வெள்ளி, 16 நவம்பர், 2012

வேட்டி-சட்டை அணிந்து பங்கேற்பு: ஐ.நா. கூட்டத்தில் தமிழில் பேசிய கோ.க.மணி

வேட்டி-சட்டை அணிந்து பங்கேற்பு: ஐ.நா. அவை  கூட்டத்தில் தமிழில் பேசிய கோ.க.மணி
வேட்டி-சட்டை அணிந்து பங்கேற்பு: ஐ.நா.சபை கூட்டத்தில் தமிழில் பேசிய ஜி.கே.மணி
சென்னை, நவ.16-

ஜெனிவா ஐ.நா.சபை மனித உரிமை ஆணையத்தின் கூட்டத்திலும், லண்டனில் நடைபெற்ற அனைத்துக்கட்சி நாடாளுமன்ற குழுக் கூட்டத்திலும் உலகத்தமிழர் மாநாட்டிலும் கலந்து கொண்டு திரும்பிய பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

ஜெனிவா ஐ.நா.சபை மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பில் நானும், அருளும் கலந்து கொண்டோம். அதில் வேட்டி-சட்டை அணிந்து கொண்டு தமிழில் பேச வேண்டுமென்று கேட்ட போது அனுமதி அளிக்க தயங்கி பின்னர் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவரை ஏற்பாடு செய்து தமிழில் பேச அனுமதி அளித்தனர். அப்போது இலங்கையின் பூர்வீக குடிமக்களாக வாழ்ந்து வந்த தமிழர்களை இரண்டாந்தர குடிமக்களாக இலங்கை அரசு நடத்தி வருகிறது.

அப்பாவி தமிழ் மக்களை இலங்கை அரசு கொன்று குவித்து வருகிறது. இதுவரையில் ஒரு லட்சம் பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 50 ஆயிரம் பேர் காணாமல் போய் உள்ளனர். இதை ஐ.நா.சபையின் மனித உரிமை ஆணைய வல்லுநர் குழு அங்கு சென்று ஆய்வு செய்து படுகொலை செய்யப்பட்டதற்கு மனித உரிமை மீறல் நடைபெற்றதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளது என்று சுட்டிக் காட்டியுள்ளது.

உலக அளவில் தன் நாட்டு மக்களையே இலங்கை அரசு அழித்து வருவது எங்கும் நடந்திராத மனித உரிமை மீறலாகும். எனவேதான் சுதந்திரமான சர்வதேச போர் குற்ற விசாரணை இலங்கையின் மீது நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்துகிறோம் என்று நான் வலியுறுத்தி தமிழில் பேசினேன். இதை கேட்ட வெள்ளைக்காரர்கள், ஆப்பிரிக்கர்கள், அரபு நாடுகளை சேர்ந்தவர்கள் நீங்கள் தமிழில் உணர்வுப்பூர்வமாக பேசியதும், எங்களுக்கு தெரியாத நிறைய செய்திகளை எடுத்துச் சொன்னதும் எங்களை சிந்திக்க வைத்துள்ளது.

இதில் உண்மை இருப்பதை உணர்ந்து எங்களை ஊக்கப்படுத்தி உள்ளது என்றும், அதோடு வேட்டி-சட்டை அணிந்து கொண்டு ஐ.நா.சபையில் தமிழில் பேசிய முதலாவது நபர் நீங்கள்தான். அதிலும் இலங்கை தமிழர் பிரச்சினை குறித்தும் தமிழக மீனவர் பிரச்சினை குறித்தும் தமிழில் பேசியிருப்பது எங்களை வெகுவாக ஊக்கப்படுத்தியுள்ளது என்று பாராட்டினர்.

இது தமிழ் மக்களுக்கும் தமிழ்நாட்டுக்கும் கிடைத்த பெரும் பேராக கருதினேன். நடைபெற உள்ள இந்திய பாராளுமன்ற கூட்டத்தில் எல்லா கட்சிகளும் இலங்கை தமிழர் பிரச்சினைக்கு ஆதரவாக குரல் கொடுக்க வேண்டும் என்று உலக தமிழ் மாநாட்டுக்கு வந்தவர்கள் கூறினார்கள்.

உலக தமிழக தலைவர்களின் இந்த வேண்டுகோளை ஏற்று இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண முதல்- அமைச்சர் ஜெயலலிதா அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்பது பா.ம.க.வின் வேண்டுகோள் ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக விமான நிலையத்தில் ஜி.கே.மணியை முன்னாள் மத்திய மந்திரி அன்புமணி தலைமையில் வரவேற்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக