செவ்வாய், 19 ஏப்ரல், 2011

dinamani article about the duties of the new govt. : காத்திருக்கும் கடமைகள்...

மீனவர்கள் பாதுகாப்பு, ஈழத்தமிழர்கள் பாதுகாப்பின்  மூலம் இந்தியா அடைய வேண்டிய பாதுகாப்பு, கல்விக்கட்டணங்களை வரையறுப்பதை விட அனைவருக்கும் கட்டணம் இல்லாக்  கட்டாயக்கல்வி, ஊழல் ஒழிப்பு, எங்கும் தமிழ் என்பதை ஆரவார முழக்கமாகக் கொள்ளாமல் செயல்படுத்தல், ஊடகஙகள் நிகழ்த்தும் தமிழ்க்கொலைகளைத் தடுத்தல்,
தமிழ் எழுத்துகளையும் அயல் எழுத்துகளில்  இருந்தும் அயற் சொற்களில் இருந்தும் பாதுகாத்தல் முதலிய பலவற்றையும் சேர்த்து இருந்தால் முழுமையான கட்டுரையாய் அமைந்திருக்கும். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
/ தமிழே விழி! தமிழா விழி! /
எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! 

காத்திருக்கும் கடமைகள்...



ஓருவழியாகத் தேர்தல் திருவிழா ஓய்ந்துவிட்டது. பலருக்குக் கிலியும், சிலருக்கு வலியும் இத்தேர்தல் ஏற்படுத்தியது என்றால் அதில் வியப்பில்லை. எனவே ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவது யார் என்பது மட்டுமே அடுத்த கட்ட எதிர்பார்ப்பு. இதுவரை எப்படி நடந்ததோ அது இம்முறை மாறிவிட்டது என கூறும் அளவுக்கு தேர்தல் ஆணையத்தின் கெடுபிடி இருந்தது. நினைத்ததை முழுவதுமாக சாதிக்கமுடியாவிட்டாலும், இனி வரும் தேர்தலில் இந்த பயம் நிச்சயம் இருக்கும். அதுவரை ஜனநாயகத்துக்கு வெற்றி என்றே கருதலாம்.அதைச் செய்வேன், இதைச் செய்வேன் எனக் கூறியவர்கள் அதிகாரத்துக்கு வந்ததும் முதலில் செய்ய வேண்டியது என்னவாக இருக்க வேண்டும் என்பதுதான் அடுத்தகேள்வி. இப்போதைய எதிர்பார்ப்பு புதிதாகப் பொறுப்பேற்கவுள்ள அரசு பல சவால்களை எதிர்நோக்க வேண்டியிருக்கிறது. அவர்களுக்குக் காத்திருக்கும் கடமைகள் ஏராளம்.ஏழைகளின் பிரச்னைகளை முதலில் தீர்க்க வேண்டும். மாறாக தனிமனித வெறுப்புகள், பழிவாங்கல்கள் இருக்கக் கூடாது.கடந்தமுறை செயல்படுத்தாமல் நிறுத்தப்பட்டவை அல்லது புதிய திட்டங்களை உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும். இதுதவிர, மக்கள் எதிர்பார்க்கும் பல்வேறு பிரச்னைகளை புதிய அரசு தீர்க்க வேண்டியது மிக அவசியம்.இப்போதைய தலையாய பிரச்னையாக இருப்பது மின்வெட்டு. இதைத் தவிர்ப்பதற்கு உடனடியாகச் செய்ய வேண்டியவை அதிக அளவில் சூரிய ஒளி மின்சாரத்தைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவரலாம். மேலும் தனியார் உதவியுடன் அனல் மின்நிலையங்களை ஆங்காங்கே அமைத்து சிறிய அளவில் உற்பத்தி செய்வது.பெரும்பாலான கிராமங்களைத் தொண்டு நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளிட்டவைகள் தத்தெடுத்து மின்தடையே இல்லாமல் செய்ய மாநில அரசு அதிக உதவி அளிக்கலாம்.அடுத்ததாக, தலைக்குமேல் தொங்கும் கத்தியாக இருப்பது பள்ளி, கல்லூரி கல்விக் கட்டண விவகாரம். தனியார் பள்ளிகளின் பகல் கொள்ளையைத் தடுக்க உடனடியாகச் சட்டம் இயற்றி மாநில அரசு நேரடிக் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து அனைத்துக் கல்வி நிறுவனங்களின் கட்டண விவரங்களைக் கண்காணிக்க வேண்டும்.வேலைவாய்ப்பகங்களில் பதிவு மூப்பு அடிப்படையில் காலிப்பணியிடங்களை நிரப்பத் தக்க நடவடிக்கை தேவை. தேர்தலின்போது பல கிராமங்களில் வேட்பாளர்களுக்குப் பெரிதும் தலைவலியாக இருந்தது சாலை, குடிநீர், போக்குவரத்து, சுகாதார வசதிகள் இல்லாததுதான். எனவே, இந்த அடிப்படை வசதிகளை மேற்கொள்ள விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும்.ரேஷனில் குறைந்த விலையில் அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்பட்டாலும் அதில் முறைகேடுகள் பெருமளவில் காணப்படுகின்றன. அதைக் களைய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பொருள்கள் வழங்க பெரும்பாலான ரேஷன் கடைகளில் ஊழியர்கள் கிடையாது. அவர்களை நியமிப்பதன் மூலம் இதுபோன்ற தவறுகள் களையப்படலாம்.தமிழகத்தின் பல பகுதிகளில் ஆறுகளிலிருந்து மணல் கடத்தப்படுவதும், கனிம வளங்கள் கடத்தப்படுவதும் இன்னும் முழுவதுமாக நிறுத்தப்படவில்லை. அதைத் தடுத்து இயற்கை வளத்தைக் காப்பாற்ற வேண்டும்.விவசாயிகளுக்கு உரிய நிவாரணம், மானிய உதவி, வேளாண்மை உற்பத்திக்குப் புதிய யுக்திகள், கரும்பு, நெல் போன்ற பயிர்களுக்கு நியாயமான கொள்முதல் விலை, வெங்காயம், மஞ்சள், பூண்டு போன்ற வேளாண் பொருள்கள் தட்டுப்பாடின்றிக் கிடைக்க விவசாயிகளுக்கு தகுந்த ஊக்கமும், உதவியும் அளிக்க வேண்டியது கட்டாயம்.ரவுடிகள் தொல்லை, கட்டப்பஞ்சாயத்து, கொலை, ஆள் கடத்தல் போன்ற சம்பவங்கள் நடக்காமல் சட்டத்தைக் கடுமையாக்கலாம். அரசியல் தலையீடு இல்லாமல் அதிகாரிகள் தங்கள் கடமைகளைச் செய்யும் வகையில் பாரபட்சமில்லாத ஆட்சி அமைந்தால் மக்கள் நம்பிக்கை வீண் போகாது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக