வியாழன், 15 நவம்பர், 2012

டெசோ' தீர்மானம் ஐ.நா.,அவையில் என்னவாகும்?

டெசோ' தீர்மானம் ஐ.நா., சபையில் என்னவாகும்?

இலங்கையில் நடந்த நான்காவது கட்டப் போரின் போது, ஐ.நா., சபை நடந்து கொண்ட விதம், கடும் கண்டனத்துக்கு உள்ளாகி உள்ள நிலையில், தி.மு.க., அளித்துள்ள, "டெசோ' மாநாட்டு தீர்மானங்கள் என்னவாகும் என்ற ஐயம் எழுந்துள்ளது.இலங்கையில் நடந்த போரின் போது, ஐ.நா., சபையின் இலங்கை நிர்வாகிகள், நாட்டை விட்டு வெளியேறி விட்டனர். ஐ.நா., நிர்வாகிகளை, "வெளியேறி விடுங்கள்' என, இலங்கை அரசு கூறியதைத் தொடர்ந்து, அவர்கள் வெளியேறியதாக கூறப்படுகிறது.
ஐ.நா., நிர்வாகிகள் இலங்கையை விட்டு வெளியேறியதால், பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளிலும், மருத்துவமனை போன்ற பொது இடங்களிலும், இலங்கை ராணுவம் குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. இதில், பல ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் பலியாயினர்.இலங்கை ராணுவத்தின் இந்த கொடூர தாக்குதலுக்கு, ஐ.நா., நிர்வாகிகள் அந்நாட்டை விட்டு வெளியேறியது தான் காரணம். போர் குற்றங்களைத் தடுக்க ஐ.நா., எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை என, ஐ.நா., சபை நடத்திய சுய ஆய்வில் கூறப்பட்டுள்ளது.மேலும், இலங்கையில் நடந்த போரை எப்படி அணுக வேண்டும் என்று கூட, இலங்கையில் இருந்த ஐ.நா., நிர்வாகிகளுக்குத் தெரியவில்லை. ஐ.நா.,வின் தலைமையும், இலங்கை போரை கண்டு கொள்ளவில்லை எனவும் அந்த ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆய்வு அறிக்கை வெளியிட்டுள்ள தகவல்கள், ஐ.நா., சபைக்கு பெரும் நெருக்கடியை உருவாக்கியுள்ளது. ஐ.நா., சபை நல்ல பாடத்தை, இலங்கை போர் மூலம் கற்றுள்ளது. இதன் மூலம், வருங்காலத்தில் எப்படி செயல்பட வேண்டும் என, தன்னை தயார்படுத்திக் கொள்ளும் என, ஆய்வு அறிக்கை குறித்து, ஐ.நா., சபை கருத்து வெளியிட்டுள்ளது.
ஈழத் தமிழர்களின் பிரச்னையை ஐ.நா., சபைக்கு கொண்டு சென்றதன் மூலம், அவர்களுக்கு புதிய விடியல் ஏற்படும் என, தி.மு.க., அறிவித்து வருகிறது.இந்த சூழலில், ஈழத் தமிழர்கள் மறுவாழ்வு தொடர்பாக, டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மீது, ஐ.நா., சபை என்ன நடவடிக்கை எடுக்கும்; போர் குற்றங்கள் தொடர்பாக இலங்கைக்கு நெருக்கடிகளைக் கொடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.இதற்கிடையே, இலங்கையில் தன் பொறுப்பை தட்டிக் கழித்ததோடு, பல ஆயிரம் அப்பாவி தமிழர்கள் கொல்ல காரணமாக இருந்தது குறித்து, ஐ.நா., சபை மீது விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என, தமிழக அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.இதுகுறித்து, தி.மு.க., - எம்.பி.,யும், செய்தித் தொடர்பாளருமான டி.கே.எஸ்.இளங்கோவன் கூறியதாவது:"டெசோ' மாநாடு, லண்டனில் நடைபெற்ற தமிழர்கள் மாநாடு ஆகியவற்றில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானங்கள் தான், ஐ.நா., சபை அமைத்த குழுவின் அறிக்கையாகவும் உள்ளது. ஆனால், இந்த அறிக்கை கசிந்துள்ளது. அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.கசிந்த அறிக்கையில், இலங்கையில் நடந்த இன படுகொலையை, ஐ.நா., சபை கண்டு கொள்ளவில்லை. இலங்கை அரசின் ஆலோசனைகளைக் கேட்டு, அதன்படியே ஐ.நா.,வின் இலங்கை நிர்வாகிகள் நடந்து கொண்டுள்ளனர். இதுகுறித்து, பொதுவான நாடுகள் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது.இலங்கை இன படுகொலை குறித்து பொதுவான விசாரணை தேவை என்று தான், டெசோ மற்றும் லண்டன் மாநாடுகளில் தீர்மானம் நிறைவேற்றினோம். இவ்விரண்டு தீர்மானங்களையும் ஐ.நா., சபை ஏற்றுக்கொள்ளா விட்டாலும், அவர்களது சுய பரிதோனைக்காக அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையின் படியாவது, ஈழத் தமிழர்கள் விவகாரத்தில், ஐ.நா., விரைந்து செயல்பட வேண்டும்.இவ்வாறு இளங்கோவன் கூறினார்.
- நமது சிறப்பு ச் செய்தியாளர், தினமலர் -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக