திங்கள், 26 செப்டம்பர், 2011

Obama Refused ot meet war criminal Rajapakshe: அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, போர்க்குற்றவாளி இராசபக்சேவைச் சந்திக்க மறுப்பு!

அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா போர்க்குற்றவாளி ராஜபக்சேவை  சந்திக்க மறுப்பு! 
அமெரிக்க அதிபரை பாராட்டுவோம்!
 
தற்போது அமெரிக்காவில் உள்ள இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே மீது தொடரப்பட்ட போர்க்குற்ற வழக்கில், அவருக்கு நியூயார்க் மன்ஹாட்டன் மாவட்ட நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது .

விடுதலைப் புலிகளின் தளபதியாக இருந்த கர்னல் ரமேஷின் மனைவி வத்சலாதேவி நியூயார்க் தெற்கு மாவட்ட நீதிமன்றத்தில், போர்க்குற்ற வழக்கு தாக்கல் செய்துள்ளார் (வழக்கு எண்: 1:11-cv-06634-NRB).

இலங்கை படைகளிடம் சரணடைந்த பின்னர் தன் கணவர் கர்னல் ரமேஷை படுகொலை செய்துவிட்டதாக, வத்சலாதேவியின் சார்பில் வி.ருத்ரகுமாரன் கடந்த 22 -ம் தேதி இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

ரமேஷின் படுகொலை மற்றும் போரின்போது இடம்பெற்ற போர்க் குற்றங்கள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்களுக்கு அடிப்படைக் காரணமாக இருந்தவர் என்ற அடிப்படையில் இலங்கை அதிபர் ராஜபக்சே இதில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கில் இலங்கை ராணுவ தளபதிக்கு ஏற்கெனவே சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்த நிலையில் ராஜபக்சேவுக்கும் இப்போது சம்மன் அனுப்ப்பட்டுள்ளது.இதைத் தொடர்ந்து அவர் அவசரமாக இலங்கை திரும்பும் ஏற்பாடுகளில் இறங்கியுள்ளார்.

ஐநா சபைக் கூட்டத்தில் பங்கேற்க சில தினங்களுக்கு முன் அமெரிக்கா சென்ற ராஜபக்சேவுக்கு அங்குள்ள தமிழர் மற்றும் அவர்களுக்கு ஆதரவான இன மக்கள் பெரும் எதிர்ப்பு காட்டினர். இதனால் நியூயார்க்கை விட்டு எங்கும் செல்ல வேண்டாம் என ராஜபக்சேவுக்கு அமெரிக்க அரசு உத்தரவிட்டிருந்தது.

மேலும் அந்நாட்டு அதிபர் பாரக் ஒபாமா இந்த முறை ராஜபக்சேயை சந்திக்கவும் மறுத்துவிட்ட நிலையில், அவருக்கு போர்க்குற்ற வழக்கில் நீதிமன்ற சம்மன் அனுப்பப்பட்டிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
 
ம.இளங்கோ,
புதுச்சேரி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக