கோவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கோவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 17 டிசம்பர், 2013

அரிவாளாலும் சுத்தியலாலும் பிண ஆய்வு - கோவையில் அதிர்ச்சி




http://img.dinamalar.com/data/gallery/gallerye_002549983_874578.jpg

"சுத்தியலால் அடித்து மண்டையைப் பிளந்து... அரிவாளால் வயிற்றைக் கிழித்து... கோவை அரசு மருத்துவமனையில்,  பிணஆய்வு நடக்கிறது...' என்றால், நம்புவதற்குக் கடினமாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கலாம்; ஆனால், அதுதான் உண்மை.

கோவை நகரின் மையப்பகுதியில், 18.5 ஏக்கர் பரப்பிலுள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், 92தொகுதிகள், 25க்கும் மேற்பட்ட சிறப்பு மருத்துவப் பிரிவுகள் உள்ளன. கோவை, திருப்பூர், நீலகிரி, சேலம், தருமபுரி மாவட்டங்களைச் சேர்ந்த பலஇலட்சம் ஏழை மக்கள், உயர்மருத்துவம் பெறும் இடமாக, இந்த மருத்துவமனை உள்ளது. சென்னையை அடுத்து, அனைத்து நோய்களுக்கும்  மருத்துவம் அளிப்பதற்கான சிறப்புப் பிரிவுகள் இங்கு உள்ளன.  அன்றாடம் வெளிநோயாளிகள் 6,000 பேரும், உள்நோயாளிகள் 1,200 பேரும் மருத்துவம்  பெறுகின்றனர். சாலை  நேர்ச்சிகளில் இறந்தவர்கள், தீ  நேர்ச்சி, மின்  நேர்ச்சி,  நீரில் மூழ்கி இறந்தவர்கள், தற்கொலை செய்து கொண்டவர்கள், கொலை செய்யப்பட்டவர்கள், இறப்பில்  ஐயமுள்ளவர்களின் உடல்கள் என,  நாள்தோறும் ஏறத்தாழ  15 உடல்கள்,  பிண ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்படுகின்றன.
பேரிடர் எச்சரிக்கை: இங்குள்ள பிணவறை, கடந்த 1950 இல் கட்டப்பட்டு, 1952 முதல் செயல்படுகிறது.
பிணவறையின் தரைத்தளம் யாரும் நுழைய முடியாத அளவுக்குப் பாழடைந்துள்ளது. அந்த அறை மழைக்காலத்தில், தண்ணீர் தேங்கும் குளமாக மாறி விடுகிறது. பயன்பாட்டில் உள்ள முதல் தளத்தில்  பிண ஆய்வு நடக்கிறது.  உறவற்ற பிணங்களை வைக்கும் குளிர்ப்பதன வசதியுள்ள பெட்டிகளில் 25  சடலங்களை அடுக்கி வைக்க வசதியுள்ளது. வெளி அறையில் ஆறு  சடலங்கள் வைக்க இடமுள்ளது. பிணவறைக் கட்டடம் 20 ஆண்டுகளுக்கு முன்பே உறுதித் தன்மையை இழந்து விட்டதாகப் பொதுப்பணித்துறை சான்று கொடுத்து, கட்டடத்தைப் பயன்படுத்த வேண்டாம் என எச்சரித்துள்ளது.

கொடூர ஆய்வு: வேறு கட்டடம் இல்லாததால், உறுதித்தன்மை இழந்து, உருக்குலைந்த கட்டடத்திலேயே  பிணஆய்வு நடக்கிறது. இங்கு, மருத்துவக்கருவிகளைப் பயன்படுத்துவதற்கு பதிலாக, சுத்தியலால் அடித்து மண்டையைப் பிளந்தும், அரிவாளால் வயிற்றைக் கிழித்தும்  பிணவாய்வு நடத்தப்படுகிறது. பிணவறைக் கட்டடங்களுக்கு மிக அருகிலேயே புதுப்பிக்கப்பட்ட உடனடித் தொகுதி செயல்படுகிறது.  நேர்ச்சி, அவசரப்பண்டுவங்களுக்காக மருத்துவமனைக்கு வரும் அனைத்து நோயாளிகளும் இந்தத தொகுதிக்குக் கொண்டு வரப்பட்டு, முதலுதவி வழங்கப்பட்ட பின்னரே  தொகுதிகளுக்கு  மாற்றப்படுகின்றனர். இந்தத் தொகுதியின் அருகிலேயே  பேணுகையற்ற பிணவறை
இருப்பதால்,  தீயநாற்றம் வீசுகிறது. சென்னைக்கு அடுத்தபடியாக அனைத்துப் புதிய மருத்துவ வசதிகளும், சிறப்பு மருத்துவப் பிரிவுகளும் கோவை அரசு மருத்துவமனையில் இருந்தாலும்,  பேரிடர் நிலையிலுள்ள பிணவறை அனைத்துப் பெருமையையும் பாழ்படுத்துகிறது.

பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், "" பிணவறைக்கான புதிய கட்டடம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. புதிய கட்டடம் கட்ட, தற்போது சட்டம் சார்ந்த மருத்துவத்துறை செயல்பட்டு வரும் இடம், பழைய  உ.ம.அ.(ஆர்.எம்.ஓ.) குடியிருப்பு ஆகிய இரு இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. புதிய கட்டடம் கட்டுவதற்கான இடம் தேர்வு செய்வதில் குழப்பம் நீடித்துவருவதால் கட்டுமானப்பணிகள்  தொடங்குவதில்  காலத்தாழ்ச்சி ஏற்படுகிறது'' என்றனர்.

1.82 கோடியில் புதிய பிணவறைக் கட்டடம்: கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை துணைகண்காணிப்பாளர் ஐசக் மோசசு கூறியதாவது: பழுதடைந்த பிணவறைக் கட்டடத்தை இடித்து, அங்குப் புதுமை வசதிகளுடன் பிணவறை கட்ட அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டு, அரசு 1.82 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. 2,500 சதுர அடியில் மூன்று அடுக்கு கட்டடம் கட்டப்படுகிறது. மொத்தம் 50  சடலங்கள் வைக்க வசதி செய்யப்படும். புதுமைமருத்துவக் கருவிகள், மின்னாக்கி, மின்ணேணி ஏந்துகளும் ஏற்படுத்தப்படவுள்ளன. வரும் மார்ச்சுக்குள் புதிய கட்டடங்களுக்கான கட்டுமானப் பணிகள்  தொடங்கும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

செய்தி: கு.பிரசாத்து, தினமலர்

வியாழன், 3 அக்டோபர், 2013

உடல் தானத்துக்கு ஒரே நாளில் 51 பேர் பதிவு

http://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_818093.jpg

மண்ணும் தின்னாது, நெருப்பிலும் எரியாது: உடல் தானத்துக்கு ஒரே நாளில் 51 பேர் பதிவு

கோவை:கோவையில் "பரஸ்பரம்' அமைப்பின் சார்பில் நடந்த உடல் தானம் பதிவு முகாமில், ஒரே நாளில் 7 ஜோடிகள், 2 மாற்றுத் திறனாளிகள் உட்பட 51 பேர், தங்களது பெயர்களை பதிவு செய்துள்ளனர்.

கோவை, "பரஸ்பரம்' மக்கள் அறக்கட்டளையில், அரசு அலுவலர்கள், வங்கி ஊழியர்கள், தொழிலாளிகள், வழக்கறிஞர்கள், மருத்துவர்கள் என பல தரப்பினரும் உறுப்பினர்களாக உள்ளனர். சிறு தொகையை மாதந்தோறும் இவர்கள், அமைப்பிற்குத் தருகின்றனர். கணிசமான தொகை சேர்ந்ததும், அதற்குரிய பயனாளியை தேர்வு செய்ய, குழு அமைக்கின்றனர். ஆதரவற்றோர், முதியோர் காப்பகங்களில் விசாரித்து, தேவை என்ன என்பதை அறிகின்றனர்.
அவிநாசி அருகிலுள்ள ஆதரவற்றோர் இல்ல சிறுவர், சிறுமியர் கழிப்பிட வசதியின்றி, அதிகாலையில் வெளிச்சம் வருவதற்கு முன்பே, வெட்டவெளியில் இயற்கை உபாதைகளை கழித்து வந்தனர்; இதனால், அவர்கள் அனுபவித்த துன்பங்கள் ஏராளம். அந்த இல்லத்துக்குக் கழிப்பிடம் அமைத்துத் தந்து, மும்முனை மின் இணைப்பும் பெற்றுத் தந்தது "பரஸ்பரம்' மக்கள் அறக்கட்டளை. இதேபோன்று, பல்வேறு ஆதரவற்றோர், முதியோர் இல்லங்களுக்கு உதவிகளை செய்து வருகின்றனர்.

மேலும், கண் தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, 150 ஜோடி விழிகளை தானமாகப் பெற்று, 300 பேருக்கு பார்வை கிடைக்கச் செய்துள்ளனர்; உடல் தானம் குறித்த விழிப்புணர்வு பிரசாரத்தை செய்து வரும் இவர்கள், பிறருக்கு முன் மாதிரியாக, தங்கள் பெயர்களைப் பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே, 29 பேர், பெயர்ப்பதிவு செய்துள்ள நிலையில், உடல் தானம் பெயர்ப்பதிவுக்கான சிறப்பு முகாமை இந்த அமைப்பினர் நேற்று நடத்தினர்.

அதில், 7 தம்பதியர் உட்பட 51 பேர், தங்களது உடலை தானம் செய்ய பெயர்களைப் பதிவு செய்தனர். இவர்களில், ஜெகதீஷ் என்ற மாற்றுத்திறனாளியும், வேலுச்சாமி என்ற பார்வையற்றவரும் அடங்குவர். இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ள கிறிஸ்தவர், இஸ்லாமியர் சிலரும் உடல் தானம் செய்திருப்பது, குறிப்பிடத்தக்கதாகும். கலெக்டர் இல்ல வளாகத்தில் நடந்த இந்த முகாமை, கலெக்டர் கருணாகரன் துவக்கி வைத்து, உடல் தானம் செய்ய பெயர்களைப் பதிவு செய்த அனைவரையும் பாராட்டினார்.

நிஜமான சேவை!


கோவையை தலைமையிடமாகக் கொண்ட "பரஸ்பரம்' அமைப்பு, இப்போது திருப்பூரிலும் துவக்கப்பட்டுள்ளது. இந்த அறக்கட்டளையின் சிறப்பு அம்சமே, தலைமைப் பொறுப்பு என்று யாரும் இல்லை என்பதுதான். அது மட்டுமின்றி, எந்த நிகழ்ச்சி நடத்தினாலும், யாரும் தங்களை முன்னிலைப் படுத்திக் கொள்வதில்லை; தங்களது பெயரையும், முகத்தையும் ஊடகங்களில் காண்பிக்கவும் விரும்புவதில்லை. கண் தானம், உடல் தானத்துக்காக பெயர்களைப் பதிவு செய்ய விரும்புவோர், 90426 64683, 98432 70300 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

புதன், 4 செப்டம்பர், 2013

கோவையில் உடலுறுப்புத்தானம்

http://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_795511.jpg


கோவையில் ஒரு நாள்: பா.ச., பிரமுகரின் உடல் உறுப்பு இசுலாமிய பெண்ணுக்கு த் தானம்

கோவையில், வாகன விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த வாலிபரின் கல்லீரல், இதய வால்வுகள், விழிகள், சிறுநீரகங்கள் ஐந்து பேருக்கு தானம் செய்யப்பட்டன. பா.ஜ., கட்சியின் நிர்வாகியான இவரது சிறுநீரகங்களில் ஒன்று, இஸ்லாமிய பெண்ணுக்கு வழங்கப்பட்டது; மவுனமான ஓர் உயிரின் மூலமாக, மத நல்லிணக்கம் இங்கே துளிர்விட்டிருக்கிறது.

கோவை, சரவணம்பட்டி, சிவானந்தபுரத்தைச் சேர்ந்தவர் மருதாசலம்; பெயின்டர். இவரது மனைவி கலா, மகன் இராசகோபால், 25. பி.சி.ஏ., பட்டதாரி. சரவணம்பட்டியிலுள்ள சாப்ட்வேர் நிறுவன ஊழியர். நேற்று முன்தினம் இரவு, குனியமுத்தூரிலுள்ள கல்லூரி நண்பர் மனோஜை அழைத்துக்கொண்டு, பைக்கில் எல் அண்ட் டி பைபாஸ் ரோட்டில் சென்றார். குறுக்கு பாதையில் செல்லும்போது, ரோட்டில் நின்றிருந்த அருள்டேவிட்ராஜ் என்பவரது பைக் மீது மோதினார். இதில், மூவரும் காயமடைந்தனர். ராஜகோபால், மனோஜ் ஆகியோரை அருகிலிருந்த மக்கள் மீட்டு, சுந்தராபுரம் அபிராமி மருத்துவமனையில் சேர்த்தனர். அருள் டேவிட் ராஜ், போத்தனூர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.படுகாயமடைந்த ராஜகோபால், மனோஜ் இருவருக்கும், டாக்டர் பாலமுருகன் தீவிர சிகிச்சையளித்தார். இருப்பினும் நேற்று காலை, ராஜகோபாலுக்கு, மூளைச்சாவு ஏற்பட்டது. இதுகுறித்து, அவரது பெற்றோர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு, அபிராமி மருத்துவமனை இயக்குனர் டாக்டர் பெரியசாமி தெரிவித்தார். அப்போது, ராஜகோபாலின் தந்தை மருதாசலத்திடம், அவரது நண்பர்கள், " ராஜகோபால், தான் இறந்தால், உடலுறுப்புகளை தானம் செய்ய விரும்பியதாக,' கூறினர். இதையடுத்து, தனது மகனின் கடைசி ஆசையை நிறைவேற்றும் பொருட்டு, டாக்டரிடம் தெரிவித்தனர். அவர்களை பாராட்டிய டாக்டர் பெரியசாமி, உடனடியாக அதற்கான ஏற்பாடுகளை செய்தார்.மூளைச்சாவு அடைந்த ராஜகோபாலின் கல்லீரல், இதய வால்வுகள் -4, சென்னை, குளோபல் மருத்துவமனைக்கும்; கண்கள் கோவை, சங்கரா கண் மருத்துவமனைக்கும்; ஒரு சிறுநீரகம், அபிராமி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் சசிகலா என்பவருக்கும், மற்றொன்று, ராம் நகரிலுள்ள எஸ்.பி.டி., மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நூர்ஜஹான் என்பவருக்கும் வழங்குவதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் துவங்கின. உடல் உறுப்புகளை அகற்றி, பத்திரமாக இரண்டரை மணி நேரம் ஆகும் என கணிக்கப்பட்டது. இதையடுத்து, கல்லீரலை பெற்றுச் செல்ல, தனி விமானம் மூலம் குளோபல் மருத்துவமனை டாக்டர்கள் கோவை வந்தனர்.

ஆபரேஷன் "பயணம்':

ஆபரேஷன் நடத்தப்படும் அபிராமி மருத்துவமனையில் இருந்து, உறுப்பு தானம் பெறும் நோயாளிகள் சிகிச்சை பெறும் ராம்நகர் எஸ்.பி.டி., மருத்துவமனை, சங்கரா மருத்துவமனைக்கு, உறுப்புகளை ஆம்புலன்சில் எடுத்துச் செல்வது என்றும், சென்னையிலுள்ள குளோபல் மருத்துவமனைக்கு கல்லீரல் மற்றும் இதய வால்வுகளை, இங்கிருந்து பீளமேடு விமான நிலையம் வரை ஆம்புலன்சில் எடுத்துச் சென்று, அங்கிருந்து தனி விமானத்தில் சென்னைக்கு கொண்டு செல்வது என்றும் தீர்மானித்தனர். இதற்கான பயணத் தொலைவு, அதற்கு ஆகும் நேரம் முன்கூட்டியே கணிக்கப்பட்டது. சாலைவழி பயணத்தின்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, ஆம்புலன்ஸ்கள் சிக்கிவிடக்கூடாது என்பதற்காக, மாநகர போலீசாரின் உதவியை டாக்டர்கள் நாடினர்.கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், முழு ஒத்துழைப்பு அளிக்க, போலீசாருக்கு உத்தரவிட்டதும், பாதுகாப்பு போலீஸ் வாகனங்கள், மருத்துவமனைக்கு விரைந்தன. மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளும் உஷார்படுத்தப்பட்டனர். அதன்பின், சரியாக நேற்றிரவு 7.30 மணிக்கு, அபிராமி மருத்துவமனை இயக்குனர் பெரியசாமி தலைமையிலான டாக்டர் குழுவினர் ஆபரேஷனை துவக்கினர். முதலில், கல்லீரல் மற்றும் இதயத்தின் நான்கு வால்வுகள் பத்திரமாக எடுக்கப்பட்டு, ஆம்புலன்சில் கோவை விமான நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அடுத்ததாக, ஒரு மணி நேர ஆபரேஷனுக்குப்பின் இரு சிறுநீரகங்களும் எடுக்கப்பட்டன; அதில் ஒன்று, ராம்நகர் மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் கொண்டு செல்லப்பட்டது. இறுதியாக, இரு விழிகள் அகற்றப்பட்டு, சரவணம்பட்டி சங்கரா கண் மருத்துவமனைக்கு பயணமானது. இரவு 7.30 மணிக்கு துவங்கிய இதற்கான ஆபரேஷன்கள், நள்ளிரவு வரை தொடர்ந்தது.


புதன், 28 ஆகஸ்ட், 2013

நாய்க் குட்டி வாங்கித்தராத பெற்றோருக்குத் "தண்டனை'



பிற நகரங்களில் இருந்து சென்னைக்கு ஓடிவரும் சிறுவர் சிறுமியர்மட்டும்  ஆண்டிற்கு ஆயிரத்திற்குமேல் இருப்பர். நாடு முழுமையும் இந்த  எண்ணிக்கை மேலும் மிகுதியாகும். ஆனால், பிடிபடாச் சிறார் எண்ணிக்கை மேலும் பன்மடங்காகும். கல்விமுறையில் குடும்பநலம் சார்ந்த பகுதிகள் இருந்தால்தான் இவ்வாறு வீட்டை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை குறையும்.  ஆரவாரக் கவர்ச்சியான திரைப்படங்களும்  பிற ஊடகங்களும்  சிறார் நலனைக கருத்தில் கொண்டே படைப்புகளை வெளியிட வேண்டும். இப்போதைய பெறறோர்களுக்கும் சிறார் நலன் குறித்து அறிவுரை வழங்க வேண்டும். இச்சிறார் காவலர்கள் கையில் கிடைக்காமல் கயவர்கள் கைகளில் சிக்கியிருந்தால் இவர்களின் எதிர்காலம் எவ்வாறு சிதைந்திருக்கும் என எண்ணிப் பார்க்க வேண்டும்.  வீட்டுச் சூழலுக்கேற்ப தேவைகளை நிறைவு செய்தல், படிப்பிலும் நல்ல பழக்க வழக்கங்களிலும் ஆர்வம்  ஏற்படுத்தல், இயலாமையின்பொழுது வெறுப்பினை உமிழாமல் கனிவான முறையில் அமைதிப்படுத்தல் முதலானவற்றைப் பின்பற்றித் தத்தம் பிள்ளைகளை அன்புப்பிடிகளில்  அகப்படுத்த வேண்டும். எனினும் கோவைக் காவலர்களுக்குப் பாராட்டுகள்! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/

கோவையில் பள்ளிச் சிறுவர்கள், நாய்க் குட்டி வாங்கித்தராத பெற்றோருக்குத் "தண்டனை'
http://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_790220.jpg 

கோவை: பெற்றோரிடம் பலமுறை நாய் க் குட்டி கேட்டும், வாங்கி கொடுக்காததால், விரக்தியடைந்த பள்ளி மாணவர்கள் இருவர், கடிதம் எழுதி வைத்து, வீட்டை விட்டு வெளியேறியனர்; மாணவர்களை மீட்ட போலீசார், இரண்டு நாய்குட்டிகளை வாங்கி கொடுத்து, மாணவர்களை வழியனுப்பி வைத்தனர்.

கோவை, ராமநாதபுரம், சவுரிபாளையம் பகுதிகளைச் சேர்ந்த டர்னர் மற்றும் எலக்டீரிசியன் தொழில் செய்யும் இருவரது 14 வயது மகன்கள், ராமநாதபுரம் பகுதியிலுள்ள மாநகராட்சி பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு படிக்கின்றனர். சிறு வயதிலிருந்து ஒரே வகுப்பில் படிக்கும் இரண்டு மாணவர்களுக்கும், தங்களது வீடுகளில் செல்லமாக ஒரு நாய்குட்டி வளர்க்க வேண்டும் என்பது நீண்டகால ஆசையாம். இதுகுறித்து தங்களது பெற்றோர்களிடம் பலமுறை கேட்டும், அவர்களது ஆசை நிறைவேறவில்லை.ஒவ்வொரு முறை நாய்குட்டி கேட்கும்போதும், "நாய்குட்டி எல்லாம் வாங்கி தரமுடியாது; ஒழுங்கா படிப்பில் கவனம் செலுத்துங்க' என்று பெற்றோர் கண்டிப்புடன் மறுத்துவிடுவது வழக்கம். பொறுத்து, பொறுத்து பார்த்த நண்பர்கள் இருவரும் விரக்தியடைந்து ஒரு முடிவுக்கு வந்தனர். அதாவது, கடிதம் எழுதி வைத்து விட்டு, வீட்டை விட்டு வெளியேறி தற்கொலை செய்து கொள்வது என்பதே அந்த அதிர்ச்சி முடிவாகும். திட்டப்படி இருவரும், நேற்று முன்தினம் காலை பள்ளிக்கு செல்வது போல் கிளம்பினர். ஆனால், பள்ளிக்கு செல்லாமல் பல இடங்களில் சுற்றினர். பின், மதியம் நண்பர்களின் ஒருவரது வீட்டுக்கு சென்று துணிகளை மாற்றினர். தொடர்ந்து, தங்களது அம்மாக்களுக்கு ஒரு கடிதம் எழுதினர்.

கடித விவரம்:அன்புள்ள இரண்டு அம்மா அவர்களுக்கு, எங்கள் இருவருக்கும் வாழபிடிக்காததால், நாங்கள் சாக இருக்கிறோம். எங்களை மன்னித்துவிடுங்கள். எங்களது கடைசி ஆசை எங்கள் இருவருக்காக இரண்டு வீட்டிலும் நாய்குட்டிகள் வளர்த்துங்கள். அதற்கு எங்களது பேரை வைத்து எங்களை வளர்த்ததுபோல் நினைத்து, அந்த நாயை வளருங்கள் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம். எங்கள் இருவரையும் ஒட்டுக்காக(ஒன்றாக) புதைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.இப்படிக்கு அன்புள்ள மகன்கள்.என்று எழுதி வைத்துவிட்டு, வீட்டை விட்டு கிளம்பினர்.

மாலை வீடு திரும்பிய பெற்றோர், மாணவர்களின் கடிதத்தை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். மாணவர்களின் பள்ளி, விளையாட்டு மைதானம் என்று பல இடங்களில் தேடியவர்கள், இறுதியில் கடிதத்துடன், ராமநாதபுரம் போலீசில் புகார் கொடுத்தனர். அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களுக்கும், அதிகாரிகள் தகவல் கொடுத்து, மாணவர்களை தேடினர். இந்நிலையில் நேற்று காலை அரசு மருத்துவமனை அருகே இரண்டு மாணவர்கள் சுற்றி திரிந்ததை கண்ட போலீசார், இருவரையும் பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில், நாய்குட்டி கிடைக்காத சோகத்தில் வீட்டை விட்டு வெளியேறியது தெரிந்தது. இதைதொடர்ந்து அவர்களது பெற்றோர்களுக்கு தகவல் கொடுத்து வரவழைத்தனர். மாணவர்களிடம் விசாரணை மேற்கொண்ட போலீசார், அவர்களின் மனநிலையை அறிந்து கொண்டனர். தங்களுக்கு நாய்குட்டி வாங்கி கொடுத்தால், நன்றாக படிப்பதாக இருவரும் உறுதியளித்தனர். இதையடுத்து, தெற்கு சட்டம் - ஒழுங்கு உதவி கமிஷனர் ராமசந்திரன் அறிவுறுத்தலின் பேரில், ராமநாதபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கட்ராமன், பேரூர் மெயின் ரோட்டிலுள்ள நாய் விற்பனையாளர் ஒருவரிடம், தலா 2,500 ரூபாய் கொடுத்து இரண்டு "பொமரேனியன்' வகை நாய்குட்டிகளை வாங்கி மாணவர்களுக்கு பரிசாக அளித்தனர்.

நாய்குட்டி கிடைத்த மகிழ்ச்சியில் நண்பர்கள் இருவரும் எல்லையில்லா ஆனந்தமடைந்தனர். மேலும், தங்களுக்கு நாய்குட்டி பரிசளித்த போலீசாருக்கு, வரும் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று, வகுப்பில் முதலிடம் வாங்கி காட்டுவதாக சபதமிட்டு பெற்றோருடன் மகிழ்ச்சியாக வீட்டுக்குச் சென்றனர்.



சனி, 3 ஆகஸ்ட், 2013

வழிகாட்டும் மதுரை ப் பெண்!

வழிகாட்டும் மதுரை ப் பெண்!

14  முதுகலை ப் பட்டம்  டிகிரி பெற்று, 64  கணியன்களை(சாப்ட்வேர்களை) உருவாக்கிய, மதுரையின் முதல் பெண் கணினி மென்பொருள் ஏற்றுமதியாளரான, விசயலட்சுமி: சொந்த ஊர் கோவை. இன்ஜினியரிங் படிக்கும் போது, வீட்டை எதிர்த்து, காதல் திருமணம் செய்து கொண்டேன். திடீர் விபத்தில், கணவன் இறந்த போது, என் வயது, 25. காதல் கணவன் இல்லாத வெறுமை, தற்கொலைக்குத் தூண்டியது. குழந்தைகளின் முகம் மனதில் நிழலாடியதால், குழந்தைகளுக்காக வாழ வேண்டும் என்ற, மன உறுதி பிறந்தது. வங்கியில், ஐந்து லட்சம் ரூபாய் கடன் பெற்று, சிறிய சாப்ட்வேர் நிறுவனத்தை, 12 ஊழியர்களுடன், கணவர் வீட்டிலேயே ஆரம்பித்தேன். கடின உழைப்பால் இன்று, 400 ஊழியர்களுடன், மதுரை, டில்லி, பெங்களூரு, ஐதராபாத் என, நான்கு கிளைகளாக வளர்ந்துள்ளது. கிராமத்து இன்ஜினியரிங் மாணவர்கள், கணினி தொடர்பாக படிக்கின்றனரே தவிர, தொழில் ரீதியான திறனை வளர்க்காததால், படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைப்பதில்லை. எனவே, நான் சாப்ட்வேர் துறையில் பெற்ற நன்மைகளுக்கு பிரதிபலனாக, "வெப் டெவலப்பிங்' பயிற்சியை இலவசமாக தந்து, "மைக்ரோசாப்ட்' துணையுடன், "ஆன்-லைன்' தேர்வு நடத்துகிறேன். இத்தேர்வு முடிவுகள், மைக்ரோசாப்ட்டின் இணையதளத்திலேயே வெளிவருவதால், வென்றவர்களுக்கு உலகின் முக்கிய எம்.என்.சி., நிறுவனங்களில், லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. வெளியிடங்களில் இப்பயிற்சிக்கு, ஒரு லட்சம் ரூபாய் வசூலிக்கின்றனர்.
ஆண்டிற்கு, 200 கிராம மாணவர்கள் வீதம், இரண்டு ஆண்டுகளாக பயிற்சி அளிக்கிறேன். இதுவரை, யாரும் தோல்வி அடையவில்லை. மேலும், விதவை பெண்களுக்கு கணினி பயிற்சி, டெக்னிக்கல் டிரெய்னிங், மன உறுதியை வளர்க்க, கவுன்சிலிங் போன்றவற்றை இலவசமாக வழங்கி, மற்றவர்களுக்கு வழிகாட்டுகிறேன். சாப்ட்வேர் துறையில் வெற்றியடைந்ததற்காக, சிறந்த பெண் தொழில் முனைவோருக்கான விருதை, மத்திய, மாநில அரசிடமிருந்தும், இங்கிலாந்தின், "விமன் ஆப் தி இயர்' விருதும் பெற்றிருக்கிறேன். தொடர்புக்கு: 98421 74800.

செவ்வாய், 30 ஜூலை, 2013

பெற்றோரின் ஆங்கில மோகத்தின் பரிசு! பிள்ளைகளுக்குப் பிரம்படி, ஆபாச வசைமாரி !

நீச்சல் உடை கொண்டு வராததற்காக ப் பிரம்படி, ஆபாச வசைமாரி: கோவை தனியார் பள்ளி மாணவியர் கண்ணீர்!

கோவை:கோவையிலுள்ள பிரபல தனியார் பள்ளியில், நீச்சல் உடை கொண்டு வராததற்காக, பத்தாம் வகுப்பு மாணவியரை பள்ளி தாளாளரே நேரடியாக அடித்து, ஆபாசமாகப் பேசிய விவகாரம், வெளியில் வந்துள்ளது.
கோவை நகரில், மாநகராட்சிப்பகுதியை ஒட்டியுள்ள ஊரகப் பகுதியில், பிரபல தனியார் பள்ளி ஒன்று உள்ளது. சி.பி.எஸ்.இ., கல்வி முறைப்படி, பாடம் கற்பிக்கும் இந்தப் பள்ளியில்தான் கோவையிலுள்ள பெரும்பாலான வி.ஐ.பி.,க்களின் குழந்தைகள் படிக்கின்றனர். இப்பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு, பள்ளி வளாகத்திலுள்ள நீச்சல் குளத்திலேயே வாரமிரு நாட்கள் நீச்சல் கற்றுத்தரப்படுகிறது. இதற்கான நீச்சல் உடையை, இதற்கான பயிற்சி வகுப்பு இருக்கும் நாட்களில் மாணவ, மாணவியர் கொண்டு வர வேண்டியது அவசியம்.பத்தாம் வகுப்பு மாணவியருக்கான நீச்சல் பயிற்சி வகுப்பு நேற்று நடந்துள்ளது. உடை மாற்றுவதற்காக அவர்கள் வந்தபோது, 10க்கும் மேற்பட்ட மாணவியர், நீச்சல் உடை எடுத்து வராதது தெரியவந்துள்ளது. இது குறித்து, பள்ளி தாளாளருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த பெண் தாளாளர், நீச்சல் குளத்தில் குப்பைகளை அகற்றுவதற்காக வைத்திருந்த குச்சியில், நீச்சல் உடை கொண்டு வராத மாணவியரை வரிசையாக நிற்க வைத்து, அவர்களின் கால்களில் அடித்துள்ளார்.
அது மட்டுமின்றி, "உங்களை உடையை அவிழ்க்க வைத்து, நிர்வாணமாக நீச்சல் குளத்தில் பயிற்சியாளர் முன் குளிக்கச் சொன்னால்தான், அடுத்த முறை மறக்காமல் நீச்சல் உடையை எடுத்து வருவீர்கள்' என்று ஆங்கிலத்தில் ஆவேசமாக எச்சரித்துள்ளார்.

ஆண் பயிற்சியாளருக்கு முன், பெண் தாளாளர் சொன்ன இந்த வார்த்தைகளால் மாணவியர் அனைவரும் கூனிக்குறுகியுள்ளனர். இந்த தகவல், சிறிது நேரத்தில் பள்ளி முழுவதும் பரவியது. மாலையில் பள்ளி முடிந்தபின், மாணவ, மாணவியரின் பெற்றோருக்கும் தெரியவந்துள்ளது. சி.பி.எஸ்.இ., பள்ளி என்பதால், இதுபற்றி யாராவது கேள்வி எழுப்பினால், அவர்களுடைய குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படுமென்று கருதி, போலீசிலோ, சி.பி.எஸ்.இ., அதிகாரிகளிடமோ புகார் செய்வதற்கு பெற்றோர் அஞ்சுகின்றனர். இந்த விஷயத்தை, எவ்வாறு அதிகாரிகளிடம் எடுத்துச் செல்வது என்பது பற்றி, பெற்றோர் மத்தியில் ரகசிய ஆலோசனையும் நடந்து வருகிறது.

வியாழன், 25 ஜூலை, 2013

6 காணி பரப்பில் 600 மரங்களுடன் உயிர்வளித் தொழிற்சாலை

பாராட்ட வேண்டிய முயற்சி. நகர்கள்தோறும் உருவாக்க வேண்டும். ஆனால், மரங்கள் அடர்ந்த பகுதியை ப் பூங்கா என்று சொல்லக்கூடாது. பூஞ்சோலைகள் உள்ள தோட்டம்தான் பூங்கா. ஆனால், இப்பொழுது பூங்கா என்பதைப் பொதுச் சொல்லாக ஆக்கிவிட்டார்கள்.  ஆங்கிலத்தில் பார்க்கு(park)  என்றால் வைப்பிடத்தையே குறிக்கும். அவ்வாறு கொண்டுவந்து நிறுத்தி வைக்கப்படுவன ஊர்திகளாக இருக்கலாம்; படைக்கலன்களாக இருக்கலாம் ; உயிரினங்களாக இருக்கலாம்; பொதுமக்களுக்காக உருவாக்கப்படும் செடி,கொடிகளின் தொகுப்பாக இருக்கலாம். இதனை அப்படியே நாம் தமிழில் பரவலாகப் பயன்படுத்துவது தவறு. இந்த இடத்தில் வனம் என்றுதான் சொல்ல வேண்டும்.  காடு என்பது  அடர்ந்த மரதங்கள் நிறைந்து இயற்கையாய் ஊருக்கு வெளியே அமைவது. வனம் என்பது ஊரை அடுத்து அல்லது ஊர்ப்பகுதியில் அமைவது.அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/

6 காணி பரப்பில் 600 மரங்களுடன் உயிர்வளித் தொழிற்சாலை

கோவை: கோவை நகரின் மத்தியில், 6 ஏக்கர் பரப்பில் 600 மரங்களுடன், பிரமாண்டமான மரப்பூங்கா உருவாகி வருகிறது; இதேபோல, பிற "ரிசர்வ் சைட்'களிலும் மரங்கள் வளர்த்தால், கோவையே பசுமை நகரமாக விரைவில் உருமாறும்.

கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், 1,600க்கும் அதிகமான "ரிசர்வ் சைட்'கள் உள்ளன. இவற்றில், நூற்றுக்கும் உட்பட்ட இடங்கள் மட்டுமே, மாநகராட்சி நிர்வாகத்தால் மேம்படுத்தப்பட்டுள்ளன. சில இடங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன; பெரும்பான்மையான பொது ஒதுக்கீட்டு இடங்கள், பராமரிப்பின்றி, முட்புதர்காடுகளாக மாறியுள்ளன. மாநகரில், ஏழு லட்சத்துக்கும் அதிகமான வாகனங்கள் வலம் வரும் நிலையில், அவை வெளியிடும் கார்பனின் அளவுக்கேற்ப மரங்களை வளர்க்க வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது. எனவே, மாநகராட்சிக்குச் சொந்தமான "ரிசர்வ் சைட்'களிலும், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளிலும், அரசு அலுவலக வளாகங்களிலும், அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களுக்குச் சொந்தமான இடங்களிலும் மரங்களை வளர்க்க வேண்டியது அவசியம். இந்த விஷயத்தில், நகருக்கு மட்டுமின்றி, மாநிலத்துக்கே முன்னோடியாக, கோவை நகரின் மத்தியில் அற்புதமாக உருவாகிக்கொண்டிருக்கிறது பிரமாண்டமான மரப்பூங்கா.

கோவை சவுரிபாளையம் அருகிலுள்ள ஜி.வி.ரெசிடென்சி குடியிருப்பு, கிட்டத்தட்ட 100 ஏக்கர் பரப்பிலான பெரிய குடியிருப்புப் பகுதி. அங்கீகரிக்கப்பட்ட இந்த "லே-அவுட்'க்கான பொது ஒதுக்கீட்டு இடம், 7 ஏக்கர் பரப்பில் ஒரே இடத்தில் அமைந்திருப்பது, வேறு எங்குமே இல்லாத சிறப்பம்சம். இந்த குடியிருப்பு உருவாக்கப்பட்ட காலத்திலிருந்து 20 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த இடம், முட்புதர்களும், களைச் செடிகளும் நிறைந்த காடாக இருந்தது. அதனால், ஆக்கிரமிப்பு முயற்சிகளும் நடந்தன; உள்ளரங்க விளையாட்டு மைதானம் அமைக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. குடியிருப்போர் நலச்சங்கத்தினர் தீவிரமாகப் போராடி, அந்த முயற்சிகளை முறியடித்தனர். அது மட்டுமின்றி, அந்த இடத்தை பூங்காவாக மாற்றவும் முடிவு செய்தனர். முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் 80வது பிறந்த நாளை முன்னிட்டு, அவருக்குச் சிறப்பு செய்யும் வகையில், இதற்கான திட்டத்தை வகுத்தனர். அதன்படி, இங்குள்ள பொது ஒதுக்கீட்டு இடத்தில் 6 ஏக்கர் பரப்பில், 2010 நவம்பரிலிருந்து மரக்கன்றுகளை நடத்துவங்கி, கலாமின் 80வது பிறந்த நாள் தினமான 2011 அக்., 15 வரையிலும் 600 மரக்கன்றுகளை நட்டனர். குறுகிய காலத்தில் வளர்ந்து, சீக்கிரமே மடிந்து போகும் அலங்கார மரங்களை நடாமல், நமது மண்ணுக்குரிய மரக்கன்றுகளை நட்டதோடு, அவற்றை நன்கு பராமரிக்கவும் செய்தனர். அதன் விளைவாக, தற்போது அங்கு 250 வேப்ப மரங்கள், 250 புங்கன் மரங்கள் அழகாக வளர்ந்து நிற்கின்றன; இவற்றைத் தவிர்த்து, நாவல், மலை வேம்பு, நீர் மருது, பூவரசு மரங்களும் 100க்கும் அதிகமாகவுள்ளன. இரு ஆல மரக்கன்றுகளும் தளிர்த்து, செழித்து வளர்ந்து கொண்டிருக்கின்றன. இன்னும் சில ஆண்டுகளில், இந்த பூங்காவே, மகத்துவமான மரப்பூங்காவாகவும் பல லட்சம் மக்களுக்கான புதிய ஆக்சிஜன் தொழிற்சாலையாகவும் மாறும் என்பது நிச்சயம்.

அனைவருக்கும் அழைப்பு:


இந்த பூங்காவை உருவாக்கி, பராமரித்து வரும் குடியிருப்போர் நலச்சங்கம், "ராக்' மற்றும் "சிறுதுளி' அமைப்புகளின் சார்பில், மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகங்களின் உதவியுடன் "நமக்கு நாமே' திட்டத்தில் 25 லட்ச ரூபாய் மதிப்பில், நடைபாதை அமைக்கவும் முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. "ராக்' அமைப்பின் செயலர் ரவீந்திரன் கூறுகையில், ""இதேபோல, நகரில் பராமரிப்பில் இல்லாத பொது ஒதுக்கீட்டு இடங்களில், அந்தந்தப் பகுதிகளில் உள்ள குடியிருப்போர் நலச்சங்கங்கள் முயற்சி எடுத்து, மரங்களை வளர்த்தால், கோவை நகரமே விரைவில் பசுமை நகரமாக மாறும். ஆக்கிரமிப்பு நடப்பதற்கான வாய்ப்பும் தவிர்க்கப்படும்,'' என்றார்.

சனி, 13 ஜூலை, 2013

பசுமைப் பள்ளி : கைகோர்க்கும் மாணவர்கள் : கை கொடுக்கும் ஆசிரியர்கள்

பசுமைப் பள்ளி : கைகோக்கும் மாணவர்கள் : கை கொடுக்கும் ஆசிரியர்கள்
கோவை : "வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம்' என்பதை, கோவை மாநகராட்சி நிர்வாகம் கட்டாயமாக்கி வரும் நிலையில், மாநகராட்சி பள்ளி மாணவர்கள் சொந்த பொறுப்பில் மரம் வளர்க்க துவங்கியுள்ளனர். மாணவர்களிடம் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு, சமூகத்தின் மாற்றத்துக்கு வழிவகுக்கும்.

கோவையில் வடகிழக்கு, தென்மேற்கு பருவ காலத்தில் தொடர்ந்து கனமழை பெய்யும். நொய்யல் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு செல்லும், கோவையிலுள்ள குளங்கள் அனைத்தும் நிரம்பி வழியும். இந்த காட்சிகளை கண் குளிர கண்டு, பல ஆண்டுகளாகி விட்டன.கோவை மாநகரில் ரோடு விரிவாக்கப்பணி, மாநகராட்சி திட்டப்பணிகளுக்காக ஆயிரக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்டதே, மழைப்பொழிவு குறைந்து போனதற்கு காரணம் என, இயற்கை ஆர்வலர்கள் குமுறுகின்றனர்.மரங்களை வளர்த்தால் மட்டுமே மழை வளத்தை பெற முடியும் என்பதை உணர்ந்த மாநகராட்சி நிர்வாகமும் மரம் வளர்ப்பதை கட்டாயமாக்கி வருகிறது. கோவையிலுள்ள 65 பூங்காக்களை மேம்படுத்தி மரங்கள் வளர்க்கவும், ரோட்டோரங்களில் 9,400 மரங்கள் வளர்க்கவும், திட்டமிட்டு தன்னார்வ அமைப்புகள் உதவியை நாடியுள்ளது.

கோவை மாநகராட்சியிலுள்ள 83 பள்ளிகளில், இடவசதியுள்ள 63 பள்ளி வளாகங்களில் முதல் கட்டமாக 3,000 மரக்கன்றுகள் நடுவதற்கு திட்டமிட்டுள்ளது. ராமநாதபுரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் மேயர், கமிஷனர் ஆகியோர் 32 மரங்களை நட்டனர். பள்ளியில் போதுமான தண்ணீர் வசதியில்லாததால், மேல்நிலைத்தொட்டியில் இருந்து, மரக்கன்றுகளுக்கு, தனியாக பைப் லைன் அமைத்து சொட்டுநீர் உபகரணம் பொருத்தப்பட்டுள்ளது."பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மரக்கன்றுகளை பராமரித்து வளர்த்து மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்' என, மேயர் வேண்டுகோள் விடுத்தார்.அதேபோன்று, மரம் வளர்க்கும் பொறுப்பை பள்ளி மாணவர்கள் ஏற்றுள்ளனர். பள்ளி தலைமை ஆசிரியர் லோகநாதன் தலைமையில், என்.சி.சி., ஆசிரியரும், "பசுமைப் படை' ஒருங்கிணைப்பாளருமான இருதயராஜ், தமிழ் ஆசிரியர் சுரேஷ்குமார், உடல்கல்வி ஆசிரியர் சுந்தர்ராஜன் ஆகியோர், மாணவர்கள் மரம் வளர்ப்பதை கண்காணிக்கின்றனர்.

பள்ளியிலுள்ள ஒவ்வொரு வகுப்புக்கும் இரண்டு மரங்களை ஒதுக்கியுள்ளனர். பள்ளியில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுவதால், ரோட்டோரத்தில் இருக்கும் குழாயில் மாணவர்கள் தண்ணீர் பிடித்து மரக்கன்றுக்கு ஊற்றுகின்றனர். ஒருசில மாணவர்கள், வீட்டில் இருந்து கேன்களில் தண்ணீர் கொண்டு வந்து ஊற்றுகின்றனர். மரத்தை சுற்றிலும் பாத்தி அமைத்து, மரம் வளர்ப்பதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர் மாணவர்கள்.மரம் வளர்த்தால் மழை கிடைக்கும்; காற்றிலுள்ள கார்பன்-டை- ஆக்சைடு அளவை குறைக்க முடியும், இயற்கையை பாதுகாக்க முடியும்' என, மாணவர்கள் ஒருசேர கூறியது பலமாக எதிரொலித்துது. மாணவர்களிடம் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வால், ஒவ்வொரு வீட்டிலும், தெருவிலும் பசுமை செழிக்கும் என்பது உறுதி.
"தினம் ஒரு குவளை  தண்ணீர்':


தலைமை ஆசிரியர் லோகநாதன் கூறுகையில், ""4.5 ஏக்கர் பள்ளியில் 3.5 ஏக்கர் காலி இடமுள்ளது. விளையாட்டு மைதானம் போக, காலி இடத்தில் மரங்கள் வளர்க்கப்படுகின்றன. ஏற்கனவே 80 மரங்கள் உள்ளன. தற்போது புங்கன், பூவரசு, வேம்பு, அரச மரம், ஆலமரம், நாவல், வாகை உள்ளிட்ட 32 மரக்கன்று நடப்பட்டுள்ளது. ஒரு வகுப்புக்கு இரண்டு மரக்கன்று ஒதுக்கப்பட்டுள்ளது. வகுப்பிலுள்ள 40 மாணவர்களும் தினமும் ஒரு டம்ளர் தண்ணீராவது, மரத்துக்கு ஊற்ற வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளோம். வகுப்பு நடக்காத நேரத்தில், மாணவர்கள் மரம் வளர்க்கின்றனர். மரத்தின் பயன்பாடுகள், ஒளிச்சேர்க்கை, மரங்களின் சுவாசத்தால் கிடைக்கும் பலன்களை மாணவர்களுக்கு எடுத்து சொல்லியுள்ளதால், ஆர்வத்துடன் மரம் வளர்க்கின்றனர். மூன்று ஆண்டுகள் மரத்தை வளர்த்து விட்டால், அதன்பின் இயற்கையாக வளர்ந்து விடும்,'' என்றார்.

ஞாயிறு, 16 ஜூன், 2013

கோவையில் உருவாகும் தமிழ் நேயம் அறக்கட்டளை

 கோவையில் உருவாகும் தமிழ் நேயம் அறக்கட்டளை
                                                                                              நண்பர்களுக்கு வேண்டுகோள்

                        13-06-2013 கோயபம்புத்தூர், காந்திபுரம் சிபி ஐ.ஏ.எஸ். அகாதமியில் எழுத்தாளர்கள், நண்பர்கள் பலர் கூடி தமிழ் நேயம் என்ற பெயரில் ஓர் அறக்கட்டளை உருவாக்க வேண்டுமென்றும் அதன் சார்பில் சில முக்கியமான பணிகளை மேற்கொள்வதென்றும் தீர்மானித்தோம்.
 கூட்டத்தில் பேராசிரியர் கி. நாச்சிமுத்து, அறிஞர் செ. நாராயணசாமி, முனைவர் கோ. ஆறுமுகம், கவிஞர். அறிவன், பாவலர் இரணியன், நந்தினி பதிப்பக உரிமையாளர் திரு. வேனில், முனைவர் வே. சுகுமாரன், எழுத்தாளர் சு. வேணுகோபால், மருத்துவர் அரங்கசாமி, திரு.கு.வே.கி.செந்தில், திரு. கார்த்திகேயன், முனைவர் கு. முத்துக்குமார், முனைவர் க. ஜவகர் ஆகியோர் கலந்துகொண்டனர். கலந்துகொள்ள இயலாத பிற நண்பர்கள் பலர் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை ஏற்பதாகக் கூறினர்.
                   கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழிலக்கியத்திறனாய்வு பற்றியும் மார்க்சியம், மெய்யியல் பற்றியும் தொடர்ந்து எழுதிவருவதோடு பரிமாணம், நிகழ், தமிழ் நேயம் ஆகிய சிற்றிதழ்களைச் சிறப்பாக நடத்தியவர் என்ற முறையிலும் இதர பல இயக்கப் பணிகளில் காலம் முழுதும் இயங்கியவர் என்ற முறையிலும்  கோவை ஞானி சார்பில் "தமிழ் நேயம்" அறக்கட்டளை என்றோர் அமைப்பை உருவாக்குவதென நண்பர்கள் முடிவுசெய்தனர். 

அறக்கட்டளையின் பணிகளென கீழ்காணும் சிலவற்றைத் தீர்மானித்தனர்

 1. 5000 பக்கங்களுக்கும் மேற்பட்ட ஞானியின் படைப்புக்கள் அனைத்தையும் இலவயமாகப் பார்க்கவும் படி எடுத்துக் கொள்ளவும் உரிய முறையில் ஒரு வலைதளத்தை உருவாக்கவேண்டும்.

2. ஞானியின் விருப்பப்படி ஆண்டுதோறும் இலக்கியத் திறனாய்வுத்துறை/ படைப்பிலக்கியத் துறையில் வெளியிடப்படும் மிகச்சிறந்த நூல்கள் மூன்றைத் தக்க நடுவர்களைக் கொண்டு தெரிவு செய்து மூவருக்கும் ரூ. 25,000 வீதம் விருது வழங்குவது.

3. கோவை வட்டாரத்தில் கடந்த நூறாண்டுகளுக்கிடையில் எழுத்தாளர்கள், கவிஞர், ஆய்வாளர் ஆகியோரின் அனைத்துப் படைப்புக்களையும் எதிர்காலத் தலைமுறையினர் படிப்பதற்கும் ஆய்வு செய்வதற்கும் தேவையான முறையில் ஒரு நூலகம் அமைக்கவேண்டும்.

4. கோவை வட்டாரத்தில் கடந்த ஒரு நூறாண்டளவில் வாழ்ந்த/ வாழும் அறிஞர்கள், எழுத்தாளர்கள் அனைவரும் தாம் வாழும் காலத்தில் சேர்த்து வைத்திருக்கும் ஆயிரக்கணக்கான நூல்களை ஒரு சேர இயன்ற அளவில் தொகுத்து மேற்குறிப்பிட்ட நூலகத்தில் பாதுகாத்து ஆய்வாளர்களுக்குப் பயன்படும்படி வைக்கவேண்டும்.

 மேற்கண்ட பணிகளில் குறிப்பிட்ட வரிசையில் ஒவ்வொன்றாகச் செய்துமுடிக்க வேண்டும். 
 இத்தகைய அறக்கட்டளை ஒன்றை உருவாக்கும் முறையில் தற்காலிகச் செயற்குழு ஒன்றை நண்பர்கள் தெரிவு செய்தனர். தலைவராகப் புலவர் ஆதி, செயலாளர்களாக முனைவர் கு. முத்துக்குமார், திரு . கார்த்திகேயன் ஆகியவர்களோடு சந்திப்பில் கலந்துகொண்ட அனைத்து நண்பர்களும் செயற்குழு உறுப்பினர்களாக முடிவுசெய்தோம். அறக்கட்டளை தொடர்பான அனைத்து விவரங்களையும் தமிழ் உணர்வு சார்ந்த இதழாளர்கள், தமிழியக்கத்தினர், தமிழாய்வு நிறுவனத்தினர் முதலிய அனைவரோடும் பகிர்ந்து கொள்வதென்றும் அவர்கள் மூலம் தேவையான தொகையைத் திரட்ட முயற்சி செய்வதென்றும் முடிவுசெய்தோம். இதுகுறித்துத் தங்கள் கருத்துரைகளைப் பெரிதும் எதிர்ப்பார்க்கிறோம்.
                                                                                                                     நன்றி, 
                                                                                                                                                                            செயற்குழுவின் சார்பாக‌

வெள்ளி, 14 ஜூன், 2013

குடும்பத்துடன் உடல்தானம் செய்த முன்னாள் படைஞர்



பிறந்தோம்... வாழ்ந்தோம்... இறந்தாலும் வாழ்வோம்...: குடும்பத்துடன் உடல்தானம் செய்த முன்னாள் படைவீரர்

கோவை: கோவையை ச் சேர்ந்த முன்னாள் படைவீரர், மனைவி, மகன், மகளுடன் முழு உடல்தானம் செய்தார். கோவை சூலூர், டிபென்ஸ் காலனியை சேர்ந்தவர் ராஜகோபால், 51; முன்னாள் படைவீரர். அவரது மனைவி செல்லம்மாள், 46, மகள் பூவிழி, 24, மகன் கோவலன், 22, ஆகியோருடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். குடும்பத்தினருடன் முழு உடல்தானம் செய்வதாக கலெக்டர் கருணாகரனிடம் கடிதம் கொடுத்தார்.

முன்னாள் படைவீரர் ராஜகோபால் கூறியதாவது:

இந்திய ராணுவத்தில் பணியாற்றியபோது, ரத்ததானம் செய்தேன். அதன்பின், கண்களை தானம் செய்ய படிவம் கொடுத்துள்ளேன். இந்நிலையில், கோவையை சேர்ந்த சுகுமாரி என்பவர், முழு உடல்தானம் செய்த செய்தியை பத்திரிகைகளில் படித்தேன். அவரை போன்று, நானும் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல்தானம் செய்ய திட்டமிட்டேன். என்னுடைய முடிவுக்கு குடும்பத்தில் அனைவரின் ஆதரவும் கிடைத்தது. என்னுடன் சேர்ந்து, மனைவி, மகள், மகன் ஆகியோரும் உடல்தானம் செய்ய விரும்பினர். உடல்தானம் எவ்வாறு செய்ய வேண்டும் என்ற வழிமுறைகள் எங்களுக்கு தெரியவில்லை. கோவை குனியமுத்தூரை சேர்ந்த, "பிறர்க்கு உதவு' என்ற பொது நல இயக்கத்தின் உதவியுடன் உடல்தானம் செய்வதற்கு ஏற்பாடு செய்துள்ளேன்.

வாழும் காலத்தில், பிறருக்கு உதவ வேண்டும் என்பதால், பிறந்தநாள், திருமண நாள்களில் பசியால் வாடுவோருக்கும், ஆதரவற்றோருக்கும் உதவிகள் செய்து வருகிறோம். இருக்கும் போதும், இறந்த பிறகும் நம்மால் முடிந்த உதவியை பிறருக்கு செய்ய வேண்டும். நாங்கள் இறந்ததும், எங்களது உடல் உறுப்புகள் மற்றவர்களுக்கும், உடல் மருத்துவ ஆராய்ச்சி படிப்புக்கும் பயன்படும். இறந்த பிறகு யாருக்கும் பயன்படாத உடல், மற்றவருக்கு பயன்பட வேண்டும் என்பது எங்கள் குடும்பத்தின் விருப்பம். இதன் மூலம் இறந்த பிறகும் வாழலாம். இவ்வாறு, ராஜகோபால் தெரிவித்தார்.

விழிப்புணர்வு ஏற்படும்!

"பிறர்க்கு உதவு' அமைப்பின் நிறுவனர் ராஜாசேதுமுரளி கூறுகையில், ""கோவையில் குடும்பத்துடன் உடல்தானம் செய்வது இதுவே முதல் முறை. ""இவர்களை பார்த்து எல்லோருக்கும் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். இவர்கள் நான்கு பேருடன் சேர்த்து, குனியமுத்தூரை சேர்ந்த எல்.ஐ.சி., அதிகாரி ராஜவேலு என்பவரும் உடல்தானம் செய்துள்ளார். எங்கள் அமைப்பின் மூலம் இதுவரை 29 பேரின் உடல்தானம் செய்ய பதிவு செய்துள்ளோம்'' என்றார்.

சனி, 4 மே, 2013

மத்தியப் பணியாளர் தேர்வு - கோவை மாணவர்கள் ஐந்து பேர் வெற்றி

வெளியானது  மத்தியப் பணியார் தேர்வு முடிவு கோவை மாணவர்கள் ஐந்து பேர் வெற்றி
கோவை:சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில், கோவை இலவச உயர்கல்வி மையத்தில் பயிற்சி பெற்ற ஐந்து பேர் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
கோவை நஞ்சப்பா ரோட்டில் அமைந்துள்ளது கோவை உயர்கல்வி மையம். மாநகராட்சி மற்றும் அரசு கலை கல்லூரி சார்பில் நடத்தப்படும் இம்மையத்தில், அரசு கலை கல்லூரி பேராசிரியர் கனகராஜ் இலவசமாக பயிற்சி அளித்து வருகிறார்.சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில், இம்மையத்தில் பயிற்சி பெற்ற திருப்பூரை சேர்ந்த கிருஷ்ணகுமார்(460 ரேங்க்), அபிநயநிஷாந்தினி(717) டில்லியை சேர்ந்த மனோஜ்(771), சென்னையை சேர்ந்த சுரேஷ்குமார்(343), ஈரோட்டை சேர்ந்த கார்த்திகேயன் (789), உள்ளிட்டோர் வெற்றி பெற்றுள்ளனர்.
* வெற்றியின் ரகசியம்!சாதனை மாணவ,மாணவியர் கூறியதாவது:தேர்வில் வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. உயர்கல்வி மையத்தில், பேராசிரியர் கனகராஜ் அளித்த பயிற்சி எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில், கடினமாக உழைத்தோம். தினமும் 10 மணி நேரம் வரை படிப்பதை வழக்கமாக கொண்டோம். "டிவி', "சினிமா' பார்க்கும் நேரத்தை குறைத்துக் கொண்டோம். தினமும் செய்தி சேனல்கள் மற்றும் நாளிதழ்கள் படிப்பதை வழக்கமாக்கினோம். பெற்றோர் மற்றும் குடும்பத்தினரின் ஒத்துழைப்பு பக்கபலமாக அமைந்தது. கஷ்டப்பட்டு படிப்பதை விட, இஷ்டப்பட்டு படிக்க வேண்டும். தன்னம்பிக்கை, கடின உழைப்பு, விடா முயற்சி கொண்டு செயல்பட்டால் சிவில் சர்வீசஸ் தேர்வில் எளிதில் வெற்றி பெறலாம்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.
கோவை உயர்கல்வி மைய ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் கனகராஜ் கூறுகையில், ""சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதுவோருக்கு, இம்மையத்தில் இலவச பயிற்சி அளித்து வருகிறோம். ஆரம்ப தேர்வு, முதன்மை தேர்வு மற்றும் நேர்காணல் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இவ்வாண்டு முதல், நேர்காணல் பயிற்சியை, தமிழ்நாடு, கேரளா, பஞ்சாப் மற்றும் டில்லி உள்ளிட்ட பகுதிகளிலும் வழங்குகிறோம். கோவை மாநகராட்சிக்கும், அரசு கலை கல்லூரிக்கும், பயிற்சி பெறும் மாணவர்கள் சார்பில் நன்றி,'' என்றார்.
"விருப்பத்துடன் படித்ததால்ஐ.ஏ.எஸ்.,தேர்வில் சாதிக்க முடிந்தது'
மதுரை:""சுமையாக கருதாமல், விருப்பமுடன் படித்ததால் ஐ.ஏ.எஸ்., தேர்வில் சாதிக்க முடிந்தது,'' என, அகில இந்திய அளவில், 7வது இடத்தில் வெற்றி பெற்ற மதுரை டாக்டர் பிரபு சங்கர் தெரிவித்தார்.மதுரை மகாத்மாகாந்திநகரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பாங்க் ஆப் இந்தியா மேலாளர் தங்கராஜ் குணாளன். மனைவி வசந்தி. இவர்களது மகன் பிரபுசங்கர், 29. இவர், டி.வி.எஸ்.,லட்சுமி மெட்ரிக் பள்ளியில், 1 முதல், 12ம் வகுப்பு வரை படித்தார். 2000ல் பிளஸ் 2 தேர்வில், 1157 மதிப்பெண்கள் பெற்றார்.பின், மதுரை மருத்துவக்கல்லூரியில், 2005ல் எம்.பி.பி.எஸ்., பட்டம் பெற்றார். சண்டிகர் பி.ஜி.ஐ.எம்.இ.ஆர்., நிறுவனத்தில், எம்.டி., பட்டம் பெற்றார். பள்ளி, கல்லூரிகளில் மாணவர் சங்க தலைவராக திகழ்ந்தார்.தற்போது, சென்னை செட்டிநாடு மருத்துவ கல்லூரியில், உதவி பேராசிரியராக பணிபுரிகிறார். இவருக்கும், டாக்டர் நவீனா என்பவருக்கும், கடந்தாண்டு திருமணம் நடந்தது. நவீனா, நெல்லை மருத்துவ கல்லூரியில் எம்.எஸ்., படிக்கிறார்.இரண்டாவது முறையாக, ஐ.ஏ.எஸ்., தேர்வை எழுதிய பிரபுசங்கர், அகில இந்திய அளவில், 7வது இடத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
பிரபுசங்கர் கூறியதாவது:சிறிய வயதிலிருந்து, ஐ.ஏ.எஸ்., ஆக வேண்டும் என, ஆசை இருந்தது. கடந்த முறை, தேர்வு எழுதி வெற்றி பெற முடியவில்லை. இந்தாண்டு புவியியல், வரலாறு பாடங்களை தேர்வு செய்து படித்தேன். டிப்பதை சுமையாக கருதாமல், விருப்பத்துடன் படித்ததால், சாதிக்க முடிந்தது.சென்னை "சத்யா கோச்சிங்' சென்டரில் சர்ந்தேன். பணி காரணமாக தொடர்ந்து செல்ல முடியவில்லை. தினமும், "தினமலர்' நாளிதழ் படித்து பொது அறிவை வளர்த்து கொண்டேன். ஆர்வம் இருந்தால் சாதிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

மாற்றத்தை கொண்டு வருவேன்* முதலிடம் பெற்ற அருண் பேட்டி
சென்னை:""மக்கள் மனதில் இடம் பெறும் வகையில், புதிய மாற்றங்கள் கொண்டு வருவேன்,'' என, யு.பி.எஸ்.சி., தேர்வில், தமிழக அளவில் முதலிடம் பெற்ற அருண் கூறினார்.
தேசிய அளவில், ஆறாம் இடமும், தமிழக அளவில், முதலிடமும் பெற்று, ஐ.ஏ.எஸ்., பணிக்கு தேர்வு பெற்றுள்ள சென்னையைச் சேர்ந்த அருண் தம்புராஜ் கூறியதாவது:சொந்த ஊர் மதுரை; வளர்ந்தது சென்னை. மயிலாப்பூரில் உள்ள ஆங்கிலோ இந்தியன் பள்ளி படிப்பை முடித்தேன். பிளஸ் 2வில், நல்ல மதிப்பெண் எடுத்ததால், திருச்சி மருத்துவ கல்லூரியில படிக்க இடம் கிடைத்தது. திருச்சி மருத்துவ கல்லூரியிலிருந்து, சென்னை மருத்துவ கல்லூரிக்கு மாற்றலாகி வந்தேன். சென்னையில் தான் மருத்துவ படிப்பை முடித்தேன்.அப்பா, காவல் துறையில் பணிபுரிபவர் என்பதால், மக்களுக்கான சேவை செய்து குறித்து, எப்போது வீட்டில் பேசி கொண்டே இருப்பர். அப்பாவின் பேச்சு, மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை அதிகப்படுத்தியது. மருத்துவ படிப்பு முடிந்த உடன், சிவில் சர்வீஸ் தேர்வு எழுதினேன்; ஐ.பி.எஸ்., பணியில் தான் இடம் கிடைத்தது. இன்றும், ஐ.பி.எஸ்., தேர்வு தொடர்பான வழக்கு கோட்டில் உள்ளது.நன்றாக தேர்வு எழுதியும், ஐ.பி.எஸ்., பணியில் தான் இடம் கிடைத்ததால், இரண்டு ஆண்டுகளாக, ஐ.ஏ.எஸ்., தேர்வு எழுதவில்லை. நண்பர் ரவீந்திரன் அறிவுறுத்தலின் பேரில் தான், மறுபடியும் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதினேன். ஆனால், இந்த முறை நானே எதிர்பார்க்காத வகையில், முதலிடம் பெற்றுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. பெற்றோரே, என் வெற்றிக்கு காரணம். மக்கள் மனதில் இடம் பெறும் வகையில் புதிய மாற்றங்கள் கொண்டு வருவேன்.இவ்வாறு, அருண் கூறினார்.