செவ்வாய், 27 செப்டம்பர், 2011

trauck driver killed by R.T.O.Staff for refusing to pay bribe:

வாரணாசி :உத்தரப்பிரதேசத்தில் லஞ்சம் கொடுக்க மறுத்த லாரி டிரைவரை, வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் அடித்துக் கொன்றனர். லஞ்சத்தை ஒழிக்க வேண்டும் என, காந்தியவாதி அன்னா ஹசாரே போன்றோர் பெரிய அளவில் போராட்டம் நடத்தி வரும் நிலையில், லஞ்சம் கொடுக்க மறுத்ததற்காக, லாரி டிரைவர் ஒருவரை, அரசு அதிகாரிகள் அடித்துக் கொன்ற சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் சந்தவ்லி மாவட்டத்தில், சயீது ரஸா போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட நவ்பாத்பூரில், வாகன சோதனைச் சாவடி உள்ளது. இந்த சோதனைச் சாவடிக்கு, நேற்று அதிகாலை 5 மணிக்கு, மருந்துகளை ஏற்றிக் கொண்டு, லாரி ஒன்று வந்தது. டில்லியிலிருந்து பீகார் நோக்கிச் சென்ற இந்த லாரியை, டிரைவர் ஆனந்த் லால் குப்தா, 38, என்பவர் ஓட்டி வந்தார். இவர், உ.பி.,யின் கவுஷாம்பி மாவட்டத்தைச் சேர்ந்தவர். லாரியின் கிளீனரான குப்தாவின் மகன் அஸ்வினும், 23, உடன் வந்தார். சோதனைச் சாவடியில் லாரியை நிறுத்திய, உதவி வட்டார போக்குவரத்து அதிகாரி ராதீஷியாம் மற்றும் அந்த அலுவலகத்தைச் சேர்ந்த போலீசார் ஐந்து பேர், லாரியில் அதிக சரக்கு ஏற்றப்பட்டுள்ளது என, புகார் தெரிவித்தனர். உடனே போலீஸ்காரர்களில் ஒருவர், லாரியை எடை போடும் மையத்திற்கு கொண்டு சென்றார். அங்கு, லாரி எடை போடப்பட்டது.

இதன் பின்,"லாரியில் அதிக அளவு சரக்கு ஏற்றப்பட்டுள்ளது. எனவே, சோதனைச் சாவடியைத் தாண்டி லாரி செல்ல வேண்டும் எனில், 1,000 ரூபாய் லஞ்சமாகத் தர வேண்டும்' என, டிரைவர் ஆனந்த் லால் குப்தாவிடம், ஆர்.டி.ஓ., அலுவலக அதிகாரிகள் கேட்டனர். ஆனால், 500 ரூபாய் தருவதாக குப்தா கூறினார். இதில் கோபமடைந்த ஆர்.டி.ஓ., அலுவலக போலீசார், குப்தாவை தாக்கினர். குறிப்பாக, லாரியை எடை போடக் கொண்டு சென்ற, சிவகுமார் என்ற போலீஸ்காரர், கடுமையாகத் தாக்கினார். இதில், குப்தா இறந்தார். பின்னர், அவரது உடலை ரோட்டில் வீசினர்.

இந்த சம்பவம் பற்றி அறிந்ததும், சோதனைச் சாவடி அருகே நின்றிருந்த மற்ற லாரி டிரைவர்களுடன், உள்ளூர் மக்களும் சேர்ந்து, தேசிய நெடுஞ்சாலை எண்.2ல், மறியலில் ஈடுபட்டனர். பின்னர், இந்த மறியல் வன்முறையாக மாறியது. போலீசார் கும்பலைக் கலைக்க முற்பட்ட போது, அவர்களை நோக்கி கற்கள் வீசப்பட்டன. கல்வீச்சில், போலீஸ்காரர் ஒருவர் காயமடைந்தார். உடனே, நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர, அங்கிருந்த போலீசார் தடியடி நடத்தியதோடு, வானத்தை நோக்கியும் துப்பாக்கியால் சுட்டனர்.

இதன் பின், கொல்லப்பட்ட லாரி டிரைவரின் குடும்பத்தினர், சயீது ரஸா போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரின்படி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருவதாக, சந்தவ்லி மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் ஷலாப் மாத்தூர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக