புதன், 14 நவம்பர், 2012

திருவில்லிபுத்தூர் : புலிகளைக் கொன்ற வீரர்களின் நடுகல்


திருவில்லிபுத்தூர் அருகே புலிகளைக் கொன்ற வீரர்களின் நினைவு நடுகல்
First Published : 13 November 2012 01:04 PM IST


விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, இலந்தைக்குளத்திற்கு வடக்கே சுமார் 3 கி.மீ. தூரத்தில் உள்ள சுரைக்காய்பட்டியில் பல புலிகளைக் கொன்ற வீரர்களின் நினைவாக 15-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் உள்ளது.
இறந்த வீரர்களின் நினைவாக எழுப்பப்பட்ட கற்கள் இந்தியாவின் வடக்கே இமாச்சலப் பிரதேசம் முதல் தெற்கே கேரளா மாநிலம் வரை காணப்படுகிறது. பண்டைக்கால மனிதன் வீரத்தை அடிப்படையாகக் கொண்டு வாழ வேண்டியிருந்தமையால், வீரம் காட்டி வீழ்ந்தவன் நினைவாகக் கற்கள் அமைத்திருக்கக்கூடும். சங்க இலக்கியங்கள் நடுகல் பற்றி விரிவாகக் கூறுகின்றன.
புலிகளுடன் சண்டையிட்டு இறந்த வீரர்களின் நினைவாக எடுக்கப்பட்ட கற்கள் தமிழகப் பகுதிகளில் காணப்படுகின்றன. புலிகளைத் தேடிச் சென்று வேட்டையாடிக் கொன்றதற்கான சான்றினைத் தமிழகப் பகுதியிலுள்ள வீரக்கற்கள் காட்டவில்லை. நாட்டிற்குள் வந்த புலிகளைத் தற்காப்பின் பொருட்டுக் கொன்றதை வீரக்கற்கள் காட்டுகின்றன. வீரர்கள் புலிகளைக் குத்திக் கொன்றதன் நினைவாக எடுக்கப்பட்ட கற்கள் புலிக்குத்திக் கற்கள் என்று அழைக்கப்படுகின்றன.
சுரைக்காய்பட்டியில் உள்ள நடுகல் கி.பி. 10-ம் நூற்றாண்டிற்குப் பின் எழுப்பப்பட்ட வீரக்கற்களுள் பல புலிகளைக் கொன்ற வீரர்களின் நினைவாக அமைக்கப்பட்டனவாகும். இந் நடுகல்லில் எவ்வித எழுத்துக்களும் இல்லை. மேலும் இப் பகுதியில் பிற்காலப் பாண்டியர்களின் 15-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுகள் காணப்படுகின்றன.
நடுகல்லில் உள்ள வீரனுக்கு வலப்புறத்தில் மூன்று பெண்கள் காட்சியளிக்கின்றனர். வீரன் தனது மார்பில் நீண்ட ஆரமும், இடுப்பில் கச்சையுடனான பூவாடையும், இடுப்பில் குறுவாளும், இரு கால்களிலும் வீரத்தண்டையும் அணிந்துள்ளான். வீரனுக்கு முன்பு வேட்டை நாய் வாலை நிமிர்த்திக் கொண்டு, புலியின் வயிற்றில் தாக்குவது போன்று காணப்படுகிறது. புலியை வீரன் தனது வேலால் குத்துவது போன்றும், அதனைத் தாங்கிக் கொண்டு இரண்டு பின்னங்கால்களைத் தரையில் ஊன்றி அவனைத் தாக்குவது போன்றும் சிற்பத்தில் காணப்படுகிறது.
முதல் பெண்ணின் மார்பில் ஆடையின்றி, இடுப்பில் மடிப்புடன் கூடிய புடவையை அணிந்து காணப்படுகிறார். இரண்டு கைகளால் வணங்குவது போன்று சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது.



இரண்டாவது பெண் இடுப்பு முதல் பாதம் வரை மடிப்புப் புடவை அணிந்துள்ளார். வலது கை அபயக்குறியுடனும், இடது கையை இடுப்பில் வைத்தும் காட்சியளிக்கிறாள். மூன்றாவது பெண்ணும் இடுப்பு முதல் பாதம் வரை மடிப்பு ஆடை உடுத்தியும், வலது கை அபயக்குறியுடனும், இடது கையை இடுப்பில் வைத்தும் காட்சியளிக்கிறார்.





   
  • புலிகுத்தி மண்டபத்தின் மேற்பகுதியில் உள்ள மீன் சின்னம்.
  • புலிகுத்தி வீரனின் நடுகல்லுக்கு அருகில் குறுநிலத் தலைவரும் அவரது மனைவியும்.
  •  
  • இடது: சுரைக்காய்பட்டி புலிகுத்தி வீரன் மண்டபத்தில் முதல் தூணினி்ன் (கீழ்பகுதி) வடக்குப் பகுதி. வலது: முதல் தூணின் (கிழக்கு) தெற்குப் பகுதி.
  • சுரைக்காய்பட்டியில் உள்ள புலிகுத்தி நடுகல்.
  • சுரைக்காய்பட்டியில் உள்ள நடுகல் மண்டபத்தின் நுழைவாயிலின் கிழக்குப் பகுதியில் முதல் தூணின் தெற்குப் பகுதியில் மேலே உள்ள சிவலிங்கம், கீழே அதனை வழிபடும் பக்தர்.













  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  •  
  • படப்பதிவுகளில் தவறு நேர்ந்துள்ளது. மூலத்தைப் பார்க்கவும் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக