வெள்ளி, 30 செப்டம்பர், 2011

திருவிதாங்கூர் தமிழர் போராட்ட வரலாறு' நூல் வெளியீட்டு விழா


சென்னை: ""திருவிதாங்கூர் மக்களின் போராட்டத்திற்காகவே "தினமலர்' பத்திரிகை உருவெடுத்தது,'' என, "தினமலர்' ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி பேசினார். பேராசிரியர் யோகீசுவரன் எழுதிய, "திருவிதாங்கூர் தமிழர் போராட்ட வரலாறு' நூல் வெளியீட்டு விழா, சென்னை, தேவநேயப் பாவாணர் அரங்கில் நேற்று முன்தினம் நடந்தது.
இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியின் முதன்மை மேலாளர் பொன்னுசுவாமி வரவேற்புரையாற்றினார். பின், நூலை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் தா.பாண்டியன் வெளியிட, "தினமலர்' நாளிதழின் ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி, நூலின் முதல் பிரதியை பெற்றுக் கொண்டார்.

இதில், "தினமலர்' நாளிதழ் ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி பேசியதாவது: வரலாற்று நூலை எழுத வேண்டுமென்றால் சில அடிப்படை ஆதாரங்கள் தேவை. அந்த அடிப்படை ஆதாரங்களை சேகரிக்காமல் எந்த ஒரு வரலாற்று நூலையும் எழுத முடியாது. ராஜராஜனைப் பற்றி எழுத வேண்டுமென்றால் செப்பேடுகள், இதர கல்வெட்டுகளை வைத்து தான் சோழர் காலத்து வரலாற்றை எழுத முடியும். அதேபோல, திருவிதாங்கூர் தமிழர்களின் விடுதலை பற்றி எழுத வேண்டுமென்றால், அந்த காலக்கட்டத்தில் வாழ்ந்த பெரியோர்கள் கூற்றை வைத்தும், பத்திரிகை, வார ஏடுகளில் வந்துள்ள செய்திகளை வைத்தும் தான் எழுத முடியும். திருவிதாங்கூர் போராட்டத்தைப் பற்றி பல நூல்கள் வெளிவந்துள்ளன. ஆனால், பெரும்பாலும் ஏதோ ஒரு குறை இருப்பது போல என் மனதில் தோன்றும். ஒரு சார்புடைய எழுத்தாகவே தென்படும். அதை வரலாற்று நூலாகக் கருத முடியாது.
என் தந்தை 1951ம் ஆண்டு, "தினமலர்' இதழை திருவனந்தபுரத்தில் ஆரம்பித்தார். அவருக்கும், பத்திரிகைத் துறைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர் ஒரு விவசாயி. தமிழ்ப் பற்று காரணமாக பத்திரிகை துவங்கினார். நாலு பக்க நாளேடு விலை ஓரணா. திருவிதாங்கூர் மக்களின் போராட்டத்திற்காகவே பத்திரிகையைத் துவங்கினார் என்பதும் உண்மை. போராட்ட காலத்தில் முதல்வர் பட்டம் தாணுபிள்ளையின் தூண்டுதலால், போலீசாரும் சோதனையிட்டது செய்திகளாக உள்ளன.

