திமுக லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திமுக லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 12 ஜூலை, 2025

121/133 திமுகவில் உதயநிதி தவிர வேறு யாரும் சனாதனம் குறித்துப் பேசவில்லை. அப்படியானால் திமுகவிலேயே இதற்கு ஆதரவு இல்லைதானே!



(சனாதனம் பொய்யும் மெய்யும் 120 தொடர்ச்சி)

  • அப்படியெல்லாம் இல்லை. பிறரும் பேசி வருகின்றனர். சான்றாகத் திருநெல்வேலியில் சட்டமன்றத் தலைவர் அப்பாவு,  நிகழ்ச்சி ஒன்றில், தமிழகத்தில் 96 விழுக்காடு இந்துக்களுக்குக் கல்வியை மறுத்ததுதான் சனாதனம் என்று பேசியுள்ளார். எடுத்துக்காட்டுகளையும் கூறியுள்ளார்.

“சனாதனம் என்றால் 4% மக்களுக்குக் கல்வி கற்க அனுமதி உண்டு. மற்றவர்கள் அடிமையாக வாழ வேண்டும். இதுதான் அதன் தத்துவம். 1835-இல் மெக்காலே பிரபு வரவில்லை என்றால், எல்லாரும் கல்வி கற்கலாம் என்ற சட்டம் வரவில்லை என்றால், நாம் கல்வி கற்றிருக்க மாட்டோம்.  என்று பேசியுள்ளார். மேலும்,

 1912-இல்   பட்டதாரிகள் 100 பேரில் 94 பேர் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான். 4% பேர் 94% பட்டம் பெற்றிருந்தார்கள். மீதி 96% பேர் 6% பட்டம் பெற்றிருந்தார்கள். இதுதான் அன்றைய கல்வி முறை; இதுதான் அன்றைய சமூக நிலை. 125 ஆண்டுகளுக்கு முன் தென் தமிழகத்தில் இருந்து படிப்பதற்காகச் சென்னை செல்வதாக இருந்தால், அங்கே இருந்த மைசூர் கபே என்ற விடுதியில் உணவருந்த, தங்க அனுமதி கிடையாது. தென் மாவட்டங்களில் இருந்து சென்னை செல்பவர்களுக்கு விடுதி தேவைப்பட்டது. அந்த 4 விழுக்காட்டைத் தவிர்த்துப் பார்த்தால் மீதமுள்ள 96 விழுக்காட்டினரும் இந்துக்கள்தான். அவர்களுக்குத்தான் கல்வி மறுக்கப்பட்டது; விடுதி மறுக்கப்பட்டது; விடுதியில் சாப்பிட அனுமதி மறுக்கப்பட்டது.  ” என்று சனாதனக் கொடுமையை விவரித்துள்ளார்.

தமிழ் நாட்டளவிற்கோ தென்னாட்டளவிற்கோ முற்போக்குச் சிந்தனை இல்லா வட நாட்டில் உதயநிதியின் இந்தப் பேச்சு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சங்(க) பரிவார் சக்திகள் உதயநிதியின் பேச்சுக்குக் கடும்  எதிர்ப்பினைப் பரப்பினர். இந்திய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்துசா, “உதயநிதி 80 விழுக்காட்டு இந்துக்களை இனக்கொலை செய்யத் தூண்டி விடுகிறார்” என்று மக்களைத் தூண்டி விட்டார். மோடி முதலானோர் இதைத் தேர்தல் பரப்புரைக்கும் பயன்படுத்தி வருகின்றனர்.

 உதயநிதி சனாதனத்தை ஒழிக்கக் கோரினாரே தவிர, சனாதனிகளையல்ல என்பதை அறிந்தும் இவ்வாறு கூறி வருகின்றனர். மகந்த பரமஃகம்ச தாசு என்னும் ஆரியச் சாமியார் உதயநிதியின் தலையைக் கொண்டு வருவோருக்கு உரூ. 10 கோடிப் பரிசு என அறிவித்தார். ஆனால் பாசக ஆதரவு ஊடகங்கள் இந்து மத்தை அழிப்பேன் என்று சொன்னதால் வந்த எதிர்வினை எனக் கூறி இதைக் கண்டிக்கவில்லை.

சனாதனத்தை ஒழிக்கச் சொல்லும் உதயநிதியை உச்ச நீதிமன்றம் தானே முன்வந்து விசாரிக்க வேண்டுமென முன்னாள் உயர், உச்ச நீதிமன்ற நீதியர்கள், உயர் பதவி வகித்த மேனாள் படைத்துறை அதிகாரிகள் என 262 பேர் எழுத்து மூலமாக முறையிட்டனர். ஆனால் இவர்களில்  யாரும் உதயநிதி தலை கொய்யச் சொன்ன சாமியாரைக்  கைது செய்யவும் சொல்லவில்லை, கண்டிக்கவுமில்லை.

காங்கிரசு, மார்க்சியக்கட்சி, சமாசுவாதி, பகுசன் சமாசு முதலான எந்த வட இந்தியக் கட்சித் தலைவர்களும் கொலைகாரச் சாமியாருக்கு எதிராகக் குரல் கொடுக்க வில்லை.

.அந்தச் சாமியாரோ உதயநிதி தலைக்கு மட்டும் விலை பேசினார். ஆனால் ஒன்றிய நீர்வளத்துறை  அமைச்சர் கசேந்திர சிங்கு செகாவத்து,  சனாதன தரும எதிர்ப்பாளர்களின் நாக்கை இழுத்து அறுக்க வேண்டும், கண்களைத் தோண்டி எடுக்க வேண்டும் என்று கொக்கரித்தார்.  அமைச்சர் ஒருவர் மற்றோர் அமைச்சர் முன்னிலையில் இப்படிப் பேசலாமா எனக் கேட்ட யாரும் ஒன்றிய அமைச்சரின் கொலைவெறிக்கு எதிர்ப்புக் குரல் கொடுக்கவில்லை.

சனாதன ஒழிப்பு என்பது சமூகநீதியை எதிரொலிக்கும் அடிப்படைக் கருத்துரிமையாகும். ஆனால் சனாதனத்தை எதிர்ப்பாளர்களின் நாக்கை அறு, கண்ணைப் பிடுங்கு போன்ற எதிரான படுகொலைப் பேச்சுகள் எந்த உரிமையின்பாற்பட்டதும் இல்லை. மாறாக இந்துத்துவப் பயங்கரவாதம் எனலாம். இத்தகைய இனக்கொலைத் தூண்டுநர்களை எங்ஙனம் இந்துச் சமயப்பற்றாளர்கள் என்று கூற முடியும்?ஆனால் இந்தியா கூட்டணியைச் சேர்ந்த தலைவர்களும் எதிர்பரப்புரையால் தடுமாறி உள்ளனர். வருணாசிரம எதிர்ப்பாளர்கள் இந்நூல் போன்று உண்மையைக் கூறும் படைப்புகளை பிற மாநில மொழிகளில் மொழி பெயர்த்துப் பரப்ப வேண்டும்.

  • (தொடரும்)

வெள்ளி, 14 செப்டம்பர், 2018

எழுவர் விடுதலை: கருத்து கூறும் அருகதை திமுகவிற்கும் காங்கிரசிற்கும் இல்லை ! – குவியாடி, தினசரி

அகரமுதல

எழுவர் விடுதலை: கருத்து கூறும் அருகதை

திமுகவிற்கும் காங்கிரசிற்கும் இல்லை !


 எழுவர் விடுதலையை ஆதரிப்போர் குறித்துக் குறை கூற வேண்டுமா என எண்ணலாம். வரவேற்பவர்களை வாழ்த்த வேண்டாவா எனக் கருதலாம். ஆனால் விடுதலை செய்வதற்கான வாய்ப்புகள் வந்தபொழுது எதிராக நடந்துவிட்டு இப்பொழுது விடுதலைக்குக் குரல்  கொடுக்கும் நாடகத்தை நாம் எதிர்க்கத்தானே வேண்டும்!
 உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சதாசிவம் கோவையில் 18.04.2014 அன்று மேற்கு மண்டல நீதிபதிகள் மாநாட்டில் கலந்து கொண்டார். அப்பொழுது அவர், தான் ஓய்வு பெறவுள்ள 25ஆம்  நாளுக்குள் ஒரு முக்கியமான வழக்கின் தீர்ப்பு வெளியாகும்  என்று தெரிவித்தார். முதன்மையான தீர்ப்பு என்றதால் இராசீவு கொலைவழக்கில் சிக்கியவர்கள் வழக்கு என்று ஊகித்து அவ்வாறே ஊடகங்கள் வெளியிட்டன. நல்ல தீர்ப்பு வெளிவரும் என்று சொன்னதாகவும் செய்திகள் வந்தன; வந்த தொடர்கள் மாறுபாட்டுடன் இருந்தன. ஆனால், அவற்றின் மையக்கருத்து எழுவர் விடுதலை குறிதத தீர்ப்பு வரும்; அனைவரும் மகிழும் வண்ணம் விடுதலைக்கு வழி வகுக்கும் என்பதுதான்.
  திமுக தலைவர் கருணாநிதிக்கு எழுவர் விடுதலை குறித்துப் பரிவும் மனித நேயக் கண்ணோட்டமும் இருந்திருந்தால் என்ன செய்திருப்பார்? தலைமை நீதிபதி சதாசிவம் பேச்சினைப் பாராட்டியிருப்பார்; எழுவரும் விடுதலை ஆகப்போவதை மகிழ்ந்து வரவேற்றிருப்பார். அன்னை சோனியாவின் அடிமையாக உள்ளவர் எங்ஙனம் வரவேற்க இயலும்? எனவே எதிர்ப்பு தெரிவித்தார்.
  இவ்விடுதலையால் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் மாறி அமையும் என்ற அச்சம் வந்து விட்டது.  எழுவர் மீது அன்பு இருந்ததென்றால் என்ன சொல்லி இருப்பார்? “தலைமை நீதிபதி அவர்களே! நீங்கள் 25.04.2014 அன்றுதான் பணிநிறைவு அடைகிறீர்கள். அதற்கு முதல் நாள் நாடாளுமன்றத் தேர்தல் வருகிறது. எனவே, 25.04.2014 அன்று தீர்ப்பு வழங்குங்கள்” என்று சொல்லி யிருப்பார். மாறாகக் கடும் கண்டனமாக அவரது எதிர்ப்புக் குரல் வந்தது. இந்த அரசியல் அழுத்தத்திற்கு உச்ச நீதிமன்றம் உள்ளாகியது. எனவே முடிவை மாற்றிச் சில ஐயங்களை எழுப்பி அரசமைப்பு சட்ட ஆயத்திற்கு அனுப்பி விட்டனர். அன்றைக்கே வந்திருக்க வேண்டிய விடுதலைச் செய்தி தள்ளிப்போனதற்குக் காரணமான கட்சி வஞ்சகத்தை மறைத்து ஆதரவுக் குரல் கொடுப்பதுபோல நடிக்கலாமா?
  அவர் அத்துடன் நிற்கவில்லை. தமிழரே விசாரித்துத் தீர்ப்பு வழங்கினால் தவறாக எண்ணத் தோன்றும் என்பதால் தமிழரல்லாத நீதிபதி விசாரிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். இவ்வாறு பாகுபாடு காட்டுவது தவறு. எல்லா மாநில வழக்குகளிலும் அவ்வாறுதான் பார்க்கின்றார்களா? உண்மையில் இவ்வழக்கு தலைமை நீதிபதி சதாசிவம் மட்டும் விசாரித்துத் தீர்ப்பு வழங்கும் வழக்கல்ல. அவருடன் நீதிபதி இரஞ்சன் கோகோயி(Ranjan Gogoi), நீதிபதி ஏ.விரமணா ஆகியோர் இணைந்த அமர்வே விசாரைணக்கானது. இருந்தும் நடுநிலையில் நின்று சொல்பவர்போல் தவறான காரணம் கற்பித்துள்ளார்.
  இவ்வாறெல்லாம் விடுதலைக்கு வாய்ப்புள்ள போது எதிராகத் திருவாய் மலர்ந்த கட்சி, இப்பொழுது பரிவுள்ளம் உள்ளதுபோல் நாடகம் ஆடுவது தவறுதானே! எனவே, கருத்து கூற அருகதை இல்லை என்பதை உணர்ந்து திமுக அமைதி காக்க வேண்டும்.
 பெருந்தன்மைப் போர்வை போர்த்திக் கொண்டு வஞ்சக உள்ளத்துடன் உள்ள காங்கிரசும் எதுவும் சொல்ல அருகதை யற்ற கட்சியே!
11.10.1984 இல் தலைமையமைச்சர் இந்திரா காந்தி  சீக்கியச் சமயத்தைச் சேர்ந்த இரு மெய்க்காவலர்களால்  சுட்டுக் கொல்லப்பட்டார். அன்று முதல் 4 நாள் சீக்கியர்களை அடையாளம் கண்டறிந்து காங்கிரசார் கொன்றனர். தில்லியில் மட்டுமே 3000 சீக்கியர்களைக் கொன்றனர்.
ஆனால், இதற்கு இராகுல் காந்தி ஒரு பெரிய மரம் விழும்பொழுது கீழ்நிலம் அதிரத்தான் செய்யும் (“When a giant tree falls, the earth below shakes.”) என்றார். இதனை ஒட்டிக் காங்கிரசு அமைச்சர் ஒருவர் “ஆலமரம் விழும் பொழுது அதனடியில் உள்ள புழு பூச்சி உயிரினங்களும் அழியத்தான் செய்யும்” என்றார். ஆளாளுக்கு ஆலமரம் விழுந்தால் அடியில் உள்ள சிறு செடிகளும் அழிவது இயற்கை என்பதுபோல் பேசினர்.
இவர்கள் தீவிரவாதம் குறித்துப் பேச என்ன தகுதி உள்ளது?
  அது மட்டுமல்ல.  தில்லியில் சீக்கியர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட படுகொலை, பாலியல் வல்லுறவுகள், கலவரம், தீவைப்பு குறித்து 740 வழக்குகள் தொடரப்பட்டன. ஒன்றில்கூட யாருக்கும் தண்டனை கிடைக்காவண்ணம் பார்த்துக் கொண்டனர்.
  நாடாளுமன்றத்தில் முதிர்ச்சியுடன் பேசிய இராகுல்கந்தி, சிறுபையனைப்போல் சீக்கியருக்கு எதிரான வன்முறை கட்டவிழ்த்துப்படவில்லை என்கிறார்.   கொலை முதலான வன்கொடுமைகளுக்கு வருத்தம்கூடத் தெரிவிக்காத காங்கிரசு இன்று எழுவரை விடுதலை செய்தால் தீவிரவாதம் என்னாகும் என்கிறது.
  காங்கிரசுக் கட்சியின் செய்தித்  தொடர்பாளர் இரந்தீப் சிங்கு சுர்சீவாலாசெய்தியாளர்கள் சந்திப்பில் “ இந்த அரசு செய்வது என்ன?. அரசின் வேலை தீவிரவாதிகளை பிடிப்பதா அல்லது காப்பாற்றுவதா?. இது தான் இந்த அரசின் கொள்கையா?. தீவிரவாதத்தில் ஈடுபட்டதாகக் குற்றம் மெய்ப்பிக்கப்பட்டவர்களைத் தற்போது நாம் விடுதலை செய்யப் போகிறோமா?” என்று பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். தன் இனம் காங்கிரசின் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டதும் கற்பழிக்கப்பட்டதும் உடைமைகள் அழிக்கப்பட்டதும் நினைவில் இருந்தால் இவ்வாறு பேசியிருப்பாரா?
  2014 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் தமிழ்நலக் கட்சிகள் பாசகவை ஆதரித்தன.  பாசக தலைவர்களும்  தமிழக மீனவர்கள், ஈழத்தமிழர்களுக்கு ஆதரவுக் குரல் கொடுப்பதுபோல் பேசினர். காங்கிரசிற்கு எதிரான நிலைப்பாட்டை எடுப்பதே பாசகவின் கொள்கையாக உள்ளது. அவ்வாறிருக்க காங்கிரசு போல்  தமிழர்களுக்கு எதிரான முடிவுகளைப் பாசக எடுக்கலாமா?
  இந்த நேரத்தில் அதிமுகவைப் பாராட்டவேண்டும்.  பாசகவின் பொம்மை அரசு, அடிமை அரசு என்றெல்லாம் அதிமுக ஆட்சியைக் கேலி செய்கின்றனர்.  மேனாள் முதல்வர் செயலலிதா, எழுவர் விடுதலையில் உறுதியான நடவடிக்கை எடுத்ததுபோல் எடப்பாடி பழனிச்சாமி அரசும் உறுதியாக இருந்து எழுவர் விடுதலையைப் பரிந்துரைத்துள்ளது.
“பாசகவும், பாசகவின் கூட்டாளியான அதிமுகவும், பாசகவால் நியமிக்கப்பட்ட ஆளுநரும், இந்தக் கொலைக் குற்றவாளிகளை விடுதலை செய்யும் நோக்கில் செயல்பட்டுவருவது உண்மைதானே?” எனக் காங்கிரசு செய்தியாளர் கூறியுள்ளார். இதன் மூலம் எதிரான நிலைப்பாட்டிற்கு அக் கட்சி தூண்டுகிறது. ஆனால் தமிழின் பெருமையைப் பேசும் பாசக,  தமிழில் வாழ்த்து, சுட்டுரை போன்றவற்றைத் தெரிவிக்கும் பாசக, எழுவர் விடுதலைக்குத் தடையில்லை என வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும்.  இதன் மூலம் ஆளுநர் உடனடியாக விடுதலைக்கான பரிந்துரையை ஏற்க வேண்டும். கருத்து கூற அருகதையற்றவர்கள் வாய்மூடிக்கிடக்க வேண்டும்.
– குவியாடி

செவ்வாய், 7 மே, 2013

திமுக, அதிமுகவுக்கு மாற்றாக மக்கள் புதிய கட்சியைத் தேடுகின்றனர்: வைகோ

திமுக, அதிமுகவுக்கு மாற்றாக மக்கள் புதிய கட்சியைத் தேடுகின்றனர்: வைகோ

திமுக, அதிமுகவுக்கு மாற்றான புதிய சக்தியை மக்கள் தேடத் துவங்கியுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறினார்.
மதிமுகவின் 20-ம் ஆண்டு தொடக்க விழா இன்று கொண்டாடப்பட்டது.இதனையொட்டி மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் உள்ள பெரியார், அண்ணா சிலைக்கு வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.மதிமுக கொடியை ஏற்றி வைத்து, அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.பின்னர் செய்தியாளர்களிடம் வைகோ கூறியதாவது:-
மக்களின் நல் ஆதரவோடு மதிமுக 20-ம் ஆண்டை எட்டிப் பிடித்துள்ளது.சென்ற சட்டப்பேரவைத் தேர்தலை மதிமுக புறக்கணித்தது.எனினும் மக்கள் பிரச்னைகளுக்காகத் தொடர்ந்து போராடி வரும் இயக்கமாக உள்ளோம்.ஈழத் தமிழர் பிரச்னை, மீனவர் பிரச்னை, ஸ்டெர்லைட் ஆலை, முல்லைப் பெரியாறு பிரச்னை போன்ற போராட்டக் களங்களில் மதிமுக ஆக்கப்பூர்வமாகப் போராடியுள்ளது.பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோர் தூக்குத் தண்டனையை ரத்துச் செய்யக் கோரி பல கட்டங்களில் போராட்டங்கள் நடத்தியுள்ளோம்.
மதுக் கடைகள் அகற்ற வலியுறுத்தி 3 கட்டங்களாகப் பேராட்டம் நடத்தியுள்ளோம்.இந்தப் போராட்டங்களுக்கு பெண்கள் மத்தியில் மிகப் பெரிய ஆதரவு கிடைத்துள்ளது. தமிழகத்தில் திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் மாறி மாறி ஆட்சி செய்து வரும் நிலையில், அவர்களுக்கு மாற்றாக புதிய சக்தியைத் தேடும் படலம் மக்கள் மத்தியில் தொடங்கி இருக்கிறது. எனவே மக்கள் எதிர்பார்பை ஈடு செய்யும் வகையில் மதிமுக தொடர்ந்து மக்கள் பிரச்னைக்காகப் போராடும் என்றார் அவர்.

வெள்ளி, 5 ஏப்ரல், 2013

இனி தி.மு.க. நெருக்குதல் கொடுக்குமாம்? ஆட்சியில் முடியாதது இப்பொழுது முடியுமாம்



பின்வருவனவற்றை டி.ஆர்.பாலுவும் அவரை இயக்குபவர்களும் புரிந்து கொள்ள வேண்டும்.

1. என்னதான் நாடகமாடினாலும், மக்கள், இனப்படுகொலையைக் கண்டும் காணாமல் இருந்த தி.மு.க.வை மன்னிக்க விரும்பவில்லை.
2. மாணவர்கள் போராட்டங்களும் மக்கள் எழுச்சியும் அடியோடு தோல்வியைத் தரும் என அஞ்சிப் பிரிவது போல் பிரிந்து தேர்தலுக்குப்பிறகு காங்.உடன் கூட்டணி சேரும் தி.மு.க. என மக்கள் நம்புகின்றனர்.
3. ஒருவேளை  பா.ச.க.வை ஆதிக்க வேண்டி வந்தாலும் இனப்படுகொலையாளர்களைத் தண்டிக்க மதவாதத்துடன் கூட்டு வைப்பதில் தவறு இல்லை என்றுதான் தி.மு.க. பேசும் என்பதும் மக்கள் நம்பிக்கை.
4.  முதல்வராக இருந்தும் ஒன்றும் செய்ய முடியாது என்பவர்கள் ஆட்சி இருந்தும் தம் வீட்டு மக்களைமட்டும் வளர்த்தவர்கள், இப் பொழுது  மட்டும் நெருக்குதல் கொடுக்கும் என்று சொல்வது எப்படி நடக்கும்?  இந்த நெருக்குதலை ஆட்சியில் இருந்த பொழுது கொடுத்திருந்தால் என்ன?

தொடர்ச்சி காண்க.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/

(முன் தொடர்ச்சி)
5. இனப்படுகொலை என்பதை மறைத்துப் போர் என்றும் ஈழம் என்று சொல்வதை விரும்பாமலும் நிலை தடுமாறி உரைப்பதை மக்கள் பொருட்படுத்தவில்லை.
6. மக்கள் மீண்டும் ஆதரிக்க வேண்டும் என்றால்
ஈழத்தமிழர்கள் இனப்படுகொலை தொடர்பாகத் தி.மு.க.தலைமைக்குத் தெரிந்தவற்றைக் கூறி  வெளிப்படையாக ஈழத் தமிழர்களிடமும்  பிற உலகத் தமிழர்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/


மத்திய அரசு மீதான திமுகவின் நிலை இனி கடுமையாக இருக்கும்: டி. ஆர். பாலு


""மத்தியில் ஆளும் கூட்டணிக்கு ஆதரவு அளித்துவந்த திமுகவின் நிலை இதுவரை மிகவும் இணக்கமான முறையில் அமைந்திருந்தது. இனிவரும் நாள்களில் அவ்வாறு சும்மா இருக்கப் போவதில்லை. மத்திய அரசு மீதான எங்கள் அணுகுமுறையும் விமர்சனமும் இனி மிகக் கடுமையாக இருக்கும்'' என்று திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர். பாலு கூறினார்.
இது தொடர்பாக தில்லியில் "தினமணி' நிருபரிடம் வியாழக்கிழமை அவர் கூறியதாவது:
காவிரி விவகாரத்தில் நடுவர் மன்றம் வழங்கிய இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டு விட்டதால் நிரந்தர தீர்வு கிடைத்துவிட்டதாக சிலர் பெருமிதப்படுகின்றனர். அரசிதழில் நடுவர்மன்றத் தீர்ப்பு வெளியிடப்பட்டது ஒரு தொடக்கம் மட்டுமே.
தீர்ப்பின்படி காவிரி நதி நீர் மேலாண்மை வாரியம், காவிரி நீர் ஒழுங்குமுறை குழு ஆகியவற்றை மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டும்.  அப்போதுதான் நீர்ப் பங்கீட்டு நடவடிக்கையை கண்காணிக்கவும் தமிழகத்தின் நீர்ப் பெறும் உரிமையை நிலைநாட்டவும் முடியும்.
இந்த நடவடிக்கையை விரைவுபடுத்த, பிரதமர் மன்மோகன் சிங்குக்கும், சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சருக்கும் திமுக நெருக்குதல் கொடுக்கும்.
தமிழக நலன் குறித்து மத்திய அரசிடம் முறையிட்டு, முறையிட்டு ஏமாந்து போனதுதான் மிச்சம்.
மத்திய அரசின் அலட்சியத்தால் ஏராளமான கசப்பான அனுபவங்களை திமுக சந்தித்துள்ளது. அதன் விளைவாகத்தான், மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திமுக திரும்பப் பெற்றது.
இலங்கைத் தமிழர் பிரச்னை: இலங்கைத் தமிழர் விவகாரத்தில் தமிழகத்தையும், திமுகவையும் மத்திய அரசு ஏமாற்றிவிட்டது.
போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதையும், போர்க் குற்றங்களுக்கு காரணமானவர்களை தண்டிக்க சர்வதேச விசாரணை தேவை என்றும் திமுக வலியுறுத்தியது.
போஸ்னியா, தெற்கு சூடான் போன்ற நாடுகளில் மனித உரிமைகள் மீறப்பட்டபோது,  முந்திக் கொண்டு இந்தியா குரல் கொடுத்தது. ஆனால், பக்கத்து நாடான இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான கொடுமைகள் குறித்து அலட்சியம் காட்டி வருகிறது.
மீனவர்கள் விவகாரம்: இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டும், சிறைப்பிடிக்கப்பட்டும் வருகின்றனர். அதைத் தடுக்கவும் மத்திய அரசு நிரந்தர நடவடிக்கை எடுக்கவில்லை.
இது போன்ற அலட்சியப் போக்குக்கு காங்கிரஸ் கட்சி பதில் கூறும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று பாலு கூறினார்.

கருத்துகள்(1)

திரு .பாலு சார் , இலங்கை தமிழ் மக்களை ,காவேரி பிரச்சனயில் வஞ்சித்து விட்டார்கள் என்று சொல்வது எல்லாம் தமிழ் நாட்டு மக்களும் ,தமிழக முதல்வரும் ,மாணவர்களும் சொல்லிகொண்டுதானே இருக்கின்றார்கள் ,இது அறிந்து கொள்ள உங்களுக்கு 9 வருடம் ஆனதா ? உங்களை காங்கிரஸ் ஏமாற்றிவிட்டது என வேறு அது எங்களுக்கு தெரியாது .தமிழகத்தை புறக்கணிப்பது மட்டுமே தெரிந்த எங்களுக்கு உங்களையும் புறக்கணித்து விட்டது என்பதை கேட்கும் போது நெஞ்சு துடிக்கின்றது ,இதயம் வெடிக்கின்றது .திமுகாவை ஏமாற்றிய கட்சியை இனி ஆட்சியில் நிம்மதியாக அமரவிடகூடாது.புறபடு தலைவா இனி தமிழகத்தை ,இலங்கை தமிழ் மக்களை ,முல்லை ,காவேரி போன்று அணைத்து விசயங்களிலும் சாரி பாலு சார் திமுகவை புறக்கணிக்கும் காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி கொடுப்போம் .தமிழக மக்கள் இனியும் பொறுத்தால் தாங்காது திமுகவை ஏமாற்றிய காங்கிரஸ் கட்சியை எதிர்க்க தவறினால் நாம் சொற்றுபிண்டங்கள் ஆகி விடுவோம் .வீறு கொண்டு எழுவோம் .தமிழா வீறு கொண்டு எழு ....(என்ன கொடுமை சார் உஷார் இது பாராளுமன்ற தேர்தலுக்கான அச்சாரம எச்சரிக்கை )


சனி, 30 மார்ச், 2013

மாணவர்கள் போராட்டங்களே திமுகவை வெளியேற்றியது: பழ.நெடுமாறன்

மாணவர்கள் நடத்திய தொடர் போராட்டங்களே மத்திய அரசிலிருந்து திமுகவை வெளியேற்றியது: பழ.நெடுமாறன்

தமிழகத்தில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக மாணவர்கள் நடத்திய தொடர்போராட்டம் காரணமாகவே மத்திய அரசிலிருந்து திமுக வெளியேறியது என தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் கூறினார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ஈழத் தமிழர்களுக்காக தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா நிறைவேற்றிய தீர்மானம் வரலாற்று சிறப்புமிக்கது. தனி ஈழம் அமைய பொதுவாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்ற தீர்மானம் இதுவரை சட்டபேரவையில் இல்லாதது. ஆனால், டெசோ மாநாடு தீர்மானமே சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளதாக கருணாநிதி கூறுவது சரியல்ல. தீர்மானம் நிறைவேறும் போது திமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவைக்குள்ளிருந்து வாக்களிக்கவில்லை. வாக்களிக்கவேண்டிய இக்கட்டான நிலையைத் தவிர்க்கவே திமுக வெளிநடப்புச் செய்துள்ளது. இதன்மூலம் திமுக ஈழத்தமிழர்களுக்கு துரோகம் இழைத்துள்ளது.மாணவர்கள் போராட்டம் ஏற்படுத்திய நிர்பந்தமே திமுகவை மத்திய அரசிலிருந்து விலகவைத்துள்ளது.
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் ஈழத்தமிழர் பிரச்னைக்கு தமிழகத்தை தவிர வேறு மாநிலங்களில் ஆதரவில்லை என்கிறார். பாலஸ்தீனத்துக்கு மத்திய அரசு ஆதரவளித்தது, கிழக்கு வங்காளதேசம் உருவாக ஆதரவளித்தது உள்ளிட்டவற்றுக்கு மற்ற மாநிலங்களுடன் ஆலோசித்த பிறகா மத்திய அரசு முடிவெடுத்தது? ஆகவே வரலாறு தெரியாமல் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான்குர்ஷித் பேசுகிறார்.வரும் நவம்பரில் இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடத்த இந்தியா ஆதரவளித்துள்ளது. அங்கு மாநாடு நடந்தால் காமன்வெல்த் அமைப்பின் தலைவராக இலங்கை அதிபர் ராஜபட்சே இருப்பார். அதன்பின் அவரை சர்வதேச நீதிமன்றத்தில் போர்க் குற்றவாளியாக நிறுத்தமுடியாது. ஆகவே மாநாட்டை இலங்கையில் நடத்தக்கூடாது என முதல்வர் ஜெயலலிதா கூறியிருப்பது வரவேற்கத்தக்கது. மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் அக்கருத்தை வலியுறுத்தியிருப்பது வரவேற்கத்தக்கது.
இலங்கை தூதர் பிரசாத் கரியவலம் இலங்கை சிங்களவர் இந்திய வம்சாவளியினர் என்கிறார். அப்படி எனில் அவர்களுக்குத் தனிநாடு எதற்கு?  மேலும், சீனப் போரின்போது இந்தியாவுக்கு ஆதரவு தெரிவிக்காத இலங்கை, கிழக்கு வங்காளதேசம் விடுதலைப் போரின்போது பாகிஸ்தான் ராணுவ விமானத்துக்கு எரிபொருள் நிரப்பிடவும் அனுமதித்தது சரியா? மத்திய அரசுக்கான ஆதரவை திமுக, திரிணாமுல் கட்சிகள் விலக்கிக்கொண்டுள்ளன. சரத்பவாரும் விலகப் போவதாக கூறிவருகிறார். ஆகவே மத்திய அரசு பதவியில் நீடிக்க தார்மீக உரிமையில்லை. ஈழத் தமிழர் பிரச்னையில் காங்கிரஸ் தானாகவே மக்களிடமிருந்து தனிமைப்பட்டுவிட்டது. மாணவர் போராட்டம் யாராலும் தூண்டப்படவில்லை. மக்களவையில் எதிர்க்கட்சிகள் ஈழத்தமிழருக்கு ஆதரவாகவே குரல்கொடுக்கின்றன. மாணவர் போராட்டத்தை நீர்த்துப் போகச்செய்ய மத்திய உளவுத்துறையும், காங்கிரஸும் முயற்சிப்பது வெற்றிபெறாது என்று கூறினார்.

வெள்ளி, 29 மார்ச், 2013

திமுக விலகியதால் ஈழத் தமிழர்களுக்கு விடிவு ஏற்பட்டதா?: கருணாநிதி ஆதங்கம்



பாவம்! நெருப்பாற்றில் நீந்தி வந்தவர் இன்று  பதவிகளை இழந்த வெறுப்பிலும் வேதனையிலும் குமுறுகிறார். அவருக்கே தெரியும் என்பதால் விரிவாக எழுத வேண்டியதில்லை. எனினும் ஒரு கேள்வி. அப்புறம் எதற்கு அப்படிச் செய்யாவிட்டால் விலகுவோம்! இப்படிச் செய்யாவிட்டால் விலகுவோம்! என்றெல்லாம் வெற்று மிரட்டல்கள் அவ்வப்பொழுது?  பழைய கலைஞராக இருந்திருந்தால் இதனால் என்ன நன்மை விளைந்தது என்று முதன்மையில்லை. தமிழர் நலனுக்காகச் சிறிதேனும் முடிந்ததைச் செய்தோம் என்ற மன அமைதி எங்களுக்கு என்றுதானே கூறியிருப்பார்.  அடிக்கடித் தொண்டரடிப் பொடியாழ்வார்கள் மூலம் அப்பொழுதும் ஒன்றும் நடந்திருக்காது எனப் பிதற்ற வைத்தவர் இப்பொழுது தானே ... எடுத்திருக்கிறார். கலைஞரே! உங்களை இன்னும் பல்லாயிரவர் நம்புவதால் இனியேனும் மாறக்கூடாதா? தமிழர் வரலாற்றில்  மாற்றம் ஏற்படுத்தக்கூடாதா? தமிழ் ஈழத்திற்கு உதவக்கூடாதா? உங்களுக்கு ஏற்பட்ட பழியைத் துடைக்கக்கூடாதா?  அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/



கூட்டணியிலிருந்து திமுக விலகியதால் ஈழத் தமிழர்களுக்கு விடிவு ஏற்பட்டதா?: கருணாநிதி ஆதங்கம்

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இருந்து திமுக விலகியதால் ஈழத் தமிழர்களின் பிரச்னைக்கு விடிவு ஏற்பட்டுவிட்டதா என்று திமுக தலைவர் கருணாநிதி ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:
இலங்கைப் பிரச்னையில் திமுக இரட்டை வேடம் போடுவதாக முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் குற்றஞ்சாட்டியுள்ளார்.
2009-ம் ஆண்டே காங்கிரஸ் கூட்டணியில் இருந்து திமுக விலக வேண்டும் என்று ஜெயலலிதா கூறினாராம்.
ஆனால் நான் (கருணாநிதி) அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி, 2 வாரத்தில் போர் நிறுத்தத்துக்கு மத்திய அரசு முன்வராவிட்டால், தமிழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜிநாமா செய்வர் என்ற அளவில் தீர்மானம் நிறைவேற்றினேன் என்று அவர் கூறியுள்ளார்.
பின்னர் மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி, என்னைச் சந்தித்த பிறகு, மத்திய அரசின் நடவடிக்கை திருப்தி அளிப்பதாக இருக்கிறது என்று கூறி ராஜிநாமா நாடகத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டேன் என்று ஜெயலலிதா கூறியுள்ளார். இதில் எதை ஜெயலலிதா நாடகம் என்கிறார்?
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இந்தத் தீர்மானங்கள் தொடர்பாக அப்போது ஜெயலலிதா, விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக கருணாநிதி செயல்படுகிறாரோ என்ற சந்தேகம் தமிழ் மக்கள் மனதில் எழுந்துள்ளது. இலங்கையில் நடைபெறும் உள்நாட்டுப் போரை நிறுத்தும் அதிகாரம் மத்திய அரசிடம் இல்லை என்பது 5 முறை முதல்வராக இருந்த கருணாநிதிக்குப் புரியவில்லை என்று கூறினார்.
இப்படித் தான் கூறியதையே வசதியாக மறந்துவிட்டு பேசுவதற்குப் பெயர்தான் இரட்டை வேடம்.
இலங்கைப் பிரச்னையில் அனைத்துக் கட்சிக் கூட்டம், மனிதச் சங்கிலிப் போராட்டம், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜிநாமா, சட்டப்பேரவையில் தீர்மானம் என திமுக ஆட்சியில் கண்துடைப்பு நாடகங்கள்தான் நடந்தன என்று ஜெயலலிதா கூறுகிறார்.
அப்படியென்றால் சட்டப்பேரவையில் வியாழக்கிழமை  ஜெயலலிதா நிறைவேற்றிய தீர்மானம் கபட நாடகமா?
ஜெயலலிதா போன்ற சிலரின் அபிலாஷையின் காரணமாக மத்திய அரசில் இருந்து திமுக இப்போது வெளியேறிவிட்டது.
இதனால் என்ன நடந்துவிட்டது? ஈழத் தமிழர்களின் பிரச்னைக்கு விடிவு ஏற்பட்டுவிட்டதா? அமெரிக்கத் தீர்மானத்தில் இந்தியா திருத்தங்களைக் கொண்டு வந்துவிட்டதா? நாடாளுமன்றத்தில் தீர்மானத்தைத் திருத்தங்களோடு நிறைவேற்றிவிட்டதா? மத்திய அரசிலிருந்து திமுக வெளியேறியது மட்டும்தான் நடந்தது. ஆனால் அதற்காக திமுக சிறிதும் கவலைப்படவில்லை.
2009-ம் ஆண்டும் மத்திய அரசிலிருந்து திமுக விலகியிருந்தால் இதே நிலைதான் ஏற்பட்டிருக்கும் என்று கருணாநிதி கூறியுள்ளார்.
நாங்கள் வெளியே வந்ததால், இலங்கை தமிழர்களுக்கு என்ன நடந்து விட்டது? கருணாநிதி கேள்வி

சென்னை: இலங்கை விவகாரத்தில், மத்திய அரசிலிருந்து தி.மு.க., வெளியே வந்துள்ளதால், இலங்கை தமிழர்களின் நிலையில், எந்த ஒரு மாற்றமும் ஏற்படவில்லை என அக்கட்சியின் தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். மத்திய அரசிலிருந்து தி.மு.க., வெளியே வந்ததற்காக கட்சியினர் கவலைப்படவேண்டாம் எனவும் அவர் கூறியுள்ளார்.
தி.மு.க., தலைவர் கருணாநிதி தனது கட்சியினருக்கு எழுதியுள்ள கடிதத்தில், முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட சிலரின் ஆசைப்படி நாங்கள் மத்திய அரசிலிருந்து வெளியே வந்து விட்டோம். இப்போது என்ன நடந்து விட்டது? ஈழத்தமிழர்களின் பிரச்னைகள் தீர்ந்து விட்டதா? அல்லது அமெரிக்க தீர்மானத்தின் மீது ஐ.நா., மனித உரிமை கவுன்சிலில் இந்தியா திருத்தம் கொண்டு வந்து விட்டதா? அல்லது பார்லிமென்ட்டில் தான் தீர்மானம் எதுவும் கொண்டு வந்து விட்டார்களா? என கேள்வி எழுப்பியுள்ளார். மத்திய அரசிலிருந்து தி.மு.க., வெளியே வந்து விட்டது. இது ஒன்று தான் நடந்துள்ளது. ஆனால் இதற்காக கட்சியினர் யாரும் கவலைப்பட வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார்.

கடந்த 2009ம் ஆண்டு இலங்கையில் போர் உச்சக்கட்டத்தில் இருந்த போது, தி.மு.க., ஏன் வெளியே வரவில்லை என்ற எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ள அவர், இவையெல்லாம் தி.மு.க., மீது பழி போட நடக்கும் முயற்சி என குற்றம்சாட்டியுள்ளார். வரலாறு தெரிந்தவர்கள் இது போன்ற யூகத்தின் அடிப்படையிலான கேள்விகளை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளார். இலங்கை விவகாரத்தில் தான் இரட்டை வேடம் போடுவதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளதற்கு பதிலளித்துள்ள அவர், கடந்த 1956 ம் ஆண்டு முதல் தமிழக மக்கள் தனது நடவடிக்கைகளை அறிவார்கள் என்றும், அதே வேளையில், கடந்த 2002ம் ஆண்டு பிரபாகரனை கைது செய்து இந்தியா கொண்டு வரவேண்டும் என ஜெ., தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியதை மக்கள் மறந்து விட்டார்களா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

மத்திய அரசின் உறவுகளை முறித்துக்கொள்ள தி.மு.க., தயங்குகிறது என்ற முதல்வரின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள அவர், இதன் மூலமாக மத்திய அரசு கவிழ்ந்து தான் பிரதமராக வரலாம் என்ற எண்ணத்தில் முதல்வர் இவ்வாறாக கூறிவருவதாக கருணாநிதி பதிலளித்துள்ளார். சேது சமுத்திர திட்டம், காவிரி நதிநீர் ஆணையம் ஆகியவற்றில் முதல்வர் ஜெயலலிதா தான் இரட்டை வேடம் போடுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.