ஞாயிறு, 11 நவம்பர், 2012

தூய்மையான குடிநீர் இயலும்!

சொல்கிறார்கள்

"சுத்தமான குடிநீர் சாத்தியம்!'

மதுரை அருகே, நாகமலை புதுக்கோட்டை கிராமத்தில், புதுமையான வழியில், சுகாதாரமான குடிநீரை தன் கிராமத்திற்கு வழங்கியுள்ள ஜெயக்குமார்: எங்கள் ஊரின் மக்கள் தொகை மிக அதிகம். குடிநீர் தேவைக்காக, ஆங்காங்கே போர் போட்டு, நிலத்தடி நீரை நிறையவே உறிய ஆரம்பித்து விட்டனர். கழிவு நீர் தொட்டி, சாக்கடை மூலம், நம் பங்கிற்கு அதிகமாக அசுத்தப்படுத்துகிறோம்.

2003ம் ஆண்டிலிருந்து, குடி நீரில் உப்பு அதிகமாக தட்டுப்படத் துவங்கியது.நல்ல குடிநீருக்கு அடுத்து என்ன செய்யலாம் என, யோசித்த போது, கடம்படி என்னும் இடத்தில் போர் போட்டு, ஊர் முழுவதும், 200 இடங்களில், தெருக்குழாய் அமைத்து, சுவையான குடி நீருக்கு வழிவகை செய்தோம். அதையும் தாண்டி, நம் கிராம மக்களுக்கு சுத்தமான, சுகாதாரமான குடிநீர் தர வேண்டும் என்றஆர்வம் ஏற்பட்டது.
எங்கள் ஊரில் குடி நீர் வினியோகிக்கும் நிலையத்தில், 5,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட, குடி நீர்த் தொட்டியில், போர் வெல் நீர் ஏற்றப்படுகிறது. பின், அது சுத்திகரிக்கப்பட்டு, மற்றொரு மேல் நிலைத் தொட்டியில் சேமிக்கப்படுகிறது. 5,000 லிட்டர் தண்ணீரானது சுத்தம் செய்கையில், 2,000 லிட்டர் சுத்த குடி நீராக மாறுகிறது. மீதம், 3,000 லிட்டர் உபரி நீர், குழாய் மூலம், ஓடைக்குள் விடப்படுகிறது. ஆக, 2,000 லிட்டர் சுகாதாரமான குடி நீர், அப்பகுதி மக்களுக்கு வினியோகிக்கப்படுகிறது.

அந்த நீரை பகிர்ந்து வழங்க, பிரத்யேக இயந்திரமும், கம்ப்யூட்டரும் நிலையத்தில் தயாராக உள்ளது. நிலையத்தின் வெளி சுவரில், பொதுத் தொலைபேசி போல், "காயின் பாக்ஸ்' பொருத்தப்பட்டுள்ளது. அதன் கீழே குழாய், இரண்டு, ஒரு ரூபாய் காசுகள் போட்டால், ஒரு பிளாஸ்டிக் குடம் சுத்தமான குடிநீர் பிடித்துக் கொள்ளலாம். கை ரேகை வைத்து, 100 ரூபாய் செலுத்தினால், 50 குடம் நீர் பிடித்துக் கொள்ளலாம்.

இத்திட்டத்தை கொண்டு வர, 6 லட்சம் ரூபாய் செலவானது. இரண்டு ஆண்டிற்கு ஒரு முறை, இயந்திரத்தில் உள்ள, வடிகட்டியை மாற்ற வேண்டும். அதற்கு, 80 ஆயிரம் ரூபாய் செலவாகும்."புல் வளர்த்தும் சம்பாதிக்கலாம்!'

கோ -3, கோ - 4 தீவனப் புல் பயிர் செய்யும் விவசாயி பாலாஜி:நெல் சாகுபடி குறைவால், கால்நடைகளின் முக்கிய உணவுத் தீவனமான வைக்கோலுக்கு, பற்றாக்குறை அதிகரித்துஉள்ளது. அதனால், தீவனப் பயிர்களின் உற்பத்தியைப் பெருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதற்குத் தீர்வாக, கோ - 3, கோ - 4 வகை பசுந்தீவனங்கள் பயிரிடப்படுகின்றன.வாய்க்கால் பாத்தி கட்டி, இரண்டுக்கு இரண்டு அடி இடைவெளி விட்டு, கோ - 3, கோ - 4 வேர்க்கரணைகளை, கரும்பைப் போல் நட வேண்டும்.

அடி உரமாக, சாணம் போதும். மேற்கொண்டு வளர்ச்சிக்கு, செயற்கை உரங்களான யூரியா, பொட்டாஷ் இட வேண்டும்.மழை நீர் அவசியம் இல்லை; கிணறு நீர், சுத்தமாக நீர் இருந்தால் போதுமானது. எட்டு நாளுக்கு ஒரு முறை, தண்ணீர் விட வேண்டும். ஒரு வாரத்திற்கு தண்ணீர் இல்லாமல் இருந்தால் கூட, பசுமை மாறாது இருக்கும்.

மற்ற பருவப் பயிர்களைப் போல் அல்லாது, தண்ணீர் இருந்தால், ஆண்டு முழுவலாம். தரை மட்டத்திலிருந்து, 8 - 10 செ.மீ., விட்டு, அறுவடை செய்வதன் மூலம், புல் மீண்டும் வேகமாக வளரும். நட்டதிலிருந்து, 90வது நாள் முதல், அறுவடை செய்யலாம். அதற்கடுத்து, 45 நாளுக்கு ஒரு முறை, தொடர் அறுவடை செய்யலாம். சிறப்பு பாதுகாப்பு முறைகள் ஏதும், இதற்குத் தேவையில்லை.

ஒரு ஏக்கர் நிலத்தில், ஆண்டுக்கு, 110 டன் விளைச்சல் காண முடியும். உரிய பராமரிப்பு இருந்தால், 10 ஆண்டு கூட, இது பயன் தரக் கூடும்.நன்கு வளர்ந்த ஒரு கட்டுப் புல், 5 முதல், 8 ரூபாய் வரை விலை போகிறது. பயிரை அறுத்ததிலிருந்து, 24 மணி நேரத்தில், தீவனமாக பயன்படுத்த வேண்டும். நீர்ச் சத்து அதிகம் உள்ளதால், அழுகி விடும்.இதன் வேர்கள் ஆழமாகவும், பரவலாகவும் இருப்பதால், கனத்த மழையில் மண்ணரிப்பைத் தடுப்பதற்கும் பயன்படுகிறது. இத் தீவனப்புல் பயிர் செய்யப்படும், ஒவ்வொரு கால் ஏக்கருக்கும், அரசிடமிருந்து, 3,000 ரூபாய் மானியம் கிடைக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக