பேரறிஞர் அண்ணா அவர்களும் விகித அடிப்படையிலான சார்புமுறையே நன்று எனக் கூறியுள்ளார். ஆனால், உண்மையில் நம் நாட்டிற்கு அம்முறை ஏற்றதல்ல. கட்சி ஆட்சிக்கு முதன்மை கொடுக்கும் பொதுவுடைமை நாடுகளில்தான் அம்முறை ஏற்றதாக இருக்கலாம். ஏனெனில் விகித முறையில் நாம் கட்சியைத்தான் தேர்ந்தெடுக்கின்றோம். கட்சிதான் வேட்பாளரை அல்ல அல்ல நம் சார்பாளரைத் தேர்ந்தெடுக்கிறது. பிடிக்காத சார்பாளரைத் திரும்ப அழைக்கும் முறையும் அங்குதான் பொருந்தும். நம் நாட்டில் நடைமுறையில் இருந்தால் போலிமக்கள் நாயகம் பேசும் கட்சித்தலைமை ஆதாயம் தரக்கூடிய சுற்றத்தாரையே முன்னிலைப்படுத்தும். எனவே, நல்ல கருத்துகள் பலவற்றைத் தெரிவித்து விட்டு தவறான தீர்வைத் தெரிவித்துள்ளார் சி.மகேந்திரன் அவர்கள்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
/ தமிழே விழி! தமிழா விழி! /
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
ஜனநாயகச் சந்தையின் நிலவரங்களை உற்றுக் கவனித்தால் எதிர்காலம் என்பதே நம் சந்ததியினருக்கு இல்லாமல் போய்விடுமோ என்ற அச்சம் நமக்குள் சூழ்ந்துவிடுகிறது. வாக்குரிமையை விலைபேசி வியாபாரம் செய்வதில் தமிழகம் முன்னணியில் இருக்கிறது.வாக்குரிமையின் மேன்மையை உணராத மக்களும், இவர்களின் வாக்குரிமையை இருளில் நின்று கள்ளத்தனமாகக் கொள்முதல் செய்யும் இடைத்தரகர்களும் தேர்தல் களத்தில் தங்களுக்கான மறைவிடத்தைத் தேடி வைத்திருந்ததை நம்மால் பார்க்கவும் முடிந்தது. வெட்கமற்ற இந்தச் செயல்கள் நமக்குள் அவமானத்தைப் பெருக்கெடுக்க வைத்தன. ஆனாலும் சத்தியத்தின் வேர்கள் நம் மண்ணில் ஆழமாகப் பதிந்து நிற்கின்றன என்பதும் மறுக்க முடியாத உண்மையாகும். சுதந்திரத்தைப் பெற்றெடுப்பதற்கு 200 ஆண்டுகாலம் அடைந்த துயரத்தை இன்னும் நாம் மறந்துவிடவில்லை. ரத்தமும் சதையுமாக இது இன்னமும் நம்முடன் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.இந்த உணர்வில் வந்த நம் மக்கள், ஜனநாயகத்துக்கு நெருக்கடி ஏற்படும்போதெல்லாம் கிளர்ந்து எழுந்துவிடுகிறார்கள். இன்றைய சட்டமன்றத் தேர்தலிலும் மக்கள் பெரும் எண்ணிக்கையில் திரண்டு வாக்களித்திருக்கிறார்கள்.மக்களின் திரண்டெழுந்த வாக்களிப்புக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் நெருக்கமான தொடர்பு இருக்கிறது. ஒவ்வொரு காலத்திலும் மக்களின் கூடுதல் வாக்களிப்புக்கு ஒருவிதமான அர்த்தம் இருக்கத்தான் செய்திருக்கிறது. ஏப்ரல் 13-ம் தேதி நடந்து முடிந்த தேர்தலுக்கும் இதைப்போன்றே ஓர் அர்த்தம் இருக்கிறது. 80 லட்சம் புதிய வாக்காளர்கள் ஆர்வப்பூர்வமாக வாக்களித்திருக்கிறார்கள். ஊழலுக்கு எதிராக அண்ணா ஹஸôரே எழுப்பிய உணர்வு அலைகள் இவர்களிடம் ததும்பி நின்றதைப் பல இடங்களில் காண முடிந்தது.எப்படிப் பார்த்தாலும் லஞ்சம், ஊழல் ஆகிய அவமானங்களிலிருந்து நமது ஜனநாயகத்தை விடுதலை செய்யும் போராட்ட முயற்சிகள் தேர்தல் களத்தில் வெளிப்பட்டது. இவை எல்லாவற்றுக்கும் தேர்தல் ஆணையத்துக்கு நாம் நன்றி செலுத்த வேண்டும். திருமங்கலம் இடைத்தேர்தல் தொடங்கி, நாடாளுமன்றத் தேர்தல், அதற்குப் பின்னர் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களின் நிகழ்வுகள் பெரும் அவநம்பிக்கையை மக்களுக்கு உருவாக்கியிருந்தது. திருமங்கலம் ஃபார்முலா உலகம், நன்கு அறிந்த ஒன்று.