மகிந்தவுக்கு வாக்குறுதி ஏதும் கொடுக்கவில்லை – மாலைதீவு உதவிஅதிபர் கைவிரிப்பு
நியுயோர்க்கில் மகிந்த ராஜபக்சவுடன் சிறிலங்காவின் மனிதஉரிமை நிலைமைகள் குறித்து மாலைதீவு உதவி அதிபர் மொகமட் வாகிட் ஹசன் கலந்துரையாடியதாக சிறிலங்கா அரசாங்கம் வெளியிட்ட தகவலை மாலைதீவு உதவி அதிபரின் செயலகம் நிராகரித்துள்ளது.ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்கச் சென்ற போது சிறிலங்கா அதிபரை மாலைதீவு உதவி அதிபர் சந்தித்துப் பேசியதாகவும், ஆனால் மனிதஉரிமை நிலைமைகள் குறித்து அதன்போது பேசப்படவில்லை என்றும் அந்தச் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
மனிதஉரிமை நிலைமைகள் குறித்த சிறிலங்காவின் நிலைப்பாட்டுக்கு ஆதரவு வழங்குவதாக மாலைதீவு உதவிஅதிபர், சிறிலங்கா அதிபருக்கு வாக்குறுதி அளித்ததாக ஹவீரு என்ற ஊடகத்துக்கு சிறிலங்கா அரசின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியிருந்தார்.
ஆனால் இதுதொடர்பாக விளக்கமளித்துள்ள மாலைதீவு உதவிஅதிபரின் செயலகம், மகிந்த ராஜபக்சவை நல்லெண்ண அடிப்படையில் சந்தித்ததாகவும், ,அதில் வர்த்தக உறவுகள் தொடர்பாகவும் ஐ.நாவில் வடக்கு, தெற்கு நாடுகளின் ஒத்துழைப்பு பற்றியுமே பேசப்பட்டதாகவும் கூறியுள்ளது.
இந்தச் சந்திப்பில் மனிதஉரிமைகள் விவகாரம் குறித்து எதுவுமே பேசப்படவில்லை என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஜெனிவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் சிறிலங்கா அரசைக் காப்பாற்றும் முயற்சியில் பரப்புரைகளில் மாலைதீவு அதிபர் ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக