திங்கள், 14 மார்ச், 2011

Japan in calamity: தலையங்கம்: துன்பக்கடலில் சப்பான்!

சரியான தலையங்கம். ஆனால், சப்பானின் துயரம் குறித்துத் தனியாகவும் கற்க வேண்டிய பாடம் குறித்துத்தனியாகவும் எழுதியிருக்கலாம். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
/தமிழே விழி! தமிழா விழி! /
தலையங்கம்: துன்பக்கடலில் ஜப்பான்!

இரண்டாவது உலகப் போரில் ஜப்பான் எதிர்கொண்ட சிக்கல்களுக்கு இணையானது இப்போது நிலநடுக்கத்தாலும் ஆழிப்பேரலையாலும், அணுஉலை வெடிப்புகளாலும் ஏற்பட்டுள்ள பாதிப்புகள். இதை ஜப்பான் பிரதமரே வெளிப்படையாகக் குறிப்பிட்டுள்ளார். ஏறக்குறைய துன்பக்கடலில் மிதக்கிறது ஜப்பான்.ஜப்பானில் நிலநடுக்கம் என்பது புதிதல்ல. அவர்கள் அடிக்கடி எதிர்கொள்ளும் பிரச்னை. இதிலிருந்து தங்களைத் தற்காத்துக்கொள்ள ஒவ்வொரு ஜப்பானியரும் பள்ளிக்கூடத்திலேயே பயிற்றுவிக்கப்படுகிறார். எப்படி உணர்ந்துகொண்டு, எப்படிப் பாதுகாப்பாகப் பதுங்குவது என்பதெல்லாம் அந்த நாட்டில் குழந்தைகளும் அறிந்த விஷயம். நிலநடுக்கத்தால் வானுயர்ந்த கட்டடங்கள் இடிந்து சரிந்ததாகச் செய்திகள் இல்லை. ஒவ்வொரு கட்டடமும் நிலநடுக்கத்தை எதிர்கொள்ளும் தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டவை. ஆகையால்தான், ஆழிப்பேரலையில் பாதுகாப்புக்காக பலமாடிக் கட்டடத்தின் உச்சியில் நிற்பவர்கள், தங்கள் கட்டடம் கீழே முழுமையாக ஆழிப்பேரலையால் சேதமடைய, அவர்கள் மேலே அப்படியே பாதுகாப்பாக நிற்பதைப் பல தொலைக்காட்சிகளில் காண முடிகிறது. ஆழிப்பேரலையும் அவர்களுக்குப் புதிதல்ல. சுனாமி என்ற சொல்லே ஜப்பானியச் சொல்தான். ஆனால், இந்த முறை 8.9 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கமும், 10 மீட்டர் உயரத்துக்கு ஆழிப்பேரலையும் எப்போதும் இல்லாத அளவுக்கு இணைந்து வந்துவிட்டது. ஜப்பானின் கடலோரப் பகுதியில், ஆழிப்பேரலை எச்சரிப்பு மணி, வானொலி அறிவிப்புகள், ஊடகங்கள் என மக்களுக்குச் சுனாமி குறித்த எச்சரிக்கை அறிவிக்கப்பட்டதால், பல லட்சம் உயிர்கள் சற்று முன்னதாகவே காப்பாற்றப்பட்டுவிட்டன. இப்போது இயற்கையின் சீற்றம் முடிந்து, அணுஉலையின் சீற்றத்தை எதிர்கொள்ள முடியாமல் திண்டாடிக் கொண்டிருக்கின்றனர் ஜப்பானியர்கள். ஜப்பானின் மூன்றில் ஒரு பங்கு மின் தேவையை அணுமின் உலைகள்தான் பூர்த்தி செய்கின்றன. அனல் மின்நிலையமோ புனல் மின்நிலையமோ அமைக்கப் போதுமான இயற்கை வளம் அங்கு இல்லை. அமெரிக்க அணுகுண்டு வீச்சால், கதிர்வீச்சைச் சந்தித்த தைரியத்தாலோ என்னவோ, அந்த நாட்டில் 50-க்கும் மேற்பட்ட அணுஉலை மின்நிலையங்கள் உள்ளன. தற்போது இவற்றில் 11 மின் நிலையங்கள் நிலநடுக்கம் காரணமாக மூடப்பட்டுவிட்டன. ஆனகவா அணுஉலைக்கூடத்தில் உள்ள மூன்று உலைகளும் நிலநடுக்கம் ஏற்பட்டவுடன் தானாகவே உற்பத்தியை நிறுத்திவிட்டன. ஆனால் மற்ற இடங்களில் உள்ள உலைகள் பெரும்பாலும் 1970-ம் ஆண்டுகளில் அமைக்கப்பட்டவை. அவை மனிதர்களால் நிர்வகிக்கப்படுபவை.புகுஷிமா அணுமின் நிலையத்தில் முதல் அணுஉலைக்கூடம் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவுடன் அதில் கடல்நீரைப் பாய்ச்சி நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டனர். இனி அந்த முதல் உலையைப் பயன்படுத்தவே முடியாது. இப்போது மூன்றாவது உலை வெடித்து, உருகிக்கொண்டிருக்கிறது. உலைக் கலன் 15 செ.மீ. கனமுள்ள எஃகு தகட்டினால் மூடப்பட்டுள்ளது. இதுதான் இப்போது உருகிக்கொண்டிருக்கிறது. இது வெடித்தால், ஹைட்ரஜன் அணுவெடிகுண்டு விளைவித்த சேதத்தைக் காட்டிலும் அதிக சேதம் விளையும்.ஏறக்குறைய, இந்த நிலைமை செர்னோபில் அணுஉலைக் கூடத்துக்கு ஏற்பட்டதைப் போன்றதுதான். ஏற்கெனவே, அங்கே கதிர்வீச்சினால் உயிரிழப்புகள் நூற்றுக்கணக்கில் ஏற்பட்டுவிட்டதாகவும், 1.76 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டு, அவர்களுக்கு கதிர்வீச்சு பாதிப்புகள் உள்ளதா என்பதை அறிய ஜப்பானியர்கள் தாற்காலிக முகாம்களில் சோதிப்பதாகவும் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.உலக நாடுகள் அனைத்தும் ஜப்பானின் நிலைமைக்காகப் பரிதாபப்பட்டாலும், வேதனையைத் தெரிவித்தாலும் அவர்களை வேறு இடங்களுக்கு, தேவைப்பட்டால் வேறு நாடுகளுக்குப் பாதுகாப்பாகச் சிறிதுகாலம் கொண்டுபோய் வைத்திருக்கும் வாய்ப்புகளையும்கூட நல்க வேண்டும். அந்த அளவுக்கு அங்கே நிலைமை மோசமாகிக் கொண்டிருக்கிறது. எல்லாவற்றுக்கும் மின்சாரத்தை நம்பியிருக்கும் ஒரு நாட்டில், அணுஉலை விபத்து காரணமாக தற்போது மின்உற்பத்தி பாதியாகக் குறைந்துவிட்டது. தொழில்துறைக்கு மின்சாரம் அளிக்க முடியவில்லை. வீடுகளுக்கும் மின்சாரம் அளிக்க முடியவில்லை. ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கும் மின்சாரம் அளிக்க முடியவில்லை. மின்சாரம் கிடைத்தால், தற்போது உருகும் உலைக்கூடத்தில் கருவிகள் செயல்படத் தொடங்கி, நிலைமையை விரைந்து கட்டுப்படுத்திவிடலாம் என்கிறார்கள். அதற்கும்கூட வழியில்லை. 2007-ம் ஆண்டு காஸிவாஸகி அணுமின் நிலையம் (8000 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்டது) நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டபோது, அதை இரண்டு ஆண்டுகளுக்கு மூடி வைத்த அனுபவம் ஜப்பானுக்கு உண்டு. இருந்தாலும்கூட, தற்போதைய நிலைமை, எல்லா அனுபவங்களையும் மீறியதாக இருக்கிறது. இயற்கையின் சீற்றத்தை எதிர்கொள்ள எந்தவொரு நாட்டாலும் முடியாது என்பதைத்தான் மீண்டும் இயற்கை நமக்குச் சொல்கிறது. இந்தியாவில் அணுமின் நிலையங்களை தனியார் அமைக்க ஒப்பந்தங்கள் போட்டுள்ளோம். அதற்கான இழப்பீடு குறித்துத்தான் நாம் முரண்படுகிறோம். உயிர்இழப்புகள் குறித்து அல்ல. அணுஉலைக்கூடங்களைப் பொறுத்தவரை இந்தியா ஒருமுறைக்கு நூறுமுறை யோசித்து முடிவெடுக்க வேண்டும்.விஞ்ஞானம் மனிதனின் நாகரிக மேம்பாட்டுக்கு உதவி இருக்கிறது என்பது உண்மை. ஆனால், எதுவுமே அளவுக்கு மீறினால் ஆபத்தாக மட்டுமே முடியும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். வசதிகளைப் பெருக்கி வாழ்க்கையை வளமாக்குவது சரி. எப்படி, எந்த அளவுக்கு என்பதைப் பொறுத்துத்தான் அதற்கு நாம் என்ன விலை கொடுக்க நேரும் என்பதை இயற்கையின் சீற்றம் ஜப்பான் மூலம் உணர்த்தி இருக்கிறது.பட்டுத் திருந்துவது ஒருவகை. பார்த்துத் திருந்துவதும் ஒருவகை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக