திங்கள், 26 செப்டம்பர், 2011

மரண தண்டனை குறித்து மறு ஆய்வு தேவை மூவருக்கு மரண தண்டனை விதித்த நீதியரசர் கே.டி. தாமஸ் கருத்து

மரண தண்டனை குறித்து மறு ஆய்வு தேவைமூவருக்கு மரண தண்டனை விதித்த நீதியரசர் கே.டி. தாமஸ் கருத்து!
தமிழாக்கம் : பூங்குழலி
(கே.டி. தாமஸ் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி. இராசீவ் காந்தி கொலை வழக்கில் நான்கு பேருக்கு மரண தண்டனை விதித்த நீதிபதிகள் குழுவிற்கு தலைமையேற்றவர்)

இந்தியக் குடியரசுத் தலைவர் கருணை மனுக்களை ஏற்க மறுத்தது, தமிழ்நாடு சட்டமன்றம் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியது மற்றும் ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சர் அப்சல் குரு பற்றி இணையத்தில் எழுதியது ஆகியவை மரண தண்டனை குறித்த விவாதத்தை மீண்டும் முதன்மைப் படுத்தியுள்ளது. ஒவ்வொரு முறையும் நீதிமன்றங்கள் மக்களின் உணர்வுகளோடு தொடர்புடைய வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு உச்சபட்ச தண்டனை வழங்கும்போதெல்லாம் இந்த விவாதம் எழும்புகிறது. ஆனால், பிற நேரங்களில் இந்த விவாதம் கவனிப்பாரற்று இருக்கிறது. இராசீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 26 பேருக்கும் சென்னை கீழ் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தபோது விவாதம் இன்றி அது கடக்கப்பட்டது. உச்சநீதிமன்றம் பின்னர் குற்றம் சாட்டப்பட்டவர்களில் 22 பேருக்கு விதித்த மரண தண்டனையை இரத்து செய்தது. வெறும் நான்கு பேருக்கு விதிக் கப்பட்ட மரண தண்டனையை மட்டுமே அது உறுதி செய்தது. அந்த காலக்கட்டத் திலும்கூட, இந்த முக்கியமான பிரச்சினை ஒரு பொது விவாதத்தில் இருந்து தப்பித்தது.

எனினும், வன்புணர்வு செய்த ஒருவருக்கு உச்சநீதிமன்றம் மரண தண்டனை விதித்து, அவரது கருணை மனு இந்தியக் குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப் பட்டபோது இந்த விவாதம் முதன்மை பெற்றது. மிக நீண்ட காலத்திற்குப் பின் குற்றம் சாட்டப்பட்டவர் இறுதியாக தூக்கிலிடப்பட்டார். இராசீவ் காந்தி கொலை வழக்கின் குற்றவாளிகளுக்குகூட சூழல் வேறுமாதிரியாக இல்லை. ஏனெனில், தங்கள் கண்முன்னே தூக்குக் கயிறு தொங்கும் நிலையிலே அவர்கள் மிக நீண்ட காலத்தை சிறையில் கழித்துள்ளனர்.

குற்றம்சாட்டப்பட்ட இந்த நான்கு பேருக்கும் மரண தண்டனை விதிக்கும் தீர்ப்பை வழங்கிய உச்சநீதிமன்ற நீதிபதிகள் குழுவிற்கு நான் தலைமை ஏற்றது என்பது எனது வினைப்பயன் ஆகும்.

உண்மையில் இராசீவ் காந்தி கொலை வழக்கைப் போல தொடக்கத்தில் இத்தனை அதிகமான நபர்களுக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட எந்த ஒரு வழக்கையும் நான் வரலாற்றில் பார்த்த நினைவு இல்லை. ஒரு வழக்கறிஞராக நான் பணியாற்றத் தொடங்கிய காலத்தில் மரண தண்டனைகள் அடிக்கடி விதிக்கப் பட்டன. மரண தண்டனை விதிக்காமல் இருப்பதற்கான சிறப்பான காரணங்களை மாவட்ட நீதிபதிகள் வழங்கவேண்டும் என அன்றைய சட்டம் கோரியது. பின்னர் அந்தச் சட்டம் மாற்றப்பட்டது. ஆயுள் தண்டனையே பொதுவான தண்டனையாக மாறிய நிலையில் மரண தண்டனை விதிப்பதற்கான சிறப்பான காரணங்களை மாவட்ட நீதிபதி வழங்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது.

இந்தச் சட்டம் பின்னர் உச்சநீதிமன்றத்தால் மேலும் இறுக்கமாக்கப்பட்டது. அதன்படி அரிதினும் அரிதான வழக்குகளில் மட்டுமே உச்சபட்ச தண்டனை வழங்கப்படவேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியது. ஆனால் 'அரிதினும் அரிதான வழக்குகள்' என்ற இந்த சொற்றொடர் ஆனது, எழுத்துப்பூர்வமானதாக மட்டுமே இருந்தது.

ஒரு குறிப்பிட்ட கொலை வழக்கில் பிறவற்றைவிட மிக அதிகமான கொடூரத் தன்மை இருப்பதாக உயர்நீதிமன்றமோ, உச்சநீதிமன்றமோ கருதியபோதெல்லாம் அவர்கள் மரணதண்டனை விதித்துள்ளனர். பெரும்பாலான கொலைகள் கொடூரமாகவே இருப்பதால் அந்தக் குறிப்பிட்ட வழக்கு ஒரு அரிதினும் அரிதான வழக்கு என்பதாக விவரிப்பது நீதிபதிகளின் திறனைப் பொறுத்ததாக அமைந்தது. பயங்கரவாதத் தாக்குதல்களினால் நிகழ்ந்த பெரும்பாலான கொலைகள் அரிதினும் அரிதான வழக்குகளாகக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை என்பதை அறிய உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். ஆனால், கொலையுண்டவர் ஒரு புகழ்பெற்ற நபராக இருப்பின் அந்த வழக்கு அரிதினும் அரிதான வழக்காக விவரிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்படுகிறது.

இந்திராகாந்தி கொலை வழக்கு, ராசீவ் காந்தி கொலை வழக்கு, ஜெனரல் வைத்யா கொலை வழக்கு ஆகியவற்றின் தீர்ப்புகள் இதையே உறுதிப்படுத்துகின்றன. ஆனால், 1984ல் நடந்த சீக்கியர்களுக்கு எதிரான வன்முறைகளில் நிகழ்ந்த கொலை வழக்குகள் எவையும் அரிதினும் அரிதான வழக்காக நடத்தப்படவில்லை. அரிதினும் அரிதான வழக்குகளின் கோட்பாட்டை வழங்கிய பச்சன்சிங் வழக்கில் அந்தத் தீர்ப்பை உச்சநீதிமன்றத்தில் நீதிபதி சர்க்காரியா வழங்கினார்.

அதன்படி அவர் அரிதினும் அரிதான வழக்கு என்பது எவ்வாறான வழக்கு எனில், அதில் மாற்றுத் தண்டனையான ஆயுள் தண்டனை என்பது எந்தக் கேள் வியும் இன்றி வழங்கப்படவே முடியாத ஒன்றாக இருப்பதே எனக் குறிப்பிடுகிறார். இதை நான் இங்கு சுட்டிக்காட்டுவது எதனால் எனின் இராசீவ் காந்தி கொலை வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தபோது முக்கியமான ஒரு நிகழ்வு நடந்தது.

அது நான், நீதிபதி வாத்வா மற்றும் நீதிபதி முகமது காதிரி ஆகிய மூன்று நீதிபதிகளைக் கொண்ட குழுவாகும். நளினியைப் பொறுத்தவரை உச்சநீதிமன்றம் அவரும் தண்டனைக்குரியவர் என்பதை உறுதிப்படுத்தியது. ஆனால் மூன்று நீதி பதிகளில் ஒருவர், நளினியை தூக்கில் இட முடியாது என்பதற்கான காரணங்களை முன்வைத்தார்.

எனினும் மற்ற இரு நீதிபதிகளும், அவர் புரிந்த குற்றங்கள் காரணமாக அவரும் சாகும்வரை தூக்கில் இடப்படவேண்டியவர் எனத் தீர்ப்பளித்தனர். இந்த நிலையில் பெரும்பான்மை தீர்ப்பை அடிப்படையாக வைத்து அவருக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டது. எனினும் இந்தத் தீர்ப்பு உச்சநீதிமன்றத்தில் மறுஆய்வுக்கு அளிக்கப்பட்டது. அந்த நீதிபதிகள் குழுவின் மூத்த நீதிபதி என்ற முறையில் மறு ஆய்வுக்கான வாய்ப்புகள் மிகக்குறைவாகவே உள்ளதாக நான் வழக்கறிஞர்களிடம் தெரிவித்தேன். ஏனெனில், உச்சநீதிமன்றம் தான் அளித்த தீர்ப்பில் முதன்மையான ஆவணங்களின் வெளிப்படையான தவறுகள் ஏதும் இருந்தால் மட்டுமே தீர்ப்பை மாற்ற முன்வரும். எனவே நாங்கள் மறுஆய்வு மனுவை தள்ளுபடி செய்ய முடிவு செய்தோம். எனினும் மறுஆய்வு மனுமீதான ஆணையைப் பிறப்பிப்பதற்கு முன் என் மனதில் ஒரு புதிய யோசனை தோன்றியது. எனவே, மறுஆய்வு மனுவை ஒரு புதிய அடிப்படையின் கீழ் ஏற்றுக்கொள்வதாக நான் ஆணை பிறப்பித்தேன். மூன்று நீதிபதிகளில் இருவர் மரண தண்டனையை விதித்த நிலையில், ஒருவர் அதே குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்த சூழலில், அரிதினும் அரிதான வழக்குகள் குறித்த கோட்பாடுகள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக நான் தெரிவித்தேன். அதாவது முன்பு குறிப்பிட்டதைப் போல ஆயுள் தண்டனை வழங்கப்பட முடியாத ஒன்றாக இல்லை. ஏனெனில் ஒரு நீதிபதி மரண தண்டனைக்கு எதிராக வாக்களித் துள்ளார். மற்ற இரு நீதிபதிகள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் இறுதியில் அரசியல் சட்டத் தலைவர் நான் கூறியதை ஏற்றுக்கொண்டார். அரசியல் சட்டத்தின் பிரிவு 21ன்படி சட்டத்தினால் நிறுவப்பட்ட நடைமுறைகளின்படி எந்த ஒரு மனிதருக் கும் அவரது வாழ்வு மற்றும் சுதந்திரம் மறுக்கப்பட இயலாது. சட்டம் நேர்மையான தாக, முறையானதாக, அறிவுப்பூர்வமானதாக இருக்கும் எனில், அச்சட்டத்தின்படியே உங்கள் உயிரை எவரும் எடுக்க இயலாது. மரணத்தண்டனை என்பது ஒரு மனிதரைக் கொலை செய்வது. ஒரு மனிதரைக் கொலை செய்வது சட்டப்படியான பாதுகாப்பை உடையதெனில் அது குற்றமாகாது என சட்டம் சொல்லுகிறது. சட்டப்பூர்வமான அங்கீகாரத்துடன் ஒரு மனிதரை கொலை செய்யலாமா?

நீதியாளர்களும் மனித உரிமை செயற்பாட்டாளர்களும் இருவிதமாகப் பிரிந்து நிற்கின்றனர்; மரண தண்டனை நீடிக்கவேண்டும் என்பவர்களும் அதை ஒழிக்க வேண்டும் என்பவர்களுமாக. ஒரு மனிதரை கொலை செய்துவிட்டு எவ்வாறு தண்டனையில் இருந்து விலக்குப் பெற முடியும்? தண்டனை என்பது என்ன? உங்கள் குழந்தைகளை நீங்கள் எதற்குத் தண்டிக்கலாம்? உண்மையில் ஒரு மனிதரைத் திருத்துவதற்கே தண்டனை அளிக்கப்படுகிறது.

கடந்த காலத்தில் தண்டனைக்கு மூன்றுவிதமான நோக்கங்கள் இருந்தன; திருத்துவது, அச்சுறுத்துவது மற்றும் தண்டிப்பது. தண்டிப்பது என்ற கோட்பாடு தற்காலத்தில் காலத்திற்குப் பொருந்தாத ஒன்றாகவும், நாகரிகமற்றதாகவும் கருதப்படுகிறது. நவீன கால குற்றவியல் ஆய்வாளர்கள் பல்லுக்குப் பல், கண்ணுக்குக் கண் என்ற கோட்பாட்டை ஏற்றுக்கொள்வதில்லை. மீதி இரண்டு நோக்கங்களைப் பொறுத்தவரையில் திருத்துவது என்ற நோக்கம் குற்றம் செய்தவரை இவ்வுலகில் இருந்து நீக்கியபிறகு சாத்தியமற்றதாக மாறிவிடுகிறது.

எஞ்சியிருப்பது அச்சுறுத்துவது மட்டுமே. மரணதண்டனை நீடிக்க வேண்டும் என்று கூறுபவர்கள் அதனை நியாயப்படுத்த முன்வைக்கும் ஒரே காரணம் அது ஒரு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது என்பதே. ஆனால் அது உண்மையா? செளதி அரேபியாவில் இன்றளவிலும் மசூதி வழிபாடு முடிந்தபிறகு வெள்ளிக்கிழமைகளில் குற்றமிழைத்தவர்களை தலையை வெட்டிக் கொல்லும் கொடூரக் காட்சியைக் காணலாம்.

இதன்மூலம் அம்மாதிரியான நாடுகளில் மிகக்குறைவான மக்கள் தொகை இருந்தபோதிலும்கூட, இத்தகைய தண்டனைகளின் மூலம் இந்த ஆயிரம் ஆண்டுகளில்கூட குற்றம் இழைப்பவர்களின் எண்ணிக்கை குறையவில்லை என்பதே தெரியவருகிறது. தண்டனையிலிருந்து தப்பிக்கும் ஒரு குற்றவாளி அம்மாதிரியான குற்றங்களை பிறர் செய்வதற்கு தூண்டுகோலாக இருக்கிறார் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். எனினும், மரண தண்டனை உண்மையிலேயே ஒரு அச்சுறுத்தலாக இருக்கிறதா என்பதை அறிவதற்கான ஒரு ஆய்வை நாம் மேற்கொள்ளவேண்டும். நான் அறிந்தவரையில் மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனை ஆகியவற்றின் தாக்கத்தை எவரும் ஒப்பிட்டுப் பார்க்கவில்லை.

ஆனால், பண்டைய திருவனந்தபுரம் மற்றும் கொச்சி அரசுகளின் இது குறித்த ஆவணங்கள் இருக்கின்றன. 1940இல் முதன்முதலாக மரணதண்டனையை ஒழித்தவர் திருவனந்தபுரம் அரசர் ஆவார். பின்னர் அதே ஆண்டில் கொச்சின் அரசரும் அதேபோன்ற ஒரு அறிவிப்பை வெளியிட்டார். பின்னர் 1950இல் இந்தியக் குடியரசின் பகுதியாக அவர்கள் ஆனபிறகு மரண தண்டனை மீண்டும் நடைமுறைக்கு வந்தது. இந்த நிலையில், 1940 முதல் 1950வரையிலான காலக்கட்டத்திலும் பின்னர் 1950 முதல் 1960 வரையிலான காலக்கட்டத்திலும் நடைபெற்ற கொலைகளை குற்றவியல் ஆய்வாளர்கள் ஒப்பிட்டாய்வை செய்தனர். மரண தண்டனை சட்டத்தில் இல்லாத காலக்கட்டத்தில் நடைபெற்ற கொலைகளைவிட 1950-1960 காலக்கட்டத்தில் நடைபெற்ற கொலைகளின் எண்ணிக்கை அதிகமானதாக இருந்ததைக் கண்டு அவர்கள் துணுக்குற்றனர். இதன்மூலம், மரணதண்டனை ஒரு அச்சுறுத்தலாக இருக்கும் என்பது ஒரு மாயத்தோற்றம் என்பது புலனாகிறது. இங்கிலாந்தில் பிக்பாக்கெட் அடிப்பவர்களுக்குகூட மரண தண்டனை விதிக்கப்பட்ட காலத்தில் நடந்த மிக சுவாரசியமான நிகழ்வை சிந்தனையாளர் ஆர்த்தர் காய்சுலர் விவரிக்கிறார்:

பிக்பாக்கெட் திருடர்களை அச்சுறுத்தும் என்ற எண்ணத்தில் அக்குற்றத்திற்கு மரண தண்டனை அறிமுகப்படுத்தப்பட்டது. அந்தக் குற்றத்திற்காகக் குற்றவாளி கொல்லப்படும்போது அதை பொதுமக்கள் காணும் வகையில் நிறைவேற்றினர். அப்படியான ஒரு நிகழ்வின்போது தூக்குத் தண்டனை நிறைவேற்றப் பட்டபின் அதைக் காணக்கூடி இருந்த மக்களில் 63 பேரின் பைகள் திருடுபோனது குறித்து காவல்துறைக் குப் புகார்கள் வந்தன. இதன்மூலம் மரண தண்டனை ஒரு அச்சுறுத்தலாக இல்லை என்பது மீண்டும் உறுதி செய்யப்படுகிறது. மரண தண்டனையை சூழ்ந்துள்ள மனிதத் தன்மையற்ற கூறுகளை அடுத்து காணலாம்.

முதலாவதாக, குற்றம் இழைத்தவரை திருத்தும் நோக்கத்தை அது அழிக்கிறது. இரண்டாவதாக, நீங்கள் எடுத்த முடிவை திருத்திக்கொள்வதற்கான வாய்ப்பினை அது முற்றிலுமாக அது மறுக்கிறது. அதிலும் குறிப்பாக அந்த முடிவு பின்னர் தவறென அறியப்படும் சூழலில் இது பெரும் துன்பத்தை ஏற்படுத்துகிறது.

மூன்றாவதாக, மரணதண்டனையின் மூலம் சட்டத்தினால் பாதுகாக்கப்பட்ட முறையில் உண்மையில் நீங்கள் ஒரு கொலையையே செய்கின்றீர்கள். நான்கா வதாக, சட்ட அதிகாரத்தைப் பெற்று நீங்கள் ஒரு கொலையைச் செய்யும்போது கொலையாளியின் பழிவாங்கும் மனநிலையை நீங்களும் கொண்டுள்ளீர் கள். ஐந்தாவதாக, மீண்டும் அளிக்கமுடியாத உயிரை எடுப்பதற்கான உரிமை உங்களுக்கு இல்லை. ஆறாவ தாக, நேரடிச் சாட்சியங்களின் வாக்குமூலங்களின் அடிப்படையில் மரணதண்டனை அளிப்பது என்ற முடிவை எடுப்பது குறித்து சில கேள்விகள் உள்ளன. எனது அனுபவங்களில், ஒரு வழக்கறிஞராகவும் விசாரணை நீதிபதியாகவும் நான் பார்த்தவரையில் நேரடி சாட்சிகளின் வாக்குமூலங்களை அதிகாரத்தின் மூலம் எளிதாக உருவாக்கலாம். அதோடு, கொலை யுண்டவரின் உற்றார் உறவினர்கள் இயல்பாகவே கொலையின் கொடூரத் தன்மையை மிகைப்படுத்தியே கூறுவர். எனவே இந்த நிலையில், நடந்த கொலை மிகவும் கொடூரமான முறையில் நடந்தது என்று நீங்கள் எடுக்கும் முடிவானது மிகவும் வலுவற்ற அடிப்படை யில் அமைந்திருப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன. மேலும், கொலை வழக்குகளில் மரண தண்டனை விதிக்கப்பட்ட வர்களை கணக்கில் எடுத்தீர்கள் எனில் அவற்றில் 90 விழுக்காட்டினர் சமூகத்தின் கீழ்த்தட்டில் உள்ளவர் களாகவே இருக்கின்றனர். நான் கொலை செய்தது இல்லை. உங்களில் எவரும்கூட செய்வதில்லை. இதற்கு உங்களின் வளர்ப்பு ஒரு காரணம். ஆனால், சேரிகளில் வாழ்பவர்கள் மற்றும் நாடோடிகளின் குழந்தைகள் கற்றறிந்த வகுப்பினரின் குழந்தைகளின் அளவிற்கு உயிரின் மதிப்பை அறிந்திராமல் இருக்கலாம். அதனை ஆன்மீக அளவிலும் அறிந்திருக்க அவர்களுக்கு வாய்ப்பில்லை. எனவே, எவ்வித உளவியல் தடையும் இன்றி அவர்கள் வன்முறையை கையில் எடுக்கின்ற னர். மகாசசே விருதுபெற்ற கிரண்பேடியின் நூலைப் படித்த பிறகு எந்த ஒரு குற்றவாளியையும் திருத்த முடியும் என நான் முழுமையாக நம்புகிறேன்.

ஆனால் வேதனைக்குரிய ஒன்றாக அரசோ அல்லது பொது மக்களோ, திருத்துவது என்ற மனித நேய நோக்கத்திற்கு தங்கள் கவனத்தை செலுத்துவது இல்லை. அவர்களுக்கு குறுக்கு வழி மட்டுமே தெரிந் திருக்கிறது. அது, குற்றவாளியை அழிப்பது மற்றும் அதன் மூலம் கிடைக்கக்கூடிய கொடூர இன்பத்தை அனுபவிப்பது. எனது நீண்ட அனுபவங்களின் அடிப் படையில் நான் உங்களை எச்சரிக்க விரும்புகிறேன். குற்றம் இழைத்தவர் நீதிமன்றத்தால் குற்றம் இழைக்காத வர் என அறியப்படலாம். ஆனால் சில நேரங்களில் மிகமிக அரிதாக என்றபோதும் குற்றம் இழைக்காத வர்களும் குற்றம் இழைத்தவர்களாக அறியப்படலாம்.

இதுதான் வழக்குகளை உணர்வு மயப்படுத்தும் போது எழும் பலனாகும். வரலாற்றின் நீதிபதி ஒருவர், உண்மையில் குற்றம்சாட்டப்பட்டவர் எவ்விதக் குற்ற மும் செய்யவில்லை என்று அறிந்த நிலையிலும், கூடி யிருந்த மக்களின் உணர்வுகளுக்கு ஈடுகொடுக்க அவ ருக்கு மரணதண்டனை அளிக்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது குறித்து ஒற்றை நிகழ்வு மட்டுமே உள்ளது. அது, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஜெருசலம் நகரில் நடந்தது. அந்த நீதிபதியின் பெயர் பாந்தியஸ் பிளதவுஸ் என்பதும் தண்டனை விதிக்கப்பட்ட அந்தக் கைதியின் பெயர் நாசரேத்தைச் சேர்ந்த இயேசு என்பதும் நான் கூறவேண்டிய அவசியம் இல்லை.

ஈகத்தூண்கள் அமைக்க நன்கொடை தாரீர்!

திரு. பழ. நெடுமாறன் அவர்களின் மாவீரர் நாள் உரை - 2009

திரு. வைகோ அவர்களின் மாவீரர் நாள் உரை - 2009

ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்கான
உலகத் தமிழர் பிரகடனம்

பழ. நெடுமாறன் நூல்கள்

பழ. நெடுமாறன் அறிக்கைகள்

சிறப்புப் படங்கள் பக்கம்

சிறப்பு உரைகள் பக்கம்

இந்துத்துவா பற்றிய
பழ. நெடுமாறனின்
நூல்
விவரங்கள்

இந்தியா.இலங்கை ஆகிய நாடுகளில் உள்ள தமிழர் அமைப்புகளுக்கு வேண்டுகோள்

தென்செய்தி வளர்ச்சி நிதி தாரீர்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக