சனி, 17 நவம்பர், 2012

அணைகள் கட்டுப்பாட்டு அறைகளைப்பூட்டுவோம் - இந்தியா சிதையப் போகிறதா?

பெங்களூரு:""மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து, கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டரால் கேள்வி கேட்க முடியவில்லை என்றால், கே.ஆர்.எஸ்., கபினி அணைகளை முற்றுகையிட்டு, கட்டுப்பாட்டு அறையை பூட்டி விடுவோம்,'' என, காவிரி நதி நீர் பாதுகாப்பு கமிட்டி தலைவர் மாதே கவுடா எச்சரித்துள்ளார்.

தமிழகம் - கர்நாடகம் இடையே, காவிரியில் தண்ணீர் திறந்து விடுவது தொடர்பாக, பிரச்னை எழும் போதெல்லாம், கர்நாடகாவில், காவிரி பாயும் பகுதிகளில் உள்ள, விவசாயிகளும், கன்னட அமைப்பினரும் போராட்டம் நடத்துவது வழக்கம்.அதேபோல், இந்த ஆண்டும், தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடும் படி, காவிரி நதி நீர் ஆணையம் மற்றும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்ட போது, தொடர் போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில், தமிழகத்திற்கு நேற்று முதல், வரும், 30ம் தேதி வரை, கர்நாடகா திறந்து விட வேண்டிய தண்ணீரின் அளவு குறித்து முடிவு செய்ய, காவிரி கண்காணிப்பு குழுவின் கூட்டம், நேற்றுமுன்தினம் டில்லியில் நடைபெற்றது.இந்தக் கூட்டத்திற்குப் பின், "தமிழகத்துக்கு வரும், 30ம் தேதி வரை, 4.8 டி.எம்.சி., தண்ணீர் திறந்து விட வேண்டும்' என, கர்நாடக அரசுக்கு, காவிரி கண்காணிப்பு குழு உத்தரவிட்டது.

இதையறிந்த, கர்நாடகா மாண்டியா விவசாயிகள், மீண்டும் போர்க்கொடி தூக்கி உள்ளனர். கர்நாடக அணைகளிலிருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட்டால், தங்கள் போராட்டத்தை துவக்கவும் முடிவு செய்துள்ளனர்.இதுதொடர்பாக, காவிரி நதி நீர் பாதுகாப்பு கமிட்டி தலைவர், மாதே கவுடா கூறியதாவது:கர்நாடகாவின் தற்போதைய சூழ்நிலையை, மத்திய அரசு புரிந்து கொள்ளவே இல்லை. 27 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்களில், நெல் மற்றும் கரும்பு பயிரிட தேவையான தண்ணீர், கர்நாடக அணைகளில் இல்லை. அதனால், சில பகுதிகளில், நெல், கரும்புக்கு பதிலாக, தினை விதைக்கப்பட்டுள்ளது.

மேலும், மைசூரு, பெங்களூரு நகரங்களுக்கு, குடி தண்ணீர் சப்ளை குறையும் அபாயமும் உள்ளது. இது தொடர்பாக, பிரதமர் மன்மோகன் சிங், முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டருக்கு கடிதம் எழுத உள்ளேன்.காவிரி நதி நீர் அடிப்படை பிரச்னை பற்றி, கர்நாடகாவில் காவிரி நீர் பிடிப்பு பகுதியைச் சேர்ந்த, நான்கு எம்.பி.,க்கள் உட்பட, மாநிலத்தில் உள்ள, 28 எம்.பி.,க்களுக்கும் விவரித்து கடிதம் எழுத உள்ளேன். கர்நாடக அணைகளில் உள்ள, தண்ணீர் இருப்பை கருத்தில் கொள்ளாமல், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட, காவிரி கண்காணிப்பு குழு உத்தரவிட்டுள்ளது.

சமீபத்தில், தமிழகத்தில் பெய்த மழையால், பல மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளித்தன; பலர் உயிரிழந்தனர். வெள்ளப் பெருக்கால் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டன. 55 தடுப்பு அணைகள் மற்றும் முக்கிய அணைகளில் விளிம்பு வரை தண்ணீர் நிரம்பியுள்ளது; பாசன கால்வாய்களும் நிரம்பியுள்ளன.இதில், உண்மை என்னவென்றால், தற்போது, அதிகமாக உள்ள தண்ணீரை, தமிழகம் கடலில் விடுகிறது.மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து, கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டரால் கேள்வி கேட்க முடியவில்லை என்றால், இங்குள்ள, கே.ஆர். எஸ்., கபினி அணைகளை முற்றுகையிட்டு, கட்டுப்பாட்டு அறையை பூட்டி விடுவோம்.இவ்வாறு மாதே கவுடா கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக