செவ்வாய், 19 ஏப்ரல், 2011

Pardon is the Punishment for the genocide? : இந்திய அரசு மன்னிப்புக் கேட்க வேண்டும்:பழ.நெடுமாறன்

பல்லாயிரக்கணக்கான படுகொலைக்கு மன்னிப்பு கேட்பது போதும் என்றால் இனப்படுகொலைகள் தொடரத்தான் செய்யும். எனவே, பொறுப்பான தலைவர்களும் அதிகாரிகளும் படைத்துறையினரும் தண்டிக்கப் பெற வேண்டும். அதற்கு மத்தியில் ஆட்சி மாற வேண்டும். தமிழ்நாட்டில் இருந்து ஒலிக்கும் குரல் இந்தியா முழுமையும் எதிரொலிக்க வேண்டும்! உலகினர் செவிகளில் கேட்க வேண்டும்! நாணயமுள்ள மனச்சான்று உள்ள உண்மையான அதிகாரிகள் இருப்பின்  அவர்கள்  இனப்படுகொலையில் இந்தியாவின் பங்களிப்பு குறித்து வெளிப்படுத்த வேண்டும். கொலையாளிகளைத் தியாகிகளாகச் சொல்கிறவர்களளை என்ன செய்வது? குற்றச் செயல்களைத் தடுத்து நிறுத்தாமல்   ஊக்கப்படுத்தியோ அமைதி காத்தோ, பாராட்டியோ, கிழிக்க வேண்டிய முகத்திரைக்கு முகமூடி போட்டுப் பாதுகாத்தோ  வேறுவகையிலோ  ஒத்துழைத்தவர்கள் யாராயினும் அவர்களும் தண்டனை பெறவேண்டும். மன்பதைக்குக்களங்கம் ஏற்படுத்திய அனைவரின் பெயர்களும் வரலாற்றில் இருந்து துடைத்தெறியப்பட வேண்டும்!அதுதான்  இறந்தவர்களுக்கு நாம் செய்யும் அஞ்சலியாகும்.
வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
/ தமிழே விழி! தமிழா விழி! / 
எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! 



இந்திய அரசு மன்னிப்புக் கேட்க வேண்டும்:பழ.நெடுமாறன்







சென்னை,ஏப்.18: இலங்கை அரசின் போர்க் குற்றங்களுக்கு துணை நின்றதற்காக இந்திய அரசு மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் வலியுறுத்தினார்.இதுகுறித்து திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:அரசு அறிவித்த பாதுகாப்பு வலையப் பகுதிகளில் தஞ்சம் புகுந்த மக்களை படுகொலை செய்தது, மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்தி நோயாளிகளைக் கொன்றது, போர் முடிந்த பிறகு சித்ரவதை, முகாம்களில் அடைத்து படுகொலை, பாலியல் வன்முறை நிகழ்த்தியது, செஞ்சிலுவை சங்கத்தின் கப்பல் மீது தாக்குதல் நடத்தியது, அரசுக்கு எதிரான பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்களை படுகொலை செய்தது என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை இலங்கை அரசு மீது ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணை குழு சுமத்தியுள்ளது.2010 ஜனவரியில் டப்ளினில் கூடிய மக்கள் தீர்ப்பாயம் ராஜபட்ச அரசாங்கத்தை போர்க் குற்றவாளிகள் என தீர்ப்பளித்ததோடு சர்வதேச நீதிமன்றம் அவர்களை விசாரிக்க வேண்டும் என்றும் கூறியது. இப்போதும் ஐ.நா.வும் மேற்கு நாடுகளும் ராஜபட்ச அரசை போர்க் குற்றவாளிகள் என சுட்டிக் காட்டியுள்ளன.ஐ.நா.மனித உரிமை ஆணையத்தில் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டிலிருந்து ராஜபட்சவை காப்பற்றியதன் மூலம், அவரது கொடுஞ்செயல்களை மூடி மறைக்க இந்தியா துணை நின்றது.இலங்கை ராணுவத்துக்கு ஆயுத உதவி உட்பட அனைத்து உதவிகளையும் செய்ததால், ராஜபட்சவின் அட்டூழியங்களை மூடி மறைக்க இந்திய அரசு முயன்றது. இப்போது உலக அரங்கில் ராஜபட்ச போர்க் குற்றவாளி என்பது அம்பலமாகியுள்ளது. இனியாவது தனது கடந்த காலத் தவறுகளுக்கு இந்திய அரசு மன்னிப்புக் கேட்பதுடன், ஐ.நா.வுடன் இணைந்து இலங்கை அரசை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த முன் வர வேண்டும். இதனை தமிழர்கள் ஒன்று திரண்டு வலியுறுத்த வேண்டும் என்று பழ.நெடுமாறன் கேட்டுக் கொண்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக