Editorial pages.dinamani லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Editorial pages.dinamani லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 19 நவம்பர், 2011

என்று முடியும் இந்த மீனவர் சோகம்?


நல்ல கட்டுரை. இந்திய அரசு எல்லா மீனவர் நலனிலும் கருத்து செலுத்த இயலும். ஆனால் தமிழ் மீனவர்கள் மீது சிறிதும் கருத்து செலுததாது. எனவேதான் கடல் எல்லையில் சிங்கள நாடு வன் கவர்வு மேற்கொள்ளத் தேவையில்லாமல் தானே உள்வர வழி வகுத்துக் கொடுக்கிறது. மத்திய அரசிற்குத் தாளம்போடும் வேலையை அனைத்துக் கட்சிகளும் நிறுத்தினால்தான் மீனவர் நலன்  உட்பட அனைத்துத் தமிழர் நலன்களும் காக்கப்படும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /


என்று முடியும் இந்த மீனவர் சோகம்?

First Published : 18 Nov 2011 01:51:30 AM IST


காலம் எல்லாம் உழைத்து உழைத்து ஓடாகிப்போன மக்களில் உழவர்களும், மீனவர்களும் முதலிடத்தில் இருக்கின்றனர். ஆனால், அவர்களுடைய துயரம், நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறதே தவிர, குறைந்தபாடில்லை. நாட்டு மக்களுக்கு உணவளிக்கும் கடமையைச் செய்யும் அவர்களைப் பாதுகாக்க வேண்டிய இந்திய அரசு பாராமுகமாக இருப்பதுதான் புதிராக இருக்கிறது.உலகம் முழுவதும் அரசாங்கம் என்பது தங்கள் குடிமக்களைப் பாதுகாப்பதற்காகவே இருக்கிறது. ஆனால், இந்திய நாட்டில் மட்டும் தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகள் தொகை பெருகிக் கொண்டிருக்கிறது. இலங்கைக் கடற்படையால் கொலையுண்ட மீனவர் தொகையும் குறையவில்லை. இதற்குக் காரணம் என்ன?பல மொழி, பல இனம் கொண்ட இந்நாடு வேற்றுமையில் ஒற்றுமை காண்பதாகப் பேசினால் மட்டும் போதுமா? இந்திய மக்களில் ஒருவர் மேல் படும் அடி ஒவ்வொருவர் மேலும் பட்டதாக நினைக்க வேண்டும். ஆனால், இந்நாட்டுப் பழங்குடி மக்களாகிய மீனவர்கள் மீது தினமும் விழுந்து கொண்டிருக்கும் அடியைக் கண்டும் காணாமல் இருப்பது எப்படி?"தமிழ் மக்களின் தலைவர்கள்' எனக் கூறிக் கொண்டவர்கள் எல்லாம் வாய்ச்சொல்லில் வீரர்களாகவே இருக்கின்றனர்.கூரையில் ஏறி கோழி பிடிக்க முடியாதவர்கள், வானத்தைக் கீறி வைகுந்தம் காட்டப் போகிறார்களா? பலரைச் சிலகாலம் ஏமாற்றலாம்; சிலரைப் பலகாலம் ஏமாற்றலாம்; எல்லோரையும் எல்லா காலமும் ஏமாற்ற முடியாது.தமிழ் மக்களுக்கென ஓர் அரசு தமிழ்நாட்டில் இருக்கிறது. தமிழர் ஒருவரே மத்திய உள்துறை அமைச்சராக இருக்கிறார். அத்துடன் புதுவையைச் சேர்ந்த தமிழர் ஒருவரே மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை இணையமைச்சராக இருக்கிறார். தமிழ் மக்களின் உரிமைகளுக்காகப் போராடுவதைவிட, தில்லிக்கு நல்ல பிள்ளைகளாக நடந்துகொண்டு சாகும்வரை பதவியில் இருக்க வேண்டும் என்பதையே கொள்கையாகக் கொண்டிருக்கின்றனர். தமிழ்நாட்டில் ஏதேனும் எழுச்சி ஏற்படுமானால் அதை அடக்குவதற்கு இவர்கள் பயன்பட்டு வருகின்றனர்.இப்போது கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராகப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதை எப்படியாவது அடக்கியாக வேண்டும். இப்போராட்டம் கடலோர மக்களுக்கானது. மீனவ மக்களின் வாழ்வாதாரமும் இதில் அடங்கியுள்ளது. இதை ஒடுக்குவதற்காக பிரதமரின் தூதுவராக புதுவை நாராயணசாமி வருகை தந்துள்ளார்.கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இடிந்தகரையில் போராட்டம் நடத்திய அப்பகுதி மக்களைச் சந்தித்துப் பேசியுள்ளார். கூடங்குளம் பகுதி மக்களின் பாதுகாப்பு, கழிவு நீர் கலப்பதால் மீன்கள் பாதிக்கப்படும் நிலையில் மீனவர்களின் வாழ்வாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவை குறித்து அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். மக்களின் சந்தேகத்தைத் தீர்ப்பது மத்திய அரசின் கடமையில்லையா?தமிழக முதல்வர் மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தைத் தொடர்ந்து, மத்திய அரசின் சார்பில் 15 விஞ்ஞானிகள் கொண்ட குழுவும், மாநில அரசு மற்றும் போராட்டக்குழு இணைந்த குழுவும் பேச்சுவார்த்தை நடத்தியது. மத்திய வல்லுநர் குழு கூடங்குளம் அணு உலைப்பகுதிகளை இரண்டு கட்டங்களாக ஆய்வு நடத்தியது.இதைத் தொடர்ந்து போராட்டக்குழு சார்பில் நியமிக்கப்பட்டுள்ள 21 பேர் கொண்ட குழுவும் ஆய்வுப் பணிகளைத் தொடங்கவுள்ளது.கூடங்குளம் மக்களின் அச்சத்தைப் போக்க அனுப்பி வைக்கப்பட்ட மத்திய இணையமைச்சர் நாராயணசாமி, போராட்டக்காரர்களுக்குப் பணம் எங்கிருந்து வருகிறது என்பதுபற்றி விசாரணை நடத்த மத்திய அரசு ஆணையிட்டுள்ளதாகக் கூறியிருக்கிறார். மக்களின் அச்சத்தைப் போக்க வந்தவர் அவர்களை அச்சுறுத்திப் பணிய வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.ஜெய்தாபூர் அணு மின் நிலையம் பிரான்ஸ், அமெரிக்க நாடுகளின் ஒத்துழைப்போடும், கூடங்குளம் அணுமின் நிலையம் ரஷியாவின் ஒத்துழைப்போடும் அமைக்கப்படுகிறது. அணு சக்திக்கு எதிரான போராட்டத்துக்கு வெளிநாட்டிலிருந்து நிதி வருகிறது என்றால் நமது நலன்களுக்கு எதிராக அந்தந்த நாடுகளே எப்படி நிதி உதவி அளிக்கும்?அணுசக்தித் துறையில் முன்னேறிய நாடுகளான பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான் போன்ற நாடுகள் அணுமின் நிலையங்களைப் படிப்படியாக மூடி வருகின்றன. 1973-க்குப் பிறகு அமெரிக்காவில் புதிதாக அணுமின் நிலையம் எதுவும் அமைக்கப்படவில்லை. ஆனால், இந்தியாவில் இப்போது அணுமின் நிலையங்களை அதிக எண்ணிக்கையில் அமைக்க அரசு திட்டமிட்டு வருகிறது.இவ்வாறு அணுசக்திக்கு எதிரான தேசிய யாத்திரைக் குழுவில் இடம்பெற்றுள்ள மும்பை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி கோல்úஸ பாட்டீல் கூறியுள்ளார்."நாட்டின் அனைத்து அணுமின் நிலையங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாகச் செய்துள்ள போதிலும் இந்த இடங்களில் நிலநடுக்கம் நிகழாது என்று கூறிவிட முடியாது' என்று தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் துணைத்தலைவர் சகிதர் ரெட்டி பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்."மழை வெள்ளம், நிலநடுக்கம் போன்ற இயற்கைப் பேரழிவுகளால் பாதிக்கப்படும் மக்களுக்கே அரசினால் முழுமையாக உதவி செய்ய முடியவில்லை. அணு உலைகளில் விபத்துகள் ஏற்படுமானால் என்ன செய்ய முடியும்?' என்று மக்கள் அஞ்சுவதில் நியாயம் இல்லாமல் இல்லை. 1984-ம் ஆண்டு போபால் நச்சுவாயு கசிவினால் ஏற்பட்ட இழப்பையே இன்றுவரை ஈடுசெய்ய முடியவில்லையே!பூமி தோன்றி கடல் தோன்றியபோதே தோன்றிய மூத்த இனம் காப்பாற்றப்பட வேண்டாமா? மீனவர்கள் கடல்தாயின் பிள்ளைகள். அந்தக் கடலோர மக்களை கடலோரக் கிராமங்களிலிருந்து விரட்டுவதற்குச் சட்டங்கள் போட்டது போதாதா? இப்போது அணுமின் நிலையங்கள் அமைத்தும் அவர்களை அழிக்க வேண்டுமா? இந்திய நாடு வல்லரசாக வளர்வதற்கு ஏழை எளிய மக்கள்தாம் தியாகம் செய்ய வேண்டுமா?இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படும்போதெல்லாம் தமிழ்நாட்டு முதலமைச்சர் தில்லிக்குக் கடிதம் எழுதுவதும் இந்திய வெளியுறவுச் செயலர் இலங்கைக்குப் போகும் போதெல்லாம் தமிழக மீனவர் பிரச்னை பற்றியே பேசப்போவதாகக் கூறப்படுவதும் வழக்கமாகி விட்டது.கடந்த அக்டோபர் 8-ம் நாள் மூன்று நாள் பயணமாக இலங்கை சென்ற இந்திய வெளியுறவுச் செயலர் ரஞ்சன் மத்தாய் இடையில் சென்னை வந்து முதல்வரைச் சந்தித்தார். அப்போது தமிழ்நாட்டில் மீனவர்கள் மீது இலங்கை அரசின் தாக்குதலைத் தொகுத்து புள்ளிவிவரங்களுடன் தெரிவித்தார். தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் நடத்தும் தாக்குதலை தேசியப் பிரச்னையாகக் கொள்ள வேண்டும் என்றும், இந்தியாவுக்கு எதிரான இலங்கை அரசின் தாக்குதல்களாகக் கருதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். என்ன நடந்தது? இப்போது கூடங்குளம் அணுஉலை பிரச்னை பற்றிப் பேச்சுவார்த்தை நடத்த வந்த பிரதமர் அலுவலக இணையமைச்சர் நாராயணசாமி கூறுகிறார், இந்திய மீனவர்களுக்கு இனி பாதிப்பு நேர்ந்தால், மத்திய அரசு வேடிக்கை பார்க்காதாம்.""இலங்கை கடற்படையால் இந்திய மீனவர்கள் தாக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என மாலத்தீவில் சார்க் மாநாட்டின்போது அந்த நாட்டு அதிபர் ராஜபட்சவிடம் பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தியுள்ளார். இந்திய மீனவர்களுக்கு இனி பாதிப்பு நேர்ந்தால் மத்திய அரசு வேடிக்கை பார்க்காது'' என்று நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.இவரது உறுதிமொழிக்குப் பிறகும் நவம்பர் 15-ம் தேதி ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை தாக்குதல் நடத்தியதாகத் தெரியவந்துள்ளது. தமிழக முதல்வர் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதம் இதை உறுதி செய்கிறது. மீனவர் மீதான தாக்குதல் சம்பவத்தில் இலங்கை அரசு இரட்டை நிலையைக் கையாள்கிறது என்று கூறியுள்ளார். இந்திய அரசும் அதே இரட்டை நிலையைத்தான் கடைப்பிடிப்பதாக மீனவர்கள் கூறுகின்றனர். இந்தியாவின் கடற்கரையும் கடல் வளங்களும் மதிப்பு மிகுந்தவை. பல்லாயிரம் ஆண்டுகளாக மீனவர் வாழ்வும் வரலாறும் கடலோடும் கடற்கரையோடும் பின்னிப் பிணைந்தவை. அவர்களை அவ்விடங்களிலிருந்து வெளியேற்றும் நோக்கத்தோடு கொண்டுவரப்பட்ட கடற்கரை ஒழுங்கு மண்டல அறிவிப்பாணை-2010-ஐ எதிர்த்து பல போராட்டங்களை நடத்தியுள்ளனர். இப்போது கூடங்குளத்திலும் தங்கள் வாழ்வு மற்றும் வாழ்வாதாரங்களுக்காகவே போராடி வருகின்றனர்.இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் இந்தியக் குடிமகனுக்கு வழங்கியுள்ள உரிமைகள் மீனவ மக்களுக்கும் உண்டு. அவர்கள் கேட்பது மாட மாளிகைகள் அல்ல; கூடகோபுரங்கள் அல்ல; வாழ்வும் வாழ்வாதாரங்களுமே. இதை மறுப்பது நியாயமாகுமா? என்று முடியும் இந்த மீனவர் சோகம்?
கருத்துகள்

உண்மையில் எதற்காக தாக்குதல் நடக்கிறது? மீன் பிடிக்க கூடாது என்பதற்காகவா? அல்லது மீன் பிடிக்கும் சாக்கில் கடத்தல் செய்வதை தடுக்கவா? உண்மையை மாநில அரசும்,மதிய அரசும் மக்களிடம் கூறவேண்டும். எல்லோரும் கடத்தலில் ஈடுபடுகின்றவர்களா?
By Tamilian
11/18/2011 8:58:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

வெள்ளி, 7 அக்டோபர், 2011

முறையாகுமா இந்த மொழிக்கலப்பு?

முறையாகுமா இந்த மொழிக்கலப்பு?

First Published : 30 Sep 2011 03:53:47 AM IST


வேளாண்மையில் கலப்புமுறை விளைச்சல் என்பது வரவேற்கத்தக்கதாகலாம். கலப்புத் திருமணங்களும் பாராட்டத்தக்கவையே.  ஆனால், மொழிக்கலப்பு அத்தகையதாகாது. தமிழில் பிறமொழிக் கலப்பு, காலம்காலமாக நடந்து வருவதுதான். ஆனால், இப்போது தமிழில் ஆங்கிலம் கலப்பதுபோல் இவ்வளவு கேவலமாக முன்னெப்போதும் நடந்ததில்லை.  ஆங்கிலத்தில் பேசுவது நாகரிகம்; படித்தவர்க்கு அடையாளம் என்றே இப்போதும் பலர் கருதுகிறார்கள்.  பாதித்தமிழ் மீதி ஆங்கிலம், ஆங்கிலத்தில் தொடங்கித் தமிழில் முடிப்பது, தமிழில் தொடங்கி இடைஇடையே ஆங்கிலச் சொற்களைக் கலப்பது என்று பல போக்கில் தமிழர்கள் பேசி வருகிறார்கள்.  சோறு என்று சொல்லவும் தமிழன் வெட்கப்படுகிறான். தயிர்ச்சோற்றை "கர்டு ரைஸ்' என்பான்; இன்னும் லைம் ரைஸ், ஒயிட் ரைஸ் இப்படியே நீளும்.  பள்ளிப் பிள்ளைகள் வீட்டிலிருந்து புறப்படும்போது "அம்மா போயிட்டு வர்றேன்' என்று சொல்லுவதைப் பெற்றோரே இழிவாகக் கருதுகிறார்கள். "மம்மி பை பை', "டாடி பை பை' என்று சொல்லப் பழக்கிவிடுகிறார்கள்.  மதிய உணவு என்பதைக்கூட "லஞ்ச்' என்று சொல்லக் கட்டாயப்படுத்துகிறார்கள். யாரும் இப்போது வீட்டிலிருந்து விடைபெறும்போது "போய் வருகிறேன்' "என்ன வரட்டுமா?' என்று சொல்லுவதில்லை. எல்லோரும் "டாட்டா, பைபை'தான்.  "ஆங்கிலத்தில் படித்தால் மட்டுமே அறிவு வளரும்' என்ற புதிய மூடநம்பிக்கை நாட்டில் பரவிக் கிடக்கிறது. அதனால் ஆங்கில வழிப் பள்ளிகளில் சேர்த்து விடுவதோடு, வீட்டிலும் ஆங்கிலம் பேசு எனப் பிள்ளைகளை ஊக்கப்படுத்துகிறார்கள்.  தமிழ்வழிப் பள்ளிகளில் படித்தவர்கள் தாம் நம் குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாம், மயில்சாமி அண்ணாதுரை போன்றவர் என்பதை மறந்துவிடுகிறார்கள்.  வடக்கே வாழ்பவர்கள், நாம் அவர்களைச் சந்திக்கும்போது நமக்கு இந்தி தெரியாது என்று தெரிந்தும் நம்மோடு இந்தியில்தான் பேசுகிறார்கள்.  நாம் உடனே, "இந்தி மாலும் நகி' என்று சொல்லிவிட்டு ஆங்கிலத்தில் பேசுகிறோம்.  அப்போதும் அவர்கள் இந்தியில்தான் பேசுகிறார்கள். அவர்களுக்கு ஆங்கிலம் தெரியாது என்று நினைத்து விடாதீர்கள்; தெரிகிறது, நன்றாகவே ஆங்கிலம் கற்றிருக்கிறார்கள்.  ஆனாலும், நம்மோடு ஆங்கிலத்தில் பேச மறுக்கிறார்கள். "நீங்கள் ஏன் இந்தி படிக்கவில்லை?' என்று நம்மைக் கேட்கிறார்கள். நம்மை எப்படியாவது இந்தி பயிலச் செய்ய வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார்கள். இச்செய்தி பட்டறிந்து உணர்ந்தது. நமக்கு (தமிழர்களுக்கு) ஏன் இந்தப் பற்று இல்லை?  நம்முடைய காட்சி ஊடகங்களில் இசை, நாட்டியம், உரையாடல், நகைச்சுவை, சந்திப்பு, திரைப்படம் என்று எந்தப் பொருளில் நிகழ்ச்சி நடந்தாலும், நிகழ்ச்சித் தொகுப்பாளர் - வருணனையாளர் அவருடன் உரையாடும் விருந்தினர், நடுவர்கள், பங்கேற்பவர்கள் - இப்படி யாராக இருந்தாலும் தமிழில் பேசுகிறார்களா?  தமிழில் தொடங்குவார்கள், பிறகு கடகடவென என்ன சொல்லுகிறார்கள் என்பதே நமக்குப் புரியாதவாறு ஆங்கிலத்தில் கொட்டி முழக்குகிறார்கள். பிறமொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர் பேசினால், ஏற்றுக்கொள்ளலாம். தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவரும் அப்படிப் பேசும்போது எரிச்சல் ஏற்படுகிறது.  நமது திரைப்படங்களும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் தமிழை வளர்க்க வேண்டும் என்று நாம் கோரவில்லை. தமிழைச் சிதைக்காதீர்கள் - இருப்பதையும் கெடுக்காதீர்கள் என்றே வேண்டுகிறோம்.  "நதியில் விளையாடிக் கொடியில் தலைசீவி நடந்த இளந்தென்றலே' "அமுதும் தேனும் எதற்கு நீ அருகினில் இருக்கையிலே' என்றெல்லாம் கேட்ட நம் காதுகளில், "ஜாலிலோ ஜிம்கானா,டடடா டடடா டட்டாடா, மேலே பறக்கும் ராக்கெட்டு மின்னல் பூச்சி ஜாக்கெட்டு...' போன்ற பாடல்கள் தேளாய் வந்து கொட்டின.  இப்போது கருநாகப் பாம்பே வந்து கடிக்கிறது.  ""ஹீ ஈஸ் த ஹீரோ ஹீ ஈஸ் த ஹீரோ காக்கவந்த பார்ட்டி யாரோ?'' இது ஒரு தமிழ்ப்பாட்டின் தொடக்கம்.  ஆத்திச்சூடி.. ஆத்திச்சூடி... யு.எ. ஆத்திச்சூடி.... என்று தொடங்கித் தமிழைக் கேவலப்படுத்தும் பலமொழிக் கலப்பு.  "யூ வண்ட் டு சீல்மை கிஸ்  பாய் யூ கான்ட் டச் திஸ்  எவரிபடி ஹைப்நோடிக் ஹைப்நோடிக் சூப்பர் சானிக் சூப்பர் ஸ்டார் கான்ட் கான்ட் கான்ட் கெட் திஸ்''  இப்படிப் போகிறது தமிழ்ப்பட பாட்டொன்று. சூழ்நிலைக்கேற்ப நாங்கள் எழுதுகிறோம் என்பார்கள். பின்னர் ஏன் பாட்டைத் தமிழில் தொடர வேண்டும்?  ""பூஜ்யம் என்னோடு  பூவாசம் இன்றோடு  மின்மினிகள் விண்ணோடு  மின்னல்கள் கண்ணோடு''  ஏனிந்தக் கலப்படம்? இங்கே ஒருசில சோறுகள் சிதறப்பட்டன. பானைச்சோறு அப்படியே இருக்கிறது. கொட்டிக் காட்ட இடமில்லை.  திரைப்படங்களுக்குத் தமிழில் பெயர் வைத்தால் மானியம் கிட்டும் என்றார்கள். அதனால், ஆங்கிலத் தலைப்புகள் மாறித் தமிழில் பல வந்தன. அவற்றுள்ளும் பல கேலிக்கு இடமானவை. பொருளில்லாத ஓரெழுத்தில் ஒருபடத் தலைப்பு. ஏமாற்று வித்தைகளும், "அடாவடித் தலைப்புகளும் இடம்பெற்றன. நல்ல அழகிய படப்பெயர்களும் வந்தன.  நம் தமிழ் ஏடுகள் - பத்திரிகைகள் பல அவற்றின் பெயரோடு ஆங்கில ஒட்டுச் சொற்களுடன் வெளிவருகின்றன. பெயர்களை நாம் வெளிச்சம் போட்டுக் காட்டாமலே நம் அன்பர்களுக்கு அவை எவை எனப் புரியும்.  பத்திரிகை உள்ளே பல செய்திகள் ஆங்கிலத் தலைப்புகளில் வருகின்றன. அப்படி என்ன மயக்கம்? எல்லாம் "வணிக உத்திகள்' என்பார்கள்.  ஃகாபி வித்...., இன்டர்வியூ, ஹிட்சாங்ஸ், ஓல்டு ஈஸ் கோல்டு, பீச் கேர்ள்ஸ், மியூசிக் மியூசிக், சூப்பர் சிங்கர், "ஹோம் ஹாப்பி ஹோம்' இப்படி இன்னும் எத்தனை எத்தனையோ தலைப்புகளில் நம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்.  இவை தவிர பிறமொழித் தொடர்கள் தமிழாக்கம் செய்யப்பட்டு, "கன்னா பின்னா' என்று தமிழில் வந்துகொண்டுள்ளன. யார் கேட்பது? யாரிடம் முறையிடுவது? "தமிழன் தமிழன்' என்று பேசுவது வீண்பேச்சு.  தன் அன்னை ஊட்டி வளர்த்த மொழி - அமுதம் அனைய மொழியைச் சிதைத்தும் சிதைவதைக் கண்டும் வாளா இருக்கிறோமே! நாம் தமிழர் என்பதில் நமக்குப் பெருமை இருக்கிறதா?  இப்படியெல்லாம் சிந்தித்தால் மொழி வெறி என்று தூற்றுவது முறையா? ஊர் உலகத்தைச் சுற்றிப் பாருங்கள். சுற்றி வந்தவர்களைக் கேளுங்கள். எங்கும் இத்தகைய கொடுமை உலக நாடுகளில் இல்லை. இல்லவே இல்லை.  நம்முடைய விழுமியங்கள் பாழாகின்றன; பண்பாடு பறிபோகிறது; ஒழுக்கம் கெட்டழிகிறது. மொழி சித்திரவதை செய்யப்படுகிறது.  காட்சிகளால், கருத்துகளால், உடைகளால், உரையாடல்களால் அனைத்தாலும் கெட்டுக் கலப்புச் சாதி ஆனதோ தமிழ்ச்சாதி என்று அரற்ற வேண்டியுள்ளது.  காலத்தின் போக்கை அறியாமல் பழங்கதை பேசுகிறோம் என்று கருத வேண்டாம். எத்தனை காலம் மாறினாலும் எத்துணை மாற்றங்கள் ஏற்பட்டாலும் மொழியும் பண்பாடும் சீரழிய நாம் அடைகிற வளர்ச்சி உண்மையில் வளர்ச்சியாகாது; அது வீக்கம், நோய்.  "ஓகே ஓகே', "வெரி நைஸ்', "ஒண்டர்ஃபுல்', "சூப்பர்', "தாங்யூ', "ஃபென்டாஸ்டிக்', "ஷியூர் ஷியூர்' என்றெல்லாம் நம் பேச்சில் இணைந்து வரும் சொற்களால் நாம் உயர்ந்துவிட மாட்டோம். நம் செயல்களே நம்மை உயர்த்துகின்றன.  உலகம் போகிறபோக்கில் நாமும் போக வேண்டும் என்பார்கள். செம்மறி ஆட்டுக் கூட்டமாய்ப் போக வேண்டுமா? சிந்தனையுள்ள மனிதனாக வாழ வேண்டுமா?   
கருத்துகள்

It is the DMK which abloished Hindi as a third language in the school curriculum in the late 60s, depriving the students of the opportunity to learn the language. Whether one likes it or not, it would be good for the country to have a common Indian language instead of English. This was done to promote Tamil, it was said. Has it led to any growth in Tamil? Not at all. Even the mother tongue in Tamil Nadu is not properly taught, in govt schools because of the inefficiency of the teachers, and in private schools because of their 'contempt' for Tamil.
By S.Murthy
10/4/2011 9:27:00 PM
தமிழ் அழிந்தது ஆங்கில கலப்பாலில்லை. கடந்த ௫௦ ஆண்டுகளாக தமிழ்நாட்டை ஆள்வதாககூறிக்கொண்டு கோவில் மற்றும் நாட்டின் சொத்தையெல்லாம் கொள்ளையடிக்கின்ற கும்பல்தான் தமிழை குழி தோண்டி புதைக்க பார்கின்றது. இது நம் எல்லோருக்கும் தெரியும் ஆனால் தமிழ் கூறும் நல நெஞ்சங்கள் இதை ஒப்புக்கொள்ள மறுக்கின்றன. ஏனென்று பார்த்தால், ஐம்பது வருடங்களாக தமிழகத்தையாட்டிப்படைக்கும் கும்பல்தான் பரமான எதிர்ப்பென்ற பேரில் ஆட்சியைப்பிடித்து மொழியையும் நாட்டையும் குட்டிச்சுவராக்கியுள்ளது. இந்த இன எதிர்ப்பு வெறி பிற ஜாதிக்காரர்களுக்கு சாதகமகிருக்குமென்று நம்பியதால், அவர்களை யாரும் குறைகூற முன் வருவதில்லை. முதலில், நல்ல தமிழ் தெரிந்த ஆசிரியர்களிருக்கிரார்களா? முதலில் அதை சரி செய்ய வேண்டும். பின் கழக மற்றும் சினிமா தமிழ்களை களைந்து சுத்த தமிழ் கற்றுகொடுக்கவேண்டும். இப்பொழுதெல்லாம் பெண்களே, ஆப்பு என்ற வார்த்தையை சர்வசாதாரணமாக பயன் படுத்துகிறார்கள். இதெல்லாம் சினிமாவால் வந்த வினை.
By C narayanaswamy
10/3/2011 9:13:00 PM
It is Indian TV and Indian Films who encourage this kind of speach. Sri Lankan radio/TV does not do this. The problem is they cant speak English correctly either. Even their shop names are mixed with English.
By Rohini
10/3/2011 12:22:00 AM
நல்லதொரு பதிவு ஐயா! நாம் தமிழ் உலகம் இதை சிறிது கேட்குமா? இதே இந்த தமிழர்கள் தமிழ் மொழி கலப்பு போன்று அவர்கள் அதிகம் "நேசிக்கும்" ஆங்கிலத்தில் தமிழை கலந்து பேசுவார்கள இல்லை அதை எந்த ஆங்கிலயரவது ஏற்று கொள்வார்களா? நாம் தமிழ் மொழி அழிகின்றது நம் கண் முன். அமெரிக்க கனடா போன்ற ஊர்களில் "வராற்று சிறப்பு மிக்க" (historic) என்று அதிக ஊர்களை சொல்வதுண்டு.. அதன் வரலாறு என்ன என்றல் 100-200 ஆண்டுகள் மட்டுமே! ஆயிரம் ஆயிரம் ஆண்டு சிறப்பு மிக தமிழின் நிலை ஐயோ பாவம்! கேட்க ஆளில்லை கேடுக்க அனைவரும் முயற்சி செய்கின்றனர்!
By தமிழரசன்
10/2/2011 5:47:00 PM
அற்புதம்! நான் தவறாமல் கவிக்கோவின் கட்டுரைகளை தினமணி கதிரில் படித்து வருகிறேன் செம்மொழி மாநாடு முடிந்த பிறகு எங்கள் மத்திய அரசு காப்பீட்டு அலுவலகத்தில் தமிழில் (வருகைபதிவேடு) கையெழுத்திட ஆரம்பித்தோம். நான் கட்டுரைகள் எழுதும்போது (சங்க பத்திரிக்கையில் ) முடிந்த வரை சுத்தமான தமிழில் எழுதிகிறேன். எழுத்திலும் பேச்சிலும் அயல் மொழி கலப்பின்றி முயற்சிக்க வேண்டும். தமிழர்கள் நாம் வளர்க்காமல் வேறு யார் தமிழை வளர்ப்பார்கள்? வாழ்த்துக்கள் கவிக்கோவுக்கு.
By கி. பெ. நெல்சன் கோவை
10/1/2011 7:42:00 PM
இதற்கு காரணம் பெற்றோர்கள்தான். அவர்கள் தம் மகவை மொழிப்பற்றுடன் வளர்க்க வேண்டும்.நிறைய குழந்தைகள் ,பெற்றோரால் தொழில் சார்ந்த கல்வி கற்க ஊக்குவிக்க படுகிறார்கள். தாய் மொழியே படிக்காமலும் வளர்கிறார்கள்.தமிழ் இலக்கியம்,அதன் உயர்வு போன்றவற்றை கற்காமல் வளர்ந்துவிடுகிறார்கள்.ஒரு கல்கியோ,ஜெயகாந்தனோ, மு வ வோ,கி வா ஜ வோ, பாரதியோ தோன்ரவேண்டாமா? சினிமா பாடல் எப்படி எழுதினால் என்ன? அதற்கு தமிழ் என்று பெயர் சொல்லி வரி விலக்கு அளிப்பார்கள்.
By Tamilian
9/30/2011 12:42:00 PM
வருங்காலத்தில் தமிழ் மறந்து போகும் இது போன்ற கட்டுரைகள் வேண்டும்
By sathiyavahisan
9/30/2011 7:27:00 AM
"தமிழ் வாழ்!க தமிழ் வாழ்க!"- பேசிப், பேசியே,ஊருக்கு மட்டும் , நியாயம் பேசிய, உத்தமர்களின் விளைவுகளே இவைகள்!புலியை பார்த்து ,பூனை சூடு போட்டுகொண்டதன் நீட்சி இவைகள்!மொழிகளை கற்றுக்கொள்ள வாய்ப்பளித்தால், சிலரின் இரட்டை வேடங்கள் புரிந்து, எனது தாய் மொழி தமிழ், என்று உணர்ந்து திருந்தினால் மட்டுமே, தமிழை வளர்க்க முடியும்!தனிப்பட்ட எனது அனுபவத்தில், தமிழ் நாட்டில் இருக்கிற ,ஏனைய மொழியை, தாய் மொழியாகக் கொண்டவர்களே, தமிழ் வளர்வதில் ஆசை ஆசையாய் செயல் படுகிறார்கள்!தெலுங்கை தாய் மொழியாகக் கொண்ட ஒரு பாதிரியார், அழகான தமிழில் மட்டுமே பேச வேண்டும் என்று வலியுறுத்தினார் அன்று!என்னால் மறக்க முடியாத உண்மைத்தமிழர் அவர்!மெட்ரிக் பள்ளிகள் இன்னும் , இன்னும் கூட ஹிந்தி கற்றுக் கொடுக்கின்றனர்.முன்பை விட தமிழ் நன்றாகவே பேசுவதை, எழுதுவதை பார்க்க முடிகிறது!தமிழர்களே!!பிற மொழிகளை புரிந்து கொள்ளுங்கள் !தமிழை வளர்ப்போருக்கு ஆதரவு தாருங்கள்!!பேசுவோரை புறம் தள்ளுங்கள்!!!
By பி.ஸ்தனிஸ்லாஸ்
9/30/2011 6:53:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

சனி, 3 செப்டம்பர், 2011

article about kalaignar stand on mercy petition: எல்லாப் புகழும் உங்களுக்கே!


பதவியில் இருக்கும் பொழுது  இந்தியனாகவும் இல்லாத பொழுது தமிழனாகவும் காட்டிக் கொள்வதால் ஏற்படும் நிலையே இது. எனவே, பதவி நலன்களுக்காகக் காங்கிரசிற்கு அடிமையாகும் பொழுது தமிழ், தமிழன், உரிமை, என்பனவெல்லாம் காற்றில் பறப்பது இயல்புதானே! உயர்நீதிமன்றமே புதிய விண்ணப்பத்தை வாங்கி ஆய்வு செய்ய அறிவுறுத்தியும்  விடுதலைக்குப் பரிந்துரைக்க மறுத்தவரிடம் மனுவை அனுப்புங்கள் என்று சொல்லாதது ஏன் என்பதுதான் பொருந்தாத கேள்வியாக உள்ளது. பிற அனைவரும் அறிந்ததுதான். எனினும் இதைப்படித்துக் கழக உடன் பிறப்புகள் மகிழ்ச்சி அடைவார்கள் என்பது உறுதி. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி!/

எல்லாப் புகழும் உங்களுக்கே!

First Published : 03 Sep 2011 01:38:47 AM IST


11 ஆண்டுகளாகத் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படாததற்கு திமுகதான் காரணம்' - ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்றவர்களில் நளினிக்கு மட்டும் தண்டனை குறைப்பு செய்து மற்ற மனுக்களை நிராகரிக்கலாம் என்று 2000-ம் ஆண்டில் திமுக அரசுதான் முடிவு எடுத்தது என்று சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியதற்கு, அந்நாளின் முதல்வர் என்ற முறையில் திமுக தலைவர் கருணாநிதி அளித்துள்ள பதில்தான் இது.இந்தப் பதிலை எப்படி எடுத்துக்கொள்வது என்று நமக்குத் தெரியவில்லை. ஏன் இவ்வாறான பதில்களால் முன்னாள் முதல்வரும் திமுக தலைவரும் தமிழகத்தின் மூத்த அரசியல்வாதியுமான கருணாநிதி தன்னைத் தானே ஏளனப் பொருளாக்கிக் கொள்கிறார் என்பது புரியவில்லை.நளினிக்குத் தண்டனை குறைப்பு செய்யப் பரிந்துரைத்த திமுக அரசு, முருகன் சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கும் தண்டனையைக் குறைத்திருந்தால் இத்தனை சிக்கல்கள் இருந்திருக்காதே என்று ஜெயலலிதா சொன்னால், தான் ஏன் அந்த நேரத்தில் அந்த மூன்று பேரின் மனுக்களுக்கு முக்கியத்துவம் தரவில்லை என்றும், ஏன் நளினிக்கு மட்டும் தண்டனையைக் குறைக்கக் கேட்டுக்கொண்டோம் என்றும் விளக்கம் தர வேண்டிய முன்னாள் முதல்வர், ஜெயலலிதாவின் பதிலை தனக்கான நியாயப்படுத்தலாக மாற்றுதல் அவருக்குப் பெருமை சேர்க்காமல், மேலும் சிக்கலைத்தான் உருவாக்குகிறது. அதுமட்டுமல்ல, இன்று இந்த மூவரின் தூக்குத் தண்டனையும் 8 வாரங்களுக்கு நிறுத்தி வைத்து இடைக்காலத் தடை கிடைக்கக் காரணமும் நான்தான் என்று தனக்கே உரித்தான பாணியில் சொல்லாமல் சொல்கிறார் கருணாநிதி.அவரது அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: "மத்திய அரசுக்கு அந்தக் கருணை மனுக்களை அனுப்பி வைத்ததன் காரணமாகத்தான் 11 ஆண்டுகளாக அவர்களது தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படவில்லை என்பதை இதன் மூலம் முதல்வர் ஜெயலலிதா வெளிப்படுத்தியிருக்கிறார். 11 ஆண்டுகளாக குடியரசுத் தலைவர் முடிவெடுக்காமல் காலம் தாழ்த்தியதை ஒரு காரணமாக நீதிமன்றத்தில் வழக்குரைஞர்கள் எடுத்துக்கூறி, தண்டனையை தற்போது ஒத்தி வைத்திருக்கிறார்கள்'எல்லாப் புகழும் கருணாநிதிக்கே கிடைக்கட்டும். அதில் யாருக்கும் எந்தவித மனக்காய்ச்சலும் கிடையாது. அவரிடம் இரண்டே கேள்விகள் மட்டும் கேட்கத் தோன்றுகிறது. முதல் கேள்வி: குடியரசுத் தலைவர் போட்டிக்கு காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக பிரதிபா பாட்டீல் அறிவிக்கப்பட்ட நேரத்தில், அவருக்கு எதிர்ப்பான செய்திகள் வெளியாகிக்கொண்டிருந்த வேளையில், குடியரசுத் தலைவராகப் போட்டியிடும் முதல் பெண் வேட்பாளரை தமிழகத்துக்கு அழைத்து வந்து, சென்னையே அதிரும் வகையில் மாபெரும் பேரணி நடத்தியவர் அன்றைய முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதி.குடியரசுத் தலைவராக பிரதிபா பாட்டீல் பொறுப்பேற்ற பிறகு, கருணை மனுவை ஏற்று தண்டனையைக் குறைக்கும்படி அன்றைய முதல்வர் கருணாநிதி தொலைபேசியில் சொல்லியிருந்தாலும் போதுமே! தனக்கு விழா எடுத்த திமுக தலைவர் கருணாநிதிக்குப் பெருமை சேர்க்கவாகிலும் கருணை கொண்டிருப்பாரே குடியரசுத் தலைவர். மிக எளிமையாக முடிந்திருக்க வேண்டிய விவகாரம் அல்லவா? ஏன் இதை அவர் செய்யவில்லை? இந்தப் புகழைப் பெறும் அனைத்து வாய்ப்பும் அதிகாரமும் இருந்தும் ஏன் பயன்படுத்தவில்லை?இப்போது தமிழக அரசு நிறைவேற்றியுள்ள, இந்த மூவரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்து, ஆயுள் தண்டனையாக மாற்ற வேண்டும் என்ற தீர்மானம் குடியரசுத் தலைவருக்குத்தான் முன்வைக்கப்பட்டுள்ளது. ஆளுநருக்கு அல்ல. ஆகவே, இப்போதாகிலும், விழா எடுத்த நன்றிக்கடனுக்காக கருணை வழங்கும்படி குடியரசுத் தலைவரை கருணாநிதி நேரில் சந்தித்துக் கேட்கலாமே. கேட்பாரா?மத்திய அமைச்சரவையில் தனது குடும்பத்தினர் இடம்பிடிக்க, தங்களுக்கு வேண்டிய இலாகாக்கள் ஒதுக்கித் தரப்பட தள்ளாத வயதிலும் தில்லிக்குச் சென்ற முன்னாள் முதல்வர், இந்த மூன்று பேருக்கும் கருணை கேட்டுச் செல்வாரா?இரண்டாவது கேள்வி: தூக்குத் தண்டனை பெற்ற இடதுசாரித் தோழர்களில் ஒருவரான தியாகு, "தண்டனையைக் குறைக்குமாறு நீதிபதியிடம் விண்ணப்பித்தபோது, தமிழக அரசிடம் ஆளுநர் கருத்து கேட்டார். அப்போது கருணாநிதி அமைச்சரவையைக் கூட்டி தண்டனையைக் குறைக்கப் பரிந்துரைத்தார். அதன்படி எங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனை ஆயுள்தண்டனையாகக் குறைக்கப்பட்டது' என்று கூறியுள்ளார். தூக்குத் தண்டனை பெற்ற பெண்ணாடம் புலவர் கலியபெருமாள் மகன், தனது தந்தைக்கு தண்டனை குறைப்புக்காக ஒரு லட்சம் பேரிடம் கையெழுத்து இயக்கம் நடத்தி, ஆளுநருக்கு மனு அனுப்பினார். அந்த மனுவை அன்றைய முதல்வர் கருணாநிதிக்கு ஆளுநர் அனுப்பி வைத்தார். அது குறித்து அமைச்சரவை விவாதித்து தண்டனையைக் குறைக்க ஆளுநருக்குப் பரிந்துரைத்தது.............என்றெல்லாம் இப்போது சொல்கிறீர்களே, நீங்கள் முதல்வராகப் பதவி வகித்த கடந்த 5 ஆண்டுகளில் ஒரு முறையாகிலும் "இப்படியொரு மனுவை ஆளுநருக்கு அனுப்புங்கள், அவர் எனக்கு அனுப்புவார், நான் பரிந்துரை செய்து தண்டனையைக் குறைக்கிறேன்' என்று ஒரு கோடி காட்டக்கூட இல்லையே, அது ஏன்? அல்லது தன்னிச்சையாக தமிழக அரசேகூட இதைப் பரிந்துரைத்திருக்கலாமே! வேலூர் மத்திய சிறையில், நிலப்பறிப்பு வழக்கில் கைதானவர்களைப் போய்ப் பார்க்கும் திமுக தலைவர்கள் இந்த மூன்று பேரையும் பார்த்துப் பேசியதுண்டா?ஆட்சி அதிகாரமும் வாய்ப்பும் இருந்தபோது இதை நீங்களே செய்திருந்தால் எத்தனை எளிமையாகப் பிரச்னை முடிந்திருக்கும்! "அப்சல் குருவுக்காக இதே தீர்மானத்தை ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை போட்டால் சும்மா இருப்பீர்களா?' என்று உமர் அப்துல்லா கேள்வி கேட்கும் நிலைமை உருவாகியிருக்காதே. இந்தியா முழுவதிலும் இது ஒரு பெரிய கெட்ட விவகாரம் போல திசை மாற்றப்படும் அவலம் நேர்ந்திருக்காதே.இன்று நீதிதேவனுக்கும் மயக்கம் தரும் சூழல் ஏற்பட்டிருக்கிறது என்றால், அதற்கும் நீங்கள்தானே காரணம். நீங்களே தண்டனைக் குறைப்பை செய்திருந்தால் இப்படியெல்லாம் கேள்விகள் எழுமா?எல்லாப் புகழும் உங்களுக்கே!

புதன், 3 ஆகஸ்ட், 2011

சென்ற பத்து ஆண்டுகளுக்கு முன்பு வேண்டும் என்றால் ஆங்கிலவழி படித்த அறிஞர்கள் வேப்பிலையின் சிறப்பை  வெளியிட்டு இருக்கலாம். ஆனால்,காலம் காலமாக நம் தமிழர்கள் வேப்பிலையின்சிறப்புகளை அறிந்துள்ளனர். அதற்கான பாடல்களும் உள்ளன. சித்த மருத்துவர்களிடம் கேட்டு அறிந்து கொள்க. 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

தூக்கத்திலிருந்து விழித்தெழ வேண்டும்

செவ்வாய், 2 ஆகஸ்ட், 2011

Awards for whom? விண்ணப்பித்து வாங்குவதா விருது?

கட்டுரையாளரின் நோக்கம் தற்பெருமை அடிப்படையிலானதே அன்றி உண்மையை உணர்த்த வேண்டும் என்பதாக இல்லை. சௌராட்டிரராக இருந்தும் சரியான தமிழ் ஒலிப்பில் நடிகர்களுக்கேற்றவாறு குரலை மாற்றி அமைத்தும் சிறப்பாக மாடிய சிறப்பிபற்குரியவர் சௌந்தரராசன். அவருக்கு விருது கொடுப்பதைக் கேலி பேசக்கூடாது. இன்னாருக்கு விருது வழங்கியிருக்கலாம் எனக் கூறலாமே தவிர, தகுதியானவர் பெற்ற விருதைக் கேள்விக்குறியாக்கக்கூடாது.  தமிழே தெரியாத கலைஞடர்களுக்குக் கடந்த ஆண்டுதான் விருதுகள் அளித்துள்ளார்களா? ஆண்டுதோறும்  அவிழ்த்துப் போட்டு ஆடிப் பண வரவிற்குக்காரணமான யாருக்கும்  விருதுகள் அளிக்கவில்லையா? தமிழக விருதுகள் என்றாலே பொதுவாகத் தமிழரல்லராதவருக்குக் கொடுப்பது வழக்கமாக இருக்கும் பொழுது ஏதோ புதிய செய்தி போல் கூறி உள்ளார். விருதுகள் பற்றிய உண்மையை உணர்த்த வேண்டியவர் தடுமாறித் திசை மாறி எழுதி உள்ளார். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

விண்ணப்பித்து வாங்குவதா விருது?

First Published : 02 Aug 2011 12:39:48 AM IST


தமிழக அரசு தரும் "நல்லாசிரியர்' விருது ஒவ்வோராண்டும் செப்டம்பர் 5-ம் தேதி டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளில் அவரது பெயராலேயே வழங்கப்படுகிறது. இந்த விருது மட்டுமன்றி, "கலைமாமணி' விருது பற்றிய செய்திகளும் வரும்போதெல்லாம் அட இவருக்கா இந்த விருது எனச் சிலர் பெயர்களைப் பார்த்து ஆச்சரியப்படுவதும், சில பெயர்களைப் பார்த்து அதிர்ச்சி அடைவதும் தொடர்கதையாகிவிட்டது.இதனால், இவ்விருதுகள் வரவர கேலிக்கூத்தாகி, விருது பெற்றவர்களுக்கும், ஏன் விருதுக்குமே கூட மரியாதையற்ற நிலை உருவாகி வருகிறது. அரசுகள் மாறலாம், கட்சி,அரசியல் மாறலாம். ஆனால், மரபுசார்ந்த சில மாண்புகளைக் காப்பாற்றும் பொறுப்பு நம் அனைவருக்குமே உண்டு.சொல்லப்போனால், திரைக் கலைஞருக்கும் ஆசிரியருக்கும் அரசு விருது தருவதுபோல, எடுத்துக்காட்டான உழவர்களுக்கும், பொதுநோக்கில் சேவைபுரியும் அரசு ஊழியர், மருத்துவருக்கும், புதுமைசெய்யும் இளைஞருக்கும் நல்லவற்றைத்தரும் இதழ் மற்றும் செய்தியாளர்களுக்கும் நமது அரசு விருது வழங்கி கெüரவம் செய்தால் பல துறைகளிலும் உற்சாக ஊற்றுக் கிளம்பும்.அரசியல் கடந்து, மக்களால் மதிக்கப்படும் சான்றோர், புனிதமான பணிகளில் முழுமையாகத் தம்மை ஈடுபடுத்திக் கொண்டோர் ஆகிய பெருமக்களை, அரசு, தானே முயன்று தகவல் சேகரித்து, தகுதியானவரை அடையாளம்கண்டு, அழைத்துப்பாராட்டி, விருதுபெறும் அவரது தகுதிகளை அனைவரும் அறியச்சொல்லி, அவரது பணிதொடர வாழ்த்தி, பின்னர் விருதுதந்து அனுப்ப வேண்டும்.ஆனால், இன்றுள்ள நிலை நல்லாசிரியரோ, கலைமாமணியோ அவரே தனது தகுதிகளை எடுத்து விளம்பி - அவற்றுக்கான சான்றுகளையும் இணைத்து - விண்ணப்பித்த பிறகு, சிபாரிசுகளின் அடிப்படையில் தேர்வுசெய்து, நூற்றுக்கணக்கானோரை வரிசையாக வரச்சொல்லி இலவச விநியோகம்போல, விருது கொடுத்து அனுப்புவதில் என்ன கெüரவம் இருக்கிறது? இதன் பலன்தான் என்ன?கடந்த ஆண்டு தமிழே தெரியாத நடிகை தமன்னாவுக்கும், ஸ்ரேயாவுக்கும் தமிழ்நாடு அரசு "கலைமாமணி' விருது தந்தது நகைப்புக்கு இடமானது. கலைக்கு மொழி கிடையாது எனும் பொத்தாம் பொதுவான விளக்கம் போதாது.மக்களை மகிழ்ச்சிப்படுத்துவதுதான் தகுதி என்றால், சர்க்கஸ் கோமாளிகளுக்கும் விருது கொடுத்து கௌரவிப்பதுதானே முறை? அவரும் கலைஞர்தானே? அவர்கள் படும்பாட்டுக்கு அங்கீகாரமாவது கிடைக்கும்.சிலர், பலருடைய சிபாரிசுகளால், தகுதியற்றவர்க்கும் வாரிவழங்கப்படும் விருதுகளால், சான்றோர் பலரும் விருதுகளைப் பார்த்து எள்ளி நகைப்பதும் சற்றே தள்ளி நடப்பதும் நடக்கும்தானே.முதலில் ஒரு கேள்வி: ""எனக்குக் கடன் வேண்டும், உரியமுறையில் திரும்பக் கட்டிவிடுவேன் என்று ஆசிரியர் அரசிடம் விண்ணப்பம் செய்யலாம், எனக்குப் பணி இடமாறுதல் வேண்டும், இந்த இடம் கிடைத்தால் நல்லது'' என்று அரசிடம் விண்ணப்பிக்கலாம். இவற்றை விட்டு, ""எனக்கு விருது கொடுங்கள்'' என்று சுயமரியாதை உள்ள யாரும் விண்ணப்பம் போடுவார்களா என்ன? ஏன் இது நமது அரசுகளுக்குப் புரிவதில்லை?இப்போது, இந்த விருதுகளைப்பெற விண்ணப்பம்போடும் பலரும், அதை எப்படியாவது வாங்கிவிடச் செய்யும் செலவு உள்ளிட்ட செயல்கள் விருதுகளே வெட்கப்படும்படியல்லவா உள்ளன.அப்படியானால், இதுவரை விருதுபெற்ற யாருக்கும் சுயமரியாதை கிடையாதா என்று கேள்வியைத் திருப்பினால், அப்படி எல்லோரையும் சொல்லிவிட முடியாது.பெரும்பாலோர் அப்படி இருந்தாலும், சுயமரியாதை உள்ள சிலர், தம் மீது அன்பு கொண்டவர்களின் தொந்தரவு தாங்காமல், கையெழுத்தைப் போட்டுக் கொடுத்துவிட்டு விருதுவாங்க மட்டுமே மேடைக்கு வந்ததும் உண்டு. இப்படியான விருதை அவர்கள் பெரிதுபடுத்தாமல் நண்பர்களின் மகிழ்ச்சிக்காக ஏற்றுக்கொள்கிறார்கள் என்றுதான் தோன்றுகிறது.அப்படியானவர்களைச் சந்திக்கும்போது, விருதாளர்களைத் தேர்வுசெய்யும் முறை மற்றும் விருதுவழங்கும் முறை சரியல்ல என்றே அவர்களும் மனம் கசந்து சொல்கிறார்கள்.இலக்கியத்தில் இன்றும் எல்லோராலும் மதிக்கப்படும் இந்திய அரசின் கெüரவம்மிகுந்த இலக்கிய விருதான சாகித்ய அகாதெமி விருதுக்கான தேர்வுக்குழுவில் நான் சிலமுறை இருந்திருக்கிறேன். அவர்கள் பல படிகளை வைத்திருக்கிறார்கள். முதல்கட்டத் தேர்வின்போது, பத்துப்பேர்களைக் கேட்பார்கள்.பரிந்துரைக்கான புத்தகங்களை அனுப்பி வைப்பதோடு, இந்த நூல்கள் தவிரவும், உங்கள் பார்û வயில்பட்ட விருதுக்குத் தகுதியான நூல் என்று கருதுவதை நீங்களே வாங்கிக்கொண்டு, அந்த நூலின் தகுதிகளை எங்களுக்குத் தெரிவியுங்கள், அந்த விலையை நாங்கள் தந்துவிடுவோம் என்றும் நடுவர்களுக்குத் தெரிவிக்கப்படும். அறிவிக்கப்படும்வரை எழுத்தாளருக்குத் தெரியாமலே இது நடக்கும். பலகட்டத் தேர்வு செய்தோரை அவர்களுக்குத் தெரிய வழியுமில்லை.இதேமுறையில்தான் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சார்பில் என் தலைமையிலான தேர்வுக்குழு, 1997-ம் ஆண்டின் சிறந்த நாவலாக "சாய்வு நாற்காலி' நாவலைத் தேர்வு செய்தது.மதுரை திருப்பரங்குன்றத்தில் பல்லாயிரம் மக்கள் கலந்துகொண்ட விழாவில் நானே என் கையால் அந்த விருதை எழுத்தாளர் தோப்பில் முகம்மது மீரானுக்கு வழங்கியபோது விருதுபெற்றவரைப் போலவே விருது தந்தவர்களும் மகிழ்ந்தோம். அதன்பின்னரே சாகித்ய அகாதெமி விருதும் அதே நாவலுக்காகக் கிடைத்ததை மதிப்புக்குரிய படைப்பாளியான அவரே கூறி மகிழ்ந்தார்.விருதுக்குத் தேர்வு செய்யும் குழுவை முதலில் சரியாகத் தேர்வு செய்துவிட்டால்எல்லாம் சரியாக நடக்க வழியுண்டு. இன்னொன்று விருதுபெறுவோரின் வயது சார்ந்தது.ஆசிரியப் பணியில் ஓய்வுபெற ஒன்றிரண்டு ஆண்டுகளே உள்ள அல்லது ஓய்வுபெற்றுப் பணி நீட்டிப்பில் உள்ளவர்களுக்கே பெரும்பாலும் நல்லாசிரியர் விருது என்று புகழ்பெற்றுவிட்ட மாநில அரசின் சிறந்த ஆசிரியருக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது விண்ணப்பத்தின் அடிப்படையில் தரப்படுகிறது.இந்த விருதை நாற்பது வயதுக்கும் முன்னதாகத் தர முடிந்தால், அவரது நல்லாசிரியப் பணியை மீதமுள்ள ஆண்டுகளில் பள்ளிக்குழந்தைகளும் பயன்பெற உதவியிருக்காதா, என்ன? நிச்சயம் அதற்கொரு பாதிப்பு அவர்களிடம் இருக்கும்.இதைவிட்டு முதியோர் உதவித்தொகைபோல விருதுகளை ஓய்வுபெறும் வயதில் விருது தந்து வீட்டுக்கு அனுப்புவதால், அவர் வேண்டுமானால், ஓய்வுபெற்ற மற்றும் விருதுபெற்ற என்று சாகும்வரை போட்டுக் கொள்ளலாமே தவிர, விருதுபெற்ற முதியவரால் சமுதாயத்துக்குப் பணிபுரிந்த துறைக்கு என்ன பயன் கிடைத்துவிடப் போகிறது?பொள்ளாச்சியில் இருந்துகொண்டு கவிஞர் சிற்பி, மூத்த படைப்பாளி ஒருவருக்கும் இளைய படைப்பாளி ஒருவருக்குமாக - இரு பிரிவுகளாக - விருதுடன் கூடிய ரொக்கப்பரிசுகளை ஆண்டுதோறும் தந்து கெüரவிப்பதுபோல தமிழக அரசும் கலைமாமணி, நல்லாசிரியர் விருதுகளை இளையவர்க்குத் தனியாகவும், மூத்தவர்க்குத் தனியாகவும்கூட வழங்கலாமே. சான்றோரைக் கெüரவிப்பது தேவை. அதைவிடவும் அவரது பணி விருதுபெற்ற பின்னரும் சமூகத்துக்கும் பள்ளிக் குழந்தைகளுக்கும் கிடைக்குமாறு அரசு யோசிக்க வேண்டாமா? இளைஞருக்குக் கொடுத்து, ஒருவேளை அவர் தவறு செய்துவிட்டால்... விருதுக்கு அவமரியாதையாகிவிடுமே என்றால், இப்போது விருதுபெற்றோரில் விருதுபெற்ற பிறகும் தவறுசெய்து தண்டனை பெற்றவர்களும் உண்டே!குற்றப்பட்டியலில் பெயர் இடம்பெற்ற ஒருவருக்கு மத்திய அரசு "பத்மஸ்ரீ' விருது தந்ததும் நடந்ததே. அதோடு, அரசு விருதுபெற்றோர் காலமாகும்போது, அந்தந்தத் துறைசார்ந்த அரசு உயர் அலுவலர்கள், ஏன் மாவட்ட ஆட்சியரேகூட வந்து அஞ்சலி செலுத்தி, அரசின் சார்பாக கெüரவிப்பது அல்லது அரசின் சார்பாக இரங்கல் செய்தி வெளியிடுவது, விருதுபெற்றவரின் குடும்பத்துக்கு மட்டுமல்ல, விருதுக்கே கெüரவமாக இருக்குமே. இதையும் அரசு யோசிக்கலாமே?பின்னணிப் பாடகர் டி.எம்.செüந்தர்ராஜனைத் தொடர்ந்து எஸ்.பி.பாலசுப்பிரமணியனும் "பத்மஸ்ரீ' விருது பெற்றுவிட்டார். பி. சுசிலா "பத்மபூஷண்' விருதே பெற்றுவிட்டார்.இவர்களின் தகுதியறிந்து அந்த விருதுகளைத் தந்த மத்திய அரசு, இவர்களுக்கு முன்னோடியான எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு ஏன் இன்னும் "பத்மஸ்ரீ' விருதுகூடத் தரவில்லை எனும் கேள்வி எழுவது நியாயம்தானே? பாவம், அவர் இந்த விருதுவாங்கும் தொழில்நுட்பம் தெரியாதவரோ என்னவோ?அரசு விழாக்களில் பாடப்படும் "நீராரும் கடலுடுத்த' எனும் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலுக்கு மட்டுமல்லாமல், பல்லாயிரம் திரைப்பாடல்களுக்கு இசையமைத்துத் தந்த இசைமேதை எம்.எஸ்.வி. போன்ற எண்ணற்ற மேதைகளும், நல்ல ஆசிரியர்களும் மட்டுமல்ல, விருதுக்குத் தகுதிவாய்ந்த உழவர்களும், அரசு ஊழியர்களும், மருத்துவர்களும், எடுத்துக்காட்டான இளைஞர்களும், இதழாளர் மற்றும் செய்தியாளர்களுமாய் பற்பலர் விளம்பர வெளிச்சமே இ ல்லாமல் தமிழ்நாடு முழுவதும் இருக்கிறார்கள்.விருதுகளுக்காக ஏங்கி அல்ல, விருதுகளை அலட்சியப்படுத்திவிட்டு தான் தரும் விருதுகளின் கெüரவத்தைக் காக்க வேண்டியது தமிழக அரசின் கடமை. அரசின் கடமையை உரிமையோடு எடுத்துச்சொல்ல வேண்டியது நம் கடமை.கட்டுரையாளர்: தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்க மாநிலத் துணைத் தலைவர்.

வெள்ளி, 29 ஜூலை, 2011

கல்வித்தளத்திலும் சேரிகளைக் கட்டமைக்க வேண்டா

பெரும்பாலோர் கருதுவதுபோல்  ஆதிதிராவிடர் விடுதிகளும் பிற்படுத்தப்பட்டோர் விடுதிகளும் அக் குறிப்பிட்ட வகுப்பாருக்கு மட்டும் உரியன என எண்ணிக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது..  இவ்விடுதிகள் அந்தந்த நலத் துறையால் நடத்தப்பட்டாலும் பிற பிரிவினரும் சேர்க்கப்படுவர். பெரும்பான்மையர் மட்டுமே ஆ.தி. அல்லது பி.வ. ஆக இருப்பர். எனினும் எல்லார்க்கும் தரமான கல்வியும் தரமான விடுதி வசதியும் கட்டணமின்றிக் கிடைக்க வகை செய்ய வேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

கல்வித்தளத்திலும்
சேரிகளை கட்டமைக்க வேண்டாம்

First Published : 29 Jul 2011 01:48:56 AM IST


தமிழக ஆதிதிராவிடர் நலத்துறையின்கீழ் உள்ள 1294 உண்டு உறைவிடப் பள்ளி விடுதிகளில், 1,059 விடுதிகள் அடிப்படை வசதிகளற்ற, மிக மோசமான நிலையில் இருப்பதை உறுதி செய்து கொண்ட இன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா, ரூ.76.33 கோடி செலவில் அவற்றை உடனடியாகப் புதுப்பித்து மேம்படுத்தும் நடவடிக்கையை எடுத்துள்ளார் என்பது பாராட்டுக்குரியது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைப் பள்ளிகளில் விரைவில் 1,200 புதிய ஆசிரியர்களை நியமனம் செய்ய இருப்பதாகவும் அரசு தெரிவித்துள்ளது. ஆயினும், இந்த நடவடிக்கைகள் ஆதிதிராவிட மாணவ, மாணவிகளுக்குத் தாற்காலிகமாக உதவலாமே தவிர நீடித்த, குன்றாத பயனைத் தருமா என்பது, இது காறும் உள்ள மோசமான வரலாற்றின் அடிப்படையில் எழும் நியாயமான ஐயப்பாடு. ஆதிதிராவிட நலப் பள்ளிகளும், வனப் பள்ளிகளும், அவற்றோடு இணைந்த உண்டு உறைவிட விடுதிகளும், சமூகத்தின் விளிம்பு நிலை மாணவ, மாணவிகளின் முன்னேற்றத்துக்குப் படிக்கற்களாக இல்லாமல் தடைக்கற்களாக இருப்பதுதான் கசப்பான உண்மை. சமூகத் தளத்தின் பிரதிபலிப்பாக, கல்வித் தளத்தில் வலுவாக எழுப்பப்பட்ட சேரிகளாக இவை நடைமுறையில் உள்ளன. ஆதிதிராவிட, பழங்குடியின சமூகங்களின் கல்வி மேம்பாட்டுக்கு, அரசியலமைப்புச் சட்டத்தின் 29(1),46,15(4), 350ஏ ஆகிய ஷரத்துக்கள் வாயிலாக உறுதி அளிக்கப்பட்டிருக்கிறது. இவ்வுண்மையை வசதியாக மறந்துவிட்டு அல்லது பொருள்படுத்தாமல், இது ஏதோ அவர்களுக்கு மக்கள் வரிப்பணத்தில் அரசு வழங்கும் சலுகை, இலவசம் என்று கருதும் ஆதிக்க மனநிலையே, ஆட்சியாளர்களிடமும், மற்ற எல்லோரிடமும் பொதுபுத்தியாக ஊறிக்கிடக்கிறது.இதன் வெளிப்பாடாகத்தான், ஆதிதிராவிட நலத்துறையில் மேல்மட்டம் முதல் கீழ்மட்டம் வரை, பள்ளிகளிலும், விடுதிகளிலும், கட்டமைப்புகள், பராமரிப்பு, மேற்பார்வை, ஆய்வு மாணவர்களைப் பொதுவாக நடத்தும் விதம், அவர்களுக்கு வழங்கப்படும் உணவு, கல்வி ஊக்கத்தொகை உள்பட எல்லாவற்றிலும் உச்சகட்ட அலட்சியமும், அதிகபட்ச வெளிப்படையான ஊழல் கொள்ளையும், தட்டிக்கேட்க யாருமில்லாமல் பல ஆண்டுகளாகத் தொடர்கிறது. கழிப்பிடம், குடிநீர், உணவு, சீருடை, ஏன் இரவில் சிறுவர், சிறுமியர் உறங்குவதற்காக வழங்கப்படும் பாய் உள்பட இத்துறையின் எந்த ஓர் அம்சத்திலும் தரநிர்ணயம் என்பது எள்ளளவும் கிடையாது. இவ்வளவு ஏன், ஆசிரியர் தேர்வாணையம் மூலமாக ஆசிரியர்கள் நியமனம் நடைபெறும்போது, தரவரிசைப் பட்டியலில் முன்னிலையில் இருப்பவர்கள் பொதுவாக அரசுப் பள்ளிகளுக்கும், கடைசியில் எஞ்சியவர்கள், ஆதிதிராவிட, பழங்குடியினர் நலப்பள்ளிகளுக்கும் தெரிவு செய்யப்படும் மோசமான பாகுபாடு நடைமுறையில் கடைப்பிடிக்கப்படுகிறது. இப்பள்ளிகளும், விடுதிகளும் கல்வித்துறை தொடர்போ, அனுபவமோ இல்லாத வருவாய்த் துறை அதிகாரிகள், ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர்கள் ஆகியோரின் அதிகாரத்துக்குள் வருவதால், அவர்களுக்கும், பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் நடுவில் புரிதல் அறவே இல்லை என்று குற்றம் சாட்டப்படுகிறது. மாவட்ட ஆட்சியரால் நேரடிக் கவனம் செலுத்த முடியாது. மாவட்ட ஆதிதிராவிட நலத்துறை அதிகாரிகளால், இத்துறை தொடர்பான பல்வேறு அலுவல்களுக்கிடையே, இப் பள்ளிகளை மேற்பார்வையிடுவதும், ஆய்வுசெய்து அறிக்கை தயாரித்து அளிப்பதும் இயலாத, விரும்பாத, பொருந்தாத ஒன்றாகி விடுகிறது.ஆண்டுக்கு ஒரு முறைகூட, இப் பள்ளிகள் மாவட்ட அலுவலர்களாலோ, வட்டாட்சியர்களாலோ ஆய்வுக்கு உள்படுத்தப்படுவதில்லை. கல்வியை மேம்படுத்தும் ஆக்கபூர்வமான செயல்களைச் செய்யாமல், ஆசிரியர்கள், வார்டன்கள் ஆகியோரைப் பணி அமர்த்துதல், பதவி உயர்வு, பணி மாற்றம், மாணவர் தேர்ச்சி இல்லை என்றுகூறி, ஆசிரியர்களுக்குத் தண்டனை வழங்குதல் ஆகிய அதிகாரங்களைக் கோலோச்சுவதும், ஒவ்வொரு வகையிலும் மாமூல் வசூலிப்பதுமே இவர்களின் ஒரே வேலையாக உள்ளது என்றும் குற்றம்சாட்டப்படுகிறது. எல்லா அதிகாரங்களும் வருவாய்த் துறை அதிகாரிகளிடமும், ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர்களிடமும் உள்ளதால், இவர்களுடன் இணைந்தோ, இவர்களைத் தாண்டியோ, கல்வித் துறை அதிகாரிகளால் கல்விசார்ந்த எந்த ஒரு திட்டத்தையும் ஒழுங்காக இப் பள்ளிகளுக்குள் கொண்டுபோய்ச் சேர்க்க முடிவதில்லை.சீருடை, புத்தகங்கள், கல்வி உதவித் தொகை என்று எல்லாமே மிகமிகத் தாமதமாகத்தான் ஒவ்வோராண்டும் பள்ளிகளைச் சென்று சேர்கிறது. நோட்டுப் புத்தகங்கள் இல்லாமல் மாணவர்கள் திண்டாடுகிறார்கள். தப்பித்தவறி நோட்டுப் புத்தகங்கள் கிடைத்தால், தேர்வில் பதில் எழுதத் தேவையான விடைத்தாள்கள் இல்லாமல், நோட்டுப் புத்தகங்களைக் கிழித்து விடைத்தாள்களாகப் பயன்படுத்துகிறார்கள். பொதுவாக இம் மாணவ, மாணவிகளிடம் ஊட்டச்சத்துக் குறைபாடு இருக்கும். இதன் விளைவாக உடல் ஆரோக்கியத்தில் ஏற்படும் குறைபாடுகளைச் சோதித்து சீர் செய்தால் மட்டுமே அவர்களது கற்கும் திறன் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. ஆனால், இப் பள்ளிகளில் முறையாக மருத்துவ முகாம்கள் நடத்தப்படுவதில்லை. அரவிந்தர் கண் மருத்துவமனையின் மருத்துவர் கூறும்போது, தலித்து பள்ளிகளில் உள்ள மாணவ, மாணவிகளில், 20 விழுக்காட்டினருக்காவது பார்வைக் குறைபாடு இருக்கும் வாய்ப்புள்ளது, மற்ற சமூகத்தினரைவிட இது அதிகம், இப்பள்ளிகளில், ஆண்டுத் தொடக்கத்திலேயே, கண் மருத்துவ முகாம் நடத்தி, குறைபாடுகளைக் கண்டறிந்து, களையவில்லையென்றால், பல மாணவ, மாணவிகள் ஆண்டு முழுவதும் கரும்பலகையில் என்ன எழுதப்படுகிறது என்று தெரியாமலே, "மக்கு'ப் பட்டம் வாங்கிக் கொண்டு அவதிப்படும் நிலை ஏற்படும் என்கிறார். ஆனால், இந்த அடிப்படையைப் புரிந்து கொள்ளாத நிர்வாகம், தேர்ச்சி விகிதம் சரியாக இல்லாத பள்ளிகளில், ஆசிரியர்களைப் பலிகடா ஆக்குவதுடன் திருப்திப்பட்டுக் கொள்கிறது. இவையெல்லாம், விளக்கப்பட்ட ஒரு சில பிரச்னைகள்தான், விளக்கப்படாத தடைக்கற்கள் ஏகப்பட்டவை. இன்றைக்கும் ஜாதிய ஏற்றத் தாழ்வுகளும், ஜாதி வன்கொடுமைகளும், கிராமங்கள்தோறும் நிரந்தரமாகிவிட்ட தலித்து காலனிகளும், சேரிக்கும் ஊருக்கும் நடுவே திடீரென்று முளைக்கும் தீண்டாமைச் சுவர்களும்தான் வளர்ந்து வரும் தமிழகத்தைப் பிரித்தாளும் கொடுவாள்கள். இன்றைய ஜாதிய, வர்க்க வேறுபாடுகள் களையப்படுவதற்கான ஒரே வழி, எல்லோருக்கும் தரமான, இலவசமான, சமச்சீரான, கட்டாயக் கல்வியை வழங்கும் சமத்துவமான பொதுப்பள்ளி முறையே. ஆனால், பள்ளிக்கல்வியில் உச்சகட்ட சமத்துவமின்மையே முகத்தில் அறையும் உண்மை. இந்தப் பின்னணியில், இந்த இருபத்தோராம் நூற்றாண்டிலும், ஆதிதிராவிடர் நலப்பள்ளிகள் என்ற பெயரில் தமிழகம் முழுவதிலும், கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள் என்ற பெயரில் மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களிலும், ஜாதி, இனம் வாரியாகப் பெயரிட்டு அரசே நடத்துவது என்ன பயன்தரும்? இந்த மாணவ, மாணவிகளுக்கு வேண்டிய உதவித் திட்டங்கள் தொடரவேண்டியது அவசியம். ஆனால், தனிப் பள்ளிகளாகவே தொடர்வது ஆரோக்கியமானதா என்பதைப் பரிசீலனைக்கு உள்படுத்த வேண்டியது அவசியம் மட்டுமல்ல, அவசரமும் கூட.ஆதிதிராவிடர் நலப் பள்ளி, கள்ளர் சீரமைப்புப் பள்ளி என்ற பெயரில் அடையாளப்படுத்தப்படுவது பற்றியும், அதனால் உளவியல் ரீதியாக இந்த மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் பற்றியும் யாரும் சிந்திப்பதில்லை. அதனால்தான் இளைஞர்களான பின்பும், கல்லூரி வாயிலில் ஒருவருக்கொருவர் கொலைவெறித் தாக்குதலில் ஈடுபடுவதும், ஜாதிச் சங்கங்களில் அதிக ஆர்வம் காட்டுவதும் நடைபெறுகிறது. மேலும், இப் பள்ளிகளை, நலத்துறைகளிலிருந்து விடுவித்து, மற்ற அரசுப் பள்ளிகளைப் போல, கல்வித்துறையின் நேரடி மேற்பார்வையின்கீழ் கொண்டுவந்தால், ஒப்பீட்டளவில் தரம் உயர வாய்ப்புள்ளது. விடுதிகளைப் பொறுத்தவரை, அன்றைக்கு அருகாமைப் பள்ளிகள் கிடையாது, ஆதலால் பள்ளிகளுக்கு அருகில் விடுதிகள் ஏற்படுத்தப்பட்டால் மாணவர்களுக்கு உதவும் என்ற நோக்கில் தொடங்கப்பட்டன. ஆனால், இன்றைக்கு எங்கும் அருகாமைப் பள்ளிகள் உள்ளன. இலவச பஸ் பாஸ், சைக்கிள்கள் வழங்கப்படுகின்றன. இலவச மதிய உணவு முழுமையாக வழங்கப்படுகிறது. குடிசைவீடுகளுக்கு இலவச மின்சாரம் உள்ளது.இவ்வகைக் காரணங்களால், பள்ளி மாணவ, மாணவிகள் விடுதிகளில் தங்கிப்படிக்க விரும்புவதில்லை. பல விடுதிகளில் மிக மிகக்குறைவானவர்களே தங்கிப் படிக்கின்றனர். சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் எல்லோருமே வீடுகளுக்குப் போய் விடுகின்றனர்.ஆக, உண்டு உறைவிடப் பள்ளிகள் இன்றைக்கு, "பெருச்சாளிகள்' மட்டுமே பல்கிப் பெருகி உண்டு கொழுக்கும் சத்திரங்களாக மாறிவிட்டன. அதாவது, இரண்டுகால் பெருச்சாளிகள் கூட்டுச்சேர்ந்து பொய்யான ஆவணங்களைத் தயாரித்து, திருடி பங்கு போட்டுக் கொள்ளும் ஒரே வேலைதான் பெரும்பாலான மாணவர் விடுதிகளில் நடைபெற்று வருகிறது. எனவே, அவசியமான ஒரு சில ஆதிதிராவிட நலத்துறை விடுதிகளையும், பிற்பட்டோர் நலத்துறையின்கீழ் வரும் விடுதிகளையும் மட்டும் ஒருங்கிணைத்து, பொது மாணவர் விடுதிகளாக மாற்றுவது நல்லது. பொது விடுதிகளாக மாற்றப்பட்டால், அவற்றின் பராமரிப்பில் எல்லோருடைய கூடுதல் கவனமும், கூட்டு கவனமும் கிட்டுவதால், தரமும் உயரும். அதோடு, மாணவர்களுக்கிடையில் புரிதலும், ஜாதி தாண்டிய நட்பும் ஏற்படும்.இடஒதுக்கீட்டைத் தாண்டி, ஆதிதிராவிட மாணவர்களுக்கும், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கும் இடையில் சமூக அளவிலும், கல்வி, வேலை வாய்ப்பு அளவிலும் ஒரே மாதிரியான எதிர்காலச் சவால்களே காத்திருக்கின்றன. பள்ளிக் கல்வியில் அரசு சமத்துவம் கொண்டுவர முனைந்து வெற்றிபெற்றால், தமிழகத்தின் ஜாதி வியாபாரிகள் கடைமூடும் நேரம் வந்துவிடும் என்பது மட்டும் நிச்சயம்.

செவ்வாய், 26 ஜூலை, 2011

Nedumaran article about d.m.k. resolutions: கண் கெட்ட பிறகு கதிரவன் வணக்கமா?

கண் கெட்ட பிறகு கதிரவன் வணக்கமா?

First Published : 26 Jul 2011 01:36:18 AM IST


வரலாறு காணாதவகையில் திமுக கடந்த சட்டமன்றத் தேர்தலில் மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்திருக்கிறது. அதிகார பலம், பண பலம் எல்லாவற்றையும் அத்துமீறிப் பயன்படுத்தியும்கூட 20 அமைச்சர்கள் படுதோல்வி அடைந்தனர். தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் 12 மாவட்டங்களில் உள்ள 100 தொகுதிகளில் ஒன்றில்கூட திமுக வெற்றிபெறவில்லை. வேறு 12 மாவட்டங்களில் திமுக கூட்டணி தலா ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றிபெற முடிந்திருக்கிறது. தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் மற்றும் பழங்குடி மக்களுக்கு என ஒதுக்கப்பட்ட 45 தொகுதிகளில் திமுக கூட்டணி 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்திருக்கிறது. ஆளுங்கட்சி என்கிற தகுதியையும் இழந்து எதிர்க்கட்சி தகுதியைக்கூட பெற முடியாமல் 3-வது இடத்துக்கு திமுக தள்ளப்பட்டுவிட்டது. இந்தச் சரிவுக்குக் காரணம் என்ன என்பதை நன்கு ஆராய்ந்து, இதிலிருந்து மீள்வதற்கான வழிவகைகளைக் கண்டறிவதற்காக கூட்டப்பட்ட திமுக செயற்குழு மற்றும் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் திமுக உறுப்பினர்களுக்குக்கூட திருப்தி தராது. தங்களது தோல்வியிலிருந்து புதிய பாடங்களைக் கற்று திருத்திக் கொள்ள முனையாமல் அரைத்த மாவையே மீண்டும் அரைக்கும் வேலையை பொதுக்குழு செய்திருக்கிறது. இலங்கைத் தமிழர் பிரச்னை சம்பந்தமாக திமுக பொதுக்குழு நிறைவேற்றியுள்ள தீர்மானம் உள்பட பல தீர்மானங்கள் கண்கெட்ட பிறகு கதிரவன் வணக்கம் செய்வதற்கு ஒப்பானவையாகும்.  இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட போர்க் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்திய 10 நாடுகளின் நீதியரசர்களைக் கொண்ட டப்ளின் மக்கள் தீர்ப்பாயமும், ஐ.நா. விசாரணைக் குழுவும் ராஜபட்ச போர்க் குற்றவாளி எனத் திட்டவட்டமான தெளிவான தீர்ப்பை வழங்கியுள்ளன. ஆனால், திமுகவின் தீர்மானத்தில் ராஜபட்சவை மறைத்து தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட போர்க் குற்றங்களுக்கு காரணமானவர்களைப் பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் தண்டிக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க மனித உரிமையைப் போற்றுகிற இந்தியா உள்பட அனைத்து நாடுகளும் முன்வர வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.  மேலே கண்ட தீர்மானத்தில் ராஜபட்ச மீது குற்றம் சாட்டுவது தவிர்க்கப்பட்டுள்ளது. இலங்கையில் நடைபெற்ற தமிழர் படுகொலைகளுக்கு துணைநின்ற இந்தியாவை மனித உரிமையைப் போற்றுகிற நாடாகத் தீர்மானம் புகழ்கிறது. 2009-ம் ஆண்டு மே மாதம் 17, 18, 19-ம் தேதிகளில் முள்ளிவாய்க்கால் பகுதியில் கொத்துக்கொத்தாகத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டபோது, அதற்குத் திரையிட்டு மறைத்தவர் கருணாநிதி. உண்ணாவிரத நாடகம் நடத்திப் போர் நிறுத்தம் ஏற்பட்டுவிட்டதாக பம்மாத்து செய்து தமிழக மக்களை ஏமாற்ற இவர் செய்த முயற்சிகளை தமிழக மக்கள் மறவாமல் சட்டமன்றத் தேர்தலில் அவருக்குப் பாடம் கற்பித்தனர்.  ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் பதைக்கப்பதைக்கப் படுகொலை செய்யப்பட்ட பிறகு 3 லட்சத்துக்கு மேற்பட்ட தமிழர்கள் முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டனர். அந்த மக்களுக்கு ஆதரவாக தமிழக மக்கள் கொதித்தெழுந்து போராடியபோது, அப்போராட்டத்தைத் திசைதிருப்புவதற்காக தனது மகள் கனிமொழி உள்பட காங்கிரஸ், திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட தூதுக்குழு ஒன்றை இலங்கைக்கு அனுப்பி ரத்தக்கறை படிந்த ராஜபட்சவின் கரங்களைக் குலுக்கச் செய்தவர் இதே கருணாநிதிதான். சிங்கள அரசு எங்கெங்கு அழைத்துச்சென்று காட்டியதோ அந்த முகாம்களில் மட்டுமே இந்தக் குழுவினர் பார்வையிட்டனர். முகாமில் உள்ளவர்களின் பட்டியலைக் கேட்டுப்பெற்று அதில் தங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களைச் சந்திக்கவோ, பேசவோ இவர்கள் ஒரு முயற்சியும் செய்யவில்லை. இக்குழுவினர் திரும்பியவுடன் கருணாநிதி பின்வரும் அறிக்கையை வெளியிட்டார்: 15-10-09-லிருந்து 15 நாள்களில் 58 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் முகாம்களில் இருந்து விடுவிக்கப்பட்டு அவரவர் ஊர்களில் மீள்குடியேற்றம் செய்யப்படுவார்கள். ஆதரவற்ற குழந்தைகள், உடல் ஊனமுற்றோர் ஆகியோர் தொண்டு நிறுவனங்களின் பராமரிப்பில் ஒப்படைக்கப்படுவார்கள். முகாம்களில் உள்ள அனைத்து மக்களும் 3 மாதங்களுக்குள் முழுமையாக விடுவிக்கப்பட்டு அவரவர் வீடுகளுக்கு அனுப்பப்படுவார்கள். இவ்வாறு கருணாநிதி அறிவித்து 21 மாதங்கள் முழுமையாகக் கடந்துவிட்டன. ஆனாலும் இவர் கூறியபடி எதுவுமே நடக்கவில்லை.  ராஜபட்சவை போர்க்குற்றவாளி என டப்ளின் மக்கள் தீர்ப்பாயம் அறிவித்தபோதும் ஐ.நா. விசாரணைக் குழு அறிவித்தபோதும் அதை வரவேற்கும் வகையில் கருணாநிதி எதுவும் சொல்லவில்லை. உலகின் பல்வேறு நாடுகள் ராஜபட்சவை போர்க்குற்றவாளியாக விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்தபோதிலும் இவர் பதவியிலிருந்தவரை வாயையே திறக்கவில்லை.  தில்லியில் காமன்வெல்த் நாடுகளின் விளையாட்டுப் போட்டிகள் நடந்தபோது தமிழர்களின் உணர்வுகளை அவமதிக்கும் வகையில் சிறப்பு அழைப்பாளராக ராஜபட்சவை அழைத்து ரத்தினக் கம்பளம் விரித்து இந்திய அரசு வரவேற்றபோது அதைக் கண்டித்து கருணாநிதி எதுவும் கூறவில்லை. சர்வதேச நீதிமன்றத்தில் ராஜபட்ச கும்பலைப் போர்க்குற்றவாளியாக நிறுத்தி விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்துவதற்காக உலகத் தமிழர் மாநாடு நடத்துவதற்குப் பதில் இந்தப் பிரச்னையைத் திசை திருப்பவும் நீர்த்துப் போக வைக்கவும் கோவையில் உலகச் செம்மொழி மாநாட்டை நடத்தியவர் கருணாநிதியே. ராஜபட்சவுக்கு கோபம் வரும் வகையில் யாரும் எதுவும் பேசிவிட வேண்டாம் என்று தமிழர்களுக்கு அறிவுரை கூறவும் கருணாநிதி தயங்கவில்லை. முறையாகத் திட்டமிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள விடுதலைப் புலிகள் தவறிவிட்டதன் விளைவாகவே ஒரு லட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதாகப் பிரபாகரன் மீது பழி சுமத்தவும் அவர் தயங்கவில்லை.  வங்கதேச விடுதலைப் போரின்போது 1971-ம் ஆண்டில் முதலமைச்சர் கருணாநிதி தமிழக மக்களிடம் ரூ. 10 கோடி நிதி திரட்டி பிரதமர் இந்திராவிடம் அளித்தார். கார்கில் போர் மூண்டபோது தமிழக மக்களிடம் ரூ.45 கோடி நிதி திரட்டி பிரதமர் வாஜ்பாயிடம் அளித்து இந்தியாவிலேயே அதிகம் நிதி தந்த முதலமைச்சர் என்ற பாராட்டுதலையும் பெற்றுக்கொண்டார். ஆனால், இப்போது முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டு குற்றுயிரும் குலை உயிருமாக வாடி வதங்கும் ஈழத்தமிழர்களுக்கு உதவ இவர் செய்தது யானைப் பசிக்கு சோளப் பொரியை அளித்தது போலாகும்.  இந்தியக் குற்றவியல் சட்டத்தின் 201-ம் பிரிவு ஒரு கொலையை மறைக்க உதவியவருக்கு ஏழு ஆண்டு தண்டனை விதிக்கலாம் எனக் கூறுகிறது.  ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்களைக் கொன்று குவித்த ராஜபட்சவின் கொலை பாதகச் செயலை மூடி மறைக்க முயன்ற கருணாநிதிக்கு எத்தனை ஆண்டு தண்டனை தருவது? ஈழத் தமிழர் பிரச்னையில் மட்டுமல்ல, வேறு சில பிரச்னைகளிலும் திமுக பொதுக்குழு நிறைவேற்றியுள்ள தீர்மானங்கள் வெறுமை நிறைந்தவை. போகாத ஊருக்குப் புரியாத வழியைக் காட்டுபவையாகும்.  கச்சத் தீவை மீட்க மத்திய அரசு முயற்சிகளைச் செய்ய வேண்டும். தமிழ் உள்ளிட்ட மாநில ஆட்சி மொழிகளை உயர் நீதிமன்றம் வழியாகப் பயன்படுத்த மத்திய அரசு முன்வர வேண்டும்.  நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் மகளிர் உரிமை பெறும் வகையில் 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் சட்டத் திருத்தத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி ஏற்பட அரசியல் அமைப்புச் சட்டத்தில் தேவையான திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்பது போன்ற பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.  மத்திய ஆட்சியில் திமுகவும் இன்றுவரையில் ஓர் அங்கம். திமுக அமைச்சர்கள் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் மேற்கண்ட தீர்மானங்களை வலியுறுத்தும் வகையில் ஏதாவது பேசினார்களா? இவர்கள் பேச்சு புறக்கணிக்கப்பட்டிருந்தால் அதையே காரணமாகக் காட்டி மத்திய ஆட்சியிலிருந்து வெளியேறி இந்தக் கோரிக்கைகளுக்கு வலுவூட்டுவதை விட்டுவிட்டு திமுக பொதுக்குழுவிலும் பொதுக்கூட்டங்களிலும் முழங்குவது என்பது தமிழக மக்களை ஏமாற்றுவதே ஆகும். இன்னும் தெளிவாகச் சொல்லப்போனால், ஈழப்பிரச்னையில் இருந்து மேற்கண்ட பிரச்னைகள் வரை திமுக நிறைவேற்றியுள்ள தீர்மானங்கள் கண்கெட்ட பிறகு கதிரவன் வணக்கம் செய்யும் தீர்மானங்கள் ஆகும்.   

புதன், 20 ஜூலை, 2011

Article about kalaignar by nellai kannan: தாத்தாவுக்குத் தெரியாதா?

தாத்தாவுக்குத் தெரியாதா?

First Published : 20 Jul 2011 02:34:14 AM IST


கடைசிவரை மன்மோகன் சிங்கின் முன்னர் பணிந்து தனது மத்திய அமைச்சர் பதவியைவிடாமல் இருப்பதற்கு சகல முயற்சிகளையும் செய்து இறுதியில் அமைச்சர் பதவியிலிருந்து விலகி இருக்கிறார் கருணாநிதியின் பேரன் தயாநிதி மாறன்.  தலித் ராசா இந்த விஷயத்தில் எத்தனை சரியாக நடந்து கொண்டார். பிரதமர் சொன்னவுடனே பதவியை விட்டு விட்டாரே. கருணாநிதி கூறுவதுபோல, தாழ்த்தப்பட்டவர் என்பதால்தான் திமுக தலைமை அவருக்கு ஒரு நீதி, பேரனுக்கு ஒரு நீதி என்று செயல்படுகிறதோ என்று யாரும் கேட்டுவிடக் கூடாது. திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு குடும்பம். அந்தக் குடும்ப விவகாரங்களில் தலையிடும் உரிமை அந்நியருக்குக் கிடையாது என்று கருணாநிதி வகையறாக்கள் வீரவசனம் பேசுவார்கள்.  தயாநிதியை ஊடகங்கள் பழிவாங்கி விட்டனவாம்! கருணாநிதி சொல்லுகிறார். அது மட்டுமல்ல, தயாநிதி மீது இப்படி ஒரு குற்றச்சாட்டு இருப்பதே நேற்றுத்தான் அவருக்குத் தெரியுமாம். பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கும் அண்டப்புளுகன் என்றெல்லாம் அவரைப் பற்றி யாரும் கூறிவிடக் கூடாது. அது தமிழினத் துரோகம் என்று வியாக்யானம் செய்வார் கருணாநிதி.  திமுக அவரோடு நிற்குமாம். கருணாநிதி கூறி இருக்கிறார். தலித் ராசா இன்னும் திமுகவின் கொள்கை பரப்புச் செயலர். அவரோடு திமுக இன்னும் நின்று கொண்டிருப்பதை இந்தியா பார்த்துக் கொண்டுதானே இருக்கிறது. இந்தியாவின் மிகப்பெரிய வழக்கறிஞர்கள் எல்லாம் அவருக்காக நீதிமன்றத்தில் வாதிட்டனரே. கருணாநிதியே நேரில் சென்று தில்லியில் இருந்தல்லவா அந்த தலித்துக்காகக் கண்ணீர் வடித்தார்.  கருணாநிதியின் மனசாட்சியாக இருந்தவர் அவரது மருமகன் முரசொலி மாறன். ""முரசொலி மாறனைப் பார்த்தவுடன் இந்திரா காந்தி அம்மையார் நினைப்பாராம், இப்படி ஒரு அழகான வாலிபனுக்கு கட்டிக்கொடுக்க தனக்கு ஒரு பெண் குழந்தை இல்லையே என்று''. இப்படிச் சொன்னவர் மறைந்த நாஞ்சில் மனோகரன். "கருவின் குற்றம் பற்றி நாஞ்சில் மனோகரன் பின்னாளில் சொன்னது தனிக்கதை.  அந்த முரசொலி மாறன் தமிழ் வார இதழ் ஒன்றுக்குப் பேட்டி அளித்தார். கல்லூரியில் படிக்கும் காலத்தில் ஒரு சைக்கிள் வாங்க எத்தனை கஷ்டப்பட்டார் என்று. மாமா கருணாநிதி மிகவும் சங்கடப்பட்டு ஒரு ஹெர்குலிஸ் சைக்கிள் அறுநூறு ரூபாய்க்கு வாங்கித் தந்தார் என்று அந்தப் பேட்டியில் குறிப்பிட்டிருந்தார் மருமகன் முரசொலி மாறன்.  இன்று மாறன் சகோதரர்கள் இருபது தொலைக்காட்சிக்கு சொந்தக்காரர்கள். நாற்பத்தைந்து பண்பலை வானொலிக்குச் சொந்தக்காரர்கள். ஒரு விமான நிறுவனத்துக்கே சொந்தக்காரர்கள். ஒரு டிடிஹெச் நிறுவனத்துக்குச் சொந்தக்காரர்கள். ஆனால், இவர்களிடம் வேலை பார்க்கும் எந்த ஊழியர்க்கும் நல்ல சம்பளம் கிடையாது. அவர்கள் சுயமரியாதையுடன் நடத்தப்படுகிறார்களா என்று நானும் பலரிடம் கேட்டுப் பார்த்துவிட்டேன். பதில் கிடையாது.  ஊடகங்கள் இத்தனை வைத்துக்கொண்டு இவர்கள் மக்களுக்கா சேவை செய்தார்கள். ஜெயலலிதாவையும் அவரது இயக்கத்தையும் அவதூறு செய்வதையே வேலையாகச் செய்தார்களா இல்லையா? அதெல்லாம் கருணாநிதிக்கு நினைவுக்கு வராது.  கே.பி.கந்தசாமி உருவாக்கி வளர்த்த செய்தி ஊடகத்தை அவரது மகனிடம் இருந்து எப்படி மாறன் சகோதரர்கள் வாங்கினார்கள் என்பது இன்றுவரை மர்மம்தான். அந்தத் தினகரன் செய்தித் தாளினாலேதானே கருணாநிதி குடும்பத்திலேயே குழப்பம் வந்தது.  அதிலேதானே இந்தியாவிலேயே மக்கள் மத்தியில் பெரும்பான்மை மதிப்பைப் பெற்றுள்ள அமைச்சர் தயாநிதி மாறன் என்று செய்தி போட்டார்கள். சிதம்பரத்துக்கெல்லாம் வாக்குக் குறைவாக இருந்தது. அழகிரியோ மிக மிகக் கீழே இருந்தார்.  அந்த ஊடகத்தினாலேதானே மதுரையில் மூன்று இளைஞர்கள் எரிக்கப்பட்டார்கள். அந்தக் கருணாநிதியாரின் பேரன் ஊடகம் தமிழகத்தில் ஒரு பெரிய கொலைக் குற்றத்துக்கான காரணமாய் இருந்ததே, அது அவருக்கு வயோதிகம் காரணமாக நினைவுக்கே வராது.  அதன் விளைவுதானே அழகிரி கருணாநிதி குடும்பத்துக்கென்று ஒரு தனி தொலைக்காட்சி ஊடகத்தையே கலைஞர் தொலைக்காட்சி என்ற பெயரில் தொடங்கினர். அந்தத் தொலைக்காட்சிக்கு ஸ்பெக்ட்ரம் ஊழலில் பங்கு வந்தது என்றும் அதற்குக் காரணம் கனிமொழி என்றும் அவரும் இயக்குநர் சரத்குமாரும் சிறையில் இருக்கின்றனர் என்பதாவது நினைவில் இருந்தால் சரி.  அந்தக் கலைஞர் தொலைக்காட்சியிலேதானே தேர்தல் முடிவுகள் அன்று விமர்சனத்துக்காக உட்கார்ந்திருந்தவர்கள் எல்லாம் பத்தே நிமிடத்தில் வெளியேறி மானாட மயிலாட நிகழ்ச்சி ஒளிபரப்பாயிற்று. அதற்கெல்லாம் ஊடகங்கள்தான் காரணமென்றால் அது நியாயமான வார்த்தை.  தமிழ்நாட்டின் தலைசிறந்த ஊடகங்களெல்லாம் இந்தக் குடும்ப அட்டூழியத்தை இந்தக் குடும்பச் சண்டையினால் ஏழை இளைஞர்கள் மூவர் கொடுமையாகக் கொல்லப்பட்டதைக்கூட மறந்துவிட்டு அதே பேரனை மீண்டும் மத்திய அமைச்சராகிய அவலத்தை எழுதின.  கருணாநிதிக்குச் சொந்தமான குங்குமம் வார இதழையும் மாறன் சகோதரர்களே வாங்கிக் கொண்டனர். சன் தொலைக் காட்சியில் பங்கைக் கொடுத்துக் கலைஞர் குடும்பத்தைக் கழற்றியும் விட்டனர் மாறன் சகோதரர்கள்.  அரசுத் தொலைபேசித் துறையின் எத்தனை தொடர்புகள் மாறன் சொந்த நிறுவனத்துக்குப் பயன்பட்டுள்ளன என்பது இப்போது சிபிஐயின் விசாரணையிலிருந்து தெரியவந்திருக்கிறது.  ஏர்செல் நிறுவனம் மிரட்டப்பட்டிருக்கிறது. பதவியையும், அதிகாரத்தையும் காட்டி மிரட்டி, தங்களது நிறுவனத்தில் முதலீடு செய்ய முன்வந்த மலேசிய நிறுவனத்துக்கு வலுக்கட்டாயமாக ஏர்செல் நிறுவனத்தின் பங்குகளை மிரட்டி வாங்கிய விவகாரம் இப்போது நீதிமன்றம்வரை வந்துவிட்டது.  பாவிகள் அத்துடன் விட்டார்களா? காந்தி மண்டபத்தை "ஏர்செல்' விளம்பரத்துக்குப் பயன்படுத்திய அநியாயத்தை ஏன் அன்றைய திமுக அரசு தடுக்காமல் வேடிக்கை பார்த்தது என்பது இப்போதல்லவா தெரிகிறது.  சென்னை கிண்டியிலுள்ள காந்தி மண்டபம் "ஏர்செல்' விளம்பர மண்டபமான மர்மத்தின் முடிச்சு மாறன் சகோதரர்களின் முற்றத்தில் அல்லவா போய் முடிகிறது.  கோடிக்கணக்கான பணத்தை வைத்து திருமங்கலம் பார்முலாத் தேர்தலை நடத்தி விடலாம் என்று எல்லாத் தவறுகளையும் மிக மிகத் தைரியமாகச் செய்து விட்டு தேர்தல் ஆணையத்தின் சிறந்த முயற்சியாலும் நல்ல காவல் துறை அதிகாரிகள் சிலராலும் மக்கள் தீர்ப்பின் வேகத்தில் துவண்டு கிடக்கும் இவர்களுக்குச் சட்டம்தான் கடமையைச் செய்யத் தொடங்கியவுடனே கோபம் வருகிறது.  கருணாநிதியார் குடும்பத்தினரைவிட அதிகம் அரசியலை வைத்துச் சம்பாதித்தது மாறன் குடும்பம்தான். இது உலகறிந்த உண்மை.  ஊடகங்களைக் குற்றம் சொல்கிறாரே கருணாநிதி இவரது முரசொலிதான் பெருந்தலைவர் காமராஜர் வாடகைக்குக் குடியிருந்த வீட்டை அவரது சொந்த வீடு என்று போட்டு ஏழைப் பங்காளர் காமராஜரின் வீட்டைப் பாருங்கள் என்று செய்தி போட்டது. பெரியவர் காமராஜர் ஆந்திர வங்கியில் ஒரு கோடிரூபாய் போட்டு வைத்திருக்கிறார் என்று ஓர் உலகப் புளுகைச் செய்தியாகப் போட்டது.  செய்தியாளர்கள் கேட்டபோது காமராஜர் சொன்னார்: ""அவர்கிட்ட அதற்கான செக் புக் இருந்தா வாங்க்கிட்டு வாங்கண்ணே, கையெழுத்துப் போட்டுத் தாரேன் அவரையே வாங்கிக்கிடச் சொல்லுங்க'' என்றார்.  ஊழல் அனைத்தையும் செய்துவிட்டு ஊடகங்களைக் குற்றம் சொல்லிப் பேரனைக் காப்பாற்ற தாத்தா முயற்சி செய்கிறார்.  எத்தனை மாதங்களாக தயாநிதியை பாஜக, கம்யூனிஸ்ட்கள், அஇஅதிமுக, தேமுதிக என்று எல்லா கட்சியினரும் குற்றம்சாட்டி வருகின்றனர். மன்மோகன் சிங் கேட்கவில்லை.  இன்று உச்ச நீதிமன்றத்திலேயே குற்றச்சாட்டு பதிவான பிறகு பிரதமர் கட்டாயப்படுத்தித்தானே விலகல் கடிதத்தை வாங்க முடிந்திருக்கிறது.  ஊடகங்கள்தான் தீர்மானிக்கின்றன என்கிறார் கருணாநிதி. இத்தனைநாள் கருணாநிதியின் பேரன்கள் நடத்திய ஊடகங்கள் தீர்மானித்தது உண்மை. இப்போது உச்ச நீதிமன்றம் தீர்மானிக்கிறது. ஊடகங்கள் பிரதிபலிக்கின்றன. தாத்தாவுக்கு வயதாகிவிட்டது. பாவம், தெரியவில்லையோ என்னவோ?  எது தெரிந்தாலும், தெரியாவிட்டாலும், மறந்தாலும் மறக்காவிட்டாலும் "குறளோவியம்' எழுதிய கருணாநிதிக்குத் "திருக்குறள்' தெரியாமல் இருக்க வழியில்லை. காமத்துப் பால் மட்டுமல்லாமல், அவர் அறத்துப்பாலும், பொருட்பாலும்கூடப் படித்திருக்கிறார்.  ""தன் நெஞ்சறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்நெஞ்சே தன்னைச் சுடும்'' என்பது குறள்.  வள்ளுவருக்குக் கோட்டமும் வள்ளுவருக்குச் சிலைகளும் வைத்த கருணாநிதிக்கு இது எப்படித் தெரியாமல் போகும்?  

வியாழன், 14 ஜூலை, 2011

Dinamani article-thamizh in computer by anto peter: கணினித் தமிழுக்கு உயிர்ப் பிச்சை தேவை

கணினித் தமிழுக்கு உயிர்ப் பிச்சை தேவை

First Published : 14 Jul 2011 03:29:06 AM IST


கணினியில் தமிழ்ப் பயன்பாடு 1980-ம் ஆண்டு வாஷிங்டன் பல்கலைக்கழகம் நூலகப் பயன்பாட்டுக்காக உருவாக்கியதாக வரலாறு கூறுகிறது. சுமார் 32 ஆண்டுகள் கணினியில் தமிழ்ப் பயன்பாடு இருந்தும் பல குழப்பநிலைகளே உள்ளது.கணினித் தமிழுக்கென சீரான முறையோ, உலக அரங்கில் ஒருங்கிணைப்போ, வளர்ச்சித் திட்டமோ, எம்என்சி நிறுவனங்களில் கூட்டுப்பணியோ இல்லை. ஒரு கணினியில் பயன்படுத்திய உரையை, பிற கணினியிலும் பார்க்க பொதுவான எழுத்துரு தேவைப்பட்டது. இன்றும் பதிப்பு மற்றும் அச்சுப்பணிக்குத் தேவைப்படுகிறது. இணையத்தை அனைவரும் பார்வையிட எழுத்துருவைக் கண்டிப்பாகப் பதிவிறக்கம் செய்யவேண்டிய நிலையுள்ளது. இந்தக் கவலைகளைப் போக்குவதற்கே யுனிகோட் தமிழ் பிறந்துள்ளது.வருங்காலத்தில் "யுனிகோட்' தமிழே நிலைக்கும். யுனிகோட் தமிழின் அருமை அறிந்தும், இவற்றைச் சீர்படுத்த அரசு தவறுகிறது. தமிழக அரசைச் சுட்டிக்காட்டினால் இது தகவல் தொழில்நுட்பத் துறையின் பொறுப்பென நினைத்துவிடுகிறார்கள். இதில் தமிழ் வளர்ச்சித்துறையின் பங்கும் 50 சதவீதம் உள்ளது. இவ்விரு துறைகளும் கூட்டாகத் தமிழுக்கு முயற்சி எடுக்காததாலேயே நாம் சீரழிவைச் சந்திக்க நேர்கிறது. எல்லோரும் ஆங்கில விசைமுறை சீராகவுள்ளதாகக் கருதுகிறோம். ஆங்கில கீபோர்டு 1878-ம் ஆண்டு தயாரிக்கப்பட்டு, அதுவும் சீரான நிலையை உலக அளவில் பெற்றிட 50 ஆண்டுகள் ஆகியுள்ளது. நாமும் இப்பிரச்னையை இந்நவீன காலத்தில் சீருடன் பெற்றிட யுனிகோட் தமிழை வலிமைப்படுத்த வேண்டும்.யுனிகோட் என்றால் என்ன? யுனிகோட் என்பது உலக மொழிகள் அனைத்தின் எழுத்துகளையும், குறியீடுகளையும் ஒரே கணினி குறியீட்டு முறையில் இணைத்து வடிவமைக்கும் ஒரு தொழில்நுட்ப முறையாகும். யுனிகோட் முறைகளின் மூலம் ஜப்பான், சீனம், கொரியா போன்ற பல சிக்கலான வரிவடிவங்களைக்கொண்ட மொழிகளைக்கூட எளிதில் கணினியில் பயன்படுத்த முடிகிறது. நாம் யுனிகோடில் டைப் செய்த பைலை உலகின் எந்தக் கணினியிலும், எந்த நாட்டிலிருந்து திறந்துபார்த்தாலும் படித்து அச்சடிக்க முடியும்.நாம் பயன்படுத்தும் ஒரே கணினியில், ஒரே பக்கத்தில், ஒரே நேரத்தில் தமிழ், இந்தி, ஜப்பான், சீனம், கொரியா என அனைத்து மொழிகளையும் செலவின்றிப் பயன்படுத்தலாம். தொழில்நுட்பம் மூலமாக சார்ந்து, எந்த மொழி வளர்கிறதோ அந்த மொழியே அழியாமல் இருக்கும். தமிழை வளப்படுத்த யுனிகோடில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும்.நாம் யுனிகோடில் டைப் செய்த ஒரு தமிழ்ப் பக்கத்தை அலுவலகக் கணினி, லேப்டாப் கணினி, அச்சு, பதிப்பகம், இணையம் மற்றும் செல்பேசி என அனைத்து தொழில்நுட்பத்திலும் சிக்கலின்றிப் பார்த்துப் படித்துக் கொள்ளலாம். யுனிகோட் எழுத்துருக்கள் அதிக அளவில் இலவசமாகவும், குறைந்த விலையிலும் கிடைக்கின்றன. யுனிகோடினால் கணினி மற்றும் இயங்குதளங்களின் செயல்படும் வேகம் அதிகரிக்கிறது. நாம் ஆயிரக்கணக்கான பக்கங்களை சில நொடிகளில் அச்சுப்படி எடுக்கலாம். எந்தக் கணினியிலும் யுனிகோட் எழுத்துருவைப் பதிக்கவோ, பதிவிறக்கம் செய்யவேண்டிய அவசியமோ இல்லை.தமிழக அரசு தமிழில் வர்த்தக எழுத்துருக்களை ஒவ்வொரு கணினிக்கும் தனித்தனியாக விலை கொடுத்து வாங்குகிறது. ஒவ்வொரு கணினிக்கும் தனித்தனியாக இன்ஸ்டால் செய்ய வேண்டும்.ஒவ்வொரு கணினிக்கும் தனித்தனிப் பதிவு எண்களைப் பாதுகாக்க வேண்டும். இணைய பயன்பாட்டுக்காக தனித்தனியாகப் பதிவிறக்கம் செய்ய வேண்டும். யுனிகோட் எழுத்துரு உலக மொழிக்கே பொதுவானதால் இச்சிக்கல்கள் இன்றிப் பயன்படுத்தலாம். ஆனால், இதை முழுமையாக இணைய விரும்பிகளே பயன்படுத்துகிறார்கள். அரசுப்பணியில் பயன்பாடு இன்றி அவல நிலையில் உள்ளது.சமீபத்தில் அமெரிக்கா விசா பெறுதற்காக சென்னை அமெரிக்க தூதரகத்துக்குச் சென்றிருந்தேன். அமெரிக்கத் தூதரகத்தில் விசாவுக்கு நேர்காணல் வைத்தே விசா தருவார்கள். இதை அமெரிக்கர்களே நடத்துகிறார்கள். நேர்காணலின்போது எதற்கு, ஏன் அமெரிக்கா செல்கிறீர்கள் என கேட்டார்கள். அப்போது நான் அமெரிக்காவில் தமிழ் இணைய மாநாடு நடைபெறுகிறது. தகவல் தொழில்நுட்பத்தில் தமிழை வளர்க்க அமெரிக்காவில் மாநாடு நடைபெறுகிறது என்று கூறினேன். அமெரிக்காவில் எம்என்சி நிறுவனங்கள் அதிகம் உள்ளதால் தமிழின் வளர்ச்சி விவாதங்களும், ஆராய்ச்சிகளும் தமிழகத்துக்கு உதவும் என்று கூறினேன். தமிழகத்தின் அனைத்துக் கணினிகளில் வேலை செய்யும் அனைத்து சாஃப்ட்வேர்களும் அமெரிக்காவிலேயே தயாரிக்கப்படுவதாகக் கூறினேன். புன்முறுவலுடன் தமிழகத்துக்குப் பயனுள்ளதாக உள்ளதா என்று கேட்டார், தலையாட்டினேன். உங்கள் பணி தமிழையும், மின்னணுவையும் இணைக்கிறதென கூறினார். சில நொடிகளில் அவர் புரிந்துகொண்டதை எண்ணிப் பெருமை அடைந்தேன். தமிழும், கணினியும் பல செயலாக்கங்களை வருங்காலத்தில் செய்யவுள்ளது. அவர் புரிந்துகொண்டதை தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத்துறையும், தமிழ் வளர்ச்சித்துறையும் புரிந்துகொள்ளாமல் இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது.யுனிகோட் சம்பந்தமாகப் பிரச்னைகளைச் சந்தித்தால் தமிழக அரசு உடனடியாகப் பணிக்குழுவை உருவாக்கிப் பிரச்னைகளைச் சமாளிக்கிறது. ஆனால், நிரந்தரத்தீர்வை ஏற்படுத்தும் எண்ணம் தமிழக அரசுக்கு இல்லை. இப்போது அமெரிக்காவில் நடைபெற்ற தமிழ் இணைய மாநாட்டிலும் தமிழக அரசு அதிகாரிகள் கலந்துகொள்ளாதது வருத்தத்தை அளித்தது. தகவல் தொழில்நுட்பத்துறையும், தமிழ் வளர்ச்சித்துறையும் இணைந்து தனி வாரியமோ அல்லது அரசு நிறுவனமோ தொடங்க வேண்டும். யுனிகோட் கன்சார்ட்டியத்தில் தமிழக அரசு உறுப்பினராக வேண்டும். உறுப்பினராக இருந்தால்தானே பன்னாட்டு அறிஞர்களின் அறிவையும் நம் மொழிக்குப் பெறமுடியும். நம் மொழி சார்ந்த பிரச்னைகளை நிவர்த்தி செய்ய முடியும்.தமிழக அரசு 9.75 லட்சம் லேப்டாப்களைத் தேர்தல் அறிக்கைப்படி அளிக்கவுள்ளது. மாணவர்கள் பலன் பெறவுள்ள வரவேற்க வேண்டிய திட்டமாகும். இந்த லேப்டாப்களில் தமிழ் மென்பொருள்கள் அளிக்கப்படுகின்றன. லேப்டாப்பின் அடிப்படை ஆப்ரேட்டிங் சிஸ்டத்தை தமிழில் அளிக்கச் சிந்தனையில்லாமல் இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது. லேப்டாப்பில் உள்ள கீ-க்களையே தமிழில் பொறித்து அளிக்கலாமே, லேப்டாப்பில் உள்ள கீ-க்கள் தமிழில் இருந்தால் குறைந்தபட்சம் 20 சதவீதம் தமிழக மாணவர்களாவது தமிழ்த் தட்டச்சு அறிவைப் பெறுவார்கள்.லேப்டாப்பை டெண்டர் அடிப்படையில் விநியோகிக்கும் நிறுவனங்களைத் தமிழக (தமிழ் 99) அரசாணைப்படி விசைமுறைகளைப் பெற்ற விசைகளுடன் லேப்டாப்களைத் தயாரிக்க உத்தரவிட வேண்டும்.ஆசிய அளவில் தமிழ்நாட்டில்தான் அதிக அளவில் செல்போன்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்த செல்போன்களையும் தரப்படுத்தலாமே. தமிழ் விசைகளோடுதான் செல்போன்களை விற்கவேண்டுமென தரமுறையை உருவாக்கலாமே!தமிழக அரசின் இணைய தளங்கள் தமிழகக் கிராமப்புற மக்களுக்காகத்தான் இயங்குகின்றன. அரசு அலுவலகங்களுக்குச் செல்லாமல் அரசு சேவைகளையும், தேவைகளையும் பெறுவதற்கே இணையங்களை தமிழக அரசுத்துறைகள் நிறுவி வருகின்றன. இந்த இணையங்களை ஏன் தமிழில் நிறுவுவதில்லை என்பது தெரியவில்லை. தமிழக அரசின் அனைத்து இணையங்களும் தமிழில் மாற்றம் செய்யவேண்டும்.தமிழ் இணையப் பல்கலைக்கழகம்தான், தமிழக அரசின் தமிழ்க்கணினிப் பணிகளைச் செய்வதாகக் கூறுகிறார்கள். அந்நிறுவனத்தின் தமிழ்க்கணினிப் பணி தொய்வு நிலையிலேயே உள்ளது. கல்விப்பணியை மட்டும் அந்நிறுவனத்துக்கு ஒதுக்கி தமிழக அரசின் தமிழ்க் கணினிப் பணிக்காக தனி வாரியமோ அல்லது அரசு நிறுவனமோ தொடங்க வேண்டும்.ஒரு தொழிற்சாலை தொடங்க வேண்டுமென்றால், மாசுக்கட்டுப்பாடு வாரியத்தில் தரச்சான்றிதழ் பெறவேண்டும். அதேபோல் தமிழகத்தில் தயாரிக்கப்படும் அனைத்து மின்னணுவியல் தயாரிப்புகளும் தமிழ்சார் தரக்கட்டுப்பாட்டை அளித்த பின்பே, விற்பனைக்கு வரவேண்டும். மின்னணுவியல் தயாரிப்புகளுடன் தமிழகத்தில் விற்பனை செய்யப்படும் பொருள்களின் பயனாளர் கையேடுகள் தமிழில் வெளியிட வலியுறுத்த வேண்டும். நம் மொழியோடு குறைந்த மக்கள்தொகையுள்ள மொழிகள்கூட தத்தம் நாடுகளில் இவ்விதிகளைக் கையாள்கின்றன.தமிழ்க்கணினிப் பயன்பாடுகள் பள்ளி மற்றும் கல்லூரிப் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும். பள்ளிப்பருவத்திலேயே மாணவர்களுக்குத் தமிழ்க்கணினி சேவைகளையும், கலைச்சொற்களையும் ஊட்டினால் சமுதாய மாற்றத்தைக் காணலாம். மேலும், பல அரசுத் திட்டங்கள் கிடப்பில்தான் உள்ளன.யுனிகோட் தமிழ் மற்றும் பல்வேறு மின்னணுத் தமிழ்ப்பணியாக்கங்களுக்கு மனுக்களும், கோரிக்கைகளும் எங்களைப்போன்ற தொழில்நுட்பவாதிகள் அளித்து களைப்பைத்தான் கண்டுள்ளோம். சிறப்பான நலப்பணிகளைச் செய்துவரும் புதிய அரசு தமிழ்ப்பற்றுடன் கணினித்தமிழ்ப் பணிகளை முடுக்கிவிட வேண்டும்.அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை மற்றும் தமிழ் மக்கள் வாழும் நாடுகளில் தமிழக அரசின் தமிழ்க் கணினி அரசாணையைத்தான் தத்தம் நாடுகளில் அமல்படுத்துகிறார்கள். முதல்வரின் தமிழ்க் கணினிப்பணி உலகத் தமிழ்மக்களிடையே மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் என நம்புகிறோம். கட்டுரையாளர்:கணினித் தமிழ்ச் சங்கத் தலைவர்.

புதன், 29 ஜூன், 2011

கருணைத் தொகையல்ல, கழிவுத்தொகை!

முன்பு இந்தக் கருத்தை நானும் தினமணியில் பதிந்திருந்தேன். கட்டுரையாளர் விரிவாக நன்றாகவே எழுதி உள்ளார்.  முகவர்கள் திரட்டித்தரும் தொகை மட்டும் வேண்டும். ஆனால், அவர்களுக்கு உழைப்பிற்குரிய ஊதியத்தைத் தர மாட்டேன் என்னும் முட்டாள்தனமான பிடிவாதத்தில் இருந்து  உரியவர்கள் மாற வேண்டும்.  மக்கள் சேமிப்பிற்கும் நாட்டின் வருவாய்க்கும் பாலமாக உள்ள சிறுசேமிப்பு முகவர்களின் கழிவுத் தொகையைக் குறைக்கக் கூடாது. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!


கருணைத் தொகையல்ல, கமிஷன்!

First Published : 28 Jun 2011 01:19:15 AM IST


சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு சில தனியார் நிதி நிறுவனங்கள் பொதுமக்களிடம் வைப்புநிதி பெற்று, அவற்றைப் பல திட்டங்களில் முதலீடு செய்து, கிடைக்கும் லாபத்தில் மக்களுக்கு அதிக வட்டி தருவதாகக் கூறின.இதை நம்பியோருக்குப் பிறகு கிடைத்ததென்னவோ, கோயில் பிரசாதம் போன்ற பங்கீடுதான். அப்போது நடந்தவற்றை யாரும் மறந்துவிட முடியாது. இவையெல்லாம் 15 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது எதற்கு என்ற கேள்வி எழலாம். காரணம் இருக்கிறது.நம் நாட்டில் உள்ள பொதுத் துறை நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குவதாகக் கூறி, அவற்றை மூட முயற்சிப்பது, ஆள் குறைப்பு செய்வது, தனியாரைப் பங்கேற்கச் செய்வது போன்ற நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. இந்தப் பிரச்னை ஒருபுறம் என்றால், இப்போது ரிசர்வ் வங்கி மத்திய அரசுக்கு அளித்துள்ள ஒரு பரிந்துரையும் விவாதத்துக்கு உரியதாக உள்ளது. அதாவது, அஞ்சலக சேமிப்புத் திட்டங்களுக்கு அளிக்கப்படும் முகவர் கமிஷன் தொகையைக் குறைக்க வேண்டும் என்பதும், குறிப்பிட்ட சில திட்டங்களில் கமிஷன் தொகையை நிறுத்திவிடலாம் என்பதும்தான் அந்தப் பரிந்துரை. காரணம், ஆண்டுக்கு ரூ. 2 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக அஞ்சலக சேமிப்புத் திட்டக் கமிஷனாக முகவர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த அளவு தொடர்ந்து அதிகரித்து, கடந்த நிதியாண்டில் ரூ. 2,400 கோடியாக வழங்கப்பட்டுள்ளது என்பதுதான்.மேலோட்டமாகப் பார்த்தால் இந்தத் தொகை மிக அதிகமாகத்தான் தெரியும். ஆனால், இதன்பின்னால் நாடு முழுவதும் சுமார் 6 லட்சம் பேர் முகவர்களாக வேலைவாய்ப்புப் பெற்றுள்ளனர் என்பதும், அவர்களின் அன்றாட உழைப்புக்கேற்ப அரசு அளிக்கும் வெகுமதிதான் (மாத ஊதியம் அல்ல) இந்தக் கமிஷன் என்பதும், நாம் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய ஒன்று.இந்த 6 லட்சம் முகவர்களும் நாட்டிலுள்ள கோடிக்கணக்கான மக்களைச் சந்தித்து, அவர்களுக்கு அஞ்சலக சேமிப்புத் திட்டங்கள் குறித்து விளக்கி, இதுவரை 17.5 கோடி மக்களை அஞ்சலகங்களில் சேமிக்க வைத்திருக்கிறார்கள். இவ்வாறு அஞ்சலகங்களில் சேமிக்கப்பட்டுள்ள தொகை சுமார் ரூ. 3.5 லட்சம் கோடி. அதாவது, 6 லட்சம் முகவர்கள் பல ஆண்டுகளாக உழைத்து, தலா சுமார் ரூ. 60 லட்சம் அளவுக்கு அஞ்சலகங்களுக்கு சேமிப்பைத் தேடித் தந்துள்ளனர். இது சாதாரண விஷயமல்ல. இந்த உழைப்புக்குக் கொடுக்கப்படும் சிறிய வெகுமதியைத்தான் ரிசர்வ் வங்கி குறைக்க வேண்டும் என்று கூறியிருக்கிறது.குறிப்பாக, அஞ்சலகத் தொடர் சேமிப்புத் திட்டத்தில் பெண்கள் மட்டுமே முகவர்களாக முடியும். பெண்களிடம் மாதாமாதம் சேமிக்கும் பழக்கத்தை வளர்க்கவும், பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கவும், அவர்களைப் பொருளாதார ரீதியில் முன்னேற்றவும் இந்தத் திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருந்து வருகிறது. ஆர்.டி. (தொடர் சேமிப்புத் திட்டம்) என அழைக்கப்படும் இந்தத் திட்டம் கிராமம், நகரம் என வேறுபாடு இல்லாமல் அனைத்துப் பகுதிகளிலும் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.அஞ்சலக சேமிப்பில் இந்த ஒரு திட்டத்துக்கு மட்டுமே அதிகபட்சமாக 4 சதவீத கமிஷன் வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், சுமார் 3 லட்சம் பெண்கள் அஞ்சலக முகவர்களாக உள்ளனர். தமிழகத்தில் மட்டும் சுமார் 23 ஆயிரம் பெண் முகவர்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது. இப்போது இவர்களின் வேலைவாய்ப்பு கேள்விக்குறியாகியுள்ளது.அதாவது, அஞ்சலக சேமிப்புத் திட்டங்களுக்கு அதிகபட்சமாக உள்ள 4 சதவீத கமிஷனைப் படிப்படியாக ஒரு சதவீதமாகக் குறைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ள ரிசர்வ் வங்கி, தொடர் சேமிப்புத் திட்டமான ஆர்.டி. போன்றவற்றுக்குக் கமிஷன் தொகையை நிறுத்திவிடலாம் என்றும் பரிந்துரைத்துள்ளது. இதன்மூலம், இந்தச் சேமிப்புத் திட்டத்தில் பணியாற்றும் பெண்கள் முகவர் பணியை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பொதுத் துறை வங்கிகளோடு, இப்போது தனியார் வங்கிகளும் பெருகிவிட்ட நிலையில், அவற்றின் கவர்ச்சிகரமான அறிவிப்புகளுக்கு இடையே, பொதுமக்களிடமிருந்து அஞ்சலகச் சேமிப்புத் திட்டங்களுக்காக முதலீடுகளைப் பெறுவது சவாலான விஷயம் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அதேநேரத்தில், பொதுமக்கள் முகவர்களைத் தவிர்ப்பதற்கான செயல்பாடுகளில் அஞ்சல் துறையே ஈடுபட்டுள்ளது. குறிப்பாக, ஒரு திட்டத்தில் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்ய விரும்பும் ஒருவர், முகவர் வழியாகச் சென்றால், அதை நாளொன்றுக்கு ரூ. 10 ஆயிரம் வீதம் பிரித்து, 10 நாள்களுக்கு டெபாசிட் செய்ய வேண்டும். ஆனால், அவர் நேரடியாகச் சென்றால், ஒரே நாளில் எவ்வளவு தொகை வேண்டுமானாலும் டெபாசிட் செய்யலாம். இதனால், பொதுமக்கள் தாமாகவே முகவர்களைத் தவிர்க்கும் நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.ஒரு சதவீத கமிஷன் (மகளிர் திட்டத்துக்கு மட்டும் 4 சதம்) அடிப்படையிலும், ஆண்டுக்கு ரூ. 2,400 கோடியை முகவர்கள் கமிஷனாகப் பெறுகிறார்கள் என்றால், அவர்கள் பொதுமக்களிடம் இருந்து திரட்டிய முதலீடு எவ்வளவாக இருக்கும் என்பதை நாம் உணர வேண்டும். அதோடு, முகவர்களால் மட்டுமே இந்தத் திட்டங்களில் முதலீடு செய்யப்படுவதில்லை என்றால், அவர்களுக்கு ரூ. 2,400 கோடி கமிஷன் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன? எனவே, அஞ்சலக முகவர்களுக்கு இப்போது வழங்கப்படும் கமிஷன் என்பது உழைப்புக்கேற்ற ஊதியமே.எனவே, அஞ்சலக சேமிப்புத் திட்ட முகவர்களுக்கான கமிஷன் தொகையைக் குறைப்பது அல்லது நிறுத்துவது என்ற பரிந்துரையை ரிசர்வ் வங்கி மறுபரிசீலனை செய்ய வேண்டும்.இதன்மூலம், அவர்களின் வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படுவதோடு, பொதுமக்களின் முதலீடுகள் தொய்வின்றித் தொடர்ந்து அஞ்சல் துறைக்குக் கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும்.
கருத்துகள்

அஞ்சல் துரை
By avudaiappan
6/28/2011 4:32:00 PM
most of the agents are phemi agents. hence RBI ADVICE IS CORRECT.
By RAJAGOPALAN
6/28/2011 9:33:00 AM
உண்மைதான் சேமிப்பு திட்ட முகவர்களுக்கான கமிஷன்தொகையினை குறைப்பதோ நிறுத்துவதோ ஏற்புடையதல்ல , ஒரு கால கட்டத்தில் அவர்களது உழைப்பினால் தான் அஞ்சலகத்தில் சேமிப்பு சேர்ந்தது .இன்று பலரும் அவர்களாகவே தானே முன் வருகிறார்கள் எண்றால் அந்த பழக்கத்தை விதைத்ததும் அவர்கள் தான் ..முகவர்களுக்கு அஞ்சல் துறை மறைமுகமாக ஒரு குறைந்த தொகையைத் தான் கமிஷன் என்ற பெயரால் வழங்குகிறது ..அவர்களது குடும்பமும் வாழ்கிறது ஓரளவு வேலை இல்லா நிலைமை தவிர்க்கப்படுகிறது ..அவர்கள் வயிற்றில் அடித்து அந்த பாவத்தை ஏற்கவேண்டாம்
By நாகை ஜெகத்ரட்சகன்
6/28/2011 7:12:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *