செவ்வாய், 19 ஏப்ரல், 2011

இலங்கைத் தூதரக உறவை துண்டிக்க வேண்டும்: அர்சுன் சம்பத்து

தூதரக உறவு, விளையாட்டு உறவு, கலை உறவு, என எல்லாவகை உறவுகளும் சிங்களத்துடன் துண்டிக்கப்பட வேண்டும். ஆனால், கூட்டுக் கொலைகாரர்கள் அவ்வாறு செய்ய மாட்டார்கள். எனவே,  குருதிக்கறை படிந்த கொலைகாரக் கையை அகற்ற இந்தியா தழுவியஇயக்கம் நடைபெற வேண்டும்.  நாணயமுள்ள மனச்சான்று உள்ள உண்மையான அதிகாரிகள் இருப்பின்  அவர்கள்  இனப்படுகொலையில் இந்தியாவின் பங்களிப்பு குறித்து வெளிப்படுத்த வேண்டும்.  தமிழர்களின் சிக்கல் எனக் கருதாமல் மக்கள் குலத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி என்பதைப் புரிய  வைத்து இந்தியாவில் உள்ள அனைத்துத் தரப்பு குற்றவாளிகளும் தண்டிக்கப்பட வேண்டும். அதுவே கொலையுண்டவர்களுக்கு நாம் செய்யும் அஞ்சலியாகும். 
வருத்தத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்
/ தமிழே விழி! தமிழா விழி! /
எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

இலங்கைத் தூதரக உறவை துண்டிக்க வேண்டும்: அர்ஜுன் சம்பத்


சென்னை, ஏப். 18: தமிழர்களை படுகொலை செய்த இலங்கை அரசு போர்க் குற்றவாளி என ஐ.நா. மன்றம் குற்றம் சுமத்தி உள்ளதால் இலங்கையுடனான உறவை மத்திய அரசு துண்டித்துக் கொள்ள வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கூறினார்.இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:இலங்கை அரசு தமிழர்களை இனப்படுகொலை செய்யும் உள்நோக்கத்துடன் போரை நடத்தியது. மனித உரிமை மீறல் குற்றங்களை செய்துள்ளது. மனிதாபிமானமற்ற முறையில் சர்வதேச போர் சட்ட விதிகளை மீறி இரண்டு லட்சம் தமிழ் மக்களை படுகொலை செய்துள்ளது. இந்தக் காரணங்களால் இலங்கை அரசு போர்க் குற்றவாளி என்று ஐ.நா. சபையில் அறிக்கை தெளிவுபடுத்தி உள்ளது.போர்க் குற்றங்கள், சதி செயல்களில் ஈடுபட்ட இலங்கை அதிபர் ராஜபட்ச அவரது உறவினர்கள், இலங்கை ராணுவ அதிகாரிகள் ஆகியோர் மீது சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உரிய தண்டனை பெற்றுத்தர முயற்சிகளை மனித உரிமை ஆர்வலர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.தமிழர்களை இனப்படுகொலை செய்துள்ள இலங்கை அரசு மீது இந்தியா பொருளாதார தடை விதிக்க வேண்டும். சிங்கள கடற்படையினரால் இந்திய குடிமக்களான தமிழக மீனவர்கள் 600-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். அண்மையில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா இலங்கையை வென்றதைத் தொடர்ந்து இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்களைப் படுகொலை செய்துள்ளனர்.இந்தியாவை எதிரி நாடாக கருதி செயல்படும் இலங்கை அரசுடன் தூதரக உறவை இந்தியா துண்டிக்க வேண்டும். ஐ.நா. அறிக்கையின் அடிப்படையில் இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாவட்ட தோறும் மத்திய அரசு அலுவலகம் முன்பு கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக