வியாழன், 21 ஏப்ரல், 2011

dinamani editorial about postal vote: தலையங்கம்: அஞ்ச வைக்கிறது அஞ்சல் வாக்கு!

தலைப்பில் அஞ்சல் வோட்டு! உள்ளே தபால் வாக்கு! ஏன் இந்த  இரட்டை வேடம். பிழையின்றி எழுதக் கற்றுத் தரும் தினமணி நல்ல தமிழையே எல்லா  இடங்களிலும் கையாளலாமே! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! 
தலையங்கம்: அஞ்ச வைக்கிறது அஞ்சல் வோட்டு!


தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்துவிட்டாலும், வாக்கு எண்ணும் நாளான மே 13-ம் தேதி காலை 7 மணி வரை தபால் வாக்குகளை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தபால் வாக்குகளைப் பெறுவதற்காக அந்தந்தத் தேர்தல் நடத்தும் அலுவலர்களது அலுவலகத்தில் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.  ஒவ்வொரு தொகுதியிலும் தேர்தல் பணியாற்றிய ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், போலீஸôர் ஆகியோருக்கு தபால் வாக்கு அளிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அவரவர் தொகுதியில் தாங்கள் விரும்பும் வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டியது ஜனநாயகக் கடமையும் ஆகும்.  ஆனால், இந்த வாக்குகளைப் பெறுவதற்கு மே 13-ம் தேதி வரை நீட்டிப்பு செய்வது அவசியமா என்று கருதிப்பார்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. தமிழக சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன் மீது அதிமுக வேட்பாளர் கூறியுள்ள புகாரைக் கருத்தில் கொண்டால், தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ள இந்த முடிவு எந்த அளவுக்குச் சரியானது என்பது விவாதத்துக்குரியது.  காட்பாடி தொகுதியில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் தபால் வோட்டுகளை திமுக வேட்பாளர் துரைமுருகனின் ஆதரவாளர்கள் மிரட்டிப் பெற்று வருகிறார்கள் என்று அத்தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் எஸ்.ஆர்.கே. அப்பு என்கிற ராதாகிருஷ்ணன் தேர்தல் அலுவலரிடம் புகார் செய்துள்ளார். இந்தப் புகாருக்கு பதில் அளித்துள்ள தேர்தல் அலுவலர் பாலசுப்பிரமணியம், இந்தப் புகாரை அதிமுக வேட்பாளர் என்னிடம் தொலைபேசியில் கூறினார். எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்தால் மட்டுமே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க இயலும் என்று கூறியுள்ளார்.  இத்தகைய மிரட்டல்கள் நடந்ததா என்பது உறுதிப்படுத்தவில்லை என்றாலும், இது நடக்காது என்பதை எப்படி உறுதிப்படுத்துவது?  தமிழ்நாட்டில் நடந்து முடிந்த தேர்தலில் 2 லட்சத்து 88 ஆயிரம் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் வாக்குச் சாவடிகளில் தேர்தல் பணியாற்றினர். அதாவது சராசரியாக ஒவ்வொரு தொகுதியிலும் குறைந்தபட்சமாக 1,500 அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.  இவர்கள் ஒவ்வொருவரையும் நேரில் அணுகக்கூடிய ஒரு வேட்பாளர், இந்த அரசு ஊழியர்களை மிரட்டி அல்லது தான் செய்த நன்மைகளைக் கூறி, அல்லது ஆட்சிக்கு வந்தால் கவனிப்போம் என்று எச்சரித்து, அல்லது பணம் பட்டுவாடா செய்து இந்த வாக்குகளைப் பெறுவதற்கு முயற்சி செய்ய அனைத்து வாய்ப்புகளும் உள்ளன.  பல தொகுதிகளில் சுமார் 1,000 வாக்குகள் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கக்கூடியவை என்பதில் சந்தேகமே இல்லை. பல தொகுதிகளில் போட்டி கடுமையாக இருந்துள்ளது. இந்தத் தொகுதிகளில் வெற்றி பெறுபவருக்கும் இரண்டாம் இடத்தில் இருப்பவருக்கும் வாக்கு வித்தியாசம் சுமார் 1,000 வாக்குகள் அளவில்தான் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இவ்வாறு தபால் வோட்டுகளை மே 13-ம் தேதி வரை அனுமதிப்பதன் மூலம், ஆள்பலம், பணபலம் உள்ள வேட்பாளர் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள மாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதம்?  இன்றியமையாப் பணிகளுக்காக தேர்தல் நடத்தை விதிகள் தளர்த்தப்பட்டால், தற்போது அரசு அறிவித்திருப்பது என்ன? ஆறாவது ஊதியக் குழுவின் கடைசி நிலுவைத் தொகையை அளிப்பதற்கான உத்தரவை தமிழக அரசின் நிதித்துறை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு மூன்றாவது தவணையாக ரூ.15,000 முதல் ரூ. 30,000 வரை கிடைக்கும். இந்த உத்தரவு என்ன அத்தனை அத்தியாவசியமானதா? மே 13-ம் தேதிக்குப் பிறகு இந்த உத்தரவை அளிக்க முடியாதா? அதுவரையிலும் தள்ளிப்போட்டால் என்ன ஆகிவிடும்? இந்த அறிவிப்பு ஆளும்கட்சி வேட்பாளர்களுக்குத் தபால் வோட்டுகள் மூலம் சாதகமான வாக்குகளைப் பெற்றுத்தருவதாக அமையாதா?  தேர்தல் பணியில் ஈடுபட்ட அனைத்து வாக்காளர்களுக்கும் அன்றைய தினமே இதற்கான படிவங்களைக் கொடுத்து, பூர்த்தி செய்யும்படி சொல்லியிருக்கலாம். அல்லது அதற்கு அடுத்த நாளே இவர்கள் அந்தந்த மையங்களில் இந்தத் தபால் வாக்குகளை அதிகாரிகள் முன்னிலையில் பெற்று, அங்கேயே வாக்குப் பதிவு செய்து, தபால் பெட்டியில் போடும்படி செய்திருந்தாலும் இத்தகைய மிரட்டல் புகார்களுக்கு இடம் ஏற்பட்டிருக்காதே!  கடந்த தேர்தல்களைப் போல் இல்லாமல், இந்தத் தேர்தலில் வாக்குப் பதிவுக்கும் வாக்குகள் எண்ணிக்கைக்கும் ஒரு மாத கால இடைவெளி இருக்கும் நிலையில் இதுகுறித்து தேர்தல் ஆணையம் சிந்தித்து, தபால் வாக்குகள் விஷயத்தில் நல்ல முடிவை எடுத்திருக்க வேண்டும்.  தற்போது தபால் வாக்குப் பதிவுக்கான படிவங்களை அந்தந்த மாவட்டங்களில் விநியோகிப்பதன் மூலம், இவர்கள் அதனை வீட்டுக்குக் கொண்டு சென்று, பிறகு நிதானமாக பிறிதொரு நாளில் (மே 13 க்குள்) தேர்தல் அலுவலர் அலுவலகத்தின் நுழைவு வாயிலில் உள்ள பெட்டியில் போட்டால் போதும் என்கிற பழைய வழக்கம் முறையானதாக இருக்குமா?  பணபலமும், ஆள்பலமும் உள்ள வேட்பாளர் ஒவ்வொரு அரசு ஊழியர்களின் படிவத்திலும் தனக்கு வாக்குகள் பெற்று அவரது ஆட்கள் மூலம் மொத்தமாக கொண்டுவந்து, இதற்கான பெட்டியில் போட்டாலும் கேட்பவர் யார்?  தேர்தலில் பணியாற்றியவர்கள் தங்கள் வாக்குகளை அச்சமின்றி, பலவந்தம் ஏதுமின்றி, தனிஅறையில் தங்கள் தபால் வாக்குகளை பதிவு செய்து, அப்போதே பெட்டியில் போடச் செய்திருந்தால் என்ன? எங்கேயோ, ஏதோ இடிக்கிறதே... சந்தேகம் வலுக்கிறதே... ஆணையம் நிலைதடுமாறுகிறதே....



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக