ஞாயிறு, 11 நவம்பர், 2012

அகவை மூத்தவர்களின் செல்லப்பிள்ளை எட்வின்


வயதானவர்களின் செல்லப்பிள்ளை எட்வின்
 
எல்.முருகராசு, தினமலர் சிவகாசி

நிற்க நேரமில்லாமல் ஒடிக்கொண்டு இருக்கும் உழைப்பாளர்களின் தேசம்
இந்த தேசத்தின் இன்னொரு பக்கம் கொஞ்சம் சோகமானது.

சோகத்திற்கு காரணம் பராமரிக்க ஆள் இல்லாமல் தவிக்கும் வயதானவர்கள்.
பென்ஷன், சேமிப்பு, வசதியான வீடு என்று பணத்திற்கு பஞ்சமில்லை, ஆனால் நேர, நேரத்திற்கு சாப்பாடு கொடுக்கத்தான் ஆள் இல்லை. தங்களாலும் சமைக்க முடியவில்லை, ஆள்வைத்து பார்க்கவும் முடிவதில்லை.

வேகமான உலகத்தில் எவ்வளவு பணம்னாலும் தர்ரேன் ஆனா உங்க பக்குவத்திற்கு சாப்பாடு செஞ்சு தரமுடியாது என்று பெற்றோர்களிடம் தெளிவாகவே பிள்ளைகளும் சொல்லிவிட்டார்கள், ஒதுக்குப்புறத்தில் ஓரு வீடு பிடித்தும் ஒதுக்கிவிட்டார்கள்.
முதியோர் இல்லத்திற்கு போவதற்கும் மனமும், குடும்ப கவுரவமும் இடம் தரவில்லை.

என்னதான் செய்வது என்று தவித்துப் போன நிலையில் வந்தவர்தான் எட்வின் சாலமன் ராஜ்.
சென்னையில் பெரிய உத்தியோகத்தில் கைநிறைய சம்பளம் வாங்கிக்கொண்டு இருந்தவர், ஒரு முறை முடியாமல் போன தன் தாய்க்கு கொஞ்ச நாளைக்கு உணவு தரச் சொல்லி கேட்கும் போதுதான் மனிதர்களின் சுயரூபம் தெரியவர அதிர்ச்சியாகிப் போனார்.

அந்த கணமே பார்த்து வந்த வேலையை தூக்கிபோட்டுவிட்டு சிவகாசி வந்தவர், தனது துணைவியார் ரோஸ்லின் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் உதவியுடன் ரெகோபத் அறக்கட்டளை ஒன்றை நிறுவி அதன் மூலம் சிவகாசியின் மூலை முடுக்கில் உள்ள வயதானவர்களுக்கு எல்லாம் மூன்று வேளை உணவு வழங்கிவருகிறார்.
அறுபது வயதிற்கு மேலானவர்களுக்கு, அதிலும் நோயுடன் கூடியவர்களுக்கு என்ன மாதிரியான உணவு வழங்கலாம் என்று உணவு நிபுணரின் ஆலோசனைப்படி உணவு தயாரிக்கப்படுகிறது.

காலையில் இட்லி, ராகி சேமியா, புட்டு போன்றவைகளும், மதியம் காய்கறிகள் நிறைந்த சாதம் தேவைப்படுபவர்களுக்கு அசைவ குழம்பும், இரவு தோசை, இடியாப்பம், பால்சாதம் போன்றவைகளையும் மாறி, மாறி வழங்கிவருகிறார். இது போல வாரத்தில் ஏழு நாளும், வருடத்திற்கு 365 நாளும் வழங்கிவருகிறார்.
காலை ஏழு மணி மதியம் ஒரு மணி, இரவு ஏழு மணிக்கு அவரவர் வீட்டிற்கு கொண்டு போய் "ஹாட் பாக்சில்' சூடு குறையாமல் கொடுத்து விடுகிறார். எவ்வளவு மழை பெய்தாலும், புயல் அடித்தாலும் இதுவரை தடங்கலின்றி உணவு போய் சேர்த்துவிடுவேன் ஏன் எனில் இது கடவுளின் காரியம் என்கிறார்.

இடைப்பட்ட நேரத்தில் தரமான காய்கறி வாங்க இவரே நேரிடையாக மார்க்கெட் போகிறார், கிலோ 48 ரூபாய்க்கு விற்கும் பழைய பொன்னி அரிசியில்தான் சாப்பாடு தயார் செய்கிறார்.
இந்த சாப்பாட்டிற்கு கட்டணம் உண்டு, ஆனால் கட்டணம் வாங்குகிறோமே என்பதற்காக எல்லாருக்கும் சாப்பாடு தருவதில்லை, உண்மையிலேயே அவர்களை கவனிக்க ஆள் இல்லையா என்று பலகட்ட விசாரணைக்கு பிறகே சாப்பாடு வழங்க சம்மதிக்கிறார்.

அவ்வப்போது அவர்களிடம் பேசி அவர்களது பிரச்னைகளையும் கேட்டு முடியுமானால் தீர்த்துவைக்கிறார்,
வயதான பெரியவர்கள் பலரின் வாழ்க்கையில் உணவு என்ற அடிப்படை தேவையை தீர்த்து வைக்கும் எட்வின்தான் இப்போது அந்த பெரியவர்கள் அனைவருக்கும் செல்லப்பிள்ளை.

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 9ம்தேதி அனைத்து பெரியவர்களையும் ஒருங்கிணைத்து அவர்களிடம் பல்சுவை நிகழ்ச்சி நடத்தி பரிசுகள் வழங்கி பாராட்டி மகிழ்வதும் எட்வினின் இன்னொரு கடமை, அந்த கடமைக்கு தயாராகிக்கொண்டிருந்த எட்வினை வாழ்த்தி விடைபெற்றோம், நீங்களும் வாழ்த்த வேண்டுமெனில் தொடர்பு எண்: 09442324424.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக