தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் தொடர்கிறது – எங்கு சென்று முடியுமோ!
கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் பெரிய கற்களால் தாக்குதல் நடத்தியுள்ளதாக இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.இதில் பல மீனவர்கள் காயம் அடைந்ததாகவும் மீனவர்களின் வலைகளை அறுத்து எறிந்து படகுகள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தமிழக மீனவர்கள் முறையிட்டுள்ளனர்.
ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் நேற்று மீன்பிடிக்க சென்றுள்ளனர். கச்சத்தீவு அருகே அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது 5 படகுகளில் இலங்கை கடற்படையினர் வந்துள்ளனர்.
அவர்கள் ராமேஸ்வரம் மீனவர்களை பெரிய பெரிய கற்களால் தாக்கியுள்ளனர். இதில் பல மீனவர்கள் படுகாயம் அடைந்தனர். வலைகளை அறுத்து எறிந்து கடலில் வீசிய இலங்கை கடற்படையினர், படகுகளையும் சேதப்படுத்தினர். மீன்களையும் கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.
உயிர் பிழைத்தால் போதும் என்று மீனவர்கள் இன்று காலை கரை திரும்பினர். இலங்கை கடற்படையினரின் இந்த நடவடிக்கை குறித்து மீனவர்கள் புகார் அளித்துள்ளனர்.
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர், அந்நாட்டு மீனவர்கள் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருவது தமிழக மீனவர்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்ற போதும் அப்படி ஒரு சம்பவமே இடம்பெறவில்லை என இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக