First Published : 29 Sep 2011 12:35:56 PM IST
Last Updated : 29 Sep 2011 04:40:25 PM IST
தருமபுரி, செப்.29: 19 ஆண்டுகளாக பரபரப்பாக நடந்து வந்த வாச்சாத்தி பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த 215 பேரும் குற்றவாளிகள் என நீதிபதி குமரகுரு அறிவித்துள்ளார். இதில் வனத்துறையினர் 17 பேர் மீதான பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டது. 17 பேரில் 12 பேருக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் 5 பேருக்கு 7 ஆண்டு கடுங்காவலும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். மற்றவர்களுக்கு ஓர் ஆண்டு முதல் மூன்று ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இன்னும் சிலர் சில பிரிவுகளில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.இன்று காலை 10.30 மணிக்கு நீதிமன்றத்துக்கு வந்த நீதிபதி குமரகுரு இதர வழக்குகளை விசாரித்துவிட்டு 11 மணியளவில் வாச்சாத்தி வழக்கை விசாரித்தார். பின்னர் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 215 பேரும் குற்றவாளிகள் என அறிவித்து குற்றவாளிகளின் கருத்தைக் கேட்டார்.அவர்களில் பெரும்பாலானோர் தாங்கள் குற்றவாளிகள் அல்ல. சம்பவம் நடந்த இடத்தில் தாங்கள் இல்லை என்பதால் குறைந்தபட்ச தண்டனை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம் எனக் குறிப்பிட்டனர்.இதைத்தொடர்ந்து குற்றவாளிகளின் வழக்கறிஞர்கள் வாதாடுகையில், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவருமே அரசு ஊழியர்கள் என்றும் அவர்களில் பெரும்பாலானோர் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர் என்றும் அதுவே அவர்களுக்கு பெரிய தண்டனை என்றும் தெரிவித்தனர்.மேலும் அரசு ஊழியர்களான அவர்கள் அரசுப் பணியைத் தான் செய்தனர். இந்த வழக்கு சந்தனக் கட்டை கடத்தல் தொடர்பானது என்பதால் இதில் வழங்கப்படும் தீர்ப்பு சந்தனக் கட்டை கடத்தல்காரர்களுக்கு சாதகமாக அமைந்து விடக்கூடாது என்று தெரிவித்தனர்.இந்த வாச்சாத்தி பாலியல் வழக்கில் மொத்தம் 269 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அவர்களில் 155 பேர் வனத்துறை அலுவலர்கள். 108 பேர் போலீஸ்காரர்கள். 6 பேர் வருவாய்த் துறை ஊழியர்கள். அவர்களில் 54 பேர் மரணமடைந்துவிட்டனர்.இந்த வழக்கின் விவரம்:தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே வாச்சாத்தி மலைக் கிராமப் பகுதியில் சிலர் சந்தனமரங்களை வெட்டி கடத்துவதாக கடந்த 1992-ம் ஆண்டு வனத்துறையினருக்கு புகார் வந்தது தொடர்பான விசாரணையின்போது சந்தன கட்டை கடத்தலுக்கும், தங்களுக்கும் எந்த வித தொடர்பும் இல்லை என்று வாச்சாத்தி கிராம பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து விசாரணை நடத்திய கூட்டுக்குழுவினர் வாச்சாத்தி கிராமத்தை சேர்ந்த 90 பெண்கள், 28 குழந்தைகள், 15 ஆண்கள் உள்பட மொத்தம் 133 பேரை கைது செய்தனர். இந்த நிலையில் வாச்சாத்தி பகுதியில் கூட்டுக்குழுவினர் சோதனை நடத்தியபோது மலைவாழ் மக்கள் சமூகத்தை சேர்ந்த 18 பெண்களை கூட்டுக்குழுவில் இடம்பெற்ற வனத்துறை, காவல்துறையை சேர்ந்த பலர் பாலியல் பலாத்காரம், வன்கொடுமைக்கு உட்படுத்தியதாக கிராம மக்கள் தரப்பில் பரபரப்பான புகார் தெரிவிக்கப்பட்டது.இந்த புகார் தொடர்பாக முன்னாள் எம்எல்ஏ அண்ணாமலை 1992-ம் ஆண்டு ஜூன் 22-ம் தேதி அரூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இந்த புகார் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனையடுத்து தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க பொதுச்செயலாளர் சண்முகம், நிர்வாகிகள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், வாச்சாத்தி கிராமத்தில் கூட்டுக் குழுவினர் சோதனையின்போது நடந்தது என்ன என்பது தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தவும், விசாரணைக்கு பின் நடந்த சம்பவங்கள் தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்யவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.இதனைத் தொடர்ந்து தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையத்தின் தென்மண்டல ஆணையர் பாமதி தலைமையிலான குழுவினர் வாச்சாத்தி கிராமத்தில் நேரில் விசாரணை நடத்தியது. இந்த குழுவின் அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்றம் உத்தரவின்பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.இந்த நிலையில் கடந்த 1996ஆம் ஆண்டு இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது. கடந்த 2008ஆம் ஆண்டு பிப்ரவரி 17-ம் தேதி இந்த வழக்கின் விசாரணை தருமபுரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு விசாரணை தொடர்ந்து நடந்து வந்தது.இந்த நிலையில் வாச்சாத்தி சம்பவத்தின்போது தர்மபுரி மாவட்டத்தில் பணிபுரிந்த ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், உதவி ஆட்சியர் ஆகியோரை வழக்கில் சேர்த்து விசாரிக்க வேண்டும் என்று குற்றம் சாற்றப்பட்டவர்கள் தரப்பை சேர்ந்த 7 பேர் தருமபுரி அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.இந்த மனுவை நீதிமன்றம் நிராகரித்தது. இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுவும் நிராகரிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வாச்சாத்தி வழக்கு தொடர்பான விசாரணையை விரைவுபடுத்தி முடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.பின்னர் வாச்சாத்தி வழக்கின் இறுதி கட்ட விசாரணை தர்மபுரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் கடந்த ஜூலை 5-ம் தேதி தொடங்கி தொடர்ந்து நடந்துவந்தது. மாவட்ட முதன்மை நீதிபதி குமரகுரு முன்பு சி.பி.ஐ. மற்றும் குற்றம்சாற்றப்பட்டவர்கள் தரப்பு வழக்கறிஞர்கள் ஆஜராகி வாதாடினார்கள்.
கருத்துகள்
ADMK செய்தது தவறென்றால், இதில் குற்றவாளிகளாக அறிவிக்கப்படிருக்கும் அதிகாரிகளுக்கு ஊதிய /பதவி உயர்வுமளித்த திமுக் ஆட்சியை என்ன சொல்வது?ஒருவரையாவது கருணாநிதி சஸ்பெண்டு செய்தாரா?அல்லது இந்த வழக்கை துரிதபடுத்தினாரா ?(வழக்குநடந்த 18 ஆண்டுகளில் 10ஆண்டு திமுக ஆட்சி!வழக்கு நடத்திய CBIகூட திமுக கூட்டணி மந்திரிசபையின் கீழ்).ஆகமொத்தம் தேர்தல்முறைகேடுகளுக்கு அதிகாரவர்க்கத்தின் துணை தேவை என்பதால் கழகங்களும் அரசுஅலுவலர்களின் அராஜகங்களைக் கண்டுகொள்ளாமல் இருந்திருக்கின்றன!இப்போதும் கூட அப்பீலில்,அரசு இவர்களைத் தப்பிக்கவிட முழுமுயற்சி செய்யப்போவது உறுதி!கழகங்களோ, காங்கிரசோ வாச்சாத்தி விவகாரத்திற்காகப் போராட்டம் நடத்தியதில்லை!நாட்டினை சீரழிக்கும் கிரிமினல் அரசியல்வாதிகள்-அலுவலர்கள்- போலீஸ்- கேடிகள் கூட்டணியை அழித்தொழிக்க அனைவரும் கை கோர்ப்போம்!
By மணி
9/29/2011 4:56:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *9/29/2011 4:56:00 PM