தேர்தல் விதிமுறைகள் அனைத்தையும் காலில்போட்டு மிதித்துவிட்டு, அரசு இயந்திரத்தின் மூலம் நன்கு திட்டமிட்டு, ஆயுதம் தாங்கிய காவல்துறையின் உதவியுடன் வாக்குகளைக் கட்டாயப்படுத்தி விலை கொடுத்து வாங்குவதுதான் திருமங்கலம் ஃபார்முலா. வட்டிக்குப் பணம் வாங்கியவர்கள், குறித்த நேரத்தில் கட்டாவிட்டால் எவ்வாறெல்லாம் அவமானப்படுத்தப்படுவார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். குடும்பம் குடும்பமாக எத்தனையோ தற்கொலைகள் நடந்துள்ளன. பணம் வாங்கி வாக்களிக்க இயலாதவர்களின் நிலையும் கந்து வட்டிக்காரனிடம் சிக்கிய கடனாளியைப் போன்றதுதான். பணம் வாங்கி வாக்களிக்கவில்லை என்றால், அதற்கு ஒரு தண்டனை உண்டு என்பதைப்போலவே வாக்குக்குப் பணம் வாங்க மறுப்பவர்களுக்கும் தண்டனை வழங்குவதுதான் திருமங்கலம் ஃபார்முலாவின் தனிச்சிறப்பு.இன்றைய இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷி, அன்றைய திருமங்கலம் இடைத்தேர்தலில் பார்வையாளராகப் பணியாற்றியவர். இந்திய வாக்குரிமை ஜனநாயகத்தைப் போலவே, இவரும் பெருத்த அவமானங்களைச் சந்தித்திருக்க வேண்டும். தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள், இத்தகைய உறுதியுடன் இருக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. நமது அரசு இயந்திரம் வளர்த்தெடுத்த அதிகாரவர்க்கம் தங்கள் சுயநலத்துக்கு எந்தவிதமான கெடுதலும் நிகழாமல் பார்த்துக்கொள்வதில் மிகவும் கை தேர்ந்தவர்கள். சிலநேரங்களில் இவர்கள் தைரியமாக நிகழ்த்தும் தேசபக்த செயல்பாடுகள் நம்மை வியக்க வைத்துவிடுகின்றன.இன்றைய காலத்தில் தேர்தல் ஆணையத்துக்கு விடுக்கப்பட்ட மிரட்டல்கள் சாதாரணமானவை அல்ல. மத்திய, மாநில ஆட்சிப் பொறுப்பில் உள்ளவர்களே தேர்தல் ஆணையம் தங்களுக்கு எதிராகச் சதி செய்கிறது என்று பேசத் தொடங்கிவிட்டார்கள். தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் இந்திரா காந்தியின் அவசரகாலச் சட்டத்தை போன்றே கொடுமை நிறைந்தது என்று நாட்டின் முதலமைச்சர் பேசத் தொடங்கிவிட்டார்.தேசத்தின் உள்துறை அமைச்சர் தேர்தல் தேர் திருவிழாவைப் போன்றது. இதன் உற்சாகம் நடவடிக்கைகளைத் தேர்தல் ஆணையம் தடுத்துவிட்டது என்கிறார். தேர்தலில் கள்ளப்பணம் பெருக்கெடுத்து ஆட்டம் போடுவதுதான் தேர்தல் உற்சாகமா?தேர்தல் ஆணையத்தின் கட்டுக் காவல்களை மீறி இன்று வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கப்பட்டுள்ளது என்பதையும் யாரும் மறுத்துவிட முடியாது. ஆனாலும் கடந்த காலத்தில், ஆட்சி நிர்வாகத்தின் உதவியோடு வாக்குகளுக்குப் பணம் கொடுக்கும் சதி வலையைக் கண்டறிந்து முடிந்த மட்டும், அறுத்து எறிந்துள்ளது தேர்தல் ஆணையம்.கடின உழைப்பில் ரத்தத்தை வியர்வையாக்கி ஊதியம் பெற்ற உழைப்பாளிகள், தங்கள் உழைப்பில் சேர்த்த பணத்தை எவ்வாறு பாதுகாப்பார்கள் என்பதை இன்று யோசித்துப் பார்ப்பது அவசியம். சில்லறைக் காசுகள் என்றாலும் அதற்கு எத்தனை முடிச்சுகள் போட்டுவைப்பார்கள் என்பதை, நேரில் பார்த்தவர்களால் மட்டுமே உணர்ந்து கொள்ளுதல் இயலும். திருச்சி தனியார் பஸ் ஒன்றின் கூரைப் பகுதியில், சரக்குகளோடு சரக்காக 5 கோடியே 57 லட்சம் பணம் கொண்டு வரப்பட்டுள்ளது. அனாதையாகக் கிடந்த இந்தப் பணம் வாக்குகளுக்காகக் கொண்டு வரப்பட்டது என்பது ஊடகங்கள் வெளியிட்டபோது உலகமே மூச்சடைத்து நின்றுவிட்டது. ஆளில்லாத வீடுகளின் 1,000 ரூபாய், 500 ரூபாய் கூரையில் சொருகிச் செல்லுதல் என்று வாக்காளர்கள் கைக்கு எட்டிய தூரத்தில் பணத்தை எடுத்துக்கொள்ளும் தந்திரங்கள் எத்தனையோ செயல்படுத்தப்பட்டன. தேர்தல் செயல்பாட்டின் எல்லா இடங்களிலும் குப்பைக் காகிதங்களைப்போல மதிப்பற்றுக் கிடக்கிறது பணம்.உழைத்துப் பெற்ற பணம் என்றால் இது இவ்வாறு மரியாதையற்றுக் கிடக்குமா? பெரும்பகுதி மக்கள் வறுமையாலும் இல்லாமையாலும் வாழும் நாட்டில், பணத்தில் மக்களைச் சிறை வைப்பது வன்முறையானது அல்லவா?தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலில், நேர்மையான அதிகாரிகள் தமிழகச் சட்டமன்றத் தேர்தலை அர்த்தமுள்ளதாக்க முயற்சி செய்திருக்கிறார்கள். இவர்களது தைரியம் பெரிதும் பாராட்டுதலுக்கு உரியது. ஆனால், இந்தப் பாதையை மேலும் வளர்த்தெடுப்பதற்கு எடுக்கப்படும் முயற்சிகள் குறித்துத்தான் நாம் இப்பொழுது யோசித்துப் பார்க்க வேண்டும்.இந்தத் தேர்தலில் தடுக்கப்பட்டவை எவை? தடுக்க முடியாமல் போனவை எவை என்பதை நாம் பட்டியலிட்டு மதிப்பிட வேண்டும். மகளிர் சுயஉதவிக் குழுக்கள் அனைத்துவிதமான அதிகாரப் பங்கேற்பிலும் பெண்கள் பங்கு பெற வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் தொடங்கப்பட்டது. பேராற்றல் பெற்ற பெண்களின் சக்தி அனைத்தையும் யானையை அதன் பாகன் கோயில் வாசலில் நிற்க வைத்து பிச்சை எடுக்கவைப்பதைப்போல, வாக்குப் பிச்சை எடுக்கப் பயன்படுத்தப்படுகிறார்கள். சுயஉதவிக் குழுக்களின் மூலம் வாக்குகளுக்குப் பணம் கொடுக்கப்படுகிறது என்பதை அறியும்போது மிக வேதனையாக இருக்கிறது. எதிர்காலத்தில் சுயஉதவிக் குழுக்கள் வாக்குகளைப் பெறுவதற்குக் கள்ளத்தனமாகப் பயன்படுத்தும் நடைமுறைகளைத் தடுக்க வேண்டும்.கள்ளவாக்குகளைத் தடுப்பதற்குத் தேர்தல் ஆணையம் வெப் கேமராக்களைப் பொருத்தியிருந்தது மிகவும் வரவேற்க வேண்டிய ஒன்றாகும். நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன் உயிருடன் இருந்திருந்தால் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருப்பார். காரணம், நாடறிந்த அவரது ஓட்டையே ஒரு தந்திரசாலியால் கள்ளவாக்குப் போட முடிந்திருக்கிறது. எதிர்வரும் தேர்தல்களில் எல்லா வாக்குச் சாவடிகளிலும் வெப் கேமரா பொருத்த வேண்டும். தேர்தல் ஆணையம் டிஜிட்டல் விளம்பரங்கள், ஒலி பெருக்கிகளைத் தடுத்து நிறுத்தி இருப்பது, தேர்தலில் பணச்சுமையைச் சுமக்க முடியாத கட்சிகளுக்கு கொஞ்சம் மூச்சுத் திணறலைத் தணியச் செய்திருக்கிறது. எதிர்காலத்தில் அரசியல் கட்சிகளின் தேர்தல் செலவைத் தேர்தல் ஆணையமே ஏற்றுச் செயல்படுத்தலாம். உலகில் பலநாடுகளில் இந்த நடைமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளன. தேவைப்படுமானால் இந்தச் செலவுத் தொகையைத் தேர்தல் ஆணையம் போட்டியிடும் வேட்பாளர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம். கடைசியாக ஒன்று கூறுவது அவசியமானது. அரசியல் கட்சிகளின் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறைதான் இந்தியாவுக்குப் பொருத்தமானது. ஜாதி, மதம், பணம், அடியாள் அரசியல் ஆகியவற்றை ஓரளவுக்குக் கட்டுப்படுத்தக்கூடியதாக இருக்கும். எதிர்காலத்தில் வாக்குரிமை விலைபோகாமல் உறுதியுடன் இருக்க வேண்டுமென்றால் இவ்வாறான புதிய சீர்திருத்தங்கள் நமக்குத் தேவைப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக