான மொழிகளுள் ஒன்றாக சம்ஸ்கிருதம் தொடர்வதற்குக் காரணம் அந்த மொழி இறையுணர்வுடன் பிணைந்திருப்பதுதான்.  அதுமட்டுமல்ல, இசை, நாட்டியம், ஓவியம், சிற்பம் என்று கலைகளையும் சமயத்துடன் இணைத்தார்கள் நம் முன்னோர்கள். இந்தக் கலைகள் காப்பாற்றப்பட வேண்டுமென்றால், நமது பண்புகள், பாரம்பரியம் பாதுகாக்கப்பட வேண்டுமென்றால் நாம் மொழியைக் காப்பாற்ற வேண்டும். தமிழோ, தெலுங்கோ, ஹிந்தியோ, பஞ்சாபியோ, தயவு செய்து தாய்மொழியில் பேசுங்கள். உங்கள் குழந்தைகளுக்கு தாய்மொழியைக் கற்றுக் கொடுங்கள்.  மொழியை மறக்கும்போது நமது கலாசாரம், பண்பாடு போன்றவற்றை நாளைய சமுதாயம் இழந்துவிடும்.  சங்கீத ரசனை என்பது ஒவ்வோர் இந்தியக் குடிமகனுக்கும் அடிப்படையிலேயே உள்ளது. இல்லாவிட்டால் இசையைப் பிரதானப்படுத்தி வெளியான எத்தனையோ திரைப்படங்கள், அவை வேறு மொழியாக இருந்தபோதிலும் வெற்றி பெற்றிருக்க முடியுமா?  கொஞ்சும் சலங்கையும், தில்லானா மோகனாம்பாளும், சலங்கை ஒலியும், சங்கராபரணமும், சிந்து பைரவியும் பெரும் வெற்றி பெற்றதற்கு காரணம், பாமரர்களுக்கும் இசையுணர்வு இருக்கிறது என்பதால்தானே?  ஒரு மனிதன் எப்படிப்பட்ட இக்கட்டான சூழலில் இருந்தாலும் இசைதான் மிகப் பெரிய அமைதியைக் கொடுக்கும். அப்படிப்பட்ட இசையின் வளர்ச்சிக்காக ஹம்ஸத்வனி அமைப்பு சேவை செய்து வருவது பாராட்டுக்குரியது என்றார் தினமணி ஆசிரியர்.  விழாவில் ஹம்ஸத்வனி அமைப்பின் துணைத் தலைவர் சீனிவாசன் தேவய்யா, செயலாளர்கள் ஆர்.சுந்தர், டி.ஆர்.கோபாலன், சென்னைத் தொலைக்காட்சியின் முன்னாள் இயக்குநர் ஏ.நடராஜன், புல்லாங்குழல் இசை மேதை என்.ரமணி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.   

சனி, 2 ஜனவரி, 2010

நாற்காலிகளுக்காகப் பாடும் அவல நிலை: தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன்



சென்னை, ஜன. 1: நாற்காலிகளுக்காகப் பாடும் அவல நிலை மாற வேண்டும் என்று "தினமணி' ஆசிரியர் கே.வைத்தியநாதன் கூறினார்.சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற "அபூர்வ ராகம்' இசை, நாட்டிய மாத இதழின் 8}வது ஆண்டு விழாவில் 8 இசைக் கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கி அவர் பேசியதாவது:பத்திரிகை நடத்துவது எவ்வளவு கடினமானது என்பது ஒரு நாளிதழின் ஆசிரியர் என்ற முறையில் நான் நன்கறிவேன். ஜனரஞ்சக பத்திரிகை நடத்துவதே கடினம் என்றால் சிறு பத்திரிகை நடத்துவது பற்றி சொல்லத் தேவையில்லை.பிறகு ஏன் சிறு பத்திரிகை நடத்த வேண்டும் என்று கேட்பீர்கள். ஒரு தாய் ஏன் குழந்தையைப் பெற்றெடுக்கிறாள் என்று கேட்டால் அதற்கு பதில் இருக்கிறதா? அதுபோலத்தான் இதுவும்.தன்னுடைய எழுத்தை தான் விரும்பியதுபோல அச்சில் பார்க்க வேண்டும் என்கிற உள் உணர்வின் வெளிப்பாடு அது. இது எல்லா கலைஞர்களுக்கும் உண்டு.இசை விமர்சனங்களுக்காக பல்வேறு சபாக்களை வலம் வந்து கொண்டிருக்கிறேன். பல சபாக்களில் கலைஞர்கள் வெறும் நாற்காலிகளை மட்டுமே பார்த்துக் கொண்டு பாடுகிறார்கள். அதனால் அவர்கள் மனம் சோர்வதில்லை. ஏனெனில் அவர்கள் ஒவ்வொரு நாற்காலியையும் ஒரு ஜீவனாக பார்க்கிறார்கள்.அதுபோலத்தான் எழுத்தாளனும். தன் எழுத்தை அச்சில் பார்க்கும் மகிழ்ச்சிக்காக பத்திரிகை நடத்துகிறான். நல்ல தமிழிசையை தமிழகத்தில் கேட்க முடியவில்லையே என்ற ஆதங்கம் எனக்கு உண்டு. பாடல்கள் புரியாததால்தான் பலர் சங்கீதம் அறியாதவர்களாக இருக்கிறார்கள். பாடல்கள் புரிந்தால் அவர்களும் இசையால் ஈர்க்கப்படுவார்கள். அதனால் இசை காப்பாற்றப்படும். நமது கர்நாடக இசை என்பது சிலந்தி வலையைப் போன்றது. அதன் இன்பத்தை அனுபவிக்கத் தொடங்கிவிட்டால் மீண்டுவரவே முடியாது."முதலில் சாகித்யத்தை கற்றுக் கொடுங்கள். பிறகு ஸ்வரங்களை கற்றுக் கொடுங்கள். அப்போது சங்கீதத்தில் தானாக ஈர்ப்பு வந்துவிடும்' என்று 1974}ல் இந்தியன் பைன் ஆர்ட்ஸ் அளித்த விருதை பெற்றுக் கொண்டு செம்மங்குடி சீனிவாச அய்யர் பேசியது எனக்கு நினைவுக்கு வருகிறது.இசை தெரிந்தவர்கள் அதிகமானால் நாற்காலிகளைப் பார்த்து பாடும் அவல நிலை மாறும் என்றார் வைத்தியநாதன்.
கருத்துக்கள்

தலைப்பைப் படித்ததும் அரசியல் வாதிகளின் பதவி நாற்காலி வெறியைக் குறிப்பிடுகிறாரோ என நினைத்தேன். அதற்கும் தலைப்பு பொருந்துகிறது. உயர்நிலை ஒப்பிசை அரங்குகள் தவிர அனைத்து இடங்களிலும் தமிழிசையே ஆட்சி செய்தால் இந்த அவல நிலை மாறும். பிற மொழிகளில் பாடி, பிற மொழிப் பாடல்களுக்கு ஆடி , பிற மொழிகளில் பட்டங்கள் வழங்கிக் கொண்டு தமிழிசையை தமிழ்க்கலையை / தமிழினத்ததைச் சிதைக்கும் இசை அரங்குகளுக்குச் செல்லாதவர்கள் பாராட்டிற்குரியவர்களே! தமிழில் பாடி, தமிழ்ப் பாட்டிற்கு ஆடி, தமிழ் உணர்வுப் படைப்புகளை மையமாகக் கொண்டு கலைகள் வளரட்டும்! வாழ்க தமிழுடன்! வளர்க கலையுடன்!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
1/2/2010 6:13:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்