நூலாசிரியர் யோகீசுவரன் நான்கு ஆண்டுகளாக பல இடங்களுக்குச் சென்று செய்தி சேகரித்து, ஆதாரத்துடன் எழுதியிருக்கிறார். போராட்ட காலத்தில் வாழ்ந்த மக்கள் பலர் இறந்திருப்பர். முதுமையின் காரணமாக பலருக்கு போராட்டத்தைப் பற்றிய நினைவு இருக்குமா என்று தெரியவில்லை. அச்சில் வந்த செய்தியை வைத்து தான் எழுத வேண்டியுள்ளது. அதைத் தான் நூலாசிரியர் யோகீசுவரன் செய்துள்ளார். நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் கோடிட்டு, இந்த செய்தி இந்த நாளிதழில் எடுக்கப்பட்டது என தேதியையும், பக்கத்தையும் குறிப்பிட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் இப்போது அபார வளர்ச்சி அடைந்துள்ளது. இது, அம்மக்களின் முயற்சியால் வந்த வளர்ச்சி. ஒரு காலக்கட்டத்தில், கொள்ளை அரசியல்வாதிகள் நம்மை மலையாளி என்றனர். அந்தக் காலக்கட்டத்தில் சென்னையிலிருந்து வெளியான தமிழ், ஆங்கிலம் பத்திரிகை எல்லாம் இதை மலையாளிகள் போராட்டம் என செய்திகளை சரியாக வெளியிடவில்லை. சென்னையில் அரசியல் தலைவர்களும் நம்மை புறக்கணித்தனர். நம் காலால் நின்று நாம் வெற்றி பெற்றோம். தமிழகத்தில் அதிகமாக கற்றவர்கள் குமரி மாவட்டத்தில் தான் உள்ளனர் என, மக்கள் தொகை கணக்கீடு சொல்கிறது. 100ல் 92 பேர் உள்ளனர். இது, மாவட்ட மக்களின் முயற்சியால் வந்தது.
தா.பாண்டியன் பேச்சு ஜீவா போல் உள்ளது. இளம் வயதில் ஜீவாவின் பேச்சைக் கேட்டிருக்கிறோம். "மடை திறந்த கடல் போல' அவரின் பேச்சு இருக்கும். அவரைப் போல ஒரு பேச்சாளரை நான் இதுவரை கண்டதில்லை.
திருநெல்வேலி - கன்னியாகுமரி ரயில் பாதை திட்டம், மாவட்டத்திற்கு மற்றொரு வளர்ச்சியாக இருந்தது. ரயில் பாதை இல்லாமல் மக்கள் நிறைய துன்பப்பட்டனர். ரயில் பாதை வரக்கூடாது என, பஸ் அதிபர்கள் முயற்சி செய்தனர். அதற்கு அரசியல்வாதிகளும் உடந்தையாக இருந்தனர். என் தந்தை ஒரு குழுவை அமைத்து, மத்திய அமைச்சர்களை சந்தித்து பேசுவதும், அறிக்கை கொடுப்பதும் என, ரயில் பாதை திட்டத்திற்கு முயற்சி மேற்கொண்டார். பின், இந்திராவின் முயற்சியால் இந்த ரயில் இணைப்பு கிடைத்தது. இவ்வாறு ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி பேசினார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் தா.பாண்டியன் பேசியதாவது: விடுதலை அடைந்த பின் பேச்சு, எழுத்து சுதந்திரம் பெற்ற பின், மொழி வழி மாநிலம் அவரவர் தாய்மொழியில், இனத்தின், கலாசாரத்தின் அடிப்படையில் பிரிக்கப்பட்டது. மொழி வழி மாநிலம் அமைய, பலர் உயிர் துறக்க நேர்ந்தது. தமிழர்கள் அதிகம் வாழக்கூடிய எல்லையோர பகுதிகள், தமிழ் மக்களுக்கு சொந்தமா அல்லது ஆந்திர மக்களுக்கு சொந்தமா என்ற விவாதத்தின் முடிவில், சென்னை தமிழகத்திற்கு தான் என உறுதி செய்யப்பட்டது. ஆந்திர மக்கள் போராடி அவர்கள் விட்ட பாதி பகுதி, கேரள மக்கள் விட்ட மீதி பகுதி போக மிச்சம் இருந்தது தான் தமிழகம். இவ்வாறு தா.பாண்டியன் பேசினார்.

நூலாசிரியரும், பேராசிரியருமான யோகீசுவரன் பேசியதாவது: தமிழர்களின் உயிர் மூச்சாக இருந்து, கன்னியாகுமரி தமிழகத்துக்கு கிடைக்க அச்சாரமாக இருந்தவர், "தினமலர்' நிறுவனர் டி.வி.ராமசுப்பைய்யர். திருநெல்வேலி - கன்னியாகுமரி ரயில் பாதை திட்டத்துக்கு காரணமாக இருந்தவர் அவரே. கேரள முதல்வர் பட்டம் தாணுப்பிள்ளை கடும் தொல்லை கொடுத்தபோதிலும், நஷ்டம் ஏற்பட்ட போதிலும் அதையெல்லாம் தாங்கி பத்திரிகையை வெற்றிகரமாக நடத்தினார். கூட்டங்களுக்கு செல்ல தலைவர்களுக்கு பணம் கொடுத்து உதவியவர் அவர். இதை தலைவர்கள் சொல்ல நான் கேட்டிருக்கிறேன். வரலாற்று ஆவணங்கள் தேட வேண்டும் என்ற பெரும் உணர்ச்சி தான் என்னை இந்த புத்தகம் எழுத வைத்தது. ஏராளமான நூலை ஆய்வு செய்த பிறகு தான் இந்த நூலை எழுதியுள்ளேன். இது முழுமையான நூலாக இருக்கும் என கருதுகிறேன். இவ்வாறு யோகீசுவரன் பேசினார்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக