: கருணாநிதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
: கருணாநிதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 2 செப்டம்பர், 2013

கச்சத்தீவு: மத்திய அரசின் வாக்குமூலம் கண்டனத்திற்குரியது - கருணாநிதி

கச்சத்தீவு வழக்கில் மத்திய அரசின் வாக்குமூலம் கண்டனத்திற்குரியது : கருணாநிதி


கச்சத்தீவு வழக்கில் மத்திய அரசு அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பது கண்டனத்துக்கு உரியது என்று கூறியுள்ளார் திமுக தலைவர் கருணாநிதி.
இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில்,
“கச்சத்தீவு” பற்றிய வழக்கில் மத்திய அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிரமாணப் பத்திரத்தில் “கச்சத்தீவு எந்த நாட்டுக்கும் சொந்தமில்லாமல் இருந்தது; ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கச்சத் தீவுக்கு யார் உரிமை கொண்டாடுவது என்ற பிரச்சினை இந்தியா, இலங்கை இடையே நீடித்து வந்தது;
அதைத் தொடர்ந்து இந்திய-இலங்கைக் கடல் பகுதியில் சர்வ தேச எல்லைக் கோட்டை நிர்ணயித்த போது கச்சத் தீவு இலங்கை வரம்புக்குள் சென்று விட்டது.
அதன் பிறகு 1974ஆம் ஆண்டில் இந்தியா இலங்கை இடையே கச்சத் தீவு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
1976ஆம் ஆண்டில் இரு நாடுகளிடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்திலும் கச்சத்தீவு இலங்கையின் பகுதியில் இருப்பதை இந்தியா ஏற்றுக் கொண்டுள்ளது. இந்திய எல்லைக்கோட்டுக்குள் இருந்த கச்சத் தீவை இலங்கைக்கு தாரை வார்த்துக் கொடுத்ததாக மாயை ஏற்படுத்துவது தவறானது.” என்றெல்லாம் தெரிவித்திருப்பது தமிழ் மக்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கச்சத் தீவு இந்தியாவிற்குத் தான் சொந்தம் என்றும், அதனை 1974ஆம் ஆண்டு இந்திய அரசு இலங்கைக்கு ஒரு ஒப்பந்தத்தின் வாயிலாகத் தாரை வார்த்து விட்டது என்றும், அந்த ஒப்பந்தம் நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெறாத காரணத்தால், அது செல்லாது என்றும் தமிழகத்தின் சார்பில் முதலமைச்சர் உச்சநீதி மன்றத்தில் முறையிட்டிருக்கிறார்.
“கச்சத் தீவு” பற்றி 15-4-2013 அன்று நடைபெற்ற “டெசோ” அமைப்பின் கூட்டத்தில், “கச்சத் தீவு இந்தியாவின் ஒரு பகுதியாகும். அது 1974ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின்படி
இலங்கை அரசுக்கு இந்திய அரசால், சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் நாம் தெரிவித்த எதிர்ப்புகளையெல்லாம் மீறி விட்டுக் கொடுக்கப்பட்டது. இந்தியாவின் எந்தவொரு பகுதியையும் வேறு ஒரு நாட்டிற்கு விட்டுக் கொடுப்பதென்றால், இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் 368வது பிரிவின்படி நாடாளுமன்றத்தின் பரிசீலனைக்கு வைத்து சட்டம் இயற்றப்பட வேண்டும்.
கச்சத் தீவைப் பொறுத்தவரை அப்படி எந்தவொரு சட்டமும் இதுவரை நிறைவேற்றப்படாததால், கச்சத் தீவை இலங்கைக்கு ஒப்பந்தத்தின் மூலம் விட்டுக் கொடுத்தது அரசியல் சட்ட ரீதியாகச் செல்லுபடி ஆகாது என்பதுதான் உண்மை. எனவே 1974ஆம் ஆண்டு ஒப்பந்தத்தை ரத்து செய்யவும், கச்சத்தீவு இந்தியாவின் ஒரு பகுதி தான் என்பதைப் பிரகடனப்படுத்தவும், “டெசோ” அமைப்பின் மூலம் உச்ச நீதிமன்றத்தை அணுகுவதென இந்தக் கூட்டம் தீர்மானிக்கின்றது” என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அந்தத் தீர்மானத்தின் அடிப்படையில், “டெசோ” அமைப்பின் சார்பில் நான் இந்திய உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை 10-5-2013 அன்று தாக்கல் செய்திருக்கிறேன்.
உச்ச நீதி மன்றத்தில் நான் தாக்கல் செய்த இந்த மனு, 15-7-2013 அன்று தலைமை நீதிபதி அல்தமாஸ் கபீர், நீதிபதிகள் எப்.எம். இப்ராகிம் கலிபுல்லா, விக்ரம் ஜித் சென் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, எனது மனுவினை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், மத்திய அரசுக்கு “நோட்டீஸ்” அனுப்பிட உத்தரவிட்டனர்.
கச்சத் தீவைப் பொறுத்தவரை அது பாரம்பரியமான நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்டது என்பதை மத்திய அரசுக்கு நினைவுபடுத்த வேண்டிய கட்டாயத்திற்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். கச்சத்தீவில் புனித அந்தோணியார் கத்தோலிக்க தேவாலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் ஒரு வாரத் திருவிழாவிற்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்களே அதிகம் செல்வர். இலங்கை மீனவர்களும் கலந்து கொள்வர்.
தொன்று தொட்டு தமிழக மீனவர்களும் இலங்கை மீனவர்களும் இப்பகுதியில் மீன் பிடித்து வருகின்றனர். அதன் தொடர்பான, வலைகளை உலர்த்துதல், களைப்பாறுதல் போன்றவற்றிற்கும் இத் தீவினைப் பயன்படுத்துவர். இத்தீவானது பன்னெடுங்காலமாக ராமநாதபுரம் ராஜாவின் ஆளுகையில் இருந்தது.
இலங்கையை ஆட்சி செய்த டச்சுக் கம்பெனி அந்தத் தீவை 1660இல் குத்தகைக்குப் பெற்றிருந்தது. பின்னர் 1870-73, 1875, 1880, 1889 ஆகிய ஆண்டுகளிலும் ராமநாதபுரம் அரசர் இந்தத் தீவிற்கு அருகில் உள்ள சங்குப் படுகையை குத்தகைக்கு விட்டிருந்தார் என்பதும், இலங்கை கவர்னரின் 1757-1962 நினைவு ஏடுகளில் குறிப்பிடப்பட்டிருப்பதும், 1766இல் கண்டி அரசரால் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தமும், 1845ஆம் ஆண்டில் இலங்கை லெப்டினன்ட் கவர்னர் எழுதிய கடிதமும், இத்தீவு ராமநாதபுரம் அரசரின் இத்தீவு ராமநாதபுரம் அரசரின் இத்தீவு ராமநாதபுரம் அரசரின் இத்தீவு ராமநாதபுரம் அரசரின் ஆளுகையிலும் கட்டுப்பாட்டிலும் இருந்தது என்பதற்கான ஆதாரங்களாகும்.
இந்தக் காலக் கட்டத்தில் ராமநாதபுரம் அரசர் ஆங்கிலேய அரசுக்குக் கட்டுப்பட்ட குறுநில மன்னராக இருந்தார். இந்தியா விடுதலை பெற்ற பின் இத்தீவு தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்தில் 1250 சர்வே எண்ணில் கட்டுப்பட்டிருந்தது. தமிழ்நாடு அரசு வெளியிட்ட ராமநாதபுரம் மாவட்ட ஆவணத் தொகுப்பேட்டிலும் (கெஜட்டிலும்) இவ்விவரம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
உச்ச நீதி மன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பிரமாண வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கு, தமிழக அரசு மூன்று வாரங்களில் விளக்கம் தர வேண்டுமென்று “நோட்டீஸ்” அனுப்பப்பட்டுள்ள நிலையில், மேலே குறிப்பிட்டுள்ள வரலாற்றுப் பூர்வமான ஆதாரங்களையும், மேலும் தமிழக அரசிடம் இருக்கும் கூடுதல் ஆவணங்களையும் இணைத்து உச்ச நீதி மன்றத்தில் உரிய முறையில் தாக்கல் செய்வது மிக மிக அவசியமாகும். 1974ஆம் ஆண்டு இந்திய அரசு இலங்கை அரசுடன் ஒப்பந்தம் செய்து கொண்ட காலக் கட்டத்திலேயே, மத்திய அரசு அந்த ஒப்பந்தத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டுமென்று, 21-8-1974 அன்று திமுக ஆட்சியில், நான் முதலமைச்சராக இருந்த போதே தமிழகச் சட்டப் பேரவையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 1974ஆம் ஆண்டு இந்தியா இலங்கையுடன் ஒப்பந்தம் செய்து கொண்ட போது நாடாளுமன்றத்தில் அதற்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
23-7-1974 அன்று அந்த ஒப்பந்தத்தின் நகலை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த சுவரண்சிங் தாக்கல் செய்த போது, தமிழகத்துக்குச் சொந்தமான கச்சத் தீவை இலங்கைக்கு விட்டுக் கொடுத்ததை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று தி.மு.கவின் சார்பில் இரா. செழியன் நாடாளுமன்றத்தில் கூறினார்.
பார்வர்டு பிளாக் கட்சியின் உறுப்பினராக இருந்த அருமை நண்பர் மூக்கையா தேவர், “எனது இராமநாதபுரம் தொகுதிக்குள் அடங்கியுள்ள இத்தீவை இலங்கைக்கு வழங்கியது அரசியல் சட்டத்துக்கு முரணானது” என்றார்.
“இலங்கையின் நட்பை பெறுவதற்காகவே ரகசிய பேரம் நடத்தி கச்சத்தீவைத் தானமாக வழங்கியுள்ளது” என்று வாஜ்பாய் பேசினார். இப்படிப்பட்ட கருத்துக்களை மாநிலங்களவையில் திமுக சார்பில் எஸ்.எஸ். மாரிசாமி, சோஷலிஸ்ட் கட்சி சார்பில் ராஜ்நாராயண், முஸ்லீம் லீக் சார்பில் நண்பர் அப்துல் சமது ஆகியோர் தெரிவித்தனர்.
இதையெல்லாம் முற்றிலும் மறந்து விட்டு அல்லது மறைத்து விட்டு, மத்திய அரசு உச்ச நீதி மன்றத்தில் தற்போது தாக்கல் செய்துள்ள பிரமாணத்தில் உண்மைக்கு மாறான தகவல்களைத் தெரிவித்துள்ளது. கடந்த வாரம் டெல்லிக்கு வந்த இலங்கை அமைச்சர் பெரீஸ், கச்சத் தீவு முடிந்து போன அத்தியாயம் என்று வரம்பு கடந்து பேசியதற்கு மத்திய அரசு “பின்பாட்டு” பாடுவதைப் போல, இந்தப் பிரமாண வாக்குமூலத்தை உச்ச நீதி மன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. கச்சத்தீவு, இராமநாதபுரம் சேதுபதி அரசருக்குச் சொந்தமானது. இந்தத் தீவை வணிகர்களான ஜனாப் முகமது காதர் மரக்காயருக்கும், முத்துசாமி பிள்ளைக்கும் அரசர் சேதுபதி ஐந்தாண்டுகளுக்குக் குத்தகைக்கு வழங்கியிருந்தார். இதற்கான ஆவணம், இராமநாதபுரம், துணை பதிவாளர் அலுவலக ஆவண எண். 510/570, தேதி 2-7-1980. 1947இல் ஜமீன் ஒழிப்புச் சட்டத்தின் மூலம் இந்தியாவிற்கு சொந்தமானது. கச்சத் தீவு இந்தியாவிற்குச் சொந்தம் என்பதற்கு பல ஆவணங்கள் உள்ளன.
இந்த ஆவவணங்களையும், அடிப்படை ஆதாரங்களையும் இந்திய அரசியல் சட்ட நெறிமுறைகளையும் ஆழமாகப் பரிசீலனை செய்து உச்ச நீதி மன்றம் நல்ல தீர்ப்பு வழங்கிடும் என்று நாம் நம்பிக்கையுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த வேளையில், “கச்சத்தீவு இலங்கை வரம்புக்குள் உள்ளது” என்று மத்திய அரசு பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்திருப்பது, தமிழகத்திற்குப் பேரிட போன்றது; இந்தப் பிரச்சினையில் பெரும் பின்னடைவை ஏற்படுத்திடக் கூடியது. மத்திய அரசின் இந்த முடிவு கடும் கண்டனத்திற்குரியதாகும். எனினும், கச்சத்தீவுப் பிரச்சினையில் தமிழகத்தின் பக்கம் நீதியும் நேர்மையும் நிரம்ப இருப்பதால், நமது உரிமையை உச்ச நீதிமன்றம் நிலைநாட்டிடும் என்று நம்புவோம்!
- என்று கூறியுள்ளார்.

இந்த பகுதியில் மேலும்

கருத்துகள்(7)

இரட்டை வேடம் போடும் தங்களது வார்த்தை ஜாலங்கள் செல்லுபடி ஆகாது. மக்கள் இனியும் ஏமாற மாட்டார்கள்.
இதை 1974 லிலேயே உரக்க சொல்லி கட்ச தீவு கை மாறாம செஞ்சிருக்கலாமே.தும்ப விட்டு வாலையில்ல இப்போ பிடிக்குறீங்க!!!அப்போ உங்களுக்கு என்ன இக்கட்டு என்பது உலகறிந்த ரகசியம்.சரி இப்பவாவது கொஞ்சம் வேஷம் கட்டணுமுன்னு தோணிச்சே...
Hi drama is staged again. He still believes that we are fools
சரி யா soneenga
மற்ற பிரச்சனைகளை காட்டிலும் இந்த பிரச்னை மிக சிறியது. இலங்கை யில் இன படுகொலை, குற்றவாளியாக உங்கள் போன்ற வர் தான். தமிழ் மக்கள் மடிய காரணியாக இருந்து இப்பொழுது தமிழ் தீவுக்காக போராடுவது போல நாடகம்.

ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2013

இலங்கை நட்பு நாடு இல்லை : கருணாநிதி

இலங்கை நட்பு நாடு இல்லை என்பதை இந்தியா புரிந்துகொள்ளாவிடில் பின்னர் வருந்த நேரிடும்: கருணாநிதி

இலங்கை நட்பு நாடு இல்லை என்பதை இந்தியா புரிந்துகொள்ளாவிட்டால், பின்னர் வருந்த நேரிடும் என்று மத்திய அரசை திமுக தலைவர் கருணாநிதி எச்சரித்துள்ளார்.இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் நாடுகளின் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்றும், அப்படிப் பங்கேற்றால் அதைக் கண்டித்து ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளோம்.தமிழருக்கு உறுதிமொழிகளை வழங்குவதும், தமிழரோடு உடன்பாட்டில் கையொப்பமிடுவதும், பின்னர் உடன்பாட்டில் இருந்து விலகுவதும் இலங்கை அரசின் பாரம்பரியமான பழக்கமாக இருந்து வருகிறது.இதனால் சிங்களர்களுக்கும், தமிழர்களுக்கும் இடையே உறவுகள் மோசமடைந்துள்ளது.இரு இனங்களுக்கு இடையே நல்லெண்ணமும் இணக்கமும் ஏற்படுவது குதிரைக் கொம்பாகவே உள்ளது.
1987-ல் ராஜீவ்காந்தி - ஜெயவர்த்தனே செய்துகொண்ட உடன்பாட்டின்படி மாகாண சபைகளுக்கு அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்கும் வகையில் இலங்கை அரசியலமைப்பின் சட்டம் 13-ல் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.அதன்படி வடகிழக்கு மாகாணங்கள் ஒரே ஆட்சி அலகாக இணைந்து, ஒரே ஆளுநர், ஒரே முதல்வர் ஒரே அமைச்சரவையின் கீழ் இயங்கும் என்பது அந்த உடன்பாட்டின் அம்சமாகும்.மேலும் வடகிழக்கு மாகாணங்கள் தமிழ்ப் பேசும் மக்களின் மரபு வழித் தாயகம் என்பதும் அதில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.தற்போது 13-வது சட்டத்திருத்தத்தை நீர்த்துப் போகச் செய்யும் முயற்சியில் இலங்கை அரசு ஈடுபட்டு வருகிறது.இதுபோல் பல விவகாரங்களில் தமிழர்களுடனும், இந்திய அரசுடனும் செய்துகொண்ட உடன்பாட்டை இலங்கை அரசு ஒருதலைப்பட்சமாகவே உடைந்தெறிந்துள்ளனர் இதிலிருந்தே இலங்கை அரசின் நம்பகத்தன்மையற்ற போக்கினை உணர்ந்து கொள்ளலாம்.
இலங்கை அதிபர் ராஜபட்சே, தமிழினப் படுகொலையில் ஈடுபட்ட, போர்க்குற்றவாளி என்று சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் யூ குறிப்பிட்டுள்ளார்.1983-ம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத்திலேயே இந்திராகாந்தி இலங்கையில் நடப்பது இனப் படுகொலை என்று கூறினார்.இதனை மத்திய அரசு மறந்துவிடக் கூடாது.சீனாவுடனும், பாகிஸ்தானுடனும் இந்தியா போரில் ஈடுபட்டபோது, இலங்கை அரசு இந்தியாவின் பக்கம் நிற்கவில்லை. எதிரிகள் பக்கமே நின்றது.ஈழத் தமிழர்கள்தான் உணர்வுப்பூர்வமாக இந்தியாவை ஆதரித்தனர்.எனவே,நட்பு நாட்டுக்கான எந்தக் குணாதிசயங்களையும் இலங்கை பெற்றிருக்கவில்லை என்பதை இந்தியா இப்போதாவது உணர்ந்து கொள்ள வேண்டும்.எவ்வித தயவு தாட்சண்யமுமின்றி இலங்கை அரசைத் தட்டிக் கேட்க வேண்டும்.இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தின் 13-வது திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு இலங்கைக்கு உரிய அழுத்தம் தர வேண்டும்.இந்தியாவில் செய்யப்படும் எல்லாச் சமரச முயற்சிகளையும் இலங்கை அரசு தங்கள் சாதனையாகவே எடுத்துக் கொள்ளும்.இதைப் புரிந்துகொள்ளாவிட்டால் இந்தியா பின்னர் வருந்த நேரிடும் என்று அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

வெள்ளி, 14 டிசம்பர், 2012

தமிழக நலனுக்காக திமுக எதையும் வலியுறுத்தத் தயார் : கருணாநிதி

 இரு விவரங்கள் புரியவில்லை. ௧.)<இதுபற்றி நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறுவதாக செய்திகள் வந்துள்ளன.> வழக்கு தொடுத்ததே தி.மு.க. சட்டத்துறைச் செயலர்தான். அப்படியானால்  தலைவர் கலைஞருக்கே தெரியாமல் வழக்கா? செய்தித்தாள்கள் மூலம்தான் அறிந்து கொண்டாரா?
௨. < தமிழ்நாட்டின் நன்மைக்காக எதையும் வலியுறுத்த தி.மு.க. தயாராக இருக்கிறது  > உணவகங்களில் உணவு தயார் என்ற விளம்பரப் பலகை போல் செய்தி உள்ளது. வலியுறுத்த வேண்டியதுதானே. குடும்பத் தேவைகளை நிறைவேற்றாவிட்டால் தமிழர் நலன் தேவைகளை வலியுறுத்துவேன் என மறைமுக வெற்று மிரட்டலா?  குடியரசுத் தலைவரையே வீட்டிற்குவரவழைக்கும் ஏதோ செல்வாக்கு இருப்பினும்  தாயகத் தமிழர் நலனுக்கும் ஈழத்தமிழர் நலனுக்கும் பிற அயலகத் தமிழர் நலனுக்கும் என்ன வலியுறுத்தி உள்ளார்? பழைய பெருங்காய ஏனத்தைக் காட்டக்கூடாது.
எனவே, ஆயத்த(தயார்) பூச்சாண்டி காட்டாமல் உடனே தமிழர் நலனில்  - தமிழர் நலன் என்றால் ,  வீட்டுத் தமிழர் நலன் அன்று ; நாட்டுத் தமிழர் நலனில் - கருத்து செலுத்த கலைஞர் முன்வரவேண்டும்.அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி!எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

தமிழக நலனுக்காக திமுக எதையும் வலியுறுத்தத் தயார் : கருணாநிதி

தமிழக நலனுக்காக திமுக மத்திய அரசிடம் எதையும் வலியுறுத்த தயாராக இருப்பதாக திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.
சென்னையில் இன்று நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் திமுக தலைவர் கருணாநிதி.
அப்போது செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளும் கருணாநிதி அளித்த பதிலும் :
செய்தியாளர் : முக்கிய தீர்மானமாக டிசம்பர் 18ந்தேதியன்று அறப்போர் ஆர்ப்பாட்டத்தை அறிவித்திருக்கிறீர்கள். அந்தப் போராட்டம் எப்படி இருக்கும்?
கருணாநிதி :  அறப்போர் ஆர்ப்பாட்டம் அமைதியாக முழக்கம் செய்கின்ற போராட்டமாக இருக்கும். அந்தந்த பகுதிகளுக்கேற்றவாறு, அமைதியான முறையில் முழக்கம் செய்தும்,
சட்டம் ஒழுங்கு இவற்றுக்குக் கட்டுப்பட்டும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும். குக்கிராமங்களில் கூட கழகக் கொடிகளோடும் - கழகத்தினர் இந்தப் போராட்டங்களில் ஆங்காங்கு ஈடுபடுவார்கள்.
செய்தியாளர் : சென்னையில் நடைபெறும் அறப்போர் ஆர்ப்பாட்டத்தில் நேரடியாக நீங்கள் கலந்து கொள்கிறீர்களா?
கருணாநிதி : இன்னும் அதைப் பற்றி முடிவு செய்யவில்லை.
செய்தியாளர் :- அ.தி.மு.க. அரசு, எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் இரட்டை இலை நினைவுச் சின்னத்தை பெரிதாக வைத்திருக்கிறார்கள். அரசு செலவில் அது கட்டப்பட்டதாகச் சொல்கிறார்கள். அதைப் பற்றி எதுவும் தீர்மானத்தில் இடம் பெறவில்லையே?
கருணாநிதி : இதுபற்றி நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறுவதாக செய்திகள் வந்துள்ளன. எனவே அதிலே நான் எந்தக் கருத்தும் சொல்ல விரும்பவில்லை.
செய்தியாளர் : மத்திய அரசில் அங்கம் வகிக்கும் தி.மு.க., ஏன் மத்திய அரசிடம் கூடுதல் மின்சாரத்தைப் பெற்று தமிழகத்திற்குக் கொடுக்கக் கூடாது?
கருணாநிதி : மின்சாரத்தை ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்திற்குக் கொண்டு வருவதற்கு, அதற்கான வழிவகைகள் முன்கூட்டியே செய்திருக்க வேண்டும்.
மத்தியிலே இருக்கும் மின்சாரத்தை தென்கோடியிலே உள்ள ஒரு மாநிலத்திற்குக் கொண்டு வருவதென்றால், அதற்கான ஏற்பாடுகள் எல்லாம் செய்யப்பட்டிருக்க வேண்டும். அந்த ஏற்பாடுகளை உடனடியாக செய்து விட முடியாது. தமிழகத்திற்கு மத்திய அரசிடமிருந்து மின்சாரம் பெற வேண்டுமென்றால், அந்த மின்சாரத்தைக் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை முன் கூட்டியே செய்திட வேண்டும்.
செய்தியாளர் : அந்த ஏற்பாடுகளைச் செய்ய வேண்டுமென்று அதிமுக ஆட்சியாளர்கள் பிரதமருக்கு கடிதம் எழுதியிருக்கிறார்கள். அந்த நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டுமென்று தி.மு.க., மத்திய அரசிடம் வலியுறுத்துமா?
கருணாநிதி : நிச்சயமாக - தமிழ்நாட்டின் நன்மைக்காக எதையும் வலியுறுத்த தி.மு.க. தயாராக இருக்கிறது.
செய்தியாளர் :- வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் மதவாதக் கட்சிகள் ஆட்சிக்கு வருவதைத் தடுக்க, தமிழகத்திலே உள்ள மதசார்பற்ற கட்சிகளையும், தி.மு.க. கூட்டணியிலே தற்போது இல்லாத கட்சிகளையும் ஒன்றிணைத்து, ஒரு பலமான கூட்டணியை அமைக்கும் முயற்சியிலே நீங்கள் ஈடுபடுவீர்களா?
கருணாநிதி : நீங்கள் சொன்ன மதச்சார்பற்ற கட்சிகள் ஒருங்கிணைந்து அந்த முயற்சியிலே ஈடுபட்டால், அதனை நாங்கள் ஊக்கப்படுத்துவோம் என்று பதிலளித்தார்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


திங்கள், 12 நவம்பர், 2012

இலங்கையில் பொதுவாக்கெடுப்பு : கருணாநிதி வலியுறுத்தல்

இலங்கையில் பொதுவாக்கெடுப்பு : கருணாநிதி வலியுறுத்தல்

சென்னை: ""இலங்கையில் ,பொது வாக்கெடுப்பு நடத்த இந்தியா அழுத்தம் தர வேண்டும். இதற்கு, மத்திய அரசு உறுதுணையாக இருந்தால் தான், நாமும் அவர்களுக்கு உறுதுணையாக இருக்க முடியும்,'' என்று, தி.மு.க., தலைவர் கருணாநிதி மறைமுகமாக மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார் "டெசோ' மாநாட்டு தீர்மான நகலை ஐ.நா., சபையில் வழங்கி விட்டு, நேற்று சென்னை வந்த, திமுக பொருளாளர், ஸ்டாலின், டி.ஆர்.பாலு ஆகியோருக்கு பாராட்டுவிழா, சென்னை அறிவாலயத்தில் நடந்தது. விழாவில்,திமுக தலைவர் கருணாநிதி பேசியதாவது:"டெசோ' குழந்தை வளரத் துவங்கிய காலகட்டத்தில், இலங்கை தமிழர்களுக்கு விடிவு ஏற்படாதா என்ற ஏக்கத்தோடு, ஐ. நா., சபையிடம், ஸ்டாலினும், பாலுவும் டெசோ மாநாட்டு தீர்மானங்களை வழங்கியுள்ளனர்.இலங்கை தமிழர்களை சுயமரியாதையுடன் வாழ்வதற்கு, எவ்வளவு அழுத்தம் கொடுக்கவும், தி.மு.க., தயாராக இருக்கிறது. இலங்கை தமிழர்களுக்கு விடிவு காலம் வர, பொது வாக்கெடுப்பு நடத்த ஐ.நா., சபையை தயார் படுத்த வேண்டும். இந்தியாவும், அழுத்தம் கொடுக்க வேண்டும். அதற்கு, மத்திய அரசு உறுதுணையாக இருந்தால் தான், நாமும் அவர்களுக்கு உறுதுணையாக இருக்க முடியும் . இவ்வாறு கருணாநிதி பேசினார்

சனி, 20 அக்டோபர், 2012

சேது த் திட்டம் வந்தால் செழிப்புறும் தென்னகம்: கருணாநிதி

சேது த் திட்டம் வந்தால் செழிப்புறும் தென்னகம்: கருணாநிதி

First Published : 20 October 2012 05:51 PM IST
சேது சமுத்திர திட்டம் செயல்படுத்தப்பட்டால் தமிழகம் செழிப்பாக மாறும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்,சேது சமுத்திரத் திட்டம் தேவையில்லை என்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு, தமிழகத்திற்கு இழைக்கப்படும் மாபெரும் துரோகம். சேது சமுத்திரத் திட்டம் தமிழகத்திற்கு எத்தனை அவசியமானது என்பதைப்பற்றி நான் 2 நாட்களுக்கு முன்பு கூட கடிதம் எழுதியிருந்தேன், திராவிடர் கழகத் தலைவர் இளவல் வீரமணியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தோழர் ஜி. ராமகிருஷ்ணனும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தா. பாண்டியனும், பா.ம.க. சார்பில் நிறுவனர் ராமதாசும் அறிக்கை வெளியிட்டிருந்தார்கள்.
இதுமட்டுமா, சேது சமுத்திரத் திட்டத்திற்காக எழுச்சி நாள் கொண்டாடும்படி 1967ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சராக இருந்த போதே ஆணையிட்டுள்ளார்.
முதலமைச்சராக எம்.ஜி.ஆர்.  இருந்தபோது, 1985-1990ஆம் ஆண்டுக்கான ஏழாவது ஐந்தாண்டுத் திட்டத்தைச் சமர்ப்பித்தபோது சேது சமுத்திரத் திட்டம் மன்னார் வளைகுடாவை பாக் ஜலசந்தியுடன் இணைப்பதற்கு பாம்பனுக்கு அருகே உள்ள குறுகிய பகுதியில் கப்பல் போக்குவரத்துக் கால்வாயை வெட்டுவதற்கு வகை செய்யும் திட்டம் என்றும், பயண தூரம், பயண நேரம் ஆகியவை குறையும் என்றும் எடுத்துக் கூறி அத்திட்டத்தை நிறைவேற்றியே தீரவேண்டுமென்றும் கூறியிருக்கிறார்.
1981ஆம் ஆண்டு சேது சமுத்திரத் திட்டம் பற்றி ஆராய எச்.ஆர். லட்சுமி நாராயணன் தலைமையில் அமைந்த குழு தமிழகத்திற்கு வந்த போது, எனது கோரிக்கையினை ஏற்று,அன்றைய முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர்., அந்தக் குழுவிடம் சேது சமுத்திரத் திட்டத்தின் முக்கியத்துவம் பற்றிப் பேசினார்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மத்தியிலே அமைந்த போது கப்பல், சாலை போக்குவரத்துத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற டி.ஆர். பாலு இத்திட்டத்திற்கு முழு வடிவம் தந்து மிக வேகமாக திட்டப் பணிகள் நடந்தன.
இதற்கிடையே, 2002ம் ஆண்டு பிரதமருக்கு நான் எழுதிய கடிதத்தில், தமிழகத்தின் நீண்ட நாள் கோரிக்கையான சேது சமுத்திரத் திட்டத்தை உடனே நிறைவேற்றக் கோரி வலியுறுத்தியிருந்தேன்.
மேலும், சேதுக் கால்வாய் திட்டம் என்பது, பாக் ஜலசந்தியையும் மன்னார் வளைகுடாவையும் இணைக்கும் ஆடம்ஸ் பாலத்தின் குறுக்கே வெட்டப்பட வேண்டிய கால்வாயின் பெயராகும்.
சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றினால், இந்தியாவிற்கு அன்னியச் செலாவணியும், கிழக்கு கடற்கரையோரமாய்க் கப்பல் போக்குவரத்தும் எளிதாக இருக்கும்.
இத்திட்டத்தின் பயனைப் பற்றி 1981-82ஆம் ஆண்டு மத்திய அரசின் குழு பின்வருமாறு ஆராய்ந்து மதிப்பிட்டது.
1. இந்தியாவின் கிழக்குக் கடற்கரையோரத்தில் தொடர்ச்சியான கடல் வழிப் போக்குவரத்திற்கு தற்போது வழியில்லை. இத்திட்டத்தை செயல்படுத்தினால் இந்து மகா சமுத்திரமும் வங்கக் கடலும் இணைய வாய்ப்புள்ளது. பாறைகளால் அமைந்த ஆடம்ஸ் பாலத்தை வெட்டி இணைத்தால் கடல் வழிப் போக்குவரத்திற்கு மிகவும் வசதியாக இருக்கும்.
2. சேது கால்வாய்த் திட்டமும், தூத்துக்குடித் துறைமுகத் திட்டமும் ஒருங்கிணைந்தவைகளாகும். சேது சமுத்திரத் திட்டத்தைச் செயல்படுத்தினால் தூத்துக்குடி துறைமுக வளர்ச்சியும் முழு அளவு அதிகரிக்கும். தூத்துக் குடியிலிருந்து பின்வரும் துறைமுகங்களுக்குப் பயணம் செய்யும் நேரமும் குறையும்.
அ. தூத்துக்குடியிலிருந்து சென்னை 434 மைல் (மிச்சப்படும் தூரம்)
ஆ. தூத்துக்குடியிலிருந்து விசாகப்பட்டினம் 376 மைல் (மிச்சப்படும் தூரம்) இ) தூத்துக்குடியிலிருந்து கல்கத்தா - 340 மைல் (மிச்சப்படும் தூரம்)
3. இக்கால்வாயினால் பயணம் செய்யும் தூரம் குறைவதால் கப்பலின் எரி பொருள் மிச்சப்படும். இதனால் இந்தியாவின் அன்னியச் செலாவணி செலவில் சுமார் 130 கோடி ரூபாய் ஒவ்வொரு ஆண்டும் மிச்சப்படும்.
4. இந்தியாவிற்கு அன்னியச் செலாவணி கணிசமான அளவு உயரும். இந்தக் கால்வாயின் மூலம் தமிழகத்தின் குளச்சல், முட்டம், தூத்துக்குடி, ராமேசுவரம்,நாகப்பட்டினம், காரைக்கால், கடலூர், பாண்டிச்சேரி, சென்னை மற்றும் விசாகப்பட்டினம், கல்கத்தா வரையுள்ள கிழக்குக் கடற்கரைத் துறைமுகங்கள் வளர்ச்சி அடையும்.
5. இக்கால்வாய் வெட்டப்பட்டால் தூத்துக்குடித் துறைமுகத்தின் வளர்ச்சி ஏற்பட்டு அதன்மூலம் பொருளாதார ரீதியாக நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர்,காரைக்குடி, திருப்பத்தூர், மதுரை, நாகர்கோவில் ஆகிய பிற்படுத்தப்பட்ட பகுதிகள் முழுதும் தொழில் ரீதியாக வளர்ச்சி பெறும்.
6. இந்தக் கால்வாய் வெட்டப்பட்டால், இந்தியாவின் தென் பகுதியில் அன்னியச் சக்திகள் ஊடுருவாமல் அது ஓர்அரணாக விளங்கும்.
7. இக்கால்வாயின் மூலம் மீன் பிடித் தொழில் தென்னிந்தியாவில் வளர்ச்சி பெறும். மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களுக்கு இது ஒரு பாதுகாப்பு வளையமாகத் திகழும்.
8. நிலம் வழியாகச் செல்லும் நிலக்கரி, சிமெண்ட், உப்பு, உரங்கள், கடல் உணவு வகைகள், பருப்பு வகைகள், பருத்தி போன்ற பொருள்களைக் கிழக்குக் கடற்கரை மார்க்கமாக இந்தியாவின் பிற பகுதிகளுக்குக் கொண்டு செல்ல இக்கால்வாய் மிகவும் உதவியாக இருக்கும்.
9. சேதுக் கால்வாய் மூலமாக கப்பல்கள் சென்றால், புயல் அபாயம் ஏதும் ஏற்பட வாய்ப்பில்லை.
10. இக்கால்வாய் ஒரு சுற்றுலா மையமாக அமைந்து உலகின் பல பகுதிகளில் இருந்து பயணிகளை ஈர்க்க வாய்ப்புள்ளது.
11. ஏற்றுமதி, இறக்குமதித் தொழில்கள் இக்கால்வாயினால் பெருகி, இந்தியாவின் வளர்ச்சியை அதிகரிக்கும்.
12. இக்கால்வாய் திட்டத்தை நிறைவேற்றினால் ஏற்படும் செலவை சுமார் பத்து அல்லது பனிரெண்டு ஆண்டுகளில் ஈடுசெய்து விடலாம்.
13. இத்திட்டம் பொருளாதார ரீதியாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும் சாதகமானதாகும். இந்தியாவின் நலன் கருதி உடனடியாக இத்திட்டம் நிறை வேற்றப்பட வேண்டும் என்று இந்திய அரசாங்கத்தின் கப்பல் மற்றும் கடல் வழிப் போக்குவரத்து அமைச்சகத்தின் 1981-82ஆம் ஆண்டின் மதிப்பீட்டுக் குழுவின் அறிக்கை தெளிவாகக் கூறுகிறது.
எனவே பொருளாதார ரீதியாக எவ்வாறெல்லாம் இத்திட்ட தாமதத்தினால் இழப்பு ஏற்படுகிறது என்பதை என் கடிதம் மூலம் தாங்கள் அறிவீர்கள். எனவே பொருளாதார வளர்ச்சியுடன் வேலை வாய்ப்புகள் வழங்கிடும் இத்திட்டத்தை நாட்டு வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு தாங்கள் தலையிட்டு தாமத மில்லாமல் நிறைவேற்றும்படி கேட்டுக் கொள்கிறேன் என்று கடிதத்தில் குறிப்பிட்டிருந்தேன்.
இந்த கடிதம் அனுப்பியது குறித்து தினமணியில் தூங்காத கருணாநிதி என்ற தலைப்பில் தலையங்கம் ஒன்றும் வெளியிடப்பட்டது.
இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் திட்டம் தேவையில்லை என்று தமிழக அரசின் முதல் அமைச்சரே உச்ச நீதிமன்றத்திலே, அதுவும் பல கோடி ரூபாய் மக்கள் பணத்தை செலவு செய்து திட்டத்தின் 75 சதவிகிதப் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் அறிக்கை கொடுத்திருப்பது முறைதானா என்பதை அரசியல் கட்சி வேறுபாடுகளை யெல்லாம் மறந்து, தமிழ்நாட்டு மக்களின் நல்வாழ்வை ஒருக்கணம் எண்ணிப் பார்த்து அனைவரும் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவே இதனை எழுதியுள்ளேன் என்று கருணாநிதி அறிக்கையில் கூறியுள்ளார்.