ஞாயிறு, 11 நவம்பர், 2012

தருமபுரி மாவட்டத்தில் அமைதி திரும்ப வைகோ வேண்டுகோள்

தருமபுரி மாவட்டத்தில் அமைதி திரும்ப

 வைகோ வேண்டுகோள்

First Published : 11 November 2012 12:18 PM IST
தருமபுரி அருகே இரு பிரிவினருக்கு இடையே மேலும் பகை வளர்ந்துவிடாமல் அந்தக் கிராமங்களில் அனைவரும் சகவாழ்வு வாழக்கூடிய நிலைமைக்கு அனைத்துத் தரப்பினரும் முன்வர வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வோண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
தருமபுரி மாவட்டத்தில், சில கிராமங்களில் இதங்களை வேதனையில் உலுக்கும் துன்பச் சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது. காலம் காலமாக ஓற்றுமையோடு அமைதியாக வாழ்ந்து வந்த சில கிராமங்களில் நடைபெற்ற ஒன்று, இரண்டு சம்பவங்களினால் ஒரு தந்தையும் தாயும் தற்கொலை செய்து கொண்டு உயிர் நீத்துள்ளனர். ஏதும் அறியாத அப்பாவி மக்கள் பல பேர் தங்கள் உடமைகளை இழந்தனர். அவர்கள் வாழ்ந்த வீடுகள், குடிசைகள் சூறையாடப்பட்டு நாசமாக்கப்பட்டன.
கிராம வாழ்க்கை என்பது, நகர்புற வாழ்க்கையிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாகும். பரபரப்பான நகர வாழ்க்கையில், அண்டை வீட்டார் யார் என்றே அறியமாட்டார்கள். அதிலும் மாநகரங்களில், அந்த தெருவாசிகள் எந்த சமூகத்தினர் என்ற எண்ணம்கூட ஏற்படாது. ஆனால், கிராமங்களில் வாழ்வோர் பல சமூகங்களை, வேறு வேறு சமயங்களைச் சார்ந்தோராக இருப்பினும், மங்கள நிகழ்ச்சிகளில், துயர நிகழ்ச்சிகளில் ஒன்றாகப் பங்கேற்பார்கள். இப்படிப்பட்ட கூட்டுக் குடும்ப வாழ்க்கையைப் போன்ற கிராமப்புற வாழ்வில், சாதி அடிப்படையிலோ, மதத்தின் அடிப்படையிலோ மோதல் நேர்ந்துவிட்டால், அனைவரின் அமைதி வாழ்வும் அடியோடு பாழாகிவிடும்.
பொழுது விடிந்தால், பொழுது சாய்ந்தால் ஒருவர் முகத்தில் ஒருவர் விழிக்க வேண்டிய கிராமத்து மக்கள், மனதில் வெறுப்பு எனும் நஞ்சு கலந்து விட்டால், அவர்களின் மகிழ்ச்சி தொலைந்து, கிராமத்தின் எதிர்காலமும் கெட்டுப்போகும். எனவே, நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டோர் மீது சட்டபூர்வான நடவடிக்கை மேற்கொள்ளப்பட் வேண்டிய அதே நேரத்தில், மேலும் பகை வளர்ந்துவிடாமல் அந்தக் கிராமங்களில் அனைவரும் சகவாழ்வு வாழக்கூடிய நிலைமைக்கு அனைத்துத் தரப்பினரும், அதிலும் குறிப்பாக இளையதலைமுறையினர் முன்வரவேண்டும் என ஒரு சகோதரனாக அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
மோதல்கள் நடைபெற்ற கிராமங்களில் சமரச மனோநிலை  அப்பகுதியில் ஏற்படுவதற்கு உரிய விகிதத்தில், அப்பகுதி மக்களைச் சந்திக்க, மறுமலர்ச்சி திராவிட முன்னோற்றக் கழகத்தின் சார்பில், கழகப் பொருளாளர் டாக்டர்.இரா.மாசிலாமணி அவர்களும், துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா அவர்களும், கழகத்தின் ஆட்மன்றக் குழு உறுப்பினர் வேலூர் சுப்பிரமணி அவர்களும் நவம்பர் 12-ஆம் தேதி திங்கள்கிழமை அன்று காலையில் நேரில் செல்ல இருக்கிறார்கள் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக